என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

வழக்கம் போல அவனே அவளை காரில் அழைத்து வந்தான். அவளுக்கு இந்த தனிமை பிடித்திருந்தது. இவர்கள் இருவருக்கும் பிடித்த பாடல் ……….

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் வரிகள் சந்திராவை பார்த்த நாளில் இருந்து சூர்யாவுக்கு பிடிக்கும், அதுவே இன்று…….
அன்றாடம்போகும்
பாதையாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீவந்துஎன்னை மீட்டுச்செல்வாய்
என்றுஇங்கேயேகால்நோக
கால்நோகநின்றேன்
ஏனோ தன்னையே அந்த கதாநாயகியாக நினைத்திருந்தாள் சந்திரா . சூர்யாவிடம் இப்போது எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது.
பேசக் கூடாது என்று பொறுமையாக மனதை அடக்கியவனால் வாயை அடக்க முடியவில்லை.
“எதுக்கு சந்திரா எல்லா தடவையும் தனியாவே வர்ற ? உன்னோட ஹஸ்பண்ட் வரமாட்டாரா ? அன்னிக்கு ஆபிசுக்கு கூட வந்தாரு இல்ல ? நீ ஏன் எனக்கு இன்றோ கொடுக்கல? பாவம் நீ எப்படி குடுப்ப? இவன் என்னோட முன்னாள் காதலன். பிச்சைக்காரன். அதனால கை கழுவிட்டேன்னு சொல்லுவியா?”
அவள் பதில் பேச முடியாமல் தவித்ததை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான்.
“உனக்கு தான் கல்யாணம் ஆகலையே? அப்புறம் இந்த குழந்தைக்கு அப்பா ? நீதான் காசுக்காக என்ன வேணா செய்வியே ? இந்த குழந்தைக்கு என்ன விலை பேசி இருக்க? எங்கம்மா உன்ன பெத்தபொண்ணாதானே பார்த்தாங்க?அவங்கள ஏமாத்த எப்படிடி உனக்கு மனசு வந்தது?நீ இஷ்டத்துக்கு எங்க வீட்டுக்கு வரும்போது உன்ன சந்தேகப்பட தோணல. சீ !பணத்துக்காக இப்ப எத்தனை பேர் வீட்டுக்கு போறியோ ?”
அவன் கன்னத்தில் பளீரென்ற அறை விழுந்தது.
“இது ஆன்டியோட வளர்ப்பை அசிங்கப்படுத்தினத்துக்கு” சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள் .
அதிர்ச்சியில் இருந்தான் சூர்யா.
வீட்டிற்கு வந்தவளுக்கு அமர்ந்து அழ கூட முடியாமல் ராகவ் வந்திருந்தான். எப்போதும் போல இவள் வந்த உடனே பின்னோடே வந்தான்.
“ப்ளீஸ்! என்ன விட்டுடுங்க,உங்களுக்கு தான் உங்க பொண்டாட்டி இருக்காளே? கெஞ்சினாள்.
“அவ இருக்கா. அவகிட்ட என்ன இருக்கு? ஒன்ன மாதிரி அழகு? எப்படி தளதளன்னு இருக்க? வயத்துல புள்ள இருக்கும்போதே இப்படி இருக்கியே? என்று சுவற்றில் மோதியவளின் இரு பக்கமும் கையை வைத்து அவள் மேனியை முகர்ந்தான். அவளுக்கு அந்த நொடியே இறந்து விடமாட்டோமா என்றிருந்தது. அவன்,அவளை “இது என்ன கன்னமா ?” என்று ஒவ்வொரு பகுதியாக வருணித்து, காதில்,
“ஏன் புள்ளைக்கு பால் குடுக்க மட்டும்தானா?
“ச்சே !” அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள் .
அசராதவனாக ,”புள்ளைய வச்சே உன்ன எப்படி வரவைக்கறேன்னு பாருடீ!”
சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தவள் விம்மி விம்மி அழுதாள். “கடவுளே எதுக்கு என்ன காப்பாத்தின ? என்னையும் அப்பா,அம்மாவோட கூப்டருக்க கூடாதா? இந்த புள்ளைய மட்டும் பத்திரம் பெத்து குடுத்துடறேன். நான் வாழ வேண்டாம்” தந்தையிடமும் இதையேதான் கூறினாள் .
“அப்பா! எப்படியாவது இந்த குழந்தை பொறந்தவுடனே என்ன கொன்னுடுங்கப்பா. ப்ளீஸ் ….”
“என்ன பாப்பா ?”
“அப்பா ப்ளீஸ்”……..அவர் தோளிலேயே முட்டி முட்டி அழுதாள். தந்தையால் அவளை சமாதானப் படுத்த முடியவில்லை. சற்று நேரம் கடந்து அவளே கேவிகேவி அழ ஆரம்பித்தாள்.
“எதுக்கு பாப்பா இப்படியெல்லாம் பேசற? உனக்கு என்ன பிரச்சனை சொல்லுமா. அப்பா நானிருக்கேண்டா”
“இல்லப்பா!நான் சாகனும்.நான் இனிமே உயிரோட இருக்க கூடாது”
“பாப்பா நான் வேணா சூர்யாவை வரசொல்லவா ?”
