காதல் குழம்பி – 3

போர்டிக்கோவில் காரை நிறுத்திய ஸ்ரீ வேக எட்டுகளில் வீட்டினுள் நுழைந்தான். அதுவரை டிவியில் சின்சேன் பார்த்துக் கொண்டிருந்த அனித்ரா வேகமாக டிவியை நிறுத்திவிட்டு தன் முகத்தைச் சோகமாக மாற்றிக் கொண்டாள்.

“பத்மாம்மா!” என்ற ஸ்ரீயின் கத்தலில் அவசர அவசரமாக சமையல் அறையில் இருந்து ஓடிவந்தார் பத்மா.

“சாப்பாடு எடுத்து வைங்க” என்றவன் அனித்ராவை முறைத்தபடி அர்னவ்வின் அறைக்கு சென்றான். அங்கே அழுது கொண்டிருந்த அர்னவ் கதவு திறக்கப்படும் சத்தத்தில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

“பட்டினியா இருந்து என்னை சாதிக்க போற அர்னவ்?”

அவன் பதில் கூறாமல் முகத்தை திருப்பிக் கொள்ள “அதான் நீ சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டுறேன்ல அப்புறமும் என்ன உன் பிரச்சனை?” என்றான் ஸ்ரீ.

“நீ எங்கள கண்டுக்காம போனது தான் பிரச்சனை” என்றபடி அறையின் உள் வந்தாள் அனித்ரா.

“ஏய் அர்னவ் வா போய் சாப்பிடலாம் ஸ்ரீ சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டான் அப்படினா உன் மேல உள்ள கோபம் போயிருச்சுனு அர்த்தம” 

அர்னவ் முகம் மலர நிமிர்ந்து அமர “நான் எப்போ சொன்னேன் கோபம் போச்சுனு” என்றான் ஸ்ரீ.

அதில் அர்னவின் முகம் மறுபடியும் சுருங்கிவிட்டது. அதை பார்த்த ஸ்ரீயின் மனம் துடித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் “ஆமா நான்….. அது என்ன அர்னவ் மேல மட்டும் நான் கோபமா இருக்குற மாதிரி பேசுற உம்மேலையும் தான் கோபமா இருக்கேன்”

“என்னை ஸ்ரீ நான் உன் செல்லம் தான எம்மேல கோபப்பட முடியுமா உன்னால ம்!” என கொஞ்சியபடி கேட்டாள். 

“ஏன் நீயும் தான உங்க அம்மா வேணும்னு அவன் கூட காபி ஷாப் போன!”

“அந்த பொம்பளை ஒன்னும் என் அம்மா இல்ல என்னை கோபப்படுத்தி பார்க்காத ஸ்ரீ அப்புறம் நிஜமாவே நான் உங்கிட்ட பேசமாட்டேன்”

ஸ்ரீ அனித்ராவிடம் விளையாட்டாக தான் அவ்வாறு கேட்டான். ஆனால் அனித்ராவின் மனதில் ஆரிணி மீதிருந்த வெறுப்பை காணும் போது மனதினுள் ஒரு பயம் ஒன்று இயல்பாக தோன்றியது.

“அனி என்ன இருந்தாலும் ஆரிணி உன் அம்மா இந்த மாதிரி பேசக்கூடாது”

ஸ்ரீயை முறைத்துப் பார்த்த அனித்ரா அந்த அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டாள். செல்லும் அவளை இருவரும் கவலை பொங்க பார்த்தனர்.

பெருமூச்சை இழுத்துவிட்டபடி வெளியே செல்ல முயன்ற ஸ்ரீயின் கைகளை பற்றிய அர்னவ் “என்மேல கோபம் போகலையா ஸ்ரீ”

“போகாது!” என்றவன் “எழுந்து வா சாப்பிட போலாம்” என்றான்.

அர்னவ் “எனக்கு பசிக்கல” என்றபடி பெட்டில் படுத்துக்கொள்ள அவனையே இரண்டு நிமிடம் வெறித்துப் பார்த்த ஸ்ரீ அடுத்த நிமிடம் அவனை கையில் தூக்கி கொண்டான். 

