என் மேல் விழுந்த மழைத்துளியே! -2

அத்தியாயம்-2

தலையைக் கோதியபடி தன் காரில் அமர்ந்திருந்தான் வருண். நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான் அவன்.

நேற்று மாலை வகுப்பில் இருக்கும் போதே பிருத்விகாவினைக் கவனித்து விட்டான். பிருத்விகாவின் முகம் சரியில்லை என்று. அவனை அவள் கவனிக்காமல் விட்டாலும் இவனால் அவளைக் கவனிக்காமல் இருக்க முடிவது இல்லை. சிறு வயதில் இருந்து அவனுக்கு இருக்கும் பழக்கம் அது.

அவளுக்கு முன்பே பார்க்கிங்க் சென்று விட்டிருந்தான். அவளுடன் பேசலாம் என்று தான் நினைத்துக் காத்திருந்தான். ஆனால் ஸ்கூட்டி எடுக்கும் போதே அவள் தடுமாறியதைக் கவனிக்கவும் சரியாக அவளைப் பிடித்திருந்தான். அவன் கைகளில் பிருத்விகா மயங்கியது ஒரு நொடி அவளுக்கு என்னவோ என்று மனம் பதறியது உண்மை. ஆனால் மறு நொடியே மருத்துவனாக அவளுக்குப் பரிசோதித்தவன் லோ பிபி, காய்ச்சல் என்பதை உணர்ந்து அவளுக்கு பார்க்கிங்க் இருக்கும் ஒரு வெண்டிங்க் மிஷினில் இருக்கும் எலக்ரோடைட் கலந்த இனிப்புச் சுவையுடன் ஒரு பானத்தை எடுத்துப் புகட்டினான். அவன் அதை எடுத்து வரும் முன் அவள் தன் காரை விட்டு எழுந்து சென்றதையும் பார்த்தான்.

பிறகு கட்டாயப் படுத்தி மருத்துவமனை. வீடு. ஏன் அவளிடம் மட்டும் எவ்வளவு தன் மனதைக் கட்டுப்படுத்தினாலும் இப்படி பேசுகிறோம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். இரவு காய்ச்சல் அதிகமானதும் அவள் அருகிலேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு அவள் பேசியது அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவள் கூறியபடிதான் நான் இருக்கிறேனா? என்று ஒரு முறை தன்னை சுய அலசல் செய்து கொண்டிருந்தான். அவளைப் போல் யார் இருந்தாலும் அவன் உதவி இருப்பான். அது உண்மை. தன் மருத்துவன் ஆனதே அதற்காகத்தானே. தன்னை ஒரு மருத்துவன் என்ற ரீதியில் கூட அவள் பார்க்கவில்லை என்று தோன்றியது.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள். அவளைப் பார்த்ததும் கார் அவன் கார்க் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

அவன் என்னும் கிளம்பவில்லையா என்ற ரீதியில் அவனைப் பார்த்தவள் பேசாமல் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவள் இப்படித்தான் செய்வாள் என்று எதிர்ப் பார்த்தவன் உடனே அவள் முன் வந்து நின்றான்.

“காரில் ஏறு.”

“நான் ஆட்டோக்கு சொல்லி இருக்கேன்.” முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவனைப் பார்க்காமல் கூறினான்.

அவள் தாடையை வலிக்காமல் பற்றி தன்னைப் பார்க்கும்படி செய்தவன், “உனக்கே தெரியும். நீ இவ்வளவு நாள் என்னோட ஆக்டிங்கு ஏத்த மாதிரி நடிச்ச. இப்போவும் அதையே செய். பேசாமல் காரில் ஏறு. இல்லைனா உன்னோட அப்பாவுக்கு கால் பன்ன வேண்டியதாக இருக்கும். உன்னோட கண்டிஷன் பத்தியும் சொல்லிடலாம்.”

அப்பா என்ற பெயரில் அமைதியானவள் பேசாமல் அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள். கார் ஓட்டும் போது அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன். சீட்டில் கண்களை மூடி சாய்ந்திருந்தாள். நெற்றி லேசாகச் சுருங்கி இருந்தது. மூக்கு விடைத்திருந்தது.

தன்னைப் பார்க்கக் கூடாது என்பதால் கண்களை மூடி இருந்தாள் என்பது புரிந்தது. அவனுடைய அருகில் இருந்தால் மட்டும் அவள் முகம் இப்படி மாறிவிடும்.

