காதல் சதுரங்க ஆட்டம் 11

அத்தியாயம் : 11

றுநாள் காலையில் அலுவலகத்தில் இருக்கும் போது சாம்பவி அழைத்தாள். “வீட்ல அப்பா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க. நான் சொன்ன பிறகும் கேட்கலை” என்றாள்.

அவன் அமைதியாக இருந்தான்.

“கார்த்திக்…”

“சொல்லு”

“நீங்க வந்து கல்யாண விசயமா பேசுங்க. அப்போ தான் என்னாலும் நிம்மதியா இருக்க முடியும்” என்றாள்.

திடீரென்று தங்கை காயத்ரி இறந்து விட்டதால், திருமணத்தைப் பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு வருடம் தாண்டாமல் எப்படி வீட்டில் இதைப் பற்றி பேசுவது என்று தயங்கினான்.

“அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்க மறுக்கிறார்? நீங்க வந்து பேசினா சரியாகிடும். எனக்காக வர மாட்டீங்களா?” என்றாள் சாம்பவி.

அவன் ‘உம்’ என்றான்.

“இப்போ பேசி முடிச்சிட்டு மெதுவா கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

எப்படி அப்பாவிடம் கூறுவது? அவர் தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது என்று தடுமாறினான் கார்த்திக். வேறு வழியில்லை பேசித்தான் ஆக வேண்டும் என்ற முடிவில் மதிய நேரம் வீட்டிற்கு கிளம்பினான்.

இரவெல்லாம் சரியாக உறங்காதது தலைவலியை கொடுத்தது. காலையில் சென்று தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள் கிருத்திகா.

அசோக் அழைத்தான். அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். நேற்று இரவும், இன்று காலையிலும் கிருத்திகாவை பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும், காரை விட்டு இறங்கியவன் கால்கள் அவளை நோக்கி நகர்ந்தன.

திரும்பி பாராமல் கைப்பேசியில் கவனத்தை பதித்தாள் கிருத்திகா.

“ஏன், நேத்து ராத்திரி ஃபோன் பண்ணினப்போ எடுக்கல?”

விழிகள் நனைந்தன. பதில் கூறாமல் இருந்தாள்.

“என்னாச்சு, உடம்புக்கு முடியலயா?”

“ம்ஹூம்…”

“வேறென்ன? யாராவது எதாவது சொல்லிட்டாங்களா?”

“…”

“கீர்த்தி…”

“இன்னும் கொஞ்ச நாள் மட்டும் இங்கே இருப்பேன். அப்புறம் அங்கு வந்திடுவேன்” என்று சொன்னாள்.

அவன் கால்கள் அப்படியே நின்றன.

“நான் எதுக்காக வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதா? என் வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவேன்” என்றாள்.

எதிர்முனை ஏதோ சொன்னது.

“உங்க பேச்சைக் கேட்காம வேறு யார் பேச்சைக் கேட்பேனாம்? எனக்கு உங்களைத் தவிர வேற யார் இருக்காங்க” என்றாள். விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தாள்.

“கிளம்பியதும் சொல்றேன். பை” என்று அழைப்பை துண்டித்தாள். அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள்.

அவள் அசோக்கிடம் எதற்காக அப்படி பேசினாள் என்பதை அறியாமல் முகம் மாற நின்றான் கார்த்திக். ‘நான் ஒரு அநாதை என்றாளே, பிறகு யார்கிட்டே பேசுறா? எதுக்காக இங்கே இருந்து வந்துடுவேன்னு சொல்றா? அப்போ, கடைசி வரைக்கும் இங்கேயா இருக்க மாட்டாளா?’ என்று நினைத்து அப்படியே நின்றான் கார்த்திகேயன்!

கிருத்திகா போகிறாள் என்றதும் எதனால் அத்தனை பாதிப்பாக இருக்கிறது என்பதை அப்போது அவன் உணரவில்லை. மாறாக, ஃபோனில் பேசியது மட்டுமே மீண்டும் மீண்டும் செவிக்குள் ஒலித்தது. ‘அவன் யார்? எதுக்காக அத்தனை உரிமையுடன் பேசினாள். ‘உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்’ என்றாளே’ என்றே உழன்றது.

