கண்கள் தேடுது தஞ்சம் – 29
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 29
உன் ஓர விழி பார்வையால்
என்னை வீழ்த்த வந்த உனக்கு!!
இன்னுமா உரைக்க வில்லை உண்மை?
அந்த ஓரப்பார்வை கருவிழியில்
நான் வீழ்ந்து வெகுநாட்கள் ஆகுதடி!!
உன் கருவிழிகளைக் கண்ணாடியில் பார்!!
அந்த விழியசைவில் நான் ஆடும் நர்த்தனம் உரைக்கும்!!
காதில் தேனாய் விழுந்த வார்த்தையில் கண்ணீர் துளிகள் கரைகட்டின பவளநங்கைக்கு.
அவன் இவ்வாறு சொல்வான் என்று எதிர்பார்க்காததால் தன் காதால் கேட்ட சொல் மெய்யா என்பது போல விழி விரித்துக் கண்ணில் நீர் நிறைய அப்படியே நின்றிருந்தாள்.
அரசுவின் கண்களையே பார்த்தப் படி இருந்தவளின் கண்களில் கண்ணீரை காணவும், அவளின் முகத்தைத் தாங்கியிருந்தவன் அவளை நோக்கி மெல்ல குனிந்து அவளின் இரண்டு விழிகளின் மீதும் மாறி, மாறி தன் இதழ்களை அழுத்தி வைத்தான்.
அவன் அப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்காத நங்கை “மாமா… என்ன பண்ற?” என்று மெல்லிய குரலில் கேட்டப் படி அவனைத் தள்ளி நிறுத்தி, தானும் அவனிடம் இருந்து விலகி நின்றவளின் முகம் கூச்சத்தில் இருக்க, அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தரையில் பார்வையை வைத்தப்படி இருந்தாள். அவளுக்கு இன்னும் அவனின் மீசை ரோமம் கண் இமையை உறுத்திக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவளின் உடலிலும் மெல்லிய நடுக்கம் ஓட, அதனைக் கவனித்தவன் அவளைச் சாதாரணமாக மாற்றும் பொருட்டு,
அவளின் மாமா என்ற சொல்லில் குளிர்ந்து போயிருந்தவன் “ஹப்பா…! இந்த மாமாவை சொல்ல வைக்க முத்தம் கொடுக்கணும் போல?” என்று சிரிப்புடன் கேட்டவன், “இனி இந்தக் கண்ணுல தண்ணி வந்தா என் நங்காவுக்கு முத்தம் வேணும்னு அர்த்தம். இனி அழுகாதேனு எல்லாம் சொல்ல மாட்டேன். நேரா இந்த வைத்தியம் தான். பாரு இப்ப கண்ணீர் தன்னால நின்னுருச்சு” என்று திகைப்பில் நின்றுபோன நங்கையின் கண்களைக் காட்டி சொன்னான்.
அவன் சொன்னதை “ஆ..!” என்று அதிர்ச்சியாகப் பார்த்த நங்கைக்குத் தன் மாமாவா இப்படியெல்லாம் செய்கிறான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. என்னமோ மாயாஜாலம் போல வந்தான் பேசினான். நீ தான் மனைவி என்றான். முத்தம் கொடுக்கின்றான். தான் கனவு எதுவும் காணவில்லையே என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
தன்னைப் பார்த்து திகைத்த படி நர்த்தனம் ஆடும் அவளின் விழிகளைக் கண்டு நங்கையின் மனம் அழைப்புருவது போலத் தோன்ற “எல்லாம் உண்மை தான்டா! வேணும்னா கனவு இல்லைனு நிரூபிக்கட்டுமா?” என்று கேட்டப் படி மீண்டும் அருகில் செல்ல…
அவனின் அதிரடியில் சட்டெனப் பின் வாங்கியவள் “வேண்டாம்… வேண்டாம்…! நம்புறேன். ஆனா நீ இப்ப மனைவினு சொன்னதுக்கும், கதிர்வேல் கிட்ட அப்படிச் சொன்னதுக்கும் தான் இடிக்குது. அவன் வந்து என்கிட்ட எப்படி உரிமையா பேசினான் தெரியுமா? எல்லாம் உன்னாலே, நீ கொடுத்த தைரியத்தில் தானே? ஏன் மாமா அப்படி அவன்கிட்ட சொன்ன?” என்று தன் மனதை வேதனை படுத்திய நிகழ்வை, இப்போது வரை மனதை குடையும் கேள்வியைக் கேட்ட நங்கை “இதுக்கும் கல்யாணத்துக்குப் பின்னாடி தான் விளக்கம் சொல்லுவேன்னு சொல்லிறாத. இதுக்கு நீ பதில் சொல்லலைனா எனக்குக் கல்யாணமே வேண்டாம்” என்று கறாராகச் சொன்னாள்.
