கண்கள் தேடுது தஞ்சம் – 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“அப்பனும், மவனும் கொஞ்சமாவா ஆடுறானுங்க. இவன்களை என்னனு கேட்க ஆளே இல்லை. எப்ப பாரு என் சோலில தலையிடுறதே வேலையா வச்சிருக்கானுங்க. ஒரு நாளைக்கி என்கிட்ட வசமா மாட்டுவானுங்க. அன்னைக்கு இருக்கு அவன்களுக்கு” என்று வீட்டிற்குள் நுழையும் போதே கோபமாகத் திட்டிக் கொண்டே வந்தார் பவளநங்கையின் தந்தை மருதவாணன்.
காலை முடிந்து மதியம் ஆரம்பிக்கும் அந்த வேளையில் வெயிலில் வந்ததால் வேர்த்து ஊற்றின வேர்வையைத் தன் துண்டால் துடைத்த படி உள்ளே வந்து அங்கே இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவர் “ஏய் ஈஸ்வரி…! எங்க போன? கொஞ்சம் தண்ணி கொண்டு வா!” என்று சமையலறையைப் பார்த்துச் சத்தமாகக் கத்தினார்.
அவர் கத்தலில் தன் அறையில் படுத்தப்படி புத்தகம் படித்துக் கொண்டிருந்த நங்கை அலறி அடித்து எழுந்து அமர்ந்து ‘எதுக்கு அப்பா இன்னைக்கு இப்படிச் சத்தமா கத்துறார்?’ என எண்ணிய படி வெளியே நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவர் வீட்டிற்குள் திட்டிக் கொண்டு வந்தபோதே கையில் தயாராக எடுத்து வைத்திருந்த தண்ணீர் செம்பை வேகமாகக் கொண்டு வந்து நீட்டினார் ஈஸ்வரி.
தண்ணீரை வாங்கிக் குடித்த மருதவாணன் கொஞ்ச நேரம் வாய்க்குள்ளேயே ஏதோ திட்டிய படி இருந்தார். வார்த்தையில் காரம் அதிகமாகவே இருந்தது.
இன்னும் தான் சும்மா இருந்தால் அவர் திட்டல் அதிகச் சத்தமாக வெளியே வரும். மகள் வேறு அறையில் இருக்கின்றாள் என்பதால் “என்னங்க… என்ன பிரச்சனை?” எனத் தயங்கிய படியே கேட்டார்.
திட்டிக் கொண்டிருந்தவர் அதை நிறுத்தி விட்டு “என்ன…? என்ன பிரச்சனை? இந்நேரத்துக்கு உனக்கே எல்லாம் தெரிஞ்சு இருக்குமே. இன்னுமா தெரியல? நம்பமுடியலையே?” என்று ஈஸ்வரியை முறைத்த படி கேட்டார்.
“ஏங்க… நானே இன்னைக்கு நம்ம வயலுக்குக் கூடப் போகாம வீட்டுலயே இருக்கேன். வெளியே நடந்தது எனக்கு எப்படித் தெரியும்? நீங்கனாலும் நாலு இடம் போறீங்க” என்று அமைதியாக ஈஸ்வரி பதில் சொன்னார்.
“இதை என்னை நம்பச் சொல்றீயாக்கும். வெளிய சுத்துற ஆம்பளைங்களுக்குத் தெரியாத விஷயம் எல்லாம் வீட்டில் இருக்குற பொம்பளைகளுக்குத் தெரிஞ்சிடும்னு எனக்கும் தெரியும். அதுனால புருஷன் நம்ம என்ன சொன்னாலும் நம்பிருவான்னு நினைச்சுக்கிட்டு இருக்காதே!” என்று அதட்டினார்.
இவர் அதட்டலை கேட்டு உள்ளே இருந்த நங்கை ‘இந்த அப்பாவுக்கு வேலையே இல்லை. எப்பயும் யாரையும் அதட்டிக்கிட்டே இருக்கணும்’ என்று தனக்குள் சொன்னவள் மீண்டும் கவனிக்க ஆரம்பித்தாள்.
“இல்லைங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நிஜமாவே தெரியாது” என்று ஈஸ்வரி சொன்ன பிறகு, மருதவாணன் தான் கோபமாக இருக்கும் காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
“கிழக்கால இருக்குற நம்ம நிலம் தண்ணி இல்லாம காஞ்சு போய்க் கிடக்குல. அதை வித்துப்புடலாம்னு பார்த்தேன். அதுக்கு ஆளு எல்லாம் ஏற்பாடு பண்ணி பணம் கை மாறுற நேரத்துல அந்த ஆளு எடம் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான். சரி அவன் போனா போறான் வேற ஆளு பார்ப்போம்னு நினைச்சுட்டு நடந்து வந்துட்டு இருந்தேன். இந்த எடத்தை வாங்குறேன்னு சொன்ன பய, அந்த நாயகம் வீட்டில் இருந்து வெளியே வர்றான்.
