என் நித்திய சுவாசம் நீ – 7

நிவாசினிக்காக பவானி மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த அறையை விட்டு வெளிவந்து பார்க்கும் போது, வரவேற்பறையில் நிவாசினி இல்லை.

அவள் அங்குத் தான் அமர்ந்திருப்பாளென எண்ணியே சற்று நேரம் மருத்துவரிடம் பேசி விட்டு வெளி வந்தாள் பவானி.

இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்க, அதன் சாவி பவானியிடம் இருக்க, இவள் எங்கு எவ்வாறு சென்றாள் என்ற மனதின் கேள்வியும் பதைபதைப்புமாய் நிவாசினியின் கைபேசிக்கு பவானி அழைப்பு விடுக்க, அது எடுக்கபடாமலேயே துண்டிக்கபட்டதாகச் செய்தி வந்தது.

அவசரமாய் வண்டியை கிளப்பிக் கொண்டு அவர்களது பிஜிக்கு சென்று பார்க்க, அங்கே தான் ருத்ரமுகமாய் அமர்ந்திருந்தாள் நிவாசினி.

“அறிவிருக்காடி உனக்கு? உன்னைக் காணோம்னு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இப்படித் தான் சொல்லாம கொள்ளாம வருவியா? போன் பண்ணா எடுக்க மாட்டியா? அந்த டாக்டர் எவ்ளோ பெரிய மனுஷன் இப்படித் தான் மரியாதை இல்லாம பாதிலயே எழுந்து வருவியா?” அவளைத் தேடி மனது துடிக்கப் பயத்தில் வந்திருந்த பவானிக்கு அவளைக் கண்டதும் ஆசுவாசத்திற்குப் பதில் பெரும் கோபமே எழ, ஆங்காரமாய் இவ்வாறு அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர் பேசினது மட்டும் சரியா பவா, “என்னமோ நான் காதல் செய்ய ஆளில்லாம ஏங்கிட்டு இருந்த மாதிரில அவர் சொல்றாரு! என் காதலை கொச்சைபடுத்துற மாதிரி இருக்கு” என்று நிவாசினி கூறிய நொடி,

“என்னடி பெரிய்ய்ய்யக் காதலு… எனக்கு வர்ற கோபதுக்கு உன்னை” என அவளின் கழுத்தை நெரிப்பது போல் சென்ற பவானி, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை முழுவதுமாய் பருகி கொண்டு சற்று அமைதி காத்தாள்.

பவானியின் இச்செய்கையில் மிரண்டு போன விழியோடு அவளைப் பார்த்திருந்தாள் நிவாசினி.

தன்னைச் சற்றாய் சமன் செய்தவள், நிவாசினியை நோக்கியவாறு கட்டிலில் அமர்ந்து, “இங்க பாரு நிவாஸூ, கனவுல பார்த்த பையனை காதலிக்கிறன்றதே இங்க நிஜ வாழ்வுக்கு ஒத்துவராத ஒன்னு. இதுல அதை காவிய காதல் அளவுக்குப் பேசிட்டு இருக்கியேடி” இந்தக் காதல் நிஜ வாழ்வுக்கு ஒத்து வராது என்ற நிதர்சனத்தை நிவாசினிக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு பவானி பேசிக் கொண்டிருக்க,

“அது பவா.. நித்திலனை.. நான் நித்திலனை” எனத் திக்கி திணறி, அன்று முருகன் கோவிலில் நித்திலனை பார்த்ததிலிருந்து தற்போது அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாட்ஸ்சப் உரையாடல்கள் வரை நிவாசினி பவானியிடம் தயங்கியவாறே கூற,

இதைக் கேள்வியுற்ற பவானியின் வதனம் பயம் கலந்த பீதியில் உறைந்து கிடந்தது.

“அறிவிருக்காடி உனக்கு! படிச்சவ தான நீ! அவன் யாரு எவரு? உன்னைப் பத்தி அவனுக்கு எப்படித் தெரியும்? உன் கனவு பத்தி எதுவும் தெரியாம தான் உன்னைக் காதலிக்கிறேனு சொன்னானா? உனக்கு யாருமில்லைனு தெரிஞ்சு உனக்கிருக்கச் சொத்தை அபகரிக்க இப்படித் திட்டம் போட்டிருக்கானா? இப்படி எதையும் யோசிக்காம காதலிக்கிறேனு கிறுக்கி மாதிரி அவன்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கியே” எனத் தலையில் அடித்துக் கொண்டாள் பவானி.

