கண்கள் தேடுது தஞ்சம் – 15
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 15
“ஓடாதே…! நில்லு…! கீழே விழுந்து வச்சுறாதே…!” என்று அந்தப் படிகளில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த நங்கையைப் பார்த்து கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் தமிழரசன்.
அந்த உயர்ந்த மலை மீது அனைவருக்கும் முன்னால் தான் ஏறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு கத்துவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் ஓடியவள் அடுத்தப் படியில் ஏறும் போது தன் காலை அந்தப் படிக்கட்டில் இடித்துக் கொண்டு “அம்மா…!” என்று வலியில் கத்தினாள்.
“நங்கா…!” என்று பதறிய அரசு, அவள் அருகில் வேகமாகச் சென்று அமர்ந்து அவள் காலை எடுத்துப் பார்த்தான்.
பெருவிரல் நக கண்ணில் இருந்து சிறிது இரத்தம் கசிந்து கொண்டிருக்க, “அய்யோ…! இரத்தம் வருது. உன்னை யாரு ஓட சொன்னா? நான் தான் ஓடாதே… நில்லுன்னு சொன்னேன்ல?” என்று அவளைப் பார்த்துக் கோபப்பட்டான்.
ஏற்கனவே வலியில் அழுதுக் கொண்டிருந்தவள் அவனின் கத்தலில் பயந்து இன்னும் சத்தத்துடன் அழுதாள்.
“அவளை ஏன்டா திட்டுற? பாரு புள்ள அழுகுது” என்று அரசுவை திட்டிக் கொண்டே “நீ வாடா பவளம்! அவன் கிடக்கிறான்” என்று பின்னால் ஏறி வந்து கொண்டிருந்த நாயகம் அவளைத் தன்னிடம் அழைத்தார்.
“தமிழு மாமாவை திட்டாதிங்க மாமா. நான் தானே மாமா பேச்சை கேட்காம ஓடி வந்தேன். அதான் இப்படி ஆகிருச்சு” என்று தன் வலியை பொருட்படுத்தாமல் அரசுவிற்கு ஆதரவாக பேசினாள் நங்கை.
“இது உனக்குத் தேவையா நாயகம்? இந்தப் பவளம் புள்ள இப்படிப் பண்ணுவானு தெரிஞ்சு தானே நான் அமைதியா வேடிக்கை பார்க்கிறேன். அவ மாமனை ஒரு வார்த்தை நம்மள சொல்ல விட்டுருவாளா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னவர், தன் நண்பனின் தோளை தட்டி ‘அங்கே பார்’ என்பது போலக் கண்ணைக் காட்டினார் மருதன்.
பெரியவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் அம்மா கொண்டு வந்த கூடையில் இருந்த துண்டை எடுத்து அவள் ரத்தத்தைத் துடைத்து விட்டு “சரியாகிடும்… அழாதேடா…!” என்று சொல்லி அவள் கண்களையும் துடைத்து விட்டவன் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது.
அவன் கண் கலங்கி இருப்பதைப் பார்த்து தன் அழுகையைச் சட்டென நிறுத்தி “நான் அழுகலை மாமா. நான் இனி ஓட மாட்டேன்” என்று சொல்லி அவனின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக மலை மீது ஏறினாள்.
பெரியவர்கள் அவர்களின் அந்தப் பாசத்தைப் பார்த்து உள்ளம் மகிழ பின் சென்றார்கள்.
இரு குடும்பமும் திருச்சி மலைக்கோட்டைக்கு வந்திருந்தார்கள்.
வந்த இடத்தில் தன் குறும்பை நங்கை காட்ட, அங்கே ஒரு அழகான பாச பரிமாற்றமும் நடந்தேறியது.
அரசு, நங்கை மீது அதிகப் பாசம் வைத்திருந்தாலும், அதிகமாக அதை அவளிடம் காட்டிக் கொள்ள மாட்டான். அதே நேரம் அவளுக்கு ஒன்று என்றால் முதலில் துடித்துப் போவது அவனாகத் தான் இருக்கும்.