நாயகமும், அவன் மவனும் தான் ஏதோ பேசி நம்ம எடத்தை வாங்க கூடாதுன்னு சொல்லியிருப்பானுங்க. அப்படி என்னத்தைச் சொல்லி தொலைச்சான்ங்கனு தெரியலை. அதுவும் அவன் பையன் தலை எடுத்ததில் இருந்து நாயகம் கண்ணு, மண்ணு தெரியாம தான் சுத்துறான்” என்று சொல்லிவிட்டு திரும்பவும் திட்ட ஆரம்பித்தார். வார்த்தைகள் சில பச்சை நிறமாக வர ஆரம்பித்தது.
அவர் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட ஈஸ்வரி அவர் திரும்பத் திட்ட ஆரம்பித்ததும் தன் முகச் சுளிப்பை அவரிடம் காட்டாமல் “ஏங்க போதும்…! நம்ம பவளம் உள்ள தான் இருக்கா…” என்று அவள் இருந்த அறை பக்கம் கை காட்ட தன் வாயை கப்பென்று மூடினார் மருதவாணன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
‘அய்யோ…! மகள் இருப்பதை மறந்தா வார்த்தையை விட்டேன்’ என்று தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவர், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் “சரி… சரி…! நான் வயலு வரை போய்ட்டு வர்றேன். நீ மதியச் சாப்பாட்டைப் பவளத்துக்கிட்ட குடுத்து விட்டுடு” என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
ஈஸ்வரி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு “மகளைக் கை காட்டினதும் வாயை மூடிட்டு போறதை பாரு. இவங்க பிரச்சனை எப்பத்தான் தீருமோ?” என்று முணங்கிக் கொண்டே தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.
அனைத்தையும் உள்ளே இருந்து கேட்ட நங்கை “அந்தக் குடமிளகாக்கு ஏதாவது வம்பு இழுக்குறதே வேலையா போய்ருச்சு. அவனை இன்னைக்கு என்ன செய்றேன் பாரு” என்று கருவி கொண்டே வயலுக்குக் கிளம்பத் தயாரானாள்.
அன்று மாலை தன் அக்காவை இரயிலில் ஏற்றி விட்டுவிட்டு தன் தந்தையின் வயலுக்கு வரும் வழியில் கனி கிளம்பும் போது சொன்னது பைந்தமிழரசனுக்கு ஞாபகத்தில் வந்தது.
“இங்க பாரு தமிழு… இன்னும் ஒரு ஆறு மாசம் தான் டைம். அதுக்குள்ள கல்யாணத்துக்கு ரெடி ஆகுற! அன்னைக்கு என்கிட்ட கத்திட்டு போனவன் இன்னைக்குத் தான் திரும்பக் கண்ணுல மாட்டுற. இந்த இரண்டு நாளா என்கிட்ட இருந்து தப்பிச்சு இப்ப என்ன சாதிச்சுட்ட? அம்மா அழுது கரையுறா. அம்மாவுக்காகவாவது சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு” என்று அறிவுரை சொன்னாள்.
எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டவன் “யோசிக்கிறேன்…” என்ற பதிலை மட்டும் சொல்லி முடிக்கவும், இரயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அவள் கிளம்பியதும் காரை வீட்டில் நிறுத்தி விட்டு தந்தையின் வயலுக்கு நடந்து வரும் வழியில் எல்லாம் அதையே யோசித்துக் கொண்டு வர, இன்றும் கண்மாய்க் கரை மீது தன் எதிரே வந்த நங்கையைப் பார்த்தான்.
இன்று அவளுக்குப் பின்னால் வேறு யாரும் வராமல் நங்கையும், வாணியும் மட்டுமே வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்தாலும் எப்போதும் போல் கண்டு கொள்ளாமல், விறைப்புடன் இருவரையும் கடந்து சென்றான்.
அவர்களைத் தாண்டி அந்தப் பக்கம் பாதித் தூரம் கடந்திருக்க, திடீரென அவன் மேல் பின்னால் இருந்து எதுவோ வந்து மோத, இன்னும் யோசனையிலேயே இருந்தவன் ஒரு நொடி திடீர் தாக்குதலில் தடுமாறி கரையில் இருந்து தண்ணீர் இருந்த பக்கம் கீழே சரிய போனான். ஆனால் நொடியில் சுதாரித்துத் தன் கால்களை வலுவாக ஊன்றி நின்று விட்டான்.
