என் மேல் விழுந்த மழைத்துளியே-3
அத்தியாயம்-3
கேண்டீனில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாதுளம் பழ ஜூஸில் நனைந்து நின்று கொண்டிருந்தான் வருண். வாயிலும், மூக்கிலும் இரண்டு கரங்களைக் குவித்தப்படி அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா.
அது வருணுக்குப் பிடித்த சட்டை. அவளுக்குச் சிறிய வயதில் நடந்தது நினைவுக்கு வந்தது.
பிருத்விகாவுக்கு எட்டு வயதிருக்கும் போது நடந்தது. தீபாவளி நாள் அன்று. வருணுக்கு கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப் பகுதியில் வீடு இருந்தாலும் தொப்பம்பட்டி அவனது அப்பா பிறந்த ஊர். அதனால் தீபாவளியைக் கொண்டாட இங்கு குடும்பமாக வந்து விடுவர்.
அன்றும் அப்படித்தான் வருணுடன் குடும்பமாக வந்திருந்தான். வருண் அதிகம் வால் தனம் செய்ய மாட்டான். அமைதியான பையன். ஆனால் பிருத்விகா சுட்டிப் பெண் குழந்தை. அங்கும் , இங்கும் ஓடிக் கொண்டே இருப்பாள்.
மதிய நேரத்தில் அனைவருக்கும் பிருத்விகாவின் அன்னை பழரசம் தயாரித்துக் கொடுத்தார். வருண் அமைதியாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். பட்டாசைப் பற்ற வைத்துக் கொண்டு ஓடி வந்த பிருத்விகா தவறி வருண் மேல் விழுந்தாள். பழரசம் கொட்டி அவன் சட்டை பாழாகி விட்டது. அவள் பயத்துடன் நிற்க வருண் எதுவும் செய்யவில்லை. ஆனால் மாலை நேரத்தில் அவளைத் தனியாக அழைத்துச் சென்று அவனுடைய ஒரு அறைக்குள் பூட்டி வைத்து விட்டான்.
அன்று தான் அழுதது, கதவைத் திறந்து விடும்படி கதறியது எல்லாம் நினைவுக்கு வந்தது.
கணப் பொழுதில் நடந்தவை எல்லாம் நினைவுக்கு வர லேசாக பிருத்விகாவுக்கு பயம் எழுந்தது. இப்போது என்ன செய்து வைப்பான் என்று தெரியவில்லை. பயத்தில் லேசாக மிடறு விழுங்கினாள்.
“ஸாரி வருண்.. தெரியாம…”
அருகில் நின்று கொண்டிருந்த மித்ராவின் மீது எதுவும் படவில்லை. கண்களை ஒரு நொடி மூடிய வருண் திறக்கும் போது நமுட்டுச் சிரிப்புடன் இருந்த கிருஷ் தென்பட்டான். ஆனால் பிருத்விகா பயத்துடன் முகம் வெளுத்துக் காணப்பட்டாள். ஏற்கனவே காய்ச்சலில் வாடி இருந்தவள் முகம் இன்னும் வாடியது.
அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தான் வருண். பின்னால் போக நினைத்த கிருஷை தடுத்தாள் மித்ரா.
“லீவ் தெம். செய்யறதையும் சிறப்பா செஞ்சுட்டு இப்ப நீ அவளைக் காப்பாத்த வேற போறியா இடியட். அவன் ஒன்னும் அவளைச் செய்ய மாட்டான்.”
காரிடாரில் அவளை இழுத்துச் சென்று கொண்டிருந்தான் வருண்.
“ஸாரி வருண். நான் வேணும்னு செய்யலை.. தெரியாமல் கொட்டியிருச்சு. பிளீஸ்..”
வருண் எதுவும் பேசவில்லை. லாக்கர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று மாற்றுடை ஒன்றை எடுத்தவன் அமைதியாக லாண்டரி ரூமிற்கு அவளை இழுத்துச் சென்றான்.
