என் மேல் விழுந்த மழைத்துளியே!-5

அத்தியாயம்-5

சில நாட்கள் கழிந்தன. அன்றைய நாள் மலைச் சிகரத்தில் கதிரவன் மெதுவாக துயில் எழுந்து கொண்டிருந்தான். காலை ஏழு மணிக்கே ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரில் நுழைந்தாள் பிருத்விகா. அவளுடைய டாக்டர் கோட் கையில் இருந்தது. ஐடி கார்ட் கழுத்தில் பிங்க் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. வகுப்புகள் ஒன்பது மணிக்குதான் ஆரம்பிக்கும்.

ஆனால் இன்று அவள் நூலகத்தில் புத்தகம் ஒன்றைத் தேட வேண்டி இருந்தது. அதன் முன்னால் வந்திருந்தாள். இப்படி நூலகம் காலையில் சென்றால் சில நேரங்களில் டாக்டர். வசுந்தராவைப் பார்க்க வாய்ப்புகளும் கிடைக்கும். யாரும் இல்லாத நேரத்தில் அவர் புத்தகங்களை எடுத்துப் படிப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறாள்.

அதனால் இந்த நேரத்தில் மருத்துவ மாணவர்களை நூலகத்தில் பார்ப்பது அரிது. யாருக்குப் பிடிக்கும் மருத்துவமனையின் நிர்வாகியுடன் அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு. அதிலும் வசுந்தரா மிகவும் கண்டிப்பானவர் என்ற செய்தி எங்கும் பரவி இருந்தது.

அதை எல்லாம் பொருட்படுத்தாது படிக்க வந்திருந்தாள் பிருத்விகா. அவளைப் பொருத்தவரை தவறு செய்யாமல் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவள் தந்தை இன்னும் வரவில்லை. அதனால் வருணின் தொல்லை அதிகமாக இருந்தது. அவனிடம் இருந்து தப்பித்து நிம்மதியாகப் படிக்க நூலகம் வந்திருந்தாள்.

அந்த மலைச் சிகரத்திற்கும், மரங்கள் சூழ் இடத்திற்கு குளிர்பதன வசதி தேவை இல்லை என்றாலும் ஏசி பதினெட்டு டிகிரி செல்சியசில் நூலகத்தைச் சில்லிட வைத்துக் கொண்டிருந்தது.

கண்ணாடிகளால் அமைக்கப்பட்டு வெளியில் மலைச் சிகரத்தைப் பார்க்கும் படி ஒரு காபே போன்று இதமாக காட்சி அளித்தது அந்த நூலகம். நூலகம் என்றால் குண்டூசி விழும் அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் மெல்லிய ஜாஸ் இசை தவழ்ந்து கொண்டிருந்தது. காலை நேரம் இப்படித்தான்.

மர நிறத்திலேயே வட்ட வட்ட மேசைகள் இடப்பட்ட நான்கு பேர் அமரும்படி வெள்ளை நிறத்தில் நான்கு சோபாக்கள்  போடப்பட்டிருந்தது. அந்த நீண்ட இடம் முழுவதும் இப்படித்தான் ஆங்காங்கே போடப்பட்டிருந்தது. நூலகக் கட்டிடம் வெளிப்புறத்தில் செவ்வக வடிவில் தெரிந்தாலும் உள் நுழையும் இடம் மற்றும் அதன் பக்கவாட்டில் இரு பக்கமும் மற்றும் அதற்கு எதிரான பக்கங்களிள்  தவிர புத்தக அலமாரிகள் வட்டமாக அடர் பழுப்பு நிற மர ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு வெளிப்புற அழகைக் காட்டிக் கொண்டிருந்தன. அது மட்டுமின்றி கூரையின் மேற்புறமும் சில இடங்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

அதுபோல்தான் மேல் மாடியிலும் வட்டமாக புத்தக அலமாரிகள் அடுக்கப்பட்டு மாடி கட்டப்பட்டிருந்தது. கீழே இறங்க ஸ்பிரிங்க் வடிவில் படிகள் கட்டப்பட்டிருந்தன.

அந்த சுருள் வடிவப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள் பிருத்விகா. காலை நேரம், லேசாக தூறல் போட்டுக் கொண்டிருக்கும் வானம். இதமான மன நிலையில் மாடியில் ஏறி புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தாள். அங்கும் கண்ணாடிகள் இருந்ததால் கட்டிடத்தின் வெளியில் மழைக் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் மரங்களைப் பார்த்தப்படி அமர்ந்தாள். சோபா இதமாக இருந்தது. வசதியாக சாய்ந்து கொண்டவள் புத்தகத்தைப் புரட்டி குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் நூலகத்தில் கழிந்தது.

கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவள் கண்ணில் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த டாக்டர். வசுந்தரா தெரிந்தார். அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கைகளைக் கீழே வேகமாக இறக்கியவள் “குட் மார்னிங்க் மேம்.” என்று மெல்லிய குரலில் கூறினாள். தனக்கு பிடித்த ஒரு டாக்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வந்த பிரமிப்பு அவள் கண்களில் தெரிந்தது. அவளுக்கு டாக்டர். வசுந்தரா ரோல் மாடல். அந்தப் பரபரப்பு அவரைப் பார்த்த நொடியே தொற்றியது.

