என் நித்திய சுவாசம் நீ! – 6

“ஹே நிவாஸூ! அடியேய் நிவாஸூ! எழுந்திரிடி” நிவாசினியை உலுக்கி கொண்டிருந்தாள் பவானி.

“ம்ப்ச் என்னடி லீவ் நாள்ல கூடத் தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு இருக்க” கண்களைத் திறவாது உரைத்து மீண்டுமாய் அவள் உறக்கத்திற்குள் செல்ல,

“மணி எட்டு ஆகுதுடி! நம்ம அங்க பத்து மணிக்கு இருக்கனும். கிளம்புடி” அவளின் முதுகில் தட்டியவாறே பவானி கூற,

“ஹ்ம்ம் அப்படியே தட்டி ஒரு கதை சொல்லு ராம்” பஞ்சதந்திரம் தேவயானி மாடுலேஷனில் கூறிய நிவாசினி சுகமாய் நித்திரைக்குள் செல்ல,

“அடியே நான் என்ன இங்க தாலாட்டா பாடிட்டு இருக்கேன்” பவானி அவளின் கன்னத்தைக் கிள்ளி வைக்க,

ஆஆஆ வென அலறியவாறே எழுந்தமர்ந்தாள் நிவாசினி.

“நாய், பேய், எருமை, பன்னி, பிசாசு, பூதம்” எனக் கோபத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் உரைத்து பவானியை வசைமாறி பொழிந்து முறைத்து கொண்டிருந்தாள்.

“என் செல்ல ஹாசினி தானே நீ! என்னைய படுத்தாம கிளம்புடி” என அவள் தாடை பற்றிப் பவானி கொஞ்சி கெஞ்ச,

அவளின் கொஞ்சலில் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக, கையை உயர்த்திச் சோம்பல் முறித்துத் தனது கைபேசியைப் பார்த்தவாறே, “யாரடி பத்து மணிக்குள்ள பார்க்க போகனும்னு இப்படி அலப்பறை பண்ணிட்டு இருக்க” அவளிடம் கேட்டாள்.

“அதெல்லாம் அங்க போனா உனக்குத் தெரிஞ்சிட போகுது. நீ கிளம்பு முதல்ல” எனக் கூறிக் கொண்டே நிவாசினியை பவானி பார்க்க,

நிவாசினியோ இவள் கூறியதை எதையும் காதில் வாங்காது, கைபேசியைப் பார்த்து முகம் மலர சிரித்தவாறே தட்டச்சுச் செய்து கொண்டிருந்தாள்.

“யாருகிட்டடி இப்படிச் சிரிச்சிட்டே மெசேஜ் செஞ்சிட்டு இருக்க” சற்றாய் அவளின் கைபேசியை எட்டி பார்த்தவாறே பவானி சந்தேகமாய் அவளைக் கேட்க,

சட்டெனக் கைபேசியை அவள் பார்வையிலிருந்து தள்ளி வைத்தவள், “அதெல்லாம் ஒன்னுமில்லை! உனக்குத் தெரியாம நான் என்ன செய்யப் போறேன் பவா! எனக்கு ஒரு டூ டேஸ் டைம் கொடு அதுக்கப்புறம் நானே எல்லாத்தையும் சொல்றேன்” என்றாள் நிவாசினி.

நித்திலனை பற்றிய விவரங்களை முழுவதுமாய் அறிந்த பின்னே பவானியிடம் முந்தைய நாள் நிகழ்வுகளை உரைக்கலாமென எண்ணியிருந்தாள் நிவாசினி.

நித்திலன் தான் தற்போது அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“குட் மார்னிங்! ஹேவ் எ நைஸ் டே ஹனிமா”
“நேத்து நைட் என் ஷோ கேட்டியா ஹனி?”
“உனக்காகப் போட்ட சாங் உனக்குப் பிடிச்சுதா?”
“இன்னிக்கு நம்ம எங்க மீட் பண்ணலாம்?”
“எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்”

எனப் பல கேள்விகளுடன் பல ஹார்ட்டின் ஸ்டிக்கர்களையும் அனுப்பியிருந்தான் நித்திலன்.

அதனைப் பார்த்து தான் மென்னகை புரிந்து கொண்டிருந்தாள் நிவாசினி.

தன் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து காலை வரும் அந்த முதல் குறுஞ்செய்தி, எத்தகைய இனிமையான பரவசத்தை மனதிற்குள் புகுத்துவிக்கும் என நிவாசினி உணர்ந்து கொண்டிருந்த தருணமது.

