என் மேல் விழுந்த மழையே! -13 & 14 &15
அத்தியாயம்-13
கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பிருத்விகா லாவகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்த வருணுக்கு தூக்கம் அவ்வப்போது கண்களைச் சுழற்றியது. கண்களை சிரமப்பட்டு விழிக்க முயன்று கொண்டிருந்தான்.
அவன் செய்கைகளை ஓரக் கண்ணால் பார்த்தப்படி காரை இயக்கிக் கொண்டிருந்தாள் பிருத்விகா. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கண்களை மூடுவதும் வெடுக்கென்று விழிப்பதுமாக இருக்க பிருத்விகாவுக்கே பொறுமை போய் விட்டது.
“தூங்கேண்டா… எதுக்கு இப்படி கோழித்தூக்கம் போட்டுட்டு இருக்க.. கண்ணை மூடித் தூங்கு.”
என்றாள். அவள் பேச்சைக் கேட்டு தலையைசைத்த வருண் அப்படியே தூங்கிப் போனான்.
‘எல்லா வேலையும் செஞ்சுட்டு அப்படியே ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி தூங்கறதைப் பாரு.’ என்று மனதில் அவனைத் திட்டவும் தவறவில்லை.
இருவருடையை வீடு வரும் வரை அமைதியாகப் பயணம் இருந்தது. காரை பன்னிரெண்டு மணி வாக்கில் தன் வீட்டு முன் நிறுத்தினாள்.
வருண் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
பிருத்விகா அழைத்தும் அவன் எழவில்லை. காரை விட்டு இறங்கி தன் வீட்டுக் கேட்டைத் திறந்தவள் காரை உள்ளே செலுத்தினாள்.
“வருண்.. எழுந்திரு..”
“வருண்..” அவன் எழவே இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வருண்.
‘மவனே.. எல்லாத்தையும் பன்னிட்டு எப்படி தூங்கறான் பாரு?’ என்று மனதில் கருவியள் அவன் புஜத்தில் கிள்ளி வைத்தாள். உடனே துள்ளி எழுந்தான் வருண்.
எழுந்ததும் பேந்த பேந்த சில விநாடிகள் விழித்தாலும் தெளிந்து கொண்டான். பிருத்விகா வீட்டில் இருப்பதை உணர்ந்து கொண்டான்.
“வீடு வந்துருச்சு இடியட்.. எழுந்து வீட்டுக்கு போ..”
“ஏண்டி.. அவ்ளோ தூரம் நடந்து போகனும் இல்லை.” கண்களைக் கசக்கியபடி கூறினான்.
“மகாப்பிரபு.. தங்களின் பயணம் முடிவடைந்து விட்டது. இறங்குங்கள்.’ அவனுக்கு முன் இறங்கியவள் நடக்க ஆரம்பித்தாள்.
உடனே அவள் பின்னால் இறங்கி வருணும் தொடர்ந்தான். அவன் அடுத்து செய்ய வருவதை உணர்ந்தவள் போல் திரும்பி நின்றாள். அவள் சட்டென திரும்புவாள் என்று எதிர்பாராத வருண் அவள் மீதே மோதினான்.
“ஷ்ஷ்..”
“உன்னை வீட்டுக்கு போகச் சொன்னேன் வருண்.”
“வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கேன்.”
“அது அந்தப் பக்கம் இருக்கு.” கையை உயர்த்தி திசையைக் காட்டினாள் பிருத்விகா.
“ஏண்டி.. படுத்தற.. தூக்கம் வருது.. அவ்வளவு தூரமெல்லாம் போக முடியாது. சோபாவில் தூங்கறேன். இதுவும் என் வீடுதான்.” அவளுக்கு முன் மேட்டுக்கு அடியில் இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து கொண்டு நுழைந்தான். அவனைத் தடுக்க முடியாமல் பல்லைக் கடித்தப்படி பின்னால் நுழைந்தாள் பிருத்விகா.
வீட்டுக்குள் நுழையும் முன்பு கதவின் அருகில் நின்று வெளியே திரும்பிப் பார்த்தாள் பிருத்விகா.
“என்ன பிருத்விகா அங்கேயே நின்னுட்ட?”
“இல்லடா.. கேட்டுக்கு வெளியில் யாரோ நின்ன மாதிரி இருந்துச்சு?”
“அதான் பேபி இங்கு இருக்கும் போது வெளியில் என்ன தெரியப் போகுது? போய் தூங்கு.. குட் நைட்.” என்று மெலிதாகக் கூறியபடி நகர்ந்தான் வருண்.
தன் வீட்டில் வந்து தன்னையே அதிகாரம் செய்வபவனை முறைத்தாள்.
சோபாவில் சென்று படுத்துக் கொண்டான் வருண். இடவலமாக தலையை ஆட்டியவள் தன் அறைக்குள் சென்று பெட் சீட் இரண்டை எடுத்து வந்தாள்
“போடா.. போய் அங்கிள் ரூமில் தூங்கு. சோபாவை விட இவன் பெரிசாம். சோபாவில் தூங்க டிரை பன்ன வேண்டாம்… போடா..” என்று பெட் சீட்டை அவன் முகத்தின் மீது எறிந்து விட்டு மாடி ஏறிவிட்டாள். மாடி ஏறுவபவளை மந்தகாச புன்னகையுடன் பார்த்துவிட்டு அவள் தந்தையின் அறைக்குள் நுழைந்தான் வருண்.
காலை ஏழு மணி..
வருண் கண்களை தன் கைப்பேசி அலாரத்தின் ஒலியில் கண் விழித்தான். கண்களைத் தேய்த்தப்படி எழுந்தவன் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
வெளியே வந்ததும் அவன் கண்களில் சோபாவில் ஒற்றைக் காலை மடித்தபடி புத்தகத்தை முகத்தில் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பிருத்விகா பட்டாள்.
“இவளோட சின்சியாரிட்டிக்கு அளவே இல்லை. இதுக்குப் பேசாம ரூமில் தூங்கி இருக்கலாம்.” என்று அவள் அருகில் சென்றான். புத்தகத்தை எடுத்து மேசையில் வைத்தான்.
