என் மேல் விழுந்த மழைத்துளியே! -1
அத்தியாயம்-1
காற்றில் மெல்ல குளிர் பரவத் தொடங்கி இருந்தது. கரு மேகங்கள் சூழ்ந்தது.கோவையின் வடக்குப் பகுதியில் சாந்தமுடன் வீற்றிருந்தது ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் மருத்துவமனை. கண்களை உறுத்தாத இள வான் நீலம் பூசப் பட்ட கட்டிடத்திலிருந்து படிக்கட்டில் ஒரு பக்கத் தோளில் பேக்கை மாட்டியவாறு இறங்கினாள் அந்தப் பெண்.
ஆரஞ்சு நிற ஓப்பன் டாப்பில் கழுத்தின் ஓரத்திலும், கையின் இரண்டு பக்க பார்டர் மற்றும் கீழ்ப்பகுதியிலும் கருப்பும், தங்க நிறமும் கலந்து டிசைன் காணப்பட்டது. அதற்கு மேட்சாக கருப்பு நிற லெகின்ஸ். அவளுடைய மாநிறத்திற்கு அந்த உடை அழகாக இருந்தது. பாதங்களில் கருப்பு நிறத்தில் ஹில்ஸ் வைக்கப்பட்ட ஷூக்கள் அணிந்து டக் டக் என்று லேசாக ஒலி எழுப்பியபடி படிகளில் இறங்கினாள்.
தன்னுடன் வந்தவர்களுக்கு பாய் சொல்லி அனுப்பிய பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் மீண்டும் ஒரு முறை திரும்பி தான் வெளியே வந்த கட்டிடத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
‘ஜி பிளாக்.’ என்ற ஆங்கில எழுத்துகள் கருப்பு நிறம் பூசிய மெட்டலில் பெரிதாக செய்யப்பட்டு கட்டிடத்தின் முகத்தில் இருந்தது. பிறகு வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். மழை வரும் என்று தோன்றியது. நெற்றியைத் தேய்த்தப்படி நேராக நடக்க ஆரம்பித்தாள். மருத்துவமனைக்குச் சற்று தொலைவில் கருப்பாகத் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலை அதன் தலையில் மேகங்களால் ஆன வெண்சாம்பல் கீரீடத்தைச் சுமந்து கொண்டிருந்தது.
வழக்கமாக இந்த மருத்துவமனையில் இப்படி நடப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இன்று அவசர கதியில் இருந்தாள். மழை நன்றாக பேய்வதற்குள் அவள் வீட்டை அடைய வேண்டும். மழையில் நனைந்து சென்றால் அவளுக்கு உடலுக்கு ஒவ்வாது.
அதனால் நடையை எட்டிப் போட்டாள். நினைத்த இடத்தில் எல்லாம் இங்கு வாகனத்தைப் பார்க்கிங்க் செய்ய முடியாது. சிறிது தூரம் நடக்க வேண்டும். மருத்துவமனை என்பதால் ஆம்புலன்சுகள் மட்டுமே உள்ளே வந்து செல்ல முடியும். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் கேட்டின் அருகே அமைந்துள்ளது. மருத்துவமனையின் அமைதியைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஆனால் அவள் இன்று அவள் இந்த ஏற்பாட்டை நொந்து கொள்ள வேண்டி இருந்தது. ஐந்தடி உயரம் ஒல்லியான தேகம் அவளுக்கு. ஆனால் இப்போது இன்னும் இளைத்திருந்தாள். சிறிது தூரம் நடப்பதற்கே கால் வலித்தது. கோல்ப் கார்ட் வண்டிகளும் இல்லை.
ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நடந்தவள் பார்க்கிங்கை அடைந்து விட்டாள். வாட்ச் மேன் அவளைப் பார்த்ததும் ஒரு சல்யூட் வைத்தாள். அவருக்கு பாய் சொல்லியப்படி அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்க் இடத்தில் நுழைந்தாள். சட்டென்று இருந்த பிரகாசமான விளக்குகள் கண்ணைக் கூசுவது போல் இருந்தது. அந்த நேரம் அங்கு யாரும் இல்லை. தன் ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
மயில் கழுத்து நிறத்தில் அந்த டிவிஸ் ஜூபிடர் ஸ்கூட்டி பளபளத்துக் கொண்டிருந்தது. அது அதிக எடையுள்ள ஸ்கூட்டி வகைகளில் ஒன்று.
தன் வெண்ணிறக் கோட்டைக் கழற்றியவள் ஸ்கூட்டியின் சீட்டின் மீது வைத்து பேக்கில் மடித்து வைத்தாள். பிறகு அதிலிருந்து கருப்பும் ஆரஞ்சும் கலந்த துப்பட்டாவை எடுத்து தோள்களில் போட்டுக் கொண்டாள். சாவியை நுழைத்தவள் அதற்கு உயிரூட்டினாள். பின் பக்கத்தைத் திறந்து ஹெல்மெட்டை எடுத்து விட்டு அதில் தன் பேக்கை வைக்க முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அது இடம் கொள்ளவில்லை. அதனால் சலிப்புடன் அதை லாக் செய்து விட்டு மீண்டும் ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் பேக்கை வைத்து விட்டு சாவியை இஞ்சினை இயக்கும் பகுதியில் வைத்து திருப்பினாள். இதற்கே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அதை ஒதுக்கித் தள்ளியவள் ஏறி அமர்ந்து ஸ்கூட்டியின் ஸ்டாண்டை விடுவித்தாள். அதற்குள் தலை சுற்றியது போல் இருந்தது. ஸ்கூட்டியிலிருந்து கை தடுமாறியது. கண்கள் இருட்ட ஆரம்பித்தது.
கண் விழித்தாள் அவள். மேலே ஏதோ கருப்பு நிறத்தில் தெரிந்தது. ஒரு லைட் தெரிந்தது. பக்கவாட்டில் கண்களை ஓட விட்டவளுக்கு அது கார் என்று புரிந்தது. தான் எப்படி காரில் என்ற சிந்தனை எழுந்தது. சட்டென்று எழுந்து அமர்ந்தாள். பார்க்கிங்கில் தான் இருக்கிறோம் என்று புரிந்தது. காரின் முன் பக்கத்தைப் பார்த்தவளுக்கு அது யாருடைய கார் என்று புரிந்து விட்டது.
உடனே கதவைத் திறந்து வெளியே வந்தாள். மீண்டும் தலை கிறு கிறுத்தது. தான் விழுந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவனுக்குச் சொந்தமான எதிலும் இருப்பது அவளுக்குப் பிடித்தமில்லை. அவனிருந்தால் அந்த இடத்தில் அவள் இருக்கமாட்டாள். அவள் வாகனத்தைத் தேடியவளுக்கு அது கண்களில் பட ஒரு நிம்மதி பிறந்தது.
தன் ஸ்கூட்டியின் அருகே தலையைப் பிடித்துக் கொண்டே சென்றாள். அவளுடைய பேக்கும் சாவியும் அதில் தான் இருந்தது. ஏறி உட்கார்ந்து மீண்டும் அதை ஸ்டார்ட் செய்ய முயன்றாள். ஆனால் உடல் மீண்டும் தளர்ந்து சாய்ந்தது. பலமான எதிலோ மோதியது.
அவள் முகத்தில் குளிர்ச்சியாக ஏதோ நீர் தெளிக்கப்பட்டது. கண்களைத் திறந்தாள். எதிரே அவன் முகம் தெரிந்தது. ஏதோ கனவு போல் முகத்தைச் சுளித்தாள்.
“ஏய் கண்ணைத் தொறடி கௌ.. முழிச்சுப் பாரு..” அவன் குரல் வேறு கேட்டது. மீண்டும் நன்றாக கண்களைத் திறந்து பார்த்தாள். இப்போது தெளிவு வந்திருந்தது.