ஆனால் பார்ப்பதற்கு இருவரும் கை கோர்த்து நடப்பது போலிருக்கும். லாண்டரி ரூமில் உள்ள சிசிடிவி பழுதாகி இருந்தது அவனுக்குத் தெரியும். ஆனால் பிருத்விகாவுக்குத் தெரியாது. அதனால் பிருத்விகா கொஞ்சம் தைரியமாக இருந்தாள்.
லாண்டரி ரூமில் பணியாளர்கள் யாரும் இல்லை. மாதுளம் பழ ஜூஸ் கரை எப்படியும் விடப் போவதில்லை. அவனும் அதைத் துவைத்துத் திரும்பப் போடப் போவதில்லை.
லாண்டரி ரூம் கதவைச் சாத்தியவன் அவள் கைகளை விட்டான். உடனே அவனை விட்டு விலகி நின்றாள். அவளை முறைத்தவன் கைகளை ஓங்கினான்.
அவன் அடிக்கப் போகிறான் என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள் பிருத்விகா. ஆனால் கையை ஓங்கிய வருண் அவள் கழுத்தில் கை வைத்தான். நெற்றியிலும் கை வைத்தான். ஏற்கனவே பயத்தில் நடந்ததிலும் வியர்த்து போயிருந்தது பிருத்விகாவுக்கு.
அவன் அடிக்கவில்லை என்றதும் கண்களைத் திறந்தாள் அவள். ஆழ்ந்த கருப்பு நிற விழிகளுடன் அவளை இனம் புரியாத பார்வையில் நோக்கிக் கொண்டிருந்தான் வருண்.
“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு பிருத்விகா?” என்று லேசாக அடித் தொண்டையில் உருமினான்.
“சிக் பர்சனை அடிக்கற அளவுக்கு வொர்ஸ்ட் பர்சனு தோணுதா? இல்லை பொண்ணுங்களை அடிக்கும் இன்பிரியாரிட்டி காம்பிளக்ஸ் உள்ள மேன்னு தோணுதா?” என்று கேட்டான்.
“இல்லை வருண்…” வார்த்தைகள் தடுமாறியது. அவன் இப்படி கேட்பான் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நெற்றியில் இருந்து வடிந்த வியர்வை சொட்டாக புருவ மேட்டில் நின்றது.
அவள் முகத்தைப் பார்த்தவன் தலையைக் கோதிக் கொண்டான். தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீஃப் ஒன்றை எடுத்தவன் அதில் அவளது முகத்தைத் துடைத்து விட்டான்.
இதையும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். மெல்ல அவன் கைகளை விலக்க முயற்சித்தாள். லாண்டரி ரூமில் இருந்து வெளியறவும் நினைத்தாள்.
“எங்க போற? ஆனால் உனக்குப் பனிஷ்மெண்ட் இல்லைனு சொல்லவே இல்லை. அன்பட்டன் மை ஷர்ட்.”
வருணின் குரலில் விதிர் விதிர்த்துப் போனாள் பிருத்விகா.
“வருண்.. வாட் ஆர் யூ சேயிங்க்?”
“சிசிடிவி.. நாம செய்யறது எல்லாமே தெரியும். பிளீஸ்..”
உடனே வருணின் முகத்தில் ஏளனம் ஒன்று குடி புகுந்தது.
“சிசிடிவி ரிப்பேர்.. குளோஸ் யுவர் ஐஸ் அண்ட் அன்பட்டன் மி. அப்பதான் இந்த ரூமை விட்டு நீ வெளியில் போக முடியும்.”
உறுதியான குரலில் கூறினான். இவனிடமிருந்து இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்தாள் பிருத்விகா. வருண் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதை எப்படியும் நடத்தியே தீருவான்.
கைகளை அவன் சட்டையின் கழுத்துப் பகுதியில் வைத்தாள்.
