காதல் சதுரங்க ஆட்டம் 10

அத்தியாயம் : 10


காலை உணவை முடித்த பின்னர் சற்று நேரம் கைப்பேசியில் மூழ்கினான் கார்த்திக். அகல்யா, கோகுல் இருவரும் வெளியே கிளம்பி விட்டனர். மதிய உணவு தயாரிப்பதற்காக பெண்கள் இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்தனர்.

சும்மா இருக்க தோன்றாமல் தானும் அவர்களைத் தொடர்ந்து வந்தான். அண்ணனைப் பார்த்த புவனா சிரித்தாள்.

“என்னம்மா சமையல்?”

“புலாவு”

“ஓ! சூப்பர். ஏதாவது வேலையிருந்தா சொல்லு. அண்ணன் செய்றேன்” என்றான். அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“வாரம் முழுக்க வேலை வேலைன்னு அலைஞ்சுட்டு இருக்காங்க. இன்னைக்கு ஒரு நாள் நல்லா ஓய்வெடுக்க சொல்லுங்க. அப்போ தான் நாளைக்கு பிரஷ்ஷா வேலை பார்க்க முடியும்” புவனாவிடம் கூறினாள் கிருத்திகா. அவனது உதடுகள் விரிந்தன.

மறுப்பாக தலையசைத்தான். “ஆண்கள் வெளி வேலையா அலைஞ்சாலும் ஓய்வு கிடைக்கும். நாற்காலியில் அமர்ந்து தானே பார்க்கிறோம். நீங்க அப்படியா சதா நடந்தும், நின்னு கொண்டும் அல்லவா செய்றீங்க. ஒரு நாள் படுத்துட்டாலும் வீட்டு வேலைகளும் அப்படியே படுத்துரும்” என்றான்.

அவனது கூற்றை ஆமோதித்தாள் புவனா. பேச்சு தங்கையிடம் இருந்தாலும், விழிகள் கிருத்திகா என்ன செய்கிறாள் என்றே ஓடியது.

திடீரென்று பெரிய வெங்காயம், கத்தி, காய் வெட்டும் கட்டையுடன் அவன் முன்பு வந்தாள். “உங்க அண்ணாவை இதை மட்டும் வெட்ட சொல்லுங்க” என்றாள். குறுஞ்சிரிப்புடன் அகன்று விட்டாள். அவளது சிரிப்புக்கான அர்த்தம் விளங்கியது. அண்ணன் வசமாக மாட்டிக் கொண்டார் என்பதும் தெரிந்தது.

அவனோ “இது என்ன பெரிய வேலை. இப்பவே முடிச்சுக் காட்டுறேன்…” என்றான் வீராப்பாக. நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெட்ட துவங்கினான்.

அவளது புருவம் உயர்ந்தது.

“புவனா மேம், சார், வெளியில் இருக்கும் தோலை சரியா நீக்காம வெட்டுறாங்க. வெங்காயத்தை நல்லா உறிச்சிட்டு வெட்ட சொல்லுங்க” என்றாள்.

இருவரும் அவளைப் பார்த்தனர். “இதென்ன மேம், சார்னு சொல்லிட்டு… புவனான்னு வாய் நிறைய கூப்பிடுங்க. நான் உங்களை விட வயசுல சின்னவ” என்றாள். அவளும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

பெண்கள் இருவரும் மற்ற வேலையை பார்த்தனர். அவன் வெங்காயம் வெட்டும் பணியில் மூழ்கினான். விழிகள் இரண்டும் கலங்கி நீராக வழிந்தது. கிருத்திகா உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினாள். தோல் எடுக்கப்பட்ட அனைத்தையும் தண்ணீர் நிரம்பிய கிண்ணத்தில் போட்டாள். அப்போது கைப்பேசி ஒலித்தது. கார்த்திக் ஸ்பீக்கரில் போட்டான். சாம்பவியின் குரல் கேட்டது. இயர் போனில் மாட்டினான். கிருத்திகா புருவங்கள் சுருங்க யோசனையுடன் அங்கிருந்து அகன்றாள்.

“ஹலோ மேடம் சொல்லுங்க” என்றான்.

அவளோ திகைத்து விழித்தாள். வேறு யாருக்கும் அடித்து விட்டோமோ என்று மறுபடியும் கைப்பேசியை பார்த்தாள்.

“என்ன மேடம், ஃபோன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டு, மேலும் அவளைக் கலங்கடித்தான்.