ஒரு சிவப்பு நிற பைஜாமாவில் இருந்த பிருத்விகாவின் தலை முடி முன் நெற்றியில் கலைந்திருந்தது. அதை ஒதுக்கியவன் அவளை சில விநாடிகள் உற்று நோக்கினான்.
அவள் நெற்றியில் இருந்து ஆள்காட்டி விரலால் வருடியவன் உதட்டருகில் வந்து நிறுத்தினான். சில விநாடிகள் அவள் மேலுதட்டுக்கு மேல் உள்ள பள்ளத்தில் நிலைத்து நின்றது அவன் விரல். பிறகு கையை எடுத்தவன் சட்டென வீட்டை விட்டு வெளியேறினான்.
வருணின் வீட்டில் ஏதோ இனிய நறுமணம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
‘தேவகி மா..ஆரம்பிச்சுட்டாங்க போல..’ என நினைத்தவன் அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தான்.
பின்பு நேராக கிட்சனுக்குள் நுழைந்தான்.
“தேவகிமா..”
“தம்பி…” வருணின் குரலைக் கேட்டதும் கரண்டியுடன் திரும்பினார் தேவகி.
“என்ன தம்பி.. எங்க போயிட்டீங்க? என்ன இப்படி இளைச்சு போயிட்டீங்க. எமக்கு என்ன பண்றதுனே தெரியலை. பாப்பாகிட்ட சொல்லவும் தான் நான் பார்க்கிறேன் கிளம்புனாங்க. பாருங்க நைட் போன் போட்டு நீங்க நிம்மதியா தூங்குங்க. காலையில் வருண் வீட்டுக்கு வந்திடுவானு சொன்னாங்க. அதே மாதிரி வந்துட்டீங்க..”
தேவகி தன்னை இளைத்து விட்டான் என்றதும் வருணுக்கு சிரிப்பு வந்து விட்டது. எங்கு சில நாட்கள் சென்று விட்டு வந்தாலும் வருணை இளைத்து விட்டேன் என்று கூறுவது அவர் வழக்கம். ஆனால் இந்த முறை உண்மையாகவே வருண் இளைத்திருந்தான். அவர் அக்கறையும், அன்பும் எப்போதும் அவனுக்கு பிடித்தவை.
தாய், தந்தை அருகில் இல்லாவிட்டாலும் அவனைக் கண்ணும் கருத்துமாக சிறு வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்.
“சாரி.. தேவகிம்மா.. இனிமேல் உங்ககிட்ட சொல்லாமல் எங்கேயும் போகமாட்டேன்..”
“அட என்ன தம்பி.. விடுங்க.. உங்களுக்கு பிருத்வி பாப்பாதான் சரி. அவங்க சொன்ன மாதிரி உங்களைக் கூட்டிட்டு வந்துட்டாங்க.”
“ம்ம்ம்…”
“சரி… எனக்கு டைம் ஆச்சு. கிளாஸ் இருக்கு. பிருத்விக்கு ஒரு கால் பன்னி எழுப்பி விட்ருங்க..” என்று கூறிவிட்டுச் சென்றான்.
பிருத்விகாவின் போன் அடித்ததும் துள்ளி எழுந்தாள். தேவகி அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்க தேவகிம்ம்மா..”
“பாப்பா… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க. எழுப்பி விடச் சொல்லி தம்பி சொன்னாரு. அதான் எழுப்பி விட்டேன்.”
“ஓ… தேங்க்ஸ்… சரி..” என்று மணியைப் பார்த்தவள், “நான் கிளம்புறேன்.. பார்த்துக்கலாம்.”
மணி சரியாக எட்டரை. கிளம்பி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்தாள் பிருத்விகா.
காலை உணவு செய்ய இன்று நேரம் இல்லை என்பதால் பிரட்டும் நூடுல்ஸூம் செய்து உண்டு விட்டாள். மதியம் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள். மருத்துவக் கல்லூரி காபிடேரியா உணவு நன்றாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என்பதால் பிருத்விகா அவ்வப்போது அங்கு உணவு உண்ணுவது வழக்கம்.
வீட்டைப் பூட்டிக் கொண்டு ஸ்கூட்டி சாவியை எடுக்கும் போது கேட்டின் வெளியில் ஹாரன் சத்தம் கேட்டது. அது யாருடைய காரின் சத்தம் என்று தெரியும் என்பதால் அமைதியாகத் திரும்பிப் பார்த்தாள்.
“பிருத்விகா.. வா நானே டிராப் செய்யறேன்.”
வேண்டாம் என்றபடி கையை உயர்த்தியவள் அமைதியாக தன் மறுப்பைத் தெரிவித்தாள்.
“கமான்.. நைட் நல்லா தூங்கலை. பேக் அண்ட் போர்த் டிரைவ் பன்னி இருக்க. வா.. நான் டிராப் பன்றேன். ஈவினிங்க் என் கூட வரலாம். இல்லை கிரிஷ் கூட வந்துக்க. உன்னோட அங்கிள் தான் டிராப் பன்ன சொன்னாரு..”
அங்கிள் என்றதும் தன் சாவியை ஸ்கூட்டியில் இருந்து விடுவித்தவள் தன் பைக்குள் சிறைப்படுத்தி விட்டு அமைதியாக வீட்டின் கேட்டையும் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.
“உன்னை…” அவள் முகம் வழக்கத்திற்கு மாறாக யோசனையில் இருந்தது. காரினுள் பேசாமல் ஏறி அமர்ந்தாள்.
ஒரு தெர்மல் பாட்டிலை எடுத்து நீட்டியவன், “இந்தா உனக்குப் பிடிச்ச சூப். தேவகிம்மா கொடுத்து விட்டாங்க. எப்படியும் நீ காலையில் சமைச்சுருக்க மாட்டனு சொன்னாங்க.”
தேவகி அம்மா பெயர் அவள் முகத்தைக் கனிய வைத்தது. அமைதியாக அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டாள்.
வெள்ளை நிற டாப்பும், அடர் நீல பாலேசோ பாண்ட்ஸ்ம் அவள் அங்கத்தைத் தழுவி இருந்தன. கழுத்தில் அடர் நீல வண்ணத்தில் ஒரு ஸ்கார்ப். அதே லேசாக ஒதுக்கியவள் அவன் காரை எடுத்ததும் மெதுவாக சூப்பைக் குடிக்க ஆரம்பித்தாள்.