ஆனால் அவன் அப்படிச் சுதாரித்து நிற்பான் என்று எதிர்ப்பார்க்காத நங்கை, அவன் மீது மோதி அப்படியே பின்னால் சாய்ந்து கரையின் அந்தப் பக்கம் முட் செடிகள் இருந்த பக்கம் விழப் போனாள். அதற்குள் ‘தன்னை மோதியது எது?’ என்று பார்க்க திரும்பியவன் கண்ணில் அவள் விழப்போவது தெரிய, வேகமாக அவளின் நீட்டி இருந்த கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவன் அப்படி நிறுத்திய போது இருவருக்கும் இடையே சிறிது இடைவெளி மட்டுமே இருக்க… பயத்தில் நெஞ்சு படபடக்க, மூச்சு வாங்கிய படி நின்று கொண்டு இருந்தாள் பவளநங்கை.
நங்கையின் அருகே மிக நெருக்கமாகத் தான் நிற்பதை உணர்ந்து, அவளின் கையைப் பட்டென விட்டுவிட்டு ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றவன், அவளைத் தொட்ட கையைத் தன் வேட்டியில் துடைத்துக் கொண்டே அவளை மேலிருந்து கீழாக நிதானமாக ஒரு பார்வை பார்த்தான்.
பவளநங்கை தன் தாவணி நுனியை இழுத்து இடையில் சொருகி இருக்க, அவளின் பாவாடையும் கணுக்கால் தெரியும் அளவு ஏற்றி சொருகியிருந்தது.
அவளை ஒரு நோட்டம் விட்டுவிட்டு நிமிர்ந்து அவளின் கண்களைக் கூர்ந்துப் பார்த்தான்.
மூச்சு வாங்கிக்கொண்டிருந்த நங்கை, அவன் பார்வை சென்ற திசைப் பார்த்து, வேகமாகத் தாவணியையும், பாவாடையையும் சரி செய்தவள், தானும் அவன் கண்களைச் சந்தித்தாள்.
அவள் கண்களைச் சந்தித்தவன் வாய் திறந்து எதுவும் கேட்காமல் ‘என்ன?’ என்பது போலக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க…
நங்கை திடீரென உடையை இழுத்து சொருகிக் கொண்டு ஓட ஆரம்பிக்கவும், என்னவென்று ஒன்றும் புரியாமல் முழித்த வாணி, நடந்ததை எல்லாம் பார்த்து ‘என்ன இது? எதுக்கு ஓடுறா? எதுக்கு அந்த அண்ணன் மேல அப்படி மோதுறா? என்று நினைத்தபடி அப்படியே புரியாமல் நின்றிருந்தவள், நங்கை முட் செடிகள் பக்கம் விழப்போகவும் பதறிய படி அவளைப் பிடிக்க ஓடி வர, அவள் வரும்முன் அரசு அவளைப் பிடித்து நிறுத்தவும், நிம்மதி மூச்சு விட்டபடி தோழியின் முதுகில் பட்டென ஒரு அடி போட்டாள்.
அரசு கண்களால் கேட்ட கேள்விக்குப் பதிலாக அவனை முறைத்துக் கொண்டு இருந்த நங்கையின் முதுகில் அடி விழவும், ‘ஸ்ஸ்…’ என்ற படியே தன் முதுகை தேய்த்து விட்டுக் கொண்டு தன் பின்னால் திரும்பிப் பார்த்து வாணியை முறைத்தாள்.
“என்னடி…? என்ன முறைப்பு…? இப்ப எதுக்கு இப்படித் தலைதெரிக்க ஓடி வந்த? பின்னாடி பாரு… இந்த முள்ளு செடில விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? மாடே…! உன்னை எல்லாம்…!” என்று வாணி இன்னொரு அடி போட போக, அவள் கையைப் பிடித்த நங்கை “எருமை…! அடிக்காதடி வலிக்குது!” என்றாள்.
தன் கையை அவள் கையில் இருந்து விடுவித்துக் கொண்ட வாணி “இப்ப எதுக்கு ஓடி வந்த? அதை முதல சொல்லு!” என்றாள்.
வாணி கேட்டதும் நங்கை தன் ஓரப் பார்வையால் அரசுவைப் பார்த்தாள். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு இருவரும் சண்டை இடுவதை முறைத்த படி ‘நானும் பதில் தெரியாமல் இங்கிருந்து போகப் போவது இல்லை’ என்பது போல நின்றிருந்தான்.
‘நில்லு எனக்கென்ன?’ என்பது போல மனதிற்குள் தன் தோளை குலுக்கிக் கொண்ட நங்கை. “அதுவா…? அது… அது…!” என்று இழுத்தாள்.
“எதுக்கு நீ இப்ப இந்த இழு இழுக்குற…? என்ன விஷயம்?” என்று விடாமல் வாணி கேட்க…
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
‘இவ ஒருத்தி… விடாம கேள்விக் கேட்குறாளே? இப்ப என்ன சொல்வது?’ எனத் தெரியாமல் தன் பார்வையைத் தன்னைச் சுற்றி லேசாகச் சுழல விட்டவள், “அது….” என்று மீண்டும் இழுத்தாள்.