“என் மேல கோபம் போகலை சொன்னல அப்புறம் ஏன் தூக்குற விடு!” என்று கூறியபடி அவன் கையில் இருந்து திமிறியபடி இருந்தான் அர்னவ். 

“கோபம் தான் அதுக்கு நீ பட்டியா இருக்குறத அனுமதிக்க முடியுமா?” என்றவன் “துள்ளாம இருடா!” என்றான் ஸ்ரீ. 

டைனிங் டேபிலின் மீது அவனை அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொண்டான். அங்கே ஏற்கனவே அனித்ரா அமர்ந்து தனது உணவை உண்டு கொண்டிருந்தாள். 

ஸ்ரீ “அனி கோபமா வெளிய வந்த?” 

“அந்த பொம்பளைய பத்தி பேசுனா மட்டும் தான் கோபம் வரும் மத்தபடி காரணம் இவ்லாம நான் ஏன் கோபப்படனும்?” 

“சாப்பாடு தான் முக்கியம்னு சொல்லாம சொல்ற” 

“இல்லையே ஸ்ரைட்டா தான் சொல்றேன். ஆக்சுவலி எனக்கு ஏற்கனவே ரொம்ப பசி. இந்த அர்னவ் தான் நீ பேசாம போகவும் உம்முனு இருந்தான். உன்னை மறுபடியும் வீட்டுக்கு வர வைக்க தான் பட்டினி கிடந்தோம். அதான் இப்போ வந்துட்ட எங்ககிட்ட பேசிட்ட அப்புறமும் எதுக்கு வெயிட் பண்ணனும்?”

அனித்ரா எப்பொழுதும் இப்படியே அவளுக்கு சரி என்பதை தான் செய்வாள். அதுபோல் தான் செய்யும் களவாணி தனங்கள் அனைத்தையும் ஸ்ரீயிடம் மட்டும் மறைக்காமல் ஒத்து கொள்வாள். அதனாலே அவளது தீட்டும் திட்டங்கள் பல ஸ்ரீயிடம் பழிக்காது.

அதற்கு உதாரணம் நேற்றைக்கு அவள் நடத்திய அழுகை டிராமாவே. 

ஒரு நிமிடம் அவளது அழுகுரலில் அர்னவ்வே நம்பிவிட்டான். ‘தான் அடம்பிடித்து அன்னையை காண சென்றதற்கு அனித்ராவிடமும் பேசாமல் இருக்கிறானே ஸ்ரீ!’ என கவலை அடைந்தான். அவளது கரகரப்பான குரலை காண இயலாமல் தலை குனிந்தான். 

ஆனால் அடுத்தபடியாக ஸ்ரீயின் ‘டிராமாவை நிறுத்து அனித்ரா!” என்ற குரலை கேட்டவுடன் அதிர்ந்து அவள் முகம் காண அவளோ திருட்டு முழி முழித்தாள்.

தற்போது அனித்ராவை பார்த்து லேசாக சிரித்த ஸ்ரீ உணவை உண்ண ஆரம்பிக்க அர்னவோ இன்னமும் வீம்புபிடித்தபடியே இருந்தான். 

ஸ்ரீ தன் தட்டில் இருந்த உணவை எடுத்து வழுக்கட்டாயமாக அவனுக்கு ஊட்டினான். முதலில் முரண்டு பிடித்தவன் பின் அமைதியாக உண்ண ஆரம்பித்தான்.

மருத்துவமனையில் வேந்தனின் சிராய்ப்புகளுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தார் மருத்துவர். 

அடிபட்டுள்ள இடங்கள் அனைத்திற்கும் மருந்திட்டவுடன் ஆரிணியும் வேந்தனும் மருத்துவரின் கேபின்விட்டு வெளியே வந்தனர்.

இருவரும் கட்டணம் கட்டும் இடம் சென்று பணத்தை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவனது எண்ணிற்கு அழைப்பு வர அதனை ஏற்று “சொல்லு பிரக்யா!” என்றபடி நகர்ந்தான்.

உடனே அவன் புறம் திரும்பிய ஆரிணி அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். அவனோ தீவிரமாக ஏதோ பேசியபடி இருந்தான். 

