என் நித்திய சுவாசம் நீ! – 5

அவள் வழமையாய் செல்லும் அந்த முருகன் கோவிலில் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள் நிவாசினி.

அவள் மனமெங்கிலும் நித்திலனின் உருவமே ஊர்வலம் போக, முருகனில் நிலைக்கொள்ள வேண்டிய மனதை எவ்வளவு இழுத்துப் பிடித்தாலும் அது நித்திலனிடமே சென்று நின்றது.

அவளின் மன அலைபுறுதலில் அவள் நெற்றி சுருங்க கண்களைத் திறக்க, அவளெதிரிலே அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான் நித்திலன்.

“தான் கனவு காண்கிறோமா?” ஒரு நிமிடம் கண்ணைக் கசக்கி திகைப்பாய் பார்த்தவளுக்கு, தன் மனதின் எண்ண அலைகளால் தான் அவனின் உருவம் தனக்குத் தெரிகிறதென எண்ணியவள் தலையை உலுக்கி கொண்டு மீண்டுமாய் கண்களை மூடியவளின் மனமோ தற்போது தான் கண்ட அவனின் உருவத்தை மனக்கண்ணில் காண்பிக்க,

“கனவுல எப்பவுமே அவருக்குத் தலைல சுருளையா அடர்த்தியா முடி இருக்குமே! ஆனா இப்ப பார்த்த உருவத்துல மண்டை லேசா தெரியுற அளவுக்கு முடி குறைவா இருந்துச்சே! ” என்ற எண்ணம் தோன்றிய நொடி,

“அப்ப அவரை நிஜமா நேர்ல தான் பார்த்தோமா?” என அதிர்ந்து மீண்டுமாய்க் கண் திறந்து பார்க்க, அவளையே குறுஞ்சிரிப்புடன் பார்த்திருந்தான் நித்திலன்.

அவனின் தலைமுடியில் ஆரம்பித்து, அவளது கண்கள் அவனது கன்னத்திலிருந்த மச்சத்தினைத் தொட்டு அவன் கைகளிலிருந்த, “நிநி” என்ற டாட்டூவில் நிலைக்கொண்ட சமயம், அவள் காண்பது கனவில்லை, அவனை நேரிலேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என அவளது மூளை தெளிவாய் உரைத்தது அவளுக்கு.

ஆயினும் இது கனவல்ல நிஜமென ஊர்ஜிதம் செய்து கொள்ளத் தனது கைகளைக் கிள்ளி பார்த்தவள், “ஆஆஆ” என வலியில் அலற, “வலிக்குதே அப்ப உண்மை தான்” மனதில் எண்ணிக் கொண்டே அவனை அவள் பார்த்திருக்க, அவளின் இந்தச் செய்கையில் வாய்விட்டுச் சிரித்திருந்தான் நித்திலன்.

அவனின் அச்சிரிப்பை அவள் ரசித்துப் பார்த்திருக்க, “எவ்ளோ நேரமா இப்படியே என்னைச் சைட் அடிக்கிறதா ப்ளான்?” வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி அவன் கேட்க,

அவனின் இக்கேள்வியில் தன்னிலை பெற்றவள், “அச்சோ இப்படியா பார்த்து வைப்ப பக்கி! அவரு என்னைய பத்தி என்ன நினைப்பாரு” கண்ணைச் சுருக்கி தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டு தனது தலையில் அடித்துக் கொண்டே சங்கடமான பார்வையால் அவனை அவள் பார்க்க,

அவளின் அச்சங்கடத்தைப் போக்க எண்ணியவன், “ஓகே ஜஸ்ட் ரிலாக்ஸ். நான் ஒன்னும் உங்களைத் தப்பா நினைக்கலை!” எனக் கூறி அவளை ஆற்றுபடுத்தியவன், “உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு?” அவளின் நலனை அறியயெண்ணி கேட்டான்.

“அன்னிக்கு என்னைய யாரோ தெரியாத ஆளு போலத் தானே பார்த்தீங்க! இப்ப மட்டும் என்ன அக்கறை?” அவளை மீறி வந்திருந்தது இந்த வார்த்தைகள். அவளின் மனது அவனை அவளுக்கு வெகு நெருக்கமானவனாய் உணர்த்தியதினால் வந்த சொற்கள் இவை.

