காதல் சதுரங்க ஆட்டம் 12

அத்தியாயம் : 12

கிருத்திகா தன்னை விட்டுப் போகிறாள் என்றதும், தன்னை மறந்த நிலையில் பேசிய கார்த்திக், கைப்பேசியின் ஒலியில் நிதானத்திற்கு வந்தான். அழைப்பது யாராக இருக்க கூடும் எனும் எண்ணத்தில் எடுத்துப் பார்த்தான். சாம்பவியின் எண் தெரிந்தது. அடுத்த கணம் அப்படியே முகம் மாறிவிட்டது.

அமைதியாக அவளையே பார்த்தான். என்ன சொல்லி போகாமல் தடுத்து நிறுத்துவது என்ற யோசனையில் மூழ்கினான்.

கிருத்திகா “நான் கிளம்பறேன் சார். ஹேப்பி மேரீட் லைப்!” என்றாள்.

அவன் மறுப்பாக தலையசைத்தான். அவள் புரியாமல் பார்த்தாள்.

“நீ எங்கேயும் போக வேண்டாம். நம்ம வீட்லயே தங்கி இரு” என்றான்.

“கிருத்திகா, சாம்பவியும் நானும் விரும்பியது உனக்கே தெரியும். என்னோட நிலைமையை நானே உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன். சாம்பவி வீட்டில் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க. உடனே வந்து பேசுன்னு சொன்னதால், அப்பா கிட்டே அவ்வளவு அவசரமா பேச வேண்டியதாகிடுச்சு. இல்லன்னா கல்யாண பேச்சே எடுத்திருக்க மாட்டேன். என் தங்கை எனக்காக பார்த்த பெண் நீயாக இருக்குமோ என்கிற எண்ணம், என்னை ஒவ்வொரு நிமிசமும் நிம்மதி இழக்க செய்யுது. அதில் இருந்து மீளவே முடியல…

ஏற்கனவே உன் மனசை காயப்படுத்திட்டு, அதுக்கு பரிகாரம் பண்ண முடியாம அலைஞ்சுட்டு இருக்கேன். இதில் அவளையும் ஏமாத்திட்டு என்னால் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அதனாலேயே கல்யாண ஏற்பாட்டை பண்ணினேன். உன்னைப் பற்றி யாரும் தவறா நினைக்க கூடாது என்பதற்காகவே விலகியிருக்கேன். இப்போ வந்து இவ்வளவு தூரம் பேசிட்டும் இருக்கேன்.

அதேநேரம் சாம்பவியும் பாவம்! அவள் பின்னே காதல் கொண்டு அலைஞ்சுட்டு, வெறும் நேரப் போக்கிற்காக மட்டுமே பழகினேன்னு எப்படி சொல்ல முடியும்? அப்புறம், அவள் ஏதாவது தவறான முடிவுக்கு வந்தா… அந்த பாவத்தையும் என்னால சுமக்க முடியாது!” என்று கூறிவிட்டு கண் கலங்கினான்.

“உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என் ஒருவனால் பாதிக்கப்படுவதை பாத்திட்டுருக்க என்னால முடியாது. நீ இப்படியொரு அவப்பெயருடன் வேலையை விட்டு விலகிப் போனால், காலம் பூரா நிம்மதியே இல்லாம வாழணும். நீ எங்கேயும் போகாம இங்கேயே இருக்க மாட்டாயா?” என்றான்.

அவன் பேச்சிலே புரிந்தது. தன்னால் அவன் மனம் நிம்மதியற்று உழல்கிறது. மனதில் இருப்பவளை மறக்கவும் முடியாமல், தன்னை நினைக்கவும் முடியாமல் நிம்மதியற்று தவிக்கிறான். இதே வேகத்தில் திருமணம் முடிந்தால், அவன் எதிர்கால வாழ்விற்கு நல்லதல்ல என்பதும் தெளிவாக புரிந்தது. ‘சாம்பவி யார்? அவளது குடும்பம்? தொழில் பற்றி விசாரித்து தெரிய வேண்டும். அவள் நற்குணம் படைத்த பெண்ணாக இருந்தால், கட்டாயம் இருவரது திருமணத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும். இல்லை…’ என்று அமைதியானாள்.

