கண்கள் தேடுது தஞ்சம் – 11
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 11
அன்று காலையில் திருச்சி நூலகத்திற்குச் செல்ல நங்கையும், வாணியும் திட்டமிட்டிருந்தார்கள்.
நங்கை முதலில் கிளம்பி அந்த ஊர் பேருந்து நிறுத்தமாகப் பயன்பட்டு வரும் மரத்தடியில் சென்று நின்று கொண்டிருந்தவள் வாணி வருகிறாளா இல்லையா? என அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது “என்னமா நங்கை! இன்னும் உன் சோட்டு(தோழி) பிள்ள வரலையா?” எனக் கேட்டார் அந்த மரத்தடியின் எதிரே டீ கடை வைத்திருந்தவர்.
“இல்லைண்ணே. இன்னும் வரல. இப்ப வந்திருவான்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் வீடுகள் இருக்கும் பக்கம் பார்த்தாள்.
அந்த ஊருக்கு வந்து செல்லும் பேருந்து வழக்கமாக ஊருக்கு வெளியே விளையாட்டு மைதானம் போல இருக்கும் இடத்தில் தான் வந்து நிற்கும். அங்கிருந்து வீடுகள் இருக்கும் பகுதிக்கு செல்ல சிறிது தூரம் நடந்து உள்ளே செல்ல வேண்டும்.
பேருந்து வர இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க ‘என்னடா இவ இன்னும் காணோம். எப்பயும் எனக்கு முன்ன வந்து நிப்பா. இன்னைக்கு இன்னும் காணுமே?’ என்று நினைத்துக் கொண்டே நிற்க… அவள் கையில் இருந்த போன் ஒலி எழுப்பியது .
வீட்டில் அவ்வளவாகப் போனை பயன்படுத்தாத நங்கை, இப்படித் திருச்சி செல்லும் போது மட்டும் போனை பயன்படுத்துவாள். போனில் யார்? என எடுத்து பார்க்க… வாணி தான் அழைத்திருந்தாள். ‘என்ன இப்ப போய்ப் போன் பண்ணிட்டு இருக்கா?’ என்று யோசித்தப்படி போனை எடுத்துக் காதில் வைக்க “ஏ நங்கை…! நீ இன்னும் பஸ் ஸ்டாண்டுக்கு போகலை தானே?” என எடுத்தவுடன் வாணி அவசரமாகக் கேட்டாள்.
‘நான் இங்க வந்து காத்துக் கிடக்குறேன். இப்ப போய் என்ன கேள்வி கேட்குறா பாரு?’ என்று கடுப்படைந்த நங்கை “அடியே…! நான் அங்க தான் நிக்கிறேன். நீ என்ன இன்னும் வராம போன் போட்டுட்டு இருக்க? சீக்கிரம் வா!” என்றாள்.
“ஏன்டி எப்பயும் பஸ் வந்து நிக்கிறப்ப தான அரக்க பறக்க ஓடி வருவ! இன்னைக்கு என்ன அதிசயமா இப்பயே வந்து நிக்கிற?” என்று வாணி அதிசயமாகக் கேட்டாள்.
“எப்பயும் தான் லேட்டா வர்றேனே. இன்னைக்காவது சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன்” என்றாள் நங்கை.
“நல்லா வந்த போ! நான் இன்னைக்கு வர முடியாதுன்னு சொல்ல தான் போன் போட்டேன். அதுக்குள்ளே நீ வந்து நிக்கிற. அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு முடியலடி… படுத்திருக்கு! இன்னைக்கு வீட்டு வேலை எல்லாத்தையும் நான் தான் பார்த்தேன். அதுல இன்னைக்கு நாம திருச்சி போறதே மறந்துருச்சு. இப்ப தான் ஞாபகம் வந்து போன் போட்டா. நீ அங்க நிக்கிறனு சொல்ற. இப்பயும் ஒன்னும் கெட்டு போகல. நீ கிளம்பி வீட்டுக்கு போ! நாள பின்ன நாம போய்க்கிலாம்!” என்றாள் வாணி.