கேட்டதுதான் தாமதம். அவன் பேசியது, ராகவன் பேசியது எல்லாம் கொட்டிவிட்டாள் . வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணி அவரும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
மெதுவாக தண்ணீர் குடிக்க வைத்து மகளை சமாதானப்படுத்தினார்.
மகளை சமாதானப் படுத்தி கட்டிலில் மெதுவாக படுக்க வைத்தார். மனதின் பாரங்கள் நீங்கியதாலோ என்னவோ அழுது அழுது ஓய்ந்தவள் தூங்கிவிட்டாள் .மகளின் கையை பிடித்துக் கொண்டே இருந்தவர், மனைவி வந்ததும் சென்று முகம் கழுவிக் கொண்டார். சிறிது நேரத்தில் சந்திராவுக்கு உடம்புகொதிக்க ஆரம்பித்தது. அப்பாஅப்பா என்று அனத்த ஆரம்பித்துவிட்டாள். வேகமாக உடல் சூடு அதிகரித்தது.
பயந்து போனவர் உடனடியாக ஆம்புலன்ஸிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார். அந்த நேரத்தில் அவருக்கு யாரை உதவிக்கு அழைப்பது ஒன்றும் புரியவில்லை. ராகவனுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லாமல் காயத்ரிக்கு சொன்னார். உடனேயே அவர்கள் வந்து விட்டனர். மகளை விட்டு தந்தை நகராமலேயே இருந்தார். நேரம் கூடிக்கொண்டே போனது. கணேசன் பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தார். சுந்தரிக்கு எதுவும் புரியவில்லை.
இங்கு ஏனோ சாரதாவுக்கு நிலை கொள்ளவில்லை. மனதுபிசைவது போல இருந்தது. மகனோ மறுநாள் கிளம்புவதற்கு பதில் அன்றைய இரவே ஹைதெராபாத் கிளம்பினான். மகன் கிளம்பியதும், பொறுக்க முடியாமல் அவரே கணேசனுக்கு அழைத்து விட்டார். போனை எடுத்த காயத்ரி நிலைமையை சொல்லி விட்டாள். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு பறந்தனர். சாரதாவை பார்த்த கணேசன் கதறி விட்டார். “அண்ணா இருங்க கவலை படாதீங்க!” மருத்துவரின் அனுமதியுடன் சந்திராவை பார்த்தாள் .
“சந்திரா! ஆன்டி வந்துருக்கேன் பாரு” அவளை பார்த்தவருக்கு மனம் தாங்கவில்லை.
பொறுத்துக்கொண்டு அவள் தலையை மெதுவாக கோதினார் . லேசாக கண் திறந்து சிறு புன்னகையுடன் மீண்டும் கண் மூடியது.
“பரவால்லையே ரெஸ்பான்ஸ் இருக்கே . நீங்க எங்கையும் போகாதீங்க. கூடவே இருங்க.நாங்க எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் அவங்ககிட்டேர்ந்தும் கொஞ்சமாவது ரெஸ்பான்ஸ் வேண்டாமா?நீங்க அவங்ககிட்ட பேசுங்க. இது வரைக்கும் பேபி நார்மலா இருக்கு. அது எவ்ளோ நேரம் அப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு மனசுல ஏதோ பெரிய விஷயம் தாக்கி இருக்கு. அவங்களுக்கு தைரியம் சொல்லுங்க. சொல்லி விட்டு வெளியில் சென்றார் டாக்டர். மாயா சூர்யாவுக்கு அழைத்தால் அவனோ போனை எடுக்கவே இல்லை .

கால் டாக்ஸியில் ஏறியவன் , கண் மூடி அமர்ந்து நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தான். எங்கோ எதையோ தொலைத்தது போன்ற உணர்வு. அவனால் தன் மோசமான பேச்சையும், அறை வாங்கியதையும் அன்னையிடம் கூற முடியாது. அதற்காகவே இப்போது தப்பித்து ஓடுகிறான். இருப்பினும் ஏதோ ஒன்று சந்திராவிடம்…. யோசித்து பார்த்தவனுக்கு அவளின் காதலும் ஏக்கமும் கலந்த பார்வை, அதோடு கழுத்தில் எஸ்! அதைஎப்படி மிஸ் பண்ணேன்? அப்படின்னா அவ என்ன மட்டும்தான் கணவனா நினச்சுருக்களா? நான் ஏன் அவளை பேச விடல? எல்லாமே என் தப்புதான். உடனே அவளை பாக்கணும். மன்னிப்பு கேட்கணும். அவளால் என்னோட சூடு சொல் தாங்க முடியாது.

இதோ இப்போது,
சந்திராவின் கையை பிடித்து கொண்டிருந்தான் சாரா என்ற அழைப்புடன்.