‘வெளுத்தது எல்லாம் பால்’ என்றே நினைக்கிறான் கார்த்திக். அவனால் யாரும் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். மனதை மறைக்க தெரியாமல் தடுமாறுகிறான். ஒருத்தியை மணந்து கொண்டு அவளுக்குத் தெரியாமல் வேறு ஒரு நபருடன் பழகும் ஆண்கள் மத்தியில், இப்படியும் ஒருவனா என்று நினைத்து வியந்தாள். அவன் மனதில் சாம்பவிக்கும், தனக்கும் உள்ள இடம் புரிந்தது. மனதில் சொல்ல முடியா நிம்மதியும் படர்ந்தது. அதே நிம்மதியை அவனுக்கும் பரிசளிக்க விரும்பினாள்…

இன்னும் ஐந்து நாள் இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுமை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தாள். அவன் முகத்தைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. அவன் மனதை மாற்றிவிடும் எண்ணத்தில் அவள் யார், ஊர், வீட்டார், பணி என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். அவனும் சொல்ல துவங்கினான். இறுதியில் “போகமாட்டியே?” என்று கேட்டான்.

“இல்லை கார்த்திக், நீங்களா என்னை போன்னு சொல்லும் வரைக்கும், எங்கேயும் போக மாட்டேன்” என்றாள்.

கார்த்திக் சாம்பவியை மட்டுமே விரும்புவதாக எண்ணுகிறான். கிருத்திகாவிடம் காட்டும் நேசத்தை காதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர மறுக்கிறான். அதேநேரம் அவளிடம் தனக்கு உரிமை இருப்பதாகவும் நினைக்கிறான். அவள் தன்னை விட்டுப் போகிறாள் என்றதும் துடிக்கிறான். தன்னை அறியாமல் வார்த்தைகளை கொட்டுகிறான். அவள் தன்னைத் தவறாக எண்ணி விடக்கூடாது என்று கெஞ்சுகிறான். அவள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறான். இரண்டு பெண்களின் வாழ்க்கையும் தன்னால் பாதிப்படைய கூடாது என்று கலங்குகிறான்.

அவள் மீது அவன் வைத்த அளவு கடந்த நம்பிக்கை, அவளாலே உடைந்து சின்னாபின்னமாக போகிறது. அவளே உறவுகள் அத்தனை பேர் முன்னிலையில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறாள். தான் அவள் மீது வைத்த மரியாதை, பாசத்தை துடைத்து எறிய காரணமாக அமைய போகிறாள். தன்னால் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடக்கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்பவன், அவர்களாலே தூக்கி எறியப்படும் நிலைக்கு வரப்போகிறான். அதனாலே, முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு வரப்போகிறான் என்று அப்போது அவன் எண்ணவில்லை!

திருமணநாள் அன்று மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம் எனும் நிலையில், புவனாவுடன் சாம்பவியின் அறைக்குச் சென்றாள் கிருத்திகா. பின்னர், தனியாக நடந்து வந்து மாடியில் நின்று கொண்டிருந்தாள். அப்போது காதில் விழுந்ததை நம்ப இயலாமல் பதறி துடித்தாள். உடனடியாக கார்த்திக்கை தேடி ஓடினாள். அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. முகமெங்கும் வியர்வை துளிகளால் நனைந்தது; கை கால்கள் தள்ளாடியது; நீண்ட நீண்ட மூச்சுகள் வெளியேறியது; தலையை சுற்றிக்கொண்டு வந்தது; கார்த்திக்கின் அறைக்குள் தள்ளாடிக்கொண்டே வந்தாள் கிருத்திகா. அவன் வேகமாக சென்று தாங்கினான்.

அவன் தோளில் சாய்ந்தவள் விழிகளை மூடினாள். நிற்க முடியாமல் அவன் மீதே சரிந்தாள். அச்சத்தில் அப்படியே தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான். “என்ன செய்யுது? ஏன் இப்படி இருக்கே?” என்று கேட்டுக்கொண்டே கன்னத்தை தட்டினான். அவளால் அவனை விட்டு விலக முடியவில்லை. கைகளால் அவனைத் தேடினாள். அவன் கைகளை பற்றியதும் கண்ணீர் வடித்தாள். “கார்த்தி… கார்த்திக், சாம்பவி வேண்டாம். அவள் அவள்…” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தடுமாறினாள்.