வருண் அமைதியாகக் காரை ஓட்டி வரவும், பிருத்விகா அவ்வப்போது அவனைக் கவனித்துக் கொண்டே வந்தாள்.
காரை பார்க்கிங்க் நிறுத்தியவன், “சைட் அடிச்சு முடிச்சுட்டியா.. இல்லை இன்னும் காரில் இருக்கலாமா?” இப்படி கேட்டதும் பிருத்விகா வெடுக்கென்று பார்வையை மாற்றினாள். காரை விட்டு இறங்கினான் வருண்.
லேசாக புன்னகைத்தவன், “பேபி.. உனக்கு என் மேல் லவ்வுதான் இல்லைனு சொல்லலை. அதுக்காக இப்படி அடிக்கடி பார்த்து வைக்காத. ஹார்ட்டை என்னமோ செய்யுது?” அவள் பக்கம் கார் கண்ணாடி வழியே நின்று இதைக் கூறிவிட்டு கார்க் கதவைத் திறந்து விட்டான்.
காரில் இருந்து நெற்றியைச் சுருக்கிக் கொண்டே இறங்கியவள் அவனை முறைத்தாள்.
“டேய்… வருண்.. போதும்டா.. பார்க்கிங்கில் ரொமான்ஸா.. கிளாஸ்க்கு டைம் ஆகிருச்சு.” என்று அருகில் இருந்த காரில் இறங்கிய ஒரு ரெசிடண்ட் டாக்டர் கேட்டார்.
“சீனியர்.. நத்திங்க் லைக் தட்.” அவனுடைய கல்லூரியில் படித்த சீனியர் என்பதால் புன்னகையுடன் மறுத்தான்.
“நானும் 7 இயர்ஸா எப்படா ஒத்துக்குவீங்கனு நினைச்சேன். பைனலா… இந்த வருஷம் நடந்துருச்சு. கேம்பஸ் ஹாட் டாபிக்கே நீங்க இரண்டு பேரும் தான். பாவம் தஸ்வி. நீ எவ்வளவு தடவை இக்னோர் பன்னாலும் புரியலை. மை விஸ்சஸ் பிருத்விகா.” என்று வாழ்த்தினார்.
பிருத்விகா அப்படி இல்லை என்று மறுப்பதற்குள் அவள் கையைப் பிடித்து அழுத்தினான் வருண்.
“தேங்கஸ் சீனியர்.” என்றான்.
“டேக் கேர் பிருத்விகா. ஊருக்குப் போயிருந்ததால் வர முடியலை. வசுந்தரா மேம் உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டாங்க.”
“தேங்க் யூ சீனியர்.” என்று புன்னகைத்தாள் பிருத்விகா.
பிறகு அவன் விடைபெற்று செல்லவும் பிருத்விகா வருணுக்கு பாக்கி வைத்திருந்தத முறைப்புகளை அள்ளி வழங்கினாள்.
“வசுந்தரா மேடமை உனக்கு அவ்வளவு பிடிக்குமா? என்ன?”
வருண் அவள் கவனத்தை திசை திருப்பக் கேட்டான். வசுந்தரா பேரைக் கேட்டதும் அவள் முகம் மாறுவதை அவனும் கவனித்திருந்தான். வசுந்தராவிற்காகத்தான் இந்தக் கல்லூரியில் அவள் வந்து சேர்ந்ததே. அதுவும் வருணுக்குத் தெரியும்.
“ம்ம்ம்… பிடிக்கும்.”
“ரீசன்?”
“தெரியாது. பிடிக்கும்.” அவள் வார்த்தைகளைக் கேட்டவன் தலையை இட வலமாக ஆட்டினான்.
“சரி.. வா டைம் ஆகிருச்சு.” என்றான். இருவரும் வகுப்பிற்கு புறப்பட்டனர். பார்க்கிங்கில் தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்ட உருவம் அவர்களை வெறித்தவாறு நின்றது.
***
வசுந்தரா தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தார். எதிரில் கோவை மாநகர ஏசி அறையில் இருக்கும் ஏசி குளிரிலும் கொதி நிலையில் அமர்ந்திருந்தார்.
“மேடம்.. இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? இந்த தடவை இறந்துப் போயிருக்கறது உங்க எம்பிளாயி. நர்ஸ். இதுக்கு முன்னாடி இறந்து போன பேசண்டைப் பார்த்துகிட்ட நர்ஸ்.”
“சார்… உங்களுக்குத் தேவையான கோ ஆப்ரேசேனை நான் கொடுக்கிறேனு சொல்லிட்டேன். இறந்து போன பேசண்ட்டோட ஃபேம்லி கன்செண்ட் கொடுக்கலை. நான் எப்படி டீட்டெயில் கொடுக்க முடியும்.”
தன் இண்டர்காமை எடுத்தவர் செகரட்டரியை உள்ளே வர செய்தார். அந்தப் பெண்ணிடம் இருந்து ஃபைலை வாங்கியவர், “இந்தாங்க நீங்க கேட்ட டீடெய்ல்ஸ் இந்த ஃபைலில் இருக்கு. நீங்க இங்க எப்ப யாரை வேணாலும் விசாரிச்சுக்கலாம். அதுக்கான சர்க்குலர் நான் செண்ட் பன்றேன். ஆனால் பேசண்ட் டீட்டெயில் மட்டும் ஐ காண்ட்.” என்று கூறினார்.
அமைதியான தொனியில் பதில் கூறும் வசுந்தராவை ஏசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மட்டுமின்றி டாக்டர்.வசுந்தராவினை அவரால் பகைத்துக் கொள்ளவும் முடியாது. பார்ப்பதற்கு சாதாரண டாக்டர் போல் தெரிந்தாலும் அவருக்கு பவர் அதிகம்.
அசிஸ்டண்ட் கமிஷனர் பரணி வேலனுக்கு வசுந்தரா ஏதோ மறைப்பதாகத் தோன்றியது. வசுந்தரா கொலை நடந்த நேரத்தில் எங்கு இருந்தார் என்பதற்கு அலிபைகளும் சரியாக இருந்தன.
