காதல் கஃபே – 2

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

2

இருள் சுத்தமாய்ப் பிரிந்து சூரியன் சோம்பலாய் தன் கதிர்கள் விரிக்கும் பொன் காலைப் பொழுது.

மணி ஒன்பது அடித்து விட்டாலும், வார இறுதி என்பதால் துயில் கலைந்த குழந்தை எழ விருப்பம் இல்லாமல் போர்வைக்குள்ளேயே புரள்வது போல ஊர் பரபரப்பின் சந்தடி இல்லாமல் மெல்ல விழித்துக் கொண்டிருந்தது.

கடல் நோக்கி ஓடுபவர்கள், கை வீசி வேகநடை நடப்பவர்கள், அலைகளில் விளையாடும் குழந்தைகள், இளநீர், அருகம்புல், கற்றாழை சாறு வாங்கிக் குடித்தபடி கும்பலாக நின்று கதையடித்து நிற்பவர்கள், டென்னிஸ் மட்டையை முதுகில் சொருகிக் கொண்டு பைக்கில் விரையும் இளைஞர்கள் என…

இருபக்கமும் நிதானமாக வேடிக்கைப் பார்த்தவாறு காரை செலுத்திய சித்தார்த் கடற்கரையைத் தாண்டி சர்தார் வல்லபாய் படேல் சாலை வழியாகத் திரும்பினான்.

சிக்னல் எரியாததால் போக்குவரத்தைக் கடக்க முடியாமல் கும்பலாய் நின்றவர்களைக் கண்டு வண்டியை நிறுத்தி இவன் தலையசைக்க, அவர்கள் சாலையைக் கடந்த பின் ஆக்சிலேட்டரின் வேகம் உயர்த்தியவன், நான்காவது சிக்னலில் இடது ஒடித்துக் கிளை சாலையில் புகுந்து, நூறடி தாண்டியதும் ஓரங்கட்டி, கையிலிருந்த விலாசத்தை ஒரு முறை சரி பார்த்தான்.

‘இதுவா தான் இருக்கணும்’

அங்கிருந்த குட்டி பார்க்கிங்கில் அவன் வண்டியை நிறுத்த, “உள்ளே போகணுமா சார்? இல்லேனா இங்க நிறுத்த கூடாது…” அருகில் வந்த காக்கி உடையிடம் ஆமோதிப்பாய் தலையசைத்துவிட்டு இறங்கினான்.

அந்த இடத்தின் வெளித் தோற்றத்தை அளந்தவாறு அவன் உள்ளே நுழைய, “என்ன வேணும் சார்?” கேள்வியாக ஏறிட்ட வரவேற்பு ஆசாமியிடம் விவரம் சொல்லி சாவியை எடுத்துக் கொடுத்தான்.

இதே ஊரில் இருக்கிறான் என்று தான் பேர். இந்தச் சாலை வழியே அதிகம் வந்ததில்லை. இந்த உணவகத்தையும் பரிட்சித்தது இல்லை.

லாபியை கடந்து உள்ளே சென்று ஓரத்தில் இருந்த இரட்டை நாற்காலியை தேர்ந்தெடுத்து அமர்ந்தவன் கொஞ்சம் காத்திருக்க, ஒரு பெண் வந்து ஆர்டர் வாங்கினாள்.

ஒரு எஸ்ப்ரஸோ காபி ஆர்டர் செய்து விட்டு சுற்றிலும் கண்களை ஓட்டினான். அந்த நேரம் கஸ்டமர்ஸ் யாரும் இல்லை. அவனைத் தவிர எதிர் திசையில் ஒரு முதிர்ந்த தம்பதியர் அமர்ந்து தங்கள் உணவில் மும்முரமாக இருந்தனர்.

சிறிய இடம் தான்.

நுழைந்தவுடன் டூ-கோ(to-go) மேசை. கருப்பு கிரானைட் மேசையின் கீழே இருந்த கண்ணாடி அறைகளில் விதவிதமான பேஸ்ட்ரி கேக் வகைகள்.

அதைத் தாண்டி மரத்தடுப்பு கடந்து உள்ளே வர ஆறேழு மேசை நாற்காலிகள்; ஒற்றையாய், ஜோடியாய், நான்காய் என அளவான இடைவெளிகளில்.