“கார்த்திக் என்னாச்சு உங்களுக்கு?”

“ஐ அம் வெரி பைன்!” என்றான்

அவள் திகைத்தாள்.

“எங்கே இருக்கறீங்க?”

“வேலை பார்த்துட்டு இருக்கேன். ஐ அம் பிஸி” என்று கெத்து காட்டினான்.

“வாரம் முழுக்க வேலை வேலைன்னு அலையிறீங்க. உங்களோடு டைம் ஸ்பன்ட் பண்ணவே முடியல. பெர்த்ட்டே அன்னைக்கு பார்த்தது. அப்போதும் சரியா பேசல. ஃபோன்ல பேசினாலும் சதா பிஸியா இருக்கேன்னு சொல்லிட்டு இருக்கறீங்க. வெளியே போகலாமா? இன்னைக்கு ஃபுல்லா ஜாலியா சுத்தி பார்த்திட்டு வரலாம்?” என்று ஆசையாக கேட்டாள். சாம்பவியின் அழைப்பில் அவன் மனம் தடுமாறியது.

சற்று முன்னர் கிருத்திகாவின் பேச்சு நிழலாடியது. ‘வாரம் முழுக்க வேலை வேலைன்னு அலைஞ்சுட்டு இருக்காங்க. இன்னைக்கு ஒரு நாள் நல்லா ஓய்வெடுக்க சொல்லுங்க. அப்போ தான் நாளைக்கு பிரஷ்ஷா வேலை பார்க்க முடியும்’ என்றாள். இருவருக்கும் எண்ணவோட்டத்தில் எத்தனை வித்தியாசம் என்று நினைக்க தோன்றியது.

“இல்லை. இன்னைக்கு வரல. வேலை இருக்கு” என்று மறுப்பு தெரிவித்தான்.

“அப்படி என்ன வேலையாம்?” என்று சலிப்புடன் கேட்டாள். அவன் முறுவலித்தான்.

“வியர்வை சிந்தி உழைச்சா தானே சாப்பாடு கிடைக்கும். கண்ணெல்லாம் எரியுது. முகமெல்லாம் வேர்வையில் நனையுது. அப்பப்பா!! முடியலடா… கூலா ஒரு கப் ஜூஸ் குடிச்சா நல்லா இருக்கும்” என்றான் கார்த்திக்.

அவன் வெங்காயத்தை வெட்டி கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறான். அது தெரியாமல், வேலை விசயமாக வெயிலில் அலைந்து கொண்டிருப்பதாக எண்ணி விட்டாள் சாம்பவி.

பெண்கள் இருவரும் வாய் மூடி சிரித்தனர்.

“அதான் வேலையாள் இருக்குமே, வாங்கிட்டு வரச் சொல்றதுக்கு என்னவாம்?” என்று கேட்டாள்.

கார்த்திக், “ம்கும்… இது எங்களுக்குத் தெரியாதாக்கும்” என்று முனங்கினான்.

கிருத்திகா, புவனா இருவரும் சிரிப்பை அடக்க சிரமப்பட்டனர்.

“சரி, சரி! வச்சுடவா?”

“ம்ம்…” என்று உதட்டை பிதுக்கி கொண்டு அழைப்பை துண்டித்தாள் சாம்பவி. அவனும் கைப்பேசியை மேஜையின் மீது வைத்தான்.

சாம்பவியிடம் சரியாக பேசி பல நாளாகி விட்டது. அவளைப் பார்த்து காதல் கொண்டு பின்னே அலைந்து அவளது சம்மதத்தை பெற்று இருவரும் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்து கொண்டனர். பயிற்சி முடிவுற்றதும் அவன் சொந்தவூருக்கு வந்து விட்டான். அத்துடன் தங்கையின் மரணம், அப்பா, வேலை என்று அவனால் சில நாட்கள் இயல்பாக இருக்க முடியவில்லை. அத்துடன் முன்பு போல் வெளியே செல்ல அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கைப்பேசியில் அவ்வப்போது உரையாடி கொள்வதோடு சரி. அதிலும், கிருத்திகாவிடம் அறை வாங்கிய பின்னர், அவளிடம் பேசும் நேரமெல்லாம் ஏனோ மனம் வலிக்கிறது. தங்கை அவளிடம் காட்டும் பாசம், அவளது அக்கறை கலந்த பேச்சு, குறும்புத்தனம் எல்லாம் சாம்பவியிடம் இருக்குமா என்றால் கேள்விக்குறி…

அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில், அவன் முன்பு பெரிய கண்ணாடி கப் நிறைய மாம்பழ ஜூஸ் வந்தது. வெங்காயம் அனைத்தையும் மாற்றினாள். விழிகள் நீரால் வழிய, முகம் முழுவதும் அரும்பிய வியர்வை துளிகளை பார்த்ததும் புன்னகைத்தாள். வெண்ணிற பூந்துவாலையை புவனாவிடம் கொடுத்து துடைத்து விடச் சொன்னாள். அவளது அக்கறையும், புன்னகையும் மனதில் ஆழமாக பதிந்தது.