அவளின் கறாரில் மெல்லிய சிரிப்பு ஒன்றை வெளியிட்டவன், “ஆஹா…! அதெல்லாம் முடியாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி உன்னை என்கிட்ட கொண்டு வரணும். அதுக்காகவே கதிர்வேல் பத்தி சொல்றேன்” என்று சொல்லி மீண்டும் அவளுக்குச் சிறு திகைப்பை வழங்கி விட்டு கதிர்வேல் விஷயத்திற்கு வந்தான். “கதிர்வேலை நிமிஷத்தில் விரட்ட என்னால முடியாதா நங்கா? ஆனா அப்படி விரட்டாம ஏன் அவன்கிட்ட அப்படிச் சொன்னேன் தெரியுமா?” என்று கேட்டான்.
“அதான் ஏன் அடிச்சு விரட்டலை?” என்று நங்கை கடுப்புடன் கேட்டாள்.
“அது தப்பு நங்கா!” என்றான் நிதானமாக..
“என்ன தப்பு?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இப்ப நான் போய் அவனை நங்கை பின்னாடி சுத்துவியான்னு கேட்டு அடிச்சு விரட்டிருந்தேன்னு வை. அது வேற மாதிரியான பிரச்சனையில் முடிஞ்சிருக்கும். ஒரு விஷயத்தில் ஒரு பொண்ணு சம்பந்தப்படுறான்னு வச்சுக்கோ, பையன் பக்கம் தப்பே இருந்திருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படப் போவது பொண்ணு தான். அவன் ஈஸியா தூசி போலப் பிரச்சனையை உதறிட்டுப் போய்ருவான். நான் அவனை அடிச்சு அதுக்குக் காரணமா உன் பேர் அடி பட்டுச்சுனா ஊரெல்லாம் விஷயம் தெரிஞ்சு உன் மனநிலை தான் பாதிக்கப்படும். நல்லதோ, கெட்டதோ முடிஞ்ச வரை வன்முறையைக் கையில் எடுக்காமல் பிரச்சனையைத் தீர்க்க பார்க்கணும். அதைத் தான் செய்தேன். அன்னைக்குத் திருச்சி மலைக் கோவிலில் அவன் பேசும் போதே அவன் குரலில் உண்மையான காதல் இல்லைனு புரிஞ்சது. அப்ப நீ வேற என்னைப் பார்த்து முறைச்சியா அதான் நான் வேணும்னே அப்படி நக்கலா சிரிச்சுட்டு போனேன். நான் அப்படிச் சிரிச்சுட்டு போனதால தான் நான் அவனைப் பார்த்துப் பேசும் போது என்னை நம்பினான்.
அதோட அவனோட அப்பாவை விவசாயக் கூட்டத்தில் பார்த்துப் பேசினேன். நான் கட்டிக்கப் போற பொண்ணு பின்னாடி உங்க பையன் சுத்துறான். அவனை என் வழியில் இருந்து விலக்க என்னால முடியும். ஆனா நீங்க பெரிய மனுஷன்… நியாயஸ்தர். அடுத்தவனுக்கு மனைவியாகப் போற பொண்ணைத் தொந்தரவு செய்ய மாட்டிங்கனு நினைக்கிறேன்னு சொல்லி அவருக்குக் கொஞ்சம் ஐஸ் வச்சேன்.