தரையில் அழகான மென்ஹாட்டன் வகைக் கம்பளம். இந்தோ பிரெஞ்சு பாணியிலான எளிமையான உள் அலங்காரத்தில் இட மேலாண்மை நன்றாகவே இருந்தது.

‘சிம்பிள் அண்ட் எலிகண்ட்’ தன்னுள் மதிப்பிட்டுக் கொண்டவனுக்கு எதிரே கண்ணாடிச் சட்டத்தில் புதுச்சேரியின் பழைய தோற்றம் ஆயில் பெயின்ட் ரூபத்தில் மையமாக இடம் பிடித்திருக்க…

சுவர் ஓரங்களில் சின்னச் சின்ன இயற்கை ஓவியங்கள்; பின்னணியில் மெல்லிய கஜல் இசை, கூடவே உள்ளே இருந்து உருகும் வெண்ணெய்யின் வாசமும், இன்னபிற சமையல் நறுமணங்களும்;

‘ம்ம்ம்…’ இழுத்து ஒருமுறை சுவாசித்த சித்தார்த் தன் முன்னால் இருந்த ‘எகனாமிக் டைம்ஸ்’ ஐ புரட்டினான். அவன் கேட்ட பானம் வந்து விட, சக்கரைக் கட்டி சேர்த்து கலக்கியபடி இருந்தவனை வெளி அரவம் கலைத்தது.

கண்ணாடி ஜன்னல் வழியே சில இளைஞர்கள் வெள்ளை சுசூகி எர்டிகாவில் இருந்து இறங்குவதும், பார்க்கிங் இல்லாததால் காவலாளியிடம் ஏதோ சண்டைப் போடுவதும், அவர் ஏதோ சொல்ல எகிறும் நண்பர்களை வேறு இருவர் சமாதானம் செய்து கொண்டே உள்ளே வருவதும் தெரிய…

தன் வண்டியை எடுத்து சாலை ஓரம் நிறுத்தி விடலாமா என்று இவன் எழுந்தான்.

அதற்குள் அந்த ஓட்டுனர் வண்டியை நகர்த்தி அங்கிருந்து நகர்ந்து விட, சித்தார்த் மீண்டும் அமர்ந்து தன் கோப்பையிலும், ஆர்பிஐ (RBI) – அருண் ஜெட்லிக்கு இடையில் நடக்கும் சண்டையிலும் கவனமானான்.

அந்த இளைஞர் கூட்டம் ஆர்ப்பாட்டமாக வந்து அமர்வது ஓரக்கண்ணில் விழுந்தாலும் அனுதினமும் நிகழும் அரசியல் கூத்துகளின் சுவாரஸ்யத்தில் சுற்றி நடப்பதை சில நிமிடங்கள் தவற விட்டான்.

“க்கா.. வேணாம், சொல்றதைக் கேளு” படபடப்பாய் தடுக்கும் குரலும், “நீ உள்ள போ, நான் பார்த்துக்கிறேன்..” பதிலாக வந்த மெல்லிய தொனியின் தீர்க்கமும்…

தன்னைத் தாண்டிக் கடக்கும் குரலில் சுண்டிவிட்டது போல நிமிர்ந்தவனின் விழிகள் முதலில் வியப்பில் விரிந்தாலும், அங்கு நிலவும் சந்தடி புரிபடாத குழப்பத்தில் சுருங்கின.

தனக்குக் காபி வழங்கிய பெண் ஒருமாதிரி பின்னடைந்து தயங்குவதும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” அழுத்தமான குரலில் ஆங்கிலத்தில் கேட்டபடி அந்த இளைஞர்கள் அருகே அந்த வெள்ளுடை தேவதை சென்று நிற்பதும்…

“இங்க பாருங்கடா டோய்… கருப்பழகி உள்ள போய் ஏமி ஜாக்சன் வெளில வந்து நிக்குது… என்ன வேணும்னு கேக்குதே, நீ தான் வேணும்னு சொல்லிடட்டா ?”

“கேளு மச்சி. பேரு என்னன்னு முதல்ல கேளு. டிசாஸோ போசாஸோன்னு ஏதாச்சும் சொல்லும் பாரு…”

வந்த ஐந்து பேரில் இருவர் கொச்சையான பார்வையிலும் பேச்சிலும் எதிரில் நிற்கும் பெண்ணைத் துகில் உரிக்க, ஒருவன் ஈஈ என்று பல்லைக் காட்டிக் காட்டிச் சிரித்தான்.

