என் மேல் விழுந்த மழையே!-8

அத்தியாயம்-8

அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் வருணுக்குச் சிரிப்பு வந்தது.

‘இவ்வளவு நேரம்.. என்னோட லைஃப்ப விட்டு போயிரு. உன்னை எனக்குப் பிடிக்கலை.. அது இதுனு கீச்சு கீச்சுனு கத்திட்டு இப்படி எதிரினு நினைக்கறவன் வீட்டில் அம்மணி எப்படி தூங்குது.. ஆனாலும் உனக்கு என் மேல் ரொம்ப நம்பிக்கைடி.. உனக்கு இன்னும் என்னைப் பத்தி சரியா தெரிலை.. உன்னை நான் செய்யனும் நினைக்கறது… எல்லாம்..’ என்று அவள் கன்னத்தை ஒரு கோணல் புன்னகையுடன் வருடியவன் அவளை அப்படியே தூக்கி அவனுடைய படுக்கையில் படுக்க வைத்தான். போர்வையை நன்றாகப் போர்த்திவிட்டதும் அதற்குள் புதைந்து கொண்டாள் பிருத்விகா.  

ஜில்லென்ற கோயம்புத்தூரில் அதிகாலை அருமையாக ஆரம்பிக்க பிருத்விகாவின் கைப்பேசியில் அலாரம் மிசன் இம்பாசிபிள் கிட்டார் கவர் தீமில் அலறியது.

அது அடித்ததில் வருணே அடித்துப் பிடித்து எழுந்தான். இரவு பிருத்விகாவின் அருகில் படித்துக் கொண்டே அமர்ந்திருந்தவன் அப்படியே மெத்தையில் அவள் தலைமாட்டில் இவனும் உறங்கி இருந்தான். பிருத்விகாவின் அலாரம் அவனின் உறக்கத்தை முழுவதும் போக வைத்திருந்தது. அப்போதுதான் கவனித்தான் பிருத்விகாவின் சிறிய கை வருணின் பெரிய கைக்குள் புதைந்திருப்பதைக் கவனித்தான்.

வருணுக்கு அகன்ற, நீண்ட பெரிய கை. ஆனால் பிருத்விகாவின் கை அதில் முக்கால் பாகம் அளவுக்கு குறைவாக இருக்கும். உறக்கத்தில் எப்படியோ அவள் கையைப் பிடித்திருக்க வேண்டும்.

‘பர்பெக்ட் பிட்.’ என்று நினைத்தவன் அவள் எழுந்து காச் மூச் இல்லை கீச் கீச் என்று கத்துவதற்குள் அமைதியாக அவளிடம் இருந்து கையைப் பிரித்துக் கொண்டான்.

கிட்சனுக்குச் சென்றவன் காஃபி மேக்கரில் ஒரு காஃபியை தயாரிக்க ஆரம்பித்தான். தன் அலாரத்தில் ஒரு வழியாக பிருத்விகாவும் எழுந்திருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். அறையைப் பார்த்ததும் தான் வருணுடைய அறையில் இருக்கிறோம் என்று புரிந்தது. சரி இனி தன்னுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவள் போர்வையை விலக்கினாள். போர்வையை விலக்கியதும் குளிர் அதிகமாகியது போன்ற எண்ணம்.

பிருத்விகாவுக்கு காய்ச்சல் வந்திருந்தாதல் இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை. அதிலும் இந்த ஊரில் அதிகாலை நேரத்தில் குளிர் அதிகமாக இருக்கும். வீட்டில் தன் அறையில் மெத்தையில் அமர்ந்து போர்வையைப் போர்த்திக் கொண்டு படிப்பாள் பிருத்விகா. வெளியில் மீண்டும் மழைத் தூர ஆரம்பித்திருந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் போர்வையை மடித்து வைத்த பின்னர் எழுந்தாள்.

அறையைத் திறந்தவுடன் காஃபியின் நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்தது. அதை சுவாசித்தவள் அவனுக்குத் தெரியாமல் பூனை போல் பாதங்களை படியில் வைக்க ஆரம்பித்தாள். நெடிய ஹாலைத் தாண்டி வெளிப்புறக் கதவைத் திறந்தும் விட்டாள். வெளியில் கால் வைக்கப் போகும் சமயம் பின்னால் இழுக்கப்பட்டாள்.

அவன் இழுத்ததும் சட்டென நகரமால் கதவைப் பிடித்து நின்று கொண்டு திரும்பினாள்.

“வாட் வருண்?” குரல் எரிச்சலுடன் ஒலித்தது. அவள் கைகள் சில்லிட்டிருந்தது.

