காதல் சதுரங்க ஆட்டம் 19

இறுதி அத்தியாயம் : 19

ரசுராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது மகன் சக்திவேலுக்குச் சென்றது. உடனே அவன் கிளம்பி விட்டான். அண்ணனை அழைத்து வர காரை அனுப்பினாள் சாம்பவி.

ரெயில்வே நிலையத்தில் இருந்து சக்திவேல், சாம்பவியை மணந்து கொள்ளப் போகிறவன் உடன் அகல்யாவின் தம்பி அமுதன் மூவரும் வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, டாக்டர். ராஜன் பணிபுரிந்த மருத்துவமனையில் பரசுராம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கடுமையான மாரடைப்பால் அவதியுறுவதாகவும் கூறினான் அமுதன். அதே மருத்துவமனை என்றதும் பக்கென்றது. உடனே கைப்பேசியை எடுத்து தங்கையை தொடர்பு கொண்டான்.

அவள், “அப்பாவுக்கு கடுமையான மாரடைப்பு வந்திருப்பதால் ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர் சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அவன் உடனடியாக மறுப்பு தெரிவித்தான். “உனக்கு வேறு ஹாஸ்பெட்டல் கிடைக்கலயா? உடனே டிஸ்சார்ஜ் பண்ணு…” என்று சினந்தான்.

அவள், “அப்பாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கும் போது எப்படி டிஸ்சார்ஜ் பண்ண முடியும்? பிறகு ஏதாவது ஆகிட்டா …” என்று குரல் தழுதழுக்க கேட்டாள்.

“இல்லை, அவருக்கு வந்திருப்பது சாதாரண மாரடைப்பு. அவங்க பொய் சொல்லி என்னை வர வைக்க பார்க்கறாங்க. நீ உடனே டாக்டரை பார்த்து சிகிச்சை பண்ண வேண்டாம்னு சொல்லு” என்று மறுபடியும் கூறினான். அவள் தயங்கினாள்…

“சொன்னா கேளு சாம்பவி. உடனே வேற ஹாஸ்பிட்டலுக்கு மாத்துற வழியை பார். இல்லை, நான் அவங்க அப்பாவை செய்தது போல் அவனும் நம்ம அப்பாவை படுக்கையிலே விழ வச்சுடுவான்!” என்று கத்தினான்.

அவள் அச்சத்தில் நடுங்கிப் போனாள். சக்திவேல் இத்தனை கொடுமையானவனாக இருக்க கூடும் என்று அவள் ஒருபோதும் கருதவில்லை. வெளிநாட்டிற்கு சென்ற இடத்தில் எதேச்சையாக கார்த்திக்கை பார்த்தாள். அண்ணனிடம் பேசுகையில் மறைக்காமல் கூறினாள். அவன் “உனக்கு பிடிச்சிருந்தா ஒத்துக்கோ. நானே உன் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்கிறேன்” என்றான். தடை அகன்றார் போல் அவனுடன் பேசி பழகினாள். அண்ணனும், அமுதனும் தனிமையில் பேசியதை கேட்டு அதிர்ந்து போனாள். தன்னால் அவன் இவர்களிடம் மாட்டி விட்டானே என்று கலங்கினாள். திருமணத்தன்று கிருத்திகாவால் பிரச்சனை எழுந்தது. அதையே வாய்ப்பாக கருதி அவனிடமிருந்து நிரந்தரமாக பிரிந்தாள். அவனோ தொடர்ந்து வரவும் கடுமையாக பேசி காயப்படுத்தினாள். இன்று காலையில் கோபத்தில் வார்த்தையை விட்டாள். அதற்காக கார்த்திக் எரிமலையாக குமுறி விட்டான். அவன் மனதில் தான் இல்லையே என்று வருந்தினாலும், இனிமேல் அவன் வாழ்வில் எந்தவொரு குறையுமில்லை எனும் எண்ணத்தில், கண்ணீரை துடைத்துக்கொண்டு மருத்துவரை காண விரைந்தாள் சாம்பவி.

