என் வாசம் நீ உன் சுவாசம் நான்  -16

என் வாசம் நீ உன் சுவாசம் நான்  –16

சாரதா. அதுதான் சூர்யாவின் அன்னையின் பெயர். சாரதாவுக்கு பெற்றோர் இல்லை. வளர்த்தது முழுவதும் அண்ணன்தான். சாரதாவை கோவிலில் பார்த்த சிவராமனின் பெற்றோர் தாங்களாகவே வந்து பெண் கேட்டனர். அவர்கள் பணத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை என்றனர். அதற்க்கு காரணம் சிவராமனுக்கு முதலிலே ஒரு திருமணம்  நடந்திருந்தது. முதல் மனைவி மீது அளவில்லா காதல். அதுவும் முதல் காதலாயிற்றே ? மறக்க முடியுமா? ஆனால் பாவம் அவளுக்கு வேறு ஒருவனிடம் அளவில்லா காதல் திருமணத்திற்கு பின்னும். அதனால் உன்னை பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து வாங்கி சென்று விட்டாள் . அதன் பிறகு  வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தான் சிவராமன்.  ஏதோ ஒரு நல்ல பெண்ணாக பார்த்து  அவருக்கு திருமணம் நடத்திவிட்டால் அவர் மனம் மாறி விடும் என்று நம்பினார்கள் பெற்றோர்.  மகன் எத்தனையோ முறை தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இத்தனையும் சாரதாவின் அண்ணன்  அண்ணிக்கு  தெரியுமே தவிர அவர்கள் மறந்தும் சாரதாவிடம் மூச்சு விடவில்லை. காரணம் இத்தனை  பெரிய இடம், எதுவும் வேண்டாம் என்று யார் வருவார்கள் என்பதே! அவர்கள் மறந்தது சாரதாவை பற்றி.  சாரதாவுக்கும் சிவராமனுக்கும் திருமணம் நடந்தாலும் சிவராமன்  மாறவில்லை. திருமணம் வேண்டாம் என்று  சொன்னாலும் சிவராமனின் இளமை விடவில்லை. திருமணம் ஆன புதிதில் அவ்வப்போது வந்த ஆசையினால் பிறந்தவன்தான் சூர்யா. அதுவும் அவள் நினைப்பிலேயே சாரதாவிடம் வந்தபோது தன்னை ஒரு ****வே உணர்ந்தார் சாரதா . எப்படி இதைப் பற்றி அண்ணனிடம் சொல்ல முடியும்? அண்ணியிடம் ,அத்தையிடம் என்று யாரிடமும் கூற முடியாமல் தவித்துதான் போனார். முதல் மகன் பிறந்தபோது வீட்டின் முதல் வாரிசு என்று சாரதாவை அண்ணன்  வீட்டிற்கு அனுப்பவில்லை. அவர் மாமியாரே பார்த்துக் கொண்டார். மகன் மனம் மாறிவிட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்  பெரியவர்கள். மாதங்கள் கடந்தன. மீண்டும் அதே போல என்றாவது ஒரு நாள் வரும் ஆசையினால் வந்தவள்தான் மகள். அதுவும் நிக்காமல் போயிற்று.  சாரதாவுக்கும் இளமையின் ஆசைகள் இருந்தன. கணவனுடன் வெளியில் செல்ல நல்ல துணி, மணி உடுக்க, அழகாக இருக்க , என்று நிறைய இருந்தன. இரண்டாவது குழந்தைக்கு பிறகு வெளிப்படையாகவே மனைவியை தள்ளி வைத்தார் கணவன். என்றாவது மனைவி கணவனின் அருகில் வந்தால் கூட சட்டென எழுந்து போய் விடுவார். இதனால் கணவனிடம் இருந்து மனைவிக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமலே போனது. அதில் பணத்தேவையும் ஒன்று. எத்தனை நாள்தான் அண்ணனிடம் சென்று கேட்க முடியும்? சாரதா  ஒரு இயந்திரம் போலவே நடத்தப்பட்டார். காலை  முதல் இரவு வரை வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். இரவு தூங்க வேண்டும் கணவனின் கையால் பூவுக்கு ஆசைப்பட்டால் கூட கிடைத்ததில்லை. மாமியார் இருந்தபோது மாதாமாதம் இவள் தேவைக்கு அவரே பணம் தந்து விடுவார். மாமியாரின் மறைவுக்கு பிறகு சாரதா  மிகவும் கஷ்டப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். சாரதா  வந்த நேரம் சிவராமனுக்கு   தொழில் ஓஹோவென்று வந்தது. ஆனால் அதனால் சாரதாவுக்கு எந்த பலனும் இல்லை. வெளியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கும் போகக் கூடாது என்று முட்டுக் கட்டை போட்டார். என்றாவது மனக் குமுறல் தாங்காது எதையாவது கேட்டால் அன்று அடி  பின்னி எடுத்துவிடுவார். தன்னை பிடிக்காததினால்தான் தன்  தேவை கணவனுக்கு இல்லை என்று நினைத்திருந்தவருக்கு தலையில் விழுந்தது இடி.

