காதல் குழம்பி – 2

முந்தைய நாள் அர்னவை காபி ஷாப்பில் சந்தித்துவிட்டு ஊரையே சுற்றி முடித்துத் தாமதமாகவே வீடு திரும்பியிருந்தாள் அவள்.

இருப்பினும் மறுநாள் அதிகாலையே எழுந்து கொண்டாள். தன் அன்றாடக் காலை பணிகளை முடித்தவிட்டு காலை உணவிற்காக டைனிங் டேபிலில் அருகில் வந்தாள்.

உணவை தானாகவே பரிமாறிக் கொண்டவள் இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

உணவை ஒரு கவலம் எடுத்து உண்ண முற்படும் வேளை “ஆரிணி!” என்ற அவளது தாயின் குரலில் கை கீழிறங்கியது.

“ஆரிணி நீ பண்றது எதாதவது சரியா இருக்கா? நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டேங்குற. உன் அப்பா படுத்தபடுக்கையா இருக்காரு! அவரை ஒருதடவையாவது வந்து பார்க்கனும்னு உனக்குத் தோணுதா! ஏன் இப்படி” 

அவர் மேலே பேசுவதற்கு முன் தன் இடக்கையை நிமிர்த்தி நிறுத்துமாறு கூறினாள்.

“உங்களுக்கு ஒருமுறை சொன்ன புரியாதா? அவரோட ஹெல்த் மேல நான் ஏன் அக்கறைபடனும். பெத்தகடமைக்குத் தான் அவரோட டிரீட்மெண்ட் செலவு எல்லாத்தையும் பார்குறேனே! வேற என்ன வேணும்?”

“பணம் கொடுத்தால் போதுமா? பாசம்! நாங்க உன்னோட பேரண்ட்ஸ் ஆரிணி”

தன் முன் இருந்த தட்டை நகர்த்தியவள் அருகில் இருந்த பாத்திரத்தில் கைகளைக் கழுவிக் கொண்டாள். எவ்வளவு வசதியுடனும் வாழ்ந்தாலும் நாகரிகம் பார்த்தாலும் உணவை மட்டும் எப்பொழுதும் கைகளில் அள்ளியே உண்பாள். உயர்ரகப் பார்ட்டிகளுக்குச் சென்றாலும் ஸ்பூன் ஸ்போர்க்கை உபயோகப்படுத்தமாட்டாள்,

டிசுவால் கைகளைத் துடைத்துக் கொண்டவள் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்.

ஆரிணியின் தாய் அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்தார். அவளது கார் கேட்டை தாண்டிய சத்தம் காதில் கேட்டதும் பெரூமூச்சை இழுத்துவிட்டு உள்ளே சென்றார்,

முந்தைய நாள் அர்னவும் ஆரிணியும் சந்தித்த காபி ஷாப்பின் அலுவலக அறையில் அமர்ந்து இருந்தான் ஸ்ரீ. அவனது கண்கள் கூர்மையாக எதிரில் இருப்பதை ஆராய்ந்து கொண்டிருந்தது; முந்தைய நாளின் சிசிடிவி பதிவுகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த காபி ஷாப் ஸ்ரீக்கு சொந்தமானது. 

ஸ்ரீக்கு ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு என மூன்று மாநிலத்திலும் காபி ஷாப் கிளைகள் உண்டு. இவை அனைத்தும் அவனது இத்தனை வருட உழைப்பு.

ஒரு வாரம் முன்பு வரை ஸ்ரீயும் குழந்தைகளும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அர்னவின் ஒருவருட போரட்டத்திற்குப் பலனாகத் தற்போது நேசங்குறுச்சிக்கு குடி வந்துள்ளனர்.

சிசிடிவி பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவனது அனுமதியை கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் கடை ஊழியன் ஒருவன். “சார் காபி” என அவனது டேபிலின் முன் வைத்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.