கோபத்தில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் சக்திவேல். தொழில் விரோதம், தொடர் தோல்விகளால் தகப்பனார் தொய்ந்து விழுந்த கோபத்தில், அவன் எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியை தழுவி விட்டது. அவன் அப்பாவை கடுமையான மாரடைப்பு கட்டாய ஓய்வு அவசியம் என்று நோயில்லாமலே படுக்கையில் தள்ளி மொத்த பொறுப்பையும் நண்பனின் அத்தான் வசம் ஒப்படைத்தான். அவனுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை. கடைசிவரை பிறக்கா விட்டால் மொத்த சொத்தும் தங்கை மூலம் வந்து விடும் என்று திட்டமிட்டான். டாக்டர் ராஜனை மிரட்டியதில் அவன் தூங்க மாத்திரைகளை உண்டு இறந்துவிட்டான். இப்போது, ‘தன்வினை தன்னைச் சுடும்’ எனும் பழமொழிக்கு ஏற்ப மாட்டிக்கொண்டு நிற்கிறான்.

நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் தங்களுடைய பணத்தை கேட்கிறார்கள். இல்லையென்றால், நாங்களே கொண்டு போகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். பண நெருக்கடியுடன், மனமும் நிம்மதியற்று தவிக்கிறது. நிறுவனம் கைவிட்டுப் போகும் நிலைக்கு வந்து விட்டது. இத்தனைக்கும் காரணம் கார்த்திக் அவனை விடக்கூடாது என்று சினந்து போய் நின்றான்.

அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து விட்டதாக தகவல் அளித்தாள் சாம்பவி. அவன் பின்னர் வருவதாக சொன்னான். அப்போது அமுதன் ஓடி வந்தான். காயத்ரி உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சைக்கு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறினான். அவன் நம்பமுடியாமல் நின்றான்.

“எப்படி? அவள் விபத்தில் சிக்கி கார் வெடித்ததை நான் பார்த்தனே…” என்றான்.

“விபத்து நடந்தது நிஜம். அவளை கார்த்திக் மனைவியின் அண்ணன்…” என்று ஆரம்பித்து நடந்த விசயங்களை தெரியப்படுத்தினான். “இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க. யாருக்கும் தெரியாம சிகிச்சை நடக்குது. விசயம் வெளியே தெரிஞ்சா ஆபத்து!” என்று பதற்றத்துடன் கூறினான். அவள் விபத்தில் இறக்கவில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. நேரில் சென்று ஊர்ஜிதப்படுத்த முடிவு செய்தான்.

இரவு நேரம் மருத்துவமனை நிசப்தமாக இருந்தது. முகத்தில் கவசத்தை அணிந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்தான் நெடுநெடுவென்று வளர்ந்த ஆடவன். பரசுராம் படுக்கைக்கு அடுத்தாற்போல் துயில்கொண்டிருந்தார் ஹரிச்சந்திரன். அவருக்கு அருகில் காயத்ரியை பார்த்ததும் நின்றான்.

வெறித்துக்கொண்டே அவளை நெருங்கினான். “காயத்ரி, நீ இன்னும் போகாமல் உயிரோடா இருக்கே? உன் சாவுக்கு நான் காரணமாகிட்டதால், அதையே காரணமா வச்சு மிரட்டி அடிபணியும் நிலைக்கு தள்ளிட்டியே! நீ உயிர் பிழைச்சா அப்புறம், நான் சிக்க வேண்டியது வரும். நீ கண் திறக்காமலே போயிடு” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த விச ஊசியை எடுத்தான்.

அப்படியே நெருங்கி அவள் புஜத்தில் இறக்கவும், அருகிலுள்ள படுக்கையில் சரிந்து படுத்திருந்த கார்த்திக் வேகமாக எழுந்தான். அவன் கையில் இருந்தவற்றை தட்டி விட்டான். விளக்குகள் ஒளிர்ந்தன. சிவராம் மற்றும் மப்டி காவலர்கள் அவர்களை நெருங்கினார்கள். முகத்தில் இருந்த கவசம் அகற்றப்பட்டது. யார் என்று அறிந்ததும் அதிர்ச்சி அனைவரையும் ஆட்கொண்டது. இவனா இப்படி செய்தான் என்று நம்ப முடியாமல் நின்றார்கள்.