“ஹ்ம்ம் ஒரு மார்க்கமா தான்டி சுத்திட்டு இருக்க நீ! எந்தப் பேய் பிசாசு பிடிச்சுதோ! உன்னைய கோயிலுக்குக் கூட்டிட்டு போய் வேப்பிலை அடிக்கனும் போலயே” தாடையில் கை வைத்து யோசித்தவாறே பவானி கூற,

அவளின் கூற்றில், “நித்தப்பா ஆவி தான் என்னைய மொத்தமா அவருக்குள்ள சுருட்டி வச்சிருக்கு” என மனதிற்குள் கூறிக் கொண்ட நிவாசினி,

“போடி உனக்கு வேற வேலையில்ல” வெட்கமாய் உரைத்து பவானி தலையில் தட்டிவிட்டு குளியலறைக்குள் நிவாசினி புகுந்து கொள்ள,

“இங்க கல்யாண பொண்ணு நானா அவளா? இப்படி வெட்கபடுறாளே? என்னமோ சரியில்லயே! சீக்கிரமே இந்த நந்தாகிட்ட விசாரிக்கச் சொன்னது என்னாச்சுனு கேட்டு இவளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வச்சா தான் எனக்கு நிம்மதி” மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாள் பவானி.

காலை பத்து மணியளவில் அந்த இல்லத்தின் வரவேற்பறையில் வீற்றிருந்தனர் பவானியும் நிவாசினியும்.

“யாரு வீடுடி இது? எதுக்கு இங்க வந்திருக்கோம்” எனப் பவானியை நச்சரித்துக் கொண்டிருந்தாள் நிவாசினி.

“என்னோட கலீக்கோட ஃப்ரண்ட் வீடு இது! அவங்க அப்பா சைக்காட்ரிஸ்ட்னு சொன்னாரு. அவரைப் பார்க்க தான் இப்ப வந்திருக்கோம்” பவானி கூறிக் கொண்டே போக,

கோபமாய் இருக்கையை விட்டெழுந்த நிவாசினி, “என்னைய பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா உனக்கு?” எனக் கத்தியவள் அங்கிருந்து செல்ல விழைய,

அவளின் கைப்பற்றி இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட பவானி, “அய்யோ என்னடி பெரிய வார்த்தைலாம் பேசுற? சைக்காட்ரிஸ்ட் பார்த்தா பைத்தியம்னு அர்த்தமா? இப்ப இருக்கக் காலகட்டத்துல மனசுல இருக்க ஸ்டெரஸ் டென்ஷன்க்கு கவுன்சிலிங்க்கு வந்து கூட இவங்களைப் பார்க்கலாம். நம்ம மனசுல இருக்க அழற்சியைப் போக்கி தெளிவு தரவங்கடி இவங்க. உன் கனவுனால உன்னோட கல்யாணத்துக்குப் பின்னாலயும் பிரச்சனை வந்துட கூடாதேனு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” போகாதடி எனப் பார்வையால் கெஞ்சியபடியே பவானி கூற,

முகம் முழுவதும் கோபத்தில் சிவந்திருந்தாலும், தன் நலனுக்காகப் பார்த்து செய்யும் தனது தோழியிடம் இக்கோபத்தைக் காண்பிக்க இயலாது அமைதியாய் அமர்ந்து கொண்டாள் நிவாசினி.

“பாரு உனக்காக மட்டும் தான் இப்ப போகாம இருக்கேன். இதைச் செய்யுங்க அதைச் செய்யுங்கனு கவுன்சிலிங் தரேன்னு அவங்க ஏதாவது செய்யச் சொன்னாங்கனா நான் கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேன்” என்றவள் அதன் பிறகு பவானியின் பக்கம் திரும்பவேயில்லை.

அந்த இல்லத்தில் அமைக்கப்பெற்றிருந்த சிகிச்சையகத்தில் இருந்து அந்த மருந்துவர் இவர்களை அழைக்க அறைக்குள் சென்றனர் இருவரும்.

அறுபது வயது மதிக்கத்தக்க முதியவரான கிருஷ்ணன் தான் அங்கு மருத்துவரென அமர்த்திருந்தார்.

என்ன பிரச்னை என அவர் கேட்க, பவானி நிவாசினியின் கனவுகளைப் பற்றிக் கூறினாள்.

“இன்ட்ரஸ்டிங்” எனக் கதை கேட்பது போல் கேட்டு உரைத்தவரை பார்த்து கோபமாய் வந்தது நிவாசினிக்கு.