அவளுடைய முதுகில் பின் பக்கம், இடது பக்கம், வலது பக்க இடையில் வெப்பத்தை உணர்ந்தவள். நன்றாக விழித்துப் பார்த்தாள். அவன் கைகளிலும், மார்பிலும் சிறைப் பட்டிருந்தாள்.
‘அவன் தான்..’
உடனே அவனை விட்டு விலக முயன்றாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
“வாயைத் தொறடி.” அவள் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வழுக்கட்டாயமாக கீழ்த் தாடையைப் பிடித்து ஒரு திரவம் ஊற்றப்பட்டது ஏதோ ஒரு இனிப்பான திரவம் ஊற்றப்பட்டது. ஏதோ அது அவளுக்குப் அது இதமாய் இருந்தது.
சில நிமிடங்களில் சக்தி பெற்றாள். நன்றாக தெளிவு வந்திருந்தது. உடனே எழுந்தாள். அவளை அப்படியே பிடித்து அமர வைத்தான் அவன்.
அவள் வாயில் குளுக்கோஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றப்பட்டிருந்தது. அதன் சக்திதான் அது.
பார்க்கிங்க்கில் உள்ள ஒரு பெஞ்சில் இருந்தனர் இருவரும்.
“ஏய் எப்ப டி கடைசியா சாப்பிட்ட?” உரிமையுடன் அவன் கேட்டான். இவள் அதற்கு பதில் கூறவில்லை. தான் இவ்வளவு கேட்டும் பதில் கூறாதவளை கேள்வியுடன் பார்த்தான் அவன். சிறிது எரிச்சலும் கலந்திருந்தது.
அவளுடைய உடலில் வெம்மை அதிகரித்திருப்பது போன்று அவனுக்குத் தெரிந்தது. அவளை அப்படியே பெஞ்சில் விட்டு விட்டு தன்னுடைய காரில் உள்ள மெடிக்கல் கிட்டில் உள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டரைத் தேடி எடுத்தான். எடுத்தவன் அவளின் அனுமதி இல்லாமலேயே அவளுடைய காதில் வைத்தான். அவளுடைய தடுப்புகள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
தெர்மா மீட்டர் பீப் என்ற ஓலியுடன் 39.2 டிகிரி என்று காட்டியது. காய்ச்சல் இருப்பது உறுதியாகி விட்டது.
“காய்ச்சல் இருக்கு. காரில் ஏறு. இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயிட்டு. அப்புறம் வீட்டில் டிராப் பன்றேன்.”
அவனுடைய இந்த நடத்தை அவளுக்கு எரிச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. பலவீனமும், அவளுடைய இயலாமையும் அதற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய உதவியைப் பெறுவது அவளுக்கு இந்த நிலையிலும் பிடிக்கவில்லை.
ஆனால் அவன் கூறினால் அதை நிச்சயம் நிகழ்த்துவான். அவளுடைய மறுப்புகள் எல்லாம் காற்றில் கரையை அவளை ஸ்கூட்டி சாவியை எடுத்துவிட்டு அதை லாக் செய்து அவளுடைய பேக்கில் போட்டு விட்டான்.
பின்பு அதைத் தூக்கி தன் காரின் முன் புறம் வைத்தான். அவள் மறுப்புகள் அனைத்தும் காற்றில் கரையை அவளைத் தூக்கிக் காரின் பின் புறம் அமர வைத்தான். பின்பு சட்டென காரில் ஏறி காரை லாக் செய்து விட்டான்.
அவள் மறுக்க மறுக்க மருத்துவமனைக்குச் சென்று காட்டி விட்டு மீண்டும் அதே காரில் அவளை அழைத்து வந்தான்.
தொப்பம்பட்டி அருகே கார் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த பி.எம்.டபிள்யூ இசட் 4 கன்வர்ஷியபில் அவள் வீட்டின் முன் நின்றது.