“டேய். வேண்டாம்டா. சும்மா இருங்க..” மற்ற இருவர் அவர்களை அடக்கிக் கொண்டிருந்தனர். எரிச்சலுடன் சித்தார்த் தன் இருக்கையில் இருந்து எழுந்து அந்த மேசை அருகே செல்ல…

“பார்க்கும்போதே வழுக்குது… தொட்டுப் பார்த்தா எப்படி இருக்கும் மச்சி…?”

“வெண்ணெய் தோத்துடும் மாமு…”

“எங்க… தொடுடா… தொட்டுப் பாரு…” சுத்த தமிழில் ஏமி ஜாக்சன் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை போலும் அந்த முட்டாள்கள்.

“தைரியம் இருந்தா மேல கை வை, பார்க்கலாம்…”

அவள் சீறியதில் மற்றவர்கள் வெளிறி பின்னடைய, நண்பர்கள் முன் படம் போடுவதற்காகவே ஒருவன் துடுக்காகக் கை நீட்டியபடி நெருங்கினான்.

அதை விட வேகமாக முன்னால் வந்தவனின் கன்னத்தில் பளிச்சென்று ஒன்று கொடுக்க அவள் கை ஓங்கி இருக்க, “மிஸ்.. மிஸ்.. நீங்க விடுங்க…” கை கன்னத்தில் பதியும் மைக்ரோ நொடியில் குறுக்கிட்டு அவள் கையைப் பற்றித் தடுத்திருந்தான் சித்தார்த்.

“பாஸ் எந்திருங்க.. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க… இது பாண்டி. பொண்ணுங்ககிட்ட வம்பு பண்ணா சத்தமே இல்லாம கழுத்தை நெரிச்சு கடல்ல தூக்கி போட்டுடுவோம்… பார்ட்டி பண்றதெல்லாம் உன் ஹோட்டல் ரூம்ல வச்சிக்கோ.. என்ன.. புரியுதா?”

“அஅ…ஆஆஆஆஆஆ…”

அவன் கையைப் பற்றிச் சித்தார்த் தூக்கி விட, சக்கரத்தில் மாட்டிக் கொண்ட கரும்பு மாதிரி விரல்கள் நெரிபட்டதில் அந்த ஹிப்பித் தலையன் தீனமாக அலறினான்.

“எல்லாம் அப்பன் காசு, சனி ஞாயிறு ஆச்சுனா இங்க வந்து ஆட்டம் போட சொல்லுது… நேத்து நைட் அடிச்ச ஹேங் ஓவர் இன்னும் இறங்கலை போலத் தம்பிக்கு…” அடுத்தவனின் தோள் பற்றித் திருப்பிய வேகத்தில் அவனை விட அதிகமாக மூன்றாவது சிரித்த வாய்க்குக் கண்கள் வேர்த்தன.

“ஸாரி.. ஸாரி மேடம்… ஸாரி சார்“ மற்ற இருவரும் குறுக்கே பாய்ந்து மன்னிப்பு வேண்ட, “இந்த உருப்படாத பசங்களோட சேர்ந்து ஏன்டா நீங்களும் உருப்படாம போறீங்க…? கிளம்பு முதல்ல… இடத்தைக் காலி பண்ணு… அவுட்…”

‘ஓசி பீருக்கு ஆசைப்பட்டு வந்து இப்படி அசிங்கப்படுறோமே’ என நினைத்தார்களோ என்னவோ அந்தப் பையன்கள் பம்மியபடி மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள்.

‘சட்….’ சற்றே தள்ளாடி நகர்ந்த வெள்ளுடை தேவதை அவன் அமர்ந்திருந்த மேசை அருகே சாய்ந்து நின்றது.

“ஸாரி… ப்ளீஸ் டோன்ட் மைன்ட்…. நீங்க சாப்பிடுங்க…” இந்தக் களேபரத்தைக் கலவரமாய்ப் பார்த்த முதியவர்களிடம் கண்கள் சுருக்கி மன்னிப்பு வேண்டி, தன்னெதிரே வந்து உட்காருபவன் பக்கம் திரும்பி புன்னகையுடன் “தேங்க்ஸ்” என்றது.

“இட்’ஸ் ஓகே…” சித்தார்த் தோளை லேசாக உயர்த்தி முறுவலித்தான்.