உணவை முடித்த பின்னர் கார்த்திக் ஓய்வெடுக்க சென்றான். கிருத்திகா தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

புவனா “அப்பா, அண்ணாவும் அவங்களையும் சேர்த்து பார்க்கும் போது, ஜோடிப் பொருத்தம் பிரமாதமாயிருக்கு இல்லயாப்பா?” என்றாள்.

அவரது தலை சம்மதமாக அசைந்தது.

“அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா, நம்மளோடே கடைசி வரைக்கும் இருப்பாங்கப்பா” என்றாள்.

அவர் ‘ஆமாம்’ என்றார். சோபாவில் படுத்துக்கொண்டே அண்ணன் வெங்காயம் வெட்டிய அனுபவம், கிருத்திகாவிடம் பேசியதை பற்றி எல்லாம் கூறினாள். அவரும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

மாடியில் தன்னுடைய அறையில் படுத்திருந்த கார்த்திகேயனின் மனம், கிருத்திகாவை பற்றிய எண்ணத்தில் மூழ்கியது. ஏற்கனவே ஒருமுறை அவளைக் காயப்படுத்தி விட்டதால், மோசமான எண்ணத்துடன் பழகவில்லை என்பதை நிரூபிக்கவே, அவளிடம் பேசுவதாக தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

மாலையில் கேட்ட சிரிப்பு சப்தத்தில் உறக்கம் கலைந்தான். மெதுவாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்தான். வெளியேறி பால்கனி வழியாக பார்வையிட்டான்.

தங்கையும், அவளும் நீச்சல் குளத்தில் குளித்திருப்பார்கள் போலும், அதன் அருகில் ஈரக்கூந்தலை உலர்த்திக் கொண்டே நின்றார்கள். உட்புறம் நுழைந்து கீழே வந்தான். அவர்கள் இருவரையும் நோக்கி நடந்தான்.

கிருத்திகா அவளது வீடு, பெற்றோர், படிப்பு என்று சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. அவளது அண்ணன் இறந்து விட்டான். தானொரு அநாதை என்று சொன்னாள். அவனுக்குள் சுருக்கென்று தைத்தது. எதற்கென்று தெரியவில்லை. ‘இத்தனை அழகான பெண்ணுக்குள் இப்படியொரு சோகமா?’ என்று நினைத்து அவளுக்காக கவலைப்பட்டான் கார்த்திக். அவனைப் பார்த்ததும், ஈர உடைகளை எடுத்துக்கொண்டு அகன்றாள் கிருத்திகா.

டி மாதம் இரண்டாவது செவ்வாய் முப்பந்தல்  கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் 12:30 க்கு பிறகு புவனாவுடன் கிருத்திகா கிளம்பினாள். பழைய அம்மன் கோவிலின் முன்புறம் இறங்கி வழிபட்டனர். புதியதாக அமைத்திருக்கும் இசக்கி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தனர். 1:30 மணியளவில் தெய்வீக தன்மையுடைய பெண்களில் சிலருக்கு சுவாமியின் பார்வை கிட்டியது. கழுத்தில் மாலையுடன் அருகில் நின்ற பெண்களுக்கு அருள்வாக்கு கூறினர்.

கிருத்திகா மனதார வேண்டுதல் விடுத்தாள். அருகில் நின்று கேட்டிருந்த புவனா புன்னகையுடன் இறைவனை மனதிற்குள் துதித்தாள். அங்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை வாங்கி உண்டனர். பின்னர், வீட்டிற்கு கிளம்பினர். “அண்ணன் பணிபுரியும் அலுவலகம் அருகில் இருக்கு. போயிட்டு வரலாமா?” என்றாள் புவனா. அவளும் தலையசைத்தாள்.

பத்து நிமிடத்தில் கார் வந்து நின்றது. சாலையின் அருகில் காணப்பட்ட அறையின் முன்புறம் இறங்கி நின்றாள் கிருத்திகா. அவள் அண்ணனை காண உள்ளே சென்றாள்.