அதுவரை அமைதியாக இருந்த அரசு “ஏம்மா வாணி…! உன் பிரண்டுக்கு மூளை குழம்பி போய் இருக்குனு நினைக்கிறேன். பார்த்துப் பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டு போமா!” என்றான் நக்கல் சிரிப்புடன்.
அவன் அப்படிச் சொல்லவும் வாணி ‘இதற்கு என்ன சொல்வது?’ எனத் தெரியாமல் பேய் முழி முழித்து, அரசுவை பார்த்து லேசாகச் சிரித்து வைக்க…
“ஹேய்…! யாரை பார்த்து மூளை குழம்பினவனு சொன்ன? ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லைனா நடக்கிறதே வேற!” என்று அவனிடம் நேராகப் பேசாமல் வாணியிடம் சொல்வது போலச் சொல்லி மிரட்டினாள்.
அவளின் மிரட்டலை கண்டு கொள்ளாமல் தன் சட்டையில் இல்லாத தூசியைத் தட்டுவது போல அரசு செய்ய… அவனை நன்றாக முறைத்துப் பார்த்தாள் நங்கை.
‘இந்த முறைப்பை எல்லாம் வேற எங்கயாவது வை!’ என்ற பார்வையுடன் அவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவர்களை விட்டால் இன்று முழுவதும் முறைச்சுட்டு இருப்பாங்க போலயே?’ என்று அவர்களைப் பார்த்து நினைத்த வாணி, அவர்களின் பார்வையைக் கலைக்க “அடியே…! சும்மா நிக்காம என்னனு சொல்லி தொலைடி!” என்று சத்தம் போட்டாள்.
தன் பார்வையைத் திருப்பி ‘இவ ஒருத்தி…!’ என்று அலுத்துக் கொண்டு இப்பொழுது வாணியை முறைத்த படி “அதோ… அங்க போகுது பாரு ஒரு பட்டாம்பூச்சி. அதைப் பிடிக்க ஆசையா இருந்துச்சு. சரி ரொம்ப நாள் ஆச்சே பட்டாம்பூச்சியை நம்ம பிடிச்சு விளையாடி, இன்னைக்கு எப்படியும் பிடிச்சுருவோம்னு ஓடி வந்தேன். ஆனா இங்க ஒரே டிராபிக்கா இருந்ததை மறந்துட்டேன்” என்று தான் ஓடி வந்ததுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்துத் தனக்குப் பக்கவாட்டில் நின்றிருந்தவனின் வாட்ட, சாட்டமான உருவத்தை ஏற இறங்கி பார்த்துச் சொல்லி அவனுக்கும் குறையாத நக்கலுடன் சிரித்தாள்.
அவள் அப்படிச் சொன்னதும் வாணி ‘அப்படியா…?’ என்பது போல எங்கே அந்தப் பட்டாம்பூச்சி என்பது போல நங்கை காட்டிய திசையில் பார்த்தாள். அங்கே தூரத்தில் ஏதோ பூச்சி பறப்பது போல் தெரிந்தது. ‘அது என்ன பட்டாம்பூச்சி தானா…?’ என்பது போல் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்க….
அரசு அவள் சொன்னது உண்மையா என்பதை அறிந்து கொள்ளத் திரும்பி என்ன? கண்ணைக் கூடச் சிறிதும் சிமிட்டவில்லை. அவன் கண்கள் முழுவதும் நங்கையின் கண்ணின் மீது தான் இருந்தது.
அவள் சொல்லிவிட்டு ‘இதற்கு என்ன சொல்கிறாய்?’ என்பது போல அரசுவை ஒரு பார்வை பார்க்க…
தன் உதட்டை கோணலாகச் சுளித்தவன் கண்கள், ‘நீ சொன்னதை நான் நம்பவில்லை’ என்று அவளுக்கு அறிவித்தது.
அதைத் தன் கண்களால் படித்து, ‘நம்பலைனா போ!’ என்று தன் முகத்தைத் திருப்பியவள், இன்னும் பட்டாம்பூச்சியைத் தேடிக்கொண்டிருந்த வாணியின் கையைப் பிடித்து இழுத்து “அடியே…! இன்னைக்கு அந்தப் பட்டாம்பூச்சி தப்பிச்சிருச்சுடி. இன்னொரு நாள் அது என் கையில் மாட்டாமயா போகும்? அன்னைக்குப் பார்த்துக்கிறேன் அதை. இப்ப வா போகலாம்” என்று சொல்லிவிட்டு, வாணியையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினாள்.
நங்கை போவதையே சில நொடிகள் பார்த்த பைந்தமிழரசன் தன் தோளை அலட்சியமாகக் குலுக்கி விட்டுக் கொண்டு தன் வழியில் நடந்தான்.