“உங்க காபி ஆறிடுச்சு… வேற கொண்டு வர சொல்றேன். மணி…?” அவள் குரல் கொடுக்க, உள்ளேயிருந்து வந்த பெண் நன்றி முகமாய் அவனைப் பார்த்து புன்னகைத்து கோப்பையை எடுத்துச் சென்றாள்.

“வேற ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”

“இல்ல.. வேணாம்… தேங்க் யூ”

“உள்ளூர் பசங்களால பிரச்சனையே இல்ல. இப்படி வெளில இருந்து வர்றதுங்க தான், அதுவும் எல்லோரும் இல்ல. சில நியூசென்ஸ் தான் இப்படித் தேடி வந்து வம்பு பண்றது…”

“ம்ம்… புரியுது… நீங்க உட்காருங்க…”

அவள் மறுக்காமல் இருக்கையைத் தள்ளி அமர்ந்தாள். உட்கார்ந்த வேகத்தில் அவனுடைய முட்டி இடிக்க அவசரமாக இருவரும் பின் நகர்ந்து கொண்டார்கள்.

“எப்பயும் தாத்தா இருப்பாங்க. மாஸ்டர் இருப்பாரு. இந்த மாதிரி ஏதாச்சும்னா ஓட்டி விடுறது தான் அவங்க வேலையே. இன்னிக்குன்னு இரண்டு பேருமே இல்ல…”

தான் ஏன் இவனிடம் அதிகம் பிரஸ்தாபிக்கிறோம் என்றெல்லாம் அவளுக்குத் தோன்றவேயில்லை. எரிச்சலோ, பதட்டமோ ஏதோ ஒன்று முன்பின் பார்த்திராதவனிடம் சரளமாகப் பேச வைத்தது.

மணி அவளுக்கும் சேர்த்து இரு கோப்பைகளாகக் கொண்டு வந்தாள். இருவரும் எடுத்து உறுஞ்சினார்கள். மூக்கு நுனி சிவந்திருக்க, லேசான படபடப்பு அவள் சுவாசத்தில்….

அவள் மூச்சின் வேகம் அருகிலிருந்தவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதைக் வெளிக் காட்டிக் கொள்ளாத லாவகத்தில் அவ்விழிகள் தைரியம் பறைசாற்ற, தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

 அவள் குனியும் நொடிகளில் இவன் கண்கள் நிமிர…. ‘கிளிக்…. கிளிக்.. கிளிக்…’ நிறைய கேமரா ஷாட்கள் பதிவாகின அவன் இதயக்கோப்பில்.

“ப்ரீசர்ல அடுக்கிட்டேன் ஜெனிம்மா….” இவன் உள்ளே வந்த போது எதிர்பட்ட மனிதர் உறைந்த கைகளைப் பரபரவெனத் தேய்த்தபடி அருகே வந்தார்.

“எதை அடுக்கினீங்க? இவ்வளவு நேரம் எங்க போனீங்க தாத்தாகாரு?”

“இதா. இந்த சார் கொண்டு வந்தாரே சீஸ் பெட்டி. பின்னாடி பக்கமா ட்ராலில தள்ளிட்டுப் போய் நேத்து நீ சொன்ன மாதிரி அடுக்கிட்டு வாரேன்..” டீப் ப்ரீசர் அறை இந்தக் கட்டிடத்தின் கடைசியில் இருந்தது.

“ஓஓஓ…” எதிரில் இருப்பவனைச் சிறு அவஸ்தையுடன் நிமிர்ந்து பார்த்தாள். “நீங்க… மிஸ்டர்…?”

“நேத்துப் பேசுனீங்களே… ஒரு டப்பா கம்பெனி.. அந்தத் தகர டப்பா எங்களோடது தான் மிஸ். ஜெனிட்டா ரெமி”

‘அடக் கடவுளே !’

“ஹி ஹி.. அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு…”

“ஓ.. ஐ சி…”அவனது குறும்புப் புன்னகையில் ஜெனி முகத்தில் லிட்டர் லிட்டராக அசடு வழிந்தது.

“நைஸ் டூ மீட் யூ சித்தார்த்” கரம் நீட்டியவளின் கைப்பற்றிய சித்தார்த் குளிர்ந்த பஞ்சுப் பொதியலை உணர்ந்தான் தன் உள்ளங்கையில்.