அவர் கொஞ்சம் புகழுக்கு மயங்குற ஆள். நான் அவரைப் பத்தி நியாயஸ்தர் அது, இதுனு சொல்லவும், அவருக்குப் பெருமை தாங்கலை. அதோட அவர் கொஞ்சம் வசதியை பார்க்குற ஆள் வேறயா என் பையன் சொன்னான் தம்பி நானும் அந்தப் பொண்ணு குடும்பத்தை விசாரிச்சேன். எங்க குடும்பத்துக்குச் சமமா அவங்க வர மாட்டாங்கன்னு என் பையன்கிட்ட அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க உங்களைக் கட்டிக்கப் போற பொண்ணுன்னு எனக்கு இப்பதான் தெரியும். நீங்க தாராளமா அந்தப் பொண்ணைக் கட்டிக்கங்க தம்பி. நான் என் பையனுக்குப் பெரிய எடத்துச் சம்பந்தம் பார்த்திருக்கேன்னு சொன்னார்”
அவன் அவரைப் பத்தி சொல்லும் போதே நங்கை முறைத்து “எங்க குடும்பம் என்ன அவ்வளவு மட்டமா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“எனக்கும் அவர் அப்படிச் சொல்லும் போது கோபம் வந்துச்சுமா. ஆனா அவர் அப்படிபட்ட குணமா இருந்ததால தான் மகனுக்குச் சப்போர்ட் பண்ணாம எனக்குச் சப்போர்ட் பண்ணினார். அது நமக்கு நல்லது தானே? அதான் அந்த இடத்தில் பொறுமையா இருந்தேன்” என்றான்.
“உங்களுக்கு அப்படி என்ன சப்போர்ட் பண்ணினார்?”
“அவர் வீட்டுக்கு போய் என் பையனை அந்தப் பொண்ணு பின்னாடி சுத்தாதேன்னு சொல்லி வைக்கிறேன்னு சொன்னார். ஆனா அப்படிச் சொன்னா உங்க பையன் இன்னும் பிடிவாதமா அந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னா என்ன பண்ணுவிங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் இரண்டு வப்பு(அடி) வச்சா தன்னால வழிக்கு வர போறான்னு சொன்னார்”
“வைக்க விட்டுருக்கலாம்ல” என்று நங்கை அவசரமாகக் கேட்க…
“ஹா…ஹா…! அவன் அடி வாங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா? அப்படி நடந்திருந்தா நேரா உன்கிட்ட வந்து வா நாம ஓடி போய்க் கல்யாணம் பண்ணிக்கிலாம்னு உளறிருப்பான்” என்று சொல்ல…
“ச்சி…!” என்று நங்கை முகத்தைச் சுளித்தாள்.
அவள் முகம் போன போக்கை பார்த்துச் சத்தமாகச் சிரித்தவன் “அவன் அப்படிக் கேட்டுற கூடாதுன்னு தான் நீங்க உங்க பையன்கிட்ட சம்மதம்னு மட்டும் சொல்லுங்க. அப்புறம் உங்க பையனே ஒரு நாள் எனக்கு அந்தப் பொண்ணு வேணாம். வேற பொண்ணு பாருங்கன்னு சொல்லுவான்னு சொன்னேன். அது எப்படி அவன் சொல்லுவான்னு மொத தயங்கினார். அப்புறம் அவரைச் சம்மதிக்க வச்சு சொல்ல வச்சேன். அதோட கதிர்வேல் பேசினப்பயே தெரிஞ்சுது. அவன் உண்மையா காதலிக்கலை. ஏதோ நண்பன் கிட்ட சவால் விட்டு அப்படிச் சுத்தினான்னு. அப்பயே அவனைத் தூக்கி மிதிக்கத் தான் தோனுச்சு. ஆனா அப்படி நடந்தா ஊர் பூரா விஷயம் பரவும். உன் பேரு வேற அதில் அடி படுமேனு பல்லை கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கிட்டேன். அன்னைக்குக் கோவில்ல வந்து அவன் உன்கிட்ட என்னவெல்லாம் பேசினான்னு எனக்கும் தெரியும்” என்றான்.
