கண்கள் தேடுது தஞ்சம் – 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 5
பவளநங்கை பட்டாம்பூச்சி கதை சொல்லிவிட்டு நழுவி ஓடவும், அதை அப்படியே அலட்சியப் படுத்திவிட்டு அரசு தன் வயலுக்குச் செல்ல திரும்ப, அவனின் எதிரே மாறன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் “என்னடா மாறா இன்னைக்குச் சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பிட்ட?” எனச் சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே அரசு அவன் பக்கத்தில் போய் நிற்க…
மாறன் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை புரியாதது போல “என்னடா கேட்டுட்டே இருக்கேன். அப்படியே நிக்கிற? என்ன விஷயம்?” என்று அரசு கேட்க…
“என்ன விஷயம்னு நீ தான் சொல்லணும் தமிழரசா! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன இங்க என்ன நடந்துச்சு?” என்று கேட்டான்.
“என்ன நடந்துச்சு? நீ கேள்வி கேட்குற விதத்திலேயே தெரியுது. நீ எல்லாத்தையும் பார்த்து இருக்கனு. என்னமோ ஒன்னும் பார்க்காதது போல என்கிட்ட ஏன் விளக்கம் கேட்குற?”
“நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, நீ என்கிட்ட திருப்பிக் கேள்வி கேளு!” என்று சலித்தவன், “சரி சொல்லு…! எதுக்கு நங்கை உன்னைத் தள்ளிவிட வந்தா?”
“அதுதான் அவளே சொன்னாளே பட்டாம்பூச்சி கதை. அதையும் கேட்டு இருப்ப தானே?”
“அதை நீ நம்புறியாக்கும்?”
“நான் நம்பினேன்னு உன்கிட்ட சொன்னேனா?”
“அப்ப அவ உன்னை எதுக்குத் தள்ளி விட வந்தானு உனக்குத் தெரியுமா?”
“தெரியுமே…?” என்று மறுபடியும் தோளை குலுக்கினான்.
அவனை ஆச்சரியப் பார்வை பார்த்த மாறன் “என்ன தெரியுமா? எதுக்கு அப்படிச் செய்ய வந்தா?”.
“அதுவா? அவங்க அப்பா வீட்டில் வந்து இன்னைக்கு ஏதாவது என்னைப் பத்தி சொல்லி திட்டிருப்பார். அதைக் கேட்டு இவளும் என்னை ஏதாவது செய்யணும்னு நினைச்சு இப்படி லூசு தனமா செய்துட்டுப் போறா, லூசு!” என்றான் கடுப்புடன்.
“என்னடா சொல்ற…? அவங்க அப்பா இப்ப எதுக்கு உன்னைத் திட்டினார்? அவர் திட்டிருப்பார்னு உனக்கு எப்படித் தெரியும்?”
“ஹ்ம்ம்…! அவர் இடத்தை விற்க முடியாம செய்துட்டேன்ல! அதுக்குத் திட்டாம, என்ன செய்வார்?”
அரசு அப்படிச் சொன்னதும் “அடப்பாவி…! என்னடா இது? அவர் இடத்தை அவர் விற்க போறார். அதை எதுக்கு நீ தடுத்த? என்று அதிர்ந்து போய்க் கேட்டான்.
“அதுக்கு, எதுக்கு நீ இவ்வளவு ஷாக் ஆகுற? காரணம் எல்லாம் சொல்ல முடியாது. நீ கிளம்பு…!” என்றான் அலட்சியமாக.
அவனைச் சந்தேகமாகப் பார்த்த மாறன் “என்னமோ தில்லாலங்கடி வேலை பார்க்குற போல இருக்கே…?” என்று இழுத்தான்.
“ஒரு வேலையும் இல்லை. நீ இனி அந்த விஷயத்தைப் பத்தி என்ன கேட்டாலும் என்கிட்ட இருந்து பதில் கிடைக்காது. இடத்தைக் காலி பண்ணு! எனக்கும் வேலையிருக்கு!” என்று மாறனை விரட்ட…
“சரி விடு…! கேட்கலை… ஆனா வேற ஒன்னு கேட்குறேன். அதுக்குப் பதில் சொல்லு!” என்றான்.