முகம் இறுக அங்கிருந்து அகன்றான் கார்த்திக்.

நேராக அப்பாவின் அறைக்குச் சென்றான். திருமண விசயமாக பேசினான். அவர் நம்ப இயலாமல் பார்த்தார். அவன் இருவரது சந்திப்பு, காதலைப் பற்றியும் கூறினான்.

அவர் “முடியவே முடியாது. நீ கொண்டிருப்பது காதல் அல்ல வெறும் கவர்ச்சி. வெளியிடத்தில் நம் ஆட்களை கண்டிராமல், சதா மாடல் ஆடையில் வலம் வருபவர்களைப் பார்த்த உனக்கு, திடீரென்று அமைதியானது போல் தோற்றமளித்த நம் ஊர் பெண்ணைப் பார்த்ததும் ஏற்பட்ட ஈர்ப்பு. உன்கிட்ட அவள் பேசாம போனதால், எப்படியாவது பேச வச்சுடணும் என்கிற வீராப்பு. அவளிடம் பேசிப் பழக ஆசைப்பட்டதை காதல்னு முத்திரை குத்தி விட்டாய். பிடித்தத்திற்கும், காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒருவருக்கு எத்தனையோ பேரை பிடிக்கலாம். அவரை எல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது. காதலித்த ஒருவரை மட்டுமே மணம் செய்ய முடியும். அல்லது வீட்டார் பார்த்து வைக்கும் நபரை மணந்து கொள்வர். நீயும் அப்படித்தான். தேவையில்லாம எதையாவது நினைச்சு குழப்பிக்காதே! உனக்கு வேறு நல்ல பெண் பார்த்து வச்சுருக்கேன். அவள் உன்னையும், நம் குடும்பத்தையும் நல்ல விதமா தாங்குவாள்” என்றார்.

தன் பேச்சைப் புரிந்து கொள்ள மறுக்கிறாரே என்று அவன் ஆதங்கப்பட்டான். அதேநேரம் நோயால் தொய்ந்து போய் கிடப்பவரிடம் எதிர்த்து பேசவும் வாய் வரவில்லை. முயன்ற வரையில் சொல்லிப் பார்த்தான்.

“கார்த்திக், நீ அவள்கிட்ட செய்ததை தான் கிருத்திகாவிடமும் செய்தாய். அவள் உன்கிட்டே பேசலை என்பதற்காக வலிய சென்று பேசினாய். வீம்பு, கேலி, கிண்டல்னு நடந்துக்கிட்ட… இப்போ அவள் பேசியதும், இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற. உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? கிருத்திகா கேட்டா அவளையும் கட்டிக்குவியா? உன்போல் வயதினருக்கு, இளவயது அழகான பெண்களைப் பார்த்தவுடன் ஏற்படுவது சலனம், இனக்கவர்ச்சி, ஈர்ப்பு, ஆர்வம், விருப்பம், பிடித்தம். அதெல்லாம் காதலாகிடாது. உன்மேல் உண்மையான அன்பை வச்சுட்டு, நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறா பாரு. அதுதான் உண்மையான காதல்! முதல்ல உன் மனதில் இருப்பது யார் என்பதை சரியாக தெரிஞ்சுக்கோ. பிறகு கல்யாணத்தை பற்றி பார்க்கலாம்” என்று அறிவுறுத்தினார்.

ஹரிச்சந்திரனின் பேச்சில் வாயடைத்துப் போனான் கார்த்திக். கிருத்திகாவுடன் நடந்து கொண்டதை, அவர் இப்படி ஒப்புமைப்படுத்துவார் என்று அவன் நினைக்கவே இல்லை. ‘என் மனதில் சாம்பவி மட்டுமே இருக்கிறாள். நான் அவளை மட்டுமே விரும்புகிறேன்’ என்று உறுதியாக நம்பினான்.