“கண்ணை மூடு..” வருணின் குரல் கட்டளையாக ஒலித்தது. கண்ணை மூடிய பிறகு தன்னை ஏதோ செய்யப் போகிறான் என்று அவளுக்குத் தோன்றியது. அன்று போல் லாண்டரி ரூமின் கதவை லாக் செய்து விட்டு சென்று விட்டான் என்றால்…
லான்ட்ரி ரூம் கதவு வேறு சவுண்ட் புரூஃப். அவன் சொல்வதைக் கேட்காவிட்டால் அவன் இன்னும் வேறு எதாவது செய்வான் என்பதால் கண்களை மூடினாள். முதல் பட்டனை அனுமானித்தப்படி கழற்றி விட்டாள்.
அடுத்த பட்டனுக்கு ஒரு கையின் ஆள்காட்டி விரலை சட்டையில் தடவி கண்டு பிடித்து பின்பு இரு கைகளையும் வைத்து கழற்றி விட்டாள். அதற்குப் பிறகு அடுத்த பட்டன்..
வியர்த்து வழிய ஆரம்பித்தது அவளுக்கு. நா வறண்டு போனது. எச்சிலைக் கொண்டு ஈரப்படுத்திக் கொண்டாள். எதிரில் அவளின் முக பாவனைகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.
அவனுக்குமே வியர்த்து வழிய ஆரம்பித்தது. இருவரின் பர்ப்யூம் வாசனை டிடர்ஜெண்டுடன் கலந்து அந்த அறையில் இருந்தாலும் இருவராலும் அதை நன்றாக உணர முடிந்தது.
மூன்று.. நான்கு.. ஐந்து.. ஆறு.. எழு… எட்டு..
ஏன் தான் சட்டையில் இவ்வளவு பட்டன்கள் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. வருணின்.. உயரம் அதை விட..
ஒன்பதாவது பட்டன் கழற்றும் போது அவள் கைகளைப் பிடித்தான் வருண்.
“எனஃப்.. கண்ணைத் திற..”
உடனே சட்டென கண்களைத் திறந்தாள் பிருத்விகா. பார்வை அவன் முகத்தில் மட்டும் நிலைத்திருந்தது.
நமுட்டுச் சிரிப்புடன், “நேத்து ஒரு நியூ கான்சப்ட் படிச்சேன் பிருத்விகா. அதை சொல்லட்டுமா? இப்படி பயந்தவங்களுக்கு அது யூஸ் ஆகும். அதுவும் என்னைப் பார்த்துப் பயப்படற உனக்கு நல்லா யூஸ் ஆகும்.”
வேண்டாமென்று தலையை ஆட்டினாள் பிருத்விகா.
“சரி போ.. என்னோட பேக்கில் இன்னொரு பாட்டில் இருக்கும். அதை எடுத்துக் குடி.”
அவன் மார்பில் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியத்தைப் பார்க்காமல் ஓடினாள் அவள். பேயைக் கண்டவளைப் போல் ஓடுபவளைச் சிரிப்புடன் பார்த்தான் அவன்.
சட்டையைக் கழற்றி வாஷிங்க் மெசினுக்குள் போட்டவன் தன் கையில் இருக்கும் ஒரு டீ சர்ட்டை அணிந்து கொண்டான்.
பிருத்விகா அந்த உலோகக் கதவை நீக்கி விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள். அப்போதுதான் அவளுக்குச் சீராக மூச்சு வந்தது. தன்னை அவன் எதுவும் செய்யவில்லை என்பதே நிம்மதியாக இருந்தது.
வாராண்டாவில் ஓடியவள் தீடிரென்று யாரோ மீது இடித்த்தாள்.
“பிருத்விகா மேடம்.. பார்த்து வாங்க. நீ எல்லாம் மோதினால் நான் சட்னிதான்.” என்று கேலியான கிருஷ்ஷின் குரல் கேட்டது.
வருண் அவளை எதாவது செய்து விடுவானோ என்ற எண்ணத்தில் மித்ரா அவனைத் தடுத்தும் கிருஷ் தன் நண்பியைத் தேடி வந்துவிட்டான்.
