என் மேல் விழுந்த மழையே!-12

அத்தியாயம்-12

YOU HAVE NO IDEA..

YOU NEVER HAD..

BUT YOU ARE ENTANGLED IN MY LIFE..

IN A WHOLE DIFFERENT WAY YOU THINK..

  -VARUN R

கெஸ்ட் ஹவுசில் உள்ள தனது அறையில் விளக்குகளை அணைத்து விட்டு படுத்திருந்தான் வருண். உறக்கம் வரவில்லை என்பதால் இயர்பட்களை காதுக்கு கடன் கொடுத்திருந்தான். அதில் ஏதோ ஒரு இசை ஓடிக் கொண்டிருந்தது.

அதனால் கார் வந்ததை அவன் அறியவில்லை. காரை நிறுத்திவிட்டு தன் பொருட்களையும், உணவு உள்ள பையையும் எடுத்துக் கொண்டாள். எப்படியும் கதவைத் தட்டினால் வருண் திறக்க மாட்டான் என்று தெரியும் அதனால் மாஸ்டர் கீயை வாட்ச்மேனிடம் கேட்டு வாங்கியும் வந்திருந்தாள்.

வீட்டைத் திறந்து உள்ளே சென்றவளை இருள் வரவேற்றது. விளக்கின் ஸ்விட்ச்சைப் போட அந்த பங்களாவின் ஹால் சாண்டிலியர்களின் உதவியுடன் மிளிர்ந்தது.

அடுத்தது மேல் மாடியில் உள்ள வருணின் அறைக்கு விரைந்தாள். வருணின் அறைக்கதவு பூட்டப்படவில்லை. அதைத் தட்ட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் மீண்டும் ஸ்விட்சைப் போட்டாள். அறையின் நடுவில் உள்ள தேக்கு மரக் கட்டிலில் வருண் பக்கவாட்டில் கண்களை மூடிப் படுத்திருந்தான்.

வெளிச்சம் பரவியதும் கண்களைத் திறந்து பார்த்தான். தன் தந்தைதான் வந்திருப்பது என்று முதலில் நினைத்தான். ஆனால் எதிரில் லேசாக குளிரில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. குளிரில் நடுங்கினாலும் அவள் கண்களில் உள்ள வெப்பம் தவறாமல் அவனைச் சுட்டது. அறையைச் சுற்றிப் பார்த்தவளுக்கு இரண்டு உணவு பார்சல்கள் அப்படியே இருந்தது தெரிந்தது.

காலையில் இருந்து உணவு உண்ணவில்லை அவன்.

“பிருத்விகா…” முதலில் அவளைப் பார்த்தவுடன் மலர்ந்த முகம் பின்பு குழப்பத்தில் ஆழ்ந்தது. பிறகு எழுந்து வந்தான்.

“பிருத்விகா இங்க என்ன செய்யற?”

அவனை ஒரு முறை மேலும் கீழுமாகப் பார்த்தான். முகத்தில் நான்கு நாட்கள் தாடி. கொஞ்சம் இளைத்திருந்தான்.

“அதை நான் கேட்கனும்டா… இங்க நீ என்ன பன்னிட்டு இருக்க?”

“உனக்கெப்படி நான் இருக்கற இடம் தெரிஞ்சுது?”

“இதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? நீ எங்க இருப்பனு எனக்குத் தெரியாதா?”

அவளை வெறித்துப் பார்த்தவன், “நீதான நான் உன்னோட லைஃப்பை விட்டுப் போகனும் ரொம்ப ஆசைப்பட்ட?” என்றான்.

கேட்டுக் கொண்டே அவன் மெத்தையில் அமர்ந்தாள். அப்படி உணவுப் பையை அருகில் இருந்த மேசையில் வைத்தவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

“ஆமா… அது இது வரைக்கும் நடந்திருக்கா என்ன? இருக்கட்டும். இப்ப எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சிட்டு இருக்க? நான் உன்னை என்னோட வாழ்க்கையை விட்டுப் போகச் சொன்னேன். இப்படி சொல்லாம கொள்ளாம போகச் சொல்லலை. தேவகி அம்மா பாவம் வருண்… வருண்… அவங்கிட்டயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம்.”  என்றாள்.

“அவங்க வருத்தப்பட்டா உனக்கென்ன அதை நான் பார்த்துகிறேன்.” வருண் அமைதியாக பதில் கூறியபடி தன் அறையில் இருந்த கபோர்டைத் திறந்து ஒரு பெட்சீட்டை அவள் அருகில் போட்டான்.

அவனை ஒற்றைப் புருவத்தைத் தூக்கிப் பார்த்தவள், “சரி எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டாள்.

“பர்சனல்..” அவளைப் பார்க்காமல் எங்கோ விட்டத்தைப் பார்த்தப்படி கூறினான்.

பெட்சீட்டை எடுத்து தன் தோள் மேல் போர்த்திக் கொண்டவள், அவனருகில் வந்து அவன் தாடையைப் பற்றித் திருப்பினாள்.