ஆம்! சிவராமன் பல வருடங்களுக்கு முன்பாகவே தன்  காதல் மனைவியுடன் அவளுக்கு திருமணம் ஆகாத இரண்டாம் கணவனாய்  வாழ்ந்துக் கொண்டிருந்தார். பெற்றவர்களுக்காகவே சாரதாவுடன் அவர் இருந்துக் கொண்டிருந்தார் என்பது சாரதாவுக்கு தெரிந்தது அவரது பதினைந்தாம் வருட திருமண தினத்தில்தான். மனைவியாக திருமண தினத்தின் கணவனுடன் இருக்க விருப்பப்பட்டவருக்கு கிடைத்தது வழக்கம்போல ஏமாற்றம்தான்.  அப்போது சூர்யா பத்தாம் வகுப்பு வந்து விட்டான். மாமனாரும் மறைந்திருந்தார். இப்போதுதான் சிவராமனுக்கு எந்த தடையும் இல்லையே? இருக்கும் ஒரே தடை சாரதாதான். அவளை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்திருந்தார் போலும். அதை, திருமண நாள் அன்று உபயோகப் படுத்திக் கொண்டார். வழக்கம்போலவே கணவனிடம் கேட்டதற்கு. கிடைத்த திருமணநாள் பரிசு பெல்ட்டால் அடி . இத்தனை வருடங்களாக தந்தையை பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இது பொறுக்க முடியவில்லை. தந்தையை தடுத்து எதிர் கேள்வி கேட்டான். பெற்ற  மகனாகவே இருந்தாலும் அவனையும்  அவர் சாரதாவின் மகனாகவே எண்ணினார். ஏதோ கடமைக்கு இனிசியலையும் பள்ளி தேவைகளையும் பூர்த்தி செய்தார் . அதைத்தவிர மகன் என்று அவருக்கு துளியும் பாசம் இல்லை. அவருக்குத்தான் இன்னொரு மகனும் இருந்தானே ! பிறகு எதற்கு சாரதாவின் மகன்? அன்று  இரவு மகனையும் மனைவியையும் வீட்டை விட்டு துரத்தினார் நடு இரவில். அவர் அடித்த அடியில் சுருண்டு விழுந்த அன்னையை எப்படி தூக்குவது என்று கூட தெரியவில்லை மகனுக்கு. அன்னையை பார்த்த மகனுக்கு தான் வாங்கிய அடிகள் மறந்து விட்டதா? இல்லை தெரியக் கூட இல்லையா? இருவரும் வீட்டு வாயிலேலே சுருண்டு விழுந்திருந்தனர்.