“நீயா?…” என்று சலித்தப்படி ஓடி வந்ததில் லேசாக மூச்சு வாங்க நின்றாள்.
“பின்ன என்ன பேயா? நான் தான் லூசு. எங்க எந்த வால்டர் வெற்றிவேல்?” வருணைத்தான் அவன் அப்படி குறுக்கிட்டு கேட்டது.
அவன் தலையில் கொட்டியவள், “எல்லாம் உன்னாலதான் பக்கி. எதுக்கு நீ கம்பளி பூச்சினு பயமுறுத்துன? ஜூஸ் மொத்தமா கொட்டிட்டா அவன் என்னை விட்டுருவானா? போ.. நான் மறுபடியும் இன்னொரு தடவை குடிக்கனும்.” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“உன்னை காப்பாத்தின மாதிரியும் ஆச்சு. உனக்காக வருணை பழி வாங்குன மாதிரியும் ஆச்சு. ஒன் ஸ்டோன். டூ மேங்கோஸ் பக்கி.”
“கிழிச்சடா.. வா போலாம். அவன் ஏதோ இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை அதனால் சும்மா விட்ருக்கான். பெஸ்ட்டான வழி என்ன தெரியுமா? வருணோட வழியில் கிராஸ் பன்னாமல் இருக்கறதுதான். பிஜி முடிச்சுட்டு நான் இங்க வொர்க் பன்னலாம்னு இருக்கேன். வருண் எப்படியும் வெளிய போவான். அப்புறம் நான் நிம்மதியாக இருப்பேன். அப்படி வருணும் இங்க வொர்க் பன்னால் நான் வேற ஸ்டேட்க்கு போயிருவேன். எப்பவும் சில விஷயங்களில் இக்னோரன்ஸ் அப்புறம் அவாய்டன்ஸ் பெஸ்ட்.”
மூச்சு விடாமல் பேசியவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சோடா பாட்டில் உடைச்சுத் தரட்டுமா? மூச்சு விடாமல் பேசற பக்கி. வா நெக்ஸ்ட் செஷன் டைம் ஆகிரும்.” என்று அவளை அழைத்துக் கொண்டே சென்றான்.
அவர்கள் இருவரும் பேசியதை ஒரு உருவம் மறைவாக இருந்து கவனித்துக் கொண்டு இருந்தது. அவர்கள் நடக்க ஆரம்பித்ததும் வெளிப்பட்டு இருவரையும் வெறித்தது.
வகுப்பிற்குள் சென்றதும் வருணின் பேக்கிலிருந்து ஜூஸ் பாட்டிலை எடுத்த பிருத்விகா முகத்தைச் சுளித்தப்படி அதைக் குடிப்பதற்குள் கிருஷ் வாங்கி அதில் முக்கால் வாசியைக் காலி செய்து விட்டான். மீதமிருந்த கால் பங்கை மட்டும் அவளிடம் கொடுத்தான். எப்படியோ ஜூஸ் காலியாகிவிட்ட சந்தோஷத்தில் இருந்தாள் பிருத்விகா.
மதியம் வரை நன்றாகச் சென்றது.
மதியம் வந்து சேர்ந்தாள் தஸ்வி. மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிருத்விகாவின் முன் நின்றாள்.
பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் அதற்கு ஏற்றப்படி கிளிப்பச்சை நிறத்தில் புடவையில் இருந்தாள். கழுத்திலும், கையிலும் தங்க ஆபரணங்கள் மின்னியது. ஏதோ விழாவிலிருந்து வந்திருப்பாள் போல. அவள் கண்கள் கோபத்துடன் பிருத்விகாவை நோக்கியது. தஸ்வியும் அழகிதான். பாதித் தமிழ்ப் பெண். பாதி கேரளப் பெண். கேரளத்தின் அதீத அழகு வாய்த்து விட அதனால் கர்வமும் வளர்ந்து விட்டிருந்தது.
