காதல் கஃபே – 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
6
சித்தார்த் சென்று காரை நிறுத்திய இடம் ஆள் அரவமே இல்லாமல் அமைதியாக இருக்க, ஜெனி அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
“இதென்ன அத்துவான காடா இருக்கு… நீ கொடுத்த பில்ட்-அப்புக்கு அட்லீஸ்ட் கேன்டில் லைட் டின்னராவது இருக்கும்னு கவா கவான்னு வந்தா, நீ என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க….?”
காரில் இருந்து இறங்கியவள் முகத்தை அஷ்டகோணலாக்கி அவனைப் பார்க்க, “அடி…” காற்றில் கையை வீசினான் சித்தார்த்.
“கொஞ்சமாச்சும் உனக்குப் பயம் இருக்கா? வரும்போதே கடத்திட்டு போறேன்னு சொன்னானே, இப்படி ஜிலோனு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கானேன்னு சின்னதா கூட டென்ஷன் ஆகாம கேண்டில் லைட் டின்னர் கேக்குது உனக்கு…?”
“போ சித்தார்த், சும்மா காமெடி பண்ணிக்கிட்டு…”
அவள் அசட்டையாகச் சொல்லிவிட்டு மணலில் கால் பதித்து நடக்க, இவன் தான் வாய் பிளந்து நின்றான்.
”நீ குட் பாய்னு தெரியாம உன் கூட வருவேனா? அவ்வளவு லூஸுன்னு நினைச்சியா என்னை?”
“நீ ரொம்…பப நல்ல…வ….ன் சித்தார்த்….”
அவள் வேண்டுமென்றே ராகம் இழுத்ததில் சித்தார்த் வாய் விட்டுச் சிரித்தான். அரைகுறை இருட்டில் துளாவியபடி நடந்தவளை நாலே எட்டில் நெருங்கியவன் உன்மத்தமான உணர்வுடன் அவள் கையை எட்டிப் பிடித்தான்.
கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!
சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!.
முண்டாசுக் கவிஞனின் வார்த்தைகள் யுகங்கள் கடந்தும் காதலை உரக்க உரைக்க….
‘என்ன இது?’ பற்றிய அவன் விரல்களில் பதிந்து உயர்ந்தது அவள் பார்வை.
அந்தக் கோபச் சிவப்பை லட்சியம் செய்யாமல், “அந்தப் பக்கம்…” அவன் எதிர்ப்புறமாகக் காட்ட, அவன் பிடியில் இருந்த தன் விரல்களை நாசுக்காக விலக்கிக் கொண்டவள் அவன் சொன்ன திசையில் நடந்தாள்.
சித்தார்த்துக்கும் தான் அவசரப்படுகிறோம் என்று புரிந்ததால் அதற்கு மேல் வம்பு செய்யாமல் உடன் நடந்தான். முப்பது அடியில் ஒரு வளைவில் திரும்ப, சிறு சிறு குடில்கள் தெரிந்தன.
இவர்களைக் கண்டதும் விரைந்து வந்த ஒரு பணியாளர், இடதுபுறம் நான்காவதாய் இருந்த குடிலைக் காட்டி அமர வைக்க, இருவரும் அமர்ந்தார்கள்.
வட்டமாய் மர இருக்கை, ஒற்றைக் குடையாய் அதைச் சுற்றிய ஓலைப்பின்னணி, நடுவில் மரக்கம்பம், அதன் உச்சியில் லாந்தர் விளக்கு, மிக மெலிதான வெளிச்சம், உப்புக் காற்று தாலாட்ட, வெகு அருகில் ஒலிக்கும் கடல் அலைகளின் அமானுஷ்ய ஒலி பின்னணியாக….
“எப்படி என் சாய்ஸ்…?”
“ம்ம்.. நாட் பேட்…” மெச்சுதலாய் உதடு பிதுக்கினாள் ஜெனி.
“வெறும் நாட் பேட் தானா ??”
சிரித்தவள், “இட்ஸ் சிம்ப்ளி டிவைன்…ரொம்ப அழகா இருக்கு, கேன்டில் லைட் டின்னரை விட…” அந்தச் சூழல் அவளை மயக்கியது. காற்றில் கூந்தல் இழைகள் பறக்க, பரவசமாய்த் தூரத்துக் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மெனு கார்ட் பார்த்து இருவரும் தேவையான உணவைச் சொல்ல, சிறிது நேரத்தில் உணவு வகைகள் வந்தன.