காலையில்  கணவன் வந்து பார்ப்பார் என்று நினைத்த மனைவிக்கு ஏமாற்றம்தான். வாசலில் கீரை விற்பவள் தான் இவர்களை பார்த்து ஆட்டோ ஏற்றி விட்டாள் . அண்ணன்  வீட்டிற்கு வந்தவர்ளுக்கு அங்கும் சரியான கவனிப்பு இல்லை. ஒருவாரம் அண்ணன்  வீட்டில் இருந்தார்கள். அடுத்த இரண்டு  நாட்கள் கழித்து  சிவராமன் டிரைவரிடம் மகனின் துணிகளையும் பள்ளி சாமான்களையும் கொடுத்து விட்டார். அதோடு அவர் கடமை முடிந்தது.

 அடுத்து வந்த சனி கிழமை சாரதாவின் அண்ணன் வந்து முகத்திற்கு நேராகவே சொன்னார்.

“இங்க பாரு சாரதா உன்னையும் உன் பையனையும்  வச்சுக்கறது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை . ஆனா எனக்கும் வயசுக்கு வந்த ரெண்டு  பொம்பள பசங்க இருக்கு. மீசை முளைச்ச  உன் பையனை எப்படி வச்சுக்க முடியும்? அதனால் உனக்கு தேவையான பண உதவி நான் செய்யறேன். நீ இங்கையே பக்கத்துல ஏதாவது வீடு எடுத்து தங்கிக்கோ”.

சரிங்கண்ணா !” கடவுளிடம் அன்று மனதளவில் அழாத அழுகையே இல்லை. சாரதாவின் குரல் கடவுளுக்கு கேட்டதா ? தெரியவில்லை. ஆனால் சூர்யாவுக்கு கடவுளின் மீது வெறுப்பை தந்தது.

பிறகு இருவரும் ஒரு சிறு வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். அது வீடா ? அது ஒரே அறை  கொண்டது. அதிலேயே ஓரமாக சமைத்துக் கொள்ள வேண்டும். மற்றதற்க்கு வெளியில் செல்ல வேண்டும்.

இதுக்கே அட்வான்சு பத்தாயிரம் ஆச்சு. இந்தா  செலவுக்கு வச்சுக்கோ” கையில் இரண்டாயிரம் கொடுத்து விட்டு சென்றார் அண்ணன் . அதற்க்கு மேல் என்ன செய்ய வேண்டும், எப்படி சமைப்பது? அந்த நாட்களில்  சூர்யாவும் அருகில் இருந்தவர்களும்  இல்லை என்றால் அவரால் தனியாக சமாளித்திருக்க முடியாது.

அந்த வீடிற்கு வந்தவரால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை . மன தைரியம் முழுவதும் இல்லாமலே போனது.

மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் இறந்து  விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அது எப்படித்தான் சூர்யாவுக்கு தெரிந்ததோ?

“என்னம்மா! செத்துடாலான்னு யோசிக்கரியா ? நாம வாழ்ந்து காட்டணும்மா . நான் தான்  நல்லா  படிக்கறேனேமா ? அப்புறம் என்ன? நான் படிச்சு பெரிய ஆளா வருவேன். அப்பாவை விட பெரிய  ஆளா  வருவேன். அன்று வந்த வெறிதான் அவனை இன்னும் உந்திக் கொண்டிருக்கிறது. இது இப்படி ஓடிக் கொண்டிருக்க சாரதாவிற்கு  மாதாந்திரத்திற்கு தேவையானதைக் கூட வாங்க முடியவில்லை. அன்று மதியம் மகன் பொட்டலத்துடன் வந்து நின்றான்.

என்னடா இது? “

உனக்குதாம்மா ! “அன்று மகனை தந்தையாக பார்த்தார் சாரதா .

காசு ?”

பக்கத்துல கடைல வாங்கிட்டு வந்தேன்.  நாளைக்கு சண்டே தானே ? நாளைக்கு முழுக்க வேலை செய்து கடனை குடுக்கறேன்னு சொல்லி இருக்கேன். அசால்டாக சொல்லி விட்டு கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

அதற்கு பிறகு காலை வேளைகளில் பேப்பர் போட ஆரம்பித்தான். மற்ற குழந்தைகள் தூங்கும்போது தன்  மகன் வேலைக்குச் செல்வது சூர்யாவின் அன்னைக்கு பாவமாக இருக்கும்.