“நைஸ் மீட்டிங் யூ ஜெனி” தொய்வில்லாத நேர்த்தியான அக்கைகுலுக்கலில் துளி நிலை மின்சாரம் உணர்ந்தாள் ஜெனி.

****************

‘போலாமா? வேணாமா?’ நூறாவது முறையாக ஒற்றையா, இரட்டையா போட்டுக் கொண்டிருந்தாள் ஜெனி.

மின்னஞ்சலில் அழைப்பு வந்தாலும், மாதவன் கூப்பிட்டுச் சொல்லியிருக்க… ‘போகாம இருந்தா ஓவரா அலட்டுற மாதிரி இருக்கும்…’ என ஒரு மனமும், ‘சொன்னவுடனே போன மாதிரி இருக்குமோ? மாதவன் தானே போன்ல கூப்பிட்டாரு…’ இன்னொரு மனமும் மாறி மாறி ஊசலாட….

‘வேணாம். போய்ட்டு வந்துடலாம். பிசினஸ்ல நாளை பின்ன மூஞ்சியைப் பார்க்கும்போது சங்கடமா போயிடும்… ஒருவேளை நம்ம ப்ரசென்ஸ் அங்க முக்கியமா இருந்துச்சுனா….!?’ ஒருவழியாக முடிவு பண்ணிக் கிளம்பினாள்.

இன்று திங்கள். கஃபே விடுமுறை தான்.

நிதானமாய்க் குளித்து, கூந்தலை காற்றில் உலர வைத்து பீஜ் நிற மேலாடையும், கத்திரிப் பூ நிற கேஸுவல் ஜீன்சும் அணிந்து ஒன்பதரை மணி போலக் கிளம்பினாள்.

இயர்போன் மாட்டி பாட்டுக் கேட்டபடியே மெயின்ரோடு வரை நடந்து ரன்னிங் ஆட்டோவை நிறுத்தி, “வைட் டவுன் போகணும்” விலாசம் சொல்லி அமர்ந்தாள்.

அங்குச் சென்று இறங்கி, வாசலில் என்ட்ரி போட்டுவிட்டு உள்ளே செல்ல, “ஹே… வா வா ஜென்னி…” ஏதோ வேலையாக வெளியே வந்த மாதவன் அவளைக் கண்டதும் விரைந்து வந்து வரவேற்றான்.

“வரேன், வரேன்… ஊர்ல அம்மா எப்படி இருக்காங்க மாதவன், இப்ப தேவலையா?”

“ம்ம்.. நல்லா இருக்காங்க ஜென்னி… அடுத்த வாரம் திரும்பியும் நாலு நாள் ஊருக்கு போய்ட்டு வருவேன், செக்கப் கூட்டிட்டு போக… இந்தப் பக்கம்… இப்படி வா…” பேசியபடியே தொழிற்சாலையை ஒட்டியிருந்த அலுவலகக் கட்டிட வளாகத்திற்குள் அவளை அழைத்துச் சென்றான்.

பால் தொழிற்சாலையின் அத்தனை லட்சணங்களுடன் பாரம்பரியமாக நின்றிருந்தன அந்த இரட்டைக் கட்டிடங்கள். காற்றில் கலந்து வரும் பால் மணமும், உப உற்பத்திப் பொருட்களின் ஒரு மாதிரியான வீச்சமும் கூட…

“உள்ள டெலிகேட்ஸ் வந்துட்டாங்க.. நீயும் உள்ள போறியா? இல்ல காபி சாப்பிடுறியா?” உள் அலுவலகம் இங்கிருந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தெரிய, பெரிய வரவேற்புக் கூடம் கிரானைட்டில் பளபளத்துக் காலத்திற்கு ஏற்ற நவீனங்களுடன் கம்பீரமாய் இருந்தது.

“இல்லல்ல எதுவும் வேணாம். வரும்போதுதான் சாப்டுட்டு வந்தேன். நான் இங்கயே இருக்கேன். உள்ள போய் நான் என்ன பண்ணப் போறேன்?”

“அப்படினா இங்க உக்காரு. நான் இதைக் கொடுத்துட்டு வந்துடுறேன்.” கையில் இருக்கும் கோப்பை சுட்டியபடி அவளை அமர வைத்துவிட்டு அவன் உள்ளே சென்று மறைந்தான்.

உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இவர்கள் தொழிற்சாலையின் தரம் மற்றும் உற்பத்தி குறித்து வருடா வருடம் ஆய்வு நடத்தி தன் சான்றிதழை புதுப்பிக்கும் நடைமுறையின் இறுதி நாள் இன்று.

வாடிக்கையாளர் திருப்தி என்ற முக்கிய அம்சத்தில் ஒரு சில பயனாளிகள் கடைசி நாள் கலந்தாய்வில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் இவளையும், இதே ஃபுட் இண்டஸ்ட்ரியில் இருக்கும் இன்னும் இரண்டு பேரையும் அழைத்திருப்பதாக மாதவன் சொல்லியிருந்தான்.

கட்டாயமல்ல. ஒரு ஃபீல்-குட் பாக்டர் போல. ஆய்வுக் குழு தன் கடைசி அறிக்கையை வாசிக்கும்போது அதைப் பயனாளிகளாக இவர்கள் ஆதரிக்கவோ, விவாதிக்கவோ செய்யலாம். இந்த நிறுவனம் பற்றிய தங்கள் மதிப்புரையைத் தேவை ஏற்பட்டால் பகிர்ந்து கொள்ளலாம்.

‘நான் என்னய்யா சொல்லப் போறேன்? என்னைப் போய் மதிச்சு கூப்பிட்டு இருக்கீங்களே…’ புரியாமல் இங்கு வந்திருந்தவள், ‘சரி, நம்மைப் பார்த்தா ஏதோ அப்பாடக்கர் மாதிரி தெரிஞ்சுருக்கு… அதான் கூப்ட்டுருக்காங்க….” நக்கலாக எண்ணியபடி மொபைலை திறந்து வீடியோ கேம்ஸ் விளையாடத் துவங்கினாள்.

ஐந்து நிமிடத்தில் அதுவும் போர் அடிக்க, எழுந்து அங்கிருந்த பிளாஸ்மா திரையை வேடிக்கைப் பார்த்தாள்.

இன்றைய நிகழ்வின் வரவேற்பு பட்டியலுடன் இவள் பெயரும் சேர்ந்து ஓட, வியந்து நின்றவள், “வர்றியா ஜென்னி. பாக்டரி ரவுண்ட்-அப் போறாங்க.” மாதவன் வந்து அழைக்க, அவனுடன் நடந்தாள்.

இன்னொரு கண்ணாடி கதவு திறந்து உள்ளே இருந்தவர்கள் வெளியே வர, வெளி ஹாலில் எல்லோரும் குழுமினார்கள்.

கும்பலாய் ஆறேழு பேர், அவர்களுடைய நடை, உடை, தோரணையிலிருந்தே தெரிந்தது ஆய்வுக் குழுவினர் என்று. அவர்கள் கூடவே நடந்தபடி இவர்கள் நிறுவனத்தின் மேலாளர்கள் சிலர்…

‘யாரு இவங்கல்லாம்?’

அந்த காரிடாரின் ஓரமாய்ச் சிலுசிலுத்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து இளம்பெண்களையும் ஆண்களையும் கண்டு ஜெனியின் பார்வை கேட்டதில், “காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். ஐ வி வந்திருக்காங்க…” மாதவன் தகவல் சொன்னான்.

“மாதவா, உண்மையைச் சொல்லு, இதெல்லாம் உன் செட்டப் தானே. உன் கம்பெனிக்கெல்லாம் யாருய்யா ஐ.வி வராங்க…? என்ன, இவங்க முன்னாடி சீனா…?” இவள் நக்கலாகக் கிசுகிசுக்க, மாதவன் வந்த சிரிப்பை அடக்கியபடி முறைத்தான்.

“நீ ஒருத்தி போதும் எங்க இமேஜை டேமேஜ் பண்ண… உன்னைச் சொல்லி தப்பில்ல… நீ நல்லவ னு நம்பி கூப்பிட்ட ஆளை சொல்லணும்”

“ஹ ஹா… அதைச் சொல்லு… சரி சரி, நீங்கல்லாம் பெத்த ஆளுங்க தான், ஒத்துக்கிறேன், நீ வேற டென்ஷன் ஆகாதே…” அவனை மேலும் வெறுப்பேற்றி இவளே கலகலவெனச் சிரித்துக் கொள்ள…

“ஹலோ மிஸ் ஜெனிட்டா, ஹவ் ஆர் யூ? வெல்கம் டூ அவர் பர்ம்…”

காதருகே ஒலித்த குரலில் உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடினாலும் ஏனோ அந்தச் சம்பிரதாயமான அழைப்பில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தாள் ஜெனி.

