கண்கள் தேடுது தஞ்சம் – 26
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 26
கனிமொழி சொன்ன விஷயத்தை மேலும் என்ன ஏது என்று விசாரித்து இன்னும் சில விஷயங்கள் அறிந்திருந்தான். அறிந்த விஷயங்கள் பைந்தமிழரசனை அதிக வியப்பை அடைய வைத்திருந்தது. இனி தான் நினைத்ததைச் செயல் படுத்த வேண்டியது தான் என்று நினைத்து சில ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.
ஆனால் உன் விருப்பம் போல உன்னைச் செயல் பட விட மாட்டேன். என் விருப்பம் போலத் தான் நீ நடக்க வேண்டும் என்று விதி அவனை வேறு வழியில் இழுத்து செல்ல ஆரம்பித்தது.
விதி செய்த முதல் விளையாட்டில் அவன் இப்போது ஈடுபட்டிருந்த வேலை விரைந்து முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே சென்றது. அதில் அவனின் வேலை பழு கூடிப் போனது.
வழக்கமாகப் பார்க்கும் வேலையுடன் இப்போது எடுத்துக் கொண்டுள்ள பொறுப்பும் அவனை ஓய்வில்லாமல் சுற்ற வைத்ததுடன், அடுத்து இயற்கையும் தன்னுடைய வேலையைக் காட்டி அரசுவின் முடிவை தள்ளிப் போட வைத்து விதியின் வசத்தில் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டான்.
அடுத்து வந்த நாட்களில் தொடர்ந்து இரண்டு நாட்களும் இரவில் விடிய, விடிய மழை பெய்து ஊற்றியது.
அதில் விளைந்து நின்ற பயிர்கள் எல்லாம் பாழாகின.
அதனால் ஊர் முழுவதும் மழையால் விளைந்த சேதம் பற்றி மக்கள் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
தேவையான பொழுது மழை பொழியாமல் பயிர்கள் கருகி போவதும், பயிர்கள் வளர்ந்து நிற்கும் அறுவடை காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து பயிர்கள் அழிந்து போவதும் விவசாய மக்களுக்கு மாபெரும் சோதனை. வருடம் தோறும் இது போலப் பல சோதனைகளைக் கடந்து தான் அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இப்போது மழை பெய்ததை நினைத்து சந்தோஷப் பட முடியாமல் தண்ணீரால் மூழ்கி போன பயிர்களைப் பார்த்துத் துக்கம் அடைந்தார்கள்.
அதில் பாதிக்கப் பட்டவர்களில் அரசு மற்றும் மருதனின் குடும்ப நிலமும் தான்.
அதுமட்டும் இல்லாமல் சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் பொழிலூர் கிராம கண்மாய் நிரம்பியது. அதனுடன் ஊரை சுற்றி ஓடும் ஆற்றிலும் அந்த வருடம் சிறிது தண்ணீர் ஓட ஆரம்பித்தது.
அதுவும் அந்த ஆறு காவேரி ஆறு ஓடும் இடமாகியதால் அணையில் தண்ணீர் நிறைந்து விடும் போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழமை.
அந்த நேரத்தில் யாரும் அந்தப் பகுதியில் செல்ல கூட முடியாத நிலை ஏற்படும்.
மருதவாணனின் கிழக்கில் இருக்கும் நிலம் அந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும்.
அது இல்லாவிட்டால் அந்த நிலத்தில் இருந்து வேறு பாதை வழியாகப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஊருக்குச் சென்று அங்கிருந்து ஊரை சுற்றி வந்து பொழிலூர் வந்து சேரவேண்டும்.
ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் அந்த ஆற்றைக் கடந்து நடந்தே அந்தக் கிழக்குப் பக்கம் இருக்கும் தங்கள் நிலத்துக்கு ஆட்கள் சென்று வருவார்கள்.
அன்று தன் நிலத்திற்குச் சென்ற மருதவாணன் மனதில் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன் சேர்ந்து வருத்தமும், அதனோடு வேறு ஒரு யோசனையும் ஆட்கொண்டதால் அங்கே இருந்த மோட்டார் அறையில் படுத்திருந்தார்.
நேற்று பெய்த மழையில் நிறைய இடங்களில் தண்ணீர் செல்ல… இன்று மழை நின்று வானம் வெளுத்து பளிச்சென்று இருந்தது.
சில நாட்களாக அவரை ஆட்கொண்ட யோசனை இன்று அதிகமாகி, தன் மனதில் ஓடும் கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் திணறி, மோட்டார் அறையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தவர், நினைவுகளைக் கலைக்க வெளியே பயங்கரச் சத்தம் ஒன்று கேட்டது.