வருணின் மீது அவளுக்குத் தீராத காதல் என்றே சொல்லலாம். எம் பி பி எஸ் படிக்கும் போது அவன் பின் சுற்றியவள் பி.ஜி யிலும் அவனைத் தொடர்ந்து வந்திருந்தாள். வருண் அவ்வளவுவாக அவளைக் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் இவள் சும்மா இருப்பாளா? தன்னை விட நிறத்திலும், வசதியிலும் குறைவான பிருத்விகா மீது அவளுக்குப் பொறாமை.
வருண் எப்போதும் அவளைப் பார்ப்பது, பக்கத்து வீட்டில் இருப்பது கூட அவளுக்குப் பிடிக்காது. பொறாமையை ஏற்படுத்தி வைக்க இவளும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பிருத்விகாவை எதாவது செய்வாள்.
தன் முன் வந்து நின்றவளை ஏறிட்டுப் பார்த்தாள் பிருத்விகா.
“ஏய் பிருத்விகா. எப்படி ஜூஸ் வருண் மேல கொட்டுன? உன்னால் பார்த்து கூட நடக்கத் தெரியாதா?” அதிகாரத்துடன் கேட்டான்.
அப்போதுதான் அருகிலிருந்த கிருஷ் இடையிட்டான்.
“எல்லா தப்பும் இவ மேலதான். உட்கார்ந்துட்டே எந்திருச்சு கொட்டிட்டா.” என்று பிருத்விகாவைச் சுட்டிக் காட்டினான். பிருத்விகாவின் மீது தவறு என்று கிருஷ் கூறியதும் ஆச்சரியமாக நோக்கினாள் தஸ்வி. தஸ்வியைப் போலவே பாதித் தமிழும், கேரளமும் கலந்த பியூஷன் கிருஷ் என்பதால் தஸ்விக்கு எப்போதும் அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் உண்டு.
“நடந்தது என்னனு நான் சொல்றேன்.”
தஸ்வி தலையை ஆட்டினாள்.
“நானும் பிருத்விகாவும் பிரேக் டைமில் சாப்பிட்டு இருந்தோம். பிருத்விகா ஜூஸ் குடிச்சுட்டு இருந்தாள். அப்ப எங்களைத் தாண்டி வருண் நடந்தான். நான் வருண் வர்ரதப் பார்க்கலை. எனக்கு ஜூஸ் இவ தரலைங்கற கோபத்தில் கம்பளி பூச்சினு சொல்ல பயந்து அலற ஜூஸ் வருண் மேல் ஆக்சிடெண்டலா கொட்டிருச்சு.” என்று தன் அருகில் இருந்த பேப்பர் டம்பளரில் இருந்த லெமன் ஜூஸை எடுத்து தஸ்வி மீது கொட்டினான்.
ஜூஸ் கொட்டியதில் நனைந்து அதிர்ச்சியில் நின்றாள் தஸ்வி.
“வாட் த….ஹெல் கிருஷ்?”
எழுந்த கிருஷ் அவள் காதருகே சென்று ஏதோ முனு முனுத்தான். உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் தஸ்வி.
தஸ்வி சென்றதும் கிருஷ்ஷைக் குறு குறுவென்று பார்த்தாள் பிருத்விகா.
“என்னடா சொன்ன? சீறும் பாம்பு சீட்டெடுக்கற கிளி மாதிரி போகுது.”
“வேற என்ன இன்னொரு கல். இரண்டு மேங்கோ. அவ்வளவுதான்.”
தஸ்வியின் காதில் முனு முனுத்தது இதுதான்.
“இப்பதான் வருண் லான்ட்ரி ரூமிற்கு போனான். நீயும் நியூ டிரஸ் எடுத்துட்டு அங்க போ. அதுக்குத்தான் ஜூசைக் கொட்டினேன். நீயும் வருண் கூட பேசலாம். கமான் குயிக்.” என்று புயலை திசை திருப்பி விட்டிருந்தான்.
இதைக் கேட்டதும் பிருத்விகாவுக்கு சிரிப்பு வந்தது.
