என் மேல் விழுந்த மழையே!
அத்தியாயம்-11
அடுத்த நாள் வருண் கல்லூரி சென்று விட்டான். பலரும் அவளிடம் பிருத்விகாவைப் பற்றி விசாரித்தனர். அவர்களுக்கு எல்லாம் வருண் பதில் கொடுத்தான். மாலை வகுப்பு முடிந்ததும் வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தான்.
வருண் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு உடனே உள்ளே நுழைந்தான். பிருத்விகா அங்கு இல்லை. உடனே வருண் அவனுடைய அறைக்குச் செல்ல அங்கும் இல்லை. அவள் எங்கு சென்றிருப்பாள் என்று ஒவ்வொரு இடமாக வீட்டில் தேடிவிட்டு மாடியில் சென்று கீழே பார்க்க அவள் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள். இங்கிருந்து பார்க்க அவள் எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் மலர்களுக்கு நடுவில் புல் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே ஒரு சைக்கியாட்ரி புத்தகம் கிடந்தது. வருணின் புத்தகம் தான்.
அது ஒரு லிமிட்டு எடிசன் புத்தகம். பிருத்விகா வாங்க நினைத்து எவ்வளவு தேடியும் அவளுக்கு கிடைக்கவில்லை. அது வருணின் நூலகத்தில் இருந்தது.
இருவருமே புத்தகத்துகாக சிறு வயதில் அடித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு. ஹாரி பாட்டர் சீரிஸ் புத்தகங்களில் படங்கள் நிறைந்த ஒன்றை பிருத்விகா வாங்கி இருந்தாள். ஆனால் அது வருணுக்கு கிடைக்கவில்லை. அதனால் பிருத்விகாவின் அன்னை அவனுக்கு கொடுக்கும்படி கூறி இருந்தார். பிருத்விகாவும் வேண்டாக வெறுப்பாக வருணுக்குக் கொடுத்திருந்தாள்.
ஆனால் திரும்பி அவளிடம் புத்தகம் வரும் போது வேண்டும் என்றே புத்தகத்தைக் கிழித்திருந்தான் வருண். பிருத்விகாவுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. வருணை அடித்தே விட்டாள். ஆனால் அவளுடைய அம்மா அவன் தெரியாமல் செய்து விட்டதாகக் கூறி வருணை எதுவும் செய்யவில்லை.
“பிருத்விகா.”
வருண் அழைத்ததும் திரும்பிய பிருத்விகா எந்த உணர்வையும் காட்டவில்லை.
“உனக்கு வேணும்னா இந்த புத்தகத்தை எடுத்துக்கோ.” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அந்தப் புத்தகத்தை அவன் கையில் கொடுத்து விட்டு விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு வருண் விட்டு விடுவானா?..
அவள் ஒரு கையை ஆதரவாகப் பிடித்தான்.
“லீவ் மீ வருண்.”
“அது நடக்காதுனு உனக்கே தெரியும்.”
“பிருத்விகா வாட் இஸ் யுவர் பிராபளம்? நீ அன்னிக்கு எங்கிட்ட பேசுனதுக்கு கில்டியா பீல் பன்னிறியா? நாம எப்ப ஃபைட் பன்னாமல் இருந்திருக்கோம். தட்ஸ் நாட் ஏன் இஸ்யூ.ரொம்ப பெருந்தன்மை வருண் உனக்கு.” என்று ஏளனத்துடன் கூறினாள் பிருத்விகா. இருவரும் வீட்டுக்குள் நுழைந்திருந்தனர்.
இப்போது அவளை நடக்க விடாமல் நிறுத்தினான் வருண். அவள் எதிரே முகம் பார்த்து நின்றான்.
“பிருத்விகா? என்ன நடந்துச்சுனு சொல்லு?”
“ஓ நத்திங்க். இப்ப அங்கிள் வீட்டில் இல்லை. அதனால் நீ ஆக்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீ அந்த ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி அங்க எனக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்துனால் அதுக்கு பொறுப்பேத்துக்க என்னைப் பார்த்துக்க நினைக்கற. உன்னோட கில்ட் தான் காரணம். இல்லைனா என்னை மாதிரி ஒரு பொண்ணு பக்கத்தில் இருக்கறதை நீ சகிச்சுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”
என்று வார்த்தைகளை அமிலம் போல் அள்ளி வீசினாள் பிருத்விகா. வீசிவிட்டு படியின் அருகில் வந்தாள். வருணும் அவள் அருகில் வந்தான்.
வருணுக்கு இதைக் கேட்டு கோபம் சுள்ளென்று ஏறியது. அதைக் கட்டுப்படுத்த முயன்றான்.