“அமுதன்!! அடப்பாவி நீயாடா இப்படியெல்லாம் நடந்துக்கிட்ட? என் தங்கை இந்த நிலைமைக்கு வர நீயா காரணம்? அப்படி அவள் என்ன செஞ்சுட்டான்னு இப்படியெல்லாம் பண்ணியிருக்க?” என்று கோபமாக கேட்டான் கோகுல். அப்போது, வேலாயுதம், கிருத்திகா, புவனா மூவரும் வந்தனர். காயத்ரி படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து அண்ணியாரை நோக்கி சாடினாள். அமுதன் விழிகள் குத்திட்டு நின்றன.

கிருத்திகா, “காயத்ரி, உனக்கு சரியாகிட்டாடா? தெய்வமே! என்னோட வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்துட்ட. ஆயுசுக்கும் உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்று நெகிழ்ந்து போய் கூறினாள். காயத்ரியை அணைத்து அன்புடன் முத்தமிட்டாள். புவனாவும் அண்ணியை கட்டிக்கொண்டாள். நிறைவுடன் அதைப் பார்த்து நின்றான் கார்த்திக். சக்திவேலை பற்றி இழுத்து வந்தான் வேலாயுதம்.

காயத்ரியை பார்த்ததும் கண் கலங்கினான்.

நடந்த விசயத்தை காவலர் முன் எடுத்துரைத்தார்கள் கார்த்திக், வேலாயுதம், காயத்ரி மூவரும்.

திருநெல்வேலியில் நிறுவனத்தை அமைத்து கடுமையாக உழைத்து வந்தார் ஹரிச்சந்திரன். அவரது மகன் கோகுல் தகப்பனுக்கு உதவி புரிந்தான். மருமகள் பெரிய வீட்டில் பிறந்ததால், வீட்டில் இருக்க பிடிக்காமல் தானும் சென்று வந்தாள். யார் கேட்டாலும் “என் கணவருடையது” என்று பெருமையாக கூறினாள்.

அவளது தம்பி அமுதன் நண்பன் சக்திவேலுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டான். ஹரிச்சந்திரன் மீதான கோபத்தில் இருந்த சக்திவேல், தங்கைக்கும், தகப்பனுக்கும் தெரியாமல் அவன் குடும்பத்தை அழிக்க திட்டமிட்டான். கார்த்திக் சென்ற இடத்திற்கு படிக்க அனுப்பினான். அவளது காதலுக்கு உதவி புரிந்தான். அவள் வந்தவுடன் திருமணம் செய்ய முடிவு செய்தான். இந்நிலையில் அவனும், அமுதனும் ஃபார்டி ஒன்றில் சந்தித்தனர். அப்போது அமுதன் காயத்ரியை திருமணம் செய்து, அவள் பங்குடன் அத்தான் கோகுல் பங்கையும் தன்னுடைய அலுவலகத்துடன் இணைக்கப் போவதாக கூறினான். சக்திவேல் சாம்பவி, கார்த்திக் விசயத்தை பற்றிக் கூறினான். இருவரும் சரிபாதியாக நிறுவனத்தை கையப்படுத்த திட்டமிட்டனர். அனைத்தையும் கேட்ட காயத்ரி இப்போதே அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து, போலீஸில் மாட்டிவிடுதாக கூறிவிட்டு ஓடினாள். அச்சத்தில் அவளைத் துரத்தினான் அமுதன். அப்போது வந்து கொண்டிருந்த பிரசாத்தை பார்த்ததும் ஓடிச்சென்று உதவி கோரினாள். இருவரும் காரிலேறி வேகமாக சென்றனர்.

