என் நித்திய சுவாசம் நீ – 8
திருமண நாளிற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் அந்தப் பெரிய நகைக்கடையில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் நிவாசினியும்.
அவளுக்கு ஏற்றவாறான காதணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவள் காதில் வைத்து பார்த்தவாறு தேர்வு செய்து கொண்டிருந்தான் நித்திலன்.
நித்திலனின் முகத்தைக் கோபமாய்ப் பார்த்து கொண்டிருந்தாள் நிவாசினி.
“என் மூஞ்சை பார்க்காம அந்தக் கம்மல்ல எது நல்லாயிருக்குனு பாருடா ஹனிமா” என நிவாசினியிடம் கூறினான்.
நகையை எடுத்து வந்து காண்பித்த விற்பனையாளப் பெண்மணியும் இதைப் பாருங்க மேடம் அதைப் பாருங்க மேடம் என எடுத்து காண்பிக்க,
“ம்ப்ச் நான் இந்த நகையெல்லாம் இப்ப கேட்டேனா நித்திப்பா? எங்கேயோ போகலாம்னு கூப்பிட்டீங்களேனு ஆசை ஆசையா கிளம்பி வந்தா… இப்படி நகை கடையில வந்து உட்கார வச்சிருக்கீங்க” என முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு கூறியவள்,
“கல்யாணத்துக்கு அம்மா சேர்த்து வச்ச நகையே என்கிட்ட நிறைய இருக்குப்பா” என்றாள்.
இதைக் கேட்ட அந்த விற்பனையாளரோ, “என்ன மேடம்! கட்டிக்கப் போறவரு, தானே வந்து நகை வாங்கித் தரேனு சொல்றதுலாம் எவ்ளோ பெரிய அதிசயம்! அதைப் போய் வேணாம்னு சொல்றீங்களே!” எனக் கேட்க,
அப்பெண்ணிடம், “நீங்க மத்த கஸ்டமர்ஸை பாருங்க. நான் இவ கிட்ட கொஞ்சம் பேசிட்டு கூப்பிடுறேன்” என அவரை அனுப்பி வைத்தான் நித்திலன்.
பின் நிவாசினியிடம் திரும்பியவன், “அன்னிக்கு காலைல உன் பிஜி தோட்டத்துல உன்னைப் பார்த்தேன்ல, அன்னிக்குக் கை கால்லனு எங்கேயும் எந்த நகையும் போடாம உன்னைப் பார்க்கவும் என்னமோ மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதனால நீ தினமும் ரெகுலரா யூஸ் செய்றது போலக் குட்டியா தங்க ஜிமிக்கி, கைக்கு மெலிசா ப்ரேஸ்லெட், காலுக்குக் கொலுசுனு வாங்கலாம்னு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். இப்ப நீ போட்டிருக்க கவரிங் நகைகள் விட எப்பவும் தங்க நகையோட தான் உன்னைப் பார்க்கனும்னு ஆசை ஹனி மா” அவள் கை பற்றி அவன் கூறவும்,
அவன் முகம் நோக்கி நிமிரந்தவளின் கண்களில் சரேலென ஆறாய் கண்ணீர் வழிந்தது.
கண்களில் துளிர்த்து, விழிகளை நிறைத்து, துளியாய் கரை தாண்டி ஓடி அதன் பின் ஆறாய் வேகமெடுக்கும் கண்ணீரை தான் கண்டிருக்கிறான் இவன். இவள் இவ்வாறு நொடி பொழுதில் ஆறாய் பெருகிய நீரால் தேம்பவாரம்பிக்கவும், அவளின் மனதில் எத்தகைய நினைவையும் வலியையும் தன் வார்த்தை உண்டு பண்ணியதோ எனப் பதறி எழுந்து அவளருகில் சென்று கைப்பற்றி நிற்க,
தனது முகத்தை அவன் வயிற்றில் சாய்த்து முதுகு குலுங்க அழுதவளின் கண்ணீர் பெருக்கு அவனது டீ சர்ட்டையும் தாண்டி அவன் வயிற்றில் வெம்மையாய் பரவவும், அவள் தலை வருடி, “ஸ்ஸ் ஹனிமா இப்படி அழுற அளவுக்கு என்னாச்சு? யாரை நினைச்சு அழுற?” என அவன் கேட்கவும், தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவளுக்கு, அழுகையின் வீரியத்தில் நா எழாமல் போக, அவளை அங்கிருந்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு அக்கடையின் அருகிலிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒதுக்குபுறமான மேஜையில் அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டான்.