“என்னடி விளையாடுறியா? புக் எல்லாம் இன்னைக்கே கொடுக்கணும். முன்ன ஒரு தடவை இப்படித் தான் ஒரு நாள் லேட்டா புக் கொடுத்ததுக்கே அந்த லைப்ரரியன் கத்தினார். பைன் வேற போட்டார். அன்னைக்கே அம்மா வீட்டுக்கு வந்ததும் நீ பைன் கட்டி ஒன்னும் கதை படிக்க வேணாம்னு திட்டி தீத்துச்சு. இனி இப்படி லேட்டா கொண்டு வராதீங்கன்னு அவர்கிட்ட வேற திட்டு வாங்கினோம்.
இன்னைக்கும் கொடுக்கலைனா திரும்ப அதே திட்டு விழும். அப்புறம் எங்க அம்மா இனி லைப்ரரி பக்கமே விடாது. இது தேவையா சொல்லு? இருக்குற ஒரு பொழுதுபோக்கையும் என்னால விட முடியாது. நீ எடுத்துட்டு வந்த புக்கும் என் கிட்ட தானே இப்ப இருக்கு? நானே போய்க் கொடுத்துறேன். நீ அம்மாவை பார்த்துக்க!” என்றாள் நங்கை.
“ஏய்…! சொன்னா கேளுடி! தனியா போக வேணாம். அந்த லைப்ரரியன் கிட்ட பேசிக்கலாம்” என்று வாணி சொன்னதைக் காதில் வாங்காமல், “நீ போனை வை! பஸ் வந்திருச்சு” எனச் சொல்லிவிட்டு வந்து நின்ற பேருந்தில் ஏறி அமர்ந்தாள் நங்கை.
வாணி சொல்ல, சொல்ல கேட்காமல் கிளம்பினதினாலோ என்னவோ பேருந்து பாதித் தூரம் சென்ற பிறகு ஏதோ ஒரு மாதிரியாக உணர்ந்தாள்.
ஒருவேளை அன்றைக்கு போல அந்தக் கதிர்வேல் பின் தொடர்கின்றானோ? என நினைத்து பேருந்தை சுற்றிலும் தன் பார்வையை நன்றாகச் சுழல விட்டாள். அவன் அங்கே இல்லாதது உறுதி ஆனதும் நிம்மதி மூச்சு விட்டுவிட்டு தன் தோழி அருகில் இல்லாததால் வித்தியாசமாகத் தோன்றுகின்றது என நினைத்து மனதை அமைதி படுத்திக்கொண்டு வந்தாள்.
ஆனாலும் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது மனதின் சஞ்சலம் கூடித்தான் போனது.
‘என்னது இப்படி இருக்கு?’ என்று நினைத்துக் கொண்டே நூலகம் வந்து சேர்ந்தவள், தன் கையில் இருந்த புத்தகங்களைக் கொடுத்து விட்டு வேறு புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வந்தவள் இன்று வாணி இல்லாததால் வெளியே எங்கும் செல்ல முடியாது என்பதால் வெளியே செல்லாமல் நூலகத்திற்குள்ளேயே புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினாள்.
பின்பு மணியைப் பார்க்க பன்னிரண்டு ஆகியிருந்தது. அடுத்து அவள் ஊருக்கு செல்ல பேருந்து ஒரு மணி நேரம் கழித்துத் தான் என்பதால் நேரத்தை போக்க அங்கே இருந்த படிக்கும் இடத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
படிக்கப் படிக்க அதன் சுவாரஸ்யத்தில் அந்தப் புத்தகத்தினுள் மூழ்கிப் போனவள் அதை முடித்து விட்டே தலையை நிமிர்த்தினாள்.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மணியைப் பார்க்க மணி நான்கு எனக் காட்டியது.