“பிருத்விகா கெட் டவுன்.”
அவன் வாயிலிருந்து இப்போதுதான் அவளுடைய பெயர் வெளிப்பட்டிருக்கிறது. அவள் பிருத்விகா ஸ்ரீ. எம்.டி சைக்கியாட்ரி இரண்டாம் வருடம் ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
பிருத்விகாவின் கண்களைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் குரலைக் கேட்டதும் ஏதோ ஒரு உந்துதலில் இறங்க முயற்சித்தாள். அதற்குள் அவள் விழுந்து விடாமல் இருக்க அவள் தோளைப் பிடித்துக் கொண்டான். காரின் முன் பக்கத்தில் இருந்த அவளுடைய பேக் அவனுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. சந்தன நிறம் பூசப்பட்டு, ஆங்காங்கே சிவப்பு நிறம் பூசப்பட்ட அந்த இரண்டு மாடி வீட்டின் கேட் முன்னால் ‘ஸ்ரீ இல்லம்’ என்ற அழகிய பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
அதன் கேட்டைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான். பிருத்விகாவும் மிகவும் தளர்ந்து போயிருந்தாள். பேக்கிலிருந்த சாவியை துழாவி எடுத்தவன் கதவை நீக்கிக் கொண்டு உள்ளே அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றான். மாடியில் இருந்தது அவளது அறை.
அவனுக்குத்தான் அது தெரியுமே.. இருவரும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கின்றனர். அவனும் மாடியில் அவளுடைய அறைக்கு எதிரில் இருக்கும் அறையில் தான் தன் வீட்டில் தங்கி இருக்கிறான். அதனால் அவளை அனுமானித்து அழைத்துச் சென்றான். அறைக் கதவு பூட்டப்படவில்லை. அழைத்துச் சென்று அவளை படுக்கையில் விட்டான். அப்படியே சாய்ந்து கொண்டாள் அவள். அவள் மீது போர்வையை எடுத்துப் போர்த்திவிட அவள் இன்னும் அதற்குள் புதைந்து கொண்டாள்.
அவள் காதருகே குனிந்து, “இதெல்லாம் உனக்காகச் செய்யலை. நினைவில் வச்சுக்கோ. ஆன்ட்டியை அனுப்பி விடறேன்.” என்று கசப்பான குரலில் கூறிவிட்டு வெளியே சென்றான்.
தன் காரை எடுத்துக் கொண்டு ‘சந்திர விலாசம்’ என்ற பெயர்ப் பலகைத் தெரிந்த எதிரே உள்ள பங்களாவினுள் தன் காரை விட்டான். அட்டோமேட்டிக் டோர் என்றாலும் வாட்ச் மேன் அருகே இருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் புன்னகைத்தார். அவனும் புன்னகைத்தப்படி காரை காராஜ் இருக்கும் பகுதிக்கு விட்டான்.
****
அடுத்த நாள் காலை சூரியன் ஏழு மணிக்கே உக்கிரமாக வந்திருந்தான். இரவு முழுவதும் மழை பெய்திருந்ததால் அது பொறுக்காமல் காய்ச்சிக் கொண்டிருந்தான். மெல்ல கண் விழித்து எழுந்தாள் பிருத்விகா. மாலை நடந்தது அனைத்தும் அவளுக்கு நினைவில் வந்தது. காய்ச்சல் முழுவதும் விட்டிருந்தது.
அவள் உதடுகள் தானாக “வருண் ராமச்சந்திரன்” என்ற பெயரை முனுமுனுத்தது.
