காதல் கஃபே – 7

7

பால் உற்பத்தியாளர்களுடன் நடந்த ஒரு கலந்தாய்வில் பங்குபெற்று வெளியே வந்த சித்தார்த் இன்று வெகு களைப்பாக உணர்ந்தான். காலை பத்துக்குத் துவங்கிய மீட்டிங், பன்னிரெண்டுக்கு முடிய வேண்டியது, இப்போது மணி இரண்டாகி விட்டது.

பால் கொள்முதல் விலையை உயர்த்த சொல்லி அவர்களும், முடியாது என சொசைட்டி நிர்வாகத்தின் ஒரு சாராரும் தங்கள் வாதங்களில் பிடிவாதமாய் இருக்க, இவனும், இன்னும் இரு எக்ஸிகியூட்டிவ் உறுப்பினர்களும் நடுவில் புகுந்து சமரசம் செய்து ஒரு தீர்வை எட்டுவதற்குள் தாவு தீர்ந்து போயிருந்தது.

காலையில் சாப்பிட்டிருந்த இரண்டு தோசைகள் போன இடம் தெரியாமல் போயிருக்க, பசி காதை அடைத்தது. நடுவில் இரண்டு கோப்பை தேநீர் மட்டும்.

‘இங்கேயே உணவு ஏற்பாடு செய்திருக்கிறது, சாப்பிடுங்கள்’ என்று சொன்னதை நாசுக்காய் மறுத்துவிட்டு கிளம்பி இருந்தான்.

‘அன்னிக்கு ஓவரா சீன் போட்டா இல்ல, நிஜமா, விளையாட்டான்னே தெரியலையே…’ மண்டை முழுக்க இந்தச் சிந்தனையே மையம் கொண்டிருப்பதில் அங்கேயே சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி தன் லெக்சஸை ‘சே டேடென்ட்ரே’ இருந்த பாதையில் திருப்பினான்.

அன்று ஜெனியுடன் வெளியே சென்று வந்தது அறிந்து கோபமாய்ப் பேசிய அம்மாவின் முகம் அடுத்த நாள் காலை இயல்பாக இருந்தது.

நீர் சொட்டிய கூந்தலை நுனி முடிச்சிட்டு சமையல் அறையில் நின்று இருந்தவரின் வதனம் முந்தைய இரவின் கோபங்கள், ஆதங்கம் துடைத்து தெளிவாக இருக்க, “ம்மா… ஆர் யூ ஓகே?” சித்தார்த் மெதுவாகக் கேட்டான்.

தந்தைக்குக் கஞ்சி கலக்கிக் கொண்டிருந்தவர் திரும்பி இவனைப் பார்த்து மலர்வாகச் சிரித்தார்.

“நேத்து ராத்திரி கொஞ்சம் மனசு சரியில்லைடா. நாம என்னதான் நெருங்கிப் போனாலும் விலகிப் போற உறவுகளை வச்சுக்கிட்டு என்ன பண்றது, சொல்லு?”

“ம்மா.. ஜஸ்ட் இக்னோர் தெம்” என்றான் அம்மாவின் தோளில் ஆதரவாகத் தட்டி.

‘அப்ப நீங்க பேசுனது வெறும் அந்த நிமிஷத்து கோபத்துல தானே? ஜெனியை பிடிக்காம இல்லையே?’ இந்தக் கேள்வியை இப்போது கேட்பதா இல்லை இரவு நிதானமாக வந்து பேசலாமா?

இவன் எண்ணும்போதே கௌரி தனக்குரிய காபியுடன் அவனருகே வந்து அமர்ந்தார்.

“சித்து… மத்தபடி நான் பேசுனது எல்லாம் யோசிச்சு தான் பேசுனேன்..” அவன் சிந்தனை புரிந்தமாதிரி அவரே பேச்சைத் துவங்க, சித்தார்த்தின் முகம் இறுகியது.