சத்தம் கேட்டதும் கட்டிலில் இருந்து பட்டென எழுந்தவர், ‘என்ன திரும்பவும் மழை ஆரம்பிச்சுருச்சா?’ என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து வெளியே எட்டி பார்த்தார்.
வெளியே லேசான தூறல் ஆரம்பித்திருக்க இடி பயங்கரமாக விழுந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் ‘சரிதான்! வானம் இன்னைக்கும் பொத்துக்கிட்டு ஊத்த போகுது. மதியத்திலேயே இப்படி இருட்டா இருக்கே. யோசிக்கிட்டே இப்படியே படுத்துடேனே… பெரிய மழை வர்றதுகுள்ள வீடு போய்ச் சேருவோம்’ என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்த ஒரு உர பையை மழையில் நனையாமல் இருக்கத் தலையில் எடுத்துப் போர்த்திக் கொண்டு மோட்டார் அறைக்கு வெளியே வந்து கதவை பூட்டியவர். ஆற்றுப் பக்கம் நடக்க ஆரம்பித்தார்.
அவர் காலையில் ஆற்றில் இறங்கி தான் இந்தப் பக்கம் வந்தார். அப்போது முட்டி அளவு மட்டுமே தண்ணீர் ஓடியதால் கடந்து வருவதற்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.
ஆனால் இவ்வளவு நேரம் யோசனையில் இருந்தவரின் மூளைக்குக் காலையில் தண்டோரா போடுபவன் “அனைத்து ஊர் கண்மாயும் நிறைந்து வருவதால் கண்மாய் உடையும் முன் பொழிலூரை சுற்றி உள்ள நான்கு ஊர் கண்மாய்க் கணவாயும் மடை திறந்து விடப் போவதாகவும், அப்படித் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் எல்லாம் ஆற்றைத் தான் வந்து சேரும் என்பதால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம்” என்று சொன்னதை இந்த நேரத்தில் அவர் மறந்தே போனார்.
ஆற்றில் அவர் இறங்கும் போது காலையில் இருந்ததை விட இப்பொழுது தண்ணீர் முட்டிக்கு மேல் வரை கூடி இருப்பதை உணர்ந்தவர் திரும்பி சென்று விடலாமா? என்று யோசித்தார்.
ஆற்றைக் கால் பகுதி கடந்து கொண்டிருக்கும் போதே ‘என்ன இது? இருக்க இருக்கத் தண்ணி கூடுது?’ எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டவர் மூளையில் அப்பொழுது தான் ஊரில் தண்டோரா போட்டது ஞாபகம் வந்தது.
அது ஞாபகம் வந்ததும் திரும்பி போய்ருவோமா என்று நினைத்தார். ஆனால் அவரின் மனதிற்குள் அப்பொழுது என்ன தோன்றியதோ, அவர் நினைத்ததற்கு நேர்மாறாக ‘இன்னும் கொஞ்ச தூரம் தானே தண்ணி கூடும் முன் சீக்கிரம் ஆற்றைக் கடந்து விடலாம்’ என்று நினைத்து ஆற்றைக் கடக்கக் காலை வேகமாக எடுத்துவைத்து கடக்க ஆரம்பித்தார்.
ஆற்றில் பாதித் தூரத்திற்கு வர இடுப்பளவிற்குத் தண்ணீர் வந்திருந்தது.
அக்கரையைத் தொட்டுவிட இன்னும் வேகமாக நடக்க அடுத்த அடி காலை எடுத்து வைத்தவரின் காலில் எதுவோ பலமாகக் குத்தியது.
“ஆ..! அம்மா…!” என்று சிறு சத்தத்துடன் நடக்காமல் அப்படியே நின்று விட்டார். ‘அய்யோ…! என்ன கழுதை காலில் குத்துச்சுனு தெரியலையே? இப்படி வலிக்குது’ என்று நினைத்துக் கொண்டே குனிந்து காலை பார்க்க முயன்றார்.
காலுக்குக் கீழே லேசாகக் கலங்கலாக இருந்ததால் என்ன குத்தியது என்று பார்க்க முடியவில்லை. ஆனால் ரத்தம் நிறைய வெளி வருவதை உணர்ந்தார்.
‘பேசாம ஊரை சுத்தி போயிருக்கலாம். ஆத்தை கடந்துரலாம்னு மடையன் போல நினைச்சு இப்படி நடு ஆத்துல மாட்டிக்கிட்டேனே’ என்று தன்னையே திட்டிக் கொண்டவர், காலின் வலியை பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடக்க மெதுவாக நடந்தார்.
ஆனால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், வலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தது.
