என் நித்திய சுவாசம் நீ! – 9

நித்திலன் நிவாசினி திருமணமான மறுநாள் அவர்களைத் திருவேற்காட்டிலிருந்த பழமை வாய்ந்த சிவன் கோவிலிற்கு அழைத்துச் சென்றனர் நித்திலனின் தாய் தந்தையர்.

நித்திலனின் திருமணத்திற்கான வேண்டுதல் நிமித்தமாய் அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர்.

அன்றைய நாள் முழுவதும் நிவாசினியும் நித்திலன் குடும்பத்தினரும் வெளியிலேயே சுற்றினர்.

அன்றைய இரவு திருச்சி செல்வதற்காகக் கிளம்பிவிட்டனர் நித்திலனும் நிவாசினியும்.

மறுநாள் மாலை பவானி அபிநந்தனின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, அடுத்த நாள் காலை திருமணத்தன்று மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு அன்றிரவு மாஞ்சோலை செல்வதற்கான பேருந்தில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் நிவாசினியும்.

பயணிகளின் வருகைக்காகப் பேருந்து காத்திருப்பில் இருக்க, நித்திலனின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையிலிருந்த நிநி டாட்டூவை மென்மையாய் தடவி கொண்டிருந்தாள் நிவாசினி.

“நித்திப்பா நானும் இப்படி டாட்டூ போட்டுக்கவா?” என அவள் கேட்க,

“வேணாம்டா வலிக்கும்” தோளில் சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை வைத்துக் கொண்டு அவன் கூற,

“இல்லபா ஆசையா இருக்கு! கொஞ்சம் நாள் தானே வலிக்கும். நீங்க எப்ப எங்க இந்த டாட்டூவை கையில குத்தினீங்க? ஆமா உங்க அண்ணன் கையில இந்த டாட்டூவை பார்த்தா மாதிரி இல்லையே! அவர் வேற எங்கயும் டாட்டூ போட்டிருக்காரா?” எனக் கேட்டாள்.

“நம்ம இப்ப போறோமே மாஞ்சோலை, அங்க தான் குத்தினேன்! என் அண்ணன் நெஞ்சில குத்தியிருப்பான். அண்ணி பேரு நித்யா. சோ அந்த நிநி நிரஞ்சன் நித்திலன்லருந்து நிரஞ்சன் நித்யாவா மாறிட்டுது” எனச் சிரித்துக் கொண்டே அவன் கூறவும்,

“அப்ப நீங்க மாஞ்சோலை முன்னாடியே போய்ருக்கீங்களா? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை” அவன் தோளிலிருந்து தலையை நிமிர்த்தி முகம் நோக்கி அவள் கேட்க,

“நம்ம ப்ரபோஸ் செஞ்ச நாள்லருந்து என்னைய எங்க பேசவிட்ட நீ! நீயே தானே பேசிட்டு இருக்க” அவன் கூறவும்,

“அப்ப நான் மொக்கை போட்டேன்னு சொல்றீங்களா?” இடையில் கை வைத்து அவன் பக்கம் திரும்பி முறைத்து பார்த்து அவள் கேட்க,

அவளின் முறைப்புமே அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க, “அதை எப்படிமா என் வாயால சொல்லுவேன்” எனச் சிரித்துக் கொண்டே அவளை வார,

அவன் முதுகில் நாலடி போட்டவள், “போங்க இனி நான் எதுவும் சொல்லலை” என முகத்தைத் தனதருகே இருந்த ஜன்னலை நோக்கி திருப்பிக் கொண்டாள்.

“ஹப்பாடா இன்னிக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம நிம்மதியா தூங்கலாம்” என அவளை வம்பிழுக்கும் பொருட்டுச் சத்தமாய் உரைத்தவாறு கை கால்களை நீட்டி முழக்கி தூங்குவதற்கு ஆயத்தமாவது போல் பாவனைச் செய்து, தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையைப் பின்னோக்கி லேசாய் சாய்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டான் நித்திலன்.

சட்டென அவன் புறம் திரும்பிய நிவாசினி, அவன் தலை முடியை பற்றிக் கொண்டு உலுக்க ஆரம்பித்தாள்.

“நான் கோபமா இருக்கேன்னு சொன்னா நீங்க பாட்டுக்குச் சமாதானம் செய்யாம தூங்கிடுவீங்களா?” எனக் கோபமாய் அவனை உலுக்கி எடுத்து கொண்டிருந்தாள்.