மேலும் எதையும் பேசி வம்பு வளர்க்காமல் வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பதால் காரை அமைதியாகச் செலுத்தினான்.

ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டர். காலையில் அனைவரும் அமைதியாக தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பார்க்கிங்க் வந்ததும் காரை நிறுத்தினான் வருண்.

“தேங்க்ஸ் ஃபார் யுவர் வொண்டர்புல் ஆக்டிங்க்.”

என்று கூறியபடி கதவைத் திறந்து நடக்க ஆரம்பித்தாள் பிருத்விகா.

பார்க்கிங்கை விட்டு வெளியில் வந்தது இருக்கும் கோல்ஃப் கார்ட் வண்டியில் இருவர் மட்டும் இருக்க அதில் ஏறினாள். வண்டி சிறிது தூரம் நகர்ந்ததும் நின்றது. யார் நிறுத்தியது என்பதைப் பார்க்க நிமிர்ந்து பார்த்தாள் பிரித்விகா. புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் வருண்.

அவளருகே மட்டும் இடம் இருந்தது. கோணல் புன்னகையுடன் ஏறி அவளருகே அமர்ந்தான்.

“ஹலோ பேபி.” அவளுக்கு மட்டும் கேட்கும்படி லேசாக முனுமுனுத்தான்.

‘பேபியாம்..பேபி பேய் பிசாசு அப்படிங்கற்து எப்படி சுருக்கிக் கூப்பிடறான் பாரு.’ என்று மனதிற்குள் அந்த நிலையிலும் திட்டியவள் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அமைதியாக மலை முகடைப் பார்த்தப்படி பயணத்தைத் தொடர்ந்தாள்.

‘ஓ.. இக்னோரிங்க் மி. பரவாயில்லை. பார்க்கிங்க் என்னை விட்டுட்டு ஓடி வந்ததுக்குத்தான் இப்ப என் பக்கத்தில் உட்கார பனிஸ்மெண்ட்.’ என்று அவனும் அவளை ஓரக் கண்ணால் பார்த்தப்படி பயணத்தைத் தொடர்ந்தான்.

அவளும் அவன் எண்ணம் புரிந்தது என்ற ரீதியில் அமைதியைக் கடை பிடித்தாள். அவர்களுடைய பிளாக் வந்ததும் அமைதியாக இருவரும் இறங்கினர். பிருத்விகா தான் பாட்டுக்கு அமைதியாக நடக்க ஆரம்பித்தாள்.

“ஹே பேபி..” என்று அழைத்தான்.

அவள் நிற்கவில்லை. அவனைக் கண்டு கொள்ளப் போவதில்லை.

“இப்ப நீ நிற்கலைனா.. நம்மளைப் பத்தி நான் எல்லார்கிட்டேயும் சொல்லிருவேன்.”

அந்த வார்த்தையில் அதிர்ந்த பிருத்விகா உடனே அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களுடைய பிளாக்கின் முன்னால் இருக்கும் மரத்தின் மறைவிற்கு இழுத்துச் சென்றாள். அவள் இழுப்பதற்கு ஏற்ப இவனும் அமைதியாக அவளைத் தொடர்ந்தான்.

வேகமாக இழுத்துச் சென்றவள் மரத்தின் எதிரே இருக்கும்படி நிறுத்திவிட்டு அவன் வாயைப் பொத்தினாள்.

“வொய் காண்ட் யூ ஷட் அப்? என்னை நீ நிம்மதியாவே இருக்க விட மாட்டியா? என்னோட பி.ஜியை வாவது நிம்மதியா செய்யலானு இங்க வந்தேன். இங்கேயும் நீ வருவேனு நினைக்கல. நான் ஒன்னு சொல்லட்ட. அந்த தஸ்விதான் உன் பின்னாடியே சுத்தறாள். நீ அவளை டேட் பன்னிட்டு ஹேப்பியா இருந்தால் நல்லாயிருக்கும். எதுக்கு இப்படி என் உயிரை வாங்கற?” மெல்லிய குரலில் கோபத்துடன் கேட்டு முடித்தாள் அவள். தான் அவன் வாயிலிருந்து கையை எடுத்தால் அவன் தன்னைப் பேச விட மாட்டான் என்பதால் இப்படி அவன் வாயில் கையை வைத்திருந்தாள் பிருத்விகா.