“பாரு இதான் நீ. ஆங்கரை கண்ட்ரோல் செய்ய டிரை பன்ன வேண்டாம். லீவ் மீ அலோன். என் பக்கத்திலேயே வராம இரு. உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”
“அப்படியா?” என்று ஏளனத்துடன் கேட்டவன் அவளை அப்படியே இழுத்து படிக்கட்டின் தடுப்பில் சாய்த்தவன் அழுத்தமாக அவள் இதழ்களில் ஒரு முத்திரை பதித்தான்.
அவனின் இந்தச் செய்கையை எதிர்பார்க்காத பிருத்விகா உறைந்து போய் நின்றாள். அவளால் நடந்ததை நம்பவே முடியவில்லை.
“இதுக்கும் நானே ரெஸ்பான்சிபிள். லெட்ஸ் கெட் மேரீட். ஓகேவா..”
அடுத்த நொடி பிருத்விகாவின் கைகள் வருணின் கன்னத்தில் பதிந்திருந்தது.
“யு ஜஸ்ட் கிராஸ்ட் யுவர் லிமிட். என் கண்ணு முன்னாடி வராத. உனக்கு வர வர எதில் விளையாடறதுனு தெரியாம போயிட்டு இருக்கு.”
அவனைத் தள்ளிவிட்டு மாடியில் ஏற ஆரம்பித்தாள்.
இரண்டு நாட்கள்…
முழுதாக இரண்டு நாட்கள். பிருத்விகா உட்ச பட்ச கோபத்தில் இருந்தாள். இன்று வகுப்புக்கு வந்திருந்தாள். கல்லூரியில் பலரும் நலம் விசாரித்தனர். அந்த சம்பவம் நடந்த அன்றே மாலை அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள். தேவகி அம்மாளும் அவள் உடன் சென்று விட்டார்.
அன்று இரவு தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்கி விட்டாள். அவள் கண் விழித்திருந்தால் எங்கே அவன் நினைவு வந்து விடும் என்ற எண்ணமும், அதையே நினைக்கவும் அவளுக்கு விருப்பமில்லை. அமைதியான உறக்கம் மட்டுமே அவளுக்கும், அவள் உடலுக்கும் தேவையாக இருந்தது. இரவு உணவை கோபத்துடன் உண்டவள் உறங்கி விட்டாள்.
இரண்டு நாட்கள் அவனைத் திரும்பவும் பார்க்கவில்லை. அவனைப் பார்க்கவே இல்லை. விளைவாக அவள் உறங்கிய நேரம் தான் அதிகம். இப்படியே நாட்களை நகர்த்த முடியாது என்பதால் இரண்டு நாட்கள் கழித்து கல்லூரிக்கு வந்தவளை பலரும் நலம் விசாரித்தனர். அவர்களுக்குள் எல்லாம் இன் முகத்துடன் பதில் கூறிவிட்டு தன் வகுப்புக்கு வர அங்கு அவளுடன் சேர்ந்து கொண்டான் கிருஷ். கிருஷ் அவளருகில் இருக்கவும் மனதில் ஒரு வித நிம்மதி பரவியது.
தன் தோழியின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் கிருஷ்.
“என்ன பிராபளம் பிருத்வி? உன் முகமே சரி இல்லை.”
பிருத்விகா ஸ்ரீ அவள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டிருந்தாள். அவள் மருத்துவ மாணவி என்பதால் அவள் முகத்தை கட்டுப்பாடுடன் வைக்கப் பழகி இருந்தாள். அந்தக் கட்டுப்பாடு அவளுக்கு பல நேரங்களில் உதவி இருந்தது.
ஆனால் அவை எதுவும் கிருஷ்ஷின் கண் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இன்னொருவனின் கண் பார்வையில் இருந்தும் தான். ஆனால் அவன் மீது இப்போதைக்கு பிருத்விகா ஸ்ரீ அளவு கடந்த கோபத்தில் இருந்தாள்.
“ஒன்னும் இல்லையே..”
“சரி இருக்கட்டும். எங்க உன்னோட சோ கால்ட் பாய் பிரண்ட். இரண்டு நாளா காலேஜ் வரவே இல்லை. யாராலையும் ரீச் பன்ன முடியலை. என்னாச்சு அவனுக்கு?”
“அவனைப் பத்தி எங்கிட்ட பேசாமல் இருக்கறதுதான் நல்லது. அமைதியாக வா.. இன்னிக்கு நான் கிளாஸ் கவனிக்கனும். அப்புறம் உன்னோட நோட்ஸ் எடுத்துக் கொடு.”