பின்புறம் அமுதன் தொடர்ந்து வருவதை கண்டு வேகத்தை அதிகப்படுத்தினான் ஓட்டுனர். அப்போது, சாலையோரம் வடிநீர் கால்வாய் தென்பட்டது. அவளைப் பற்றிக்கொண்டே, ஓட்டுனரிடம் வெளியில் குதிக்க சொன்னான். தானும் குதித்து உருண்டு சென்று கால்வாயில் விழுந்தான். ஓட்டுனரால் அச்சத்தில் கதவை திறக்க முடியவில்லை. அதற்குள் பள்ளத்தில் விழுந்து நொறுங்கி சிதறி விட்டது. கால்வாயில் இருந்து கீழே சென்ற பிரசாத் சாலையில் வந்த காரை வழிமறித்தான். அவர்கள் இருந்த தோற்றத்தை கண்ட மருத்துவர், உடனே உதவி புரிந்தார்.

காரில் செல்லும் போது பிரசாத் வேதனையுடன் பேசினான். அப்படியே மயங்கி சரிந்தான். காயத்ரி கால், தலையில் பட்ட அடி, வெடி சப்தத்தில் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று விட்டாள். பிரசாத்திற்கு எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனின்றி மயக்கத்திலே உயிர் பிரிந்தது. காயத்ரி விபத்தான விசயத்தைக் கேள்விப்பட்ட ஹரிச்சந்திரன் மாரடைப்பில் விழுந்தார். அவரை எழ விடாமல் செய்து விட திட்டமிட்டு, தானே மருத்துவராக சென்று டாக்டர் ராஜன் வாயிலாகவே “கடுமையான மாரடைப்பு. கட்டாய ஓய்வு அவசியம்” என்று சொல்ல வைத்தான். காயத்ரியின் விபத்தை காரணமாக வைத்து, அமுதனையும் மிரட்டி அடிபணிய செய்தான். அவன் வாயிலாக கார்த்திக் வீட்டில் நடப்பதை தெரிந்து கொண்டான்.

திருமணத்தன்று மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். அதைக்கேட்டு பதறியடித்து ஓடினாள் கிருத்திகா. அவன் தன்னை விரும்பா விட்டாலும், தன்னால் அவன் வாழ்க்கை அழிய வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால், அவளை மணந்தால் கார்த்திக் குடும்பமே அழிந்து விடும் என்பதால் “சாம்பவி வேண்டாம்” என்றாள். அப்படியே மயங்கி சரிந்தாள். அவன் எத்தனை முறை கேட்டும் வாய் திறக்க மறுத்தாள்.

கார்த்திக், சாம்பவியை மணந்தால் அவளோடு போய் விடுவான். ரியல் எஸ்டேட் பிஸ்னஸை மட்டும் பார்க்க சொல்லலாம் என்று நினைத்தாள் அகல்யா. அவளது திட்டம் தவிடு பொடியானதுடன், கிருத்திகா தனக்கு இணையாக வந்த கோபம், கார்த்திக் நிறுவனத்தில் புகுந்து அதிகாரமாக பேசிய விதம் அனைத்தும் அவளை அடியோடு மாற்றிவிட்டது. தனக்கென்று நினைத்தது கையை விட்டுப் போனதில் வார்த்தையை விட்டாள். தற்சமயம் பேச்சற்று தனிமையில் கிடந்து உழல்கிறாள். கோகுல் கடுமையாக பேசிவிட்டு சென்ற பின்னர், அவள் முகத்திலேயே முழிப்பதில்லை.

காயத்ரிக்கு சுயநினைவு திரும்பி விட்டதாக நேற்றிரவு மருத்துவர் கூறினார். தங்கையை காண சென்றான் கார்த்திக். அண்ணனை பார்த்த உடன் அனைத்து விசயங்களையும் தெரியப்படுத்தி விட்டாள். அவளை அழைத்துக்கொண்டு வரும் போது, பரசுராம், சாம்பவியின் பேச்சும் அவனது பதிலடியும் நிகழ்ந்தது. மனையாளை சமாதானப்படுத்தியவன், பரசுராமை வைத்தே மகனை வர வைக்க முடிவு செய்தான். அப்படியும் அவன் வாராமல், தங்கையை பயன்படுத்தினான்.

அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட காவலர்கள் இருவரையும் கைது செய்தனர்.

வேலாயுதத்தை பார்த்ததும் “உங்களை என் கணவரா என்னைப் பார்த்துக்க ஏற்பாடு செஞ்சாங்க?” என்று கேட்டாள் கிருத்திகா.

அவன் “ஆமாம்” என்றான். புரியாமல் பார்த்தாள்.

வேலாயுதம் புன்னகைத்தான். “கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு நீங்க ஃபோன்ல பேசிட்டு அழுவதையே பார்த்துட்டு நின்னாங்க ஐயா! அப்போ என்கிட்ட ‘அவள் யார் கிட்டே பேசிட்டு இப்படி அழுதுட்டு இருக்கா? ஏன் இங்கே இருந்து போயிடுவேன்னு ஒவ்வொரு முறையும் சொல்றா? எனக்குத் தெரியாம அவள் எங்கேயும் போயிடகூடாது. நீ கவனமா பார்த்துக்கோ’ன்னு சொன்னாங்க. அப்பவே, ஐயா மனசில் நீங்கதான் இருக்கறீங்கன்னு தெளிவா புரிஞ்சது. பெரிய ஐயாவும் நீங்களே மருமகளா வரணும்னு ஆசைப்பட்டதால், உங்க ரெண்டு பேரையும் இணைச்சு வச்சேன். அப்புறம், ஐயா! கோபத்தில் உங்களை காயப்படுத்தியப்போதும் காவலனா இருந்தேன்” என்றான். அவளது விழிகள் கணவன் முகத்திலேயே நிலைத்தன. ‘என்மீது அத்தனை பாசமா?’ என்று கேட்டாள். அவன் கண் சிமிட்டினான். இருவருடைய இதழ்களும் மலர்ச்சியுடன் விரிந்தன.

இரண்டு நாட்களில் வீட்டிற்குச் சென்றனர். மதிவாணன், “உதவி புரிய மட்டுமே நிறுவனத்திற்கு வந்தேன். இனிமேல் நீங்களே பார்த்துக்கோங்க. என் மகன் செய்த தவறுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் மகளையும் மன்னிச்சிடுங்க” என்றார். அகல்யா தலைகுனிந்து நின்றாள். கோகுல் புன்னகையுடன் தலையசைத்தான்.

இரவு தங்கையுடன் இருந்த மனையாளைத் தேடி வந்தான் கார்த்திக். இருவரும் இரண்டு கைகளை பற்றிக்கொண்டு பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். அண்ணன் வந்து நிற்பது தெரிந்தது.

“என் அண்ணி எங்களோடே இருப்பாங்க. நீங்க போய் உங்க அறையிலேயே தூங்குங்க.” என்று வெளியே பிடித்து தள்ளினார்கள்.

அவன், “எம்மா, எம்மா! அண்ணன் பாவம்டா! ஏற்கனவே ஹாஸ்பெட்டல்ல இருந்ததால் அவளோடு சரியா பேச முடியல. ராத்திரி மட்டும் எனக்கு கொடுங்கடா. பகல்ல நான் வேலைக்கு போன பிறகு, நீங்களே பார்த்துக்கோங்க” என்று கெஞ்சினான்.

காயத்ரி, “முடியாது! என் அண்ணியை நீங்க ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க. இதுக்கா அவங்களை உங்களுக்குன்னு நான் பார்த்து வச்சேன்? உங்க அறையிலே போய் தனியா படுத்து தூங்குங்க. அப்போத்தான் அவங்களோட அருமை புரியும்” என்று விட மறுத்தாள். தங்கையின் அவள்மீதான பாசம் புரிந்தது. தன்னுடைய நிலைமையை புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்று நினைத்து, ஏக்கமாக மனையாளை பார்த்தான். அவள் புன்னகையுடன் அவர்களையே பார்த்திருந்தாள்.