“என் கனவு இவருக்குக் கதையா தெரியுதா?” என மனதிற்குள் அவரை வறுத்துக் கொண்டிருந்தாள்.

“எப்போதுலருந்து இந்தக் கனவு வருது?” என நிவாசினியிடம் அவர் கேட்க,

அவள் பேசாது முறைப்பாய் அவரைப் பார்க்க, பவானி தான் அதற்குப் பதிலுரைத்தாள்.

நிவாசினியின் பிறந்த இடம், தாய் தந்தை பற்றிய விவரங்கள், வளர்ந்த இடம், அவள் வாழ்வில் நடந்த இன்பமான சோகமான நிகழ்வுகள் என அனைத்தை பற்றியும் அவர் கேள்வி எழுப்ப, பவானி தான் பதில் உரைத்துக் கொண்டிருந்தாள்.

“நிவாசினியோட தாத்தா இறந்து ஏழு எட்டு மாசம் தான் இருக்கும் டாக்டர். அவளோட அப்பா அம்மா ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அவ தாத்தா இறந்த பிறகு தான் என் கூடவே பிஜியிலேயே தங்கியிருக்கா” எனக் கூறினாள் பவானி.

நிவாசினி இந்தச் சிகிச்சைக்கு விருப்பமில்லாமல் தான் வந்திருக்கிறாளென அவளின் அந்தப் பேசாமடந்தை நிலையிலேயே புரிந்து கொண்டார் கிருஷ்ணன்.

ஆயினும் அவர் நிவாசினியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பேச முயற்சிக்க அவள் பிடி கொடுக்கவேயில்லை.

“பேஷன்ட்டோட ஒத்துழைப்பில்லாம எந்த டாக்டராலயும் நோயை குணப்படுத்தவே முடியாதுமா” அவர் கூறவும்,

“நான் ஒன்னும் பேஷன்ட் கிடையாது” முதல் முறையாய் அவர் முன் வாய் திறந்து சத்தமாய்க் கூறியிருந்தாள் நிவாசினி.

“சரி நீ பேஷன்ட் கிடையாது! என்னோட ஃப்ரண்ட்டா இருக்கலாமே!” அவர் கை நீட்டி ஃப்ரண்ட் எனக் கேட்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் இவள்.

இதுவரை இவர் கேட்ட கேள்விகள், இப்படி இயல்பாய் அவரின் வயசையும் மீறி அவளிடம் பழக விழையும் அவரின் அணுகுமுறை என அனைத்தும் ஏனோ அவளுக்கு அவர் தன்னை மனநோயாளியாய் எண்ணி இவ்வாறு நடந்து கொள்கிறார் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. இவை அனைத்துமே பவானி மீது கோபமாய் உருமாறிக் கொண்டிருந்தது.

நிவாசினியின் இந்த ஒத்துழையாமை செயலில் சற்றாய் பெருமூச்செறிந்த கிருஷ்ணனை நோக்கி, கண்களைச் சுருக்கி அவளைத் தவறாய் நினைக்காது பொறுத்துக் கொள்ளுமாறு செய்கை செய்து கொண்டிருந்தாள் பவானி.

“என் எக்ஸ்பீரியன்ஸ்ல இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன். ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் மா” எனக் கூறிய கிருஷ்ணன், பவானிக்காக இந்தக் கனவுகள் நிகழ்வதற்கு உண்டான மருத்துவ ரீதியான மன ரீதியான சாத்திய கூறுகளை விளக்கவாரம்பித்தார்.

“பொதுவா நம்ம முழிச்சிட்டு இருக்கும் போது நம்மளோட எண்ணவலைகள் சிந்தனைகள் எல்லாமே லாஜிக்கலா தான் இருக்கும். நாம தூங்கும் போதும் நம்மளோட brain ஆக்டிவா தான் இருக்கும். ஆனா அப்ப நம்ம ப்ரைன்குள்ள வர்ற சிந்தனைகளுக்குலாம் எந்த லாஜிக்கும் இருக்காது. ஏன்னா தூங்கும் போது ப்ரைன்னோட லாஜிக்கல் பார்ட் விட எமோஷனல் பார்ட் தான் ரொம்ப ஆக்டிவ்வா இருக்கும். நம்ம முழிச்சிட்டு இருக்கிறதை விடத் தூங்கிட்டு இருக்கும் போது தான் ப்ரைனோட எமோஷனல் லெவல் அதிகமா இருக்கும். அந்த எமோஷனல் ரீஜியன்ஸ்(regions) தான் ட்ரீம்ஸ்ஸை(கனவை) ட்ரிக்கர் பண்ணும். சோ நம்ம வாழ்க்கைல நமக்கு நடந்த இன்ப துன்பங்கள், அன்பு, காதல், வெறுப்பு, கோபம், அழுகை இப்படியான உணர்வை நாம வெளிபடுத்தும்படியா அமைந்த நிகழ்வுகள் இதெல்லாம் ஆழ் மனசுல புதைஞ்சி இருக்கிறதை இந்த எமோஷனல் பார்ட் தூங்கும் போது ட்ரிக்கர் பண்ணி கனவா வரவைக்குது.