இந்த ஒரு அழைப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தவள் அவன் பல முறை அழைத்தும் கண் திறக்கவில்லை. அவள் கலைந்திருந்த தோற்றம்,வீங்கி இருந்த கண்கள் இவனின் சொல்லால் அவள் எத்தனை கதறி இருப்பாள் என்று அவனுக்கு புரிய வைத்தது.
அவள் கையை பிடித்து கதறினான். ம்ம் !அவள் எதற்கும் மசியவில்லை. ஜுரம் அதிகமாகவில்லை என்பது மட்டுமே ஆறுதல். அப்போது சட்டென போர்வையை நகத்தி அவள் வயிற்றில் கைவைத்தான். குழந்தையிடம் பேச ஆரம்பித்தான். “நீயும் அம்மாவும் எனக்கு பத்திரமா வேணும் செல்லம். அம்மாகிட்ட என்ன மன்னிக்க சொல்லுடா”. வயிற்றின் மீதே கண்ணீர் சிந்தினான். அன்னை போலவே மகளும் சூர்யாவுக்காக ஏங்குபவள்தானே? அன்னையாக இருந்தாலும் சும்மா விடுவாளா குட்டி தேவதை. விடாமல் வேகமாக அசைந்தாள்,உதைத்தாள். தன்னால் முடிந்தனைத்தையும் செய்து அன்னையை எழுப்பி விட்டாள் . பெருமூச்சும் சத்தமும் சேர்ந்து கண்விழித்தாள் சந்திரா.
அவள் பார்த்தது சூர்யாவின் அழுதமுகத்தை தான். நர்ஸ் ஓடி சென்று டாக்டரை அழைத்து வந்தாள் . பரிசோதித்த டாக்டர்,
” இப்ப பரவால்ல. இன்னும் கொஞ்சம் நேரம் பாக்கலாம்” என்று கூறி சென்று விட்டார்.
“சாரா ப்ளீஸ் ” கையை பிடித்து குலுங்கி அழுதான்.
அமர்ந்திருந்தவனின் தலையை கோதினாள்.
“என்ன கல்யாணம் பண்ணி சீக்கிரமா உங்களோட கூட்டிட்டு போறீங்களா?” தெம்பில்லாமல் மெல்லியதாக சத்தம் வந்தது.
“எத்தனை தடவைதான் பண்ணறது?” மிரட்டுகிறானா?
“என்ன பாக்கற? இதுக்கு என்ன அர்த்தம்? அவனின் செயினை காட்டினான். சரி! இன்னொரு வாட்டி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. இனிமே நீ எதையும் மனசுல வச்சுக்காம என்கிட்டயோ இல்ல அம்மாகிட்டயோ சொல்லிடனும்”
“சரி” சந்திராவின் தலை ஆடியது.
“என்னை இப்படி கொடுமை பண்ணிட்டியேடி!” குரல் திட்டிக் கொண்டிருந்தாலும் அவனின் உதடுகள் நெற்றியில் முத்தமிட்டது. பார்த்துக் கொண்டே கணேசனும், சாரதாவும், ராகவனும் உள்ளே வந்தனர். ராகவனை பார்த்ததும் சந்திராவின் முகம் வெளிறியது. சூர்யாவின் கை பிடியை இருக்கிக் கொண்டாள் .
கணேசனுக்கு முன்னால் அவசரமாக அடி எடுத்து வைத்தவன், அவசரமாக சந்திராவை தொட வந்தான். கையாலேயே அவனை நெருங்க விடாமல்,
“என்ன மிஸ்டர்? அங்கேர்ந்தே பேசுங்க”. அவனின் ஆளுமைக்குரலில் சற்று பயந்துதான் போய்விட்டான் ராகவன்.
“நான் நான் இந்த குழந்தைக்கு அப்பா”
“ஏதோ இன்ப்ளுயென்ஸ் பண்ணி கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு IVF பண்ணிடீங்க. இதோ குழந்தை பொறக்க போகுது.சோ வாட் ? உங்களோட சம்பந்தம் குழந்தைக்கு மட்டும்தான். இவ என்னோட பொண்டாட்டி. மைண்ட் இட்?”
“என்ன விட்டா ஓவரா பேசற?” எகிறினான் ராகவ்.
“மரியாதையா ஒதுங்கி போ! இல்ல நீ பண்ண விஷயங்கள் போலிஸுக்கு போகும். யூ அவுட் வாயில் ஜிப் போல காட்டி செய்கையில் அவனை வெளியே அனுப்பினான்.
“தம்பி உங்களுக்கு எப்படி?”
“என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. இவ கை பிடி இறுக்கினதுமே புரிஞ்சுகிட்டேன்” சாதாரணமாக சொன்னான். அவளுக்கு இது எத்தனை பெரிய விஷயம்.
“சூர்யா” அவள் அழைப்பில் திரும்பினான்.
அவனை அருகே அழைத்தவள்,அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒருமுத்தம் தந்தாள்.
சாரதாவும் கணேசனும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.
“அம்மா நாங்க கல்யாணம் பண்ணிக்கலான்னு …”
பூக்கள் பூக்கும் ……..