அவளின் இந்த உரிமையான பேச்சில் மகிழ்வுற்றவன், “சாரிங்க! அன்னிக்கு அண்ணன் அண்ணி கூட இருந்தாங்க. அவங்க முன்னாடி நான் எந்தப் பொண்ணுகிட்ட பேசினாலும் உடனே என்னைய அவங்க அந்தப் பொண்ணுக்கு கட்டி வைக்க ப்ளான் பண்ணுவாங்க. பாவம் அவங்களையும் குறை சொல்ல முடியாது. எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கனுமேன்ற கவலை அவங்களுக்கு” எனக் கூற,

“ஏன்? என்னைய கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி உங்க அண்ணி கேட்டா தப்பு என்ன? என்னைய கட்டிக்க உங்களுக்கு விருப்பமில்லையா? நான் தான் உங்களையே நினைச்சிட்டு இருக்கேனா?” இவ்விதமாய் பலவித கேள்விகள் அவளின் மனதிற்குள் உலா போக சட்டென அவளின் முகம் சுருங்கி போனது.

“ஆனா அண்ணன் அண்ணி உங்ககிட்ட கேட்கிறதுக்கு முன்னாடி நானே பேசி உங்க விருப்பத்தைத் தெரிஞ்சிக்கனும்னு நினைச்சு தான் அவங்க கிட்ட உங்களை இன்ட்ரோ பண்ணலை” சற்றே தயங்கி தயங்கி அவள் முகம் நோக்கி அவன் கூற,

அவளுக்கு அவனது இந்தப் பேச்சுப் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

மேலும் தொடர்ந்தவன், “ஆனா கொஞ்சம் நேரம் கழிச்சி உங்ககிட்ட பேசலாம்னு அன்னிக்கு வந்தேன்ங்க. அதுக்குள்ள நீங்க கிளம்பி போய்ட்டீங்க! அதுக்குப் பிறகு தினமும் இந்த நேரத்துக்குக் கோவிலுக்கு வந்து நீங்க வருவீங்களானு உங்களுக்காகக் காத்துக்கிட்டு தான்ங்க இருந்தேன். அன்னிக்கு பிறகு இன்னிக்கு தான் நீங்க கோவிலுக்கு வந்திருக்கீங்க”

அவள் எவ்விதமாய் இதற்கு எதிர்வினை ஆற்றுவாள் என்ற படபடப்புடன் தான் கூறியிருந்தான் நித்திலன்.

அவன் கூற வருவதின் பொருளை அவள் உணர துவங்கிய நொடி, இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது அவளின் மனது.

இமை சிமிட்டாது அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூரிப்பாய் அவளும், பரிதவிப்பாய் அவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, இது வரை அவள் கண்ட கனவுகளெல்லாம் மனதினில் ஊர்வலம் போக,

“இந்த நிநி யாரு?” எனக் கேள்வியாய் புருவம் உயர்த்தி அவள் கேட்க, முறுவலித்தான் அவன்.

“நீங்க யாருனு நினைச்சீங்க?” அவளைப் போலவே புருவம் உயர்த்திச் சீண்டலாய் அவன் கேட்க,

“நான் யாரையும் நினைக்கலையே?” தன்னைக் கண்டு கண்டானோ என்ற பாவனையில் பயந்து கூறியவள்,

“உங்க முழுப் பேர் தான் அப்படிப் பச்சை குத்தியிருக்கீங்கனு நினைச்சேன்” அவள் தட்டு தடுமாறி கூறியதில் வாய்விட்டு சிரித்தவன்,

“ஆஹாஹாஆஆஆன் நம்பிட்டேன்” நான் உன்னை நம்பவில்லை என்ற பாவனையில் ராகமாய் இழுத்து கூற,

“நம்பலைனா போங்க! எனக்கென்ன?” முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் கூற,

“நிரஞ்சன் நித்திலன்! நிரஞ்சன் என் அண்ணன் பேரு” என்றான் அவன்.

“ஓஹோ” என ஸ்ருதி இறங்க கூறியவளின் மனமோ எதையோ எதிரிப்பார்த்து ஏமாந்த நிலையில் துவண்டது.

தான் எதை எதிர்ப்பார்க்கிறோம்? எதற்காக என் மனம் இப்படித் துவண்டு போனது? அவளுக்கே அக்கேள்விக்கான விடை புரியவில்லை.