“என்ன? அப்ப நீங்களும் அங்க தான் இருந்தீங்களா?” என்று நங்கை கோபமாகக் கேட்டாள்.
“இல்லடா! என்னைக் கதிர்வேல் பார்த்தா பிரச்சனையாச்சே? அதோட அவன் அப்படிப் பேசுறதை என் காதால கேட்க முடியாம அந்த இடத்திலேயே அவனை அடிச்சிருப்பேன். அதனால என் பிரண்ட் கண்ணனை அனுப்பினேன். கதிர்வேல் வேற எதுவும் பிரச்சனை பண்ணிருந்தா கண்ணன் உடனே உனக்கு உதவிக்கு வந்திருப்பான்.
நானும் அவன் ஒருவேளை என்னைக் கூப்பிட்டா வர்ற தூரத்தில் தான் தயாரா இருந்தேன். கண்ணன் கதிர்வேலை வாச் பண்ணிட்டு இருந்துட்டு நீ எப்படி எல்லாம் பேசி அவனை விரட்டி விட்டேன்னு அவன் வந்து சொன்னான். நீயே அவனை விரட்டணும்னு நினைச்சேன். அதே தான் நடந்துச்சு. ஆனா நீ சாவு, கீவுன்னு அவன் கிட்ட பேசினது தான் எனக்குச் செம்ம கோபம்” என்றான் இப்போதும் கோபத்துடன்.
“பின்ன…? அவன் அப்படிப் பேசின கோபத்தோட நீ தான் அவனுக்குச் சப்போர்ட்னு தெரிஞ்சதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்த மாதிரி ஆகிருச்சு. நீ எப்படி அப்படிப் பேசலாம்னு உன் மேல இருந்த கோபத்தில் தான் அப்படிப் பேசினேன்”
“இனி அப்படிப் பேசி பாரு வாயிலேயே இரண்டு போடுறேன்” என்றான் கடுப்புடன்.
அவள் அதைச் சட்டை செய்யாமல் “ஆமா அது ஏன் நான் அவனை விரட்டணும்னு நினைச்ச?” என்று கேட்டாள்.
“ஒரு பொண்ணுக்கு ஒரு பிரச்சனைனா எப்பவும் யாராவது வந்து காப்பாத்துவாங்கன்னு நினைக்கக் கூடாதுடா. அன்னைக்கு மலைக் கோவில்லயே அவனைத் திரும்ப உன் பின்னாடி சுத்த நினைக்காத மாதிரி நீ செய்திருக்கணும். ஆனா நீ விலகி ஓட தான் பார்த்த!
நாம ஓட ஆரம்பிச்சா விரட்டுற கூட்டம் தான் நாட்டில் அதிகம். ஆனா நின்னு நீ திருப்பிக் கொடுத்து பாரு. நம்மைக் கண்டு அவங்க ஓடுவாங்க. அதைத் தான் நீ செய்யணும்னு நினைச்சேன். அது மாதிரியே கதிர் ஓடி போனான் தானே? நான் நினைச்சதை என் நங்கா கச்சிதமா செய்து காட்டிட்டா” என்று பெருமையாகச் சொன்னான்.
“ஹ்க்கும்…! பெருமைதான் போ! எனக்கு எவ்வளவு வலிச்சுது தெரியுமா? இந்தக் காரணத்தை நான் அன்னைக்கு உன்கிட்ட கோபமா கேட்டப்பயே சொல்ல வேண்டியது தானே? அன்னைக்குக் கோபத்தோட நிக்கிறேன். என்னைப் பார்த்து அப்படிச் சிரிக்கிற?” என்று கேட்டாள்.
“ஓ…! அப்ப சொல்லிருந்தா அம்மணி அப்படியே பொறுமையா இப்ப கேட்டது போலக் கேட்டுருப்பிங்களாக்கும்” என்று கிண்டலாகக் கேட்டான்.
அவன் கேலியில் மூக்கு விடைக்க “ஏன் கேட்டுருப்பேனே” என்று முகத்தைச் சிலுப்பினாள்.