அவருடைய மருத்துவமனைப் பணியாளர்கள் யாரும் சந்தேகத்திற்கு இடமளிக்கவில்லை. இது ஒரு சீரியல் கில்லிங்க் என்று நடக்கும் கொலைகளில் தெளிவாகத் தெரிகிறது.
வசுந்தரா அனைத்திற்கும் தெளிவாக பதில் சொல்கிறார். ஆனால் வசுந்தராவைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு எழுகிறது. அவருடைய போலீஸ் மூளையில் சந்தேக விதை ஒன்று போடப்பட்டு முளைவிட ஆரம்பித்தது.
அத்தியாயம்-14
கிருஷூம், பிருத்விகாவும் நூலகத்தில் அமர்ந்திருந்தனர். மணி ஆறைத் தாண்டி இருந்தது. அந்தக் கனமான மருத்துவ நூலைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
கையில் உள்ள பேனாவைக் கையில் சுழற்றியவள் எதையோ யோசித்தாள்.
அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான் கிரிஷ். நூலகத்தில் அமைதி காக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக பேனாவைச் சுழற்றும் கையின் மீது தன் கையை வைத்தான். உடனே நிமிர்ந்து பார்த்தாள் பிருத்விகா.
தன் கைப்பேசியை எடுத்தவன் அவள் முன்னே ஆட்டி விட்டு டைப் செய்ய ஆரம்பித்தான்.
‘என்ன டீப் திங்கிங்க்?”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் கைப்பேசியை எடுத்து, ‘நத்திங்க்.’ என்று பதிலுக்கு அனுப்பினாள்.
‘நோ.. காண்ட் பீலிவ். மார்னிங்கில் இருந்து நீ இப்படித்தான் இருக்க. வாட் ஹேப்பண்ட்?’
‘நோ.. ஐஸ்ட் லேக் ஆஃப் ஸ்லீப். அவ்வளவுதான்.’
‘ஓகே நம்பிட்டேன்.’
என்று இறுதியாக அவளுக்கு ரிப்ளை அனுப்பிவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான் கிரிஷ். தன் தோழியைப் பற்றி அவனுக்குத் தெரியாததா?
ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவனைப் பார்த்தான். பதிலுக்கு தன் இரண்டு புருவங்களையும் தூக்கினாள் பிருத்விகா.
அப்போது அருகில் இருந்த டேபிளில் ஸ்டீல் ஸ்கேல் கீழே விழுந்தது. உடனே நண்பர்கள் இருவரது பார்வையும் அங்கே திரும்பியது. குனிந்து அதை எடுத்தபடியே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் வருண். அவன் அருகில் இருந்த மித்ராவும் தான்.
இவர்கள் எப்போது இங்கு வந்து அமர்ந்தார்கள் என்று பிருத்விகாவுக்குத் தெரியவில்லை. ஆனால் கிருஷ் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை. அமைதியாக அவர்கள் பார்வையை எதிர் கொண்டான்.
பிருத்விகா ஒரு நொடி திகைத்தாலும் பின்பு தன் பார்வையை மீண்டும் புத்தகத்தின் மீது திருப்பினாள். தன் முன் விரித்து வைத்திருந்த புத்தகங்களை மூடியவள் கிருஷ்ஷைப் பார்த்து இடது கையில் மணியாகிவிட்டது ஆள்காட்டி விரலால் தட்டிக் காட்டினாள். அதன் அர்த்தம் அவள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறாள் என்பதால் தன் புத்தகங்களை அவனும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.
இருவரும் அமைதியாக நூலகத்தை விட்டு வெளியே வந்தனர். வெளியே வந்ததும் தன் பேச்சை ஆரம்பித்தான் கிருஷ்.
“பிருத்வி.. ஏன் கிளம்பிட்ட? வருணாலயா?”
“ப்ச்ச்.. ஆமாம்.. அவன் எதுக்கு ஸ்கேலை தூக்கிப் போட்டான் தெரியுமா?.. சேட் பன்னாமல் படி. இல்லை வீட்டுக்கு கிளம்புனு அர்த்தம். இன்னும் இருபது செகண்டில் வெளிய வருவான் பாரு.”
“ஹே… சும்மா சொல்லாத?”
“நீ பாரு.. என்னை இன்னிக்கு அவன்தான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்.”
நண்பனிடம் அவள் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்கும் போதே உடனே அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் வருண். அவள் பின்னே மித்ராவும் வந்தாள்.
அதைப் பார்த்ததும் கிருஷ்ஷைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வெளிப்படுத்தினாள் வருண்.
“ஹவ்?” என்று வாயசைத்தவனுக்கு பதிலாக அப்படித்தான் என்று இவளும் வாயசைத்தாள்.
“பிருத்விகா.. கிளம்பலாம் வா?”
‘நான் சொல்லலை.’ என்பது போல் கிருஷ்ஷை நோக்கிப் புருவத்தை உயர்த்தினாள் பிருத்விகா.
“ஓகே…” என்று பதில் அளித்தவள் அருகில் இருக்கும் பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கிருஷ்ஷின் பைக்கும் அங்கே இருப்பதால் அவனும் உடன் நடந்தான். சுற்றி இருக்கும் மலை முகட்டுகளைப் பார்த்தபடி நால்வரும் அந்த மலர்களும், இலைகளும் கொட்டிக் கிடந்த பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
பார்க்கிங்க் வந்ததும் முதலில் கிருஷ் பைக் முன்னால் இருந்ததால் , “ஓகே..டா.. நைட் மெசேஜ் பன்றேன். பாய்..” என அவனிடம் விடை பெற்றாள்.
“பிருத்வி… இன்னிக்கு எங்கிட்ட சொல்லல. ஆனால் ஐம் வெயிட்டிங்க்.”
“ஓகே.. ஓகே..” என்று சிரித்தபடி விடை பெற்று வருண் காரை நோக்கிச் சென்றாள்.
அதன் முன் பக்கத்தில் மித்ரா அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தப்படி பின் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள் பிருத்விகா.
“முதலில் மித்ராவை டிராப் பன்னிட்டு நம்ம வீட்டுக்குப் போறோம்.” என்று வருண் அறிவித்தான்.