“அடடா வாடா, என்ன திடீர்னு வந்திருக்க?” என்று ஆச்சர்யமாக வினவினான்.

“கோவிலுக்கு வந்தோம். அப்படியே, உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கோம்” என்றாள்.

“வந்திருக்கோம்னா யாரெல்லாம்…” என்று கேட்டுக்கொண்டே புருவத்தை உயர்த்தினான்.

அவள் “மேனேஜர் மேடம், என்னைத் தனியா விடுவாங்களா என்ன?” என்று சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தாள். அவனும் நகைத்தான்.

“ஆமா, மேடம் எங்கே?”

“வெளியே”

“ஓகே. நான் பார்த்துட்டு வரேன். நீ கால் ஏதாவது வந்தா பார்த்துக்கோ. அதில ஜூஸ் இருக்கு எடுத்து குடி” என்று தங்கையை அமர வைத்தான். கதவை சாற்றி விட்டு வெளியில் வந்தான்.

கிருத்திகா ஆங்காங்கு காணப்பட்ட காற்றாடி, அது சுழலும் வேகம், பின் பகுதியில் காணப்பட்ட மலை, அதன் மீது குட்டையாய் தெரிகின்ற மரம், சுற்றிலும் காணப்பட்ட பசுமை, நீண்டு உயரமாக வளர்ந்திருந்த பனைமரங்கள். குட்டைச் செடிகள், என்று அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றாள்.

கார்த்திக் புன்னகையுடன் வந்தான்.

“என்ன மேடம், என்ன பார்த்துட்டு இருக்கறீங்க? எதுக்கு இப்படி வெயில்ல நின்னு கஷ்டப்படணும்? உள்ளே வந்திருக்கலாமே?” என்றான்.

அவள் புன்னகைத்தாள். அவனும்…

“சாப்டீங்களா?”

“ஆச்சு. நீ?”

“முடிஞ்சது”

“வா, கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்” என்றான். அவளும் தலையசைத்தாள். அவனது வேலை, நில விற்பனை, ரிஜிஸ்டர் பற்றி பேசிக்கொண்டு நடந்தார்கள்.

திடீரென்று அவன் “கிருத்திகா, நான் ஒண்ணு கேட்டா தவறா எடுத்துக்க மாட்டியே?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான். அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“நிஜமாகவே என்னை மன்னிச்சிட்டியா? என்மேல கோபம் இல்லையே?” என்று கேட்டான்.

அவள் “இல்லை” என்றாள்.

“கிருத்திகா, என் தங்கை காயத்ரி, இறந்து போவதுக்கு முன்பு ஒருமுறை வீடியோ காலில் பேசினாள். அப்போது, கொலு பொம்மைன்னு சொல்லிட்டு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துனா. அவள் முகத்தை நான் பார்க்கலை. அப்புறம், என் தங்கை விபத்தில் இறந்துட்டா. உன்னைத் திடீர்னு பார்த்ததும் ஆறு மாசத்துக்கு முன்னே பார்த்த அதே கொலு பொம்மையின் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு மயக்கம்! அவசரப்பட்டுட்டேன்… அதை நினைச்சு நான் வருந்தாத நாளில்லை. நீ என்கிட்டே பேசாம விலகி விலகிப் போறதை பார்த்ததும் என்னால தாங்க முடியலை! அதனால தான், வலிய வலிய வந்து பேசினேன். நீ பதில் தராம போனதால் வீம்புடன் நடந்துக்கிட்டேன். நான் மோசமானவன் இல்லை என்பதை நிரூபிக்கத்தான் ஒவ்வொரு முறையும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நிஜமாகவே சொல்லு, உனக்கு என்மேல கோபம் இல்லையே! அந்த நிகழ்ச்சியை மறந்திட்டியா?” என்று கேட்டான்.

கிருத்திகா அசைவற்று போய் நின்றாள்.

“கிருத்திகா, காயத்ரி சொன்ன கொலு பொம்மை நீதானா? என்னைப் பார்க்கத்தான் இங்கே வந்திருக்கிறியா?” என்றான். அவள் உடல் நடுங்கியது.