***
வருண் ராமச்சந்திரன் பிருத்விகா படிக்கும் அதே இடத்தில் படிக்கிறான். சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளி. மருத்துவம் கூட ஒரே கல்லூரியில் படித்தனர். ஆனால் இருவரும் சிறப்பு மருத்துவத்தை ஒரே பிரிவை தேர்வு செய்தது மட்டும் இல்லாமல் ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் மருத்துவனை நிறுவனத்தில் விண்ணப்பமும் செய்திருந்தனர். பி.ஜி மருத்துவம் படிக்கும் போது மட்டும் பிருத்விகா தான் தேர்ந்தெடுத்த துறை, விண்ணப்பிக்கும் இடம் ஆகிய அனைத்தையும் ரகசியமாக வைத்திருந்தாள்.
அதற்கு முக்கியமான காரணம் வருண் ராமச்சந்திரன். அவள் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவன் பங்கு இருக்கும். அவனுக்கும் அப்படித்தான். இவர்களது பெற்றோர் இருவருக்கும் ஆழமான தோழமை ஆட்சி செய்கையில் இவர்கள் இருவருக்கும் இருப்பது ஆழமான வெறுப்பு என்று கூட கூறலாம்.
வருண் பிரித்விகாவை விட பல மடங்கு வசதியில் உயர்ந்தவன். பிருத்விகா அப்பர் மிடிஸ் கிளாஸைச் சார்ந்த பெண்.
அவள் பார்க்கிங்கில் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனுடனே வீட்டுக்குள் வரும் நிலை உண்டாகிவிட்டது. அதை எண்ணிதான் அவள் இப்போது தலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
அதோடு அவன் கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.
‘இவனை யாரு ஹெல்ஃப் செய்ய சொன்னா.. விட்டுட்டு போக வேண்டியதுதானே.. அவங்க அப்பாகிட்டேயும், எங்கிட்டேயும் நல்ல பேரு வாங்க ஆக்டிங்க் செய்யறது..’ என்று நினைத்துக் கொண்டாள்.
அப்போது மேலே யாரோ வரும் காலடி சத்தம் கேட்டது.
“பாப்பா.. எழுந்துட்டீங்களா?” என்றபடியே உள்ளே வந்தார் தேவகி அம்மாள். வருண் வீட்டில் வேலை செய்பவர். அவனைப் பார்த்துக் கொள்ள அவனுடைய பெற்றோர்களால் நியமிக்கப்பட்டவர். அவருக்கு வருண் என்றால் மிகப் பிரியம். ஆனால் வருணுக்குப் பிருத்விகாவைப் பிடிக்காது என்று தெரிந்தாலும் அவளை அன்புடன் நடத்துவார்.
இரவு முழுவதும் அவர் இங்குதான் இருந்திருக்க வேண்டும். ஐம்பதுகளில் இருக்கும் அவருடைய தலை இன்னும் நரைக்கவில்லை. தோல் சுருக்கம் மட்டுமே அவருடைய வயதைக் காட்டும்.
“எந்திருச்சுட்டேன் அம்மா…”
அவள் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.
“காய்ச்சல் உட்டுப் போச்சு அம்மிணி. கஞ்சியும் மிளகு இரசமும் வச்சுருக்கேன். சாப்புட்டா தெம்பா இருக்கும்.” அவருக்கும் இன்னும் கொங்கு பேச்சு வழக்கு மாறவில்லை.
தலையை ஆட்டியவள் கட்டிலை விட்டு எழுந்தாள். அவளுக்கு இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. சிலருக்கு அப்படித்தான். முதல் நாள் காய்ச்சல் இருக்கும். அடுத்த நாள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
“நடு இராத்திரி காய்ச்சல் ரொம்ப அதிகமாகி இருச்சு அம்மிணி. ஏதோ ஏதோ பேச ஆரம்பிச்சீங்க. உடம்பு தூக்கிப் போட்டுச்சு. அப்புறம் வருண் தம்பியை கூப்பிட்டேன். நாலு மணி வரைக்கும் உங்க பக்கத்தில் இருந்துட்டு அப்பறம் தான் வீட்டுக்குப் போனாரு.”