வலியை பொறுத்துக் கொண்டு அவர் நடந்து ககொண்டிருக்… அப்போது அக்கரையில் தன் இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தில் மழையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தகுந்த ஏற்பாடு செய்திருந்த அரசு இன்றும் அதைப் பார்வையிட வந்தவன் மழை ஆரம்பிக்கவும் வீட்டிற்கு செல்ல குடை பிடித்துக் கொண்டு நடந்து ஆற்று ஓரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தான். ஆறு ஓரத்தில் இருந்த வயல்களை எல்லாம் தாண்டி சென்றால் வண்டி போகும் பாதை இருக்கும். அங்கே நிறுத்திருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்று கொண்டிருந்தான்.
தன் போக்கில் நடந்து கொண்டிருந்தவன் தற்செயலாக ஆற்றைப் பார்த்தான்.
தூரத்தில் இருந்து பார்க்க, யாரோ ஆற்றைக் கடப்பது தெரிந்தது.
அதனைக் கண்டவன் கோபத்துடன் ‘யார் அது? இப்ப தான் எல்லாக் கண்மாயிலையும் தண்ணி திறந்து விட்டுருப்பாங்களே? இப்ப போய் எதுக்கு ஆத்தை கடக்கணும்?’ என்று நினைத்தவன்,
அங்கிருந்தே சத்தம் போட்டான். “யாருய்யா அது? இப்ப ஆத்தை கடக்குறது? தண்ணி இன்னும் கொஞ்ச நேரத்துல தலையைத் தாண்டி ஓடுற அளவு கூடிரும். சீக்கிரம் இந்தப் பக்கம் வாங்கய்யா” என்றான்
அவனின் சத்தம் தண்ணீரில் கஷ்டப்பட்டு நடந்து வந்து கொண்டவரின் காதை அடையும் நேரத்தில் இன்னொரு இடி பலமாக எங்கோ அருகில் விழுந்தது.
அந்த இடியில் ஒரு சத்தமும் கேட்காமல் போக, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வலியுடன் நடந்து கொண்டிருந்தார்.
காலில் ரத்தம் வெளியேற, வெளியேற கண்களை வேறு இருட்டிக் கொண்டு வந்தது.
அவர் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்தது இங்கிருந்து பார்த்த அரசுவிற்கு ஏதோ சரி இல்லாதது போலப் படக் கரைக்குத் தூரமாக இருந்தவன் வேக நடைப் போட்டு கரை அருகில் வந்து கொண்டிருக்கும் போது தண்ணீருக்குள் நடந்து வந்து கொண்டிருந்த மனிதர் கால் மடங்கித் தண்ணீரில் தொப்பென விழுந்தார்.
ஆற்றை நெருங்கும் முன் அவரின் முகத்தைப் பார்த்து ஒரு நொடி ‘இவரா?’ என்று அதிர்ந்த அரசு, அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்து வேகமாகச் சென்று ஆற்றில் குதித்தான்.
மயங்கி விழுந்தவரை ஆற்று நீர் இழுத்து சென்று கொண்டிருந்தது. ஆற்றில் குதித்த அரசு அவரை இழுத்து வர முன்னேறினான்.
தண்ணீரில் விழுந்தவருக்குச் சிறிது தூரம் தண்ணி இழுத்து சென்ற பிறகு மயக்கம் லேசாகத் தெளிந்தது. ஆனாலும் முழுதாக மயக்கம் தெளியாததாலும், காலில் உள்ள காயத்தாலும் தன்னை அடித்துச் செல்லும் தண்ணீரில் நீச்சல் போட முடியாமல் தண்ணீரோடு சென்றார்.
அந்த அரைமயக்க நிலையிலும் அவரின் மனம் நங்கையை நினைத்துப் பார்த்தது. ‘பொண்ணுக்கு ஒரு நல்லது கூடப் பண்ணாம போகப் போறேனே. கடவுளே…! அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்பா. ஈஸ்வரி தனியா என்ன செய்வாளோ?’ என்று மனதுக்குள் அரற்றியவர் கண்களில் வழிந்த கண்ணீர் ஆற்று நீரில் காணாமல் தான் போனது.
அவரைப் பின் தொடர்ந்து ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து கஷ்டப்பட்டு நீந்தி வந்த அரசு அவர் அருகில் வந்தான்.
வந்தவன் அவரைப் பிடித்து இழுக்க அரை மயக்கத்தில் இருந்தவர் ஒன்றும் புரியாமல் அந்தப் பிடியில் இருந்து தன்னை விடுவிக்கப் பார்த்தார்.
அதில் கோபமடைந்த அரசு தண்ணீரின் வேகத்தைத் தாக்கு பிடித்து, தன் பலம் கொண்ட மட்டும் அவரின் தலை முடியை பிடித்து மீண்டும் அவர் நழுவி செல்லாதவாறு தன் கையில் அழுத்ததைக் கூட்டி கஷ்டப் பட்டு கரையை நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.
ஒருவழியாக நீந்தி கரையை அடைந்தவன் அவரை இழுத்துத் தரையில் படுக்க வைத்து சிறிது மூச்சு வாங்கினான்.