அவளின் செய்கையை ரசித்துச் சிரித்தவன், “ஏன்டி அங்கேயே நாலு முடி தான் இருக்கு. அதையும் புடுங்கி எடுத்துடலாம்னு ப்ளான் பண்ணிட்டியா?” எனக் கூறியவாறே அவளின் கைகளைப் பற்றி உள்ளங்கையில் முத்தமிட்டு, “என் தங்ககட்டிடா நீ” என அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

இப்படிக் கொஞ்சிய பிறகு அவள் எங்கே தன் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியும்.

அவனின் இச்செயலில் அவளுக்கு அவளின் தந்தையின் நினைவுகள் மனதில் ஊர்வலம போக,

அச்சமயம் பேருந்தின் விளக்குகளும் அணைக்கபட, அவன் தோளில் மீண்டுமாய்ச் சாய்ந்து கொண்டவள்,

“அப்பா இப்படி தான்ப்பா நான் எது செஞ்சாலும் கோபமேபடாம ரசிச்சு சிரிச்சு என்னைய வம்பிழுத்துட்டு இருப்பாங்க” என தனது தந்தையின் புராணத்தை வழமை போல் கூறினாள்.

“ஹாஹாஹா எங்க ஆரம்பிச்சாலும் கடைசியில உங்கப்பாகிட்ட வந்து முடிச்சிடுறடா நீ” என கூறியவன் அவளின் மனதின் போக்கை மாற்றும் பொருட்டு தனது கைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு ஹெட்செட்டில் ஒன்றை அவள் காதில் வைத்தவன், மற்றொன்றை தன் காதில் வைத்துக் கொண்டான்.

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

இரவின் ஏகாந்தத்தில் சிலீரென்ற காற்று பேருந்தின் சாளரம் வழியாய் வந்து இவர்களின் உடலை தழுவ, காதினில் தேனாய் இளையராஜாவின் காதல் பாடல்கள் கசிந்துருக செய்ய, தன் இணையின் அண்மையை இன்பமாய்ச் சுகித்து அந்நொடியை ரசித்திருந்தனர் இருவரும். தங்களின் நினைவடுக்கில் சேமித்தும் கொண்டனர் அந்நொடியை.

திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணத்தைக் கடந்து விடியற்காலை பொழுதில் அம்பாசமுத்திரத்தில் இறங்கிய இவர்களை அங்கிருந்து மாஞ்சோலைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது அந்த மகிழுந்து.

அந்த மகிழுந்து ஓட்டுனரிடம் இவர்கள் செல்லவும், “வாங்க தம்பி! வாங்கம்மா! பிரயாணம்லாம் சௌகரியமா இருந்துச்சா?” எனக் கேட்டவாறே அவர்களின் கையிலிருந்த பயணபையினை வாங்கி வண்டியின் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தார் அவர். அவரின் வீட்டினர் பற்றி நலம் விசாரித்திருந்தான் நித்திலன்.

நித்திலனை கண்டதும் அந்த ஓட்டுனரின் கண்கள் பரவசத்தில் மின்னியதையும், தன்னைக் காணும் போது வேதனையில் சுருங்கியதையும் அவதானித்திருந்தாள் நிவாசினி.

“ஹனிமா இவர் பேர் பாலன்! பாலா மாமானு தான் நாங்க இவரைக் கூப்பிடுவோம். நாங்க இங்க வரும்போதெல்லாம் இவர் வீட்டுல தான் தங்குவோம். இந்தப் பக்கம் கல்லிடைக்குறிச்சியில் தான் இவங்க வீடு இருக்கு” அவரை நிவாசினிக்கு அறிமுகப்படுத்தியவாறே வண்டியினில் ஏறி அமர்ந்தான்.

கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை நோக்கி அந்த மகிழுந்து சென்று கொண்டிருந்தது.

சில்லெனக் குளிர் அவளுள் ஊடுருவ அவனது கையினுள் தனது கையினைப் பொதிந்து கொண்டாள்.

அங்கு ஓர் இடத்தில் சோதனை இடுகை(check post) இருக்க, அங்கு வண்டியை நிறுத்தி அருகிலிருந்த அலுவலகத்திற்குள் சென்றார் பாலன்.