அவள் முன் புன்னகையுடன் ஃபைவ் ஓ கிளாக் ஷ்டோ தாடியுடன் வருண் நின்று கொண்டிருந்தான். அவன் உயரம் அதிகம் என்பதால் வருணின் தோளுக்கும் கீழே தெரிந்தாள் பிருத்விகா.

அவன் ஒரு சால்வையை அவள் முன் நீட்டினான்.

“இந்தா வாங்கிக்கோ..” பிருத்விகா அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

“வா.. வீட்டில் விட்டுட்டு வரேன்.” என்றான்.

“நோ தேங்க்ஸ். நானே போய்க்குவேன்.” பிருத்விகாவின் வீட்டிற்குச் செல்ல சில நிமிடங்கள் நடக்க வேண்டும்.

“எர்லி மார்னிங்க் உன்னை அப்படி எல்லாம் தனியா அனுப்ப முடியாது. அதனால் அமைதியா என்னோட வா.”

ஒரு பெரிய சிவப்பு நிறக் குடையை விரித்தவன் அவள் கை பிடித்தப்படி நடக்க ஆரம்பித்தான். வருணின் வீட்டில் இருந்த நடைபாதையில் சுற்றிலும் மலர்ச் செடிகள் வைக்கப்பட்டு பூத்துக் குலுங்கி இருந்தன.

ஒரு பக்கம் மஞ்சள் நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் காஸ்மாஸ் மலர்கள் பூத்துக் குலுங்கி இருந்தன. அடுத்த வரிசையில் ரோஜாக்கள். அடுத்த வரிசையில் மேரிகோல்ட் மலர்கள். இப்படி பல மலர்ச்செடிகள் இருந்தது. அங்காங்கே வெளிச்சம் உமிழும் அழகான விளக்குத் தூண்கள் இருந்தது. மழைத் தூரல் பூக்களின் மீது தன் முத்தத்தைப் பதித்துக் கொண்டிருந்தது.

அந்த ரம்யமான சூழ்நிலையில் இருவரும் நடக்க ஆரம்பித்திருந்தனர். கைகயை விட்டால் அவள் விட்டால் ஓடி விடுவாள் என்பது போல் வருண் அவள் இடது கையைப் பிடித்திருந்தான். இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

பிருத்விகா சால்வையை நன்றாகப் போர்த்தியவள் அமைதியாக செடிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நடந்தாள். அவளை வேடிக்கை பார்த்தப்படி வருண் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவர்கள் வருவது தெரிந்ததும் கேட் தானாகத் திறக்கப்பட செக்யூரிட்டியிடம் தலை அசைத்தப்படி பிருத்விகா விடை பெற்றாள்.

எதிரில் தார்ச்சாலையைக் கடந்து பிருத்விகாவின் நடுத்தர அளவிலான மாடி வீடு இருந்தது. அழகான வீடு. வருணின் மாளிகை போல் இல்லை என்றாலும் அந்த வீட்டிற்கு என்று ஒரு தனித்துவத்துடன் மிளிர்ந்தது. அந்த வீட்டில் அனைத்து அலங்காரத்தையும் பார்த்து பார்த்து செய்தது பிருத்விகா.

அவள் வீட்டு கேட் சாவியைத் திறந்து உள்ளே நுழைந்தான் வருண். அப்போதுதான் நேற்று அனைத்தையும் போட்டது போட்டபடி வருணின் வீட்டிற்கு கோபமாகச் சென்றது நினைவு வந்தது. தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டாள் பிருத்விகா.

“சரி.. சரி.. ஏதோ அவசரத்தில் மறந்துட்ட.. இப்ப என்ன? போ.. நான் எதுவும் நினைச்சுக்கலை. நைட்டே சாவியை நம்ம வீட்டுக்கு கொண்டு வர வச்சுட்டேன். உன்னோட லைஃபில் இன்னிக்கு பெரிய சேஞ்ச் நடந்திருக்கு. சோ.. கூலா ஹேண்டில் பன்னு. அகோஷனலா.. நாம அவுட்டிங்க் போற மாதிரியும் இருக்கும். பி ரெடி.” கதவைத் திறந்து கொண்டே நடந்தபடி பிருத்விகாவிடம் பேசிக் கொண்டு வந்தான் வருண். ஆனால் பிருத்விகாவின் முகம் முழுவதும் மாறி இருந்தது. இனி வரும் நாட்களை நினைத்து அவள் முகம் கவலையில் இருந்தது. அவள் வீட்டுக் கதவு சாவியையும் போட்டு திறந்த வருண்.

அவள் உள்ளே செல்லும் முன் அவள் தாடையை லேசாகப் பிடித்தான்.