முதலில் அவள் பருக பழச்சாறு ஒன்றை ஆர்டர் செய்தவன், அவள் பருக நீர் அளித்து அவளின் முதுகை தடவி விட்டு ஆசுவாசப்படுத்தினான்.
அவளது அழுகை முழுவதாய்த் தேய்ந்து அவள் இயல்நிலைக்குத் திரும்பும் வரை அமைதி காத்தவன், “என்னடா ஆச்சு? இதுக்கு இந்த அழுகை” எனக் கேட்டான்.
அழுகையினால் ஏற்பட்ட ஜலதோஷத்தினால் மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சு” என்றாள்.
அவளின் பதிலில் அவனின் கண்களுக்கு இந்த இருப்பத்தியாறு வயது மங்கை ஆறு வயது சிறுமியாகவே தென்பட்டாள்.
“அம்மா இப்படித் தான் நித்திப்பா, என்னைய தங்கம் தவிர வேற எந்த நகையும் போட விடமாட்டங்க. அப்பா எந்த ஊருக்கு எந்த வேலையா போனாலும் எனக்கு அங்கிருந்து ஜிமிக்கி கம்மல், கொலுசுனு வாங்கிட்டு வருவாங்க. எனக்கு அது ரெண்டுமே அவ்ளோ பிடிக்கும். அப்பா அம்மா இறந்த பிறகு எனக்கு இதெல்லாம் பிடிக்கும்ன்றதையே மறந்து போய் இருந்தேன்ப்பா. அப்பா அம்மா பத்தி பவானி என்ட்ட பேசவே மாட்டா. நானும் அவங்க ஃபோட்டோ கூட என்கிட்ட வச்சிக்காம இருந்துட்டேன். தாத்தாவை கூட அப்பப்ப நினைச்சிக்க முடியும். மனசோட அவர்கிட்ட பேசிக்க முடியும். ஆனா அப்பா அம்மாவ நினைச்சாலே மனசுல யாரோ சம்மட்டிய வச்சி அடிச்ச மாதிரி வலிக்கும். ஏன் இரண்டு பேரும் என்னைய விட்டு போனீங்கனு கதறி அழனும் போல இருக்கும். இப்படி என்னைய மீறி தானா கண்ணீர் வந்துட்டே இருக்கும். அப்படியே மயக்கம் போட்டு விழுந்துடுவேன். இதெல்லாம் பார்த்த பிறகு தான் பவா என்கிட்ட அப்பா அம்மா நினைப்பு வர்ற மாதிரி எதுவும் பேச மாட்டா.. எதுவும் செய்ய மாட்டா” கண்களில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க, தன் மனதின் பாரத்தினை உரைத்து அவன் மனதில் பாரத்தினை ஏற்றிக் கொண்டிருந்தாள்.
அவளின் தலையைப் பற்றித் தன் மார்போடு சாய்த்து கொண்டவன், “அந்த நேரம் உன் பக்கத்துல நான் இல்லாம போய்ட்டேனே! தனியா எவ்ளோ கஷ்டபட்டியோ” என மனம் கலங்க கேட்டான். சிறிது நேரம் அழுது கரைந்தவள் நிமிர்ந்து தன் முகத்தினைத் துடைக்கும் போது தான் அவன் கண்ணிலுள்ள கண்ணீரை கண்டாள்.