“ம்மா…. ஐ லைக் ஹெர்.” மெல்லிய குரலில் முணுமுணுத்தாலும் அவன் தயங்காமல் தெளிவாகத் தன் மனதை சொல்லிவிட, கௌரி இரு நிமிடங்கள் அமைதியாகக் காபிக் கோப்பையின் விளிம்பை தடவியபடி இருந்தார்.

“நான் ஒண்ணு சொல்லட்டுமா?”

‘ஏற்கனவே அவ நிறையச் சொல்லிட்டா… அதுக்கே என்ன வழின்னு தெரியாம மண்டையைப் பிச்சுக்கிறேன். அதுக்குமேல நீங்க வேற கொட்டி தீர்த்துட்டீங்க… இன்னும் என்ன தான் இருக்கு?’ உள்ளுக்குள் புலம்பியவன், காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்தான்.

“நீ ரொம்பத் தீவிரமா இருந்தீனா ஒன்னு பண்ணு, கல்யாணம் பண்ணிட்டு அவ ஊருக்கே போயிடு. இங்கயே இருந்தா தானே எல்லார் முகத்தையும் பார்த்துட்டு ஏதாச்சும் பிரச்சனை வந்துட்டே இருக்கும்.” கௌரி தீவிரமாகச் சொல்ல,

“ஹ ஹா… மம்மிஜான்… போதும் உங்க காமெடி” அவன் பலமாகச்  சிரித்தான்.

‘அவ இன்னும் ஓகேவே சொல்லலையாம். அதை உங்ககிட்ட சொல்ல முடியாம நான் இருக்க, நீங்க எங்கயோ போயிட்டீங்கம்மா….’ தனக்குள் அவன் நொந்து போனது வேறு கதை.

“அப்ப நீங்க ஏன் கல்யாணம் பண்ணிட்டு இங்கயே இருந்தீங்க? என்னதான் உங்க சிட்டிசன்ஷிப்பை சரண்டர் பண்ணியிருந்தாலும் பிரான்ஸ் போகணும்னு நினைச்சிருந்தா நீங்க போயிருக்க முடியாதா? அப்பா தான் நீங்க ‘உம்’னு சொல்றதுக்கு முன்னாடி, இந்தா எண்ணிக்கோன்னு தோப்புக் கரணம் போடுறாரே… அப்புறம் என்ன?”

“டேய்….” மகனின் சீண்டலில் முறைத்த கௌரி அவன் முதுகில் அடித்துச் சிரித்தார்.

“இது நான் பொறந்து வளர்ந்த இடம் சித்து. வருஷத்துக்கு ஒரு தடவை டூர் மாதிரி போய்ட்டு வர்றது ஓகே. எனக்கென்னமோ இந்த அமைதியான ஊரை விட்டுட்டு வேற எங்கயும் போக மனசு வரல. அந்த மாதிரி நாங்க யோசிச்சது கூட இல்ல”

“உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? நான் பொறந்து வளர்ந்தது கூட இங்க தான்… தலை நரைச்சவங்களுக்கு மட்டும் தான் சென்டிமென்ட்ஸ் இருக்கணுமா? நல்ல கதையா இருக்கே…” விளையாட்டாகக் கேட்டுவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

அம்மாவை சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை மீண்டு இருந்ததில் நிம்மதியாக உணர்ந்தானே தவிர ஜெனியைப் பற்றி, அவள் பேசியது குறித்த குழப்பம் இல்லாமல் இல்லை.

இந்த ஒரு வாரமாக வேலைகள் அவனை வளைத்துக் கொள்ள, சொன்னமாதிரி அவளைப் போய்ப் பார்க்கவும் இல்லை. போனில் பேசவும் இல்லை. இப்போது கூட நேரில் பார்த்துப் பேசும்போது தன்னையும் மீறி ஏதேனும் வார்த்தைகள் தடித்து விடுமோ என்று தயக்கமாய்த் தான் உள்ளது.

