காதல் குழம்பி – 1
கண்கள் முழுவதும் தேடலுடனும் எதிர்பார்புடனும் இதயம் முழுவதும் படபடப்புடனும் அமர்ந்து இருந்தான் அவன்.
அவனைச் சுற்றி நிறைய டேபில்களும் டேபிலில் அழகான வேலைபாடுகளுடன் இடம் பெற்றிருந்த கப்புகளும் அதில் இருந்த குழம்பியும் அதனைப் பருகியவாரே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ரசனையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கொண்டே அவன் இருக்கும் இடம் காதலளர்களுக்கெனப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கஃபே என்று அறிந்து கொள்ளலாம்
“டேய் டைம் இப்போ என்ன ஆச்சு தெரியுமா? எழுந்துரு கிளம்பலாம்!”
“ஏய்! பிளீஸ் பாப்பு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம் வந்துடுவாங்க”
“இன்னுமா நீ அதுங்க ரெண்டையும் நம்புற?”
“பாப்பு எத்தனை முறை சொல்றது நம்மைவிட பெரியவங்கள இந்த மாதிரி பேச கூடாது”
“அவங்கள நான் மனுசங்க லிஸ்ட்லையே சேர்க்கல இதுல பெரியவங்களா வேற மதிப்பேனா”
“பாப்பு இது தப்பு உனக்கு எத்தனை முறை நான் சொல்றது?”
“நீ சொல்றதை நான் புரிஞ்சுக்கப் போறதும் கிடையாது கேட்க போறதும் கிடையாது அதுனால இந்தப் பேச்சை இதோட விடு நான் வெளிய வெயிட் பண்றேன். உன்னோட அவங்க வந்துட்டு போன பிறகு நான் உள்ள வரேன்” என்றவள் வெளியே சென்றுவிட்டாள்.
செல்லும் அவளை வறுத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் மேல் கோபம் கூட வரவில்லை. அவள் உணரும் அதே வலியை தானே அவனும் உணர்கிறான். அந்த உணர்வை அவன் அன்பாக வெளிப்படுத்தினால் அவள் வெறுப்பாக வெளிப்படுத்துகிறாள் அதில் தவறொன்றும் இல்லை.
அவனது வெகுநேர காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது. அவன் அமர்ந்து இருந்து காபி ஷாப்பின் முன் வந்து நின்றது சார்ட்ரூஸ் நிற கபென்ட்லி முல்சேன் கார்.
அந்த விலையுர்ந்த காரின் உள் இருந்து இறங்கினாள் யுவதி. அவளது கண்களிலில் திமிரும் என்னைவிட்டு தள்ளியே நில் என்ற செய்தியும் பொதிந்து இருந்தது.
நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையுமாகக் காபி ஷாப்பின் உள் நுழைந்தாள்.
கண்களில் அணிந்து இருந்த கூலர்ஸை கலட்டியபடி பார்வையைச் சுழலவிட்டாள்.
அவளை நோக்கி கையசைத்தான் அவன். அவனது சைகையைக் கண்டு கொண்டவள் ஆராய்ச்சி பார்வையுடன் அவன் முன் சென்று அமர்ந்தாள்.
“ஹாய்” என்றான் அவன்
“ஹாய் அர்னவ்” என்றாள் அவள்.
அவனது கண்கள் வியப்பில் விரிந்தது. தனது பெயரை தெரிந்து வைத்திருக்கிறாளே என்ற சந்தோஷம் மேலோங்கியது. அடுத்த நொடியே அதைப் பறித்துக் கொள்வது போல் அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் அவள்.
“என்ன வேணும் உனக்கு? எதுக்காக என்ன பார்க்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கின! “
முகம் வாடியவன் “ஐ ஆம் சன் ஆப் ஆரிணி” என்றான்.
அவளது முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை. மேலே சொல் என்பது போல் பார்த்தாள்.
அவளது இச்செய்கை அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அழித்தது.