அவள் பேசி முடித்ததும் அவள் கையை எடுத்தவன் தன் பேக்கிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதே கையில் திணித்தான்.

“பேபி இதை நீ கம்முனு குடிச்சால் நான் இன்னிக்கு ஃபுல்லா உன்னை டிஸ்டர்ப் பன்ன மாட்டேன்.”

அதன் பிறகு அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன், “எனக்கு யாரை டேட் செய்யனும் அப்படினு முடிவு செய்யற அளவுக்கு அறிவு இருக்கு. நீ முட்டாள் தனமா யாரையும் டேட் செஞ்சிராத.” என்று எச்சரிக்கும் குரலில் கூறிவிட்டு அவளை விட்டு விலகி வகுப்புக்குச் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தான்.

கையில் இருக்கும் ஜூசர் பாட்டிலைத் திறந்து பார்த்தாள். அதில் மாதுளம் பழ ஜூஸ் அரை லிட்டர் இருந்தது. அதைப் பார்த்ததும் பிருத்விகா முகம் சுழித்தாள்.

அவளுக்கு மாதுளம் பழ ஜூஸ் என்றால் பிடிக்காது. ஆனால் வருணுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி குடிப்பது என்று விழித்துக் கொண்டிருந்தாள் பிரிருவிகா.

தீடிரென்று அவள் காதருகே முனு முனுத்தான் அவன்.

“பேபி.. இதை நீ குடிச்சே ஆகனும். அப்பதான் இன்னிக்கு முழுக்க கிளாசில் நீ நிம்மதியா இருக்கலாம். நான் உங்கிட்ட வந்து பேசினால் தஸ்வி மேடம் உன்னை என்ன செய்வாங்கனு தெரியும்னு நினைக்கிறேன்.”

மாதுளம் பழ ஜுசைக் கண்டு அவள் முகம் எப்படி மாறுகிறது என்று பார்க்கவே  திரும்பி வந்திருந்தான் அவன். அவர்கள் இருவரையும் இருவருக்கும் தெரியாமல் ஒரு உருவம் கவனித்துக் கொண்டிருந்ததை  இருவருமே அறியவில்லை. கவனித்திருந்தால் அவர்கள் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள்.

கூறிவிட்டு வருண் வகுப்பிற்குச் செல்ல மரத்தின் அருகே போடப்பட்டிருந்த பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்தாள் பிருத்விகா.

ஏனோ இன்று அவளுக்கு அனைத்தும் சலிப்பாக இருந்தது. ஏன் தான் இப்படி தான் அவனுடன் சண்டை இட வேண்டும் என்று தோன்றியது. நிம்மதியாக இருக்க வேண்டும் என்று அவள் மனம் ஏங்கியது. இந்த பூனை எலி ஆட்டம் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவர்கள் இருவரும் இன்னும் சிறு பிள்ளைகள் இல்லை. சமூகத்தில் ஒரு பொறுப்பான இடத்தில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று அவள் மனம் கூறியது. தான் நினைத்தாலும் வருண் அப்படி நினைக்க மாட்டான் என்று அதே மனம் எடுத்துக் கூறியது. வருணை எப்படியாவது தன் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும் என்று தோன்றியது. இல்லை அவன் கண்களில் படாத ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்று விட வேண்டும். இதுதான் அவளுக்கு ஓரே வழி.

இவள் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்க தன் வகுப்பில் சென்று அமைதியாக அமர்ந்தவனின் மனநிலை வேறு மாதிரி இருந்தது.

‘நீ என்னை விட்டு எப்பவும் தப்பிக்க முடியாது. நான் நினைக்காமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது.’ இப்படி வருண் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் கழிந்தது. பிருத்விகாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு ஒருவன் நுழைந்தான். அவன் கிருஷ். இருவரும் சிரித்துப் பேசியபடியே உள்ளே நுழைந்தனர்.

கிருஷ்ஷூம் ஓரக் கண்ணால் வருணைக் கவனித்தப்படியே உள்ளே நுழைந்தனர். பிருத்விகாவின் உயிர்த் தோழன். இருவரும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். அதனால் வருண் பற்றி அனைத்தும் இவனுக்கும் தெரியும். நேற்று கிருஷ் விடுமுறை என்பதால் அவன் இல்லை. வருண் என்ற பாலைவனம் பிருத்விகாவின் அருகில் இருந்தாலும் கிருஷ் அவனுக்கு பாலைவனச் சோலை. அவன் இருந்தால் வருண் பிருத்விகாவைப் பெரிதாகச் சீண்ட மாட்டான்.