‘அச்சோ தானும் அழுது, அவனையும் அழ வைத்து விட்டோமே’ எனத் தன்னையே கடிந்து கொண்டவள்,
“அதெல்லாம் பாஸ்ட் நித்திப்பா! இப்ப பாருங்க நான் நார்மல் ஆயிட்டேன். நீங்க என் கூட இருந்தா எந்த மாதிரியான கவலையும் நான் தாண்டி வந்துடுவேன்ப்பா” எனக் கண்களில் நீர் மின்ன சிரித்த முகமாய் அவனின் கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறிக் கொண்டிருக்க,
அச்சமயம் பழச்சாறும் மசாலா தோசையும் அவர்களின் மேஜையில் வைக்கப்பட்டது.
அவளுக்கு ஒரு வாய் தோசை ஊட்டுவிட்டுக் கொண்டே தானும் உண்டான் நித்திலன்.
“இதுவரை நானும் நீங்களும் ஒன்னா சாப்பிட்ட நேரமெல்லாம் நீங்க முதல் வாய் எனக்கு ஊட்டிட்டு தான் சாப்பிட்டிருக்கீங்க. இருக்கிற இடம் பொருள்னுலாம் பார்க்காம ஊட்டி விட்டிருக்கீங்க. அப்பா இப்படித் தான் நித்திப்பா.. அவங்க சாப்பிடும் போது நான் பக்கத்துல இருந்தா முதல் வாய் எனக்கு ஊட்டாம சாப்பிட மாட்டாங்க”
இப்பொழுது கண்ணில் நீரில்லாமல் சந்தோஷமாய்த் தான் தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாள் நிவாசினி.
அடுத்து அங்கிருந்து மீண்டுமாய் அவர்கள் இருவரும் அந்தக் கூட்ட நெரிசலான பகுதியில் நடந்து அந்த நகை கடையை அடையும் வரைக்கும் அவளின் கையைத் தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு எவரும் அவளை இடிக்காத வண்ணம் பார்த்து பார்த்து நடத்தி கூட்டிக் கொண்டு வந்தான்.
நகை கடைக்குள் வந்து அவளின் கையை அவன் விட்ட சமயம், “அப்பாவும் அம்மாவும் இப்படித் தான் ரோட்ல நான் அவங்க கூட நடந்தா என் கையைப் பிடிச்சிட்டே தான் நடத்தி கூட்டிட்டு போவாங்க! அதுவே பழகி போய் அவங்களே என் கைய பிடிக்கலனாலும் நானே போய் அவங்க கைய பிடிச்சிப்பிட்டே நடப்பேன்” என ஆசையாய் அந்நினைவுகளை அவனிடம் பகிர்ந்துக் கொண்டாள்.
அன்றைய அவர்களின் முழு நாள் ஷாப்பிங் முழுவதும் அவளது தாய் தந்தையரை பற்றி நிறையப் பேசிக் கொண்டு வந்தாள் நிவாசினி.
மாலை மங்கும் நேரம் அவளை அவளது பிஜியினில் அவன் இறக்கி விட, அவனது வண்டியை விட்டு இறங்கியவளுக்குப் பிரிவு துயர் வாட்ட, “இன்னும் இரண்டு நாள்” எனக் கூறி பெருமூச்செறிந்தவள்,
“நம்ம கல்யாண நாளுக்காகக் காத்துட்டிருக்கேன்ப்பா! உங்களை இறுக்கி கட்டிக்கிட்டு மார்புல சாஞ்சிக்கிட்டு என் கஷ்டமெல்லாத்தையும் மறந்து, இனி எனக்கு எதுவானாலும் நீங்க இருக்கீங்கன்ற அந்த மனதின் ஆசுவாசத்துல வரும் பாருங்க நிம்மதியான உறக்கம்! அப்படி உங்களைக் கட்டிபிடிச்சிட்டு தூங்குறதுக்காகக் காத்துட்டிருக்கேன்ப்பா” அவன் கண் நோக்கி தன் மன உணர்வுகளைக் கூறினாள்.
