என் மேல் விழுந்த மழையே-10

அத்தியாயம் -10

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை டிடெக்டிவ் வருண். என்னை கொஞ்ச நேரம் தனியா விடு.”

“சரி அப்படியே இருக்கட்டும்.. எதுக்கு கனவில் இருந்து எழுந்ததும் என்னோட பேரை கத்துன? சொல்லு.”

“தெரியாது.. எனக்குத் தலை வலிக்குது. நான் தூங்கனும்.” பிருத்விகா உறங்க முயன்றாள்.

“பிருத்விகா ஸ்ரீ…”

“என்ன வருண்? நான் வேணால் என்னோட வீட்டுக்குப் போகட்டுமா?” பிருத்விகா பொறுமையற்றுக் கேட்டாள்.

“போ… தாராளமா.. இங்க இருந்தால் என்னோட ரூமில் நீ இருப்ப. நான் வெளிய இருப்பேன். அங்க போனால் உன்னோட ரூமில் நானும் இருப்பேன். ஒன்னா தூங்கலாம்.”

அவன் கூறியதைக் கேட்டதும் பிருத்விகாவின் முகத்தில் கோபம் படர்ந்தது.

“லைஸ்.. மேனிபுலேசன்.. இதெல்லாம் எனக்கும் வரும் பிருத்விகா.. அதுவும் உன்னோட விஷயத்தில் எனக்கு லிமிட்ஸ் கிடையாது. அது உனக்கும் நல்லாத் தெரியும். என்னிக்கு இருந்தாலும் நீ உண்மையை எங்கிட்ட சொல்லுவ. அதுவரைக்கும் வெயிட் பன்றேன்.”

‘பிருத்விகா எதுக்கும் பொதுவாகப் பயப்பட மாட்டாள். ஆனால் அவளுக்கு தண்ணீர்னா பயம். அதுக்குக் காரணம் நான். ஆனால் அவளை அந்த இடத்துக்கு வரச் சொன்ன நான் அதைச் செய்யலைனு அவளுக்கு தெரிஞ்சுருக்கு. போலீஸ்கிட்ட சந்தேகத்தில் என்னோட பேரைச் சொல்லலை அப்படினாலும் என்கிட்ட தனியாக இருக்கும் போது நிச்சயம் சண்டை போட்ருப்பா. இல்லை பதிலுக்கு எதாவது செஞ்சுருப்பா. ஆனால் பிருத்விகா அப்செட்டா இருக்காள். வழக்கமாக எது நடந்தாலும் பிருத்விகா அவ்வளவு சீக்கிரம் தூங்க மாட்டாள். அந்த சில நிமிடங்களுக்கு என்ன நடந்திருக்கும்? பிருத்விகா எதையோ மறைக்கிறாள். அது மட்டும் எனக்குப் புரியுது.’

என்று யோசித்தப்படி பால்கனியில் உலாத்திக் கொண்டிருந்தான் வருண். அப்போது அவன் தோளைத் தொட்டார் ராமச் சந்திரன்.

“வருண்… என்ன திங்கிங்க்?”

“டாட்..”

தன் தந்தையைப் பார்த்ததும் அணைத்துக் கொண்டான். வருண் ராமச் சந்திரனின் செல்லப் பிள்ளை. தவமிருந்து பெற்ற பிள்ளை.அத்தனை சொத்துக்கும் ஒரே ஆண் வாரிசு என்பதால் பாட்டி தாத்தா முதற் கொண்டு அனைவராலும் செல்லமாக வளர்க்கப்பட்டவன்.

அவ்வளவு பணமும், அன்பும் அவன் சீரழித்து விடக் கூடாது என்பதற்காக அவன் அன்னை கொஞ்சம் கண்டிப்பு. அவனுடைய தந்தை அவனிடம் ஒரு நண்பனைப் போல் பழகுவார்.

“டாட்.. இதை யார்கிட்டேயும் சொல்ல என்னோட ஈகோ ஒத்துக்க மாட்டிங்குது. பிருத்வியை ஒரு செகண்ட் தண்ணிக்குள்ள பார்த்ததும் எனக்கு உயிரே இல்லை. அவ என்னடான்னா என்னை விட்டுப் போறதுதான் நிம்மதினு சொல்றாள். சின்ன வயசில் ஏதோ விளையாட்டுத் தனமா செஞ்சு வச்சதால் அவளுக்கு என்னைப் பிடிக்கவே மாட்டிங்குது.”