“என்னப்பா பக்கத்துல தான் வீடுனு சொன்னீங்க! வளைவு வளைவா சுத்தி கூட்டுட்டு போய்ட்டு இருக்காங்க. அப்ப பாலா அங்கிள் வீட்டுல நாம தங்கலையா? இங்க எதுக்குச் செக் போஸ்ட்?” எனக் கேள்விகளாய் அவள் கேட்க,

“நம்ம மாஞ்சோலை தாண்டி குதிரைவெட்டின்ற இடத்துக்குப் போறோம்டா. நான் அப்பா அம்மா அண்ணா எப்ப இங்க வந்தாலும் அங்கிருக்கக் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்குவோம். இந்த மாஞ்சோலை தாண்டி 1000 அடி உயரத்துல காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறுனு நிறைய இடங்கள் இருக்கு. அங்க சுத்தி தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாத காடுகளும் இருக்கு. இந்த ஏரியா முழுக்கவும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தோட பாதுகாப்புல இருக்கு. சோ யாரு இந்த இடத்துக்கு வரனுனாலும் வனத்துறைகிட்ட அனுமதி வாங்கனும். இப்ப நம்ம நின்னுட்டுருக்க இடத்தைத் தாண்டி போகும் போது அந்த அனுமதி சீட்டை இந்தச் செக் போஸ்ட்ல உள்ள ஆபிசர்ஸ்ட்ட காமிக்கனும். நாம தங்க போற கெஸ்ட் ஹவுஸ் கூட வனத்துறையினருடையது தான். காலைல வந்துட்டுச் சாயங்காலம் போறாங்கனா அனுமதி தேவையில்ல. கவர்மெண்ட் பஸ்ல வந்தாலும் எதுவும் செக்கிங் இல்லாம போய்டலாம். சொந்த கார் இல்லனா வாடகை கார் மூலமா இங்க வந்தாங்கனா மணிமுத்தாறு செக் போஸ்ட் கிட்ட இருக்க வனத்துறை அதிகாரிகள்கிட்ட இருந்து அனுமதி கடிதம் வாங்கனும். ஒரு நாள் தாண்டி இங்க தங்குறாங்கனா அம்பாசமுத்திரம் வனத்துறை ஆபிஸ்ல முன்னாடியே சொல்லி அனுமதி வாங்கனும். நமக்கு எல்லா ஏற்பாட்டையும் மாமா முன்னாடியே செஞ்சி வச்சிட்டாங்க”

அவன் கூறிக் கொண்டிருந்த சமயம், வண்டியிலமர்ந்து மீண்டுமாய் ஓட்டவாரம்பித்தார் பாலன்.

“என்ன மாமா சொல்றாங்க ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ்?” எனக் கேட்டான் நித்திலன்.

“இப்பலாம் இப்படி ரொம்ப நாள் தங்குறதுக்குனு யாருக்கும் அனுமதி கொடுக்கிறது இல்ல நித்திலன். உங்க குடும்பத்தைப் பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும்ல. அதனால தான் உங்களுக்கு மட்டும் இங்க பர்மிஷன் கொடுத்திருக்காங்க. மத்தபடி தினமும் சாயங்காலம் அஞ்சு மணி வரை தான் மக்களை உள்ளே அனுமதிக்கிறாங்க” பாலன் பேசிக்கொண்டே போக,

நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க அந்த இடத்தை வெகுவாய் ரசித்துப் பார்த்திருந்த நிவாசினி, அவரின் பேச்சில், “இவர் குடும்பம் என்ன அவ்ளோ பெரிய குடும்பமா, எல்லாரும் தெரிஞ்சி வச்சிக்கிற அளவுக்கு? ரூம்க்குப் போனதும் நித்திப்பாகிட்ட கேட்கனும்” என மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.

அந்தப் பாலன் மாமா இவளுக்குப் பழக்கமில்லாத ஆள் என்பதால் அவர் முன் நித்திலனிடம் இயல்பாய் பேச முடியாது ஏதோ தடுக்க, அமைதியாய் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்திருந்தாள்.

அந்தப் பாலன் மாமாவின் பார்வையும் ஓட்டினரின் முன் இருக்கும் கண்ணாடி வழியாய் அவ்வப்போது இவளை தீண்டி செல்வதாய்த் தோன்றியது இவளுக்கு. ஆனால் அது தவறான பார்வையாய் அல்லாது அவர் தன்னிடம் ஏதோ சொல்ல எண்ணி தயங்குவதாய்த் தோன்றியது அவளுக்கு.

இவர்களின் வாகனம் தேயிலை தோட்டத்தினையும் தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலையையும் கடந்து செல்ல, தேயிலை மணம் நாசியை நிறைத்தது.