அன்று அவள் பேசியது அட்சரசுத்தமாய் நினைவில் ஸ்க்ரால் ஆக , அவன் விரல்கள் ஸ்டீரிங்கில் இறுகின.

“சித்தார்த்… நான் இங்கேயே ஐ மீன் இந்தியாவுலேயே இருப்பேன்னு சொல்ல முடியாது. ஐ வான்ட் டூ கோ பேக். உனக்குத் தெரியும்ல… என் மொத்த குடும்பமும் அங்க தான் இருக்காங்கன்னு”

“அப்ப உன் கஃபே?” அவளைப் பற்றிச் சேகரித்த தகவல்களில் அவள் தன் தொழிலை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதுவும் அடக்கம்.

“விளையாட்டா ஆரம்பிச்ச பிசினஸ். இதை உலகத்துல எங்க வேணா நடத்தலாம் சித்தார்த்…” இலகுவாகச் சொன்னவள்,

”என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் இங்க இருக்கிறதையெல்லாம் அப்படி அப்படியே விட்டுட்டு என் கூடக் கிளம்பி வர்றவனா இருக்கணும். உன்னால அப்படி வர முடியுமா?” அவள் கேள்வியில் நேரடி சவால் தெரிந்தது.

எப்படி முடியும்? அம்மாவின் அப்பா குடிசைத் தொழில் போலச் சிறிய அளவில் ஆரம்பித்தது. ஆரம்ப நாட்களில் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் உழைத்து உருவாக்கிய தொழில்.

அந்தக் காலப் பாரம்பரிய வழக்கப்படி கைகளில் பாலாடை ஜலித்து வடித்து உருளைகளாக உருட்டி என்று நிறைய உழைப்புத் தேவைப்படும் தொழிலை காலத்திற்கு ஏற்ப நவீனமாக்கி இத்தனை பெரிய பாக்டரியாக உருவுக்குக் கொண்டு வந்து….

அப்பாவுக்கு மாமனாரின் தொழிலில் கொஞ்சமும் நாட்டமில்லை. இவன் தான் பள்ளி நாட்களில் இருந்தே தாத்தாவுடன் சேர்ந்து கம்பெனியிலேயே பழி கிடப்பான். தங்கள் தொழில் தொடர்பாகவே படித்து, உழைப்பைக் கொட்டி, இன்று பேர் வாங்கிய நிறுவனமாக வளர்த்து நிற்கும்போது…

“ம்ஹும்.. சான்சே இல்ல…” விநாடி கூட யோசிக்காமல் சித்தார்த் பதில் சொன்னான்.

“அப்ப ஆளை விடு… வா கிளம்பலாம்”

அவள் ‘முடிந்தது வேலை’ என்பது போலச் சாய்ந்து அமர, “என்ன நீ இவ்ளோ ஈஸியா பேசுற?”

இவளுக்கு என்னைக் குறித்துச் சின்ன அளவு பிடித்தம் கூடத் தோன்றவில்லையா?

பரஸ்பரம் உருவாகாத உணர்வின் மேல் வேறு எதை விவாதித்து என்ன பயன் ? உள்ளுக்குள் ஏமாற்றம் தோன்றினாலும், “இதெல்லாம் ஒரு விஷயமா ஜெனி?” என்றான் சித்தார்த்.

“அடுத்த நிமிஷம் எப்படி இருப்போம்னே நமக்குத் தெரியாது. இதுல அஞ்சு வருஷம் கழிச்சு, பத்து வருஷம் கழிச்சுன்னு ரொம்பத் திட்டமெல்லாம் போட்டு வாழ முடியமா? நாம வாழற வாழ்க்கை தான் முக்கியமே தவிர, நாம எங்க இருக்கோம்கிறது எல்லாம் இரண்டாம் பட்சம்…”

“எனக்குத் தேவை இப்ப ஒரேயொரு பதில். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையா?