‘அட கடவுளே! ஒரு மணிநேரம் படிக்கணும்னு நினைச்சுட்டு இப்ப நாலு மணி வரை படிச்சுட்டு இருந்துட்டேனே’ என்று தன்னையே திட்டிக் கொண்டவள் ஊருக்குக் கொண்டு செல்லும் புத்தகத்தைக் காட்டி பதிவு செய்து விட்டு ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையத்தை நோக்கி சென்றாள்.
அவள் ஊருக்குச் செல்லும் பேருந்து வர இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்ததால் வேர்க்க விறுவிறுக்க நடந்தவள் பேருந்து நிறுத்தத்தில் தான் போய் நின்று நிதானமாக மூச்சு விட்டாள்.
அப்படியும் நிதானமாக மூச்சு விட முடியாமல் தன் ஊருக்குச் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தைப் பார்த்தவள் மூச்சு நிதானம் தப்பியது.
ஏனெனில் அந்த அளவு அந்தப் பேருந்திற்காக நிறையப் பேர் காத்திருந்தனர். ‘என்னடா இது இம்பூட்டுக் கூட்டம் நிக்குது?’ என்று நினைத்தவளுக்கு அப்போது தான் இன்று முகூர்த்த நாள் என்று ஞாபகம் வந்தது.
‘நிறைய விசேஷத்துக்கு மக்கள் போய்ட்டு திரும்புறாங்க போல? அதான் இம்புட்டுக் கூட்டம் வந்துருச்சு. சரி தான் இன்னைக்குக் கூட்டத்தில் நல்லா நசுங்க போறோம். எப்படியாவது முன்னாடி சீக்கிரம் ஏறிட்டா சீட் பிடிச்சு உட்கார்ந்திரலாம்’ என்று எண்ணமிட்ட படி பேருந்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
கூட்டத்தில் நசுங்காமல் இருக்க எப்படியாவது முன்னே ஏறிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவள் தான் அன்று அணிந்து வந்திருந்த புதுச் சுடிதாரின் துப்பட்டாவை நன்றாகச் சரி செய்து கொண்டு தயாராக நின்றாள்.
அன்று பார்த்து அரைமணி நேரம் தாமதமாகத் தான் பேருந்து வந்தது. அந்தத் தாமதத்தில் இன்னும் கொஞ்சம் ஆட்களும் கூடி இருந்தனர்.
பேருந்தும் வந்து நிற்க, கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்துக்கொண்டு படிகளில் கால் வைத்து ஏறியவள் திடீரென அதிர்ச்சி அடைந்தாள். ஏறும் போது தன்னிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து வேகமாகப் பேருந்தின் உள்ளே நுழைந்து படியின் பக்கத்தில் இருந்த சீட்டில் வேகமாகப் போய் ஜன்னல் ஓரமாக அமர்ந்தாள்.
ஜன்னலை ஒட்டி அமர்ந்தவள் தன் சுடிதாரின் இடது பக்க கையின் பக்கம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
தன் துப்பட்டாவை இன்னொரு கையினால் நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டாள். கையில் வைத்திருந்த பேக்கை எடுத்து இடது இடை பக்கம் தன்னை மறைப்பது வைத்துக் கொண்டாள்.
நங்கையின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது. அதைத் தன் அருகில் அமர்ந்திருப்பவருக்குத் தெரியாமல் குனிந்துக் கொண்டாள்.
அவளின் உடலில் லேசான நடுக்கம் ஓடிக் கொண்டிருந்தது. தலை நிமிராமல் ஓரக்கண்ணால் பேருந்தில் உள்ள கூட்டத்தைப் பார்த்தாள். பேருந்தே நிறைந்து வழிந்தது.
இவ்வளவு கூட்டத்தில் தான் நிற்க நேராமல் இருக்கையில் அமர முடிந்ததில் சிறிது நிம்மதி அடைந்தாள்.