அவனுக்குப் புரியவில்லை. “என்ன ஆச்சு? திடீர்னு ஏன் இப்படி சொல்ற? அவள் நம்மை பற்றி ஏதாவது தவறா சொல்லிட்டாளா?” என்றான். அவளது விழிகள் சொருகியது. கை கால்கள் உதறியது. அவன் பதறிப்போனான். “கிருத்திகா, எனக்கு பயமா இருக்குடா… உனக்கு என்ன செய்யுதுன்னு சொல்லு” என்று வேகமாக கேட்டான். அப்போது கீழே அவனைக் காணாமல் தேடினார்கள். இத்தனை நாள் அவளுக்குப் பாதுகாவலனாக இருந்த வேலாயுதம், இருவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இங்கே இருக்கிறார்கள் என்று சத்தமாக கூறினான். அத்துடன் அனைவரும் வந்தனர்.

கார்த்திக் கிருத்திகாவை நினைத்து வருந்தினான். அதேநேரம் வாய் திறந்து உண்மை நிலையை சொல்லாமல் இருக்கிறாளே என்று கோபத்தால் வெகுண்டான். சாம்பவிக்காக இத்தனை தூரம் தன்னுடைய உணர்வுகளை மறைத்து வாழ்ந்தும், அவளும் நம்பாமல் சென்றது அவனது கோபத்தைக் கிளறியது. அனைவர் முன்பும் அழுதுகொண்டு, நடந்ததை மாற்றி விட்ட கிருத்திகாவின் மீது கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ‘உண்மையிலே சாம்பவி என்னை விரும்பியிருந்தால் விட்டுப் போவாளா?’ என்று நினைத்து கொதித்தான்.

வாய் திறந்து சொல்லாமல், சுயபுத்தியை தொலைத்து இருவருக்காகவும் மாறி மாறி பார்த்தது, தன்னை எங்கே கொண்டு விட்டது என்று நினைத்து தன்னையே வெறுத்தான். தன்னுடைய வாழ்க்கை அழிவு பாதையில் நிற்பதை, புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டமே என்று கலங்கினான்.

கிருத்திகா மீது வைத்த நம்பிக்கை சுக்குநூறாக உடைந்ததில் எரிமலையாகவே மாறிப்போனான். அப்போதும் யாரென்று அறியாத அவளுக்காக பார்த்து, பேச்சற்று போய் நிற்கின்ற அப்பாவின் நம்பிக்கையில் மனமொடிந்து போனான்.

தன்னுடைய காதல், அவளுடனான பழக்கத்தை சொன்ன பிறகும், திருமணத்தன்று அப்படி நடந்து கொண்டதால் அதையே சொல்லிக் காட்டி அவளை வதைத்தான். ‘சாம்பவியை மட்டுமே உயிராக காதலித்தேன்’ என்ற வரிகளால் அவளைக் காயப்படுத்தினான். அவள் மீதான நேசத்தை தூர வீசி எறிந்தான்.

தனக்கு காஃபி கொண்டு வர மறுத்ததும் குத்தி காட்டினான். உணவு பரிமாற வராமல் இருக்கையில், முந்தைய வீம்பு விடாமல் அவளை வரவழைத்தது. அண்ணியின் கேலிப் பார்வையும், பேச்சும் அக்னியை ஒருசேர தலையில் கொட்டியது. சாம்பவி உண்ணாமல் அழுது கொண்டு கிடக்கிறாள் என்றதும், அவள் மீதான பழைய பாசம் வெளிப்பட்டது. அவளிடம் முன்பு போலவே அன்புடன் பேசினான்.

ஹோட்டலில் வைத்தாவது மனபாரத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தும் முடியாமல், அனைத்துக்கும் காரணம் கிருத்திகா என்று அவள் மீதே குற்றம் சுமத்தினான்.