“குட் மார்னிங்க். கண்டியூனியூ ஸ்டியிங்க்.” என்று கூறியவர் மீண்டும் புத்தகத்தில் கண் பதித்தார். பிருத்விகாவும் புன்னகையுடன் மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். ஆனால் அடிக்கடி ஊதா நிறமும், வெள்ளிப் பார்டர் இட்ட காட்டன் புடவையில் அமர்ந்தவரைப் பார்க்கத் தவறவில்லை.

மேலும் அரை மணி நேரம் படித்தவள் காலை உணவு உண்ண எழுந்தாள். அப்போது டாக்டர் வசுந்தரா அங்கு இல்லை. அவர் சென்று விட்டார் என்றதும் பிருத்விகாவின் முகம் லேசாகச் சுருங்கியது. பின்பு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவள் வெளியில் செல்லும் போது சரியாக அவளுடன் வெளியேற ஆரம்பித்தான் வருண்.

திடீரென்று இவன் எங்கிருந்து வந்தான் என்று பிருத்விகாவுக்கு தெரியவில்லை. அவள் வந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு நூலகத்திற்கு வந்த வருணும் படித்துக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.

அவன் வந்த அதிர்ச்சியில் வெண் கோட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொண்டிருந்த கைக்குட்டையை கதவைத் தாண்டியதும் கீழே விட்டாள்.

அது வெளியில் அடித்துக் கொண்டிருந்த காற்றில் பறக்க ஆரம்பித்தது. உடனே அதைத் துரத்த ஆரம்பித்தாள். மழை தூறிக் கொண்டிருந்தது. வருண் வெளியில் வைக்கப்பட்டிருந்த தன் குடையை எடுத்தப்படி அவளைப் பின் தொடர்ந்தான்.

மழையில் மெதுவாக ஓடிக் கொண்டிருப்பவளை இரண்டே எட்டில் அவள் கைகளைப் பிடித்தவன் பிருத்விகாவினை நிறுத்த முயன்றாள்.

“என்ன வருண்?”

என்று சலித்தப்படியே திரும்பினான்.

“மழை பெய்யுது லூசு. இப்படி ஓடிட்டு இருக்க? வா இரண்டு பேரும் தேடலாம்.”

வேறு வழியின்றி அவனுடன் குடைக்குள் மெதுவாக ஓடித் தேட ஆரம்பித்தாள்.

இருவரும் நூலகத்தின் பின் புறம் வந்து விட்டனர். ஒரு கல்லின் மீது விழுந்து கிடந்த கைக்குட்டையை எடுத்தாள். அவள் தலைக்கு மேலே வருணின் குடை இருந்தது. புடவையில் வந்திருந்தவள் அடிக்கடி வசுந்தராவைப் பார்த்தற்குக் காரணம் அவளும் இன்று அதே நிறப் புடவையை உடுத்தி இருந்தாள். அவளுடையை கோட் தோள் மேல் கிடந்தது.

அவளை மீண்டும் லூசு என்று திட்டியபடி வயிற்றோடு சேர்த்து இழுத்தான் வருண். அவன் தீடிரென்று இழுக்கும் போது புடவை தட்டிவிட்டு அவன் மேலேயே சாய்ந்தாள் பிருத்விகா.

“உன்னை சுத்தி இருக்க சரவுண்டிங்க்ஸ் பார்க்கனும். அங்க பாரு லீச்.” என்று அவள் காதருகே முனு முனுத்தாள். பிருத்விகாவின் கண்கள் தான் இருந்த இடத்தில் இருந்த அட்டைப் பூச்சிகளைப் பார்த்தாள். உடனே அவள் கண்கள் விரிந்தது.

கூட்டமாக இரத்தத்தைத் தேடி அந்த இரத்த காட்டேறிகள் வளைந்து நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தன. மலையை ஒட்டியுள்ள பகுதி என்றாலும் இவற்றை இங்கெல்லாம் அதிகம் பார்க்க முடியாது. பிருத்விகாவுக்கு அதைப் பார்க்கும் போதே ஒரு வித அருவருப்பு சூழ்ந்தது. அவை கொடிய ஜந்துகள் அல்ல. எந்த வித நோய்களையும் பரப்பாது. இரத்தம் குடித்து விட்டு தானாக விழுந்து விடும். அதன் எச்சிலிருந்து எடுக்கப்படும் வேதிப் பொருள் அறுவைச் சிகிச்சைகளில் இரத்தம் உறையாமல் இருக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எல்லாம் அறிந்திருந்தாலும் பிருத்விகா முகத்தைச் சுழித்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே சாஞ்சுட்டு இருந்த நிச்சயம் நானே அட்டை பூச்சிகிட்ட தள்ளி விட்ருவேன். அதில்லைனா லாண்டரி ரூமில் விட்ட பனிஸ்மெண்ட்டோட அடுத்த ஸ்டேஜை டிரை பன்னலாமா?” என்று அவள் காதில் மீண்டும் வருண் பாரி டோனில் முனுமுனுக்க உடனே தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகினாள்.