“ஓகே.” என்றபடி காதிற்குள் ஏர்பட்ஸ்களை மாட்டியவள் தன் அலைபேசியில் பாடல்களை ஓடவிட்டாள்.
மித்ராவும், வருணும் சிரித்து பேசியபடி வர பிருத்விகா அதைக் கவனித்தாலும் வெளியில் வேடிக்கைப் பார்ப்பதிலும் பாடலைக் கேட்பதிலும் தன் கவனத்தைச் செலுத்தினாள்.
மித்ராவிடம் அவளுக்கு எந்தப் பகையும் கிடையாது. ஹாய் பாய் கூறுமளவுதான் பிருத்விகா பழக்கம் வைத்திருந்தாள். அவளிடம் அதிகம் பழகாத காரணம் வருணின் தோழி என்பதே. மற்றபடி அவளுக்கும் மித்ராவின் மீது எந்த அபிப்ராயமும் இல்லை.
மித்ராவின் வீடு வந்து விடவும் அவள் பாய் சொல்லி இறங்கிக் கொண்டாள். வருண் காரை எடுப்பான் என்று பார்க்க அவன் எடுக்கவே இல்லை. தலையைத் திருப்பி இவளைப் பார்த்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பிருத்விகா.. முன்னாடி வந்து உட்காரு.”
“எதுக்கு?”
“எனக்குத் தூக்கம் வருது. அதனால் முன்னாடி வா.”
“ஓ…”
அவனிடம் சண்டை இடாமல் அமைதியாக முன் பக்கம் ஏறிக் கொண்டாள். தான் கூறுவதை உடனே ஏற்றுக் கொண்ட பிருத்விகா ஆச்சர்யமாகத் தெரிந்தாள்.
“என்னாச்சு உனக்கு?”
“என்னாச்சு எனக்கு?” வருண் கேட்டதை அப்படியே ஒரு எழுத்து மாற்றிக் கேட்டாள். காரை எடுத்தப்படியே, “இன்னிக்கு மார்னிங்கில் இருந்து நீ நார்மலா இல்லை. எதையோ யோசிச்சுட்டே இருக்க?”
“அப்படி ஒன்னும் இல்லை.”
“யா… பார்த்தேன். என்னோட கேர்ள் பிரண்ட் ஏன் டல்லா இருக்கானும் சிலர் ஏங்கிட்ட கூட கேட்டாங்க.”
“ஸ்டாப் இட்.”
என்றவள் அமைதியாக அதற்கு மேல் பேசாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். சாய்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். டிரைவர் சீட்டில் முன்பு அமர்வதே பேசிக் கொண்டே ஓட்டுபவருக்கு வரும் உறக்கத்தைத் தடை செய்யத்தான். வருணுக்கு உறக்கம் வரவில்லை. இருந்தாலும் பொய் கூறி அவளை முன்பு வர வைத்திருந்திருந்தான்.
ஆனால் அவனிடம் பேச மறுத்து கண்களை மூடிய பிருத்விகா உண்மையாகவே உறங்கி இருந்தாள்.
வருணுக்கு இன்று பிருத்விகாவின் அமைதி வித்யாசமாகத் தெரிந்தது. ஏனென்றால் அந்த மழை நீர் தொட்டியில் விழுந்த பிறகு பிருத்விகாவின் குணத்தில் ஏதோ மாற்றம் வந்தது போன்று அவனுக்குத் தோன்றியது. பிருத்விகா வழக்கமாக இப்படி இருக்க மாட்டாள். கிருஷ்ஷுடன் கூட அதிகம் பேசவில்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
யோசித்துக் கொண்டே கார் ஓட்டியவனின் கவனத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து வரும் கார் பட்டது. நீண்ட நேரமாகவே அது அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
சரியாக ஒரு யூ டர்ன் வரவும் காரை வளைத்துத் திருப்பினான். அந்தப் பாதையில் சென்றால் சற்று சுற்றித்தான் வீட்டுக்குச் செல்ல முடியும். அவன் யூ டர்ன் எடுத்தவுடன் பின்னால் வந்த கார் நேராக சென்று விட்டது. அதனால் வருணும் எதுவும் நினைக்காமல் காரைச் செலுத்த ஆரம்பித்தாள்.
ஆனால் அவன் யூ டர்ன் போட்டுத் திருப்பியதில் பிருத்விகா விழித்துக் கொண்டிருந்தாள்.
சீட் பெல்ட் போட்டிருந்தாலும் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து வைத்து உறங்கியதில் காரின் பக்கவாட்டில் தலையில் லேசாக அடித்திருந்தாள் பிருத்விகா.
“வருண்ண்ண்…” பிருத்விகா பல்லைக் கடித்தபடியே அவன் பெயரை உச்சரித்தான்.
“இப்ப எதுக்கு யூ டர்ன் போட்டு சுத்தி போயிட்டு இருக்க? வழக்கமாப் போற ரூட்டில் போக வேண்டியதுதானே?”
தலையைத் தேய்த்தப்படி அவனிடம் கேள்வி கேட்டாள். காரை நிறுத்தியவன் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு லேசாக சாய்ந்தவுடன் அவளுடைய தலை அவன் கைகளுக்கு எட்டியது. அவன் தேய்த்து விட வருவதை உணர்ந்த பிருத்விகா அவனுடைய இரண்டு கைகளையும் தன் கைகளால் தடுத்தாள்.
“ப்ச்ச்.. இப்ப என்ன உனக்கு?”
“நீ ஒன்னும் தேய்ச்சு விட வேண்டாம்.”
அவள் கைகளெல்லாம் அவனை ஒன்றும் தடுத்துவிட முடியவில்லை. தேய்த்துவிட்டவன் மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்தான். அவனை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்க முடிந்தது அவளால்.
“யாரோ நம்மளை ஃபாலோ செஞ்ச மாதிரியே இருந்துச்சு. அதான் யூ டர்ன் எடுத்தேன். அவசரத்தில் உன்னோட தலையைப் பார்க்காமல் விட்டுட்டேன்.”