தலையை இடம் வலமாக ஆட்டிய கிருஷ் அவளுடன் நடந்தபடியே வகுப்பறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் மித்ரா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவளைப் பார்த்து இல்லை என்பது போல் கண்களைச் சிமிட்டினான் கிருஷ். இதைக் கவனிக்காத பிருத்விகா அவளுடைய இடத்தில் சென்று அமர்ந்தாள்.
மேலும் இரண்டு நாட்கள் கழிந்தது. வருண் கல்லூரிக்கு வரவே இல்லை. மூன்றாவது நாளும் கோபத்தில் இருந்த பிருத்விகாவிற்கு நான்காவது நாள் உறுத்த ஆரம்பித்தது.
வருண் அதிகம் விடுமுறை எடுப்பவன் இல்லை. அவன் பள்ளியில் படித்த காலத்திலே அவன் வருகைப் பதிவு நாட்கள் பெரும்பாலும் விடுமுறையில் மார்க் செய்யப் படாது. புல் அட்டண்டன்ஸ் கொடுப்பான். இப்போது நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதற்கு வாய்ப்பே இல்லை.
அவள் வீட்டுக்கு வந்ததும் தேவகி அம்மாள் வருத்ததுடன் அமர்ந்திருந்தார்.
“வந்துட்டீங்களா பாப்பா.. வாங்க..”
“தேவகிம்மா.. ஏன் இப்படி உங்க முகம் இருக்கு? என்னாச்சு?”
“பாப்பா.. இது வரைக்கும் தம்பி என்னோட போனை எடுக்கமா இருந்ததே இல்லை. நால் நாள் ஆச்சு. என்னோட போனை எடுக்கவே இல்லை. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அவரோட அப்பாகிட்ட கூட பேசமாட்டாரு. ஆனால் எங்கிட்ட டெய்லியும் பேசிடுவாரு. வீட்டை விட்டு போய் நாலு நாள் ஆச்சு. எங்க போனாருனு தெரியலை.” வருத்ததுடன் கூறினார் தேவகி அம்மாள்.
“எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை. இந்தத் தம்பி இதுவரைக்கும் இப்படி செஞ்சதே இல்லை.”
இதைக் கேட்டதும் பிருத்விகாவுக்கு மனதில் ஏதோ நெருடியது. வருண் இப்படி இதுவரை செய்ததே இல்லை. இத்தனை வருடங்களில் அவனைப் பார்க்காமல் இருந்ததே சொற்ப நாட்கள் தான். அதுவும் அவளுடைய அம்மாய் வீட்டுக்குச் செல்ல நேரிடும் நாட்களில் மட்டும் தான். வருணின் அம்மாய் வீடும் அருகில் இருப்பதால் அவனும் வந்து விடுவான். அதனால் அவனைப் பார்க்காமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இப்படி இருக்கையில் வருண் நான்கு நாட்கள் எந்தத் தகவலுமின்றி இருக்கிறான் என்ற விஷயம் நெருடியது. கடந்த சில நாட்களாக அவனைப் பேசிய வார்த்தைகளை பற்றி நினைத்துப் பார்த்தாள். தேவகி அம்மாளிடம் எதுவும் கூறாமல் தன் அறைக்கு வந்தவளுக்கு அவனிடம் கொஞ்சம் அதிகப்படியாகப் பேசி விட்டோமோ என்று தோன்றியது.
என்ன இருந்தாலும் அவனும் மனிதன் தானே. தான் பேசிய வார்த்தைகளின் பாதிப்பு சிறிதும் கூட இல்லாமலா இருக்கும்.
யோசித்து யோசித்து தலைவலித்தது. சரி அவனைத் தேடிப் பார்த்திடலாம் என்று முடிவெடுத்தாள். தேவகி அம்மாள் அழைத்து அவன் கைப்பேசியை எடுக்கவில்லை என்றால் யார் அழைத்தாலும் அவன் எடுக்க மாட்டான். அதனால் நேரில் அவனைத் தேடிப் பார்ப்பதே சிறந்தது என்று முடிவெடுத்த பிருத்விகா எழுந்தாள். அவன் எங்கெல்லாம் இருப்பான் அனுமானம் செய்து கொண்டவள் தன் கார் சாவியைத் தேடி எடுத்தாள்.
தேவகி அம்மாளிடம் வருணைத் தேடிச் செல்வதாக உரைத்தாள்.
“பாப்பா.. இந்த இருட்டில் எப்படி நீங்க போவீங்க? காலையில் போய்க்கலாம்.” என்று தடுத்தார். அடிக்கடி செய்திகளைப் பார்ப்பவருக்கு நாட்டில் பெண்களுக்கு நடப்பவைகளை நினைத்தால் உள்ளம் பதிறியது. அதிலும் பிருத்விகா என்றால் அவருக்கும் மிகவும் பிடிக்கும்.