எங்கோ வெறித்திருந்த அவளின் பார்வையை, அவளின் முகம் பற்றித் தன் மீதிருக்குமாறு வைத்தவன், வெகு மென்மையான குரலில், “உன்னைக் கல்யாணம் செய்த பிறகு இந்த நிநிக்கான முழு அர்த்தமும் நீயா மட்டுமா தான் இருப்ப ஹனி! நிவாசினி நித்திலனா தான் இந்த நிநி பார்க்கப்படும்! என்னைக் கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமா ஹனி”

‘அடேய் ஓங்கி அடிக்கப் போறா! ரெடியா இருந்துக்கோ’ மைண்ட்வாய்ஸில் பேசி மனதின் அலறலை வெளி காண்பிக்காது கெத்தாய் நித்திலன் தன் காதலை கூறி அவளின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க,

அவளோ அவனின் ஹனி என்ற அந்த அழைப்பில் மெய்சிலிர்த்துக் கண்களில் நீர் வர அமர்ந்திருந்தாள்.

அவன் கூறிய காதலை தாண்டி அவனின் அந்த அழைப்பு, அது அவள் கனவில் அவன் உயிர் உருக அழைக்கும் அழைப்பல்லவா!

அப்படியென்றால் இது முருகனின் அருளாசியினால் நிகழ்வது தான். தாத்தாவின் விருப்பமாய் நிகழ்வது தான் என பரிபூரணமாய் நம்பினாள். இவருக்கும் எனக்குமிருக்கும் முன் ஜென்ம பந்தம் உண்மை தான் என அவளின் மனம் எண்ணி பூரித்து மகிழ்ந்தது.

மனம் வெகுவாய் பரவசத்தில் துள்ளி குதிக்க, அதன் பாரம் தாளாமல் அவனின் இரு கைகளையும் பற்றி உள்ளங்கைக்குள் முகத்தினைப் புதைத்து அழவாரம்பித்தாள்.

அவளின் தேம்பலிலும், கைகளில் உணரப்பட்ட கண்ணீர் துளிகளிலும் அவள் அழுவதை உணர்ந்தவன், “என்னடா… என்னாச்சு” பதறியவாறே கேட்டான்.

சுற்றும் முற்றும் மக்களின் பார்வை தங்களின் மீது இருக்கிறதா எனப் பார்த்தவன், அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்திருப்பதைப் பார்த்து சற்று ஆசுவாசமடைந்து, தூரமாய் அமர்ந்திருந்த தனது நண்பனை அருகே அழைக்கும் பொருட்டு அவனைப் பார்க்க,

அவனோ அதி தீவிரமாய்க் கடவுளிடம் கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, “அடேய் தடிமாடு இங்க பாருடா” என மனதிற்குள் அவனை வைதவன், அவளைத் தேற்ற முற்பட்டான்.

அவன் கையிலிருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், கண்களில் நீர் வழிய, “என்னைய என்னிக்கும் விட்டுட்டு போய்ட மாட்டீங்க தானே! உங்க உயிரா என்னைய வச்சி பார்த்துப்பீங்களா? யாருக்காகவும் என்னைய ஹர்ட் பண்ணாம பார்த்துப்பீங்களா? எனக்குனு இந்த உலகத்துல யாருமேயில்ல” உதடு பிதுங்கி அழுகை கரையை உடைக்கப் பேசிக் கொண்டே இருந்தவளை கண்டவனின் கண்களிலும் கண்ணீர் சூழ்ந்தது.

அவளின் தலை வருடி, “என்னிக்குமே உன் கண்ணீரை பார்க்கிற தைரியம் எனக்கில்லை ஹனி! கண்டிப்பா உன்னை என் உயிரா வச்சி பார்த்துப்பேன்” கைகளைப் பற்றி வாக்களித்தான்.

தூரமாய் அமர்ந்திருந்த அவனது நண்பன் விஜய், இவர்களின் இந்தக் கண்ணீர் நிலையைப் பார்த்து, என்னமோ ஏதோவெனப் பதறி அருகில் வர,

அவன் வருவதைப் பார்த்த நித்திலன், அவளிடமிருந்து தனது கைகளை உருவி தனது கண்களை அவசரமாய்த் துடைக்க, என்ன என்பது போல் நித்திலனை பார்க்க, நித்திலன் விஜயை கண்ணால் காண்பிக்க,