மூச்சு வாங்கித் தன்னை நிதானிக்க முயன்றப் படி அவரைப் பார்த்தான். அவர் இப்போது முழு மயக்கத்தில் இருந்தார்.
என்ன இது? இந்த ஆளுக்குத் தான் நீச்சல் தெரியும்ல அப்புறம் ஏன் இப்படி மயக்கம் வர அளவுக்குப் போனார், என்று நினைத்துக் கொண்டே அவரை முழுதாக ஆராய்ந்து பார்த்தான்.
காலில் பார்க்கும் போது பலமான வெட்டுக் காயம் தெரிந்தது.
‘அய்யோ…! என்னது இவ்வளவு பெரிய காயம்? இதனால் தான் மயக்கம் வந்திருக்கும் போல?’ என்று லேசாகப் பதறிய படி அவர் அருகில் அமர்ந்து தன் வேட்டியில் இருந்து ஒரு பக்கத்தில் கிழித்து அவரின் கால் காயத்தைக் கட்டியவன், பின்பு மயக்கத்தைத் தெளிய வைக்கக் கைகளையும், இன்னொரு காலையும் பரபரவென்று தேய்த்து விட்டவன்
வயிற்றைப் பிடித்து அழுத்தினான். அவர் குடித்திருந்த தண்ணீர் வெளியேற ஆரம்பிக்கவும், மீண்டும் கைகளைத் தேய்த்து விட்டான். ஆனால் அவரிடம் இருந்து ஒரு அசைவும் இல்லை.
மீண்டும் முதலுதவி சில செய்து விட்டு அவர் இரு கன்னத்தையும் லேசாக அடிப்பது போலத் தட்டி “யோவ் மாமா… எழுந்திருய்யா!” என்றான்.
வருடங்கள் கடந்து அவரை ‘மாமா’ என்றழைத்து எழுப்பிப் பார்த்தான்.
ஆனால் காலில் பட்ட ஆழமான காயமும் தண்ணீரை குடித்திருந்ததும் அவரை நல்ல மயக்கத்தில் ஆழ்ந்தியிருந்தது.
அப்போது அரசுவை தேடிக் கொண்டு வந்த முருகன், அவன் ஆற்றங்கரையில் இருப்பதைப் பார்த்து அங்கே வந்தவன் மருதன் அப்படிக் கிடப்பதை பார்த்து “என்னாச்சு தம்பி இவருக்கு?” என்று கேட்க…
“ஆத்துல மூழ்க பார்த்தார் அண்ணே! கால்ல வேற ஏதோ கீறி இருக்கு. மயக்கமா இருக்கார். நீயும் ஒரு கை பிடி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ரலாம்” என்றான்.
இருவரும் மருதனை தூக்கி கொண்டு ரோட்டிற்கு வந்தார்கள். அப்போது அந்தப் பக்கம் ஒரு மினி லாரி வர, அதை நிறுத்தி அதில் பின்பக்கம் மருதனை ஏற்றிவிட்டு அவர் அருகில் அமர்ந்து கொண்டான் அரசு.
முருகன் முன்னால் அமர்ந்து வண்டியை மருத்துவமனைக்கு விடச் சொல்ல… அந்த ஊரில் இருந்த சிறிய தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார்கள்.
ஒரு மருத்துவரும், ஒரு செவிலியும் மட்டுமே இருக்கும் சிறிய மருத்துவமனை தான் அது. மருத்துவர் அந்த ஊரிலே வசிக்க ஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததால் இருபத்தி நாலு மணி நேரமும் அவசரத்திற்கு அவரைச் சந்திக்கலாம்.
இப்போது மருதனை உடனே பரிசோதித்தவர் கண்ணாடி கீறி விட்ட காலுக்குத் தையல் போட்டு, மயக்கம் தெளிய ஒரு ஊசி போட்டு விட்டார்.
பின்பு வெளியே வந்தவர் “காலுல நல்லா ஆழமா கண்ணாடி கீறி விட்டுருக்குத் தமிழ். ரத்தம் வெளியேறி இருக்குறதால மயக்கமா இருக்கார். ஊசி போட்டுருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுருவார்” என்று விவரம் சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டவன் “மாமாவுக்கு வேற எதுவும் பிரச்சனை இல்லையே டாக்டர்?” என்று கேட்டான்.
அவனைக் கேள்வியாகப் பார்த்த மருத்துவர் “அவர் உனக்கு மாமாவா தமிழ்?” எனக் கேட்டார்.
அந்த ஊரில் டாக்டருக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கத் தமிழும் ஒரு காரணம் என்பதால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது.