“சித்தார்த், அது வந்து…”

“ம்ஹும். ஒரு வார்த்தை… யெஸ் ஆர் நோ?”

‘நோ ன்னு சொல்லு…’ தூண்டிய புத்தியை நெகிழ்ந்திருந்த அவள் மனம் தடுத்ததோ, என்னவோ…. “உன்னைப் பிடிக்காம இல்ல, பிடிச்சிருக்கு…” மெலிதாக முனகியவளின் கண்கள் புரியாத உணர்வில் தடுமாறுவதை இவன் விசித்திரமாகப் பார்த்தான்.

“நானும் கொஞ்சம் நல்லவன் தான். இவ்ளோலாம் நீ ஒன்னும் பயப்பட வேணாம்” அவன் உதட்டை கன்னத்தில் துருத்தியபடி சீண்ட, ஜெனி லேசாகச் சிரித்தாள்.

”இப்போதைக்கு இது போதும். மத்ததை நாம பொறுமையா பேசிக்கலாம்” மந்தகாசமாகப் புன்னகைத்தவன், அவள் கையைப் பற்றிப் புறங்கையில் முத்தமிட குனிய…

தீச்சுட்டு விட்டாற்போல ஜெனி தன் கரத்தை வெடுக்கென்று உருவிக் கொண்டாள்.

“நான் இன்னும் பேசி முடிக்கல, சித்தார்த்…”

“என்னது இன்னும் இருக்கா? முடியலடா சாமி…” அலுத்தவன், அவள் அடுத்து சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் அவள் முகத்தைத் கூர்ந்து பார்த்தான்.

“விளையாடாதே ஜெனி” அதிர்ச்சியில் அவன் குரல் கீழிறங்குவதைக் கவனித்தவள், “நான் எதுக்கு விளையாடணும்? ஐ’யம் சீரியஸ்” என்றாள் இன்னும் அழுத்தமாக.

அதற்குமேல் எதுவும் விவாதிக்க சக்தி இல்லாததால் “சரி, வா.. கிளம்பலாம்” இவன் சொல்ல, அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அன்றைய ஆரம்பக்கட்ட அதிர்ச்சி விலகி இருந்தாலும் இப்போது கூட அவனால் நம்பத்தான் முடியவில்லை.

கர்ப்பகிருகத்தின் முன்னால் கண்மூடி நெகிழ்ந்து நின்றவள், சப்தகன்னிகளைப் பாந்தமாய் வலம் வந்து குங்குமத்தை பயபக்தியுடன் நெற்றியில் இட்டுக் கொண்டவள், அன்னைக்கு இருவேளை மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திப்பவள், ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்பவள்…

இவ்வளவு பாரம்பரியம் பேணுபவளா அப்படிப் பேசினாள்?

ஒருவகையில் தன் அம்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பவளைக் கண்டு தான் பார்த்த முதல் பார்வையிலேயே அவன் இதயம் தடுக்கி விழுந்திருந்தது. வெளி உருவம் வேறு, உள்ளே பக்கா மாடர்ன் இன்றைய யுக பெண்ணா இவள்?

குழப்பமாய் இருந்தது.

‘ஏன், அப்படி இருந்தா தான் என்ன? அது அவ விருப்பம். அதைக் குறை சொல்ல நீ யாரு? இந்த மாதிரி யோசிப்பேன்னு தெரிஞ்சு தான் *இந்தியன் மேல் மென்டாலிட்டி”னு திட்டினாளோ?’ அவனுள்ளமே அவனை அதட்ட…

‘எது எப்படி இருந்தாலும் சரி, இன்னிக்கு இரண்டுல ஒன்னு பேசிடணும்’ கஃபே முன்னால் வாகனத்தை ஒடித்து நிறுத்தினான் சித்தார்த்.