தேயிலைத் தோட்ட நிர்வாகமே நடத்தும் தொடக்கப் பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியும், அஞ்சலகமும் என அனைத்தையும் இவர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து மாஞ்சோலையைத் தாண்டி குதிரை வெட்டி இடத்தை நோக்கி இவர்களின் வாகனம் செல்ல, அந்த அரசு உயர்நிலை பள்ளியை தாண்டி சென்ற சமயம் நிவாசினியின் உணர்வுகள் அவளின் கட்டுபாட்டை மீறி அச்சத்தினை உணர்ந்தது. அடிவயிற்றில் ஒரு பயபந்து உருளுவது போன்றதொரு உணர்வு அவளைத் துளைக்க, முகமெல்லாம் வியர்க்க நித்திலனின் தோளில் அவள் சாயப் போன சமயம் அவர்களின் தங்கும் விடுதியில் வண்டியினை நிறுத்தியிருந்தார் பாலன்.

அங்கு வாகனத்தை நிறுத்தி அந்த விடுதியின் அலுவலரிடம் சாவியை வாங்கி நித்திலனிடம் வழங்கிய பாலன், அவர்களின் பயணபையினை எடுக்கச் செல்ல, நித்திலன் நிவாசினியை அவ்விடுதிக்குள் அழைத்துச் சென்றான்.

அவ்விடுதியின் பின் பகுதிக்குள் தனியாய்ப் பூந்தோட்டத்தினால் சூழப்பெற்றிருந்த ஹட் போன்ற வடிவமைப்பில் இருந்த ஓட்டு வீட்டினை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.

காற்றின் அசைவில் சுகந்தமான நறுமணத்தை வழங்கி நாசியை நிறைத்த பிச்சு பூ, மல்லி பூ, பச்சை இலை என அனைத்து வாசனையும் ஆழ உள்ளிழுத்தபடி இரு பக்கமும் இருந்த அச்செடிகளைக் கடந்து சென்று வீட்டின் வாயிலை அடைந்தனர் நித்திலனும் நிவாசினியும். நிவாசினியின் இனம் புரியாத அச்சங்களனைத்தும் இந்த இனிய இயற்கையின் பயனாய் அவளை விட்டு விலகி சென்றிருந்தது.

வெளிவாசலில் நான்கு மரத்தூண்கள் தாங்கி இருந்த ஒரு முற்றம் இருக்க, அங்கே சாணம் தெளித்துக் கோலமிடபட்டிருக்க, அதைத் தாண்டி திண்ணையும் அதனோடிணைந்த வாசலையும் கடந்து உள் செல்ல, ஆங்காங்கே சீராய் அமைக்கப்பட்டிருந்த மரத்தூண்களுடன் பெரிய வரவேற்பறையும் அதனைத் தாண்டி சென்றால் ஒரு கட்டிலறையும், குளியலறையும் இருக்க, பின்கட்டில் சமயலறையும் திறந்த வெளி இடத்தில் நான்கைந்து நாற்காலியும் வைக்கப்பட்டிருந்தது.

வீட்டை முழுவதுமாய்ச் சுற்றி பார்த்த நிவாசினி அவ்வீட்டினை பார்த்து வாயைடைத்து போனாள்.

“நித்திப்பா, நான் ஜஸ்ட் சிங்கிள் ரூம் தான் கெஸ்ட் ஹவுஸ்ல எடுத்திருப்பீங்கனு பார்த்தா…” கண்கள் அவ்வீட்டினையே பரவசமாய்ச் சுற்றி வர, அந்த வரவேற்பறையில் நின்று கொண்டு அவள் ஆச்சரிய பாவனையில் கூறிக் கொண்டிருக்க,

அவளின் கூற்றில் வாய்விட்டு சிரித்து அவளைப் பின்னின்று அணைத்தவன் அவள் காதினருகில் குனிந்து தனது மீசை உராய, “பிடிச்சிருக்கா ஹனி?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ம்ம்ப” எனக் கண்கள் மின்ன கூறியவள், அவனை நோக்கியவாறு திரும்பி நின்று, “நீங்க எந்த இடத்தில இருக்கீங்களோ அந்த இடம் எனக்குப் பிடிச்ச இடமா தான் இருக்கும்” எனக் கூறியவாறு அணைத்து கொண்டாள்.