அவளின் கூற்றினில் அவளது நெற்றி முட்டி மெலிதாய் சிரித்தவன், “இப்படியே கல்யாண கனவுலாம் கண்டுட்டு சந்தோஷமா வலம் வருவியாம்! அதுக்குள்ள கல்யாண நாள் வந்துடுமாம்! உன் நித்திப்பா வந்து உனக்குத் தாலி கட்டி கூடவே கூட்டிட்டுப் போய்டுவேனாம்” அவளின் தலை கலைத்து அவன் சிரிப்பாய் கூற, அவளும் இதழ் விரிய சிரித்துப் பிஜியினுள் செல்ல, பவானி அச்சமயம் நந்தனை காண செல்வதற்காக வெளியே வந்தாள்.
நிவாசினியிடம் பேசிவிட்டு வெளி வந்த பவானியை கண்ட நித்திலன் அவளை அழைத்தான்.
“என்னணா? கல்யாண வேலைலாம் எப்படிப் போகுது? கல்யாண பொண்ணு எப்படி இருக்கனும்னு இவளை பார்த்து தானா நான் கத்துக்கனும். எப்பவும் எதோ ஒரு மாய உலகத்துல இருக்க மாதிரியே ஈஈஈனு சிரிச்சிக்கிட்டே வெட்கபட்டுக்கிட்டே சுத்திட்டு இருக்கா” நிவாசினியை கேலி செய்து பவானி கூற,
வாய்விட்டு சிரித்த நித்திலன், “ஹனிமா இன்னிக்கு அவளோட அப்பா அம்மா பத்தி நிறையச் சொன்னா.. அவளுக்கு எதுவும் இதனால மனசு கஷ்டமாகி தூங்கினானா நீ டிஸ்டர்ப் பண்ணாதமா” என்றவன் கூறவும்,
ஆனந்த அதிர்ச்சியில் அவனை நோக்கியவள், “அண்ணா, நிஜமா அவளோட அம்மா அப்பா பத்தி பேசினாளா? அவ இந்தப் பிஜி வந்த புதுசுல அவளோட அப்பா அம்மா பத்தி பேசினாலே மயக்கம் போட்டு விழுந்துடுவா இல்ல தூங்கிடுவா… அதனாலயே அவளோட அப்பா அம்மாக்கு எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சுனுலாம் தெரிஞ்சிக்க முடியாமலேயே போய்டுச்சு! ஆக்சிடெண்ட் ஆகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி எல்லாச் சொத்தையும் இவ பேருல மாத்திருக்காங்க. அவ வீட்டுல யூஸ்வலா எல்லாச் சொத்தும் அவங்க அம்மா பேர்ல தான் வாங்குவாங்க. எனக்கு என்னமோ அவங்க மரணத்தைப் பத்தி அவங்க முன்னாடியே கணிச்சி தான் இவ பேர்ல மாத்திட்டாங்களோனு அடிக்கடி தோணும் அண்ணா. அதைப் பத்தி பேச்செடுக்கும் போது தான் இவ மனசளவுல இவ்ளோ வீக்கா இருக்கானு தெரிஞ்சிது. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போய்க் கொஞ்ச நாள் மாத்திரை சாப்பிட வச்சேன்”
பவானி கூறுவதைக் கூர்மையாய் கவனித்துக் கேட்டிருந்தான் நித்திலன்.
சற்று அமைதியாகி தொடர்ந்தவள், “your presence is healing her soul anna! இந்த இரண்டு வாரத்துல அவகிட்ட அவ்ளோ பெரிய மாற்றங்களைப் பார்க்கிறேன்ணா. அவளை இப்படியே சந்தோஷமா வச்சி பார்த்துக்கோங்கணா. உங்களால அவளுக்குச் சின்னக் கஷ்டம்னாலும் அவ தாங்கிக்க மாட்டா. அதைப் புரிஞ்சிக்கிட்டு நீங்க நடந்துக்கிட்டா போதும் அண்ணா” என்று நித்திலனிடம் வேண்டி கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் வழமையாய்ச் செல்லும் அந்த முருகன் கோவிலில் அமைக்கபெற்றிருந்த மணமேடையில் மணமக்களாய் அமர்ந்திருந்தனர் நித்திலனும் நிவாசினியும்.