அவன் தன்னுடன் இருந்தான் என்ற செய்தி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த அவளுடை பாதாம் வடிவமுடைய ஆழ்ந்த கருமை நிறம் கொண்ட விழிகள் விரித்தாள்.
“சேரி பாப்பா. நீ தூங்கு. நான் வருண் தம்பியைப் பார்த்துட்டு வரேன்.”
“இல்லம்மா. நான் காலேஜ்க்கு கிளம்புறேன். ரொம்ப முக்கியமான வேலை இருக்கு.”
“இல்ல பாப்பா..”
“இல்லம்மா.. நிச்சயம் போகனும்.” என்று எழுந்தவள் மெல்ல குளியலறை நோக்கி விரைந்தாள். தேவகி அம்மாள் வேறு வழியின்றி கீழே சென்றார்.
பிருத்விகாவுக்கு நேற்று மாலை இருந்ததை விட இப்போது உடல் நன்றாக இருப்பது போல் தோன்றியது. குளிக்க வேண்டும் என்று தோன்றியது. முதலில் முகத்தைக் கழுவிட்டு தன் அறையில் உள்ள வார்ட் ரோப் பக்கம் வந்தாள். கதவை நீக்கி உடைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் போது அவள் வலது கையைப் பிடித்தான் வருண்.
தன் கைகளைப் பிடித்தவுடன் நிமிர்ந்து பார்த்தாள் பிருத்விகா.
“மேடம் எங்க கிளம்பீட்டீங்க?” நக்கலாக ஒலித்தது அவனுடைய குரல். அவன் குரலில் இருந்த ஏளனத்தை உணர்ந்த பிருத்விகா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனிடம் இருந்து தன் கையை உதறியவள் “நாட் யுவர் பிஸ்னஸ்.” அவள் குரல் லேசாக கர கரவென்று ஒலித்தது.
பீட்ரூட் கலர் சட்டை, பிளாக் பேண்டில் அவள் எதிரில் நின்று கொண்டிருந்தான். மஞ்சள் நிற தேகம், கரிய சிகை. மற்றவர்களும் இப்படி இருந்தாலும் இவனிடத்தில் ஏதோ வசீகரம் இருந்தது. ஒரு தனித்தன்மை அவனிடம் இருந்தது. மெடிக்கல் காலேஜில் இவனுக்கு பல புரோப்போசல்கள் வந்தது. இவனைக் காதலிக்காத பெண்களுக்குக் கூட இவனைப் பிடிக்கும். புத்திசாலி, படிப்பில் கெட்டி, ஜெண்டில் மேன். இப்படி மெடிக்கல் காலேஜே இவனைத் தூக்கி வைத்து பேசும். ஆனால் இப்போது அவன் முகத்தில் இருக்கும் அந்த முக பாவனை எப்போதும் பிருத்விகாவுக்குச் சொந்தம். அந்த ஏளன முகத்தை அவன் அவளுக்கு மட்டும் காட்டுவான்.
“உன்னை நான் காப்பாத்துனேன். அதனால் திஸ் இஸ் மை பிஸ்னஸ். கர்ட்டசிக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியாது உனக்கு.” அவன் குரல் உறுதியாக அவளைக் குற்றம் சாட்டி ஒலித்தது.
“ஓ.. அப்படியா? நீ எனக்கு முழு மனசோட ஹெல்ஃப் செஞ்சயா? இல்லையே… உன்னோட அப்பாவுக்குப் பதில் சொல்லனும். அவங்க முன்னாடி நல்லவனா காட்டிக்கனும். அதுக்காக அப்படிச் செஞ்ச. இல்லைனா பார்க்கிங்கில் என்ன? நீ ரோட்டில் நான் விழுந்து கிடந்தாலும் கண்டுக்கமா போயிருவ..”
இவற்றை அனைத்தும் அவன் கண்களை நேராகப் பார்த்தப்படி மெல்லிய குரலில் கூறி முடித்தாள் பிருத்விகா.
மழை விழும்.