“கேடிடா நீ..” என்று அவனை மெச்சினாள்.
“இப்ப உன்னை திட்டுன தஸ்விக்கும் ரிவென்ஞ் ஓவர். வருணுக்கும் இன்னொரு தடவை..”
“உன்னோட இந்த இண்டென்ஷன் தெரியாமல் அவ என்னமோ உன்னை கியூபிட் ரேஞ்சுக்குப் பார்த்துட்டு போறாள். பாவம் டா அவ. தஸ்வியும் நல்ல பொண்ணுதான். என் மேல் கொஞ்சம் பொறாமை. மத்தப்படி ரொம்ப இன்னசண்ட். வருண் இவளுக்கு ஓகே சொல்லிட்டு செட்டில் ஆகிடலாம். அவனோட ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலான பொண்ணு. அவனை லவ் பன்றா. வேற என்ன வேணும்.”
அவள் தலையில் தட்டிய கிருஷ், “எருமை நீ சொல்றது கரக்ட்தான். ஆனால் வருண் மனசில் யாரு இருக்கானு யாருக்குத் தெரியும்?” என்றான்.
“பேசாமல் தஸ்வியைப் பத்தி அங்கிள்கிட்ட சொல்லிட்டா என்ன?” என்று கிருஷ்ஷிடம் வாய் விட்டே கேட்டாள்.
“அது உன்னோட வேலை இல்லை. வருணுக்குப் பிடிச்சிருந்தால் அவனே கேட்டுப்பான். நீ உன்னோட வேலையை மட்டும் பாரு பக்கி.”
கண்களை உருட்டி அவனை ஒரு முறை பார்த்தவளுக்கு அவன் கூறுவதும் சரியென்று தோன்றியது.
“சரிடா இடியட்.”
என்றபடி உணவை உண்ண ஆரம்பித்தனர்.
அங்கு வருணோ லான்ட்ரி ரூமில் தலையைப் பிடித்தப்படி நின்றிருந்தான். லான்ட்ரி ரூமில் கிடந்த தன் சட்டை காய்ந்திருக்கறதா என்று பார்க்க வந்தான். ஆனால் அது காயவில்லை.
காலையில் பிருத்விகாவிடம் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று யோசித்தப்படி அங்கு இருக்கும் வெயிட்டிங்க் பெஞ்சில் அமர்ந்தான். அப்போதுதான் வருண் என்றபடி உள்ள நுழைந்தாள் தஸ்வி. அவள் குரலைக் கேட்டதும் லேசாக எரிச்சல் மண்டியது.
‘இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியாது.’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.
குர்தியும் லெகின்ஸூமாக உள்ளே ஒரு பையுடன் நுழைந்தாள்.
“ஹாய் வருண். என்னோட டிரஸ்ஸில் ஜூஸ் கொட்டிருச்சு. அதான் லான்ட்ரி ரூமுக்கு வந்தேன்.”
“எப்படி கொட்டுச்சு?”
“கிருஷ்தான் கொட்டினான். அப்புறம் லான்ட்ரி ரூமுக்குப் போகச் சொன்னான். அவனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். இல்லைனா உனக்கு நடந்த மாதிரி எனக்கும் நடந்து இருக்குமா..”
கிருஷ் என்ற பெயரைக் கேட்டதும் வருணுக்குப் புரிந்து விட்டது. கிருஷ் திட்டமிட்டு கோர்த்து விட்டிருக்கிறான் என்று. யோசனையுடன் தலையைத் தேய்த்துக் கொண்டு தஸ்வி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளைத் திட்டி விடலாம் தான். ஆனால் அவள் அப்பாவித் தனத்துக்காக அவளைத் திட்ட மனம் வரவில்லை அவனுக்கு. அவனும் மறைமுகமாக எவ்வளவு தடவை அவள் மீது விருப்பமில்லை என்று கூறிப்பிட்டும் அவளுக்குப் புரியவில்லை.
-மழை கொட்டும்..