அவன் மார்பில் சாய்ந்தவாறே, “இந்தக் குளிருக்கு இதமா கதகதனு இருக்கீங்கப்பா” இன்னுமாய் அவனை இறுக்கி அவனது வெம்மையை அவள் உள்வாங்கிக் கொண்டிருக்க,

“ஹனிமா நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்! இந்தக் குளிருக்கு இதுவும் நேரம் காலம் தெரியாம வருதே” என அவஸ்தையாய் நெளிந்தவாறே கூறி அவளை விட்டு விலகி குளியலறைக்குள் புகுந்து கொள்ள, இவள் வீட்டின் வாசலருகே வந்து வெளியிலுள்ள தோட்டத்தினை ரசித்துப் பார்த்திருக்க, அந்நேரம் பாலன் விடுதியின் வாசலிலிருந்து பையினைத் தூக்கி கொண்டு வருவதைப் பார்த்தவள்,

“அய்யோ நீங்க ஏன் எல்லாத்தையும் எடுத்துட்டு வரீங்க! நித்திப்பாவே எடுத்துட்டு வந்திருப்பாரே” எனக் கூறியவாறே அவரை நோக்கி சென்று அவர் கையிலுள்ள பையினை அவள் வாங்க முற்பட,

“இல்லம்மா நானே எடுத்துட்டு வர்றேன்” என அவளிடம் கொடுக்காது அவரே தூக்கி கொண்டு வர, “என்கிட்ட எதுவும் சொல்லனும்னு நீங்க தயங்கிட்டே வர்ற மாதிரியே ஃபீல் ஆகுதே அங்கிள்! என்கிட்ட ஏதாவது சொல்லனுமா உங்களுக்கு” என நேரடியாய் அவரிடம் அவள் வினவ,

ஒருவித தயக்க பாவனையில் அவர் தயங்க, “சொல்லுங்க அங்கிள்” என இவள் அவரை ஊக்குவிக்க,

அவர் வாய் திறந்து, “எப்படிக் கூத்தும் கும்மாளமா….” எனக் கூற தொடங்கிய நொடி,

“பாலா மாமா” என ஆங்காரமாய்ச் சத்தமாய் நித்திலனின் குரல் இடையிட்டது.

அவனின் சத்தத்தில் சற்றே மிரண்டு தான் போனார் பாலா.

இவர்களின் அருகில் வந்தவன், “நிவாசினி நீ போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா” என அவளிடம் கூற,

எதுக்கு இவர் இப்படிக் கத்தினாரு என மனதிற்குள் எண்ணியவாறே அவள் உள் செல்ல நடக்க,

“நீங்க எதுக்கு மாமா இதெல்லாம் எடுத்துட்டு வரீங்க நான் வந்து எடுத்திருக்க மாட்டேனா?” என அவரிடமிருந்து அவன் பையினைப் பறிக்க,

இச்சொற்கள் அவர்களைக் கடந்து சற்று தொலைவாய் சென்று கொண்டிருந்த அவளின் காதில் விழவும், ‘ஓ அங்கிள் பையைத் தூக்கிட்டு வந்துட்டாங்கனு தான் கோபமா கத்தினாரா’ என எண்ணியவாறே உள் சென்றாள்.

இங்கு நித்திலனோ, “இப்ப ஒன்னும் குடி முழுகி போகலை. நீங்க உண்மையைச் சொல்றேனு அவகிட்ட ஏதாவது சொன்னா தான் பிரச்சனையாகும். புரிஞ்சுக்கோங்க மாமா” எனப் பொரிந்து தள்ளியவன்,

“நீங்க இங்க இருந்தா சரிபட்டு வராது. கிளம்புங்க முதல்ல. நான் ஏதாவது தேவைனா உங்களுக்குக் கால் பண்றேன். இங்க ஃபோன் சிக்னல் கிடைக்காது. அதனால எனக்குக் கால் பண்ணனும்னா எப்பவும் போல இந்த ஆபிஸ் லேண்ட்லைன்க்கு பண்ணுங்க” எனக் கூறி அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்ற பிறகு இருவரும் குளித்து முடித்து அருகிருந்த உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு, வீட்டில் டீ காபி சிறிதாய் சமைக்கத் தேவையான பொருட்கள் என வாங்கிக் கொண்டு வந்தவர்கள் பயண அலுப்பும் களைப்பும் சேர்ந்து கொள்ள உறங்கி போயினர்.

மாலை நான்கு மணியளவில் விழித்த நித்திலன் தனதருகில் படுத்திருந்த நிவாசினியை பார்த்துவாறு திரும்பி, அவளது இடையினில் கையினை போட்டுத் தோளினில் முகத்தினைப் புதைத்துக் கொண்டான்.