“என்ன ஆர்டர் பண்ற நீ? பேச்சுதான் பெத்த பேச்சு…” அவள் தனக்கென்று ஒன்றும் சொல்லாமல் வெள்ளை சாதமும், காய்கறி ஸ்டூவும் மட்டும் சொல்லியிருந்தாள..
“இல்ல சித்தார்த். பசியே இல்ல…” கண்ணாடி டம்ளரில் இருந்த நீரை மிடறு மிடறாக விழுங்கினாள் ஜெனி. உண்மையிலேயே அவளுக்குப் பசியில்லை.
நேற்று தேவையில்லாமல் சித்தார்த்திடம் பொய் சொன்ன குற்ற உணர்வில், வெளிப்படையாக இவனைத் தவிர்த்துக் காயம் செய்த பிழையுணர்ச்சியில், முக்கியமாக அவன் முகமாற்றம் தாங்காமல், ‘வா, போகலாம்’ என்று கிளம்பி வந்து விட்டாளே தவிர…
என்னதான் வழிநெடுக தன் சுபாவம் மாறாமல் சிரித்துப் பேசி வந்திருந்தாலும், வரப்போவது என்ன என்று தெரிந்த பிறகு எப்படி இயல்பாய் இருப்பது? ஜெனிக்கு அந்தக் குளிர்காற்றிலும் வியர்த்தது.
சாப்பிடும் நேரம் சித்தார்த்தும் ஏதோ யோசனையில் இருக்க, இருவரும் அதிகம் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்கள்.
“டிசெர்ட்டாவது ஏதாச்சும் சொல்லு…”
“இல்ல, வேணாம்..”
“நீ சும்மா இரு…”அதட்டியவன் ரசமலாய் ஆர்டர் செய்தான். வந்த இனிப்பை துளித் துளியாய் இவள் கொறிக்க, அவள் நினைத்து பயந்த தருணமும் வந்தே சேர்ந்தது.
“ஜெனி…” கரகரப்பாய் தன்னை அழைக்கும் அவன் குரலில் இருந்தே புரிந்து போக, அவள் தன் படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்தாள்.
“ஜெனி, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. பார்த்த முதல் நிமிஷமே. ஏன், போன்ல பேசின முதல் தடவையே… இவ்ளோ ஜோவியலா பேசுற பொண்ணை நேர்ல பார்க்கணும்னு பயங்கரத் துடிப்பு… அதனால தான் அடுத்த நாள் நானே உன் கஃபேயை தேடி ஓடி வந்தேன்.”
மேசை மேலிருந்த அவள் வலக்கையை இயல்பாக எடுத்து தன் இரு கரங்களுக்குள் பொதிந்து கொண்டவனை ஜெனி இயலாமையுடன் பார்த்தாள்.
“அடுத்தடுத்து உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும்… மை காட்.. எதுக்கு நான் இவ்ளோ விளக்கம் கொடுக்கிறேன்?” சிறு வெட்கச் சிரிப்புடன் தன் தலையை ஒருமுறை கலைத்து விட்டுக் கொண்டவன்,
“நீ என் கூடயே, நான் உன் கூடயே இப்படியே இருக்கணும், காலம் முழுக்க இப்படிக் கை கோர்த்து, வம்பா சண்டை போட்டு, அடிச்சு பிடிச்சு, ஹம்.. அப்புறம் உனக்கு பெட் டைம் ஸ்டோரீஸ் சொல்லி… ஸ்ட்ரைட்டாவே சொல்லிடுறேனே.”
“ஐ வான்ட் டூ மேரி யூ ஜெனி… நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முழு மனசா விரும்புறேன். நீ என்ன சொல்ற?”
அவன் மண்டியிடவில்லை. கையில் ரோஜா இல்லை. ப்ரபோசல் என்கிற சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. லவ் யூ வசனங்கள் இல்லை… ஆனால், அந்தக் கண்கள் வழிப் பெருகிய அன்பும், அவன் வார்த்தைகளில் கசிந்த உண்மையும், ஆழமான உணர்வுகளும்,…
ஜெனி நெகிழ்ந்த தன் விழிகளைச் சிமிட்டிக் கொண்டாள்.