‘உன்னைப் போய் நல்லவனு நினைச்சேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் விலகி நடந்தாலும் வருண் விடவில்லை. அவளுடன் சாரலுக்குக் குடையைப் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தான். அட்டைப் பூச்சியிடம் இருந்து காப்பாற்றியவன் அவளுக்கு நேரப் போகும் மிகப் பெரிய ஆபத்திலிருந்து காப்பானா? இல்லை அவனே இரையாய் சிக்கிக் கொள்வானா?

பிருத்விகாவுக்கும் மழையில் நனையப் பிடிக்காது. அதனால் அமைதியாக அவனுடன் நடந்து வந்தாள். அது மட்டுமில்லாமல் அவளுடைய புதுப் புடவை நனைவதில் அவளுக்கு உடன்பாடில்லை.

“மார்னிங்க் செம ரீடிங்க் போல?”

வருண் அமைதியாக இல்லாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“ஆமா.. நீ வழக்கமா இந்த டைம் லைப்ரரிக்கு வர மாட்டியே.. நீ ஏன் வந்த?”

“நேத்து கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டியது இருந்துச்சு. அதான் ரீசன்.”

“ஓ…” என்றவள் அமைதியாகி விட்டாள்.

இருவரும் அதற்குப் பிறகு அமைதியாக தங்களுடைய பிளாக்கிற்கு நடந்து வந்தனர். இருவரும் அப்படி நேற்று இரவு அப்படிப் பேசிக் கொண்டதைப் பார்த்தால் இன்று காலை இப்படி நடப்பார்கள் என்றால் நம்பி இருக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அவர்கள் வகுப்பு இருக்கும் கட்டிடத்தின் படிக்கட்டில் ஏறும் போது சரியாக வெளியே வந்தாள் தஸ்வி. வருணைப் பார்த்து மலர்ந்த முகம் பக்கத்தில் இருந்தவளைப் பார்த்தவுடன் லேசரை வீசியது.

‘ச்சே.. இவ ஒருத்தி.. ஆ உ.னா.. உனக்கு டீப் லவ்னா என்னைப் பிடிச்சு இம்சை செய்யறது. இனி நாள் புல்லா இம்சை செய்வாளே?..’ என்று மனதில் நொந்து கொண்டிருக்கும் நேரம் வருண் அவள் காதில் குனிந்து, ‘ஆல் தி பெஸ்ட். ஹேவ் ஏ டேஸ்ட் ஆஃப் யுவர் ஓன் மெடிசன்.’ என்று வாழ்த்தினான்.

வருண் வாழ்த்தியதில் பிருத்விகாவுக்கு எரிச்சல் மூண்டது. அவனை விட்டு ஒதுங்கிப் போக வேண்டும் என்று நினைத்தது எல்லாம் தூள் தூளாகிவிட்டது அந்த நொடியில். தஸ்வி நீண்ட நாட்களாகத் தன்னை இப்படி அவமானப் படுத்த விடுவது பிருத்விகாவுக்கு விருப்பமில்லை.

அதை இதுவரை வருண் அட்வாண்டாஜேகா எடுத்துக் கொண்டதில்லை. கூறிவிட்டு வருண் அவன் பாட்டுக்கு உள்ளே நடக்க அங்கேயே நின்று கொண்டிருந்த பிருத்விகாவை நோக்கி தஸ்வி என்ற புயல் வந்தது.

“உனக்கு என்ன வருண் கூட வேலை. அவனோட ஒரே குடையில் நடந்து வர. உன்கிட்ட என்னைப் பார்த்ததும் வருண் என்ன சொன்னான்?”

என்று பிருத்விகா வேலைக்காரி போலவும் தஸ்வி அவள் எஜமானி போலவும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். தஸ்விக்கு தான் ஒரு பணக்காரி என்ற கர்வமும் உண்டு. அது இப்போது வெளிப்பட்டது.

அவளை மேலும் கீழும் பார்த்தவள் தஸ்வியின் அருகே குனிந்து மெல்லிய குரலில், “அதுவா நேத்து லாண்டரி ரூமுக்குள் எங்களுக்குள் நடந்த விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம். அந்த மாதிரி ஒன்னை இதுவரைக்கும் நான் எக்ஸ்பிரியன்ஸ் செஞ்சதே இல்லை.” என்று நடந்ததை அப்படியே திரித்துக் கூறினாள்.

உடனே தஸ்விக்கு குழப்பமும் ஆத்திரமும் மூண்டது.

“நீ என்ன சொல்ற?”

“ஆமா. நான் சொல்றது உண்மைதான். அங்க வேற கேமரா ரிப்பேர். வருண் எங்கிட்ட நடந்துகிட்டதை எல்லாம் நீயே அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. வருண் இப்படி நடந்துக்குவானு நான் நினைச்சே பார்க்கலை தெரியுமா?…” என்று லேசாக சிலாகித்தபடியே பிருத்விகா பேசினாள்.

மழை கொட்டும்…