என் வாசம் நீ உன் சுவாசம் நான்-8

அவள் வந்தது என்னவோ மகேஷைப் பற்றி கேட்கத்தான். ஆனால் ஏனோ தயங்கினாள். இருப்பினும் ,
அவளுக்கு அவனிடம் வேறு சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது. அதனால்,
கதவைத் தட்டிவிட்டு உள்ளேச் சென்றாள் .
அவன் ஸ்ரீதரிடம் கைப் பேசியில் பேசிக் கொண்டிருந்தான். இவளோ பைலை ஓரமாக வைத்து விட்டு அன்று வந்திருந்த தபால்களை பார்த்து அதில் இருந்து தனக்கு தேவையானது , மற்றவர்களுக்குத் தேவையானது என்று பிரித்துப் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அவன் அருகிலேயே அவள் நின்றுக் கொண்டிருந்தாள். அவளை அவன் ரசிக்கத் தோன்றினாலும் அவளை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை. அவள்தான் இப்போது இன்னொருவரின் மனைவியாயிற்றே?
இவளோ தபால்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் , அவனின் குரல் அவளை மயக்கியது. அவன் கையில் பேனாவை வைத்து ஆட்டிக் கொண்டிருந்தான்.
அவனின் கை அசைவு அவளுக்கு ஏதேதோ நினைவுகளைக் கிளறியது. இதே கைகளில் அவள் முகம் மூடி தனது துக்கங்களை எல்லாம் சொல்ல நினைத்ததுண்டு. இவள் கன்னத்தில் கை வைத்து ஆசை வார்த்தை பேச மாட்டானா? என்று ஏங்கிய நாட்களை நினைவு படுத்தியது.
இதேபோலத்தான் அவன் வீட்டில் அவன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்போதும் அவன் கைகளில் ஆட்டிக் கொண்டிருந்த பேனாவை சட்டெனப் பிடுங்கினாள் . “நோ! பிஜேடிங்” . அப்போதும் இதே வார்த்தையைத்தான் சொன்னாள் .
ஒருஞாயிறு காலையில் அவன் வீட்டிற்கு இவள் வந்தாள் . அவன் அன்னை படுத்திருந்தார்.
“ஆன்டி என்னாச்சு? “
“ஒன்னும் இல்லமா ! இந்தக் காலு நிக்க முடியல. இந்த மாதிரி சீசன் மாறும்போது எனக்கு வர்ற பிரச்சனைதான்”.” நீ என்ன சாப்பிடுற? காபி டீ யா ? “மெதுவாக எழுந்துக் கொள்ள முற்பட்ட போது,
“இல்ல ஆன்டி! எனக்கு எதுவும் வேணாம். சும்மாதான் உங்கள பாக்கலான்னு வந்தேன். எக்ஸாம் முடிஞ்சுருச்சு. அதான் போரிங்கா இருக்கேன்னு உங்களை பாக்க வந்தேன்”
“சரி! உங்களுக்கு என்ன வேணும்? நான் செய்து தரேன்”
“எனக்கு எதுவும் வேணாம். சூர்யாக்குத்தான் டீ போடணும். இப்ப டீ குடிச்சாதான் 2 மணிக்கோ 3 மணிக்கோ சாப்பிட வருவான்”.
“ஏன் அவ்ளோ லேட் ? நானும்தான் CA படிச்சேன். அதுக்காக சாப்பாட்டை எல்லாம் தியாகம் பண்ணதில்ல. ஆனா சரியா தூங்க மாட்டேன்.” சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குப் போனாள் .
” உங்களுக்கு டீ வேணுமா ?” கேட்டுக் கொண்டே அவனுக்கு மட்டும் டீ போட்டு எடுத்துப் போனாள் . அப்போது வாயில் பேனாவை வைத்துக் கொண்டிருந்தான்.
சட்டென பிடுங்கியவள்,
“என்ன பழக்கம் இது ? வாயில வைக்கறது ?” சிடுசிடுத்தாள் .
“ஏன் வாயில் வைச்சா என்ன ?” கோபமாக முறைத்தான் .
“இது எல்லாம் சரஸ்வதி. வருசத்துல ஒருநாள் வச்சு பூஜை பண்ணா மட்டும் போதாது. எப்பையுமே அதுக்கான ரெஸ்பெக்ட் குடுக்கணும்”.
சட்டென அவள் கையில் இருந்து பிடுங்கி, “அப்பிடித்தான் வைப்பேன். என்னடி பண்ணுவ ? “
இவளுக்கும் அவனுக்கு போட்டியாக கோபம் வந்துவிட்டது.