ஸ்ரீ ஒரு காபி பைத்தியம் அவனுக்கு ஒரு நாளில் மூன்று வேலையேனும் காபி வேண்டும் காபியை அருந்தும் போது தனி உலகிற்குச் சென்றுவிடுவான். இப்பழக்கம் அவனுக்கு அதீத சந்தோஷத்தை தரும். தீவிர சிந்தனையைத் தூண்டும்.

இதோ இப்பொழுது கூடக் காபியை பருகியவாரே கணினியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அர்னவ்வின் கண்களில் இருந்த ஏக்கம் ஸ்ரீயை கொல்லாமல் கொன்றது. அவனைத் தாய் பாசத்திற்கு ஏங்க வைத்துவிட்டேனோ என்று கவலை அடைந்தான்.

அதேநேரம் ஆரிணியின் முகத்தில் சிறிதும் தாய்மை உணர்வு தென்படாததைக் கவனித்தவன் தான் செய்தது சரியே எனும் முடிவுக்கு வந்தான்.

வேந்தன் தன் பைக்கை போர்டிக்கோவில் உள்ள உயர்ரகக் கார்களுக்கு மத்தியில் நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்.

அவனது பைக் சத்தம் கேட்டதும் அறையின் உள்ளிருந்து வேகமாக ஓடிவந்தார் அவனது தாய் பவானி.

ஆறடி ஆண்மகனாகக் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்த வேந்தனை இமை பிரியாமல் பார்த்தார். நொடியில் கண்களில் நீர் பனிக்க மகனிடம் ஓடினார்

“கண்ணா வேந்தா!” என்று அவனை ஆரத் தழுவினார். “எப்படி இருக்க வேந்தா? நேர நேரத்துக்கு சரியா சாப்பிடுறியா இல்லையா? ஏன் இப்படி இருக்கக் கலையே இல்லாம?”

“முதல துரை நேத்தே ஏன் வீட்டுக்கு வரலனு கேட்டு சொல்லு பவானி!” என்றார் அவரது கணவர் கல்யாண்ராம். 

தென்னிந்தியாவின் டாப் ஒன் பிஸ்னஸ் மேன். இதுவரை அவரது வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது. அனைத்தும் அவரது எண்ணப்படியே நடந்தது ஒன்றை தவிர அவரது மகன் வேந்தனது வாழ்வு. அவனது வாழ்வு மட்டும் அல்ல அவனையும் அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.

வேந்தன், “இப்போ நான் இங்க இருக்கவா இல்லை கிளம்பவா?”

“ஓ துரைக்குக் கோபம் வருதோ இவ்வளவு வீம்பு பேசுறவன் எதுக்குடா வரேன்னு எங்களுக்கு இன்பார்ம் பண்ணனும்? உனக்காக நாங்க பார்ட்டி ரெடி பண்ணி ஆட்களையும் வரவச்சால் நீ பார்ட்டி அட்டன் பண்ணாம எல்லார் முன்னாடியும் எங்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திக் கொடுத்துட்டால் சரி ஆகிடுமா?”

“நான் இத்தனை வருசத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வரேன். அப்படி வருவது உங்க எல்லாரையும் பார்க்க தானே தவிர உங்க பிஸ்னஸ்ஸ இல்ல. உங்க பிஸ்னசை நான் பார்த்துக்கப் போறதா நேத்து பார்ட்டியில அனவ்ன்ஸ் பண்ண இருந்தீங்கள?”

கல்யாண்ராமால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். ஆனால் அவரால் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை ஆகையால் தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார்.

“ஆமா நீ சொல்ற மாதிரி தான் செய்ய நினைச்சேன். அதுல என்ன தப்பு இருக்கு என் காலத்துக்குப் பிறகு இதையெல்லாம் நீ தான செய்யனும். ஏன் இதுக்கு முன்னாடியும் இந்தப் பொறுப்பு எல்லாத்தையும் நீ தான பார்த்துட்டு இருந்த இப்ப மட்டும் என்ன?”