வேகமாக ஏறி இறங்கும் மூச்சை சமன்படுத்தியபடி தன் முகத்தையே ஆர்வமாகப் பார்ப்பவனிடம் மெல்லிய புன்னகையைச் சிந்தினாள்.
“சித்தார்த்… நீ அவசரப்படுற…”
“நாட் அட் ஆல்… நான் வேகமா இருக்கேன்னு சொல்லு, ஒத்துக்கிறேன். பட் இது அவசரம் இல்ல. தெளிவா நிதானமா யோசிச்சு தான் பேசுறேன்…“
‘கடவுளே, இது என்ன கஷ்டம்? இவ்ளோ ஆர்வமா இருக்கிறவன் நான் சொல்லப் போறதைக் கேட்டா…?’
‘சொல்லத்தான் வேணுமா?’
‘ம்ஹும்… சொல்லிடு…’ இருவேறு எண்ணங்களின் பிடியில் சிக்கியவள், வேகமாக எழுந்தாள். தன் கையைப் பற்றியிருந்தவனின் பிடியில் இருந்தும்.
கேள்வியாக ஏறிடுபவனின் முகம் பார்க்காமல், “ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்…” அந்தக் குடிலில் இருந்து வெளியே சென்றாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்து அமர்ந்தபோது அவள் முகம் இயல்பாக மாறி இருந்தது. குழப்பம் மறைந்து மனதில் தெளிவு வந்திருக்க… இதழ்களில் நிதானமான புன்னகை கூடக் குடிகொண்டிருந்தது.
“சித்தார்த்…”
இவள் தெளிவாக எடுத்துக் கொண்ட நேர இடைவெளி அவன் முகத்தில் குழப்பத்தைக் கொண்டு வந்திருக்க, நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான்.
“இங்க பாரு… ஐ டூ லைக் யூ… ஏஸ் எ ப்ரெண்ட்டா… பட் அதுக்கும் மேல…”
“நாம இரண்டு பேரும் இரண்டு வித்தியாசமான பின்னணியில் இருந்து வந்தவங்க… நான் வளர்ந்தது வேற சூழல், வேற பழக்கவழக்கம்… செட் ஆகாது சித்தார்த். ப்ளஸ் லவ் மேரேஜை நம்ம வீட்ல….”
“எனஃப் ஜெனி… நீ என்ன சொல்ல வர? உங்க அம்மாப்பாவும், என் அம்மாப்பாவுமே வேற வேற கலாச்சாரப் பின்னணி கொண்டவங்க தான். அந்தக் காலத்துலயே அவங்க தைரியமா கல்யாணம் பண்ணிக்கலையா? அதுவும் லவ் மேரேஜ்…. அவங்களா நாம கல்யாணம் பண்ணிக்கப் போறதை எதிர்ப்பாங்க… வாட் ஆர் யூ டாக்கிங்?….”
தன்னளவு பிரதிபலிப்பு அவளிடத்தில் இல்லை என்பதே அவனுக்கு வருத்தம் அளித்திருக்க, இவள் சொல்லும் சப்பைக் காரணங்களில் இன்னும் ஏமாற்றம் கூடியது.
“இதே ஊர்ல பிறந்து வளர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணுங்களை விட நீ எந்த விதத்திலும் வித்தியாசமா எனக்குத் தெரியல. உன் அம்மா இந்த ஊரை சேர்ந்தவங்கன்றதால நடை, உடை, பேச்சுல இருந்து அடுத்தவங்க கிட்ட பேசுற விதம், கவனம் வரைக்கும் நீ ஜீன்ஸ் போட்ட தமிழச்சியாதான் என் கண்ணுக்குத் தெரியுற… வேற என்ன வேணும் உனக்கு?”
தான் சொல்ல நினைப்பதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள், அவன் சொன்ன வார்த்தையையே ‘கப்’பெனப் பிடித்துக் கொண்டாள்.