அதற்குள் அருகில் வந்திருந்த விஜய், “என்னடா மச்சான்? என்னாச்சு? தங்கச்சி அறைச்சுட்டாங்களா? அதான் கண்ணுலாம் கலங்கிருக்கா?” நித்திலனின் காதில் அவன் இவ்வாறாய் கேட்க,

“ஆமா அவளுக்கே அறைய தெரியலைனாலும் நீயே போய்ச் சொல்லி கொடுப்ப போலயே” பல்லை கடித்துக் கொண்டே கோபமாய் விஜயை முறைத்துக் கொண்டே நித்திலன் கூற,

ஹி ஹி ஹி என அசடு வழிந்தவன்,

“ஹாய் சிஸ்டர்” என நிவாசினியிடம் பேச, சற்றாய் சிரித்து வைத்த நிவாசினி, “யாரிது?” என நித்திலனிடம் கேட்க, அவளின் கேள்வியில் வாயில் கை வைத்த விஜய், “வைஷூ மாதா நான் தான் மாதேஷ்” ஜீன்ஸ் படத்தின் ராஜு சுந்தரம் போல் உரைத்தவன்,

“என்னடா இது? மயக்கம் போட்டு மடியில தாங்கினவனை நியாபகம் இருக்கு? தண்ணீர் கொடுக்கச் சொன்னவன நியாபகம் இல்லையா? கலிகாலம் கலிகாலம்” தன்னை எண்ணியே நொந்து கொண்ட பாவனையில் அவன் கூறவும், அவனின் செய்கையிலும் பேச்சிலும் வாய்விட்டு சிரித்திருந்தாள் நிவாசினி.

“சாரி அண்ணா! அன்னிக்கு நான் மயக்கம் போட்டப்ப நீங்க இருந்தீங்களா? நான் கவனிக்கலை” என நிவாசினி விஜயிடம் பேச, இருவரும் பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் இயல்பாய் பேசியிருந்தனர்.

“இது தான் என் நம்பர்” எனக் கைபேசி எண்களைப் பறிமாற்றம் செய்து கொண்ட நித்திலன், “ஷோக்கு டைம் ஆகிட்டு நான் இப்ப போனா தான் சரியா இருக்கும்! இன்னிக்கு ஷோ கண்டிப்பா கேளு ஹனி” எனக் கண் சிமிட்டி அவன் உரைக்க, ஹ்ம்ம் எனக் கண்ணில் காதல் மின்ன வெட்கமாய் அவள் ராகம் பாட,

இதைப் பார்த்திருந்த விஜய், “ஹ்ம்ம் அப்ப மச்சான் வந்த வேலை முடிஞ்சிது! இனி நம்மளைலாம் கண்டுக்கக் கூட மாட்டானே” என மைண்ட் வாய்ஸுக்குள் பேசிக் கொண்டே, நீங்க பேசினது போதும் எனக் கூறி நித்திலனை இழுத்துச் சென்றான்.

பவானி தனது திருமணத்திற்கான பர்சேஸிற்க்கு அபி நந்தனுடன் செல்வதால் தாமதமாய் வருவாளென நிவாசினிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, அறையை அடைந்த நிவாசினியின் மனமோ நித்திலனின் நினைவில் நெகிழ்ந்திருக்க,

“ஹாய் நித்திலன்” சில பல ஹார்ட் ஸ்மைலிக்களுடன் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“நீ என்னை நித்தினே கூப்பிடலாம் ஹனி” அவன் இவ்வாறாய் பதில் செய்தி அனுப்பியிருக்க,

“அன்னிக்கு நித்தினு கூப்பிட்டா பிடிக்காதுனு சொன்னீங்க?” அவள் கேட்க,

“உன்னைத் தவிற யாரு கூப்பிட்டாலும் பிடிக்காது!” இரு இதயம் இணைந்த ஸ்மைலிக்களுடன் அவன் கூற,

இவளின் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ!

“நித்திப்பா”

“என் நித்திப்பா!”

“என் செல்ல நித்திப்பா!”

“மை ஸ்வீட் நித்திப்பா!”

“எனக்காகவே வந்த என் நித்திப்பா”

வரிசையாய் இவ்வாறாய் குறுஞ்செய்திகளை அனுப்பிவிட்டு, ரோஸ், ஹார்ட்டீன், டெட்டி பேர் ஸ்டிக்கர்ஸ் எனப் பல ஸ்டிக்கர்களையும் அனுப்பி விட்டு ஃபோனை தள்ளி வைத்தவள், வெட்கம் தாளாமல் முகத்தைத் தலையணையில் புதைத்து கொண்டாள்.