“இல்லடி அவர் நல்லவர் தான். எனக்குத் தெரியும்! என் மனசோட உணர்வு பொய் சொல்ற மாதிரி தெரியலை. அவர் மேல பாசம் பொங்குது! இது ஏதோ முன் ஜென்மம் பந்தமா தான் இருக்கும்” நிவாசினி முடிக்கும் முன்னேயே,

“அடியேய், இனி எப்பவாவது முன் ஜென்மம் அது இதுனு பினாத்திட்டு இருந்த… வகுந்துடுவேன் உன்னை” அவளை அடிக்கக் கை ஓங்கியிருந்தாள் பவானி.

பவானியின் நெஞ்சம் முழுவதும் நிவாசினி ஏதோ ஒரு சுழலில் தானே சென்று மாட்டிக் கொள்வது போல் தோன்ற, அதிலிருந்து அவளை எவ்வாறேனும் காக்க வேண்டுமென்ற எண்ணமே முன்னிற்க துடித்துக் கொண்டிருந்தது.

“நித்திலன் உன்னை ஏமாத்த மாட்டாருனு என்ன நிச்சயம்? எதை வச்சி அவரை இப்படி நம்பிட்டு இருக்க நீ” பவானி இவ்வாறு கேட்கவும்,

“அதெப்படி நீ அவரை ஏமாத்துகாரர்னு சொல்லலாம். அப்படிலாம் அவர் செய்ய மாட்டாரு” எனக் கத்தினாள் நிவாசினி.

“அதெப்படி காதல் வந்தா மட்டும் எல்லாரும் ஒரே மாதிரி லூசாகிடுறீங்க!” என்று பவானி கூறவும்,

“நீயும் அபி அண்ணாவை லவ் பண்ணி தான் மேரேஜ் செய்துக்கப் போறேன்றதை மறந்துடாத பவா” என்றாள் நிவாசினி.

“அதனால தான்டி சொல்றேன். அந்த அனுபவத்துல தான் சொல்றேன். காதல் பொல்லாதது ஹாசினிமா! அது கத்தி மேல நடக்குற மாதிரி! அது தர்ற மாதிரி சுகமும் இல்லை. அது மாதிரியான நரக வேதனையும் இல்லை! காதல் நம்ம மனசுல துளிர்க்கிற நேரம் நம்ம காதலிக்கிறவரை தவிர வேறு யாரு பேச்சையும் காது கொடுத்து கேட்க விடாது.

மனசு முழுசா அவர் மேல மட்டுமே பைத்தியமாகி கிடக்கும். அம்மா அப்பா சொந்த பந்தம்னு யார் பேச்சையும் காது கொடுத்து கேட்காது, என் காதலும் காதலிக்கிறவரும் தான் பெரிசுனு பேச வைக்கும். அந்த உணர்வுகளுக்குள் சிக்கி ஆட்படாம அந்த எமோஷனை பக்குவமா எதார்த்தமா ஹேண்டில் செய்யத் தெரிஞ்சவங்க மட்டும் தான்டி யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லாம தங்களோட காதலை கல்யாணமா மாத்த தெரிஞ்சவங்களா இருப்பாங்க”

“நீ ரொம்ப உணர்ச்சிவசப்படுற ஹாசினிமா. உன்னோட உணர்வுகளைத் தள்ளி வச்சிட்டு நான் சொல்றதை யோசிச்சு பாரு. நித்திலனை நான் தப்பானவருனு சொல்லவேயில்லை. ஆனா தப்பானவரா இருந்துட்டா உனக்குத் தானே கஷ்டம். அதனால முதல்லயே எல்லாத்தையும் விசாரிச்ச பிறகு நல்லதா இருந்தா மட்டுமே இந்தக் காதலை நீ ஏத்துக்கிட்டு இருந்திருக்கனும்” நிவாசினியின் கரம் பற்றித் தலை கோதி ஆதூரமாய்ப் பவானி உரைத்துக்கொண்டிருக்க, சற்றாய் சிந்திக்க ஆரம்பித்தாள் நிவாசினி.