“டோண்ட் வொரிடி.. உனக்கு ஒன்னும் ஆகாது. என்னோட பேக் கேர்ள்பிரண்ட காப்பாத்த வேண்டியது என்னோட கடமை. அதனால் வருத்தப்படாம இரு.” என்று கூறி இருந்தான்.

அந்த நொடியில் பிருத்விகாவுக்கு வருணை மிகவும் பிடிக்காமல் போயிருந்தது.  அவள் தாடையை விட்டவன் திரும்பி குடையுடன் தன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் வருணின் வீட்டில் இருந்து வெளியே வருவது பிருத்விகாவின் வீட்டில் நிற்பது.. அனைத்தும் டிஎஸ்எல்ஆர் புகைப்படக் கருவியில் தெளிவாக பதிவாகிக் கொண்டிருந்தது.

தன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நெடியவனை சில நொடிகள் வெறித்த பிருத்விகா தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

இன்று நடக்கப் போகும் சம்பவங்களை ஒருவாறு அனுமானித்து வைத்திருந்ததால் பிருத்விகா தன் உலகமான புத்தகத்திற்குள் ஆழ்ந்தாள்.

காலை ஒன்பது மணி. இன்று நூலகத்திற்குச் சென்றவள் சரியாக வகுப்பு ஆரம்பிக்கும் சில விநாடிகளுக்கு முன்பு வகுப்பில் நுழைந்தாள். முன்பே வந்தால் பலரின் பார்வையில் அவள் பட வேண்டி இருந்திருக்கும்.

வகுப்பிற்குள் தாமதமாக நுழைந்தவளை பலரும் நிமிர்ந்து பார்த்தனர். கிருஷ் வழக்கம் போல் அவளுக்கு தன் பேக்கை போட்டு ஒரு சீட் பிடித்து வைத்திருந்தான்.

கிருஷ்க்கு பிருத்விகா காலையிலே அழைத்து நடந்தவற்றை உரைத்திருந்தாள். அதனால் அவனுக்கும் அனைத்தும் தெரியும். பலரும் அவளைப் பார்க்க அதைப் பொருட்படுத்தாமல் தன் இடத்தில் அமர்ந்தாள் பிருத்விகா. அவள் உள்ளே நுழைந்ததும் முதல் வருணும், தஸ்வியும் அவளை விட்டு கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தப்பித் தவறி கூட பிருத்விகா வருணின் பக்கம் திரும்பவில்லை. அமைதியாக பாடத்தைக் கவனித்தப்படி இருந்தாள்.

இரண்டு வகுப்புகள் சென்று விடும். பிரேக் டைம் வரும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். பிரேக் டைம் வந்ததும் கிருஷ் பிருத்விகாவின் காதில் முனு முனுத்தான்.

“அப்படியே கேசுவலா.. எந்திருச்சு வா.. கேண்டீன் போகனும். நான் கூட இருக்கேன்.”

தலையை ஆட்டிய பிருத்விகா தன் புத்தகங்களைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினாள்.

இன்று வாடாமல்லி நிறத்தில் டாப்பும், வெள்ளை நிற லெகின்ஸ், வெள்ளை துப்பட்டா அணிந்து பிரி ஹேர் விட்டு ஒரு கிளிப் மட்டும் போட்டிருந்தாள். வழக்கத்தை விட அவள் தோற்றம் இன்னும் அழகாக இருந்தது.

அவர்கள் இருவரும் வாராண்டாவில் நடக்கும் நேரம் வந்து சேர்ந்தான் வருண்.

“ஹாய்.. பேபி…” அவனை பார்த்த பிருத்விகா எந்த பதிலும் கூறவில்லை.

“பேச மாட்டியா?”

இதற்கும் அவளிடம் பதில் இல்லை. உடனே தன் கைப்பேசியை எடுத்தவன், “புயூட்சரில் சேரி இந்த கலரில் எடு. உனக்கு சூப்பர் செக்ஸியாக இருக்கும்.” என்ற செய்தியை தட்டினான்.

குறுஞ்செய்தியைப் படித்த பிருத்விகாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“வருண்…” என்று பல்லைக் கடித்தாள்.

அப்போது சிலர் அவர்களைக் கடந்தார்கள்.

“கமான் பேபி. நைட் நடந்தது நினைச்சு நீ பீல் பன்னாத. உனக்கு நான் இருக்கேன்.” என்று கடந்து செல்வர்களுக்குக் கேட்கும்படி கூறினான். கடந்து செல்பவர்கள் சிரித்துக் கொண்டே செல்லவும் பிருத்விகாவின் முகம் மாறியது.