‘அப்புவும் வாயிலிருந்து சாரினு ஒரு வார்த்தை வருதா பாரு. எல்லாத்தையும் செஞ்சுட்டு எப்படி இருக்கான் பாரு. எருமை மாடு.’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள் வெளியில் வேடிக்கைப் பார்க்கும்படி திரும்பினாள்.
உடனே அவள் தாடையை லேசாகப் பற்றித் திருப்பினான் வருண்.
“இப்ப என்ன சொல்லி என்னைத் திட்டுன?”
அவன் கையைத் தட்டி விட்டவள், “சும்மா.. டச் பன்னிட்டே இருக்காத. இப்ப நீ காரை எடுக்கலைனா நான் இறங்கி நடக்க ஆரம்பிச்சுருவேன்.” என்று எச்சரிக்கும் குரலில் கூறினான்.
“வர வர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க டாக்டர் மேடம். நீயும் நானும் டச் பன்னவே இல்லாத மாதிரி.” என்று முனகியவன் காரை எடுத்தான்.
பிருத்விகா அமைதியாக வரவும், “பிருத்விகா.. மெயில் பார்த்தியா? செமினார் அப்புறம் இயர்லி டாக்டர்ஸ் பார்ட்டி.”
“செமினாரா…” உடனே தன் கைப்பேசியில் உள்ள மெயிலைப் பார்த்தாள்.
அத்தியாயம்-15
இரண்டு நாட்கள் கழிந்தது. வருணும் அதிகம் பிருத்விகாவினை சீண்டவில்லை. வகுப்பு சென்றாள். வீட்டுக்கு வந்தாள். படிப்பிலும் தூக்கத்திலும் நேரம் கழிந்தது. சந்திர விலாசத்துக்காரன் அவளை என்ன நினைத்தானோ அதிகம் வம்பிழுக்கவில்லை.
கிருஷ் இருப்பதால் பிருத்விகாவுக்கு கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. எதையாவது பேசி சிரிக்க வைத்துவிடுவான். இயல்பாக பேசுவதால் அவனை அப்பாவி என்று நினைக்கவே கூடாது. அவன் புத்திசாலி என்பதே அவன் கலகலப்பு குணத்தில் மறைந்து விடும். யாருக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து விடுவான். அதனால் அவ்வளவு எளிதில் யாரும் பிருத்விகாவிடம் வம்புக்கு வந்து விட இயலாது.
தன் நண்பனைப் பற்றி நன்றாக உணர்ந்திருந்த பிருத்விகாவுக்கு தஸ்வியால் வரும் பிரச்சினைகள் பற்றி அதிகம் கவலை இருந்தது இல்லை.
அவள் அன்னை இறந்த பிறகு கிருஷ்தான் அவளை தாங்கிப் பிடித்தது என்று கூறலாம். அவள் கூறவில்லை என்றாலும் அவளுக்காக அவன் வந்து நிற்பான்.
கிருஷ்ஷூடன் இரண்டு நாட்கள் நன்றாகக் கழிந்தது. இருவரும் கோவை இரவு டின்னருக்கு சென்று வந்தார்கள்.
அன்றைய இரவு பால்கனியில் அமர்ந்து பிருத்விகா தன் மடிக்கணினியில் மெயில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வரும் ஞாயிறு நடக்கும் செமினாருக்கும், பார்ட்டிக்கும் இன்னும் அவள் அக்னாலஜ்மெண்ட் மெயில் அனுப்பவில்லை. கடந்த வருடம் இதே பார்ட்டியில் போது தான் அவளுடைய அன்னை இறந்திருந்தார். ஏனோ அன்னையின் நினைவு மனதில் எழுந்தது.
அப்போது அவளுடைய கைப்பேசிக்கு வருண் மெசேஜ் அனுப்பினான்.
‘டோண்ட் திங்க். சே யெஸ்.”’
தன் மனதில் ஓடும் யோசனையை உணர்ந்தவன் போல் வருண் அவளுக்கு செய்தி அனுப்பி இருந்தான். கிருஷ் அவளிடம் செமினாருக்கு வருகிறாயா? என்று கேட்டு வைத்திருந்தான். அதனால் தான் இப்போது மெயிலுடன் அமர்ந்திருக்கிறாள்.
‘டாக்டர். வசுந்தரா இஸ் அட்டண்டிங்க்.’ எதிர் வீட்டு பால்கனியில் இருந்து அவள் கைப்பேசிக்கு செய்தி குதித்தது. நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய அறை பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தான் வருண்.
தோட்டத்து விளக்குகள் மற்றும் அவன் பால்கனி விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனுடைய சிவப்பு டீசர்ட் அவளுக்கு தெரிந்தது. மஞ்சள் நிற முகம் மங்கலாகத் மட்டும் தெரிந்தது. ஆனாலும் அந்த இருளில் அவளைக் அந்தக் கண்கள் துளைத்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.
அவள் எங்கிருந்தாலும் அவன் கண்டுபிடித்து விடுவான். அது எப்படி என்று அவளுக்குத் தெரியாது. அவனுடைய கண்களில் இருந்தது இதுவரை அவளால் தப்பிக்க முடிந்தது இல்லை.
சலிப்பாக ஒரு பெருமூச்சு விட்டவள் கணினியை மூடி விட்டு எழுந்து சென்றாள். பால்கனியில் விளக்கணைத்துச் செல்வளை ஒரு புன் முறுவலோடு பார்த்துக் கொண்டு வருண் பிறகு வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.
அறையினுள் நுழைந்த பிருத்விகா போர்வையை எடுத்து நன்றாக மூடிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் அவனுடைய செய்தியை எடுத்துப் படித்துப் பார்த்தாள். அவனால் எப்படி தன் மனதைப் படித்தது போல் கூற முடிகிறதோ என நினைத்தவள் கைப்பேசியை வைத்து விட்டு மீண்டும் உறங்க முயன்றாள்.