அம்மா ப்ளீஸ் மா! அஞ்சு நிமிஷம்” .

இல்லடா கண்ணா முதலாளி திட்டுவார்ப்பா . கொஞ்சம் டீ  குடி  சரி ஆகிடும்”.

நாலு மணிக்கு எழுந்து பழைய மிதிவண்டியில் போகும் மகனைப் பார்த்து சாரதாவிற்கு நெஞ்சு கணக்கும்.  சாரதாவும் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு குடும்பத்தை ஓட்ட  தொடங்கினார் . அண்ணன்  அவ்வபோது  வந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு இவன் பத்தாம் வகுப்பு முடித்ததும்,

என்ன சாரதா  எப்படி இருக்க ? பையனும் நல்ல வளந்துட்டானே ? பத்தாவது முடிச்சுட்டான்  இல்ல. எப்ப ரிசல்ட்? மேற்கொண்டு  என்ன பண்ண போற ?”

தெரியல அண்ணா. இங்கையே பக்கத்துல ஏதாவது ஸ்கூல்ல  சேக்கணும் . இவனுக்கு சைன்ஸ் குரூப் தரேன்னு இப்ப இருக்கற ஸ்கூல்ல  சொல்லி இருக்காங்க. ஆனா ரொம்ப தூரமா இருக்கு. ரிசல்ட் வரட்டுமேன்னு பாக்கறோம்”. 

அண்ணனின் அதிக அக்கறை இருவருக்கும் ஏதோ உணர்த்தியது.

இங்க பாரு  சாரதா! சொல்லறேன்னு தப்பா  எடுத்துக்காத. இப்போ அவன் படிக்க வேண்டியது அவசியம்தான். இல்லன்னு சொல்லல. ஆனா உன்னோட நிலைமை சரி இல்லையே? பேசாம பக்கத்துலையே  ஏதாவது மெகானிக் கடைல சேர்த்து விடு வேல கத்துக்கட்டும்.  பதினெட்டு வயசு ஆகிடுச்சுன்னா கார் ஓட்ட கத்துக்கட்டும்”.

எதுக்கு உங்க வீட்டுல கார் ஓட்டவா மாமா ?”

“என்ன பேச்சு பேசறான் பாரு. பிஞ்சுலையே  பழுத்தது. உங்க அண்ணி சரியாத்தான் சொன்னா . நல்லதுக்கே காலமில்லை”.

அன்றோடு பேச்சு வார்த்தையை நிறுத்திவிட்டு போனவர்தான். அதற்க்கு பிறகு சூர்யா இஞ்சினியர் ஆகிவிட்டான் என்றதும் தான் உறவை உயிர்ப்பித்துக் கொண்டார். அதுவும் அவன் மேல் படிப்பு படிப்பதால். அவன் நிச்சயம் ஐ  ஐ ம்  சென்று விடுவான் என்பது தான் அவருக்குத் தெரியுமே ? யார்தான் லட்ச லட்சமாக சம்பாதிக்க போகும் மாப்பிள்ளையை வேண்டாம் என்பார்கள்? அதிலும் மூத்தவள் திருமணத்திற்கு அவன் வந்தபோது எப்படி இருந்தான்?

அண்ணன்  வந்தது ஏதோ பெயருக்குத்தான் பத்திரிக்கை வைக்க . ஆனால்  சூர்யாவை பார்த்ததும் வாயை பிளக்காத குறைதான்.  அதற்க்காக அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் யாருக்குத்தெரிய போகிறது?