அவர்கள் பேச்சு சத்தத்தில் கோகுல், புவனா, அகல்யா அனைவரும் வந்து நின்றனர். அவன் அண்ணனை அழைத்துக்கொண்டு வெளியேறினான். விசயத்தை தெளிவாக எடுத்துக் கூறினான். அப்பா இப்படியிருக்க எப்படி அவசரப்படுவது என்று அவன் தயங்கினான். தம்பியின் மனதையும் வருத்த மனமின்றி, மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். பரசுராமனின் மறுப்பையும் புறந்தள்ளி திருமணத்திற்குப் பேசி முடித்தார்கள். சற்று அவகாசம் எடுக்க அவன் நினைத்தான். கோகுல் இருபது நாட்களுக்குள் வரும் நல்ல முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்து விடலாம் என்று நிச்சயமே பண்ணி விட்டான்.

மாலையில் அப்பாவிடம் நடந்த விசயத்தை தெரியப்படுத்தினான் கோகுல். அவர் அதிர்ச்சியில் விழிகளை விரித்தார். அதன் பிறகு வாய் திறக்கவே இல்லை. புவனாவின் மூலம் அனைத்து விசயங்களும் கிருத்திகாவின் செவியை எட்டியது. அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். நேராக ஹரிச்சந்திரனிடம் சென்றாள்.

“அவங்க ரெண்டு பேரும் உண்மையா விரும்பும் போது, எதிர்ப்பது சரியல்ல. அவர் அவங்களையே கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும். நீங்க சரின்னு சொல்லுங்க” என்றாள். அவர் மறுப்பாக தலையசைத்தார்.

“உங்க மகன் சிறுவன் அல்லவே சார். பிறகும் எதுக்கு மறுக்கணும்? இந்த வயதில் காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கும்? நான் உங்க வீட்டு வேலைக்காரி. என்னைத் திட்ட, மிரட்ட, கேலி பேச அவருக்கு உரிமை இல்லையா? அவங்களுக்கு சரி சமமா என்னை நினைப்பது முட்டாள்தனம். என் மனதில் அவர் இல்லை. உங்க மகனோட வாழ்க்கை அழிஞ்சு போகாம பார்த்துக்கறது உங்க கடமை” என்றாள்.

அப்படியும் அவர் சம்மதிக்க மறுத்தார். அவரது உறுதி விழிநீரை வரச் செய்தது.

“உங்களை மாதிரிப்பட்ட பெற்றவர்களால், வீட்டை எதிர்த்து திருமணம் செய்வதும், ஓடிப்போய் திருமணம் செய்வதும், நண்பர்களுடன் சேர்ந்து கோவில், ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்வதும் அதிகமா நடக்குது. அப்படி போகாம உங்க பேச்சைக்கேட்டு விருப்பமற்று திருமணம் செய்வதால், திருமண வாழ்க்கையில் வெறுப்பும், விரக்தியும், சண்டையும், பிரிவும், விவகாரத்தும் அதிகமாகுது. உங்க மகன் வாழ்க்கையும் அதுபோல் கெட்டுப் போகணும்னு நினைக்கறீங்களா? இல்லைன்னா, அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக் கொடுங்க. நான் இதுக்கு மேலேயும் இந்த வீட்ல தங்க விரும்பல. இப்பவே, வேலையை விட்டு விலகுறேன்.” என்றாள்.

அவளது பேச்சு அவரை கண் கலங்க செய்தது. விழிகள் யாசிப்புடன் பார்த்தன. அவள் தீர்க்கமாக மறுத்து விட்டாள். அவர் தொய்ந்து போய் கட்டிலில் சரிந்தார். மனம் கலங்கியது. தனக்காக பெற்ற மகனையே எதிர்க்கிறாரே என்ற வருத்தத்தில் விழிநீரைத் துடைத்தாள். அப்படியே வெளியேறி சென்று விட்டாள் கிருத்திகா.

இருவரது பேச்சையும்கேட்ட கார்த்திக் தவிப்புடன் நின்றான்.

அதன் பிறகு திருமண வேலைகள் ஜரூராக ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே அவன் நிற்கும் பகுதிக்கு போக மாட்டாள் கிருத்திகா. தற்சமயம், வேறு பெண்ணை விரும்புகிறான். அவளுடனே திருமணமும் நடக்கப் போகிறது என்று அறிந்த பின்னர், அவனிடம் பேசுவாளா??