தற்சமயம் அவளைப் பார்த்து இருபது நாட்கள் ஆகி விட்டன. ‘எப்படி இத்தனை நாட்கள் அவளைப் பார்க்காமல் இருந்தேன்? அவள் மீது அத்தனை பாசத்தைக் கொட்டிய நானா, இப்படியெல்லாம் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்?’ என்று நினைத்து வருந்தினான்.

‘அன்று அப்பா சொன்னது போல் சாம்பவியை பிடிக்க மட்டுமே செய்திருக்கிறது. கிருத்திகா மறக்க முடியாத அளவுக்கு என்னுள் ஆழமாக புதைந்து போயிருக்கிறாள். அதைப் புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு சம்மதித்து, அவளாலே நின்று விட்ட கோபத்தில் எப்படியெல்லாம் நடந்து விட்டேன். என் மனதில் நிலைத்தவளே மனைவியாகவும் மாறியிருக்கிறாள். இருந்தும் இத்தனை நாட்கள் புரிந்து கொள்ளாமல் முட்டாளாக நடந்து கொண்டனே! என் மனைவி என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா?’ என்று தெரியாமல் மனம் கலங்கினான்.

அதேநேரம் ‘கிருத்திகா யார்? எதற்காக இங்கு வந்தாள்? திருமணத்தன்று நடந்தது என்ன? அண்ணி எதனால் அவள் மீது இத்தனை வெறுப்பை கொட்டுகிறார்? அப்பாவுக்கும் அவளுக்கும் இடையில் உருவான பாசம் வெறும் அக்கறை, அன்பால் உருவானதா? அதற்கு மேலும் ஏதும் உள்ளதா? காயத்ரி சொன்ன கொலு பொம்மை கிருத்திகா தானா? அப்படி என்றால் தங்கைக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? சாம்பவி உடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்துவதற்கான காரணம்?’ என்று பல கேள்விகள் வட்டமிட துவங்கியது. அதை கண்டறியும் முயற்சியில் இறங்கினான் கார்த்திக்.

கிருத்திகா  புகழ்பெற்ற வழக்கறிஞர் வேணுகாவின் முன்பு அமர்ந்திருந்தாள். அசோக் செய்வதறியாமல் திகைத்துப் போய் இருந்தான்.

தன் கணவனுடன் வாழ விரும்பவில்லை. விவகாரத்து பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர் வாழ்வில் இருந்து நிரந்தரமாக விலகி விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

அசோக் மறித்தான். அவள் மறுப்பாக தலையசைத்தாள். வேணுகா “நீங்க நினைக்கிற மாதிரி விவகாரத்து பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட உங்க கணவரும் கையெழுத்திடணும். அவர் கிட்டே நான் பேசணும். கோர்ட்ல கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலும், ரெண்டு பேருமே விருப்பமில்லைன்னு ஒத்த கருத்துடன் கூறினால் மட்டுமே விவகாரத்து பெற முடியும். அப்படியும் ஒரு வருசம் காத்திருக்கணும்” என்றார்.

அவள் தலையசைத்தாள். “ஏம்மா, பார்க்க படிச்ச பொண்ணா தெரிகிற. விட்டுக் கொடுத்துப் போவது தான் குடும்ப பொண்ணுக்கு அழகுன்னு உனக்குத் தெரியாது? பிறகும் எதுக்கு உன்போல் சிலர் இப்படி அவசரப்படுறாங்கன்னு எனக்குத் தெரியலை. குடும்பம்னா ஆயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதுக்கு விவாகாரத்து ஒருபோதும் தீர்வாகாது. கொஞ்சம் கவனமா நடந்துக்கோம்மா. இப்போ அவசரப்பட்டு நீ எடுக்கும் முடிவு, நாளைக்கு உனக்கே பாதகமா மாறிடப் போகுது” என்று அக்கறையுடன் கூறினார். அவள் பதில் கூறாமல் இருந்தாள்.

“பெரும் வசதி படைத்தவரின் வாரிசு மீது பழியை போட்டு, நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியிருக்க. மறுபடியும் அதே பெண்ணுடன் அவருக்கு கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படற. இதனால் உன் பெயர் கெட்டுப் போகும். உன் எதிர்கால வாழ்க்கையே அழிஞ்சு போகும். பேசாம உன் கணவரிடம் பேசி இதுக்கு சுமூகமான தீர்வு காண்” என்றார்.