“வருண்… அதெல்லாம் நீ என்னை கிஸ் பன்னறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். இப்ப கில்டியா பீல் பன்னி எந்தப் பிரயோஜனமும் இல்லை. இல்லை.. எங்கிட்ட ஐம் சாரி. திஸ் இஸ் மிஸ்டேக். அப்படினாவது கேட்ருக்கலாம். அதை விட்டு இங்க வந்துட்டா… ஆளை பாரு.. முகத்தை முதல்ல பாரு. உனக்கு இரண்டு ஆப்சன். முதல்ல முகத்தை ஷேவ் பன்னிட்டு வந்து சாப்பிடு இல்லை சாப்பிட்டு ஷேவ் பன்னு. சாப்பிட்ட உடனே நாம இங்கிருந்து கிளம்புறோம். இல்லை.. நான் வர முடியாதுனு சொன்னால் நான் பாட்டுக்கு கோயம்புத்தூர் போயிட்டே இருப்பேன்.”

வருண் கூறிய அதே தொனியில் அமைதியாக அழுத்தமாக பிருத்விகாவும் பேசினாள். பிருத்விகாவின் உறுதியை அறிந்த வருண் அமைதியாக மேசையில் இருந்த உணவை இரண்டு தட்டுகளில் எடுத்து வைத்தான்.

“வா சாப்பிடு..”

தான் கூறியபடி சாப்பாட்டை எடுத்தவுடன் வருண் தன்னுடன் வந்து விடுவான் என்று தெரிந்த பிருத்விகாவின் முகம் இலகுவாக மாறியது.

“எனக்கு பசி இல்லை.” தன்னை உணவு உண்ண அழைத்தவனிடம் மறுத்தாள்.

“எனக்குத் தெரியும். எனக்குக் கம்பெனி கொடு.”

“சரி நீ இவ்ளோ சொல்றதுனால சாப்பிடறேன்.” என்று சாப்பிட ஆரம்பித்தாள். உண்மையில் அவளுக்கும் பசிதான். வருணைத் தேடி உணவு கூட உண்ணாமல் வந்திருந்தாள். வழியில் எங்கும் நிறுத்தவும் இல்லை. அதில் இருக்கும் உணவு வருணுக்குப் போதாது என்று தெரியும். அதனால் மறுத்தாள். ஏனோ வருணின் அந்தத் தோற்றம் அவள் மனதை அசைத்தது. வருண் இதுவரை இப்படி இருந்து அவள் பார்த்தது இல்லை.

வருணுக்கு பசி என்றாலும் பிருத்விகாவும் எதுவும் உண்ணவில்லை என்று அவள் முகத்தைப் பார்த்தே உணர்ந்திருந்தான்.

அவனுக்கு முன்னால் உணவை உண்டு முடித்தவள் குளியலறையில் சென்று  கையுடன் முகத்தையும் நன்றாகக் கழுவிக் கொண்டாள்.

ஏனென்றால் திரும்பவும் கோயம்புத்தூர் அவள் வண்டியை செலுத்த வேண்டும். உறக்கம் வரக் கூடாது என்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டாள்.

“சாப்பிட்டேன். ஷேவ் பன்ன முடியாது. என்னோட ஷேவிங்க் லோசன் இங்க இல்லை.” என்றான்.

“பரவாயில்லை.. போற காட்டு வழியில் காட்டு விலங்கு எதாவது வந்தால் உன்னோட மூஞ்சியை காண்பிச்சுக்கலாம்.” என்று கூறிவிட்டு அவள் பாட்டுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு சிறிய புன்னகையுடன் அவளைத் தொடர்ந்தான் வருண். அவள் கூறிய எதையும் மறுக்கும் மனநிலையில் வருண் இல்லை. தன்னைத் தேடி பிருத்விகா வந்திருக்கிறாள் என்றால் நிச்சயம் தன்னை நினைத்து அவள் கவலையுற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் அவள் இங்கு வர வாய்ப்பில்லை என்று தெரியும். இந்த நான்கு நாட்களாக தன்னை அவள் தேடவும் இல்லை. ஏனென்றால் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்பதுதான் அவனுக்கே தெரியுமே.

அன்று தான் நடந்து கொண்டது எல்லை மீறிய செயல் என்பதை அவனுமே உணர்ந்துதான் கொண்டிருந்தான். அதிலிருந்து தப்பிக்கத்தானே இங்கு ஓடி வந்திருந்தான். ஆனால் இப்படி அவளாகத் தேடி வருவாள் என்று வருண் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வருண் அவளிடம் விளையாடினாலும் இப்படி எல்லாம் அத்துமீறியதே இல்லை. அதனால் அவன் மீது அவனுக்கு வருத்தம் இருந்தது. அது மட்டுமின்றி அவனுக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்த பெண். தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாளோ என்ற அச்சமும் இருந்தது.