“இதுதான் உங்க ப்ராப்ளம் சித்தார்த். பெர்ஃபெக்ட் இந்தியன் மேல் மென்டாலிட்டி… உன் கண்ணுக்கு நான் எப்படித் தெரியுறேன், அது மட்டும் தானே முக்கியம் உனக்கு…?”
“எனக்கும் என் லைஃப் பத்தி சில எதிர்ப்பார்ப்புகள் உண்டு…”
“சொல்லுங்க மேடம்… நாங்களும் தெரிஞ்சுக்குறோம்…” லேசாய் எரிச்சல் தோன்றியதில் கால் மேல் கால் போட்டபடி அமர்த்தலாக வினவினான்.
சொன்னாள். கேட்டான்.
அதற்கு மேல் அதிகம் பேசவில்லை. ஆழ்ந்த பெருமூச்சுடன் நிமிர்ந்தவன், “சரி, கிளம்பலாமா?”
‘என்ன ரியாக்ஷன் இது…?’ ஜெனி வியந்தாலும் அவனைப் பின்பற்றித் தானும் எழுந்தாள்.
வரும் வழியில் எவ்வளவுக்கு எவ்வளவு வாயடித்துக் கொண்டு வந்தார்களோ, அதற்கு எதிர்மாறாக மொத்த பயணமும் மௌனத்தில் குளித்திருந்தது.
அவள் வீட்டில் இறக்கி விட்டவன், “குட் நைட் ஜெனி… நாளைக்குப் பார்க்கலாம்…” எதுவுமே நடக்காததுபோல விடைபெற்று செல்ல…
‘நான் கரெக்டா தான் பேசினேனா?’ அவனது பிரதிபலிப்பில் அவள் வெகுவாகக் குழம்பிப் போனது நிஜம்.
********************
“எங்கடா போய்ட்டு வர இவ்ளோ நேரம்?” பூனைப் போலக் கதவு திறந்து அமைதியாக இருந்த கூடத்தில் கால் வைத்த சித்தார்த் உள்ளிருந்து வந்த குரலில் படுக்கை அறையை எட்டிப் பார்த்தான்.
“நீங்க இன்னும் தூங்கலையாம்மா…?” அங்கிருந்த சின்ன அலுவலக அறையில் அமர்ந்து இருந்தார் கௌரி.
“நீ வராம உன் அம்மா என்னிக்குடா தூங்கியிருக்கா ?” அப்பாவும் அங்கே இருக்க, “அப்பா,, யூ டூ?” என்றான் ஆச்சர்யமாக.
சதானந்த் ஒரு நேர சீர்திருத்தவாதி. எட்டு மணிக்கு உணவு, ஒன்பதுக்குச் சின்ன நடை, ஒன்பதரைக்கு எந்த ராஜா எந்தப் பட்டிணம் போனாலும் அவருக்குப் படுக்கையில் சாய்ந்து விட வேண்டும்.
அது போலவே காலையிலும். ஆறு மணிக்கு விழிப்பு, எட்டுக்கு கல்லூரி, மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவது என எல்லாமே அட்டவணை தான்.
இதில் எதுவும் கொஞ்சமும் பிசகக் கூடாது. இன்று மாதிரி பத்தரை வரை அவர் விழித்திருந்தால் ஏதோ உலக அதிசயம் என்று நாள்காட்டியில் குறித்து வைத்து விடலாம்.
அவர் அங்கிருந்த மேசையில் சுற்றிலும் புத்தகங்களை விரித்து வைத்தபடி ஏதோ குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்க…
“மதியம் சாப்பிட வந்தப்போ கூட ராத்திரி லேட்டாகும்னு சொல்லலையே, இவ்ளோ நேரம் ஆகுதேன்னு மனசு ஒரு நிலையா இல்லை எனக்கு.”
“போன் பண்ணினா எடுக்க மாட்டியாடா? அப்படி எங்க தான் போன? நாலு மணிக்கே கிளம்பிட்டியாமே ?” அம்மா அதட்ட, சைலென்ட்டில் போட்டிருந்த தன் போனை எடுத்துப் பார்த்த சித்தார்த் லேசாகத் தடுமாறினான்.