“வருண்.. நீயும் சில இடங்களில் உன்னோட ஜோக்கை எக்ஸ்ட்ரீம் லெவல்க்கு எடுத்துட்டுப் போயிருக்க. நீ வேணும்னு ஒரு தடவை பயமுறுத்த தண்ணியில் தள்ளிவிட்டதால் அவளுக்கு காய்ச்சல் வந்திருச்சு. அதிலிருந்து அவள் ஸ்விம் பன்ன நினைச்சது இல்லை. இப்ப பாரு.. ஒரே சில செகண்ட்ஸில் உயிர் தப்பியிருக்கா.. நீ விளையாடமா.. நீ என்ன பீல் செய்யறியோ அதை சிம்பிலா.. சின்சியரா கன்வே செய்யனும். இது தான் எந்த உறவுக்கும் பவுண்டேசன். நீ நல்ல எண்ணத்தில் செஞ்சாலும் நீ அவளை ஹர்ட் பன்னுவ அப்படிங்கற எண்ணம் பதிஞ்சுருக்கு. அதை முதலில் மாத்து. அப்புறம் அவளும் உன் கூட நார்மலா பேசுவாள்.”

தலையை சம்மதமாக அசைத்தான் வருண்.

“சரி.. பிருத்விகா எங்க?”

“என்னோட ரூமில் தூங்கிட்டு இருக்கா…”

“உன்னோட ரூமா?…

“அவளுக்கு அதுதான் கம்பர்ட்பிளா இருக்கும். ரொம்ப பயந்துருக்கானு நினைக்கிறேன். நான் ஸ்டடியில் தூங்கிக்குவேன்..”

“வருண்?”

“யெஸ் டாட்..”

“நீ ரொம்ப மாறிட்ட…”

“இருக்கலாம்.. இல்லை இப்படி எனக்கு ஒரு சைட் இருக்குனு எனக்கே தெரியாமல் இருந்திருக்கலாம்.”

“கோர்ஸ் முடிச்சுட்டு என்ன செய்யப் போற?”

“கோர்ஸ் முடிக்கும் போது அவளுக்கு என் மேல் இருக்கற வெறுப்பு குறையலனா? நான் ஃபாரீன் போலாம்னு இருக்கேன். அவ எங்க விரும்புறாளோ அங்கேயே நிம்மதியாக இருக்கட்டும்.”

“சோ.. பிருத்விகா மனசு வச்சால் தான் என்னோட பையன் எங்கூட இருக்க முடியும்.”

இராமசந்திரனின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.

“ஐ வோண்ட் ஆன்சர் திஸ் குவஸ்டின்..”

“வருண்.. நீ கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கலாம். ஆனால்.. வாழ்க்கையில் நடக்கறதில் இருந்து தப்பிக்க முடியாது. எனக்கு என்னவோ.. லைஃப் இப்படியே இருக்காதுனு தோணுது.”

அப்போது கூறிய ராம சந்திரனுக்குமே தன் மகனின் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறி பயணிக்கப் போகிறது என்று தெரியாது. ஒற்றைப் பையனைப் பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்தவர் இதே வார்த்தையால் அவரும் துன்பமடைவார் என்று தெரியாமல் கூறிவிட்டிருந்தார்.

அடுத்த நாள் காலை. எழும் போதே தலைவலியுடன் எழுந்தாள் பிருத்விகா.

“குட் மார்னிங்க் பேபி..” என்றபடியே கையில் ஒரு பவுலுடன் உள்ளே நுழைந்தான் வருண். தலையைப் பிடித்து அமர்ந்தவள் நிமிர்ந்தாள்.

அவள் எதுவும் பேசும் முன், “அப்பா வந்திருக்காரு. சோ நோ பைட்டிங்க். நல்ல பிள்ளையா இன்னிக்கு நடந்துக்கோ. இல்லை அவர் ரொம்ப வருத்தப்படுவாரு.” வருண் கூறினான்.