இலை வடிவிலான தாலியில் சிவலிங்கம் வீற்றிருக்க, ஐந்து பவுன் முறுக்குச் சங்கிலியில் அந்தத் தாலி கோர்க்க பட்டிருக்க, அக்கோவிலின் பூசாரி அந்தத் தாலியை நித்திலனிடம வழங்க, நிவாசினியின் கண்களை நோக்கியவாறே அந்தத் தாலியை தலை வழியாய் அவளின் கழுத்தினில் அணிந்திருந்தான் நித்திலன்.
நிவாசினியின் மூளையில் நித்திலன் அவள் கழுத்தில் தாலி அணிவிப்பது, நித்திலனின் தாய் தந்தையர், அண்ணன் அண்ணி என அனைவரும் சுற்றி நின்று அட்சதை தூவுவதான இக்காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே எங்கோ நிகழப்பெற்றதாகவும் அதை அவள் கண்டிருப்பதாகவும் தோன்ற, ‘முன் ஜென்மத்துலயும் இப்படித் தான் என் கழுத்துல இவங்க தாலி கட்டிருப்பாங்களோ?’ என அவள் நெற்றி யோசனையில் சுருங்க,
அவளின் நெற்றியில் குங்குமமிட போனவன், அதில் கண்ட அந்தச் சுருக்கத்தில் புருவத்தை உயர்த்தி என்னவென வினவ, அவள் ஏதுமில்லையெனத் தலையசைக்க, சுற்றி நின்றிருந்தவர்களுக்கு இது ஏதோ தம்பதிகளின் பரிபாஷையாய் தோன்ற,
“மாப்பிள்ளை, தங்கச்சி கல்யாணம் முடிஞ்சி உன்கூட உன் வீட்டுக்கு தான் வரும். அப்ப பொறுமையா ரெண்டு பேரும் சைகை பாஷைல பேசிக்கோங்க. இப்ப ஐயர் சொல்றதை செய்றீங்களா?” என விஜய் அவர்களைக் கேலி செய்ய, விஜயின் மனைவி, பவானி மற்றும் நந்தனென அனைவரும் சிரித்திருந்தனர்.
திருமண வைபவம் முடிந்த பிறகு அனைவரும் உணவுண்ண செல்ல, வழமை போலவே அவன் அவளுக்கு ஊட்டிவிட, “டேய் ஃபோட்டோகிராபர் சொன்னா தான்டா ஊட்டி விடனும்! நீயா எல்லாத்தையும் உன் கைல எடுத்துக்கக் கூடாது மச்சான்” என அங்கயும் விஜய் கேலி செய்ய, நித்திலன் அவனை முறைக்கவும், நமக்குச் சோறு தான் முக்கியமென நல்ல பிள்ளையாய் பந்தியில் அமர்ந்து உண்ண துவங்கிவிட்டான் விஜய்.
அனைவரும் உண்டு முடித்துச் சற்று இளைபார கோவிலில் அமர்ந்திருந்த நேரம் வந்தார் சிவகணேசன்.
“ஹை சிவா” எனக் கை குலுக்கி இன்முகமாய் அவரை வரவேற்ற நித்திலன், “என்னடா இவ்ளோ லேட்டா வந்திருக்க?” என உரிமையாய் ஒருமையாய் பேசுவதை ஆச்சரியமாய் பார்த்திருந்தனர் நிவாசினியும் பவானியும்.
நிவாசினியின் கலைந்த முக ஒப்பனையைச் சரி செய்தவாறு அருகில் நின்றிருந்த பவானி, சிவகணேசனை பார்த்து, ‘இவர் எங்கடி இங்க வந்திருக்காரு? நீ இன்வைட் செஞ்சியா?’ என நிவாசினியிடம் கேட்க,
இல்லையெனத் தலையசைத்த நிவாசினி, “இவருக்கு எப்படி நித்திப்பாவை தெரியும்?” எனப் பவானியின் காதில் கேட்க, “அதானே எனக்கும் தெரியலை” என்றாள் அவளும்.