மூவருக்கும் இடையே இதுவரை எந்த ரகசியங்களும் இருந்ததில்லை. ஒற்றைப் பையன் என்பதாலோ என்னவோ, பெற்றவர்களிடம் அன்னியோன்யம் அதிகம். அதிலும் அப்பாவை விட அம்மாவிடம் வெகு நெருக்கம்.
நண்பர்களிடம் பேசுவது போல எல்லாவற்றையும் தயக்கமில்லாமல் அவரிடம் பகிர்ந்து கொள்பவன் முதல்முறையாக வார்த்தைகளுக்குத் தடுமாற…
“சித்து, கோவிலுக்குப் போனியா என்ன?” அவரின் பார்வை உயர்ந்ததில் நெற்றியில் தீற்றியிருந்த விபூதியை தடவிப் பார்த்தவன், “ஆமாம்மா…” என்றான் மெலிதாய்.
“அதிசயம் தான் போ… வா வான்னு இழுத்துட்டுப் போனா தான் வருவ… இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு?”
“ஜெனி கூடப் போனேம்மா… அவ வழில பார்த்துட்டு போலாமான்னு கேட்டா…. அது தான்…” லேசாய் வெட்கம் பூத்து வந்தன அவன் வார்த்தைகள்.
“ஓஓ….”
கெளரியின் ‘ஓ’வில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன. ‘வெளியில சேர்ந்து போற அளவுக்குப் ஆகிடுச்சா? அதுவும் கோவிலுக்கு ஒன்னா போற அளவுக்கு….. ???’
அம்மாவின் முகம் யோசனையில் இறுக, “சாப்டியாடா?” எழுந்து நெட்டி முறித்தவாறே அப்பா வினவினார்.
“ம்ம்… ஆச்சுப்பா…”
“அந்தப் பொண்ணோடவா?”
“ம்ம்..” என்றவன், அம்மா அருகே வந்து அவர் தோளில் கை போட்டவாறு அமர்ந்தான். எதற்கு மறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எந்தக் கோவில், எந்த உணவகம் சென்றார்கள் என்று சொன்னான்.
“ரைட்டு…” மகனைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தவர், “சரி, கௌரி, எந்திரி நேரமாச்சு” மனைவி தன்னை முறைப்பது கூடத் தெரியாமல் அப்பாவியாய் அவரை அழைத்தார் சதானந்த்.
“சித்தார்த்…. இங்க உக்காரு… உங்கூடக் கொஞ்சம் பேசணும்”
சித்து எனும் அழைப்பு சித்தார்த் ஆனதில் இருந்தே அம்மா ஏதோ இறுக்கமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டவன், “என்னம்மா இந்த நேரத்துக்குப் பேசணும்?” அலுத்தபடி அவர் தோளில் செல்லமாகச் சாய்ந்து கொண்டான்.
“போதும் உன் பூனைக்குட்டி சாகசம்லாம்”
லேசாய் கடுப்படித்த கௌரி, ஆறாம் விரலாய் எப்போதும் கையில் வைத்திருக்கும் க்நிட்டிங் ஊசியை மகனை ஊன்றி பார்த்தவாறே கம்பளி நூலில் சுற்றி ஓரமாய் வைத்தார்.
“நீங்க எங்க போறீங்க? ஒரு நாள் நேரங்கழிச்சு தூங்கினா ஒண்ணும் குறைஞ்சுட மாட்டீங்க… இருங்க” அம்மாவும் பையனும் ஏதோ பேசுகிறார்கள் என்று அறைக்குள் நகர்ந்த கணவனையும் அழைக்க…
நெற்றியை வழித்து ‘தலை எழுத்து’ என்று தன்னிடம் பாவனைக் காட்டும் அப்பாவின் விளையாட்டில் சிரித்த சித்தார்த், “அம்மா… எனக்குமே டயர்டா தான் இருக்கு…” மெல்ல நழுவப் பார்த்தான்.
“என்ன டயர்டா இருந்தாலும் பரவால்ல… நீங்களும் தான்… உட்காருங்க” என்றவர்,
“ஏதோ தெரிஞ்ச பொண்ணு, அவ கஃபேல இருக்கிற ஃப்ரெஞ்ச் ஐட்டமெல்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு வலிய வலிய கூப்பிட்ட… சரின்னு நாங்களும் எதார்த்தமா வந்தோம். இப்ப இதெல்லாம் என்னடா?”