இச்செயலில் அவளின் தூக்கம் கலையப்பெற்று அவள் விழிக்க, அவள் கண்களில் தெரிந்தது அவனது தலை முடி தான். அதைத் தனது கை கொண்டு வருடியவள், “எப்பங்க உங்களுக்கு முடி கொட்ட ஆரம்பிச்சிது” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் இப்ப ஒரு ஆறு மாசமா தான்” என்றான்.

அவன் கூறியதில் ஆச்சரியமானவள், “ஏன் திடீர்னு இப்ப கொட்டுது. நீங்க எதுவும் இடம் தண்ணீர்னு மாத்துனீங்களா? அதெல்லாம் மாறினா தான் இப்படிக் கொட்டும். நீங்க அதுக்கு எதுவும் கேர் எடுத்துகலையா?” என அவள் கேட்க,

“ம்ப்ச் இல்ல” எனக் கூறியவன், “ஏன் உனக்கு அது எதுவும் குறையா தெரியுதா?” சற்று சோகமான பாவனையுடன் அவன் கேட்க,

“அச்சோ அப்படி இல்லங்க. சும்மா தெரிச்சிக்கலாமேனு கேட்டேன்”

அவள் கூறவும் அவளை விட்டு அவன் எழும்ப, அவன் கோபத்தில் தான் எழுந்து கொண்டானோ எனப் பதறியவள், “இப்ப ஏன் எழுப்புறீங்க?” என அவனை இழுக்க அவள் மீதே மீண்டுமாய் விழுந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு,

“என்னோட பழைய ஃபோட்டோஸ் காமிக்கிறேன் எழுந்திரு” எனக் கூறி அவளை எழுந்தமர செய்தவன், தன் கைபேசியிலிருந்த அவனது பழைய புகைபடத்தினைக் காண்பித்தான்.

அவள் கனவில் காணும் அதே அடர்த்தியான தலை முடி நிறைந்த முகம் ஆச்சரிய அதிசயமாய்த் தான் அப்புகைபடத்தினைப் பார்த்து கொண்டிருந்தாள் நிவாசினி.

சட்டென நினைவு வந்தவளாய், “உங்க குடும்பம் இங்க எல்லாருக்கும் தெரியுற அளவுக்குப் பெரிய குடும்பமா? அந்த ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ் உங்க குடும்பம்னால தான் பர்மிஷன் கொடுத்ததா சொன்னாங்களே” என அவள் கேட்க,

“அப்பா அம்மா இங்க இருக்க ஹை ஸ்கூல்ல தான் டீச்சரா வேலை பார்த்தாங்க” என அவன் கூறவும்,

“என்னது உங்க அப்பா அம்மா டீச்சரா?” தன்னை மீறி கேட்டவள்,

‘இப்படியா அவர் குடும்பத்தைப் பத்தி எதையும் கேட்டுக்காம இருப்ப நீ’ என மனதிற்குள் தன்னையே கடிந்து கொள்ள,

அவளின் பாவனையில் சிரித்தவன், “என்னைப் பத்தி என் குடும்பம் பத்தி தான் நீ எதுவும் காது கொடுத்து கேட்கலையே” என அவன் அவளை வம்பிழுக்கக் கூற,

“நான் கேட்கலைனாலும் நீங்க சொல்லிருக்கலாம்ல” குற்றயுணர்வில் சிறுபிள்ளையாய் சிணுங்கி அவள் கூற,

“ஓஹோ மேடம் எப்ப என்னைய பேச விட்டீங்க? நீயே தானமா உன் குடும்பப் புராணத்தை இத்தனை நாளும் பேசிட்டு இருந்த” என அவன் கூறவும்,

“சரி சரி இனி நான் தெரிஞ்சிக்கிறேன் சொல்லுங்க” அவள் சொல்லவும்,

“நான் பிறந்ததே இந்த ஊரு தான்” அவன் கூறவும்,

“வாவ் இவ்ளோ அழகான ஊருல தான் பிறந்தீங்களா? அதான் இப்படிப் பளபளனு இருக்கீங்களா?” எனச் சற்றாய் தாடி நிறைந்த அவன் கன்னம் பிடித்தாட்டி அவள் கூற,

தன்னவள் தன்னை ரசிக்கிறாள் என்பதுலேயே அவனுக்கு வெட்கம் வர, வெட்க புன்னகை சிந்தினான்.