“தேவகிம்மா… நான் டாக்டர். இந்த மாதிரி நைட் டிராவல் இதுக்கு எல்லாம் பயப்பட முடியாது. நான் மெயின் ரோட்டில் மட்டும் தான் டிராவல் செய்வேன். சோ பயப்படாதீங்க. என்னோட பிரண்ட்டுக்கு என்னோட லொகேஷன் போயிட்டே இருக்கும்.” என்று அவருக்கு உறுதி அளித்து விட்டு காரை மூடி வைத்திருந்த உறையைத் தூக்கி போட்டு விட்டு காரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க அந்த வாகனம் உயிர் பெற்றது. அடுத்த சில விநாடிகளில் அவளுடைய தெருவில் இருந்து மறைந்திருந்தாள் பிருத்விகா.
மணி எட்டைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் கலந்தாள். அவள் காரை அடிக்கடி எடுக்காமல் இருக்க முக்கியமான காரணம் வருண்தான். வேகமாக காரை ஓட்டுகிறாள் என்று அவள் பெற்றோரிடம் கூற அவர்கள் கல்லூரிக்கு வருணுடன் சென்று வரக் கூறிவிட்டார்கள்.
அதனால் அழுது அடம் பிடித்து ஸ்கூட்டி வாங்கி கல்லூரிக்குச் சென்று வருகிறாள். இப்போது வருணைத் தேட காரை எடுத்திருக்கிறாள்.
‘அவன் இருந்தாலும் பிரச்சினை. இல்லாட்டியும் பிரச்சினை. எங்க போனான்னு தெரியலை. அட்லீஸ்ட் தேவகி அம்மாள்ட்ட பேசி இருக்கலாம். இவனை என்ன செய்யறதுனே தெரியலை.’ என்று மனதில் அர்ச்சிக்கவும் தவறவில்லை.
கார் பொள்ளாச்சி செல்லும் பாதையில் விரைந்து கொண்டிருந்தது. வருணுக்குப் பிடித்த இடங்களில் பொள்ளாச்சியில் இருக்கும் அவர்களுடைய கெஸ்ட் ஹவுஸும் ஒன்று. இல்லை என்றால் உடுமலையில் மலையடிவாரத்தில் இருக்கும் இன்னொரு கெஸ்ட் ஹவுஸ். இந்த இரண்டிலும் இல்லை என்றால் எங்கிருப்பான் என்று அவளாலும் கண்டறிய முடியாது.
இரண்டு மணி நேரங்கள். நெகமம் அருகில் உள்ள அவர்களுடைய கெஸ்ட் ஹவுசுக்குச் செல்லும் பாதையில் காரை செலுத்தினாள். இருபது ஏக்கர் தென்னந்தோப்பில் நடுவில் அமைந்திருந்தது அந்த கெஸ்ட் ஹவுஸ்.
கேட்டில் உள்ள செக்யூரிட்டியிடம், “வருண் இங்கு இருக்கானா?” என்று கேட்டாள்.
பிருத்விகாவை அவர் இதற்கு முன்பு இங்கு பார்த்திருக்கிறார். அதனால் அவருக்கு அவளைப் பார்த்தவுடன் யார் என்று தெரிந்து விட்டது. கையில் பாலீதின் கவரில் உள்ள உணவின் வாசம் அவள் நாசியை நிரண்டியது.
“இல்லை மா..அவர் இங்க வரவே இல்லை.”
“ஓகே.. அவரு இங்க இல்லைனா.. யாருக்கு இவ்வளவு சாப்பாடு?” என்று கேள்வி கேட்டாள். அமைதியாக அவள் கேள்வி கேட்டாலும் எதிரில் இருப்பவர் உடலில் நடுக்கம்.
காரை விட்டு இறங்கியவள், “சாப்பாட்டை எங்கிட்ட கொடுங்க. கேட்டைத் தொறங்க.” என்றாள்.
“அம்மா.. வருண் தம்பி யாரையும் உள்ள விட வேண்டாம் சொல்லி இருக்கார்.”
“அவனை நான் பார்த்துக்கிறேன். நீங்க கேட்டைத் திறக்கலைனா நான் காரை விட்டு இடிக்க வேண்டி இருக்கும். சோ நீங்களா நீக்கி விடுங்க.” என்று மீண்டும் அமைதியாக குரலில் அவரை மிரட்டை உணவைப் பையைக் கொடுத்து விட்டு கதவைத் திறந்தார் அந்த வாட்ச் மேன்.
கார் வேகமாக கெஸ்ட் ஹவுசினை நோக்கிப் பாய்ந்தது.
மழை கொட்டும்..