பிருத்விகா அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவளை யாரும் எதுவும் கூறப் போவது இல்லை. ஆனாலும் அவள் கலந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ் விருப்பப்பட்டான். ஆனாலும் பிருத்விகா இன்னும் அந்த நிகழ்வுக்கு வருகிறேன் என்று ஒப்புக் கொள்கிறேன். இது ஒரே நேரத்தில் பல துறையில் புகழ் பெற்றிருக்கும் மருத்துவர்களை சந்தித்து உரையாடலாம். இந்த நிகழ்வு கடந்த ஐந்து வருடங்களாக டாக்டர் மதுபாலன் மற்றும் டாக்டர் இர்சாத் (நிறம் மாறும் வானம் கதை மாந்தர்கள்.) தலைமையில் நடந்து வருகிறது. அவர்களுடன் படித்த பலரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்வர். அதனால் பலரால் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு அது.
ஞாயிறு வரை பிருத்விகா அந்த நிகழ்வைப் பற்றி மூச்சு விடவில்லை. கிருஷ்ஷூம் கேட்கவில்லை. அவள் வருவதாக இருந்தால் வருவேன் என்று அவனிடம் கூறி இருப்பாள் என்பதால் கிருஷ்ஷூம் தனியாக செல்ல முடிவெடுத்துக் கொண்டான். வருணுக்கும் அவள் வருவது போல் தெரியவில்லை.
கோயம்புத்தூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கான்பிரன்ஸ் அறை. வருண், கிருஷ் அனைவரும் கேசுவல் உடையில் அதில் பங்கு பெற்றிருந்தனர்.
மதியம் வரை சென்றது. பிருத்விகா தலையைக் காட்டவில்லை. அவள் நிச்சயம் வரப் போவதில்லை என்று உணர்ந்த கிருஷ், வருண் இருவருமே அமைதியாக இருந்தனர். அவர்களுக்கு இடையில் பாலமாக மித்ரா அமர்ந்திருந்தாள். தன் அருகில் இருக்கும் இருவருமே கான்பிரன்ஸ் அறைக் கதவு திறக்கப்படும் போது எல்லாம் யார் உள்ளே வருகிறார்கள் என்பதைக் கவனிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘பிருத்விகா நீ வந்திருக்கலாம். உனக்காக இங்க இரண்டு பேரு காத்திட்டு இருக்காங்க.’ என்று மனதில் நினைத்தை செய்தியாக வாட்ஸப்பின் வழியாக அனுப்பியும் விட்டாள்.
மாலை நேரம். அந்த ஹோட்டலின் கார்டனில் மருத்துவர்கள் தங்களுக்குப் பிடித்ததை உண்டு விட்டு மாக்டெயில், காக்டெயிலுடன் அமர்ந்திருந்தனர்.
மதுபாலன் தனக்குத் தெரிந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் வருண் இருக்குமிடத்திற்கு வந்தார். வருண், மித்ரா, கிருஷ், அவர்களுடைய வகுப்பில் பயிலும் சிலர் அதே மேசையில் அமர்ந்திருந்தனர்.
“ஹே வருண் ராமசந்திரன். மார்னிங்கே பார்த்தேன். பேச முடியலை. அம்மா அப்பா எப்படி இருக்காங்க?” முப்பத்தி ஆறு வயதான மதுபாலன் இன்னும் அதே போன்று இளமையாக இருந்தார். வருண் இறுதி வருடம் பள்ளியில் படிக்கும் போது அவனுடைய அம்மாவுக்குத் தலையில் ஒரு கட்டி இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்தது மதுபாலன். வருண் டாக்டராக வேண்டும் என்று முடிவெடுத்ததுக்கு மதுபாலனும் ஒரு காரணம்.
“ஹலோ.. டாக்டர். தெய் ஆர் ஃபைன். மருதி மேடம் வரலையா?”
“மருதி பேபி கூட அவங்க அப்பா வீட்டுக்கு போயிருக்காங்க. அப்புறம் உன்னோட பிரண்ட் எப்படி இருக்காங்க? இந்த இயர் பார்ட்டிக்கு வரலை போல?”
“லாஸ்ட் இயர்.. யூ நோ… அதான் வர….” வருணின் பார்வை எங்கோ சென்றது.
அடர்த்தியான பர்ப்பிள் மேக்ஸியில் அலையாக அலையாக விரியும் கூந்தல் அசைய அங்கு நுழைந்து கொண்டிருந்தாள் பிருத்விகா. கார்டனில் இருந்த வண்ண விளக்குகள் அவள் அழகை மின்னி மின்னி காட்டிக் கொண்டிருந்தன. கையில் ஒரு கிளட்ச். ஹை ஹீல்ஸ் அணிந்து முகத்தில் லேசான புன்னகையுடன் நுழைந்து கொண்டிருந்தாள்.
மதுபாலனும் அவன் கண்கள் செல்லும் திசையில் கவனித்தான்.
“கிரேட்.. லாஸ்ட் மினிட்டில் அக்சப்ட் செஞ்சுருந்தாங்க. ஆப்டர்நூன் செசன் வரமுடியும்னு சொல்லி இருந்தாங்க. நானும் ஓகேனு சொல்லி இருந்தேன். ஆப்டர்நூன் பார்த்தேன். பார்ட்டிக்கு வரலைனு கேட்டேன்.”
அவள் மதியம் அங்கு இருந்தாள் என்பதே அவர்களுக்குப் புதிய செய்தி. அவள் வருகை வருண், கிருஷ் மற்றும் மித்ராவின் முகத்தில் அவள் முகத்தில் இருந்ததை விட பெரிய புன்னகையை வர வைத்தது.
மித்ரா அனைவருக்கும் முன் எழுந்தவள், “ஹேய் லுக்கிங்க் கார்ஜியஸ். கம் சிட் ஹியர். அருகில் இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினாள்.”
“யூ ஆர் அஸ் புயூட்டிபுள் எவர்.” என்று இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதை அங்கிருந்த அனைவருமே புருவத்தை உயர்த்தியபடி பார்த்தனர்.
“டாக்டர் தேங்க் யூ.” என மதுபாலனைப் பார்த்து பிருத்விகா நன்றி கூறவும் அதை தலை அசைத்து ஏற்றுக் கொண்டார். அதே சமயம் அவரை யாரோ அழைக்கவும் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.
மித்ராவுக்கு அருகில் அமர்ந்து எதிரில் இருந்த கிருஷ்ஷை நோக்கினாள் பிருத்விகா.
“என்னடா?”