எதிரே நேர்த்தியாக உடையணிந்த சித்தார்த். அன்று நேரில் பார்த்த கேஸுவல் லுக் சித்தார்த் இல்லை இவன். இன்று உடையும், தோரணையும், ஆளுமையான பார்வையும் என ஆளே மாறித் தெரிய….

“ஸாரி, நீங்க வந்தவுடனே பார்க்க முடியல… தேங்க்ஸ் ஃபார் கமிங்”

‘போதும், உன் பீட்டரை கொஞ்சம் நிறுத்தேன்…’ ஜெனிக்கு வாய் வரை வந்து விட்டது. இருக்கும் இடத்தின் நாகரீகம் கருதி லேசாக உதடுகளை இழுத்து வைத்தாள்.

“இப்படிக் கொஞ்சம் வாங்க…” இவளை அழைத்துச் சென்று ஆய்வுக் குழுத் தலைவரிடம் அறிமுகம் செய்து வைக்க, புன்னகையுடன் முகம் கொடுத்தாள். இவளைப் போலப் பயனாளிகள் சார்பில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியின் செஃப்பும், முன்னணி கேக் நிறுவனம் ஒன்றின் மேலாளரும் வந்திருந்தார்கள்.

அவர்களிடமும் இவளை அறிமுகம் செய்து வைக்க, என்னதான் வெளியே சிரித்துப் பேசினாலும் ஜெனியின் மனதினுள் நண்டு ஒன்று விடாமல் பிராண்டியது நிஜம்.

இவர்களின் நிலைக்குத் தானெல்லாம் ஜுஜுபியிலும் ஜுஜுபி. கிட்டத்தட்ட கொசு மாதிரி. ‘என்னை எதுக்குக் கூப்பிட்டான்?’ தான் ஏதோ இங்கே அதிகப்படி என்று தோன்றத் தொடங்கியதில் அவள் மனம் சுணங்கியது.

தொழிற்சாலையை நோக்கி அனைவரும் நடக்க, இவளும் பின்தொடர்ந்தாள். இவள் சித்தார்த் உடன் இருந்த நேரத்தில் மாதவன் எங்கோ காணாமல் போயிருந்தான்.

பின்னால் வந்த அந்தக் கல்லூரி இளசுகளிடம் ஏதோ சிரித்துச் சிரித்துப் பேசியபடி நடந்து வந்தான் அந்த சொத்… சே.. அந்த சித்தார்த்.

‘பார்த்து… வாய் சுளிக்கிக்கப் போகுது’ வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் கொல்லென்ற சத்தத்துடன் சில்லறைகள் அடிக்கடி சிதறுவதில் இவள் மூச்சின் வேகம் உயர்ந்து உயர்ந்து அடங்கியது.

அடுத்த வளைவின் திருப்பத்தில் அவன் இவள் அருகே வர… “நீங்க வருவீங்களா மாட்டீங்களான்னு கடைசி நிமிஷம் வரைக்கும் தெரில… எப்படியோ ஏமாத்தாம வந்துட்டீங்க போங்க” அவன் வசீகரமாய்ச் சிரித்தான்.

‘ஆமா.. நீ அப்படியே வருந்தி வருந்தி அழைச்சப் பாரு’

“ஏன் நான் வர மாட்டேன்னு நினைச்சீங்களோ…?” கொஞ்சம் எரிச்சலாகவே வந்தது அந்தக் கேள்வி.

அவன் அதை உணரவில்லை போல. “RSVP கொடுக்கவே இல்ல நீங்க. மாதவன் கிட்டயும் கன்பார்ம் பண்ணல… அது தான்…” எதார்த்த பாவனையில் அவன் சாதாரணமாகச் சொல்ல…

“அப்ப இப்பப் போய்க் கொடுத்துட்டு அப்புறமா வரட்டுமா?”

கோபமாய்க் கேட்டுவிட்டு ஒரு அடி எடுத்து வைத்தவளை, “ஏய் ஜெனி… வாட்ஸ் வ்ராங் வித் யூ…?” அவள் கையை அவனே அறியாத வேகத்தில் பற்றித் தடுத்திருந்தான் சித்தார்த்.