“நான் வெளிநாட்டில் இருக்கும் போது நம்மவூர் பொண்ணைப் பார்த்தேன். அவள் என்னைத் திரும்பி கூட பார்க்கலை. அப்படி நான் எதில் குறைவு என்கிற வீம்பு இருக்கத்தான் செய்தது. அதை விட காதலும் இருந்தது. ஒரு வழியா சம்மதிச்சிட்டா… ரெண்டு பேரும் பரஸ்பரம் பேசி பழகினோம். அப்புறம் நான் இங்கே வந்துட்டேன். தங்கையின் இறப்பு, அப்பா, வீடு, வேலைன்னு ஓய்வில்லாத பணிச்சுமை விடாம துரத்தியது. அவள்கிட்ட காதலா பேசி நிறைய மாசமாகிட்டு. என்ன, எப்படின்னு சும்மா பேசிக் கொள்வதோடு சரி. அதுவும் உன்னை அறைஞ்ச பிறகு இல்லை… என்னால நிம்மதியா பேசி, பழக முடியல. நீ என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா, நான் நிம்மதியா இருப்பேன். இல்லாட்டி நித்தமும் என்னை குற்றவுணர்ச்சி கொன்னுட்டே இருக்கும்” என்று தவிப்புடன் கூறினான்.

கார்த்திக் தன்னிடம் இப்படியெல்லாம் பேசுவான் என்று அறியாத கிருத்திகா, வாய் வார்த்தைகள் மறந்தவள் போல் நின்றாள். உன்னிடம் பேசிப் பழகியதற்கு இதுதான் காரணம். மற்றபடி எதுவுமே இல்லை. வீணாக கற்பனை பண்ணிக் கொள்ளாதே! நான் வேறு ஒருத்திக்கு சொந்தக்காரன். உன்னால் நிம்மதியில்லாமல் உழல்கிறேன் என்று சொல்லிவிட்டான். இதற்கு தான் என்ன பதிலுரைப்பது? அத்துடன் எதற்காக உன்னிடம் அப்படி நடந்து கொண்டேன். நீ என்னை மன்னித்து விட்டாயா? இல்லை என்றால் மன்னித்து விடு என்று கேட்ட விதம் அவளை பலமாக தாக்கியது. விழிகளில் நீர் நிரம்பி நின்றது. கைகால்கள் நடுங்கியது. தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது. உதட்டைக் கடித்து தன்னை அடக்க முயன்றாள்.

வாய் திறக்க முடியவில்லை. மனம் ரணமாக வலித்தது. தவறு செய்து விட்டு மன்னிப்பை யாசித்து அவன் நிற்கும் தோற்றம், மனதை வாள் கொண்டு அறுத்தது. எவ்வளவு பெரிய ஆள். அவன் வீட்டில் வேலைப் பார்க்கும் சாதாரணமான தன்னிடம் போய், சுயநிலை விளக்கம் அளிக்கிறானே என்று, மனம் ஆற்றாமையால் கலங்கியது. அவளது தோளைத் தட்டி இயல்பாக்கினான் கார்த்திக். அவள் திரும்பி நின்றாள். கண்ணீர் கன்னத்தில் வடிந்தது. அவன் காணாமல் துடைத்தாள். ஆளற்ற தீவில் தனியாக நிற்பதை போல உணர்ந்தாள். அப்படியே எங்கேயாவது சென்று விட மாட்டோமா என்பது போலிருந்தது. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவனது கேள்விகள் விடாமல் தொடர்ந்து வந்தது. நடக்க முடியாமல் கால்கள் இரண்டும் தள்ளாடியது. அவள் கைப்பற்றி அழைத்து வந்தான் கார்த்திக். புவனாவுடன் சேர்ந்து காரில் ஏறினாள். விழிகள் அவன் புறம் போக மறுத்தன. அவன் பதிலை எதிர்நோக்கி நிற்பது தெரிந்தது. நிமிர்ந்து பார்த்தாள் கிருத்திகா.

‘உன்மேல் எந்த தவறுமில்லை. நானே அத்தனைக்கும் காரணம்! என்னால் உன் வாழ்வில் எப்போதுமே இடைஞ்சல் வராது. நான் விரைவில் போயிடுவேன். நீ சந்தோசமா இரு’ என்று எண்ணிக்கொண்டே மென்மையாக புன்னகைத்தாள். அப்படியே சென்று விட்டாள். அவன் மனபாரமெல்லாம் ‘காற்றில் கரைந்த கற்பூரம் போல்’ காணாமல் போயின. அதேநேரம், அவள் விழியோரம் வடிந்த நீர் எதற்கானது என்பது தெரியாமல் நின்றான் கார்த்திகேயன்!

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-10.3513/..