ராம சந்திரன் வீட்டில் இருக்கிறார் என்றதும் பிருத்விகா அமைதியானாள்.

“ஓகே..”

“ஐம் பீலிங்க் பெட்டர். நாம காலேஜூக்குப் போகலாம்.”

“போலாம். பட் நாளைக்கு.”

என்றவுடன் அவள் முகம் சுருங்கியது.

“நானும் உனக்காக லீவ் எடுக்கட்டா?”

“ஒன்னும் வேணாம். நீ காலேஜ்க்குப் போ. எனக்குத் தனியாக இருக்கனும்.”

“ஓகே.” வருண் உடனே ஒப்புக் கொண்டான்.

இதைக் கேட்டதும் பிருத்விகா ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ரொம்ப ஆச்சரியப் படாத. போய் பிரஷ் பன்னிட்டு இதைக் குடி.”

போர்வையை விலக்கி விட்டு எழுந்தவள் காலை கீழே ஊன்ற முயன்றவுடன் தடுமாறினாள். உடனே வருண் அவளைக் தோளைப் பிடித்து விழாமல் சரிப்படுத்தி நிற்க வைத்தான்.

“நேத்து எதிலோ உன்னோட கால் அடிச்சுருக்கு. அதனால் வீக்கம் இருக்கும்னு டாக்டர் சொன்னாரு. காலை கீழ வைக்க வேணாம் பேபி.”

பேபி என்றதில் பிருத்விகாவுக்குக் கோபம் வந்துவிட்டது. தன்னருகில் இருந்தவனை எதிர்பாராத நேரத்தில் தள்ளிவிட வருண் அவள் கையைப் பிடித்தப்படியே இழுக்க பக்க வாட்டில் இருவரும் மெத்தையில் விழுந்தனர்.

அப்போதும் அவளை இறுக்கமாகப் பிடித்திருந்தான் வருண்.

“ஏண்டி இப்படி இம்சை செய்யற? உனக்கு ஹெல்ஃப் பன்ன வந்தேன்.”

“எதுக்குடா பேபி சொல்ற? நானும் சொல்லிருக்கேன் பேபி சொல்லக் கூடாதுனு.”

“அது புளோவில் வந்துருச்சுடி.. அதுக்கு தள்ளி விடுவியா?.. வர வர நீ ரொம்ப பன்ற. உன்னை விடவே மாட்டேன். இப்படியே இரு..”

“வருண் லீவ் மி.”

வருண் அவள் முதுகோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. உடனே வருண் அவளை விட்டு எழுந்து நின்றான். பிருத்விகாவும் எழ உதவினான்.

“பிருத்விகா…”

“அங்கிள்…”

வருண் எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் பிருத்விகாவின் முகம் லேசாக பயத்தில் துடித்தது.

“என்னாச்சு பிருத்விகா? முகம் ஒரு மாதிரி இருக்கு.”

கோட் சூட்டில் பாதி நரைத்த தலையுடன் வருண் சாயலில் சிறிதும் ஒத்துப் போகாத இராமசந்திரன் உள்ளே நுழைந்தார். வருண் அவன் அன்னையின் சாயல். ஐம்பதைத் தாண்டிக் கொண்டிருந்தார் இராம சந்திரன்.

“அங்கிள்.. அது வந்து..” பிருத்விகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“டாட்.. அவ காலில் இருக்க காயத்துக்கு நானே டிரஸ்ஸிங்க் பன்றேனு சொன்னேன். கேட்க மாட்டிங்கறாங்க மேடம்.”

“ஏம்மா… பன்னிக்க வேண்டியதுதானே. வருண் செஞ்சு விடுவான். ஏற்கனவே இப்பதான் உனக்கு பீவர் வந்து சரியாகிருக்கு. நீ நல்லா ரெஸ்ட் எடுக்கறது அவசியம்னு டாக்டர் சொன்னாரு.”

தலையை மட்டும் ஆட்டினாள் பிருத்விகா.  வருண் குடும்பத்தில் அவனுடைய அப்பாவையும், அம்மாவையும் மிகவும் பிடிக்கும் அவளுக்கு. வருணை மட்டும் எள்ளளவும் பிடிக்காது.