கார்த்திக் காலையில் வெளியே சென்றால், இரவு எட்டு மணிக்குப் பிறகே வீட்டுக்கு வந்தான். விழிகள் அவளைத் தேடி ஓடும். பார்த்துப் பேச அவகாசமளிக்காமல் கிருத்திகா மறைந்து கொண்டாள்.

காலை உணவு நேரம் வழக்கமாக அழைப்பது போல், “கிருத்திகா பசிக்குது. டிபன் எடுத்துட்டு வா!” என்றான். புவனா வந்தாள். அவனது விழிகள் சமையல் அறைப்பக்கம் ஓடியது. அங்கு அவள் இல்லை. உணவு வாய்க்குள் போக மறுத்தது. சற்று நேரம் பிசைந்து கொண்டே இருந்தான். பின்னர், உண்ண மனமற்று எழுந்து சென்று விட்டான். புவனா அப்பாவிடம் சென்று கூறினாள். அவர் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்க துவங்கினார்.

திருமணத்திற்காக புடவை எடுக்க கிளம்பினார்கள். தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்பது போல், அறையிலே அடைந்து கொண்டாள் கிருத்திகா. புவனா அழைத்தும் வர மறுத்து விட்டாள்.

அகல்யா தனக்குப் பிடித்த வகையில் புடவையை தேர்வு செய்தாள். புவனாவும் அவளது விருப்பத்தின் பேரில் எடுத்தாள். சாம்பவி மெருண் நிறத்தில் முகூர்த்த புடவை எடுத்தாள். ஹோல்டன் நிற பட்டுப்புடவையை பார்த்ததும் அதை நோக்கி கை காண்பித்தாள். கார்த்திக்கின் நினைவில் அவளே வந்து நின்றாள். மனம் கனத்தது. ‘அது அவளுக்கு மட்டுமே உரிமையானது!’ என்று எண்ணினான். பிங் நிறத்தில் தேர்வு செய்தான். அவள் முகத்தை இறக்கினாள்.

“அது உனக்குப் பொருத்தமானது அல்ல” என்று மறுத்து விட்டான். அனைவரும் கலைந்தனர். அப்பாவிற்கு உரியதை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தான். அவர் வாங்க மறுத்து விழிகளை மூடிக்கொண்டார்.

முகூர்த்த புடவை மற்ற எதையும் பார்க்க மறுத்தார். வேதனை தாளாமல் வெளியில் வந்தான் கார்த்திக். பணியாட்களுக்கு உரியதை கொடுத்தான். அவளுக்கானதை நேரில் கொடுத்து அழைக்கவே ஆசைப்பட்டான். ஏனோ மனம் வரவில்லை. புவனாவிடம் கொடுத்து அனுப்பினான்.

இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் எனும் நிலையில் அகல்யாவை பார்ப்பதற்காக வந்தாள் கிருத்திகா. ஹாலில் அமர்ந்திருந்தான் கார்த்திக். செய்தித்தாளில் முகத்தை மறைத்திருந்தான்.

அகல்யா வந்தாள். “மேம், நான் வேலையை ரிசைன் பண்றேன். வீட்டையும் காலி பண்ணிடறேன். இதோ கடிதம். ஆட்டோ வந்ததும் சாவியை கொடுத்துடறேன்” என்று கூறினாள். கார்த்திக்கின் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது.

அகல்யா, “இப்போ கல்யாண வேலையெல்லாம் இருக்கு. கல்யாணம் முடிஞ்ச பிறகு வேலையை ரிசைன் பண்ணிக்கோ. அதுக்குள் புதிய நபரை ஏற்பாடு பண்றேன்” என்றாள்.

அவள் மறுப்புத் தெரிவித்தாள். “இல்லை மேம். கிளம்புறேன். சாரி” என்றாள். கடிதத்தை டீபாவின் மீது வைத்துவிட்டு ஹரிச்சந்திரனை பார்க்க சென்றாள். அவர் கண்மூடி படுத்திருந்தார். கால்களைத் தொட்டு வணங்கினாள். விழிநீரைத் துடைத்துவிட்டு வெளியேறினாள்.