காலை வேளைகளில் கடையில் வேலை செய்தவள் மாலையில் ஒரு வீட்டிற்க்கு வீட்டு  வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள் சாரதா. அப்போது ஒரு நாள் மாலையில் இவனையும் அங்கே அழைத்துச் சென்றாள் .  அப்போது அவர்கள் வீட்டு  மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இயற்பியலில் வரும் ஒரு கணக்கு  புரியவில்லை. அதை, அவன் அன்னை எத்தனையோ சொல்லிக் கொடுத்தும் அவரால் புரிய வைக்க முடியவில்லை. அப்போது சூர்யா தானாகவே சென்று அதை சொல்லிக் கொடுத்தான்.

முடிவில்,

“ஆன்டி! இவனுக்கு மேத்ஸ்ல இந்த விஷயம் புரியல. அதனாலதான் பிசிக்ஸ்யும் வரல. அதுக்கு முதல்ல இவன் மேத்ஸுல ஸ்ட்ராங்கா இருக்கணும். இப்போ அடுத்து டென்த் . இன்னும் நிறைய ஒர்க் பண்ணனும். அவனுக்கு நீங்க  சொல்லி தர முடியாது. வேற எங்கையாவது எக்ஸ்ட்ரா கிளாஸ்  போட்டுடுங்க”.

இவன் சொல்லிக் கொடுப்பதை அவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். மகனின் பிரச்சனை அவன் அன்னைக்கும் தெரிந்தது.

 சட்டென  சூர்யாவுக்கு  மனதில் ஒரு ஐடியா வந்தது. “உங்களுக்கு ஓகேன்னா  இன்னும் ரெண்டு மாசம் எனக்கு ஸ்கூல் லீவுதான் நானே வந்து சொல்லித் தரேன்”.

 மாடியில் இருந்த ஓனர் இவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இவன்  பேச்சு அவரின் ஆர்வத்தை தூண்டியது. படிகளில் இறங்கி கீழே வந்தார். முதலாளி அம்மாவுக்கும் இவன் பேச்சு ரசனையாகத்தான் இருந்தது.

சரி! நீயே வந்து சொல்லி குடு” என்றார்  முதலாளி அம்மா.

ஆனா! எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு ஆன்டி!”

கண்டீஷனா? “ஆர்வமாக கேட்டாள் .

எஸ் ஆன்டி !எனக்கு ப்ளஸ் ஒன்  படிக்க பீஸ்  கட்ட பணம் வேணும். கவர்ன்மென்ட் ஸ்கூல்தான். அதுக்கு தேவையானதை குடுத்தா போதும்”.

நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தவன் பணம் கேட்கும்போது தானாகவே தலை குனிந்தது. சமையல் அறையில் இருந்து சாரதா  ஓடி வந்தார்.

என்னடா ? அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசக்  கூடாது. அய்யா மன்னிச்சுருங்க அய்யா. இனிமே இவன கூட்டிட்டு வர மாட்டேன். மன்னிப்பு கேளுடா” என்று பதட்டத்துடன்  சொல்லிக் கொண்டிருந்தவரை முதலாளி கை  அசைத்து நிறுத்தினார் . அவர்கள் இருவரின் முகத்திலும் சந்தோஷ புன்னகை தெரிந்தது. அவருக்கு சிறு வயதில் தன்னை பார்ப்பது போலவே இருந்தது.

தலை  குனிந்திருந்த சூர்யாவின் தலையை நிமிர்த்தி ,

“சரி! எனக்கும் ஒரு கண்டீஷன் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. ஆனா  என்னோட பையன் பிஸிக்ஸ் அண்ட் மேத்ஸ்  ரெண்டுலையும் இம்ப்ரூவ் மென்ட் காட்டணும். அதுவும் இன்னும் பத்தே நாள்ல . அத நீ பண்ண வச்சுடீனா உன்னோட கண்டீஷன நான்  செய்வேன்”.

ஓகே! அங்கிள் என்னால முடிஞ்சவரைக்கும் நான் ட்ரை பண்ணறேன்”  அத்தனை நம்பிக்கையாய்  சொன்னான் சூர்யா.

உன்னோட பேரு  என்னப்பா? முதலாளி கேட்டார்.