அதன் பின் நிவாசினியும் அவளுமாய் மதிய உணவு உண்ண பிறகு இருவருமாய் அவரவர் சிந்தினையுடன் படுக்கையில் படுத்து கிடந்தனர்.

பவானி நந்தனிடம், நித்திலனை பற்றி விசாரிக்கச் சொன்னது என்னவாயிற்று எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்க,

இங்கு நிவாசினிக்கோ, நித்திலன் கெட்டவனாய் இருப்பானோ என்கின்ற சிறு எண்ணமுமே அவள் மனதினை சற்றும் அண்டாது, அவ்வாறு அவனை அவளால் சிந்திக்கவும் இயலாது இருக்க, ஆயினும் பவானி கூறியதும் நிதர்சனமல்லவா? கெட்டவனாய் இருந்து என்னை வைத்து ஏதேனும் திட்டம் வகுத்திருந்தால் என நான் யோசிக்கத் தான் வேண்டுமே என்ற இவ்வெண்ணமே ரணமாய் வலிக்க, மனமும் மூளையும் இதற்கிடையில் அல்லாடிக் கொண்டிருக்கையில் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றாள்.

பத்து நிமிடம் கழித்து நிவாசினியை அழைத்த பவானிக்கு அவளிடத்திலிருந்து எந்தப் பதிலும் கிட்டாது போக, நிவாசினியின் அருகில் வந்து அவளின் தலை கோதி கவலையாய் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவானி.

இது நிவாசினியின் வழக்கம் தான். மனம் முழுவதும் துயரம் நிரம்பியிருக்கும் நேரம் இவ்வாறு தானாய் உறக்கத்திற்குள் சென்று விடுவாள் நிவாசினி. அவளின் தாத்தா இறந்த பிறகு இங்கு வந்தவள் தொடர்ந்து மூன்று நாட்கள் உறக்கத்தில் மட்டுமே தான் இருந்தாள். பவானி தான் அச்சமயம் மருத்துவரை எல்லாம் அழைத்து வந்து பார்த்தாள். அதிலிருந்து இன்று வரை எப்பொழுதெல்லாம் மிகுதியான துயரத்தை அவளின் மனம் உணர்கிறதோ அப்பொழுதெல்லாம் இவ்வாறு தன்னை மீறி அவள் உறங்குவதைக் கவனித்திருந்தாள் பவானி.

பவானியுடன் கல்லூரியில் பயின்ற நாட்களிலெல்லாம் அவள் இவ்வாறு இருந்ததில்லை. அப்பொழுதெல்லாம் அவளுக்குக் கவலை என்ற ஒன்றே இருந்ததில்லை என்பதைப் பவானியின் மூளை உணர்த்த, நிவாசினியின் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளை எல்லாம் நினைத்து அவளுக்காக இவளின் மனம் கவலை கொள்ளப் பெருமூச்செறிந்தாள் பவானி.

அன்றிரவும் முழிக்காது தொடர்ந்து உறங்கிய நிவாசினியை எழுப்புவதற்காக, பவானி அவளை உலுக்க, லேசாய் நெளிந்தாலும் முழித்தாளில்லை.

அந்நேரம் நந்தினிடமிருந்து பவானிக்கு அழைப்பு வர அவனிடம் பேச சென்று விட்டாள்.

மறுநாள் காலை ஏழு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த பவானியை அவளின் கைபேசி ஒலித்து எழுப்பியது. அதன் சத்தத்தில் விழித்தவள் யார் எவரெனப் பாராது, அழைப்பினை ஏற்றுக் காதில் வைக்க,

“ஹை பவானி! நான் நித்திலன் பேசுறேன்” என மறுபக்கம் வந்த குரலில் அதிர்ந்து, உறக்கம் முழுவதுமாய்க் கலைந்து எழுந்து அமர்ந்தாள் பவானி.

“நேத்திலிருந்து கால் பண்றேன் ஹனிமாக்கு! அவ ஃபோனே எடுக்கலை. அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே! உடம்பு நல்லா தானே இருக்கு?” வெகுவான பதட்டத்துடனும் பெரும் கவலையுடனும் ஒலித்தது அவனின் குரல்.