“ஏன்னு உங்களுக்குத் தெரியாதா அப்பா? ஏன் என்னைக் கஷ்டபடுத்திப் பார்க்குறீங்க?”

“உன்னை நான் கஷ்டபடுத்தலை வேந்தா கஷ்டத்துலையே விழுந்து கிடக்காதனு சொல்றேன். கடந்த காலத்திலேயே வாழாம நிகழ்காலத்துக்கும் வானு சொல்லுறேன்” என்றார் ஆற்றாமையாக 

வேந்தன் பதில் ஏதும் கூறாமல் வெளியே சென்றவன் பைக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் பீச் வீட்டை நோக்கி சென்றான்.

சீசிடிவி பதிவுகளை முழுவதுமாகப் பார்த்து முடித்த ஸ்ரீயின் கவனத்தைக் கலைத்தது கைபேசி.

“ஹலோ சொல்லுங்க பத்மாம்மா”

“தம்பி பசங்க இரண்டு பேரும் சாப்பிடமாட்டேனு சொல்லி அடம் பண்றாங்க என் பேச்சு கேட்க மாட்டேங்குறாங்க”

“சரி அம்மா நான் கொஞ்ச நேரத்துல வரேன்”

“சரி தம்பி” என்றவர் அழைப்பை துண்டித்தார்.

நெற்றியை விரலால் கீரிய ஸ்ரீ பார்கிங் சென்று காரை உயிர்பித்தான்.

நேசங்குறுச்சியின் பிரதான சாலையில் மூவரும் வேகமாகத் தங்களது வாகனத்தை இயக்கி கொண்டிருந்தனர். 

ஒரு வளைவில் வேகமாகத் திரும்பிய கார் வேந்தனின் பைக்கை இடித்தது. வேந்தன் பைக்குடன் சாலையில் விழுந்தான். கை முட்டியிலும் கால் முட்டியிலும் தார் சாலையில் சிராய்த்ததால் ரத்தம் வலிந்தது.

மக்கள் சட்டென அந்தக் காரை வலைத்து நிறுத்திவிட்டனர். சிலர் காரின் கண்ணாடியில் அடித்து டிரைவரை இறங்க சொல்லி சத்தம் போட்டனர்.

காரில் இருந்து இறங்கினால் ஆரிணி. ஒருவித திமிருடன் எதிரில் இருந்தவனை அளந்தாள். அனைவரும் அவளைத் திட்டத் தொடங்கினர். 

“ஏம்மா டேர்னிங்ல இப்படியா வேகமாக வருவது அந்தப் புள்ளை கையெல்லாம் ரத்தம்” என ஒரு முதியவர் அவளைத் திட்ட ஆரம்பித்தார்.

“ரத்தம் தான வருது ஒன்னும் செத்துடலையே!” என அவள் திமிராகப் பதில் தந்தாள்.

கூடியிருந்தோர் அனைவரும் “பொண்ணா இவள் எவ்வளவு திமிரா பதில் சொல்றா பாரு எல்லாம் பணம் இருக்கேன்ற திமிரு” எனத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

வேந்தன் அவளது குரலில் நிமிர்ந்து அவள் புறம் பார்த்தான். ஆரஞ்சு வண்ண டிசைனர் புடவையில் இருந்தாள். காதுகளில் அசைந்தாடும் தோடு காற்றில் பறக்கும் அவளது கூந்தல் என அவளது முகத்தை முழுவதுமாக அளவிட்டான் வேந்தன்.

தங்களுக்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்த மக்கள் சற்று நேரத்திற்கெல்லாம் தங்களுக்குள் துணை கிடைத்த தைரியத்தில் நேரடியாக அவளைத் திட்டி தீர்த்தனர்.