நேற்று அங்குச் சென்று இறங்கும்வரை கமுக்கமாக இருந்தவன், அந்தப் பெண் வெளியே வந்து கதவு திறக்கும் நிமிடம் கண்ணாடித் தாள் சுற்றிய கைப்பை ஒன்றை கொடுத்து, ‘இதையும் சேர்த்து கொடுத்துடுங்கம்மா’ என்றபோதே கறுக்கென்று தான் இருந்தது அவருக்கு.
சமீப நாட்களாக அர்த்தமில்லா புன்னகையும், அலைபாயும் கண்களும், பேச்சு ஒன்று, செயல் ஒன்றுமாக ஒரு மார்க்கமாகத் திரியும் மகனை அவனை நன்கு உணர்ந்த தாயாக அவதானித்துக் கொண்டிருந்தவர், நேற்று இரவே இவனிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தார்.
அதற்குள்…? இதென்ன அடுத்த நாளே கோவில் வரை சென்று வெளியில் சுற்றி விட்டு இவ்வளவு நேரம் கழித்து வருகிறான்?
சின்னதாய் தோன்றிய ஆதங்கம் எதிரில் அமர்ந்து புன்னகைப்பவனையும், கண்களாலேயே கேலி சமிஞ்சைகள் அனுப்பும் கணவரையும் கண்டு கோப மூச்சுகளாக வெளிப்பட…
“என்னம்மா..?” அலுத்துக் கொண்டவனிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார்.
“இதெல்லாம் சரிப்படாதுடா, விட்டுடு…”
“எதெல்லாம் சரிப்படாது?” இப்போது அவனும் நிமிர்ந்து அமர்ந்தான்.
“இங்க பாரு, எதுக்குச் சும்மா சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு… அந்தப் பொண்ணு… பேரு என்ன? ஹாம்.. ஜெனிட்டா… உனக்கு அந்த மாதிரி எண்ணம் ஏதாவது இருந்துச்சுன்னா அதை இந்த நிமிஷத்தோட விட்டுடு…”
“கௌரி, என்ன ஆச்சு உனக்கு? எதுவா இருந்தாலும் பொறுமையா பேசு” வழக்கமில்லா வழக்கமாகப் படபடத்த மனைவியைச் சதானந்த் அடக்க முயன்றார்.
வயது வந்தவன், படித்தவன், உலக அனுபவங்கள் அறிந்தவன், இன்றைய உலகத்தின் இளைஞன், என்னதான் பெற்றவருக்கு அடங்கும் பிள்ளை எனினும் அதற்கும் ஒரு வரைமுறை உண்டே…
அவருடைய எண்ணத்திற்கு ஏற்றபடியே தான் சித்தார்த்தின் முகமும் மாறியது.
“ம்ம்மா…. நீங்களா ஏதாச்சும் உளறாதீங்க” அவன் வேகமாகச் சொல்ல…
“நான் ஒன்னும் உளரல. தெளிவா தான் பேசுறேன். அப்படி எதுவும் இல்லேனா சந்தோஷம். நான் வேணாம்னு சொல்றது உன்னை வச்சு இல்ல.. அந்தப் பொண்ணுக்காகத் தான். அந்தப் பொண்ணு, நல்ல பொண்ணு…. ஒரு ப்ரெண்டா பழகுறதோட நிறுத்திக்க”
“அப்ப… நான் மோசமான பையனா?” அவன் முகத்தில் சற்றுமுன் பரவிய நிழல் விலகி பளிச்சென்ற சிரிப்பு வந்திருந்தது.
“சிரிக்காதடா…” அதட்டியவர், “சித்து… இந்த வீட்டுக்கு ஒரு கௌரி போதும்டா…” என்றார் ஆழமான குரலில் எங்கோ பார்த்தபடி.
“ம்மா…????”
“ஊர் மறந்து, பேர் மறந்து, உங்க அப்பாவுக்காக, அவர் குடும்பத்துக்காகன்னு எல்லாத்தையும் மாத்திக்கிட்டு….. அந்த வயசுல அதெல்லாம் பெரிய த்ரில்லா தான் இருந்துச்சு…. கடைசில என்ன மரியாதை வச்சு இருக்கு எனக்கு இந்தக் குடும்பத்துல…?”