‘என்னது ஃபோன் எடுக்கலையா? அவ ஃபோன் எங்க?’ என யோசித்த வண்ணம் நிவாசினியின் கைபேசியினைத் தேடி எடுத்த பவானி, அது சைலன்ட் மோடில் போடப்பட்டிருந்ததைக் கண்டாள்.

‘அந்த டாக்டர் ரூம்க்குள்ள போனப்ப சைலண்ட்ல போட்டதை எடுக்கவேயில்லையா இவ? அதான் நான் ஃபோன் செஞ்சப்பவும் எடுக்கலையா?’ என மைண்ட்வாய்ஸில் பேசிக் கொண்டிருந்த பவானியை கலைத்தது மறுமனையிலிருந்து வந்த அந்தப் பதட்டமான குரல்.

“என்னங்க எதுவும் பிரச்சனையா ஹனிக்கு? ஏன் எதுவும் சொல்லமாட்டேங்கிறீங்க? நான் கீழே தாங்க இருக்கேன். எதுனாலும் சொல்லுங்க. நேத்துலருந்து அவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு தவிச்சி போய் இருக்கேன்” வெகு பதட்டமாய் நித்திலன் பேசவும்,

அவனது இந்தப் பதட்டம் நிவாசினியின் மீதான அவனின் காதலினை அப்பட்டமாய்க் காண்பிக்க, நித்திலனின் காதல் சற்றாய் புரிய ஆரம்பித்தது பவானிக்கு.

அவனைச் சமன்படுத்தும் பொருட்டு, “அவ நல்லா இருக்கா… நல்லா கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருக்கா?” பவானி கூறிய நொடி,

“என்னது தூங்குறாளா? அவ மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நேத்து நடந்துச்சா என்ன?” இதையும் அதே பதட்டத்துடன் அவன் கேட்டிருக்க,

‘அவளோட இந்தத் தூக்கம் பத்தி இவருக்கு எப்படித் தெரியும்?’ என எண்ணிய பவானி, “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும். எங்க இருக்கீங்க?” எனக் கேட்டாள் பவானி.

அவர்களின் பிஜிக்கு கீழே தான் அவன் நிற்பதாய் உரைக்க, அந்தப் பிஜியின் வரவேற்பறைக்கு அவனை வருமாறு உரைத்தவள் அவனைக் காண கிளம்பி சென்றாள்.

அந்தப் பிஜியில் உறவினர்கள் வந்தால் அமர்ந்து பேசவெனத் தோட்டம் போன்றதொரு இடத்தினை அதன் உரிமையாளர்கள் கட்டியிருக்க, அங்கிருந்த சிமெண்ட் மேஜையில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் பவானியும்.

முழு இரவும் உறங்கவில்லை எனப் பறைசாற்றும் சிவந்த கண்களும், நிவாசினிக்காய் கவலைபட்டுச் சோர்ந்திருந்த முகமாகத் தான் நித்திலனை கண்டாள் பவானி.

“உங்ககிட்ட சில விஷயங்களைக் கேட்கனும் அண்ணா!” எனப் பேச்சை பவானி துவங்க,

“உங்க நந்தன் என்னைய பத்தி விசாரிச்சு சொன்ன பிறகும் என் மேல நம்பிக்கை வரலையாமா?” என நித்திலன் கேட்டதில் அதிர்ச்சிக்குள்ளானாள் பவானி.

“இது எப்படி எனக்குத் தெரியும்னு ஷாக்கா இருக்காமா?” என்றவன்,

“எனக்கு நிவாசினியை ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த மால்ல உங்களைப் பார்த்த பிறகு நானே உங்களை நேர்ல பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல ஆளு வச்சி நீங்க என்னைய பத்தி விசாரிச்சிட்டு இருக்கிறது தெரிய வந்தது. நீங்க என்னைய பத்தி விசாரிக்க அனுப்பின ஆளுங்க நேரடியா விஜய்கிட்டயே என்னைய பத்தி விசாரிச்சிருக்காங்க” என்றதும்,

‘ஓ அன்னிக்கு மால்ல இவர் கூட இருந்த ஃப்ரண்ட் பேரு தானே விஜய்’ எனத் தனது நினைவுகளை மீட்டெடுத்து யோசித்தவள் அவன் கூறுவதைக் கவனிக்கலானாள்.