“அப்பா அம்மா கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். இரண்டு பேருமே இங்க வேலை பார்க்கும் போது லவ் பண்ணி மேரேஜ் செஞ்சிக்கிட்டாங்க. இரண்டு பேரும் ஒரே கேஸ்ட்னால பெரிசா பிரச்சனைலாம் ஆகலை. அப்பா இதை அரேன்ஜ் மேரேஜ் போலச் செட் பண்ணி மேரேஜ் செஞ்சிக்கிட்டதா சொல்லுவாங்க. பாலா மாமா இங்க தான் டீ எஸ்டேட்ல வேலை பார்த்துட்டு இருந்தாங்களாம். பாலா மாமா மனைவி இங்க எங்க வீட்டுல வீட்டு வேலை செஞ்சாங்களாம். எஸ்டேட் வேலை முடிச்சிட்டு வந்து இங்க வேலை செய்வாங்களாம். அம்மாவும் அத்தையும் தோழி போலத் தான் பழகிக்குவாங்களாம். அவ்ளோ அட்டேச்சுடாம் இரண்டு பேரும்” எனக் கூறிக் கொண்டே வந்தவன்,

“மாஞ்சோலை படுகொலை கேள்விபட்டிருக்கியா ஹனி” எனக் கேட்டான்.

“என்னது படுகொலையா?” என அதிர்ச்சியானவள், “இல்லையே” என்றாள்.

“ஆமா அதுல தான் அத்தை இறந்துட்டாங்க. எனக்கும் அது பத்தி முழு விவரம் தெரியாது. அப்ப எஸ்டேட்ல வேலை செஞ்ச மக்கள் சம்பளம் அதிகம் வேணும்னு கேட்டுப் போராட்டம் செஞ்சாங்களாம். அப்ப போலீஸ் தடியடி நடத்துனதுல கூட்டத்தோட தள்ளு முள்ளுல பக்கத்துல இருந்த தாமிரபரணி ஆத்துல விழுந்து கொஞ்ச பேர் இறந்துட்டாங்களாம். அதுல தான் அத்தையும் இறந்துட்டாங்களாம். இதைப் பத்தி கவர்மெண்ட்டை விசாரிக்கச் சொல்லி நிறையப் போராட்டம் வெடிச்சிதாம். அப்பா அம்மா கூடப் பெட்டிஷன் கொடுத்தாங்க போல. அவங்களை டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க உடனே. தேனில வேலைக்குச் சேர்ந்தாங்க. நாங்களும் அதன் பிறகு கொஞ்சம் வருஷத்துக்கு இந்த ஊரு பக்கமே வரலை. நான் பத்தாவது படிக்கும் போது தான் குடும்பமா வந்தோம். அப்போதுலருந்து தான் பாலா மாமாலாம் எனக்குப் பழக்கம். அத்தை இறந்த பிறகு எஸ்டேட் வேலையை விட்டுட்டு பாலா மாமா பிள்ளைகளோட அம்பாசமுத்திரத்துக்குப் போய் வண்டி ஓட்டுற வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்”

அவன் கூறியதனைத்தையும் விழி விரிய கேட்டுக் கொண்டிருந்தாள் நிவாசினி.

“அம்மா அப்பா இங்குள்ள நிறையப் பிள்ளைங்களுக்குப் பாடம் எடுத்துருப்பாங்க போல. அவங்க தானே இப்ப பெரியாளாகி என் வயசுல இருப்பாங்க. சோ அவங்களோட டீச்சரோட பையன்ங்கிற மரியாதை தான் எல்லாருக்கும் என் மேல” என்று கூறி பெருமூச்செரிந்தவன்,

“சரி கிளம்பு. போய்ச் சாப்டுட்டு வருவோம். இங்க சுத்தி நிறைய ஹோட்டல் கிடையாது. நம்ம போனோமே அந்த ஒரு ஹோட்டல் தான். அதுவும் டைமிங்கு தான் திறப்பாங்க. அதனால நேரத்துக்குப் போகனும். வெளியவும் க்ளைமேட் செம்மயா இருக்கு. இந்தச் சிலுசிலு குளிர்ல இயற்கையை ரசிச்சிட்டே காலாற நடந்தா செம்மயா இருக்கும் ஹனி” அவன் ரசித்துணர்ந்து கூற,

அவளுக்குமே அந்த ஆசை தொற்றிக் கொள்ள உடனே கிளம்ப ஆயத்தமானாள்.