“போங்க! எதைவேணா வாயில வைங்க, காதுல வைங்க, மூக்குல வைங்க. எதுல எவ்ளோ ஜெர்ம்ஸ் இருக்கோ. ஊரெல்லாம் கோவிட் வருது. எத்தனை விளம்பரம் பண்ணறாங்க ? CAT டுக்கு படிச்சா மட்டும் போதாது” மூக்கு விடைக்க முகம் சிவந்து அவள் கோபப் படுவது அவனுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவளின் கோபத்தை அவனால் தாங்க முடியவில்லை. அருகில் இருந்த ஸ்டூலில் இருந்த புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு, அவளை அங்கே அமரச் செய்தான்.”
” டீ நீயா போட்ட ?” கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் .
“இதையாவது வாயில வச்சு குடிக்கலாமா ? இல்ல காத்துல தான் வச்சுக் குடிக்கணுமா ? காத்துலேர்ந்தும் ஜெர்ம்ஸ் வருமே? கிண்டலடித்தான் .
“சார்! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. உங்கள நம்பி உங்க அம்மா இருக்காங்க” (யம்மா ஊரு உலகத்துல போய் பாரு, அதது கஞ்சா அடிக்குது. நீ பேனாவை வாயில வச்சதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா ? )
“ஏய்! நீ சீரியஸா பேசாத. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது”
கோபத்தோடு எழுந்து போனவளின் கையை பிடித்துக் கொண்டான்.
“இனிமே நான் எதையும் வாயில வைக்க மாட்டேன், சரியா?” அவளின் கண்களை பார்த்து சீரியசாகச் சொன்னான்.
“சரி!” ஆமோதிப்பாக தலையை ஆட்டியவள் ,அங்கிருந்த கப்பை குனிந்து எடுத்தாள். அவளின் அருகாமை யப்பா……. மூளையின் பரபரப்பை நீக்கியது. மிகவும் ரிலாக்ஸாக உணர்ந்தான்.
தன் எண்ணங்களை மாற்ற எண்ணியவள் , சட்டெனெ அவன் கைகளில் இருந்து பேனாவைப் பிடுங்கினாள் . “நோ! நோ! பிஜேடிங் ” (சிம்பிள் பாஸ்ட் சிம்பிள் ப்ரெசென்ட் சிம்பிள் பியூச்சர் எல்லாத்துலயும் இதேதானா ? )
அவன் உதடுகள் லேசாக விரிந்தது. அதற்க்கு முன் கண்கள் அவன் ரசனையைக் காட்டி விட்டது. அன்றும் இதே போலத்தான் ரசித்திருந்தான் .
எப்போதுமே அவன் சிரிப்பு அழகுதான். ஆனால் அப்போது ஒல்லியாக இருந்ததால் அத்தனை பெரியதாக தெரியவில்லை. இப்போது மீசைக்குள் இருந்து லேசாக வெளியில் தெரியு ம் பற்கள், மேகத்திற்குள் இருந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல தோன்றியது.
அவனை ரசிக்கும் இவளை அவன் ரசித்துக் கொண்டிருந்தான். இருவருக்குமே அந்த மன நிலையில் இருந்து வெளியில் வர விருப்பம் இல்லை. இவ்ளோ அழகா காதலிக்கும் ஜோடியை வெளியில் கொண்டு வர எனக்கும்தான் இஷ்டம் இல்லை. ஆனா பொழப்பு இருக்கே. இது ஆபீசு. எல்லாரும் ரசனையை விட்டுட்டு, “கணக்க பாக்கப் போலாமா ? ” (மக்களே கேட்டது நான் இல்ல, சந்திரா)
அவன் புரியாமல் அவளை பார்த்தான். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டான்.
“சார்! நீங்க கொஞ்ச நேரம் பிரீனா பெண்டிங் பேமண்ட்ஸ் பத்தி கொஞ்சம் பாக்கணும். ஸ்ரீதர் சாரால கொஞ்சம்தான் பாக்க முடிஞ்சது. நீங்க கொஞ்சம் பார்த்துட்டு சொன்னீங்கன்னா நான் பேச வேண்டியவங்ககிட்ட பேசிடுவேன்.
“ரைட் “
அவனுக்கு விவரங்கள் தெரியாது என்பதால் ஒவ்வொரு டீலரைப் பற்றியும், பொருட்கள் சப்ளை செய்பவர்கள் அது இதுவென சிறிது நேரம் என்று ஆரம்பித்தது, நேரமும், வேலையும்,நீண்டுக் கொண்டே போனது.