நான்கு அண்ணன்கள், மூன்று அக்காக்கள் என்ற பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசு ஒரு பிரெஞ்ச் பெண்ணை விரும்புகிறேன், திருமணம் செய்து வையுங்கள் என்று வந்து நின்றபோது அந்தக் காலத்தில், அதிலும் பழமையான எண்ணங்கள் படிந்த அந்தக் குடும்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெறும் வார்த்தைகளில் அடங்காதவை.
எப்படியோ போராடி காதலித்த பெண்ணைக் கைப்பிடித்த நிமிடத்தோடு சதானந்தின் போராட்டம் நின்று போனது. ஆனால், அதற்குப் பிறகு தான் கெளரியின் போராட்டமே தொடங்கியது எனலாம்.
தன்னை அந்தக் குடும்பத்தின் மருமகளாக நிரூபித்துக் கொண்டே இருக்கு வேண்டி இருந்தது ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிகழ்விலும். விடியும் ஒவ்வொரு பொழுதும் அவரைப் பொறுத்தவரை சத்தியசோதனை தான்.
வருடங்கள் கடந்து கூட்டுக் குடும்பம் பிரிந்து இன்று தனித்தனியாக வாழத் துவங்கி விட்டாலும் அந்த வீட்டாரை பொறுத்தவரை இவர் ஒரு ‘ஏலியன்’ தான், இந்த நிமிடம் வரைக்கும் கூட.
இத்தனைக்கும் கெளரியின் பெற்றோர் வெளிநாட்டினர், இங்கே பிழைக்க வந்தவர்கள் என்பதைத் தவிர்த்து இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமும் இங்கே தான்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணி செய்பவர் தேவாரம், திருவாசகப் பதிகங்கள் முதற்கொண்டு மாரியம்மன் தாலாட்டு வரை இனிமையாகப் பாடுவார்.
எல்லோரிடமும் கலந்து பழகும் இயல்பும், எளிமையும் எப்போதும் உண்டு. புகுந்த வீட்டை அசத்த வேண்டும் என்று விதவிதமாய்ச் சமைக்கக் கற்றுக் கொண்டு வாஞ்சையாய்ச் செய்து போடுவார். இத்தனை இருந்தும்… !?
“என்ன ஆச்சுப்பா?”
“உங்க அத்தை வீட்டுல வளைகாப்பு பண்ணியிருக்காங்க… நமக்கு மட்டும் சொல்லல”
“யாருக்கு நளினிக்கா? ஏன் சொல்லலையாம்?”
“ம்ம்ம்.. வீட்டோட செஞ்சுட்டோம்னு மதியம் உன் அத்தையே போன் பண்ணி சொல்லியிருக்கா… சொன்னவ அதோட நிறுத்தி இருக்கலாம். மத்த அத்தனை குடும்பமும் ஆஜர்னு போற போக்குல எல்லாத்தையும் போட்டு விட்டதுல இவ கண்டதையும் யோசிச்சு மூட் அவுட்…”
எப்போதும் நடப்பது தான் இது. இவர்களை மட்டும் நாசுக்காக ஒதுக்கி விட்டு மற்ற பெரியப்பா, அத்தை குடும்பங்கள் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே அம்மாவை வெறுப்பேற்றுவது.
“அந்த மூட் ஆஃப்ல தான் இப்படிப் பேசுறீங்களாம்மா?”
“நம்ம வீட்டுல இப்படி நடக்கிறது எல்லாம் புதுசா என்ன? சொன்னா சந்தோஷம், சொல்லலைனா ரொம்பச் சந்தோஷம்ங்கிற மாதிரி இதெல்லாம் பார்த்து பார்த்து என் மனசு விட்டுப் போயிடுச்சுடா….” கௌரி விரக்தியாகப் புன்னகைத்தார்.
“கேத்தரினா இருந்தவ கெளரியா மாறி நான் சாதிச்சது தான் என்ன? நீங்க எல்லோரும் என்னைத் தள்ளி நிறுத்துறது என்னோட போகட்டும். அது இன்னொரு பொண்ணுக்கும் தொடர வேணாம்”
“ம்மா… இது அநியாயம். நாங்க இரண்டு பேரும் என்ன பண்ணோம்…? எங்களையும் ஏன் சேர்த்து சொல்றீங்க?” அவன் பாவமாய்க் கேட்க,
“நீங்களும் தான்டா… எல்லோரும் தான்…” கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டி விட்டபடி கௌரி எழுந்து சென்றார்.