“இல்லை இரண்டு பொண்ணுங்க நீ அழகா.. நான் அழகானு அடிச்சுகிட்டுத்தான் பார்த்திருக்கோம். இதான் முதல் தடவை புகழ்ந்து பார்த்துக்கிறோம். அதுவும் ஜென்யூனா?” கிருஷ் தன் சந்தேகத்தை முன் வைத்தாள்.
மெலிதாக ஒரு சிரிப்பை சிதறவிட்ட பிருத்விகா, “அது ஒன்னுமில்லைடா.. இரண்டு பொண்ணுங்கனா பொறாமைபட்டுட்டு சுத்திகிட்டே இருக்கனுமா என்ன? நாங்க எல்லாம் எம்பவர்ட் வுமன். டாக்சிக் கிடையாது. சொல்லப் போனால் மித்ரா என்னை விட ரொம்ப அழகு.” கூறிவிட்டு மித்ராவினை நோக்கி கையை உயர்த்தினாள் பிருத்விகா ஸ்ரீ. மித்ராவும் ஹைபை கொடுத்துட்டு புன்னகையுடன் அருகில் இருந்த மாக்டெயிலை எடுத்து மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தாள்.
கல்லூரியில் அதிகம் கூட பேசிக் கொள்ளாத இரண்டு பெண்கள் இப்படி நடந்து கொள்வது வருணுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.
வருணின் பார்வை மெச்சுதலாக மித்ராவினை நோக்கிப் படிந்தது. இப்போது பிருத்விகாவின் அருகில் இருக்கும் நாற்காலிக்கு கிருஷ் இடம் மாறி இருந்தான்.
“ஹே.. நீ வரலை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் தெரியுமா?.. குட் ஜாப் பக்கி.”
தன் தோழியிடம் பேச ஆரம்பித்தான் கிருஷ்.
கிருஷ்ஷின் காதருகில், “டேய் நான் வரலைனாலும் உன்னோட பார்வை யார் மேல் இருக்கும்னு எனக்குத் தெரியும்டா பிராட்.” என முனு முனுத்தாள்.
“ஹான்.. நிஜமா.. நான்?”
“தெரியும்.. திரும்பி திரும்பி டோரைப் பார்த்திட்டு இருந்தது. சைக்கியாட்ரி படிச்சுட்டு நம்ம டிராமாஸ் நாமலே ஓவர்கம் செய்ய முடியலை என்ன செய்யறது? அதான்.. சரி சரி.. போ எனக்குப் பிடிச்ச ஐட்டம்ஸ் எல்லாம் பபேவிலிருந்து எடுத்துட்டு வா.” நண்பனிடம் இறுதியாக செல்லமாக கட்டளை இடவும், “உன்னை.. வருண் பேபினு கூப்டறது தப்பே இல்லை..” முனகினான் கிருஷ்.
“போ.. திட்டாமல் போயிட்டு வருவியாம்.”
கிருஷ் தன் தோழி சொல்லைத் தட்டமால் அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்போது திரும்பியவளின் எதிரில் நின்றது வருணின் கூர்மையான விழிகள்.
அவனுக்கு சளைக்காமல் புருவத்தை உயர்த்திப் பார்த்தவள் அருகில் கிருஷ் வைத்திருந்த மாக்டெயிலை எடுத்து அருந்திவிட்டாள். பிங்க் நிறத்தில் அந்த திரவம், இனிப்பாகவும் சற்று வித்தியாசமாகவும் இறங்கியது.
அது மாக்டெயில் இல்லை. காஸ்மோ போலிட்டன் காக்டெயில். கிருஷ்ஷிற்கு முன்பு அந்த இடத்தில் அமர்ந்திருந்த வகுப்பில் படிப்பவன் ஒருவம் அதை விட்டு தன் அலைபேசியில் ஏதோ பேச சென்றிருக்க அந்த திரவம் அங்கேயே இருந்தது.
வருணைப் பார்த்துக் கொண்டே அதை முழுவதுமாக அருந்தி இருந்தாள் பிருத்விகா. அவளின் கண்களைக் கவனித்துக் கொண்டிருந்த வருணும் அதை உணரவில்லை. அவன் தான் அவள் கண்கள் என்னும் கருந்துளையில் விழுந்து கிடந்தானே..
அருகில் இருந்த இன்னொரு கண்ணாடிக் கோப்பையும் பிருத்விகா அருந்தினாள். அது மஞ்சள் நிறத்தில் இருந்த மிமோசா. அவன் கண்களில் இருந்து தப்பித்து மங்கையவள் நிஜ போதையில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
இப்போது அவளருகில் கிருஷ் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் வந்திருந்தான்.
அதன் நறுமணம் பிருத்விகாவின் நாசியில் நுழைந்து அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அவன் தட்டில் அல்மண்ட் பிரியாணி, ஓக்ரா.. ஆகியவை இருந்தது.
தட்டை ஆர்வமாக வாங்கியவள் அவனுக்கு ஒரு தம்ப்ஸ் அப் காட்டி விட்டு உண்ண ஆரம்பித்தாள். மதியத்திலிருந்து அதிகம் நீரும் குடிக்கவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. அவள் வயிற்றில் தாகத்திற்காக சென்ற பானம் மெதுவாக வேலையைக் காட்ட ஆரம்பித்தது. உணவை வேகமாக ஸ்பூனில் எடுத்து விழுங்கினாள்.
“மெதுவா சாப்பிடு பிருத்வி.” என்று கிருஷ் தண்ணீரை நகர்த்தி வைத்தான். பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்திருந்தனர். பிருத்விகா கைகழுவ வேண்டும் என்று எழ ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. தள்ளாடினாள்.
வருண் கவனித்து விட்டான்.
“கிருஷ் இங்க இருந்த காக்டெயில் எங்கடா?” என்று வந்து சேர்ந்தான் காக்டெயிலை ஆர்டர் செய்திருந்தவன்.
பிருத்விகாவின் அருகில் இருந்த கண்ணாடி கோப்பைகளும் தள்ளாடும் பிருத்விகாவும் வருணுக்கு ஒரு நொடியில் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தி இருந்தது.
அடுத்த நாள் காலையில் கண் விழித்தாள் பிருத்விகா.
மழை கொட்டும்..