காரருகில் செல்பவளின் தோளைத் தொட்டான். பிருத்விகா திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“சாரி… அப்படி ஏன் செஞ்சேனு எனக்கேத் தெரியலை..”

“ஆனால் எனக்குத் தெரியும். கொஞ்ச நாளா உன்னை ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன். நானும் உன்னை ரொம்ப டிரிகர் பன்னிட்டேன். யூசுவலா எனக்கு ஆப்போசிட்டா எதாவது பன்ன நினைச்சு எப்பவும் போல லூசுத்தனமா செஞ்சுட்ட. இந்த ஒரு தடவைப் போனாப் போகுதுனு விடறேன்.”

“அடுத்த தடவை இப்படி நடக்காது.”

நிச்சயம் அடுத்த முறை இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியேற்றுக் கொண்டான்.

இப்போது நன்றாக வளர்ந்திருந்த அவனது தலை முடியை எட்டிப் பிடித்து இழுத்தாள். சுள்ளென்று வலி தலை முழுவதும் பரவியது.

“ஆ.. ஆ…” என்று வலியில் கத்தினான்  வருண்.

“விடு பேபி… ஆ.. ஆ…”

அவள் கைகளை தன் தலையில் இருந்து எடுத்து விட அதில் தடுமாறி காரின் கதவுப் பகுதியில் சாய்ந்தாள். அவள் தீடிரென்று சாயவும் தட்டென்று சத்தம் கேட்டது.  தன்னை சரி செய்து கொண்டவள் அமைதியாக தன் எதிரில் தலை முடியை சரி செய்தபடி நிற்பவனைப் பார்த்தாள்.

“பேபி..” வருண் குரல் அழுத்தமாக ஒலித்தது.

“பேபி கூப்டறதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க வேணாமா.. அதுக்குத்தான். அடுத்த தடவையாம். கொன்னுடுவேன். போட போய் காரில் ஏறு.”

“சரிடி பேபி..” என முனுமுனுத்தவாறு காரில் என்று ஏறினான் வருண். முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை குடி புகுந்திருந்தது.

“நான் ஓட்டட்டுமா?”

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். என்னோட உயிரை உன்னை நம்பி ஒப்படைக்க முடியாது. கண்ணுக்குக் கீழ டார்க் சர்க்கிள்சை பாரு. காரை ஓட்டிகிட்டே நீ தூங்கிட்டா.. கண்ணை மூடி பேசாமல் தூங்கிட்டு வா. இரண்டு மணி நேரம் வாயைத் தொறக்கக் கூடாது. நியாயமா நான் தான் இதெல்லாம் செய்யனும். இங்க எல்லாம் உல்டா. இதில் நானே உன்னைக் கண்டுபிடிக்க வரனும்.” என்று இறுதியில் தனக்குத் தானே முனு முனுத்துக் கொண்டாள்.

இன்று தன் உயிரை அவனை நம்பி ஒப்படைக்க முடியாதவள் என்று கூறியவள் அந்த வார்த்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று அவளுக்குமே தெரியாது அல்லவா.

முன்பு வருணின் முகத்தில் இருந்த புன்னகை இன்னும் பெரிதாகி இருந்தது. அவளை மேலும் வம்பிழுக்கும் ஆசை இருந்தாலும் இன்றைக்கு இதுவே போதும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

காரை வளைத்துத் திருப்பினாள். கேட் முன் வந்து நிற்க கதவைத் திறந்தார் செக்யூரிட்டி. உள்ளே வருணும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

நான்கு நாட்களாக அறையை விட்டு வெளியே வராமல் சாப்பிடாமல் இருந்தவன் இப்போது இந்தப் பெண் வந்ததும் கிளம்பி விட்டான் என்பதுதான் ஆச்சரியம்.

கேட்டின் அருகில் நிற்பவரிடம் பிருத்விகா, “அண்ணா சாப்பாடு சூப்பர். கிளம்புறோம். ரூமை கீளின் பன்ன சொல்லிருங்க.” என்றாள்.

“சரிங்கம்மா.” என்றார் அவர்.

அவரை பார்த்து ஒரு புன்னகையுடன் காரை எடுத்தாள் பிருத்விகா. வருணை சிறு வயதிலேருந்தே பார்த்து வரும் அந்த செக்யூரிட்டி இந்தப் பெண் வந்து கூறியதும் செல்லும் வருண் புதிது.

வருணுக்கு சிறு வயதில் இருந்தே பிடிவாதம் அதிகம் என்றும் தெரியும். யார் கூறினாலும் அவ்வளவு எளிதில் கேட்டு விட மாட்டான். ஆனால் இன்று அந்தப் பெண் கூறியதும் கேட்டதும் அவளைப் பார்க்கும் பார்வையும் அவருக்கு வேறு செய்தியை உரைத்தன. அவள் விரைவில் இந்த வீட்டில் மிக முக்கியமான ஒருவளாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் புரிந்தது.

தார்ச்சாலையில் மறைந்த காரைப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தார் அவர்.

-மழை கொட்டும்..