சிறிது நேரத்தில் அவளுக்கு தலை வலிப்பது போல இருந்தது. அவள் வாயால் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் , அவன் கேட்டான்.
“என்ன சந்திரா டயர்டா இருக்கியா ? காபி சொல்லவா ?”
“ம்ம்! சொல்லுங்களேன் சார் . ப்ளீஸ்” எப்போதுமே அவள் அவனை சார் என்றுதான் அழைப்பாள். இருந்தாலும் அதில் ஏதோ ஒரு உரிமை இருக்கும். இப்போதும் அதை அவன் உணர்ந்தான்.
நெற்றியில் கை வைத்து லேசாக சாய்ந்துக் கொண்டாள் . பார்க்கப் பாவமாக இருந்தது. நீ எனக்கு உரிமையான்வளா இருந்திருந்தா நானே உனக்கு தலை பிடிச்சுருப்பேன் மனம் வலித்தது. வார்த்தைகளை மாற்றிக் கொண்டான்.
“நாம நாளைக்கு பார்த்துக்கலாம் சந்திரா”. பியூன் வந்து காபி தந்தான். அவனிடமே மற்றவர்களிடம் கொடுக்க வேண்டிய கடிதங்களை கொடுத்தனுப்பினாள்.
“இல்ல சார். நெக்ஸ்ட் மந்த் நான் போகறதுக்குள்ள முடிஞ்ச வரைக்கும் முடிச்சுக் குடுக்கணும். இதுல நிறைய பேருக்கு என்னைதான் தெரியும். எனக்குத்தான் யார்கிட்ட எப்படி பேசி பேமண்ட் வாங்கனுன்னு தெரியும்”.
“இதெல்லாம் நீ பாக்க வேண்டிய வேலை இல்லையே ? நீ இல்லன்னா கம்பெனி ஒடாதா ?” கண்னை ச் சுருக்கி கேட்டான் சூர்யா.
“அப்படி இல்ல சார். இதுல எல்லாருமே பெரிசா பிஸ்னஸ் பண்ணறவங்கன்னு சொல்ல முடியாது. நிறைய பேரு சின்ன சின்ன கடைகள்தான் வச்சிருப்பாங்க. ஆனா நம்ம ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் நிறைய போகும். கடை பெரிசா இருக்காது. ஆனா வியாபாரம் நல்லா போகும். அவங்ககிட்ட பேசும்போதே என்னன்னே எப்படி இருக்கீங்க ? வீட்டுல அக்கா எப்படி இருக்காங்க? இதெல்லாம் கேட்கணும். அப்டி பேசினா அவங்களுக்கும் ரொம்ப கம்பர்ட்டபிலா பீல் பண்ணுவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ட்ரிக். அதெல்லாம் அவங்ககிட்ட பேச பேசத்தான் வரும். வெறும் பிஸ்னஸ் டீலிங்கா மட்டும் நான் பாக்கறதில்லை சார்”.” அது மட்டும் இல்லாம இந்த கம்பெனி ஆரம்பிச்சதுலேர்ந்து நான் இங்கிருக்கேன். இதுதான் என் வேலைன்னு நான் செய்ததில்லை”.

“எஸ் ! ஐ க்னோ . ஐ கான் அண்டர்ஸ்டாண்ட். நீதான் ரிலேஷன்ஷிப் எப்படி மைண்டைன் பண்ணுவன்னுத் தெரியுமே ? ” இருவரும் காபியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தனர்.
அங்கே சிறிது மௌனம் நிலவியது.
சந்திரா, மகேஷ் பத்தி கேட்கலாமா ? எப்படி கேட்க? நாம ஏதாவது கேட்டா இவரும் அவனை பத்தி ஏதாவது கேட்பாரோ ? மனதில் கேட்கலாமா வேணாமான்னு இங்கி பிங்கி பாங்கி போட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ தைரியமாவே கேட்கலாம் சந்திரா” அவளின் கண்களைக் கூர்மையாக வைத்துக் கொண்டுச் சொன்னான். “எதைப் பத்தி?” இவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“மகேஷப் பத்தி ? “
உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது ?
“அதான் உன்னோட கண்ணும் முகமும் சொல்லுதே சந்திரா ?”
இத்தனை அழகாய் பேசியவன் ஏனோ வருங்காலத்தில் சந்திராவின் முகத்தையும் கண்களையும் பார்த்து அவளை புரிந்துக் கொண்டிருந்தால் , சந்திரா பிரசவத்திற்குப் பிறகு உயிருடன் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டாளோ?
பூக்கள் பூக்கும்…………