“நீங்க என்னைய பத்தி விசாரிக்கிறதுக்கு முன்னாடியே நிவாசினியை பத்தி நான் முழுசா தெரிஞ்சிக்கிட்டேன். அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கனும்ன்றது என்னிக்கோ நான் முடிவு செஞ்சது. எப்படி நிவாசினிகிட்ட இதைச் சொல்றதுனு நான் யோசிச்சிட்டு இருந்தப்ப நீங்களே என்னைப் பத்தி விசாரிக்கவும் ஹாசினிக்கு என்னைய பிடிச்சிருக்குனு புரிஞ்சிது. அந்தத் தைரியத்துல தான் அன்னிக்கு நான் முருகன் கோவில்ல அவகிட்ட என் காதலை சொன்னேன். எனக்கு என்னிக்குமே ஹாசினி வேற நான் வேறனுலாம் தோணினது இல்லங்க. அவ எனக்கு உயிர் அவ்ளோ தான்” எனக் கூறி சற்று இடைவெளி விட்டவன்,

“இப்ப என்னைய பத்தின சந்தேகங்களெல்லாம் உங்களுக்குப் போய்டுச்சா?” எனக் கேட்டான்.

ஆஆஆஆ என வாயை பிளக்காத குறையாய் அவனை அதிர்ந்து நோக்கியிருந்தாள் பவானி.

முந்தைய நாள் இரவு பவானியை அழைத்த அபிநந்தன், நித்திலன் பற்றி அவர்கள் விசாரித்த விஷயங்களை உரைக்க, அதன் பிறகே சற்று ஆசுவாசமானாள் பவானி. அது வரை நிவாசினியின் எதிர்காலம் குறித்து வெகுவாய் கவலையுற்றிருந்தாள் அவள்.

நந்தன் நித்திலனை பற்றிக் கூறியது அனைத்துமே நேர்மறையாகவே இருக்க, நித்திலனுக்கு நிவாசினியை கட்டி கொடுப்பதில் பவானிக்கு இருந்த மனத்தடைகள் எல்லாம் நீங்கியிருந்தது.

இதைப் பற்றிப் பேச தான் நித்திலனை பார்க்க வந்தாள். ஆனால் நித்திலனே அனைத்தையும் விளக்கமாய்க் கூறி இவளின் சந்தேகம் தீர்ந்ததா எனக் கேட்கவும், ‘இவருக்கு இது எப்படித் தெரிந்தது’ எனத் தான் கேட்க தோன்றியது அவளுக்கு. ‘நிவாசினியின் தூக்கம் பற்றியும் அவனுக்கு எப்படித் தெரியும்’ என மனதில் எண்ணியதை அவனிடம் கேள்வியாய் அவள் கேட்டிருக்க,

“கட்டிக்கப் போறவளை பத்தி இந்தளவுக்குக் கூடத் தெரிஞ்சி வச்சிக்கலைனா அப்புறம் நான் காதலிக்கிறேனு சொல்றதுல அர்த்தமே இல்லங்க. நம்ம காலதலிக்கிறவங்க நிறைகளை விடக் குறைகளைக் கஷ்டங்களைத் தான்ங்க நம்ம தெரிஞ்சி வச்சிருக்கனும். அப்ப தான் அதை அவங்க கடந்து வர நாம பலமா துணையா இருக்க முடியும்”

அவனின் இந்த வாக்கியத்தில் பவானி மொத்தமாய் வீழ்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். இவனை விட வேறொரு நல்ல கணவன் நிவாசினிக்கு கிடைக்க மாட்டானென முடிவே செய்து விட்டாள்.

அவனிடம் எதுவும் கூறாது எழுந்தவள், “இருங்க நிவாசினியை அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறி அங்கிருந்து அகல, “பவானி” என அழைத்த நித்திலன், “உங்ககிட்ட ஒரு சாரி சொல்லனும்” என்றான்.