“இல்ல நங்கா! கண்டிப்பா கேட்டிருக்க மாட்ட. ஏன்னா உனக்கு அன்னைக்கு அத்தனை கோபமும், ஆத்திரமும் இருந்தது. உன்னை எப்பவும் நான் அவ்வளவு கோபமா பார்த்தது இல்லையா? அதான் என் நங்காவுக்கு இவ்வளவு கோபப்படத் தெரியுமானு ஆச்சரியமா பார்த்தேன்.
அப்புறம் என் மனசு பத்தி உனக்குத் தெரியாத நிலையில் நான் சொல்லும் விளக்கம் எல்லாம் உனக்கு நான் சப்பைகட்டுக் கட்டுறதா தான் தோணும். அதோட அன்னைக்குத் தான் உன் மனதில் இருக்கும் எண்ணத்தை எல்லாம் என்கிட்ட கோபமா வெளிப்படுத்தின.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
உன் மனசுல இருக்குறதை எல்லாம் கொட்டினதால தான் உன் மனதை நான் இன்னும் நல்லா உணர்ந்தேன்” என்று அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு “அப்படி என்ன உணர்ந்த?” என்று நங்கை கேட்க… “அதுக்குப் பதில் கல்யாணத்துக்கு அப்புறம் தான் சொல்லுவேன்” என்று தட்டி கழித்தான். அதற்கு அவள் முறைக்க, உன் முறைப்பு என்னை ஒன்னும் செய்யாது என்பது போலப் பார்த்து விட்டு மேலும் பேச்சை தொடர்ந்தான்.
“அன்னைக்கு நீ அழுக, அழுக எனக்கு என்னைக் கட்டுப்படுத்தவே முடியலை. உடனே உன்னை அணைச்சு பிடிச்சு ஆறுதல் சொல்லணும் போல இருந்துச்சு” என்று சொல்ல “ஆஹ்…! பிடிப்ப… பிடிப்ப…! அப்படியே இரண்டு விட்டுருப்பேன்” என்று அடிப்பது போலக் கையைக் காட்டினாள் நங்கை.
“ஹா….ஹா…! அதுக்குத் தானே அன்னைக்கு அய்யா எஸ்கேப் ஆனேன்” என்று சொல்லி சட்டையின் கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டான்.
அவன் சொன்னதில் கடுப்படைந்தவள் பட்டென அவன் கையில் ஒரு அடி போட்டாள்.
“அடிப்பாவி…! இப்படியா அடிப்ப?” என்று கையைத் தேய்த்து விட்டு கேட்க… “என்னை அழுக வச்சுட்டு அய்யா காமெடி பண்றீகளோ?” என்று கோபத்துடன் கேட்டவள் கையைப் பிடித்தவன் தன்னை அடித்ததால் அவள் கை வலித்திருக்குமோ என்று நினைத்து அவள் அடித்த கையைத் தடவிக் கொடுத்தான்.
அவன் செயலில் உள்ளே உருகினாலும் வெளியே விடைத்துக் கொண்டு நின்றாள்.
“அடுத்து வந்த கொஞ்ச நாளைக்கு எனக்கு வயலுக்கு உன்னைப் பார்க்க வர முடியாத அளவுக்கு வேலை இருந்துச்சு நங்கா! ஒரு முக்கியமான வேலையில் இருந்தேன். அந்த வேலை என்னனு வெளியே வச்சு பேசும் போது சொல்றேன். அதுக்கு அடுத்த நாட்கள் நீ என்னைப் பார்க்கணும்னு ஓடி வந்து ஏமாறக் கூடாதுனு நினைச்சேன்.
என் மேல கோபம் இருந்தா அதைக் காரணமா வச்சு நீ என்னைப் பார்க்க வர மாட்ட. அந்த நாள்ல என் வேலையையும் முடிச்சுட்டு அப்புறம் உனக்கு எல்லாத்தையும் பொறுமையா சொல்லுவோம்னு நினைச்சேன். அதான் அன்னைக்கு உனக்கு என் மேல கோபம் இருக்கட்டும்னு உன் கேள்விக்குப் பதில் சொல்லலை. அப்படியும் ஒருவேளை என் மேல கோபம் குறைஞ்சு என்னைத் தேடிவந்தா என்ன பண்றதுன்னு ஒன்ரெண்டு நாள் மட்டும் வேலையை ஒதுக்கிட்டு வந்தேன்.