அவள் தலையசைத்து எழுந்தாள். அசோக் அவளிடம் நிறைய நேரம் பேசினான். அவள் வாழ்க்கை அழிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவள் எல்லாமே கைவிட்டுப் போயிற்று. இனிமேல் என்ன இருக்கிறது என்ற எண்ணத்தில் வீட்டுக்கு கிளம்பினாள்.

காலை எட்டு மணிக்கு மதில் சுவர் முன்பு ஆட்டோ வந்து நின்றது. யார் வருகிறார்கள் என்று பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். ஆட்டோவில் இருந்து இறங்கினாள் கிருத்திகா. ஓட்டுனர் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தாள். பேக்குடன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்து வந்தாள். வாசலில் நின்ற காரைப் பார்த்ததும் ஒரு கணம் தாமதித்தாள். அடுத்த நிமிடம் நிமிர்ந்து பாராமல் ஹெஸ்ட் ஹவுஸை நோக்கி நடந்தாள்.

அவளையே பார்த்து நின்றான் கார்த்திக். பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். சற்று நேரத்தில் தயாராகி கீழே வந்தான். பசி மரத்தாற் போலிருந்தது. கால்கள் ஹெஸ்ட் ஹவுஸை நோக்கி நகர்ந்தது.

குளியலை முடித்து புடவையை மாற்றினாள் கிருத்திகா. பூஜையை முடித்துவிட்டு ஈரக் கூந்தலை துவட்டிக்கொண்டு நின்றாள். கதவு தட்டியது. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் திறந்து பார்த்தாள். அங்கு அவள் கணவன் நின்றிருந்தான்.

அவன் அணிந்திருந்த நீல நிறத்திலான முழு நீள சட்டை, கருப்பு நிற விலை உயர்ந்த பேன்ட், அவனது கம்பீரத்தை மேலும் அழகாக காட்டியது. அவன் போட்டிருந்த கருப்பு நிற ஷூ, ஆறே கால் அடி உயரத்தை மேலும் பெரிதாக எடுத்துக்காட்டியது. முகத்தில் இருந்த இறுக்கம் தன்மீதான கோபத்தை அப்பட்டமாக பறைசாற்றியது.

ஒரு மாதம் ஆகப் போகிறது அவனைப் பார்த்து. விழிகள் முகத்தை விட்டு விலக மறுத்தன. அவனும் அவளையே பார்த்தான். முன்பை விட பாதியாக மெலிந்து போயிருந்தாள். குளித்து முடித்த ஈரக்கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாக வழிந்த நீர், கன்னத்தில் வடிந்து கழுத்து வழி பயணித்தது. தோள் பகுதியில் தெரிந்த நீர் துளிகள், அவனது விரல்களால் கோலமிட தூண்டியது. ஈரத்தால் பளபளத்த உதடுகள், அவனது உணர்வுகளை தூண்டி விட்டன. சந்தன நிற காட்டன் புடவையை ஒற்றையாய் பின்னிட்டு விரித்து விட்டிருந்தாள். அவளது மறைக்கப்பட்ட இளமை அழகுகள், விழிகளுக்குள் விருந்தாய் விழுந்து நரம்பை முறுக்கேற செய்தன.

அருகில் நெருங்கி அவளையே பார்த்தான்.

“இத்தனை நாள் எங்கே போன?” என்று கேட்டான்.

அவனது பார்வையை உணர்ந்தவள், திரும்பி நின்று வேகமாக புடவையை சரி செய்தாள்.

“இங்கே வேற யாரும் இல்லையே! எதுக்கு இத்தனை பதட்டம்?” என்றான். அவள் கை விரல்கள் நடுங்கியது.

மேலும் நெருங்கினான். மூச்சு முட்டியது அவளுக்கு. விலக நினைத்தாள் முடியாமல் தவித்தாள்.

“கிளம்பு போகலாம்”

“எங்கே?”

“நம்ம வீட்டுக்கு”

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-12.3535/