“சாரியா? எதுக்கு அண்ணா?” எனப் புரியாது அவள் கேட்க,

“உன்னைய முதல்ல தவறா புரிஞ்சிக்கிட்டேன்” சாரி என்பதைக் கண்ணில் தாங்கி தயங்கியே அவன் கூற,

வாய்விட்டு சிரித்தவள், “அப்படிப் பார்த்தா நானும் தான் உங்களைத் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். ஹாசினியை கல்யாணம் செஞ்சி அவளோட சொத்தை புடுங்க ப்ளான் செய்றீங்களோனு நினைச்சேன். ஆனா உங்களோட சொத்தே ஹாசினியோடது விடப் பல மடங்கு அதிகம்னு நேத்து நந்தன் சொல்லி தெரிஞ்சிக்கிட்டேன். ஹாசினியை நீங்க கல்யாணம் செஞ்சிக்கிறதுல உங்களுக்குக் காதலை தவிர வேறெந்த காரணமும் இருக்க வாய்ப்பே இல்லைன்றதை தெளிவா தெரிச்சிக்கிட்ட பிறகு தான் உங்களை லேசா நம்பத் தோணுச்சு. அதுவரை உங்களைச் சந்தேக லிஸ்ட்ல தான் வச்சிருந்தேன். புதுசா பார்த்துப் பழகுறவங்களைச் சந்தேகபடுறது தப்பில்லைணா. சட்டுனு நம்புறது தான் தப்பு. ஆமா நீங்க என்னனு என்னைய தப்பா நினைச்சீங்க” அவள் கேட்கவும்,

“ஹனிமா அன்னிக்கு என் வாழக்கைல எனக்குனு யாருமில்லைனு என் கைபிடிச்சி கதறி அழவும், நீங்க அவளை ஒழுங்க கவனிச்சிக்காம தனிமைல விட்டுட்டீங்களோனு தப்பா நினைச்சிட்டேன். ஆனா நான் நினைச்சது தப்புனு இப்ப கன்னத்துல அறைஞ்சு சொன்னா மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு. வெரி சாரிமா” உணர்ந்து அவன் கூற,

“பரவாயில்லை அண்ணா! இதுக்கு எதுக்குச் சாரிலாம் கேட்குறீங்க. ஹாசினி அப்படிச் சொன்னதுல தப்பில்லைணா. நம்மளை சுத்தி அம்மா அப்பா சொந்த பந்தம்னு எல்லாரும் இருக்கும்போதே நமக்குனு நம்மளை காதலிச்சு உயிரா நேசிக்கிற நமக்கான ஒரு சொந்தம் வேணும்னு மனசு தவிக்கும் தானே! இதுல இவளுக்கு இப்படி யாருமே இல்லாத நிலையில, நானுமே கல்யாணம் முடிஞ்சி போனதும் ஃப்ரண்ட்ன்ற நானுமே அந்நியமா தானே அவளுக்குப் போய்டுவேன். அப்படி இருக்கையிலே உங்களை மட்டும் தாண்ணா அவளுக்குத் தனக்கானவனா, தனக்குரியவனா யோசிக்கத் தோணும். அதைத் தான் அவ அப்படிச் சொல்லிருக்கா… இப்ப இவளை பத்தி இவ்ளோ யோசிக்கிற நானுமே, கல்யாணம் முடிஞ்ச பிறகு நந்தனை பத்தி மட்டும் தான் அண்ணா யோசிப்பேன். அதை மட்டும் தான் யோசிக்கவும் முடியும். அந்தச் சூழல் நம்மளை அப்படி உள்ள இழுத்துக்கும். அதனால் தான் அதுக்கு முன்னாடியே இவளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வச்சிடனும்னு நினைச்சேன்” தன்னிலை விளக்கத்தை அவள் கூற,

“உங்களை மாதிரி ஒருத்தங்க ஃப்ரண்ட்டா கிடைச்சதுக்கு ஹனிமா கொடுத்து வச்சருக்கனும்” மனம் நெகிழ்ந்து கூறிய நித்திலன், நிவாசினாக்காக அவன் எடுத்து வைத்திருந்த சில முடிவுகளைக் கூற அகமகிழ்ந்து போனாள் பவானி.