“நான் யாரு சொன்ன பிறகும் உங்க மனசுல எந்த உணர்வும் உண்டாகலையா?”
நக்கலாகச் சிரித்தவள் “ஒருத்தர மீட் பண்ண போகும் போதே அவங்க யாரு என்னனு தெரிஞ்சுக்காம வருகிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை” என்றாள்.
“அப்போ நான் யாரு உங்களுக்கு முன்னமே தெரியுமா!”
அவள் தலை அசைத்ததும் அவனுள் எக்கசக்க உணர்வுகள் வந்து போனது. தான் யார் எனத் தெரிந்த பின்னும் தன்னைக் காண வந்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் மனதில் தான் எதிர்பார்பவை இருக்கும் என ஆணித்தரமாக நம்பினான்.
அவன் மேற்கொண்டு பேச முயலும் போதே “பணம் எதுவும் வேணுமா? அதுக்காக வந்து இருக்கியா?” என்றாள்
தன் கண்ணீரை அவள் முன் காட்டாமல் இருக்கச் சிரமப்பட்டான் அர்னவ்.
“சும்மா சொல்லு எவ்வளவு வேணும்?”
அர்னவ் எதுவும் பேசாமல் மௌனத்தைக் கடைபிடிக்க அலட்சிய பார்வையை அவன் மீது செலுத்தியபடி எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் சென்ற சிறிது நொடியில் உள்ள வந்த மற்றவள் அவனது தோளை தொட்டாள்.
“அர்னவ் வா போலாம்”
“என்னாச்சுனு கேட்கமாட்டியா பாப்பு?”
“உன்னோட மூஞ்ச பார்த்தாலே தெரியுது என்ன நடந்து இருக்கும்னு சரி எழுந்து வா! டிரைவர் அன்கிள் ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு”
“ஆனால் பாப்பு இன்னும் ஒருத்தர் வர வேண்டியது இருக்கே!”
“உனக்குச் சொரணையே இல்லையா? எழுந்துரு!”
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்”
“அர்னவ் இப்போ நீ வரலனா நான் எப்பவும் உன்னோட பேசமாட்டேன்”
“பாப்பு என்ன நீ இப்படிப் பேசுற?”
“உனக்குப் பத்து நிமிஷம் தான் டைம் கார்ல வெயிட் பண்ணுறேன்” என்றவள் விறுவிறுவெனச் சென்றுவிட்டாள்.
சில நிமிடங்கள் வாசலையே பார்த்திருந்த அர்னவ் மனமில்லாமல் வெளியே சென்று காரில் ஏறினான்.
அடுத்த நிமிடம் கார் அங்கிருந்து புறப்பட்டது.
மெல்ல இருள் சூழ ஆரம்பிக்கும் மாலை பொழுதை தன் வீட்டின் தோட்டத்தில் களித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
பார்வை செடிகளின் மீதும் சிந்தனை வேறொரு விஷயத்திலும் திளைத்திருக்கக் கைகளில் இருந்த காபி மட்டும் சம இடைவெளியில் தொண்டையில் இறங்கி கொண்டிருந்தது.
காரின் ஹாரன் சத்தம் கேட்டும் வாயிற்புறம் திரும்பாமல் வீம்பாக அமர்ந்து இருந்தான்.
காரில் இருந்து இறங்கிய அர்னவ் சோகமே உருவாகச் சென்று அவன் அருகில் அமர்ந்தான். அர்னவின் பின்னோடு இறங்கியவள் காபி பருகியபடி அமர்ந்திருந்தவனின் கழுத்தை பின்னோடு கட்டிக் கொண்டாள்.
“ஸ்ரீ எனக்குக் காபி?” எனச் சிணுங்களோடு அவன் ருசித்துக் கொண்டிருந்த கோப்பையைப் பிடுங்கி பருகினாள்.
அவனைச் சீண்டுவதற்காக அவ்வாறு செய்தாள் ஆனால் அவன் எதிர்வினை எதுவும் ஆற்றாமல் இருக்க முகம் கூம்பி போனது.