“அய்யய்யோ என்ன ரிப்ளை செய்வாருனு தெரியலையே” தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவள்,

“கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?” எனக் கேள்வி எழ, “போய்ட்டு போகுது என் நித்திக்கிட்ட தானே”

மெதுவாய் கைபேசியை எடுத்து அவனின் பதிலை பார்க்க,

“யெஸ் உனக்காகவே வந்தவன் தான்! லவ் யூ சோ மச் ஹனி” என அனுப்பியிருந்தவன்,

“உன்கிட்ட என்னைய பத்தி சொல்லனும்! நாளைக்கு நிறையப் பேசலாம்! இப்ப எனக்கு ஷோக்கு டைம் ஆகிட்டு! பை பை ஸ்வீட் ஹார்ட்! குட் நைட்! ஹேவ் எ ஸ்வீட் நித்திலன் ட்ரீம்ஸ்” கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் மெசேஜ் அனுப்பி வைத்தவன், ஆஃப்லைன் சென்று விட்டான்.

அவனின் குறுஞ்செய்தியை வெகு ஆசையாய் படித்தவள் அவனின் பண்பலை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

அதற்குள் அறை வந்து சேர்ந்த பவானி வெகு களைப்பாய் இருக்க, நிவாசினியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அலுப்பில் உறங்கிவிட்டாள்.

“ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்”

இந்நிகழ்ச்சியில் அவனின் இக்குரல் அந்த இரவின் நிசப்தத்தைத் தாண்டி அவளின் செவி வழியாய் இதயத்தைத் தீண்டிக் கொண்டிருந்தது.

“இன்னக்கி நாம எந்த மாதிரியான நினைவுகளைப் பத்தி பேச போறோம், பகிர்ந்துக்கப் போறோம்னு பார்த்தீங்கனா…” சற்று இடைவெளி அவன் விட,

வெகு ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்த நிவாசினிக்கு, தன்னைப் பற்றியோ அல்லது தனக்குச் சம்பந்தமா ஏதேனும் ஒரு நிகழ்வை பற்றியோ பேச போகிறானோ என்ற ஆர்வம் எழுந்து அவளை நிலைக்கொள்ளாதிருக்கச் செய்தது.

“பொதுவா திருமணமானவங்க எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைல ஏதேனும் ஒரு வகையில உங்க கணவர்கிட்டயோ இல்ல மனைவிக்கிட்டயோ உங்க காதலை சொல்லியிருப்பீங்க தானே! அப்படி அந்தக் காதலை முதலில் சொன்னது யாரு? கணவனா? மனைவியா? அதை எப்படிச் சொன்னாங்க?”

“முக்கியக் குறிப்பு இது காதலர்களுக்கான கேள்வியல்ல! இது திருமணமானவங்களுக்கான கேள்வி! திருமணமானவங்க தான் இன்னிக்கு எனக்கு ஃபோன் செஞ்சி திருமணத்திற்குப் பிறகான உங்கள் காதல் கதையின் நினைவுகளை என்கிட்ட பகிர்த்துக்கப் போறீங்க”

அங்கு நித்திலன் உரைக்கவும் இங்கு இவளுக்குக் குழப்பம் சூழ்ந்தது. அது ஏன் திருமணமானவங்க? காதலர்கள் ஏன் சொல்ல கூடாது?

இவள் மனதிற்குள்ளாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க,

அங்கு அவனுக்கு அழைப்பு விடுத்த முதல் நேயரும் இக்கேள்வியினை அவனைக் கேட்டிருந்தார்.

“காதலர்களாய் இருக்கும் போது காதல் சொன்னால் தான் புரியும்! ஆனா கணவன் மனைவி ஆன பிறகு அவர்களின் செயலில் சொல்லாமலே அந்தக் காதல் புரியும். அந்தக் காதல் பேரழகு” ரசனையாய் அவனுரைத்த அந்தப் பதத்தில் இவளின் மனமும் சிக்கி தான் போனது.