நம்ம ஆழ்மனசுல இருக்கும் ஏக்கம் ஆசை இதெல்லாமுமே கூட இப்படிக் கனவா வரும்”

அவர் இவ்வாறு கூறவும், “அப்ப நான் காதலுக்காக ஏங்கி போய் இருக்கனால இப்படிக் கனவு வருதுனு சொல்றாரா?” என இதையும் வேறுவிதமாய் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள் நிவாசினி.

“நாம வாழ்க்கைல இதுவரை நேர்ல பார்ககாத மனுஷங்களைக் கனவுல பார்க்க முடியுமா? அது சாத்தியமா?” எனக் கேட்டாள் பவானி.

“என்ன இவ சாத்தியமானு கேட்குறா? அப்ப நான் நித்திப்பாவ பார்த்தேன்னு சொன்னதை இவ நம்பலையா?” கோபத்தினால் நிவாசினியின் பிபி லெவல் எகிறிக்கொண்டிருந்தது.

“கண்டிப்பா சாத்தியமே இல்லை” கிருஷ்ணன் கூறவும்,

நிவாசினியின் கோபம் கரையைக் கடக்க ஆரம்பித்து அவளேதோ பேச வாய் திறக்க, பவானி அவளின் கைகளை அழுத்தி சற்று அமைதியாய் இருக்குமாறு கூறவும், பவானியை முறைத்துக் கொண்டே அமைதியானாள்.

“நம்ம வாழ்க்கையில ஏதோ ஒரு நேரத்துல நம்ம பார்வைக்குத் தூரத்துல, இந்தக் கேமரால அவட் ஆஃப் ஃபோகஸ்னு சொல்றாங்களே… அப்படி அவ்ட் ஆஃப் ஃபோகஸ்லயாவது அவங்களை நம் வாழ்க்கைல எங்கேயாவது பார்த்திருப்போம். அப்படியில்லாம ஒரு உருவத்தைக் கனவுல பார்க்கிறதுன்றது சைன்டிஃபிக்கா சாத்தியமே இல்லாத விஷயம்”

அவர் கூறி முடித்த நொடி, “அதான் நானும் சொல்றேன் டாக்டர். இதை நீங்க சைன்ட்டிஃபிக்கா பார்க்காம உணர்வுபூர்மா பாருங்க. ஆன்மீக சக்தியா பாருங்க. அவருக்கும் எனக்கும் கண்டிப்பா ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு! அவரைத் தான் நான் மேரேஜ் செஞ்சிக்கனும்னு எனக்குப் புரிய வைக்க என் தாத்தாவின் ஆவி செயலா இருக்கலாம். என் முருகனோட அருட்செயலா கூட இது இருக்கலாம்” சற்று ஆவேசமாய் நிவாசினி கூறிக் கொண்டிருக்க,

“உங்க உணர்வை நான் மதிக்கிறேன் மா. ஆனா இந்தக் கனவுக்கான அடி நாதத்தை நாம கண்டறியறதுல தப்பில்லையே! ஹிப்னாட்டிக் தெரபி மூலமா இதை நாம கண்டறிய முடியும்” என்றவர் சொல்லவும்,

“நான் எதுக்கும் தயாரா இல்ல டாக்டர். இது என் காதலை கலங்கபடுத்துற மாதிரி இருக்கு. இது வரைக்கும் இந்தக் கனவு மூலமா எனக்கு எந்தத் தீங்கும் நடக்கலை. அதனால இதுக்கு நான் உடன்படுற ஐடியா இல்லை” எனக் கூறி அவ்வறையை விட்டு சென்றாள் நிவாசினி.

பின்னாளில் அவளே இவரிடம் வந்து இந்த ஹிப்னாடிக் சிகிச்சையைத் தனக்குச் செய்விக்குமாறு கேட்க போகிறாளென அறியாத பேதையவளோ தற்போது தூக்கியெறிந்து பேசி விட்டு சென்று விட்டாள்.

— தொடரும்