“ஸ்ரீ ஏன் இப்படி இருக்க?” என்று கூறியவளின் குரல் கரகரத்தது.
“உன் டிராமவ நிறுத்து அனித்ரா!”
சட்டென மறுபுறம் திரும்பி நாக்கை கடித்துக் கொண்டாள்.
‘சே! கண்டுபிடிச்சுட்டானே!’ என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.
செல்லும் பொழுது அர்னவை தன்னால் முடியும்மட்டும் முறைத்துப் பார்த்துச் சென்றான்.
அதில் அர்னவ் முகம் மேலும் வாடிவிட அவனது அருகில் அமர்ந்த அனித்ரா “நீ செய்ற விஷயம் ஸ்ரீய எந்த அளவு காயப்படுத்தும்னு யோசி” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
இரவு நேரத்திலும் ஜொலிஜொலித்தது அந்த அரண்மணை. அந்த வீட்டின் வாரிசு முழுதாக ஒன்பது ஆண்டுகள் கழித்து வீடு திரும்ப இருந்தான்.
அவனுக்கான பிரத்யேக வரவேற்பு தான் அரண்மனையின் ஜொலிப்புக்குக் காரணம்.
அரண்மனை மொத்தமும் மெல்லிய இசையினாலும் பலதரப்பட்ட வாசனை திரவியத்தின் நறுமணத்தினாலும் நிரப்பப்பட்டிருந்தது
அனைவரும் அவன் ஒருவனுக்காகக் காத்திருக்க விழா நாயகனோ தனியாகக் கடற்கரை பங்களாவில் கடலை வெறித்தபடடி அமர்ந்திருந்தான்.
அலைகளின் ஓசையின் இடையே அலைபேசியின் ஒலி எழுந்தது. அருகில் இருந்த போன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“ஹலோ வேந்தன் ஸ்பீக்கிங்”
“சார் நான் பிரக்யா“
காதில் இருந்து அலைபேசியை எடுத்தவன் அதில் இருந்த எண்ணை பார்த்தான்.
அன்னவுன் (Unknown) எனக் குறிப்பிட்டு இருக்கவும் குழப்பத்துடன் மீண்டும் காதில் வைத்தான்.
“பிரக்யா உன் போன்க்கு என்ன ஆச்சு?”
“ஆக்சுவலி சார் என் போன் பேட்ரி டெட் சோ” என இழுத்தாள்.
“என்ன விஷயம் இந்த நேரம் கூப்பிட்டு இருக்க?”
“சார் சரத் சார் கால் பண்ணி இருந்தாரு. நாம புதுசா ஒரு கிளைண்ட் கூடக் கமிட்மெண்ட் பண்ணி இருக்குற விஷயம் தெரிஞ்சுருக்கு போல இப்போ அதனால” என அவள் இழுக்க
“அதனால! அதனால என்ன பிரக்யா? சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிங்க”
“அது வந்து சார் அவருக்குண்டான லோடு சரியா வந்து சேந்துருமானு கொஸ்டின் பண்றாரு” என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தவள் கைபேசியைக் காதில் இருந்து இரண்டடி தள்ளி பிடித்துக் கொண்டாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே எதிர்புறம் அவனது கத்தல் சத்தம் தூரத்தில் இருந்தும் செவி வரை தீண்டியது
எதிர்புறம் அவனது குரல் அடங்கியதும் மீண்டும் தன் காதில் கைபேசியை வைத்தாள்.
“சரத் கூட இருக்குற டீல்ல உடனே கேன்சல் பண்ணுங்க”
தான் கூற போவதற்கு அவன் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருந்த போதிலும் “சார் கோடி கணக்குல லாஸ் ஆகும் சார்” என்றாள்
“அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்ல நம்பிக்கை இல்லாத இடத்துல பிஸ்னஸ் வச்சுக்குறதுல எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதனால சொன்னதைச் செய்” என்றான்
“ஒகே சார்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு நெஞ்சில் கைவைத்து பெரிய பெரிய மூச்சுகளை வாங்கினாள்.