உறவுகள் நடந்து கொள்ளும் விதத்தில் அவர் வெகுவாகக் காயப்பட்டு இருப்பது புரிந்ததில் இவர்கள் இருவரும் இயலாமையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
உண்மையில் இதெல்லாம் ஒரு விஷயமா என்று தான் ஆண்கள் இருவருக்கும் தோன்றியது.
”மூட் ஸ்விங்…. நாளைக்குச் சரியாயிடுவா…”
தன்னையே பாவமாய்ப் பார்க்கும் மகனின் தோளைத் தட்டிய சதானந்த், “சரி, நீ போய்ப் படு… பிளாஸ்க்ல பால் வச்சிருக்கா பாரு உங்கம்மா… குடிச்சிட்டு போ” கொட்டாவி விட்டபடி அறைக்குள் சென்று விட…
தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்து விட்டான் சித்தார்த்.
ஏற்கனவே ஜெனி சொன்ன விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் நொந்து போய் வீடு வந்து சேர்ந்தால்…. அம்மாவின் பேச்சு இன்னும் திகிலைக் கிளப்பியது.
இன்று மாலை வரை தன் விருப்பம் நிறைவேறுவது ‘கேக் வாக்’ போல எளிமையானது என்று எண்ணத்தில் இருந்தவனுக்கு… ஜெனியே என்னென்னமோ பேசி குழப்பி அதற்கு ஆப்பு வைத்திருந்தாள் எனில் இங்கு வீட்டிலும் போர்க்கொடி உயர்ந்தால் தன் நிலைமை என்ன ஆவது?
“ப்ச்…” எழுந்து தன்னறைக்குள் வந்து உடைகள் களைந்து ஷவருக்கு அடியில் நின்றான்.
மாலை இருந்த இனிமையான மனநிலை மாறி குழப்பம் ஆக்ரமிக்க, விடையில்லா கேள்விகள் மட்டுமே இப்போது அவன் மனதில் நிறைந்து இருந்தன.
அம்மா மனதில் இத்தனை வேதனை உள்ளதா? ஒதுக்கப்படுவது போல உணர்ந்து இவ்வளவா உள்ளுக்குள் வைத்து வருந்துகிறார்? நானும் அப்பாவும் இத்தனை நாள் இதைக் கவனிக்கத் தவறி விட்டோமோ? வேறு வேறு கலாச்சாரப் பின்னணி என்பது இவ்வளவு தூரம் பின்தொடர்ந்து பயமுறுத்துமா, என்ன ?
இவனுடைய நண்பர்கள் குடும்பத்திலும் இந்த மாதிரி பிரெஞ்சு இந்திய கலப்பு மணங்களைப் பார்த்திருக்கிறான். அந்தப் பெண்களுக்கும் இப்படித் தான் உறவுகள் இடையே சிக்கல் இருக்குமா? தெரியவில்லை.
எத்தனை வயதானாலும், எந்த ஊரில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் பெண்களின் மனது மிக நுட்பமானது, அதை ஆண்களான தங்களால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றியது.
அம்மா மறுப்பது இப்போதைய கோபத்திலா இல்லை வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிப்பாரா? அப்படிப் பிடிவாதமாய் இருந்தால் எப்படிச் சமாளிக்கப் போகிறேன்?
தண்ணீருக்கு அடியில் வெகு நேரம் நின்றவனது மனம் நீரின் வேகத்தில் சிறிது சிறிதாகச் சமனப்பட்டது.
‘உங்க காலம் வேறம்மா… இப்ப காலம் மாறிடுச்சு… உங்களுக்குப் பொறுமையா புரிய வைப்பேன். லூஸு மாதிரி உளறிட்டு இருக்காளே ஒருத்தி, அவளுக்கும் புரிய வைப்பேன்…’ அவன் தனக்கும் சேர்த்து மெலிதாக முனகிக் கொண்டான்.