இடையிடையே அவனது முகத்தில் தோன்றிய சிரிப்பை பார்க்கும் பொழுது இவளுக்கு ஆசிட்டை ஊற்றியது போல் எறிந்தது. எரிச்சலுடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

போன் பேசி முடித்தவுடன் அவள் அருகில் வந்தான் வேந்தன். கட்டண ரசிதை அவன் புறம் நீட்டியவள் ஒரு மூறைப்புடன் அங்கிருந்து நகர்நதாள்

செல்பவளை கத்தி அழைத்தான் “மேடம்!”

அவள் திரும்பி பார்க்க “இனிமேலாவது கவனாமா இருங்க!” என்றான் 

அவளோ அவனை திமிராக பார்த்து சிரித்துவிட்டு தன் கூலர்ஸை மாட்டியபடி சென்றுவிட்டாள்,

இரண்டு நாட்கள் கழித்து அர்னவ் அனித்ரா படிக்கும் பள்ளியில் இருந்து ஸ்ரீக்கு உடனடியாக கிளம்பி வருமாறு அழைப்பு வந்தது.

அவசரமாக கிளம்பி பள்ளியை நோக்கி சென்றான். பள்ளி வளாகத்தில் காரை நிறுத்தியவன் வேகமாக பிரின்சிபல் அறைக்கு சென்றான். 

அங்கே அர்னவ் பயத்துடன் நின்று கொண்டிருக்க அனித்ராவோ திமிராக நின்று கொண்டிருந்தாள். அவள் அருகே அவளது வகுப்பு ஆசிரியை அவளை முறைத்தபடி நின்று இருந்தார்.

ஸ்ரீ உள்ளே நுழைந்தவுடன் அனைவரது கவனமும் அவன் புறம் திரும்பியது.

“வாங்க மிஸ்டர் ஸ்ரீ!” என்றார் தலைமை ஆசிரியர்.

“மேம் என்னாச்சு?” என்றான் அர்னவையும் அனித்ராவையும் பார்த்தபடி 

அவனது பார்வையை கண்ட அர்னவ் தலையை இடவலமாக ஆட்டியவன் ‘நான் இல்லை அவள் தான்!’ என பார்வையால் அனித்ரா புறம் சுட்டிக் காட்டினான்.

“ஒரு பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்க கூடாது மிஸ்டர் ஸ்ரீ!” என்ற தலைமை ஆசிரியரின் குரலில் அவர்புறம் திரும்பியவன் குழப்பமாக அவரை பார்த்தான். அவரும் சற்று முன் நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

மூன்றாம் வகுப்பு அறை

வகுப்பாசிரியர் அறையின் உள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அவரும் ஆமோதிப்பதாக தலை அசைத்து அனைவரையும் அமரும்படி கை அசைத்தார்.

“ஸ்டூடன்ஸ் உங்களோட பர்ஸ்னல் டிடைல்ஸ் எல்லாத்தையும் ரீசெக் பண்ணனும் சோ நான் கொடுக்குற ஃபார்ம்ல (Form) நான் சொல்ல சொல்ல ஃபில் (Fill) பண்ணனும் ஒகே!” என்றார்

மாணவர்கள் அனைவரும் கோரசாக “ஓகே மிஸ்” என கூறவும் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவனிடம் கொடுத்த பின்னிருப்பவர்களுக்கு பாஸ் செய்யுமாறு கூறினார். அவனும் அவர் கூறியபடி செய்து முடித்தான்.

“ஸ்டூடன்ஸ் எல்லார் கைக்கும் ஃபார்ம் வந்துருச்சா?”

“எஸ் மிஸ்” என மீண்டும் மாணவர்களிடையே கோரசாக சத்தம் கேட்டது.

“ஒகே ஃபர்ஸ்ட் இருக்குற காலம்ல(Column) உங்க நேம் எழுதுங்க!”

மாணவர்கள் அவர் சொன்னபடியே செய்தனர். அடுத்தபடியாக பிறந்த தேதி, தாய் தந்தை பெயர்,முகவரி, கைபேசி எண் என அனைத்தையும் அவர் சொல்ல சொல்ல மாணவர்கள் அனைவரும் அதுபோல் எழுதி முடித்தனர்.