சிறியவர்களுக்குள் இருந்த பாச பிணைப்பை பார்த்து அவர்கள் விஷயத்தில் பெரியவர்கள் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
அப்படி ஒருவேளை தலையிட்டால் இதோ இப்போது போல ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி, தங்கள் பாசத்தைப் பறைசாற்றுவார்கள்.
மலையின் மீது முதலில் ஏறிய கனி, நங்கை, அரசு மூவரும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொள்ள, பெரியவர்கள் மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.
கனியின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்ட நங்கை “வலிக்குது மதினி…” என்று முனங்கினாள்.
“உன்னைத் தான் தமிழு ஓடாதேனு சொன்னான்ல… அப்புறமும் ஏன் ஓடின புள்ள?” என்று அவளைக் கடிந்துக் கொண்டவள் அவள் தலையை இதமாகக் கோதி விட்டாள்.
நங்கையின் காலடியில் அமர்ந்திருந்த அரசு மெதுவாக அவள் காலை தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டு காயத்தின் மீது ஊதி விட்டான்.
அவர்களை அப்போது தான் ஏறி வந்த பெரியவர்கள் பார்க்க… தங்கள் குழந்தைகளின் ஒற்றுமையைக் கண்டு மனம் நெகிழ்ந்தனர்.
பின்பு அனைவரும் சேர்ந்து பிள்ளையாரை தரிசித்து விட்டுக் கிளம்பியவர்கள் அடுத்துத் திருச்சியில் புகழ் பெற்ற ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்றார்கள்.
இன்னும் சிறிது நாட்களில் ஊரில் திருவிழா வருவதால் அனைவருக்கும் உடை எடுக்க வந்திருந்தார்கள்.
இரு குடும்பமும் ஒன்றாக வந்திருந்தாலும் செலவு தனித்தனி தான் என்பதால், அவரவர் குடும்ப நிலைக்குத் தகுந்தாற்போல் உடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்ததால் விலை ஏற்ற தாழ்வு அங்கே பிரச்சனை இல்லாமல் போனது. இப்பொழுதும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது நங்கைக்கு எடுக்கும் முறை வந்த போது இளம் ரோஸ் நிறத்தில் இருந்த பாவாடை, சட்டை ஒன்றை காட்டி அவள் உற்சாகமாக அது தனக்கு வேண்டும் என்று சொன்னாள். ‘சரி’ என்று அந்த உடையைப் பார்த்தார்கள்.
பிறகு என்ன விலை என்று பார்க்க, மருதனின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தது விலை. அதைக் கவனித்தவர் “இல்லை வேண்டாம்! வேற பாரு பவளம்!” என்றார்.
மருதன் நங்கைக்கு அதிகச் செல்லம் கொடுத்திருந்தாலும் சில விஷயங்களில் அவள் தன் சொல்லை தான் கேட்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர். இப்பொழுதும் மருதன் வேண்டாம் என்றதும் அவரின் முகத்தைப் பார்த்தாள்.
மருதனின் முகத்தில் தெரிந்த உறுதியை உணர்ந்து மனம் சோர்வுற்றாலும் தந்தை சொல்லிற்குப் பணிந்து ’சரி’ என்று தலையாட்டினாள்.
அதை அனைவரும் கவனித்தாலும் மருதன் குணம் புரிந்து அமைதியாக இருந்தனர்.
நங்கையின் முகம் சுருங்கி போனதை கவனித்த தமிழரசன் தன் அம்மாவின் கையைச் சுரண்டினான். அம்சவேணி அவனைக் கவனித்து ‘ஒன்றும் சொல்லாதே!’ என்று அடக்கினார்.
அவனும் அப்போதைக்கு அமைதியாகி போனான். நங்கைக்கு வேறு உடை தேர்ந்தெடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததில் இருந்து தமிழ் அவனின் அம்மாவை “ஏன் நங்காவிற்குப் பிடித்ததை வாங்கித் தரவில்லை?” என்று கேட்டு நச்சரித்தான்.
“உங்க மாமா காசு கொஞ்சம் தான் கடைக்கு எடுத்துட்டு வந்தாராம். அதான் வாங்கலை” என்று வேணி அவனைச் சமாளித்தார்.