அவர்களது சத்தத்தில் தன் காதை குடைந்த ஆரிணி தன் கைபையில் இருந்து சில பணக் கட்டுகளை எடுத்து வேந்தன் திசையை நோக்கி தூக்கி எறிந்தாள். அவளது செயலில் தன்மானம் அடிபட அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இத்தனைக்கும் அவள் செய்த தவறுக்கு கூடியிருந்தோர் மட்டுமே எதிர்வினை புரிந்தனர். வேந்தன் அதுவரை ஒருவார்த்தை பேசாதிருக்க அவளது செயல் அவனது ஈகோவை வெகுவாகத் தூண்டிவிட்டது.

பணத்தைக் கையில் எடுத்தான் வேந்தன். ஆரிணியின் விழிகள் ஏளனத்தைக் கக்கியது. நக்கல் புன்னகையுடன் தன் காரின் அருகே செல்ல இருந்தவளை சொடக்கிட்டு அழைத்தான் வேந்தன்.

அவள் அவன்புறம் திரும்ப “ஒரு நிமிஷம் நில்லுங்க மேடம் என்ன அவசரம் அதுக்குள்ள கிளம்புறீங்க வெயிட்!” என்றவன் அருகில் நின்ற நபரிடம் “அண்ணே இந்தப் பைக்கை கொஞ்சம் அப்படி ஓரமா நிறுத்துறீங்களா?” எனப் பனிவாகக் கேட்க அந்த நபரும் வண்டியை சாலை ஓரத்தில் இடைஞ்சல் இல்லாமல் நிறுத்திவிட்டு சாவியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.

வேந்தனோ ஆரிணியைப் புன்னகை முகம் மாறாமல் பார்த்தவன் “என்ன மேடம் இவ்வளவு ரூபாய் தான் கொடுக்குறீங்க இந்தப் பணம் நீங்க பழுது பண்ணுன என்னோட பைக்கை ரிப்பேர் பண்ணவே சரியா இருக்கும் அப்போ என்ன காயப்படுத்துனதை சரி பண்ண வேண்டாமா?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி

இவளோ முகத்தில் குழப்ப ரேகை இழையோட அவனைப் பார்த்தாள். விருவிருவென அவளது காரின் முன்புறம் ஏறி அமர்ந்தவன் “என்ன மேடம் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க! வாங்க வந்து என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அங்க எனக்கு உண்டான பணத்தைக் கட்டிட்டு போவிங்க! வாங்க”என்றான்.

“ஏய் எவ்வளவு திமிரு உனக்கு முதல என்னோட கார்ல இருந்து கீழ இறங்கு”

“முடியாது என்னடி பண்ணுவ?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

“என்னடா திமிரா?” என்றாள் ஆரிணி

சுற்றியிருந்தோர் “எம்மா ஒழுங்க அந்தப் பையன ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ இல்லன போலிஸ்ஸ கூப்பிடுவோம்” என்று கூறி பயமுறுத்தி பார்த்தனர்.

அவளுக்கு அவர்களது கூற்றில் எவ்வித பயமும் இல்லை கமிஷ்னர் போன்று பெரிய பெரிய அதிகாரிகள் அவளுக்கு நன்கு பரிச்சயம். இவர்கள் அளிக்கும் கம்ளைண்டை ஒன்றும் இல்லாமல் ஆக்க அவளுக்கு ஒரு நொடியே போதும்.

ஆனால் தற்போது இப்படி நடுரோட்டில் நின்று அவர்களுடன் வாக்குவாதம் புரிவது பிடிக்காமல் பல்லை கடித்துக் கொண்டு வண்டியில் ஏறி அதனை உயிர்பித்தாள்.

அருகில் அமர்ந்து இருந்தவன் தன் காயங்கள் வலியை ஏற்படுத்தினாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அருகில் இருப்பவளை நக்கலாகப் பார்த்து சிரித்தபடி வந்தான்.

அவர்களது கார் தன்னைத் தாண்டி செல்வதை வெறித்துப் பார்த்தபடி நின்ற ஸ்ரீ “நீ எப்பவும் திருந்தவே மாட்ட ஆரிணி!” என்று கூறியபடி தன் வண்டியை கிளப்பினான்.

தொடரும்…