ஆனாலும் மனதில் பதட்டம் சிறிதும் குறையவில்லை. ‘இப்படியே எப்படி வீடு போய்ச் சேருவோம்?’ என நினைத்து அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
லேசாகக் கண்ணை மட்டும் உயர்த்திக் கண்களைப் பேருந்து முழுவதும் சுழல விட்டாள். அவள் ஊரை சேர்ந்த ஓரிருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் போகும் வழியில் உள்ள மற்ற ஊரை சேர்ந்தவர்கள்.
தன் ஊரை சேர்ந்த அந்த ஓரிருவரிடம் நிச்சயம் அவளால் இதைச் சொல்லி உதவி கேட்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
என்ன செய்யப் போகிறேன்? இதோடு பஸ்ஸை விட்டு இறங்கி வீடு வரை நடக்க வேண்டும். அப்பொழுது ஆள்நடமாடம் இருக்கும் என்பதால் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்துப் போனாள்.
பேருந்து செல்ல ஆரம்பித்துச் சிறிது நேரம் சென்றிருக்க வழியில் ஏதோ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.
அதனால் பேருந்து செல்ல வழி இல்லாமல் டிராபிக்கில் தேங்கிவிட, இது என்னடா எனக்கு வந்த சோதனையா? என்று வருந்தியவள் பேருந்து நிற்கும் போது ஜன்னல் வழியாகத் தன் நிலை ஒருவேளை தெரியுமோ என்று நினைத்து அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு பக்கமாகத் திரும்பி அமர்ந்தாள்.
அவளின் இத்தனை அவதிக்கும் காரணம் அவள் பேருந்து வரவும் இடம் பிடிக்க வேகமாக ஏற, அவளைப் போலவே மற்றவர்களும் ஏறினார்கள்.
அப்படி ஏறும் போது அவள் அணிந்திருந்த சுடிதாரின் மேலாடை முட்டிக்கு கீழே வரை இருக்கும். ஏறும் போது இவள் மேல் படியில் கால் வைத்திருக்கும் போது அவள் கால் வைத்த படியில் அவளுக்குப் பின்னால் மற்றவர்களும் அவசரமாக ஏற முயன்றதில் அவளின் பின்பக்க சுடிதாரின் துணியை யாரோ மிதித்து விட, அது கொடுத்த அழுத்தத்தில் தொடையில் இருந்து கை வரை இருந்த தையல் அப்படியே பிரிந்து விட்டது. அதை உணர்ந்ததுமே தன் கையைக் கொண்டு வேகமாக அந்தப் பிரிந்த இடத்தில் பிடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த இருக்கையில் சட்டென அமர்ந்து விட்டாள்.
புது சுடிதாரில் ஓடு தையல் என்னும் பெரிய தையல் போடுவதால் தையல் அவ்வளவு உறுதியாக இருக்காது. சில சுடிதாரில் இன்னொரு ஓவர் லாக் தையல் இருக்கும். ஓடு தையல் பிரிந்தால் கூட அந்த ஓவர் லாக் தையல் தான் பல சமயங்களில் உறுதி கொடுக்கும்.
ஆனால் நங்கை எடுத்திருந்தது அது போல எக்ஸ்ட்ரா ஓவர் லாக் தையல் இல்லாத ஓடு தையல் மட்டுமே இருந்த சுடிதார் என்பதால் ஒரு அழுத்தத்திற்கே தாங்காமல் பிரிந்து விட அது இப்போது அவளை அவஸ்தையில் நெளிய வைத்து விட்டது.
அவள் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவும் மெல்லிய துணியினால் ஆனது. எனவே அதனைக் கொண்டும் மறைக்க வழி இல்லாமல் போனது.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒன்று தோன்ற, தன் போனை கைப்பையில் இருந்து எடுத்து பார்த்தவள் முகம் திகைப்படைந்தது.