“நீங்க இந்த ஊருக்கு வந்து ஒரு வருஷம் தானே ஆகுது டாக்டர். அதான் எங்களைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. அவர் என் மாமா தான் டாக்டர். கொஞ்ச வருஷமா பேச்சு வார்த்தை இல்லை” என்றான்.
“ஓ…! சரி தமிழ்! உங்க மாமாவுக்கு வேற எதுவும் பிரச்சனை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்றார்.
“சந்தோஷம் டாக்டர்” என்றவன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
இந்த இடைபட்ட நேரத்தில் முருகனிடம் தகவல் சொல்லி விட்டிருந்ததால் ஈஸ்வரியும், நங்கையும் பதறி அடித்து ஓடி வந்தார்கள்.
அங்கே தமிழைப் பார்த்த ஈஸ்வரி “அய்யா தமிழு! மாமாக்கு என்னாச்சுய்யா?” என்று அழுதப்படி கேட்டார்.
“பதறாத அத்த! மாமாக்கு ஒன்னும் இல்லை. இப்படி உட்காரு!” என்று அவரைப் பெஞ்சில் அமர வைத்தவன் நடந்ததைச் சொன்னான்.
அதைக் கேட்டதும் “ஐயோ…! இந்த மனுஷன் ஏன் ஆத்துக்குள்ள இறங்கி வந்தார்?” என்று மீண்டும் அழ ஆரம்பித்தார்.
“அத்த அழுகாதே! இப்ப மாமா கண்ணு முழிச்சிருவார். அவர்கிட்டயே போய்க் கேளு” என்றவன்,
தன் அம்மாவின் தோளை பிடித்த படி இவ்வளவு நேரமும் அமைதியாக அழுது கொண்டிருந்த நங்கையைப் பார்த்தான்.
நங்கை தன் முன் நின்றிருந்தவனை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை. அடிக்கடி கன்னம் நனைக்கும் கண்ணீரை மட்டும் துடைத்து கொண்டிருந்தாள்.
“அத்த உள்ளே நர்ஸ் இல்லை. நீ போய் மாமா பக்கத்தில் உட்காரு! நான் வீட்டுக்கு கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்” என்று அவரை உள்ளே அனுப்பி வைத்தான்.
அவர் உள்ளே போக நங்கையும் பின்னால் போகப் பார்த்தாள்.
அவளைக் கையை நீட்டி தடுத்தவன் “நீ இங்க இரு நங்கா! டாக்டர் மாத்திரை பத்தி விவரம் சொல்லணும்னு சொன்னார். நீ வா! உள்ளே போய்க் கேட்டுட்டு வருவோம்” என்று அவளை நிறுத்தி வைத்தான்.
அவன் நங்கையிடம் பேசியது காதில் விழுந்தாலும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் மன நிலையில் இல்லாத ஈஸ்வரி முதலில் கணவனைப் பார்க்க வேண்டும் என்று வேகமாக உள்ளே விரைந்தார்.
அந்த மருத்துவமனை ஒரு வராண்டாவும், ஒரு மருத்துவர் அறையும், ஒரு படுக்கை கொண்ட அறையும் மட்டும் இருக்கும் சிறிய மருத்துவமனை தான்.
ஒரு வருடத்திற்கு முன்பு வரை அந்த ஊரில் எந்த ஆபத்து கால உதவி என்றாலும் வைத்தியம் பார்க்க திருச்சி மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும்.
அவ்வளவு தூரம் செல்லும் முன் இறந்தவர்களும் உண்டு.
அதனால் ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, ஆளுக்குக் கொஞ்சமா பணம் கொடுத்து அந்த மருத்துவமனையை அமைத்தார்கள்.
இப்போது ஒரு அவரசம் என்றால் உடனே பார்க்க அந்த மருத்துவமனை அவர்களுக்கு உபயோகமாக இருந்தது.
ஈஸ்வரி உள்ளே சென்று அமர்ந்ததும் நங்கையின் அருகில் நெருங்கி நின்றவன் “என்ன அடக்கோழி வெளியே வந்திருச்சு?” என்று மெதுவாகக் கிண்டல் குரலில் கேட்டான்.
அதுவரை தந்தையின் ஞாபகத்தில் அழுதுக் கொண்டிருந்தவள் அவன் கேள்வியின் விலுக்கென நிமிர்ந்து கோபமாக அவனை முறைத்தாள்.
நங்கையின் விழியில் கண்ணீர் நிறைந்திருக்க, அவன் கேலியினால் கோபம் தெரிய, தன் கண்களை அகல விரித்துப் பார்த்தவளின் விழி வீச்சில் ஒரு நொடி அயர்ந்து தான் நின்றான் தமிழரசன்.
ஆனால் நொடியில் தன்னைச் சுதாரித்து, “என்ன நங்கா முறைக்கிற? உண்மையைத் தானே சொன்னேன்? மூணு வாரமா அடக்கோழி மாதிரி தானே இருந்த?” என்று கேட்டவனின் கண்கள் அவளை உச்சி முதல் பாதம் வரை வருடி சென்றது.