“நம்ம அப்பா தான் நிறையக் காசு கொண்டு வந்தாரே! அவர் வாங்கிக் கொடுத்துருக்க வேண்டியது தான?” என்று கேட்டான்.
“அட…! என்னடா நீ! சும்மா கேள்வி கேட்குற…?” என்று வெளியே சலித்துக் கொண்டவர் ‘அப்படி வாங்கிக் கொடுத்தா அந்த அண்ணன் கௌரவக் குறைச்சலா எடுத்துப்பாரோனு நினைச்சு தானே எடுத்துக் கொடுக்கலை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.
அம்மாவின் சலிப்பில் அவரை விட்டு தன் தந்தையிடம் ஓடினான்.
எப்போதும் தமிழரசனுக்கும் அவனின் தந்தைக்கும் நல்ல பிணைப்பு இருந்தது. தாயை விடத் தந்தையிடம் நெருக்கம் அதிகம்.
அதனால் நாயகத்தைத் தேடி சென்றவன். வேணியிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டான். அவரும் வேணி சொன்னதையே சொல்லி சமாளிக்கப் பார்த்தார்.
“நீங்க ஏன் அம்மா சொன்னதையே சொல்றீங்கப்பா? நீங்க நங்காவுக்கு மாமா தானே? நம்ம வாங்கிக் கொடுத்தா என்ன தப்பு? நீங்க வாங்கிக் கொடுக்கலைன்னா போங்க. நான் நங்காவுக்கு மாமா தானே? நான் அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன். மாமா ஏதாவது சொன்னா! நான் அவள் மாமா… அப்படித் தான் வாங்கிக் கொடுப்பேன். நீங்க திட்டாதீங்கன்னு சொல்லுவேன். எனக்குக் காசு கொடுங்க நான் என் நங்காவுக்கு அவளுக்குப் பிடிச்ச ட்ரஸ் வாங்கிக் கொடுக்கணும்” என்று பிடிவாதமாக நின்றான்.
அவன் ஆசைபட்ட விஷயம் அவருக்கும் சரி என்று தோன்றியதால், மறுநாள் அவனை அழைத்துக் கொண்டு மீண்டும் திருச்சி சென்றவர் நேற்று நங்கை ஆசைபட்ட உடையை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “இங்க பாரு தமிழு! நீ விருப்பப்பட்டேன்னு அப்பா வாங்கிக் கொடுத்துட்டேன். ஆனா நீ தான் உன் மாமாவை சம்மதிக்க வச்சு இதைக் கொடுத்துட்டு வரணும். ஒருவேளை மாமா வேண்டாம்னு சொல்லிட்டான்னா நான் தலையிட மாட்டேன்” என்றார்.
உடை விஷயத்தில் ஏற்கனவே தலையிட்டு மருதனிடம் வேண்டாம் என்ற மறுப்பைச் சந்தித்திருந்ததால் தான் நேற்று அமைதியாக இருந்தார்.
ஆனால் தமிழின் பிடிவாதத்தின் பேரில் சம்மதம் சொன்னது போலக் காட்டிக் கொண்டாலும், அவருக்கும் நங்கைக்கு நன்றாக வாங்கித் தர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் தான் தமிழ் கேட்டதும் உடனே சம்மதம் சொன்னார்.
தன் தந்தையிடம் தலையாட்டி விட்டு அந்த உடையை எடுத்துக் கொண்டு நங்கையின் வீட்டிற்குச் சென்றான். அப்பொழுது மருதனும் வீட்டில் தான் இருந்தார்.
“மாமா நான் ஒன்னு சொல்லுவேன். அதுக்கு நீ சம்மதம் சொல்லணும்!” என்ற படி அவரின் முன் போய் நின்றான்.
“சொல்லுங்க மருமகனே! என்ன சொல்ல போறீக? என் மருமகன் சொல்லி கேட்காம இருக்க முடியுமா?” என்று சொன்ன படி அவனை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டார்.
“மாமா நான் உன் மருமகன் தானே?” என்று கேட்டான்.
“ஆமா… அதில் என்ன உனக்குச் சந்தேகம்? அது சரி…! அந்தக் கையில் என்ன கவரு?” என்று கேட்டார்.
அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் “நான் நங்காவுக்கு மாமா தானே?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.
“ஆமாப்பா…! ஆமா…! நீ மாமா தான்! ஆனா ஏன் இப்படிக் கேள்வி கேட்குறீக? என்னய்யா! என்ன விஷயம்?” என்று புரியாமல் கேட்டார்.
“அப்ப நான் அவளுக்கு ட்ரஸ் எடுத்தா தப்பில்லை தானே?” என்றான்.
அவன் கேள்வியில் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்தார்.
நாயகம் முன்பு ஒரு முறை நங்கைக்கு உடை எடுத்துக் கொடுக்க முன் வந்த போது “இல்லை நாயகம் வேண்டாம். என் சம்பாத்தியம் இவ்வளவு தான்னு தெரிஞ்சு அவ வாழ பழகட்டும். இப்ப அவ கேட்டதும் என்னால வாங்கித் தர முடியாம, நீ வாங்கித் தந்தா. அப்பாவால வாங்க முடியலைனா வாங்கித் தர நீ இருக்க. நீ வாங்கித் தந்துருவங்கிற எண்ணம் அவளுக்கு வந்திரும். அப்படி நிலைமை வரக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்” என்று சொல்லி நாயகத்தின் கையைக் கட்டிப் போட்டிருந்தார்.
இப்பொழுது தமிழின் கேள்விக்கு நாயகத்திடம் சொன்னது போலச் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
ஏன்னென்றால் நங்கை பிறக்கும் வரைக்கும் குழந்தை இல்லாமல் தவித்த போது அவர்களின் ஏக்கத்தைச் சிறிது குறைத்தவன் அவன் தான். அவர்கள் வீட்டில் இருந்த நேரத்தை விட அதிகம் இருந்தது இங்கே தான். தங்கள் மேல் அதிகம் பாசம் வைத்திருப்பவன். அதையும் விட அவனின் மீது ஒரு அலாதி பிரியம் மருதனுக்கு உண்டு. அதனால் அவனுக்கு மறுப்பு என்று ஒன்று சொல்ல மருதனுக்கு வாய் வர வில்லை.
“மாமா பதில் சொல்லு!” என்று அவரைப் போட்டுத் தமிழ் உலுக்க… அவனின் உலுக்கலில் ‘சம்மதம்’ என்று தானாக அவரின் தலை ஆடியது.
“சூப்பர்…! மாமான்னா மாமா தான்!” என்று குதூகலித்தவன், “நங்கா இந்தா… இந்த ட்ரஸ் வாங்கிக்கோ! இதைத் தான் நீ திருவிழாவுக்குப் போட்டுக்கணும்” என்று அவளிடம் போய்க் கொடுத்தான்.
அவள் அவனிடம் வாங்குவதற்கு முன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தாள்.
அவரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் பார்வையில் இருந்த ஆசையைப் பார்த்து ‘சரி’ என்று தலையசைத்தார்.
நங்கையும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.
பின்பு உடையை எடுத்து பார்த்துச் சிறுவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் மருதன்.
அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்த படி நின்றிருந்த ஈஸ்வரி ‘ஹக்கும்…! மருமகன் ஒன்னு சொல்லிட்டா சந்தோஷமா தலையாட்டிற வேண்டியது’ என்று சந்தோஷமாக மனதிற்குள் அலுத்துக் கொண்டார்.
திருவிழா அன்று அந்த உடையைப் போட்டுத் தமிழிடம் போய் நின்று “நல்லா இருக்கா மாமா?” என்று கேட்டாள்.
“கவுனை விடப் பாவாடை, சட்டை தான் உனக்குச் சூப்பரா இருக்கு நங்கா!” என்று மகிழ்ந்து பாராட்டினான் தமிழ்.
அதன் பிறகு வந்த விஷேச நாட்களில் மருதனை எப்படியாவது சம்மதிக்க வைத்து நங்கைக்கும் தன் வீட்டில் ஒரு உடை எடுக்க வைத்து விடுவான்.
அது பின்பு ஒரு பழக்கமாகவே அவர்களுக்குள் மாறி விட்டது.