ஆனா நீ சொன்ன மாதிரி வரலைங்கவும் சரி நம்ம வேலையை முதலில் முடிப்போம்னு அமைதியா இருந்தேன். ஆனாலும் அன்னைக்குப் போகும் போது என்னை இனி பார்க்க வரமாட்டேன்னு நீ சொல்லிட்டுப் போனது. எனக்கு எப்படி வலிச்சதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று சொல்லி தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.
அப்போது நங்கை அவன் முகத்தைப் பார்க்க, இப்போதும் அந்த வலியை உணர்ந்து போல அரசுவின் முகம் வலியை காட்டியது.
தான் அவனைப் பார்க்காமல் தவித்தது போல அவனும் தவித்திருப்பான் போலவே என்று நினைத்த நங்கைக்கு இப்போது அவன் மீது இருந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடியிருந்தது.
“என்ன இருந்தாலும் நீ அவனை என்னைப் பொண்ணு பார்க்க போகச் சொன்னது தப்பு தான். நீ அதை மட்டும் சொல்லாம இருந்துருக்கலாம். நீ ஏன் அப்படிச் சொன்ன?” என்று கதிர் விஷயத்தில் கோபம் குறைந்திருந்தாலும் வேண்டுமென்றே அவனின் இப்போதைய வலி முகத்தை மாற்ற பேச்சை திசை திருப்பினாள் நங்கை.
அவனும் அவள் முயற்சிக்கு உதவி செய்வது போல அதில் இருந்து வெளியில் வந்தவன் “ஏன் நங்கா இப்ப நீ படிப்பை முடிச்சு மாத கணக்கில் ஆச்சு தானே? இத்தனை மாதத்தில் உன்னை யாரும் இப்ப வரை பொண்ணு கேட்காம இருந்திருப்பாங்கனு நீ நினைக்கிறியா?” என்று கேட்டான்.
“ப்ச்ச்…! நான் என்ன கேட்டா? நீ என்ன என்னைக் கேட்குற?” என்று அலுத்தாள்.
“பதில் சொல்லு நங்கா! இதில் தான் உனக்கான பதிலும் இருக்கு!” என்றான்.
“இதுவரை அப்படி யாரும் கேட்கலையே! கேட்டா எனக்குத் தெரியாம எப்படி இருக்கும்?” என்று சொன்னாள்.
“உனக்குத் தெரியலைன்னு வேணா சொல்லு! ஆனா யாரும் கேட்கலைன்னு சொல்லாதே!” என்றான்.
“என்ன மாமா சொல்ற? நிஜமாவா? யாரு வந்தா? அந்தக் கதிர்வேலா? என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.
“ஏன் நங்கா இவ்வளவு அதிர்ச்சி? யாரு எத்தனை பேர் வந்தாங்கனு கூட உனக்குத் தெரியாம பார்த்துக்கிட்ட என் மாமன் கில்லாடி தான்” என்று சொல்ல…
“ஆ…! என்ன சொல்ற? அப்பாவா?” என்று கண்களை விரித்துத் தன் திகைப்பை காட்டினாள்.
“இதுக்கே இப்படித் திகைச்சா எப்படி நங்கா? இன்னும் நிறைய இருக்கு. அதை வெளியே போய் அவங்க முன்னாடியே கேட்டுருவோம். ஆனா அதுக்கு முன்ன கல்யாணத்துக்குச் சரி சொல்லிறலாம் தானே?” என்று கேட்ட அரசுக்கு பதிலாக.. “ம்ம்…!” என்று முனங்கினாள் நங்கை.
“ஏய்…! என் நங்காவுக்கு வெட்கமா என்ன? எங்கே அந்த முகத்தை இங்கே காட்டுப் பார்க்கலாம்” என்று அரசு அருகில் வர, அவனை விளக்கி விட்டு கதவின் பக்கம் ஓடினாள் நங்கை.
சிரித்தப்படி அவளைப் பின் தொடர்ந்தான் தமிழரசன்.