“என்ன கேட்க போற?” என்று அரசு அவனைச் சந்தேகமாகப் பார்த்தான்.
“அது வந்து தமிழரசா…” என்று மாறன் இழுத்தான்.
“டேய்… உன் இழுவையே சரியில்லையே. என்னமோ ஏடாகூடமா கேட்க போறனு மட்டும் புரியுது. ஒழுங்கா இழுக்காம சட்டுப்புட்டுன்னு விஷயத்துக்கு வா…!” என்று அரசு அதட்டினான்.
அவன் அதட்டலில் “அது வந்து தமிழரசா. அந்தப் புள்ள நங்கை விழும் போது கையைப் பிடிச்சு இழுத்து நிக்க வச்சயே, வழக்கமா பொண்ணுங்க இப்படி விழும்போது அவங்க இடுப்பை பிடிச்சு தானே நிப்பாட்டுவாங்க. கூடவே ‘தம்தன தம்தன’னு பேக்ரவுண்ட் மியூசிக் வேற ஓடும். இங்க அது ஒன்னையும் காணுமே? என்னடா தமிழரசா இப்படிப் பண்ணிட? ஒரு லைவ் லவ் ஸீன் பார்க்க முடியாம இப்படியா பண்ணுவ?” என்று கடகடவென்று ஒப்பிப்பது போலக் கேட்டவன், அரசுவை விட்டு சில அடி பின்னால் நகர்ந்து நின்றான்.
நங்கை என்று ஆரம்பிக்கவுமே மாறனை முறைத்து கண்களால் எரித்த அரசு, அவன் கேட்டு முடிக்கவும் கண்கள் சிவக்க, முகத்தில் கோபம் ஜொலிக்க “மவனே…! சொல்லிட்டு எதுக்குடா பயந்து ஓடுற? இங்க வா…! உன்னை உண்டு இல்லைனு ஆக்கிடுறேன். நானே அவளைத் தொட்ட கையைச் சோப் போட்டு கழுவணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இதுல மவனே இடுப்பை பிடிக்கலையானு கேட்குற? உன்னை…!” என்று அவனை அடிக்கப் போவது போலக் கையை ஓங்கினான்.
அவன் அடிக்கக் கை ஓங்கவும் இன்னும் தள்ளிப் போய் நின்ற மாறன், “என்னது…! சோப் போட்டுக் கை கழுவ போறியா? இரு…! ஒரு நாள் நங்கைகிட்ட நீ மாட்டத்தான் போற! அன்னைக்கு இருக்குடி உனக்குத் திருவிழா…” என்று சொல்லிவிட்டு நிற்காமல் “நான் இன்னைக்கு இரண்டு கிலோமீட்டர் சுத்தியே வீட்டுக்குப் போய்க்கிறேன்” என்றவன் வந்த வழியே திரும்பி நடந்தான்.
அவன் அப்படி நிற்காமல் ஓடுவதைப் பார்த்த பைந்தமிழரசன் முகத்தில் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது.
இந்தப் பக்கம் அரசுவிடம் மழுப்பி விட்டு, வாணியை இழுத்துக் கொண்டு பவளநங்கை செல்ல… கொஞ்ச தூரம் சென்ற பிறகு நங்கையை நடக்க விடாமல் தடுத்து நிறுத்திய வாணி, அவளின் எதிரே நின்று அவள் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்தாள்.
அவள் பார்வையில் சுதாரித்த நங்கை “என்னடி வாணி! என்னை இப்படி உத்து, உத்து பார்க்குற? நான் இன்னைக்கு அம்புட்டு அழகாவா இருக்கேன்?” என்று குலைந்து கொண்டே கேட்டு, தன்னைத் திருப்பி அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் காட்டி, அவளைத் திசை திருப்பப் பார்த்தாள்.
அவளைப் பார்த்து முறைத்த வாணி “சும்மா என் பேச்சை மாத்தலாம்னு பார்க்காத தங்கம்! நாங்களும் கொஞ்சம் உஷார் தான். சொல்லு…! என்னத்துக்கு இப்படி லூசு போல ஒரு காரியம் செய்த? உனக்கே நீ செய்தது சின்னபிள்ள தனமா தெரியல?” என்று கேட்டு தான் ஒன்றும் அறியாதவள் இல்லை என்று காட்டினாள்.