“எல்லாரும் எழுதி முடிச்சாச்சா?” என்றவர் “ஃபார்ம் எல்லாத்தையும் ஒவ்வொருத்தரா வந்து டேபில்ல சமீட் பண்ணுங்க” என்றார்.

மாணவர்களும் அவர் கூறியபடி சமிட் செய்தனர். மாணவர்களை முந்தைய நாள் நடத்திய பாடங்களை படிக்க சொன்னவர் ஒவ்வொருவரின் ஃபார்மையும் தான் வைத்திருந்த கையேட்டில் இருப்பது போல் இருக்கிறதா என சரிபார்த்தார்.

ஒவ்வொருவராக பார்த்து வந்த ஆசிரியர் அனித்ராவின் ஃபார்மைக் கண்டு கண்களை சுருக்கினார் பின் அர்னவின் ஃபார்மை மற்றவைகளில் இருந்து தேடி எடுத்தவர் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தார்.

பின் நிமிர்ந்து “அர்னவ் அனித்ரா இரண்டு பேரும் இங்க வாங்க”

இருவரும் அவர்கள் முன் சென்று நின்றனர்.

“அனித்ரா என்ன இது உன்னோட ஃபார்ம்ல அம்மா அப்பா இடத்துல ஸ்ரீனு எழுதி இருக்க. உன்னோட டிவின் பிரதர் அவனோட ஃபார்ம்ல வேந்தன் ஆரிணி அப்படினு எழுதியிருக்கான். உன்னோட ரெக்கார்ட்லையும் வேந்தன் ஆரிணினு தான் இருக்கு. எதுக்காக ஸ்ரீனு எழுதுன?”

உடனே மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. “சைலன்ஸ்” என்று கூறிய ஆசிரியை அனித்ராவின் பதிலை வேண்டி அவள் முகத்தை திரும்பி பார்த்தார்.

“ஸ்ரீ தான் என் அப்பா அம்மா எல்லாம்” என்றாள்.

“நீ அவரை அப்படி நினைக்கலாம் ஆனால் உன்னோட பயாலஜிக்கல் பேரண்ட்ஸ் நேம் தான் இந்த ஃபார்ம்ல எழுதனும். நான் வேற ஃபார்ம் தரேன் அதுல சரியா எழுதிட்டு வா!” என்று இன்னொரு ஃபார்மை நீட்டினார்.

அதை பெற்றுக் கொண்டவள் அதிலும் முன்பு எழுதியது போல் ஸ்ரீ என்றே எழுதிவந்து கொடுத்தாள். அவளது இந்த செயல் ஆசிரியரை கோபத்தை தூண்டியது.

இருந்தாலும் அவர் தன் கோபத்தை அவளிடம் காட்டாமல் பொறுமையாகவே அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றார். 

ஆனால் அவள் கேட்கும் நிலை தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போல் அவள் தரப்பிலே அழுத்தமாக நின்றாள்.

அர்னவும் அவளுக்கு சொல்லி பார்த்தான் “பாப்பு மிஸ் சொல்ற மாதிரி கேளு!” என்று ஆனால் அவள் அதிகம் வீம்பு பிடித்தாள்.

இதனால் கோபம் கொண்ட வகுப்பாசிரியர் தலைமை ஆசிரியரிம் புகார் அளிக்க அதன் விளைவாக ஸ்ரீ பள்ளிக்கு அழைக்கப்பட்டான்.

நடந்த நிகழ்வுகளை கேட்ட ஸ்ரீ ஆசிரியர்களிடம் அனித்ராவிற்காக மன்னிப்பு கேட்டான். 

பிறகு அவர்களிடம் குழந்தைகள் இருவருக்கும் இன்று விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள தலைமை ஆசிரியர் ஒப்புகொள்ளவும் இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

சோபாவில் திமிராக அமர்ந்து இருந்த அனித்ராவின் முன் கைகளை கட்டியபடி நின்று இருந்தான் ஸ்ரீதர்.

உன்னுடைய அழுத்தமான பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்பது போல் இயல்பாக அமர்ந்து இருந்தாள் அனித்ரா.

தொடரும்…