இப்போது இருவரையும் பார்த்த உடன் வருணுக்கு எரிச்சல் மூண்டது. ஏனோ கிருஷ் அவள் அருகில் இருந்தாலே அவனுக்குப் பிடிப்பது இல்லை. இருவருக்கும் இருக்கும் நட்பை முறிக்க அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆனால் எதுவும் அவன் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை.

கிருஷ் வருணைப் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான். அனைவரிடமும் நன்றாகப் பேசுவான். மிஸ்டர்.கூல் என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரன்.

கிருஷ் வருணின் எண்ணங்களை அறிந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கிருஷ்ணன் என்பதால் அவன் நட்பை என்றும் விட்டுக் கொடுப்பதில்லை.

கிருஷ்ணனை முறைத்தும் முறைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வருண். ஆனால் கிருஷ்ணன் அலட்டிக் கொள்ளாமல் பிருத்விகாவின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஆண்கள் வலது பக்கத்திலும் பெண்கள் இடது பக்கத்திலும் தான் அமர வேண்டும் என்ற விதி முறை கிடையாது வகுப்பில். ஆண் பெண் பேதம் கிடையாது என்பதைக் காட்ட டாக்டர். வசுந்தரா இந்த விதிமுறையை வைத்திருந்தார்.

இதில் பிரச்சினை என்னவென்றால் வருணுக்கு கிருஷ் பிருத்விகாவின் அருகில் இருப்பதே பிடிக்காது. இன்று பார்த்து இருவரும் அருகருகே நாற்காலிகள் கிடைக்க இருவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டிருந்தனர். அதுவும் வருணின் பார்வை வட்டத்தில் தெளிவாக விழும் பகுதியில் இருந்தனர்.

வருணின் மனதிற்கு திசை திருப்பமாக அவன் அருகில் அமர்ந்தாள் மித்ரா.

“குட் மார்னிங்க் மித்ரா.”

கருப்பு நிற டாப்ஸ் மட்டும் சிவப்பு நிற பேலேஷோ பேண்ட்டும், டாக்டர்களின் வெள்ளைக் கவுனும் அணிந்து கொண்டு சந்தனத்தைப் பாலில் கலந்த வண்ணத்துடன் இருந்தாள் மித்ரா. அவளுடைய முகத்தைப் பார்த்தாலே பார்ப்பவருக்கு மனதிற்கு இதமாக இருக்கும். அவளை எல்லாருக்கும் பிடிக்கும். மித்ரா வருணின் தோழி.

மித்ராவைப் பார்த்ததும்  முகம் மலர புன்னகைத்தான் வருண்.

“என்னடா காலையிலே ஈஸ்ட் சைடில் இருக்கற யாரையோப் பார்த்து கண்ணில் லேசர் விட்டுட்டு இருக்க?”

என்ற கேள்வியுடன் அவளருகில் இருக்கும் நாற்காலியில் டெஸ்க்கைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தாள். வருண் டெஸ்கில் வைத்துக் கொண்ட பேக்கையும் இப்போது எடுத்து தன் டெஸ்கில் வைத்துக் கொண்டாள்.

“நானா? இல்லையே?”

புருவத்தைச் சுருக்கிக் கொண்டே வருண் கேட்டான். அவனை ஏற்ற இறக்கமாக ஒரு பார்வை பார்த்த மித்ரா ஒரு நோட்டை எடுத்து அவன் கையில் லேசாக அடித்தாள்.

“பிராடு எனக்குத் தெரியாது பார்த்தியா? நேத்து புல்லா பிருத்விகா வீட்டில் தானே இருந்த?”

“ஆமா.. அதுக்கென்ன?” இயல்பாகக் கேட்டான் வருண்.

இரவு மித்ராவுடன் அலைபேசியில் பேசும் போதே கூறியிருந்தான் வருண். அதனால் மித்ராவுக்கு அவனைப் பற்றித் தெரியும்.

“நம்ம கண்ணு முன்னாடி நம்ம கூட படிக்கற பொண்ணு மயங்கி விழுந்தால் என்ன செய்ய முடியும்? அதுலையும் எனக்குச் சின்ன வயசில் இருந்தே நல்லா தெரிஞ்ச  பக்கத்து வீட்டுப் பொண்ணு.”