**************

அடித்து ஓய்ந்த அழைப்பு மணியின் ஓசை மீண்டும் விலுக்கென்று விழித்துக் காதைக் கீற, “வரேன், வரேன்…” வேகமாக வந்த ஜெனி ஜன்னலில் எட்டிப் பார்த்துவிட்டு “என்ன சித்தார்த், இந்த நேரத்துல? வா… வா….” என்றவாறு கதவைத் திறந்தாள்.

“சும்மா தான்… இப்ப தான் வீட்டுக்கு கிளம்பினேன், சரி, போற வழில பார்த்துட்டுப் போலாம், உன்னைப் பார்த்து வேற நாளாச்சேனு வந்தேன்” அவளை ஏற இறங்கப் பார்த்தவன், சுவாதீனமாக உள்ளே வந்து அமர்ந்தான்.

“முந்தாநாள் காலைல தானே பிரேக்பாஸ்ட் சாப்பிட கஃபே வந்த… அதுக்குள்ள நாளாச்சாம், புளுகு மூட்டை” சத்தமாக அவள் முணுமுணுக்க, “ப்ச்…” அசட்டையாகத் தோளை ஏற்றி இறக்கினான் சித்தார்த்.

“எங்கயாவது வெளில போறியா என்ன?”

“ம்ஹும்…. போய்ட்டு வரேன். என் ப்ரண்டோட தங்கச்சி கல்யாணம். இங்க தான் என் டி மஹால்ல…” கையில் இருந்த வளையல்களைக் கழற்றியபடி அவனெதிரில் வந்து அமர்ந்தாள்.

வெளிர் நீல டிஷ்யூ புடவையும், அதற்கு கான்ட்ராஸ்டாகத் தங்க நிற ரவிக்கையும் அணிந்திருந்தாள். கூந்தலை விரித்து விட்டு, காதில் மெல்லிய ஸ்ட்ரிங் தொங்கட்டான்கள், கழுத்து வெறுமையாய்…

முதன்முறையாகச் சேலையில் பார்ப்பதால் தன் கண்களைக் கட்டுப்படுத்த இயலாமல் இவன் திணற, அதை அவளும் உணர்ந்தமாதிரி “ம்க்கும்…” தொண்டையை ஒருமுறை செருமினாள்.

“ஏதாச்சும் சாப்பிடறியா?”

“ம்ம்.. கொடேன்… பசிக்குது”

‘பே…. சும்மா பார்மாலிட்டிக்கு கேட்டா சாப்பாடு போடுன்றானே….. நானே சட்டி பானையைக் கழுவி துடைச்சு வச்சிட்டுப் போயிருக்கேன்’

“எதுவும் இல்லல்ல… அப்புறம் எதுக்கு உனக்கு வெட்டி சீனு?” அவன் புருவம் உயர்த்திக் கலாய்த்ததில், “ஹி ஹி… பால் இருக்கு, பூஸ்ட் கலக்கவா?” ஜெனி அசடு வழிந்தாள்.

“சரி, அதையாச்சும் கொடு…”

‘இந்த நேரத்தில எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கான்?’ அவள் அடுப்பின் முன்னால் யோசனையாக நிற்க, “ஜெனி” தானும் எழுந்து வந்த சித்தார்த் சமையலறையின் சுவர் மேல் சாய்ந்து நின்றான்.

“நாம பேசினதை பத்தி ஏதாச்சும் யோசிச்சியா?”

அவன் கேட்டதும் தான் தாமதம், கொலைவெறியுடன் திரும்பினாள் அவள்.