அவள் கேட்டும் மசியாத நங்கை “என்கூடச் சேர்ந்து சுத்தி உனக்கும் நல்லா மூளை வளர்ந்துருச்சுடி என் தங்கம்…!” என்று கை விரல்களைக் குவித்து வாணியின் நாடியில் வைத்து கொஞ்சினாள்.
நங்கையின் கையில் ஒரு அடி போட்ட வாணி “இந்தப் பசப்பு வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்! இப்ப சொல்லப் போறியா…? இல்லையா…?” என்று சிறிது கோபமாகக் கேட்டுவிட்டு, “இந்தம்மா பட்டாம்பூச்சினு ரீல் சுத்துவாளாம், அதையும் நாங்க லூசு போல நம்புவோமாம்” என்று நொடித்தாள்.
“அப்போ நீ நம்பலையா வாணி? அப்புறம் ஏன் என்னமோ அந்தப் பட்டாம்பூச்சியைப் பிடிச்சு என் கையில் கொடுக்கப் போறவ மாதிரி அப்படித் தேடிக்கிட்டு இருந்த?” என்று நங்கை தன் சந்தேகத்தைக் கேட்க…
“பின்ன…? அந்த அண்ணன் முன்னாடி உன்னை விட்டுக் கொடுத்து, நான் நீ சொன்னதை நம்பலைனா சொல்ல முடியும்”
“உன் நட்பை நினைச்சு என் கண் கலங்குது வாணி” என்று நங்கை லேசாக விசும்புவது போலச் செய்ய…
“போதும்டி…! ஓவரா நடிக்காதே…! அந்த அண்ணனுக்கு மட்டும் நீ நடிச்சனு தெரியணும். அப்ப இருக்கு உனக்கு…” என்றாள்.
வாணி அப்படிச் சொன்னதும் தன் நாக்கை நீட்டி துருத்தி காட்டிவிட்டு தோளை அலட்சியமாகக் குலுக்கிய நங்கை “அந்தக் குடமிளகாக்கு தெரியாதுன்னு நினைக்கிற நீ? அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சே தான் அப்படி முறைச்சுக்கிட்டு நின்னுச்சு” என்றாள் அவனைப் பற்றித் தெரிந்தது போல.
“என்னடி…? என்ன சொல்ற…? தெரிஞ்சே உன்னைச் சும்மா விட்டுட்டு போறாங்களா? அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று நங்கையைப் பார்த்துச் சந்தேகமாகக் கேட்டாள்.
“இதுக்கு எதுக்கு உனக்கு இம்புட்டுச் சந்தேகம்? சின்ன வயசுல ஒரே வீட்டுல ஒண்ணா பல வருஷம் பழகியிருக்கோம். இது கூடவா தெரியாது” என்று நங்கை சாதாரணமாகச் சொன்னாள்.
“ஓ…! அவ்வளவு தானா…? நான் கூட வேற என்னமோன்னு நினைச்சேனே?” என்று இன்னும் சந்தேகம் முழுதாக விலகாமல் வாணி நங்கையைப் பார்த்தாள்.
“சரிதான் போடி…! அந்தக் குடமிளகாக்கு என்ன தைரியம் இருந்தா? என் கையைத் தொட்டதுக்காக அது வேட்டில வேகமாக கையைத் துடைச்சிருக்கும்? நான் மொத வேலையா வீட்டுக்கு போய், அது தொட்ட இடத்தைச் சோப் போட்டு கழுவணும்னு நினைச்சுட்டு இருக்கேன். நீ என்னமோ வேற நினைச்சேன். வெண்டைக்காயை நினைச்சேன்னு சொல்லிட்டு இருக்குற. நீ தேவை இல்லாம கற்பனை பண்றதுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை. வெட்டியா இந்த நடுக் காட்டுல நின்னு பேசாம வா… வீட்டுக்குப் போய்ச் சேருவோம்” என்றப்படி நடக்க ஆரம்பித்தாள் பவளநங்கை.
அவள் சொன்னதை எல்லாம் இன்னும் முழுதாக நம்ப முடியாமல் அவளின் பின் சென்றாள் வாணி.