அவன் பேச்சும், பார்வையும் புரிந்தாலும் மௌனமாக முறைத்து நின்றாள்.
அவள் அமைதியை பார்த்து “என்ன நங்கா என்கிட்டே நீ பேச மாட்டியா? உனக்குக் கோபம் வந்தா என்னைக் குடமிளகானு கூப்பிடுவியே? அதைச் சொல்லியாவது என்னைத் திட்டுப் பார்க்கலாம்” என்று அவள் பேச்சை ஆர்வமாகக் கேட்க காத்திருப்பவன் போல முகத்தை வைத்து கேட்டான்.
அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு ‘நான் இவனை அப்படிக் கூப்பிடுறது எப்படித் தெரியும்?’ என்பது போலப் பார்த்தாள்.
“எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறியா? நீ என்ன கண்மாய்க் கரையிலே நடந்து வரும் போது மெதுவாவா பேசுற? நான் எதுக்க வர்றது தெரிஞ்சே சத்தமா சொன்னா எனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.
‘ஓஹோ…! ஐயா நான் அப்படிச் சொல்றதை கேட்டும் மண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு போனிங்களோ? நான் சுத்தி வரும் போதெல்லாம் ஒரு வார்த்தை பேச கூட முடியாம கண்டுக்காம போய்ட்டு இப்ப நான் பேச மாட்டேன்னு சொன்னதும் வழிய வந்து வம்பு இழுக்குறதை பாரு’ என்று உள்ளுக்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள் முகத்தில் உணர்வுகள் எதையும் காட்டாமல் இறுகி போய் நின்றிருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன இப்பயும் பேச மாட்டியா? ஓ…! சொன்னதைக் கடைப்பிடிக்கிறீங்களோ?” என்று மேலும் அவளை வம்பிழுத்தான்.
‘நீ என்னமும் பேசிக் கொள்’ என்பது போல நங்கை நிற்க…
அரசுவின் முகத்தில் ஒரு வேதனை வந்து போனது. அதைக் கண்டு கொள்ளும் நிலையில் கூட நங்கை இல்லை. அவள் பார்வை எல்லாம் அங்கே நாட்காட்டியில் இருந்தது.
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவன் “எப்படி நங்கா இந்த மூனு வாரமா வயல் பக்கமே வராம இருந்த? அவ்வளவு வெறுப்பா என்கிட்டே? அன்னைக்கு எனக்குப் பதில் சொல்ல முடியாத சூழ்நிலை நங்கா! என்னைப் புரிஞ்சுக்கயேன்” என்று சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள்.
“என்ன நங்கா? ஏன் அப்படிப் பார்க்குற?” என்று புரியாமல் கேட்க…
‘ஹக்கும்…! இந்தப் பார்வைக்கு மட்டும் உனக்கு அர்த்தம் புரியாம போயிருமே?’ என்று நொடித்தவள்,
“இப்ப சொல்லு!” என்று அமைதியாகக் கேட்டாள்.
“அது…!” என்று இழுத்தவன் “மாமா இப்ப முழிச்சுருவாறே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்…
‘நீ இப்படியே தான்டா சொல்லுவ. நீ பேசுறதை போய் நின்னு கேட்குறேன் பாரு? என்னைச் சொல்லணும்’ என்று தன்னையே திட்டிக் கொண்டவள், அதற்கு மேல் அங்கே நிற்காமல் மருத்துவரின் அறையை நோக்கி நடந்தாள்.
“ப்ச்ச்…!” என்று முனங்கிய படி அவனும், அவளின் பின் நடந்து சென்று மருத்துவரிடம் நங்கையைப் பற்றிச் சொல்லி விவரம் கேட்டான்.
மருத்துவர் மாத்திரை கொடுப்பதைப் பற்றிச் சொல்லி விட்டு “நீங்க இன்னும் ஈரத்தோடயே இருக்கீங்களே தமிழ்? உங்க மாமா முழிக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும். நீங்க போய் ட்ரெஸ் மாத்திட்டு, அப்படியே உங்க மாமாவுக்கும், ஒரு மாத்து ட்ரெஸ் எடுத்துட்டு வாங்க. இப்ப ஹாஸ்பிடல் ட்ரெஸ் தானே அவர் போட்டிருக்கார்” என்று சொன்னார்.
அப்போது தான் தன் உடையில் கவனத்தை வைத்து “ஆமாம் டாக்டர்! என் கூட ஹாஸ்பிட்டலுக்கு வந்த அண்ணன்கிட்ட சொல்லி விட்டுருக்கேன் டாக்டர். மாத்து ட்ரெஸ் எடுத்து வருவார்” என்றவன் வெளியே வந்தான்.