சூர்யா அங்கிள் ”

சூர்யா நமக்குள்ள இருக்கறது  கண்டிஷன் இல்ல. பிசினெஸ் டீலிங்” புருவத்தை உயர்த்தி தலையை ஆட்டி  சொன்னவரின் முகம் சூர்யாவின் மனதில் அப்படியே ஒட்டிக்  கொண்டது. தந்தையை விட பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர என்ன செய்ய வேணும் என்பதெல்லாம் இவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய ஒத்த  வயது கொண்டவன் சொல்லிக் கொடுத்ததால்  ஸ்ரீதரனும் நன்றாகவே படிக்க ஆரம்பித்தான். இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். சாரதா வேலை செய்துக் கொண்டிருப்பாள். இவன் ஸ்ரீதருக்கு டியூசன்  சொல்லிக் கொடுப்பான். மகனின் முன்னேற்றத்தில் ஸ்ரீதரின் பெற்றோருக்கு மகிழ்ச்சிதான்.

பத்தாம் வகுப்பு  ரிசல்ட் வந்ததில் இவன் பள்ளியிலேயே முதலாக வந்திருந்தான். அதை சொன்னபோது அவர்களே இவனுக்கு இனிப்பு வாங்கி தந்தனர். தானும் முதலாவதாக வர வேணும் என்று ஸ்ரீதருக்கு தோன்றியது. ஸ்ரீதரின்  அன்னை , மறுநாள் சூர்யாவிடம் ஒரு பேப்பரை கொடுத்தாள் .

இது என்ன ஆன்டி “

“இது ஒரு அக்ரீமெண்ட். உன்னோட படிப்பு செலவு முழுசா எங்களோட கம்பெனியே ஏத்துக்கும் . நீ எந்த ஸ்கூலுக்கு போகணுன்னாலும் போகலாம். உன்னோட பழைய ஸ்கூலுக்கும்தான்.ஆனா நீ காலேஜு முடிச்சதும் குறைஞ்சது ரெண்டு வருஷமாவது எங்களோட கம்பனிக்கு வேலை பார்த்து குடுக்கணும்.”.

ஆனா நீ காலேஜு முடிச்சதும் குறைஞ்சது ரெண்டு வருஷமாவது எங்களோட கம்பனிக்கு வேலை பார்த்து குடுக்கணும்.

என்னோட ஸ்கூல்ல  எனக்கு ப்ரீயாவே அட்மிசன் தரேன்னு சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு அங்க போக இஷ்டம் இல்லை “

“சரி! போக வேணாம். ஸ்ரீதர் ஸ்கூலையே சேர்ந்திடு” கூலாக சொன்னாள்  முதலாளி அம்மா.

அதற்கு பிறகு ப்ளஸ் 2 முடித்ததும் சூர்யாவின் சந்தோசத்தை எப்படி யாரிடம் சொல்ல வேண்டும் என்றுக் கூட தெரியவில்லை. அதிலும் அவனே பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தான். தன்  சொந்த தந்தையிடம் சொல்ல வேண்டியதை ஸ்ரீதரின்  தந்தையிடம் பகிர்ந்துக் கொண்டான். சந்தோச மிகுதியில் அவனுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. “வாடா வாடா என்று சொல்லி அவனை தோளுடன்  அணைத்துக் கொண்டார். சொல்ல முடியாத மகிழ்ச்சி அவன் தேம்பி தேம்பி அழுவதில்  தெரிந்தது. அவனின் கடுமையான உழைப்பு  இழந்த தூக்கம். எல்லாமே அதில் வெளிப்பட்டது.

 அன்று ஸ்ரீதரின்  கம்பெனி இவனை தத்து எடுத்துக் கொண்டதில் இருந்து அவன் படித்துக் கொண்டிருப்பது வரை அவனுக்கு அத்தனையும் செய்தது ஸ்ரீதரின் தந்தை தான். அதுவும் இல்லாமல் காலையில் பேப்பர் போடும் வேலையும் செய்துக் கொண்டிருந்தான், வேலைக்குச் செல்லும் வரை. இந்த அன்று முதல் ஸ்ரீதரனுக்கு ஆசிரியராகவும் நெருங்கிய தோழனாகவும் மாறிப்  போனான்  சூர்யா.