அன்றைய வேலைகள் முடிந்ததும் இரவு உணவையும் முடித்துக்கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அரசுவின் எதிரே மருதவாணன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அரசுவை எதிரே பார்த்ததும் அவனை முறைத்துக் கொண்டே அவர் கடந்து செல்ல… அதைக் கவனித்த அரசுவின் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை வந்து சென்றது.
அந்தப் புன்னகையுடனே அருகில் இருந்த பக்கத்து ஊருக்கு சென்றவன் அங்கே ஒரு வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டுப் போனை எடுத்து யாருக்கோ அழைத்துவிட்டு வைத்தான்.
அவன் வைத்து முடித்ததும் அந்த வீட்டிற்குள் இருந்து அரசுக்கு சமமான வயதில் இருந்த ஒரு இளைஞன் ஓடி வந்தான்.
“வாடா தமிழு…! வீட்டுக்குள்ள வா…! ஏன் இங்கயே நிக்கிற?” என்று அழைத்தபடி வந்தான்.
“இல்லடா கண்ணா. இப்ப நம்ம முத்து வருவான். வா…! அங்க நின்னு பேசுவோம்” என்று அங்கே இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்தான்.
“சரி வா…” என்று கண்ணனும் அவனுடன் அங்கே சென்று நிற்க… முத்துவும் சிறிது நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தான்.
அவன் வந்ததும் நண்பர்களின் நல விசாரிப்புகளுக்குப் பிறகு “என்ன முத்து நீ சொன்ன நீயூஸ் கன்பார்ம் தான?” என்று அரசு கேட்க…
“கன்பார்ம்டா தமிழு. நான் திரும்ப ஒருக்கா விசாரிச்சுட்டேன். விஷயம் உறுதியாகிருச்சு” என்ற முத்து, “அந்தப் பக்கம் என்ன ரியாக்ஷன்?” என்று கேட்டான்.
“என்ன ரியாக்ஷனா இருக்கும்னு தெரிஞ்சது தானேடா. அப்பனும், மவளும் முறைச்சுக்கிட்டு திரியுறாங்க. இப்ப கூட என் எதிரே வந்தவர் முறைச்சுட்டு போறார்” என்று லேசாகச் சிரித்தபடி அரசு சொன்னான்.
“பின்ன…? நீ செய்த காரியத்துக்கு அவர் உன்னைக் கொஞ்சவா செய்வார்? சரி நங்கை என்ன பண்ணினாங்க?” என்று கண்ணன் விசாரித்தான்.
“அவ என்ன செய்வா…? அவ ஒன்னும் செய்யலையே” என்று அரசு மழுப்பினான்.
“ஹேய்…! சும்மா மழுப்பாதடா…! நங்கை குணத்துக்கு இந்நேரம் எதுனாலும் செய்துருக்கணுமே? ஒழுங்கா சொல்லிரு…!” என்று முத்து மிரட்டலாகக் கேட்டான்.
அன்று நடந்ததை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட அரசு “அதை விடுங்கடா…! நீ விஷயத்திற்கு வா…! யார்க்கிட்ட விசாரிச்ச?” என்று முத்துவிடம் கேட்டுப் பேச்சை மாற்றினான்.
“ஆமா… உன் வாயில் இருந்து வார்த்தையை வாங்க முடியுமா என்ன?” என்று அலுத்த முத்து, அவன் கேட்ட விஷயத்தைச் சொல்ல ஆரம்பிக்கவும், பேச்சுத் திசை திரும்பி பேச வந்த விஷயத்தைப் பற்றி நண்பர்கள் அலசினார்கள்.
பேசி முடித்துக் கிளம்பும் போது “சரிடா தமிழு…! நம்ம மாறன் கிட்ட விஷயத்தைச் சொல்லலையா? அவன் உன் கூட வரலை?” என்று கேட்டான் கண்ணன்.
“இல்லடா… அவனுக்கு இப்ப தெரியவேணாம். நேரம் வரும் போது நானே அவன்கிட்ட சொல்லிடுறேன். நீங்க எதுவும் அதுக்குள்ள வாயை விட்டுறாதீங்க!” என்று நண்பர்கள் இருவரிடமும் எச்சரித்து விட்டு அவர்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பைந்தமிழரசன்.