“நிவாசினியோட அப்பா அம்மா அவளை ரொம்பவே குழந்தைதனமா வளர்த்துட்டாங்க. அவ பேச்சை மீறி அவங்க வீட்டுல யாரும் நடக்க மாட்டாங்க. அவ கேட்டதெல்லாம் அவளுக்கு வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா நீதி, நேர்மை, நியாயம், தர்மம்னு அதை மீறியும் நடக்காத குடும்பம் தான். சுத்தியுள்ளவங்கலாம் அவளைக் குழந்தை போலவே பாவிச்சி வளர்த்ததுல இருப்பத்தி ஆறு வயசானாலும் கொஞ்சம் சின்னபிள்ளதனமா தான் நடந்துப்பா. கொஞ்சம் அடம் பிடிப்பா… அதை நீங்க தான் பொறுத்துக்கனும்” தன் தோழியின் நலனுக்காய் அவள் பேச,

“என் ஹனிமாவை அவளோட அப்பா அம்மா பார்த்துக்கிட்ட அளவுக்குச் சந்தோஷமா வச்சி நான் பார்த்துப்பேன். நீங்க கவலையேபடாதீங்க” பவானிக்கு வாக்களிப்பது போல் அவன் கூறவும் நிம்மதியுற்றாள் பவானி.

அதன்பின் அறைக்குச் சென்று நிவாசினியை உலுக்கி தண்ணீர் தெளித்துப் போராடி ஒரு வழியாய் எழுப்பியிருந்தாள் பவானி.

‘நான் எங்கிருக்கிறேன்’ என்ற பாவனையிலேயே முழித்த நிவாசினி, நிகழுலகிற்கு வந்து முந்தைய நாள் நிகழ்வுகளை நினைவுடுக்கிலிருந்து தூசி தட்டி எடுத்த சமயம், “உன்னைப் பார்க்க உன் நித்திப்பா வந்திருக்கார். கீழே கார்டன்ல தான் இருக்காரு. போய்ப் பாரு ஹாசினி” எனப் பவானி கூறியதும்,

நித்திலன் இவளை தேடி வந்ததில் சந்தோஷமும், அதுவும் நேத்து அவ்வளவு பேசி விட்டு இன்று இவளே நித்திலனை காண அனுமதி வழங்குகிறாளென்றால், நித்திலனின் மீது பவானிக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்! அதில் துள்ளி குதித்து எழுந்தவள் பவானியை கட்டியணைத்து முத்தமிட்டு தன் மகிழ்வை வெளிபடுத்தியவள், குளியலறை சென்று ரிஃப்ரஷ்ஷாகி நித்திலனை காண ஓடோடி சென்றாள்.

அவளின் சந்தோஷம் நித்திலனிடம் தான் உறைந்துள்ளதென்பதை அவளின் இந்தத் துள்ளலிலேயே அழகாய் உணர்த்திவிட்டு செல்பவளை மனநிறைவாய் பார்த்திருந்தாள் பவானி.

முகம் கொள்ளா புன்னகையும் பூரிப்புமாய்த் தோட்டத்தை அடைந்த நிவாசினியின் முகம், நித்திலனின் சோர்வான முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் கண்டு பொலிவை இழந்தது.

அவனருகில் சென்று அவன் முகத்தினை வருடியவள், “என்னப்பா என்னாச்சு? ஏன் இவ்ளோ சோர்வா தெரியுறீங்க? கண்ணெல்லாம் ஏன் சிவந்து போய் இருக்கு?” அவனது நலத்தினை அறியயெண்ணி அவளது கண்களும் கைகளும் அவனை ஸ்பரிசித்து அறிய முயல, தனது முகத்தினை வருடும் அவளது கைகளைப் பற்றியவன்,

“ஒன்னுமில்லடா ஹனிமா! நேத்து நம்ம சாய்ந்திரம் மீட் பண்ணலாம்னு சொல்லிருந்தல. நான் ரொம்ப நேரமா வெய்ட் செஞ்சேன். நீ வரவும் இல்ல. ஃபோனும் எடுக்கல. உனக்கு என்னமோ ஏதோனு ரொம்பவே பயந்துட்டேன். இல்ல உனக்கு என்னைய பிடிக்கலையோ அவாய்ட் பண்றியோனுலாம் தோணிட்டு. நைட் முழுக்கத் தூக்கமேயில்ல. அதான் முகம் சோர்ந்திருக்கு வேற ஒன்னுமில்லடா” அவன் கூறவும்,

இரவு முழுவதும் தன்னை எண்ணி எத்தனையாய் தவித்திருப்பான் அவன் என எண்ணியவளின் மனம் அவன் மீது பாகாய் கசிந்துருக, அவனது இரு கைகளையும் பற்றி, “சாரி.. சாரி.. சாரிப்பா” கண்களைச் சுருக்கி பல சாரிக்களைக் கூறி அவனிடம் மன்னிப்பு வேண்டி நின்றாள்.