‘ச்சே…! வீட்டுக்கு போன் போட்டு அம்மாவை பஸ் ஸ்டாப்பு வர சொல்லி எப்படியாவது போய்ருவோம்னு பார்த்தா இந்தச் செல்லில் சரியா நேத்து சார்ச் போடாம விட்டு இப்ப அதுவும் காலை வாரிடுச்சே’ என்று கடுப்பாக முனகி கொண்டே திரும்ப உள்ளேயே போட்டாள்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கண்ணீர் வர ஆரம்பித்தது. அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் குனிந்த படி தையல் பிரிந்த இடத்தை இறுக பற்றிய படி இருந்தாள்.
என்னதான் தைரியசாலியாக, துடுக்குதனம் நிறைந்தவளாக இருந்தாலும் இந்த நிலையில் அவள் மனம் கலங்கி தான் போனது.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். இப்பொழுது ஊர்வலம் வேறு பக்கம் சென்றிருக்கப் பேருந்து நகர ஆரம்பித்தது.
பேருந்து போவதும் நிற்பதும் மற்ற ஊரில் ஆட்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்க, எதுவும் நங்கையின் கவனத்தைக் கலைக்க வில்லை. பயணச்சீட்டு வாங்கும் போது மட்டும் பேருந்தின் உட்புறம் திரும்பியவள், மற்ற நேரம் எல்லாம் வெளியே வெறித்த படி வந்தாள்.
இன்னும் அவள் ஊர் வர இரண்டு நிறுத்தம் மட்டுமே இருந்தது. ஊர் நெருங்க, நெருங்க அவளில் பதட்டம் கூடிக் கொண்டே போனது.
தான் இறங்கும் போது உடை கிழிந்த பக்கம் தன் உடல் தெரிந்து விடுமோ? யாராவது தன்னை இப்படிப் பார்த்தால் என்னாவது? தன் பையை வைத்து மறைத்தாலும் ஒரு பக்கம் முழுவதையுமே மறைப்பது கஷ்டம். வேறு யாரிடமும் உதவி கேட்கவும் முடியாது. இப்படியே எப்படி இறங்கி வழியில் உள்ள பல வீடுகளைத் தாண்டி வீடு போய்ச் சேருவேன்?
அதுவும் கிராமம் என்பதால் மாலை நேரம் ஆட்கள் வயல்களுக்குப் போய்விட்டு திரும்புவார்கள். சிலர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அதை விடப் பேருந்து நிற்கும் மைதானத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் இந்த நேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இத்தனை பேரையும் தாண்டி வீடு போய்ச் சேர வேண்டுமே என்று நினைத்தவளுக்கு மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
இன்னும் ஒரு நிறுத்தம் மட்டுமே இருப்பதைக் கவனித்தவள் பேருந்தின் உள்ளே திரும்பி கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தாள்.
அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் பக்கத்தை அலச, ஒரு பத்து பேர் மட்டும் இருந்தனர். அதில் அவள் ஊரை சேர்ந்த நான்கு ஆண்கள் மட்டும் இருந்தார்கள். அவள் அமர்ந்திருந்த பக்கம் இருந்தவர்கள் அனைவரும் இறங்கியிருந்தார்கள்.
தனக்குப் பின்பக்க இருக்கையில் யாரும் இருக்கிறார்களா? என்று பார்த்தவள் முகம் ஒரு நொடி திகைப்பிற்குச் சென்று மீண்டது.
அதுவரை அவளின் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் கடகடவெனக் கன்னம் தாண்டி வழிந்தது. தன்னுடைய இத்தனை நேர தவிப்பும் விலகி ஓடினது போல நிம்மதியாக உணர்ந்தாலும் இன்னும் நிற்காத கண்ணீருடன் பேருந்தின் பின்பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கே அந்தப் படிகளுக்கு அந்தப் பக்கம் கடைசியாக இருந்த இருக்கையில் கைகளைக் கட்டிய படி அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் பைந்தமிழரசன்.