பெருமூச்சுடன் வெளியேறினான் கார்த்திக். அவர்கள் இரவெல்லாம் கதையடித்து மகிழ்ந்தார்கள்.

அதன் பிறகும் தொடர்ச்சியாக அதேபோல் நடந்தது. அவன் முகவாட்டம் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. சரியாக உண்ணாமல், உறக்கமற்று காணப்பட்டான். அண்ணனின் மனதை புரிந்து கொண்டாள் காயத்ரி. அண்ணியிடம் அவன் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கேட்டாள். அவள் “அவங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை காயத்ரி. அவங்க எனக்கு கணவரா கிடைச்சதை வரமா நினைக்கிறேன்! இந்த ஜென்மம் மட்டுமல்ல, நான் பிறக்கும் அத்தனைக்கும் அவங்க மனைவியா வாழ ஆசைப்படுறேன்” என்றாள்.

அண்ணியாரின் பதிலில் திருப்தியுற்றாள். அன்றைய இரவு அலங்கரித்து அண்ணனின் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

அவனது ஆசையின் பேரில் அதே பட்டுடுத்தி கைவளையல் குலுங்க, கால்கொலுசு சிணுங்க, முகமெல்லாம் குங்குமமாக சிவந்து, தலைகொள்ளா பூவுடன், மெது அடிகளை எடுத்து வைத்து, நாணம் கலந்த எதிர்பார்ப்புடன் நின்றாள் கிருத்திகா. கீழிருந்து மேலாக ரசித்தவன் விழிகள் அவளை விட்டு விலக மறுத்தன.

பால் செம்பை கையில் வாங்கினான். காலில் விழுந்தவளை மனதார ஆசிர்வதித்து கைகளில் ஏந்தினான். அன்று போல் பார்க்கும் ஆவலில் லேஸால் வடிவமைப்பட்ட மேல் ரவிக்கையை விலக்கினான். நாணத்தால் சிவந்த குற்றமற்ற நயனத்தையும், பளீரென்று தெரிந்த பொன்னிற மேனி வளைவுகளையும் கண்டு மயக்கத்தில் ஆழ்ந்தான். சற்று நேரத்தில் அவளுடன் காதல் விளையாட்டில் மூழ்கி, அத்தனை நாளைய பிரம்மச்சாரிய விரதத்தை இனிதே நிறைவு செய்தான்.

மறுநாள் தங்கையின் ஆசையின் பேரில், அசோக்கை தன்னுடைய அலுவலகத்தில் பணியில் அமர்த்தியது மட்டுமின்றி, தங்கையையும் அவனுக்கே கொடுப்பதாக வாக்களித்தான். ஆச்சர்யமாக பார்த்தான் அசோக். “என் மனைவியின் உடன் பிறவா சகோதரன். என் தங்கையை ஆபத்து நேரத்தில் பேணி பாதுகாத்தவன். இறுதிவரைக்கும் பார்த்துக்கொள்வான் எனும் நம்பிக்கையில் கொடுக்கிறேன்” என்றான்.

காயத்ரியிடம் கேட்டனர். அவள் சம்மதமாக தலையசைத்தாள். ஹெஸ்ட் ஹவுஸிற்கு அவர்கள் குடும்பத்தை வரச்செய்தான். ஒரு நல்ல நாளில் அவர்களுடைய திருமணத்தையும் நடத்தி முடித்தான். அப்பாவின் ஆசிர்வாதத்துடன், அண்ணன், மைத்துனன் உதவியுடன் நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைத்தான் கார்த்திகேயன்!

                  ***சுபம்***

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். கதை பிடித்திருந்தால்  வோட்டிங் மூலம் வெற்றி வாகைசூட அருள் புரியுங்கள் 

நன்றிகள் பல.... 

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-17.3652/