இத்தனை கதையையும் சாரதா, சந்திராவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இதெல்லாம் ஏன் ஆன்டி இப்ப ஞாபகப்படுத்திகிட்டு?

எனக்கும் ஒரு அவுட் லெட்  வேணாமா? மனசுக்குள்ள வச்சு புழுங்கி புழுங்கி நெஞ்சு  வலி வந்துடுமோன்னு பயமா இருக்கு சந்திரா . கண்ணீர் சிந்தியவரை தன்  நெஞ்சில் சாய்த்துக் கொண்டார். நான் சாகறத  பத்தி எனக்கு பயம் இல்ல. ஆனா இந்த புள்ளய நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும். இவனுக்குனு யாராவது ஒரு துணை வேணும். அது வரைக்குமாவது நான் உயிரோட இருக்கணும். உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் மனசுக்கு எவ்ளோ இதமா இருக்கு தெரியுமா ?

நீங்க  ரெஸ்ட் எடுங்க ஆன்டி. நான் உங்களுக்கு டிபன் கொண்டு வரேன்”

சூர்யா ஏன் அப்படி தேம்பி தேம்பி அழுதான் என்பது இப்போது சந்திராவுக்கு புரிந்தது.

குளித்து விட்டு வந்தவன், இரவு உணவை உண்டான். மிகவும் அசதியாகத் தெரிந்தான்.

நீங்க  அந்த ரூம்ல படுங்க, நான் ஆன்டியோட கீழ படுத்துக்கறேன்”.

“இல்ல சந்திரா, நீ வீட்டுக்கு போ நான் அம்மாவோட இருக்கேன்”.

சரி !அப்போ நீங்க அம்மாவோட இருங்க. நான் கிச்சன்ல வேலைய முடிச்சுட்டு கிளம்பறேன்.

இட்ஸ் ஓகே சந்திரா . காலைல நான் பிரஷ் ஆகிடுவேன். எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். நீ கிளம்பு.”

நானே முடிச்சுட்டு கிளம்பறேன். யூ  டேக் ரெஸ்ட்”.அவன் தலையை கோத வந்த கையை பாதியிலேயே இழுத்துக் கொண்டாள் .

“போகும்போது கதவை லாக் பண்ணிடு” சொல்லி விட்டு அன்னையின் அருகில் படுத்தவன் அடுத்த நொடியே தூங்கிப் போய் இருந்தான்.

எல்லா விளக்குகளையும் அனைத்து  விட்டு அவர்கள் அறையில் நைட்  லாம்பை போட்டாள். ஆன்டிக்கும் சூர்யாவுக்கும் போர்வையை சரி படுத்தினாள் . ஏனோ அப்போது இழுத்துக் கொண்ட கை  இப்போது தாங்கவே அவன் தலையை கோதியது . அன்னைக்கு பேட் வாங்கி வந்த சிறுவனாக தெரிந்தான். நெற்றியில் அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வீட்டிற்க்கு வந்தவளுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்தன. சூர்யாவை பற்றியும் சாரதாவை பற்றியுமே மனம் சுழன்றுக் கொண்டிருந்தது. சூர்யா நீங்க  கண்டிப்பா பெரிய ஆளா  வரணும்.  சாரதாவைப் போலவே சந்திராவுக்கும்  சூர்யா வாழ்க்கையில் வெற்றி அடைந்தவனாக பார்க்க ஆவலாக இருந்தது. அதனால் தானோ என்னவோ அன்று அந்த கேக்கை அவள் அத்தனை ரசித்து உண்டாள் .

சாரதாவுக்கு மீண்டும் ஆறுதல் தேவைப்படும்போது அன்னையாக நெஞ்சில் சாய்த்துக் கொள்ள சந்திரா வருவாளா?………..