சிவகணேசன் நித்திலனிடம் பேசிவிட்டு இவர்களின் அருகில் வந்து நிவாசினியிடம் வாழ்த்துக் கூறிக் கொண்டிருக்க, “என்னமா அடுத்த இரண்டு நாள்ல உனக்குக் கல்யாணமா?” எனப் பவானியை நோக்கி கேட்டார்.
“ஆமாம் சிவா!” எனக் கூறி, “இவர் தான் நான் கட்டிக்கப் போரவரு” எனக் கூறி நந்தனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவள் நந்தனிடம், “இவர் என் ப்ராஜக்ட் டீம் லீட் ங்க” எனச் சிவாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
அதன் பின், “உங்களுக்கு எப்படி நித்திலன் அண்ணாவை தெரியும்” எனச் சிவாவிடம் நேரடியாய் வினவினாள்.
“நாங்க இரண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது பெங்களூர்ல ஒரே ரூம்ல தங்கியிருந்தோம். நான் IT படிச்சேன். அவன் AME (Aircraft Maintenance Engineering) படிச்சான்” என அவர் கூறவும்,
“ஓ நித்திலன் அண்ணாகிட்ட எங்களைப் பத்தி சொன்னது நீங்க தானா? என் ஃபோன் நம்பர் நீங்க தான் கொடுத்தீங்களா அன்னிக்கு காலைல?” என அவள் கேட்க,
“ஆமா அன்னிக்கு காலைல ரொம்பவும் பதட்டமா நிவாசினிக்கு என்னாச்சுனு தெரியலைனு சொல்லி உன்கிட்ட கேட்கனும்னு சொன்னான்மா! அதான் கொடுத்தேன். தப்பா நினைச்சிக்காதமா” என அவர் தயங்கி தயங்கி கூறவும்,
“ஹ்ம்ம் அது பரவாயில்ல சிவா!” என எதையோ யோசித்தவாறே பவானி கூறவும், “நீ வாடா முதல்ல சாப்பிடு” என அவரை உணவுண்ண அழைத்துச் சென்றான் நித்திலன்.
“ஹாசினி, உனக்கு எப்படி நித்திலன் முகம் கனவுல வந்ததுனு கண்டுபிடிச்சிட்டேன்! அன்னிக்கு டாக்டர் சொன்னாருல, நம்ம வாழ்க்கைல பார்க்காத முகம் கனவுல வராதுனு… நீ நித்திலன் அண்ணாவை எங்கேயோ பெங்களூர்ல பார்த்திருக்கனும். அவர் காலேஜ் அங்க படிச்சிட்டு கொஞ்ச நாள் அங்க வேலை பார்த்ததா நந்தா அவரைப் பத்தி விசாரிச்சதுல சொன்னாங்க. அப்ப எங்கயாவது அங்க பார்த்திருக்கனும். இல்லனா உங்க அம்மா அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கும் போது தானே இறந்தாங்க. அங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை நித்திலன் அண்ணாவா கூட இருக்கலாம்ல” எனப் பவானி தன் சந்தேகங்களைக் கூறிக் கொண்டே போக,
“ம்ப்ச் அதெல்லாம் இல்லடி! இன்னிக்கு ஒரு அதிசயம் நடந்துச்சு தெரியுமா! இந்தத் தேஜாவூ கேள்விபட்டுருக்கியா பவா?” எனக் கேட்டாள் நிவாசினி.