“வருண்… ரெயின் ஸ்பாட் நவ்..”

“கிருஷ் நீ கேண்டீன் போ. நான் வந்தறேன்.” என்று தன் நண்பனிடம் கூறியவள் நகர்ந்தாள்.

ரெயின் ஸ்பாட் என்ற பகுதிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அவர்களுடைய மருத்துவமனைக் கல்லூரியில் இருப்பதில் அந்த இடம் சேறும் சகதியுமாக இருக்கும். அங்கு மழை நீர் சேகரிப்புத் தொட்டி இருக்கும்.

ஆனால் பிருத்விகாவுக்கு அதன் அருகில் உள்ள ஸ்டோன் பெஞ்சில் அமர மிகவும் பிடிக்கும். அங்கு அடிக்கடி செல்பவள் என்பதால் வருணுக்கும் அந்த இடம் தெரியும்.

அவள் முன்னே நகர அவள் சென்ற பின் அவளைத் தொடர்ந்தாள் வருண்.

மழை நீர் சேகரிப்புத் தொட்டியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. பின்னால் அவன் வரும் காலடி சத்தம் கேட்டதும் அவள் திரும்ப கூட முயற்சி செய்யவில்லை. அப்படியே நின்றாள்.

அவள் திரும்பி இருக்க வேண்டும். திரும்ப வில்லை. அவள் பின்னால் வந்து நின்றதும் காலடி சத்தம் நின்றது போயிருந்தது.

“ஏன் வருண் இம்சை செய்யற?” என்று வார்த்தையைக் கூறி முடிப்பதற்குள் பிருத்விகா தன் பத்தடி ஆழமும், பதினெட்டு மீட்டர் நீளமும் கொண்ட மழை நீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து கொண்டிருந்தாள்.

டாக்டர் வசுந்தராவின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்  கோவை மாநகர அசிஸ்டண்ட் கமிஷனர்.

எதிரில் வசுந்தரா அமைதியான முகத்துடன் பச்சை நிற காட்டன் புடவையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“மேடம்.. இதுவரைக்கும் கிடைச்ச பாடியில் இருக்கறது எல்லாம் உங்க ஹாஸ்பிட்டல் யூனிபார்ம்ஸ். அதுமட்டுமில்லாமல் உங்க பேசன்ட்டா இருந்து டிஸ்சார்ஜ் ஆனவங்க. சோ யூ ஹேவ் டூ கோ ஆப்ரேட். அந்த பேசன்ட்ஸ் பத்தி அத்தனை டிடெயிலும் எங்களுக்கு வேணும். அதிலும் ரீசண்டா கிடைச்சது உங்க பேசண்ட் இல்லை. ஆனால் நீங்க பையர் பன்ன ஒரு எம்பிளாயி. அவனை பையர் பன்ன ரீசன் இன்னும் சொல்லவே இல்லை. நீங்க கோ ஆப்ரேட் செய்யலைனா.. என்னால் எதுவும் செய்ய முடியாது.”

“கமிஷனர் சார்.. என்னோட பேசண்டா இருந்தவங்க டீட்டெயில் எல்லாம் அவங்க பேம்லி கன்சண்ட் இல்லாமல் ஹேண்ட் ஓவர் செய்ய முடியாது. அதனால் கெட் தெயர் பேம்லி கன்சண்ட்.”

“மேம்.. உங்களுக்கு பிரச்சினையோட சீரியஸ்னஸ் தெரியலை. லாஸ்ட்டா இறந்தவனை நீங்க பையர் பன்னி இருக்கீங்க. அதனால் உங்களை கூட என்னோட சஸ்பெக்ட் லிஸ்ட்டில் கொண்டு வர முடியும். சோ.. நான் சொல்றத கேட்கறது உங்களுக்கு நல்லது.”

“ஸார்.. நான் திரும்பவும் சொல்றேன். எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. பேசண்ட் பேம்லிகிட்ட இருந்து கன்செண்ட் வாங்குங்க. அவ்வளவுதான்.”

“மேம்… மதுரா மேடம்காக மட்டும் தான் இந்தக் கேஸை நான் பிரஸ் மீடியா.. இப்படி எதுக்கும் ரீலிஸ் செய்யாமல் விசாரிச்சுட்டு இருக்கேன். இது வெளிய வந்தால் ஹாஸ்பிட்டல் பேரு கெட்டுப் போயிரும்.”

“எஸ்… ஐ நோ. தேங்க் யூ. பட் நான் சொன்னது சொன்னதுதான்..”

வசுந்தராவின் குரல் உறுதியாகவும், அமைதியாகவும் ஒலித்தது.

. -மழை கொட்டும்…