அகல்யாவிற்கு மனமில்லை. ஆயிரம் வேலைகள் தலை மேல் குவிய இவள் உதவாமல் போக முயல்கிறாளே என்று கோபத்துடன் நின்றாள். கோகுல் வந்தான் “இப்போது வேண்டாம். கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கலாம்!” என்றான். கார்த்திக்கிடம் ஏதோ சொன்னான். செய்தித்தாளை விலக்கியவன் விழிகள் அவளையே பார்த்தன. பதினைந்து நாட்களுக்கும் பிறகு அவனை நேருக்கு நேராக பார்க்கிறாள். விழிகள் உடைந்தது. உதடு துடித்தது. கண்ணீரை காட்ட மனமின்றி அவசரமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள் கிருத்திகா.

அவனும் எழுந்து அவளைத் தொடர்ந்தான். புவனா அப்பாவின் அறைக்கு விரைந்தாள். நடந்த விசயத்தை தெரிவித்தாள். அவர் அமைதியாக இருந்தார்.

“பயமா இருக்குப்பா. அவங்க வேலையை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டாங்க. தன்னோட சாதனத்தை எல்லாம் எடுத்து ரெடியாகிட்டாங்க. போயிட்டா மறுபடியும் பார்க்க முடியாதில்லயா? நீங்க கூப்பிட்டு பேசுங்கப்பா. நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க.” என்று கூறினாள்.

அவர் மனம் வலிக்க மகள் காயத்ரியை பார்த்தார். ‘ஏதாவது செய்யம்மா. என்னால முடியலைடா’ என்று கண் கலங்கினார்.

“அண்ணா, அவங்களைப் பார்க்க போயிருக்காங்க. ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு. நீங்க கார்த்திக் அண்ணாவை கூப்பிட்டு பேசுங்கப்பா. எழுந்து வாங்கப்பா.” என்று கையை பற்றி தூக்க முயன்றாள். அவர் மகளை அணைத்தார்.

“அவள் எங்கே இருந்தாலும் நம்மை மறக்க மாட்டாம்மா. உங்க அண்ணன் தான் அவள் இங்கே இருக்கணுமா, வேண்டாமான்னு முடிவு பண்ணணும். பயப்படாதே! அவங்களே பேசி முடிவு பண்ணட்டும். எது நடந்தாலும் எனக்கு சந்தோசம்” என்றார். அவள் புரியாமல் பார்த்தாள். கோகுல் அனைத்தையும் கேட்டு யோசனையுடன் நின்றான்.

பிரீப்ஃகேஷ், பேக் அனைத்தையும் எடுத்து வைத்தாள் கிருத்திகா. பேக்கில் ஃபோன், பர்ஸ் அனைத்தும் இருக்கிறதா என்று சரிபார்த்தாள். அங்கிருந்து போக மனமில்லை. தங்கவும் முடியவில்லை. விழிகளை மூடி சுவரில் சாய்ந்து நின்றாள். அப்போது கதவைத் திறந்து கொண்டு கார்த்திக் வந்தான். அவள் நின்ற தோற்றம் மனதை உலுக்கியது. அனைத்தும் தயாராகி விட்டது என்று நினைக்கையில் கண் கலங்கியது. அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

ஆட்டோவின் ஓசையில் விழிகளைத் திறந்தாள். தன்னையே பார்த்து நின்ற கார்த்திக்கை கண்டதும் விழியிமைக்க மறந்தாள்.

“என்னை விட்டுப் போறியா? மறுபடியும் இங்கே வர மாட்டியா? உன்னைப் பார்க்காம என்னால எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டான். விழிகள் தெரித்து விடுவதைப் போல் விரிந்தன. என்ன சொல்ல வருகிறான். புரியாமல் உடலெங்கும் நடுங்கியது. கைகள் ஜன்னல் கம்பியை அழுத்தமாக பற்றியது.

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-11.3522/