நங்கைக்கு அவன் ஈர உடையைப் பார்த்ததும், ஒருவேளை இவன் மட்டும் அப்பாவை அப்ப பார்க்கலைனா என்ன ஆகியிருக்கும்? என்று நினைத்தவளுக்கு உடல் ஒருமுறை தூக்கி போட்டது போல நடுங்கியது.
நங்கையிடம் ஏதோ சொல்ல அரசு திரும்ப, அவளின் நடுக்கத்தைப் பார்த்து, “ஹே… நங்கா…! என்னாச்சு?” என்று பதறினான்.
அப்போது மருதன் இருந்த அறைக்கு வெளியே இருந்ததால் அவனிடம் ஒன்றும் சொல்லாமல் அறையின் உள்ளே பார்வையை ஓட்டினாள்.
மருதன் இருந்த அறை திறந்திருக்க, அவர் இன்னும் மயக்கத்தில் இருந்தார். ஈஸ்வரி லேசாகக் கண்ணைக் கசக்கிய படி அழுது கொண்டிருந்தார்.
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்த அரசு, தந்தைக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து தான் நடுங்கினாள் என்று புரிந்தவன் “மாமாவுக்கு ஒன்னும் இல்லம்மா. சரி ஆகிடுவார். நீ கவலை படாதே! என்று ஆறுதலாகச் சொன்னான்.
தந்தையிடம் இருந்து பார்வையைத் திருப்பி அரசுவை பார்த்தவளுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.
தாங்கள் வந்ததில் இருந்து ரொம்பச் சகஜமாகப் பேசுகின்றான். அதுவும் தன்னிடம் பேசும் போது அவனின் குரலில் தெரியும் உரிமை உணர்வு? இது நிஜம் தானா? என்பது போல் பார்த்தவளுக்கு இப்போது எரிச்சல் தான் வந்தது.
‘தன் மனதை காயப்படுத்தி விட்டு இப்போது தன்னிடம் சமாதானமாகப் பேசினால் எல்லாம் சரியாகி விடுமா என்ன?’ என்று கோபம் தான் வந்தது.
ஆனால் அவளின் கோபத்தைக் காட்டும் தருணம் இது அல்லவே?
தந்தையின் உயிரை காப்பாற்றித் தந்திருக்கின்றான். அப்போது மட்டும் இவன் பழைய பகையை மனதில் வைத்து உதவி செய்யாமல் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று நினைத்தவளுக்கு நன்றியுணர்ச்சி பெருகியது.
அதனால் தன் மௌனத்தை உடைத்து, லேசாகத் தொண்டையைச் செருமியவள் “பகையை மனசுல வச்சுக்காம எங்க அப்பாவை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!” என்று சொல்லி விட்டு தன் கையைக் குவித்து நன்றி சொன்னாள்.
நங்கை தன் கோபத்தை விட்டுத் தன்னிடம் ஏதோ பேச போகின்றாள் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டவனுக்கு அவளின் வார்த்தைகள் கடுப்பை தந்தன.
“உன் நன்றிக்காக ஒன்னும் நான் உங்க அப்பாவை காப்பாத்தல” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனின் கோபத்தைப் பார்த்து அதிர்ந்த நங்கை பின்பு ‘சரிதான் போடா!’ என்பது போலத் தோளை குலுக்கியவள் அவனைக் கண்டு கொள்ளாமல் தன் அன்னையிடம் சென்றாள்.
அவள் உள்ளே போவதையே பார்த்தவன் ‘கதிர் விஷயத்தில் ரொம்பக் கோபமா இருக்கா போலயே? இவளுக்கு எப்படிப் புரிய வைக்கப் போறேன்னு தெரியலையே?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சிறிது நேரம் யோசனையில் இருந்தவனைக் கலைத்தது ஒரு குரல். “எய்யா தமிழு! மருதனுக்கு என்னாச்சுயா? என்ன நடந்துச்சு? இப்ப எப்படி இருக்கான்?” என்று பதட்டமாகக் கேட்டப் படி அங்கே வந்தார் தேவநாயகம். அவரின் பின்னால் அதே பதட்டத்துடன் அம்சவேணியும் வந்தார்.
முதலில் தந்தையைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனான் தமிழரசன்.
பின்பு தானே மருதனை அப்படிப் பார்த்து பதறி போன போது நண்பன் உயிருக்கு ஆபத்து என்றதும் தன் தந்தை இப்படிப் பதற வில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று நினைத்து அதிர்ச்சியில் இருந்து மீண்டான்.
அரசு யோசனையில் இருக்க, அதற்குள் “என்னாச்சுன்னு சொல்லுயா?” என்று நாயகமும், வேணியும் மாறி, மாறி இருமுறை கேட்டு விட்டனர்.