இருவரும் சிறிது தூரம் அந்த இயற்கை எழிலை ரசித்தவாறு நடந்த பின்பு, உணவத்திற்குச் சென்று உண்டுவிட்டு அவர்களது அறையை அடைந்த நேரம் மணி இரவு ஒன்பதை கடந்திருந்தது.

அறையினுள் நுழைந்ததும் அவன் தொலைகாட்சியை உயிர்பித்துப் பார்த்துக் கொண்டிருக்க, பின்னின்று அவனை அணைத்திருந்தாள் அவள்.

அவள் புறம் திரும்பி அவளது முகத்தினைக் கைகளில் அவன் ஏந்தியிருக்க, இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று மோத,

தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த காக்க காக்க படத்தினில் சரியாய் அக்காட்சி வந்தது.

அங்கேயும் சூர்யா ஜோதிகாவின் முகத்தினை இவ்வாறு பற்றியிருக்க, அங்கு ஜோதிகா என் வயசென்னனு தெரியுமா எனக் கேட்க, அதே கேள்வியை இங்கு இவள் கேட்டிருந்தாள்.

அவன் கைகளுக்குள் தனது முகத்தினைப் பொருத்தி நின்றிருந்த நிவாசினி, “என் வயசென்ன நித்திப்பா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் அவள் அடுத்ததாய் கூற போகும் சொல்லை உணர்ந்து சிரித்தவன், “ஹ்ம்ம் உன் வயசு தெரியும். சொல்லு” என அவளை ஊக்கினான்.

இடவலமாய்த் தலை அசைத்தவள், “என் வயசை சொல்லுங்க” எனச் சிறுபிள்ளையாய் அடம் பிடிக்க,

“26” என்று கூறி அடுத்து அவள் கூற போகும் சொல்லுக்காய் அவன் முகத்தில் ஆர்வத்தைத் தேக்கி காத்திருக்க,

அவளோ, “இந்த 26 வருஷமா இந்த மாதிரி ஒரு ஊரை பார்க்க தான் நான் காத்திட்டு இருந்தேன்” என அதை மாற்றிக் கூறி வெடித்துச் சிரிக்க,

நொடியில் அவன் முகத்தில் ஏமாற்ற பாவனை வந்து போக, அதன் பின் அவளின் இந்தக் குறும்பை ரசித்துச் சிரித்தவன், “இருடி இன்னிக்கு உன்னைய கைமா பண்றேன்” எனக் கூறி கணவனாய் அவள் மீது படர்ந்தான்.

முன் காலை பொழுதில் பனி படர்ந்து புகை மூட்டமாய்க் குளிர் வதைத்திருக்க, அவனை நெருங்கி அணைத்து படுத்திருந்தவளோ, “நித்திப்பா” என அலறியவாறு எழுந்து அமர்ந்தாள்.

“என்னடா என்னாச்சு?” என அவளின் அலறலில் அதிர்ந்து எழும்பி அமர்ந்து அவன் கேட்க,

அவனது முகம், கை, கால்கள் அனைத்தையும் அவனுக்கு ஏதும் நிகழவில்லையே என உணர்ந்து கொள்ளும் வண்ணம் படபடப்பாய் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தாள் நிவாசினி.

அவளின் தொடுதலில் மனதின் அலைப்புறுதலை உணர்ந்தவன், “எதுவும் கெட்ட கனவு கண்டியா? எனக்கு ஒன்னுமில்லைடா” அவளை ஆற்றுபடுத்தும் பொருட்டு ஆறுதல் மொழி அவன் உரைக்க,

அவன் கைகளைப் பற்றிக் கொண்டவள், “அந்த ஹை ஸ்கூல் கிட்ட உங்களுக்கு ஆக்சிடெண்ட்… கை கால்லலாம் ரத்தம்” எனப் பிட்டு பிட்டாய் அவள் திக்கி திணறி கூற, சற்றாய் சுருங்கி இடுங்கிய அவனது புருவம் அதன் பின் தெளிந்ததாய் மாறியது.

அதன்பின் கட்டிலில் சாய்ந்தமர்ந்து அவளைத் தனது தோளில் சாய்த்து, அவளது அச்சத்தினை போக்கி, அது கனவு தானெனத் தெளிய வைத்து, அவளை உறங்க வைத்திருந்தான் அவன்.

அவள் அவனது ஸ்பரிசத்தில் நிம்மதியாய் உறங்க, இவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

— தொடரும்