“ஹ்ம்ம் கேள்விபட்டிருக்கேன். தேஜாவூனா நிகழ்காலத்துல நமக்கு நடக்கும் ஒரு நிகழ்வு ஏற்கனவே கடந்த காலத்துல நடந்தது போல ஃபீல் ஆகும்” எனப் பவானி அந்தத் தேஜாவூக்கான விளக்கத்தைக் கூற,
“ஆமா அதே போல எனக்கு நித்திப்பா தாலி கட்டும் போது ஃபீல் ஆச்சு பவா. இது போல ஏற்கனவே எனக்கு முன் ஜென்மத்துல நடந்த மாதிரி ஒரு உணர்வு வந்துச்சு பவா! நான் நித்திப்பாவ பார்த்த பிறகு எனக்குக் கனவே வரலை பாரு! அப்ப எனக்கு நித்திப்பாவை பத்தி உணர்த்த கடவுள் செஞ்ச வழி தானே அந்தக் கனவு. இது எங்களோட முன் ஜென்ம பந்தம் தான்டி” மனதால் இந்த உறவை உணர்ந்து நிவாசினி கூற,
“ஹ்ம்ம் உனக்கு முத்தி போச்சுடி! இப்படிலாம் வெளில சொல்லிட்டு இருக்காதடி! உன்னைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்க” கவலையாய் பவானி கூற,
“நித்திப்பாகிட்ட இப்ப சொல்ல மாட்டேன்! பயப்படாத” என அவள் கூறவும்,
“இப்ப இல்லனா அப்புறம் எப்ப சொல்லலாம்னு நினைச்சிருக்க? எப்பவுமே நீ சொல்ல கூடாது” பவானி அவளிடம் திட்டவட்டமாய்க் கூற,
“அதெல்லாம் முடியாது பவா! நித்திப்பாகிட்ட நானே நினைச்சாலும் என்னால எதையும் மறைக்க முடியாது. உனக்காக இப்ப எடுத்ததும் இதைப் பத்தி சொல்லலை சரியா” என அவள் கைப்பற்றிக் கெஞ்சியவாறு அவள் கூற,
“ஹ்ம்ம் இனி உன் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்னு ஆசைபடுறேன் ஹாசினி! அந்த முருகன் உனக்கு என்னிக்கும் துணை இருக்கட்டும்” என நிவாசினிக்காக முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்தாள் பவானி.
மகன் திருமணத்திற்குச் சம்மதித்தால் போதுமெனக் காத்திருந்த நித்திலனின் தாய் தந்தையருக்கு, அவன் திருமணத்திற்கான சம்மதத்துடன் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் கூறி விரைவாய் திருமணத்தை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அவர்களின் ஒப்புதலை வேண்டி நின்ற போது மறுப்பதற்கு மனம் வரவில்லை அவர்களுக்கு.
பவானியின் திருமணத்திற்கு முன்னதாகவே இவர்களின் திருமணம் நிகழ வேண்டுமெனத் தீர்க்கமாய் இருந்தான் நித்திலன். ஏனெனில் ஒரு நாளேனும் இவள் அந்தப் பிஜியில் தனித்திருந்திட கூடாதென எண்ணினான். ஆகையால் அவர்களின் திருமணத் தேதிக்கு முன்னதாகவே ஒரு முகூர்த்த நாளை பார்க்குமாறு அவனின் பெற்றோரிடம் உரைத்திருந்தான்.
பொதுவாய் பெண்ணின் இல்லத்தில் தான் திருமண வைபவம் நிகழும் என்பதால் நிவாசினியின் மனங்கவர்ந்த கடவுளான இந்த முருகப்பெருமானின் ஆலயத்திலேயே திருமணம் வைத்து கொள்ளலாமென முடிவு செய்தனர்.
நித்திலனின் பெற்றோர் அவர்களின் சொந்த ஊரான தேனியில் வசித்திருக்க, நித்திலன் சென்னையில் இருந்த அவனது அண்ணன் அண்ணியின் இல்லத்தில் வசித்திருந்தான். அவர்கள் இருந்தது சொந்த வீடு என்பதால் முதல் தளத்தில் தான் நித்திலன் தங்கியிருந்தான்.
தற்போது பவானியின் திருமணம் வரை அந்த இல்லத்தில் தங்கிவிட்டு, அதன் பிறகு இரு வாரங்கள் தேனிலவு செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தான் நித்திலன்.
கோவிலில் இருந்து அனைவரும் அவனது அண்ணன் அண்ணியின் இல்லத்திற்குச் சென்று மணமக்களுக்குப் பாலும் பழமும் கொடுத்தனர். திருமணப் பரிசுகளைப் பார்வையிட்டவாறு, வந்திருந்த நண்பர்களிடம் பேசியபடி என அந்நாள் விரைவாய் நகர அவர்களுக்கான அந்த இரவும் விரைவாய் வந்தது.