“ஓ… தெரிஞ்ச பொண்ணா?” என்று அவள் மெல்லிய குரலில் கேலியுடன் இழுத்தாள்.

“ எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உன் கண்ணுக்குத் தெரியற ஒரே பொண்ணு அவ மட்டும் தான் தோணுது.” என்றாள்.

இருவரும் மெல்லிய குரலில் முனு முனுத்துக் கொண்டே பேசுவதை கிருஷ் கவனித்துக் கொண்டிருந்தான். பிருத்விகா நோட்சில் மூழ்கி இருந்தாள்.

“சும்மா இரு பக்கி. அவளை விட்டுட்டு வந்தால் என்னோட அப்பா என்னைத் தொலைச்சுருவார்.”

“சரிடா.. நீ பயந்துட்ட. நான் நம்பிட்டேன்.” என்று சரிக்கு சரி வாயாடினாள் அவளும். அவளுடன் பேசிய பிறகு மீண்டும் பிருத்விகாவின் மேல் கவனத்தை வைத்தான் வருண்.

பிருத்விகாவுக்கு வருண் வல்லூறு போல் தன்னை  முறைத்துப் பார்ப்பது தெரியும். ஆனால் இது வழக்கமாக நடப்பது என்பது போல் அவனை கண்டு கொள்ளவில்லை.

கிருஷ் தீடிரென்று குனிந்து பிருத்விகாவின் காதில் கூறினான். அதற்கு தன் தெத்துப் பல் ஒன்று தெரியும்படி புன்னகைத்த பிருத்விகா அவனை வலது கையால் தோளில் அடித்தாள்.

“சும்மாவே இருக்க மாட்டடா நீ?” என்று பேசியது வருணுக்கும் புரிந்தது. கிருஷ் என்ன அவள் காதில் கூறியிருப்பான்? எதனால் பிருத்விகா இப்படி சிரிக்கிறாள்? என்ற ஆர்வம் வருணின் மனதில் எழுந்தது. அவன் கேட்டாலும் அவள் நிச்சயம் கூற மாட்டாள் என்பதால் விரக்தியுடன் தலை முடியைக் கோதிக் கொண்டாள்.

நடப்பதை எல்லாம் ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவனை முழங்கையால் இடித்தவள் , “இதுக்குப் பேருதான் அப்சனெனு சொல்லுவாங்க?” என்றாள்.

“இல்லை.. நான் நைட் முழுக்க பார்த்துகிட்ட என்னோட பேசண்ட் நல்லா இருக்காங்களானு பார்க்கிறேன்.” என்று அவனும் சளைக்காமல் பதில் கூறினான்.

மித்ரா ஒரு பெரு மூச்சை விட்டாள். அத்துடன் மற்ற சம்பவங்கள் நடப்பதற்குள் வகுப்பிற்கு பேராசிரியர் வர வகுப்பு ஆரம்பித்தது. அனைவரும் அதில் கவனமாயினர்.

இரண்டு மணி நேரம் கழித்து இடை வேளை. மருத்துவ மாணவர்கள் அனைவரும் வெளியில் வந்திருந்தனர். அங்காங்கே நடந்து கொண்டிருந்தனர். பிருத்விகாவும், கிருஷ்ஷூம் கேண்டீனில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

ஒரு சாண்ட்விச்சை தின்று கொண்டிருந்தான் கிருஷ்.

எதிரில் மாதுளம் பழம் ஜீசர் பாட்டிலோடு அமர்ந்திருந்தாள் பிருத்விகா. பெருமூச்சுடன் சிறிது சிறிதாக அதைப் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

சிரித்தபடியே அவளின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ். அப்போது வருணும், மித்ராவும் உள்ளே வந்து தங்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்து அமர மேசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிருத்விகாவின் அருகில் ஒரு மேசை காலியாக இருந்தது.

அதனால் அங்கே நடக்க ஆரம்பித்தனர்.

“பிருத்விகா என்ன உன்னோட பேக்கில் கேட்டர்பில்லர்?”

கேட்டர்பில்லர் என்ற பெயரைக் கேட்டதும் துள்ளிக் கொண்டு எழுந்த பிருத்விகாவின் கையில் இருந்த மாதுளம் பழம் ஜீஸ் வருணின் ஷர்ட்டில் சித்திரம் வரையத் தொடங்கியது.

-மழை கொட்டும்..