“சரிம்மா.. நீ டிரஸ்ஸிங்க் பன்னிட்டு ரெஸ்ட் எடு. தேவகி அம்மா சமைச்சுட்டு இருக்காங்க. நான் ஆபிஸ் கிளம்புறேன்.”

“சரிங்க அங்கிள்.”

அவர் வெளியே சென்றதும் பெரு மூச்சு ஒன்றை வெளிப்படுத்தினாள்.

“வாட் ஆர் யூ திங்கிங்க்?” வருண் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“பாட்டில்கார்டுக்கு சால்ட் போடலைனு..” என்று முனு முனுத்தாள் பிருத்விகா.

அவள் கூறியதை கேட்டு வருணுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டான். பிருத்விகாவின் அம்மாய் வீடு கிராமத்தில் இருக்கிறது. அங்கு கொங்கு மொழி கொஞ்சும் தமிழில் பேசுவர். அங்கு சென்று நிறைய பழ மொழிகளை பிருத்விகா கற்றுக் கொண்டிருப்பது தெரியும். அதை அவ்வப்போது ஆங்கிலத்தில் மாற்றிச் சொல்வாள்.

“உனக்கு என்னை ஹக் பன்னனும்னா சொல்லு. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஐ வில் கிவ் யூ ஹக்.”

அவன் கூறியதைக் கேட்ட பிருத்விகா முறைத்தாள்.

“அது ஆக்ஸிடெண்டலா.. நடந்துருச்சு.. உன்னை எதுக்கு நான் ஹக் பன்னனும்? அதுக்கு தஸ்வி இருக்கா..”

“ஓகே.. இப்ப உட்காரு. டிரஸ்ஸிங்க் பன்னிட்டு நான் கிளம்புறேன்.”

பிருத்விகா அமைதியாக கட்டிலில் உட்கார்ந்தாள். வருணும் அமைதியாக குனிந்தபடி டிரஸ்ஸிங்க் செய்ய ஆரம்பித்தான். அமைதியாக இருக்கும் வருணின் முகத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் பிருத்விகா.

“முடிச்சுட்டியா.. இல்லை நான் இருக்கனுமா?”

“ஹான்…”

“டிரஸ்ஸிங்க் முடிச்சுட்டேன். இல்லை இன்னும் போடனுமா?”

“இல்லை போதும்..”

“ஓகே.. பாய்.. நல்லா ரெஸ்ட் எடு.”  வருண் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

***

ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் அருகில் உள்ள காடு. அதில் உள்ள மரத்தில் கீழே அமர்ந்து கொண்டிருந்தான் அவன். அவன் மனம் ஆத்திரத்தில் இருந்தது. அந்த ஆத்திரம் அவன் முகத்திலும் வெளிப்பட்டது. அவன் பொறியில் வீழ்ந்த இரை ஒன்று தப்பித்திருந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவன் குறி வைத்து எந்த இரையும் தப்பித்தது இல்லை. தன்னருகில் இருக்கும் இரையைப் பார்த்தான்.

அவன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து இரண்டடி தள்ளி அந்த மனித உடல் கிடந்தது. அதன் கண்கள் மேகம் சூழ்ந்திருந்த வானத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் விரிந்து கிடந்தது. உயிரற்ற விழிகள் வெளியை வெறித்துப் பார்த்தது. அதன் அருகில் அமர்ந்திருந்தவன் விழிகள் உயிர் இருந்தும் உயிர் அற்றது போல் காட்சி அளித்து பயமுறுத்தியது.

உயிரற்ற உடலின் தலையில் இருந்து கசிந்த இரத்தம் சூடாக அந்த மண்ணிலும், கல்லிலும் இன்னும் கசிந்து கொண்டிருந்தது. முகமும் சேதப்படுத்தப் பட்டிருந்தது.

தன் அருகில் கிடந்த உடலைப் பார்த்தவன் ‘எப்படியும் உனக்காக நான் வருவேன். காத்திட்டு இரு. தப்பிச்சு போன இரை கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டும். அப்புறம் அதைக் கொல்றதில் ஒரு தனி சுகம்.’ என்று எண்ணிக் கொண்டான்.

மழை கொட்டும்….