பின் அருகில் இருந்த நபரிடம் மொபைலை கொடுத்துவிட்டு காபி தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள்.
இருள் சூழ்ந்திருந்த தோட்டத்தைப் பார்க்கும் பொழுது அச்சம் எழும்பினாலும் தன்னைத் தானே தைரியபடுத்திக் கொண்டு முன்னோக்கி நடந்தாள்.
கரும் இருளின் அரபிய காபி செடியின் பழங்கள் லேசாக மினுமினுத்தது. பகலில் பார்க்கும் போது அழகாகத் தெரியும் சிவப்பு வண்ண அரபிய காபி பழங்கள் இருளில் திகிலை பரப்புகிறதே என்று எண்ணியபடி நடக்க “அம்மாடி தங்கச்சி!” என்ற சத்தம் கேட்டது.
நடையை நிறுத்தியவள் பின்புறம் திரும்பி பார்க்க சற்று முன்பு கைபேசியைக் கொடுத்து உதவிய நபர் வருவதைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
“இந்தம்மா உனக்குப் போன்”
வாங்கிக் காதில் வைத்தவுடன் வேந்தனின் வசை மொழிகள் காது சவ்வை கிழிக்க முனைந்தது.
“முட்டாள் ராத்திரி நேரத்துல காபி தோட்டத்துல என்ன வேலை உனக்கு?”
“சார் நீங்க எப்பவும் ரவுண்ட்ஸ் போறது வழக்கம். இன்னைக்கு நீங்க இல்லையே அதான் நான் வந்தேன்”
“நீ ஒன்னும் செஞ்சு கிழிக்க வேண்டாம் வீட்டுக்கு போ! ராத்திரி நேரம் வெளிய தோட்டத்துல இருக்குறது சேஃப் இல்லை” என்று கடிந்து கொண்டான்
“ஒகே சார்” என்றவள் உதவிய நபரிடம் போனை ஒப்படைத்தாள்.
அவரோ அந்த தம்பிக்கு உம்மேல ரொம்ப அக்கறை அம்மாடி என சிரிப்புடன் கூறினார்.
ஆமா அண்ணா எங்க சார் எப்பவும் இப்படிதான் என்றவள் தான் தங்கி இருக்கும் வீடு நோக்கி சென்றாள்.
மறுநாள் காலை
ஸ்ரீ தன் அறையில் இருந்து வெளியே வந்தான். அர்னவ்வும் அனித்ராவும் டிவி முன் அமர்ந்து இருக்கப் பார்வையைச் சுவர் கடிகாரத்தில் பதித்தான்.
கடிகாரத்தின் உள் பெரிய முள் பன்னிரெண்டிலும் சின்ன முள் ஒன்பதிலும் நின்று கொண்டு ஒன்பது மணி என்பதாகக் காட்டியது.
கோபம் தலைக்கேற “பத்மா அம்மா” எனக் கத்தினான்.
சமையல் அறையில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பத்மா ஸ்ரீயின் குரலில் வேகவேகமாகக் கூடத்திற்கு ஓடி வந்தார்.
“மணி ஒன்பது ஆச்சு இன்னும் ஸ்கூல்கு கிளம்பாம இருக்காங்க! என்ன பண்ணிட்டு இருக்கிங்க நீங்க?”
“தம்பி அது பசங்க தான் இன்னைக்குப் பள்ளிகூடம் போகலனு சொன்னாங்க”
அர்னவ்வும் அனித்ராவும் ஸ்ரீயின் முகத்தை ஆவலோடு பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்பினை பொய்யாக்கும் விதமாக அவர்களைக் கடந்து வெளியே சென்றுவிட்டான் ஸ்ரீ.
அர்னவ் சோகத்துடன் அனித்ராவை பார்த்தான். அவள் தன் பின்னலை திருகியபடி வாசலையே பார்த்து நின்றாள்.
தொடரும்…