“ஆனா அப்படிச் சொல்லபடாம இருக்கும் போதும் இவர்கள் மனதிற்குள் புரிந்து வைத்திருக்கும் தங்களின் இணை மீதான அந்தக் காதலை யாராவது ஒருத்தர் வாய்விட்டு சொன்னா அது எவ்ளோ நல்ல ஃபீல் கொடுக்கும். இந்த நிகழ்ச்சி மூலமா கல்யாணமானவங்க யோசிச்சு இது வரை வாய் வார்த்தையா தன்னோட காதலை சொல்லவே இல்லயேனு நினைச்சு, யாராவது ஒருத்தர் தன்னோட கணவனோ இல்ல மனைவிக்கிட்டயோ அந்தக் காதலை வெளிப்படுத்தினால் அதுவே இந்தக் கேள்விக்கான வெற்றி”

‘ஏன் இவர் அடிக்கடி இப்படிப் புரியாத மாதிரியே பேசுறாரு’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டே அவனின் பேச்சை கேட்டிருந்தாள் நிவாசினி.

அவளுக்கு உறக்கம் கண்களைச் சுழட்டினாலும், நிகழ்ச்சியின் நிறைவில் இக்கேள்விக்குத் தனது நினைவுகளாய் எதை அவன் பகிர்ந்துக் கொள்வான் என அறிந்து கொள்ளும் ஆவலில் முழித்திருந்தாள் நிவாசினி.

பத்து மணிக்கு ஆரம்பமாகும் அவனின் நிகழ்ச்சி இரவு பன்னிரெண்டு மணியளவில் நிறைவு பெறும்.

“இன்றைய என் கேள்விக்கான என்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துக்கப் போறேன்!” என்றவன் கூறவும்,

இங்கு முழுதாய் உறக்கம் கலைந்து விழித்து அமர்ந்தாள் நிவாசினி.

“காதலை சொல்லாமலேயே புரிய வைக்க முடியுமான்ற என் கேள்விக்கு முடியும்னு எனக்குப் புரிய வச்சவ அவ தான்!

ஏன் உங்க அண்ணி அண்ணன்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைக்கலன்ற அவளின் கேள்வியில நான் உன் குடும்பத்துல ஒருத்தி இல்லயான்ற மறைமுகக் கேள்வியை எழுப்பி அவளோட காதலை சொன்னாள்.

அந்த நிநி யாருன்ற கேள்வியில குட்டியாய் பொறாமை! நான் இருக்க வேண்டிய இடத்துல யாரதுன்னு ஒரு கோப சிணுங்கல்!

இப்படிலாம் கூடவா ஒருத்தி அவளோட காதலை சொல்ல முடியும்னு வியந்து தான் போனேன் நான்.

உன்னைக் கண்ட நாளிலிருந்து
மீண்டுமாய் உன்னை
காணும் நாளுக்காய்
ஏங்கி தவித்துக்
காத்திருந்தேன் நானடி!

மீண்டுமாய் உன்னை
கண்ட பொழுதில்
உன்னிடம் காதலை
சொல்ல வந்ததும் நான் தானடி!

நீயோ உன் செய்கையால்,
சொல்லாமல் உன் காதலை
சொல்லிக் கொண்டிருத்தாயடி
என் ஹனி பெண்ணே!

இது அந்த நிமிடம் என்னவளுக்காக என் மனதில் தோன்றிய கவிதை எனக் கூறினான் நித்திலன்.

இங்கு நிவாசினியின் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ?

தனக்கு யாருமில்லையெனத் தனிமை சிறையில் தவித்திருந்தவளுக்கு, உனக்காக நானிருக்கிறேனென அவள் விரும்பியவனே வந்து அவளுக்காக அழுகிறான், சிரிக்கிறான், அவளின் நேசத்தை உணர்ந்து கொண்டதாய் உரைக்கிறான், அவளுக்காகக் கவிதையாய்ப் பேசுகிறான்.

பரவச நிலையில் பறந்து கொண்டிருந்தது அவளின் மனது.

“இப்ப போடப்போற இந்தப் பாடல் என்னோட ஹனி பொண்ணுக்கு டெடிக்கேட் செய்றேன். நாளை மீண்டும் வேறொரு நினைவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். நித்தில நினைவுகளில் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் நித்திலன்”

எனக் கூறி அப்பாடலை ஒலிக்கச் செய்தான் நித்திலன்.

உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

ஆசையாய் இப்பாடலை கேட்டுக் கொண்டவளின் இன்றைய இந்த இதமான மனநிலை நாளை முற்றிலுமாய் மாறப் போவதை உணராது இமைகளில் சுமக்கபட்ட கனவுகளுடன் இன்பமாய் உறங்கி போனாள் நிவாசினி.

— தொடரும்