நித்திலன் இந்தச் சடங்கிற்கான எந்தப் பிரத்யேக ஏற்பாடும் செய்ய வேண்டாமென அவனது வீட்டினரிடம் கூறிவிட்டான்.
ஆயினும் அவனது அண்ணனும் தந்தையும் அவனது அறையினை அலங்கரித்துக் கொண்டிருக்க, அவனது அண்ணியும் அன்னையும் அவளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தனர்.
நித்தலனின் குடும்பத்தில் அனைவரும் அவளிடம் வெகு இயல்பாய் பழகினர். அந்நிய பெண்ணாய் எண்ணாமல் தங்களது குடும்பத்து பெண்ணாய் பாவித்து அவர்களது குடும்ப கதைகள், நித்திலன் நிரஞ்சன் வளர்ந்து வந்த கதைகள் என அனைத்தையும் கூறி கொண்டிருந்தார் அவனது தாய்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து இரவுணவு உண்ட பின்னர், அவளை அவனது அறைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாசினி முதலில் வெகு இயல்பாய் தான் இருந்தாள். ஆனால் இந்நேரம் ஏனோ ஒரு வித பதட்டம் அவளுள் தோன்றி இம்சித்தது.
அவன் மெத்தையில் அமர்ந்து தனது கைபேசியில் எதையோ நோண்டியிருக்க, இவள் பதட்டமான முகத்துடன் குனிந்த தலை நிமிராது அடி மேல் அடியெடுத்து வைத்து அவ்வறையினுள் செல்ல, அவளின் நிலை கண்டு சிரித்தவன்,
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு
அவள் வந்தாள்
வாய் திறந்து பாடினான்.
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்.
பாடியபடியே தன்னை நோக்கி வந்தவளின் அருகில் சென்று நின்றான்.
அவளின் கைப்பற்றிக் கன்னத்தில் முத்தமிட்டு,
அது கூடாதென்றாள்
மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்
அது போதாதென்றாள்,
போதாதென்றாள்…
ஹா ஹா ஹா வென வாய்விட்டுச் சிரித்தான்.
அவனின் முத்தத்திலும் சிரிப்பிலும் முகம் கனிந்து சிவக்க, அவன் மார்பினில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அணைத்தவன் தொடர்ந்து பாடினான்,
அனுபவம் புதுமை
அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப்
புண்ணான கண்னங்களே
ல லா ல ல லா ல லா லா என விசில் அடித்தான்.
அவனின் விசில் சத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள், “செம்மயா பாடுறீங்கப்பா” என்றாள்.
அதற்கும் சிரித்தவன், “இப்ப ரிலாக்ஸ் ஆகிட்டியா?” எனக் கேட்டான்.
தன் முகம் பார்த்தே தனது நிலையை உணரும் கணவனின் கவனிப்பில் அன்பில் நெகிழ்ந்து போனவள், அவன் கன்னம் பற்றி முத்தமிட்டு, “இப்படி முத்தம் கொடுக்கிற அளவுக்கு ரிலாக்ஸ் ஆகிட்டேன்” என்றாள்.
மென்மையாய் சிரித்தவன் மெத்தையில் படுத்துக் கொண்டு அவளது முகத்தை தனது மார்பினில் வைத்து அணைத்து கொள்ள, அவளும் அவனுடன் வாகாய் படுத்தவள் உடனே உறங்கி போனாள்.
அவளின் தலையை வருடியவாறு வருங்காலத்தைப் பற்றிய பலவிதமான எண்ணச்சுழற்சியில் இருந்தவன் அப்படியே உறங்கி போனான்.
இரு நாட்களுக்குப் பிறகு திருச்சியில் நடந்த பவானி அபிநந்தனின் திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களின் திட்டப்படி தேனிலவுக்காக மாஞ்சோலைக்குச் செல்ல தயாராகினர்.
— தொடரும்