அதற்குள் இவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த ஈஸ்வரி, வேணியை அங்கே பார்த்ததும் மதினி என்று அழுத படி அவரின் கையைப் பிடித்துக் கொண்டார்.
அவரின் அழுகையைப் பார்த்து பயந்து போன வேணி “அய்யோ…! அண்ணனுக்கு என்னாச்சு மதினி? அண்ணே எங்க?” என்று அவரும் அழுத படி கேட்டார்.
இவர்களின் சத்தம் கேட்டு மருத்துவர் வேகமாக வெளியே வந்து “என்னாச்சுத் தமிழ்? எதுக்கு இவ்வளவு சத்தம்?” என்று கேட்டார்.
‘ஹய்யோ…! என்னோட ஒரு நிமிஷ அமைதில ஒப்பாரியே வைக்க ஆரம்பி்ச்சுட்டாங்களே?’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன் “ஒன்னும் இல்ல டாக்டர். என்னோட அம்மா, அப்பா பயந்து போய் வந்துட்டாங்க. நான் விவரம் சொல்லிக்கிறேன்” என்று சொல்ல… அவர் மறுபடியும் உள்ளே போனார்.
“அம்மா… அத்த… அழுகையை நிறுத்துங்க. அதான் மாமாவுக்கு ஒன்னும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டார்ல? அப்புறம் என்ன இப்படி ஒரு அழுகை?” என்று சத்தம் போட இருவரும் சட்டென அமைதியானார்கள்.
“மாமாவுக்கு இப்ப ஒன்னும் இல்லைப்பா” என்று சொன்னவன் நாயகத்திடம் அனைத்தையும் சொன்னான்.
தன் மகன் மட்டும் பார்க்கவில்லை என்றால் மருதனின் நிலை என்று நினைத்தவருக்குக் குலை நடுங்கியது. அதோடு “இந்த மட பய ஏன் ஆத்துல இறங்கி வந்தான்? சுத்தி தான் வர வேண்டியது தான?” என்று கடிந்து கொண்டார்.
அப்போது “அம்மா, அப்பா முழிக்கப் போறார் போல அசையிறார்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் நங்கை.
வெளியே கேட்ட பேச்சுச் சத்தத்திலேயே வந்தவர்கள் யார் என்று அறிந்தவள் அன்னையுடன் செல்லாமல் அமைதியாகத் தந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
அவள் சொன்னது கேட்டு எல்லாரும் உள்ளே போகப் போக “அப்பா… இப்பயே எல்லாரும் போய்ப் பார்க்க வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க. நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டு வர்றேன். அவர் மாமாவை மொத செக் பண்ணிக்கட்டும்” என்றான்.
“அதுவும் சரிதான்யா” என்று நாயகமும், வேணியும் வெளியே காத்திருந்தார்கள்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்றிருந்த ஈஸ்வரி “என்னங்க… என்னங்க… இப்போ எப்படி இருக்கு?” என்று மருதனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மருதனுக்கு மயக்கம் தெளிந்ததை மருத்துவரிடம் சொல்லி அவரை அரசு அழைத்து வந்தான்.
மருதனை சோதனை செய்தவர் “அவருக்கு இனி ஒன்னும் இல்லை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. இரண்டு நாள் ஒருக்காக் கால் கட்டை மாத்தணும். அதுக்கு வந்துருங்க” என்று விட்டு சென்றார்.
இப்போது மருதன் நன்றாகக் கண் விழித்திருந்தார்.
மருத்துவர் செல்லவும் தன் அருகில் நின்றிருந்த நங்கையின் கையைப் பிடித்தவர் “உனக்கு ஒரு நல்லது செய்யாம இந்த அப்பன் போய்ருவேனோன்னு பயந்தே போனேன்மா பவளம்” என்று குரல் கரகரக்க சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் நங்கையும், ஈஷ்வரியும் சத்தமாக அழ ஆரம்பித்தார்கள்.
அவ்வளவு நேரமும் தூரமாக நின்றிருந்த அரசு அவர்கள் அழவும் அருகில் வந்து “அத்த…!” என்று அழைத்தான்.
அவன் கண்களும் லேசாகக் கலங்கி இருந்தது. அவன் அழைப்பில் ஈஸ்வரி திரும்பி அரசுவை பார்த்ததும் அப்பொழுது தான் அவன் அங்கே இருப்பது ஞாபகத்திற்கு வர அவரின் அழுகை சட்டென நின்றது. ‘அய்யோ…! தமிழைப் பார்த்து இவர் என்னமும் சொல்லி விடுவாரோ?’ என்று பயந்தே போனார்.
ஈஸ்வரி அவசரமாகத் திரும்பி கணவனைப் பார்க்க மருதனும் இப்பொழுது தமிழரசனை தான் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.