“ம்ப்ச் பரவாயில்லடா. இதுக்கு எதுக்குச் சாரிலாம் கேட்டுகிட்டு இருக்க. நீ தூங்கிட்டனு பவானி சொன்னாங்க. அதுக்கு நீ என்ன பண்ணுவ” எனப் பேசிக் கொண்டே அவளை அந்த மேஜையில் அமர்த்தி அவள் முன் மண்டியிட்டமர்ந்து,

“உனக்கு ஒன்னுமில்லையே” அவளின் நலனை அறியயெண்ணி இப்போது பரிதவிப்பாய் அவன் கேட்க, அவனின் கைப்பற்றித் தன்னருகில் அமர்ந்து அவனது புஜத்தினைப் பற்றித் தோளில் சாய்ந்து கொண்டவள், “நீங்க என் பக்கத்துல இருக்கும் போது எனக்கு என்னப்பா வந்துட போகுது! நீங்க என் கூட இருந்தாலே போதும் என்னோட துக்கம் எல்லாம் என்னைய விட்டு மறைஞ்சு ஓடி போய்டும்” ஆத்மார்த்தமாய் உரைத்திருந்தவள்,

“நேத்து ரொம்ப நேரம் வெயிட் செஞ்சிட்டு இருந்தீங்களா?” காத்திருக்க வைத்து விட்டோமே என்ற குற்றயுணர்வில் அவன் முகம் நோக்கி அவள் கூற,

“அது நீ தெரிஞ்சி செஞ்சது இல்லயே ஹனிமா! அதுக்காகலாம் நீ ஒன்னும் கில்டி ஃபீல் ஆக வேண்டாம்” அவளை இலகுவாக்கும் பொருட்டுக் கூறியிருந்தவன்,

“என்னைய பத்தி உனக்கு என்ன தெரியும் ஹனி?” எனக் கேட்டான்.

உதட்டை பிதுக்கி எதுவும் தெரியாது எனப் பாவனையாய் தலை ஆட்டியவள், “எதுவும் தெரிஞ்சிக்கவும் விரும்பலைங்க. நீங்க கண்டிப்பா எனக்குத் தீங்கு செய்ய மாட்டீங்கனு மனசார நம்புறேன். நீங்க எதுவும் என்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றாள்.

அவளின் இந்தக் கூற்றில் வாயடைத்து தான் போனான் நித்திலன்.

அவளின் இந்த நம்பிக்கை என்றும் பொய்த்து போகாத வண்ணம் காப்பாற்றும் சக்தியை எனக்குருள்வாய் முருகா என அவசரமாய் அவரிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.

காப்பாற்றுவாரா முருகப் பெருமான் அல்லது அவர்களின் வாழ்வில் விதி வலியது என விளையாடுவாரா என்பதை அவரே அறிவார்.

அவனின் தோளில் அவள் சாய்ந்திருக்க, அவளின் கரத்தினைத் தன்னுடன் கோர்த்துக் கொண்டு அமைதியாய் அவன் அமர்ந்திருக்க, அந்த மோன நிலையை ரசித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

அவன் கிளம்ப வேண்டிய நேரம் வர, “ஹனிமா அடுத்த இரண்டு வாரத்துல நாம கல்யாணம் செஞ்சிக்கலாம். எங்க ஃபேமிலில யாருக்கும் இதுல எந்த அப்ஜெக்ஷனும் கிடையாது!” என ஒரு ஆனந்த அணுகுண்டை அமைதியாய் அவன் தூக்கி போட, மகிழ்ச்சியில் மத்தாப்பாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள் நிவாசினி.

— தொடரும்