”அதானே பார்த்தேன். யோவ்… அப்படியே இந்தக் கத்தியை எடுத்து ஒரே குத்தா குத்திடுவேன். விடிஞ்சா எந்திருச்சா உனக்கு இதே நினைப்பு தானா? நான் தான் சொல்லிட்டேன்ல என் எதிர்பார்ப்பு என்னன்னு… நீ பிரைன் வாஷ் பண்ணினா மட்டும் மாறிடுவேன்னு நினைச்சியா? அட்வைஸ் பண்றேன்னு இப்ப ஏதாச்சும் ஆரம்பிச்ச…”

“வேணாம்… உன் மூஞ்சியைப் பார்த்தாவே தெரியுது, நீ அதுக்குத்தான் வந்திருக்கன்னு… யப்பா சித்தார்த்த ஞான குரு… இந்தப் பத்து நாளா நீ பேசி, நான் கேட்டு, இங்க பாரு என் காதுல ரத்தம் வந்து தேங்கி நிக்குது… ஓடிடு… அப்படியே ஓடிப் போயிடு” அவள் ஒற்றை விரலை சுழற்றிக் காட்டியபடி மிரட்ட,

“ஹப்பா…. நிறுத்து… உனக்கிருக்கிற வாய்க்கு…” அவள் பின்னந்தலையைத் தட்டி சிரித்தவன் அவளருகே வந்து நின்றான்.

“நான் ஒன்னும் பிளேடு போட வரல. இந்த இரண்டு வாரமா நானும் நல்லா யோசிச்சேன். முடிஞ்ச வரை உன்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணியாச்சு… நீ தான் விடாக் கொண்டியா இருக்கியே?”

‘அதை ஏன்டா இவ்ளோ பக்கத்துல வந்து சொல்ற?’

“நீ என் வழிக்கு வர மாதிரி தெரியல.. அதுதான் நான் உன் வழிக்கு வந்துடலாம்னு” இந்தப் பதிலை எதிர்பார்க்காதது போல மிரண்டு விழித்தவள், அடுத்த நொடி சத்தமாக அலறினாள்.

“ஏய்…”

நீண்ட அவன் கையை வேகத்துடன் தட்டி விட்டாள். முடியவில்லை.

வெட்டிப் போட்ட நகத்துண்டாய் சேலையின் மறைவில் லேசாய் முகம் காட்டி மினுங்கும் இடுப்புப் பிரதேசம் அவன் தொடுகையில் வெண்ணையாக வழுக்கிச் செல்ல….

“சித்தார்த்…. என்ன பண்றடா ? என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கு…?” அதிர்ந்து போய்த் தன்னைப் பார்ப்பவளை லட்சியம் செய்யாமல் ஆவேசமாய் அவளை இழுத்து தன்னுடன் இறுக அணைத்தான்.

 “டேய்.. வேணாம்… பல்லை உடைச்சு கைல குடுத்துடுவேன்….”

முரண்டும் அவள் கைகளை ஒருகரத்தில் அடக்கியவன், “வேணாம் சித்தார்த்… மரியாதையா இடத்தைக் காலி பண்ணு…” அவள் கத்தலை காதில் வாங்காமல் திமிறத் திமிற அணைத்துக் கொள்ள, ஜெனி மிரண்டு போனாள்.

தான் நல்லவன் என்று நம்பியவன் இவன் தானா? கண்ணோரம் நீர்த்துளிகள் ஜனிக்க, வெறுப்புடன் அவன் புஜத்தில் அவன் கைகள் கொண்டே ஆத்திரம் தீர குத்தினாள்.

சிரித்தபடி வாங்கிக் கொண்டவன், “நீ தானேடி, இந்த ஊரு கல்யாணம், காது குத்து இதுல எல்லாம் எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்ல, லிவிங்-டூ-கெதர் தான் என் சாய்ஸ்…”

“இந்த கமிட்மென்ட், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு ப்ளா ப்ளாலாம் இல்லாம இருக்கலாம்னா சொல்லுன்னு அன்னிக்கு பெருசா டயலாக் அடிச்ச…. அப்ப இதெல்லாம் உன் லிவிங்-டூ-கெதர்ல வராதா?”

விஷமமாய்க் கேட்டுக்கொண்டே ஒற்றைக் கரத்தால் அவள் முகவடிவை அளந்த சித்தார்த் நிதானமாக அவள் இதழ்களை நெருங்கினான்.