என் நித்திய சுவாசம் நீ – 4

என் நித்திய சுவாசம் நீ 4 :

மறுநாள் காலை பவானி தனது மெத்தையில் அமர்ந்து ஒரு கையில் காபி கோப்பையுடன் காபியை அருந்தியவாறே மறுகையில் தனது கைபேசியினைப் பார்த்து கொண்டிருந்தாள்.

அச்சமயம் கண்விழித்த நிவாசினி, எழுந்து சோம்பல் முறித்துப் பவானியின் மெத்தைக்கருகில் செல்ல, “ஹே என்னடி அதிசயமா இருக்கு… சீக்கிரமா எழுந்துட்ட?” என ஆச்சரியமாய்ப் பவானி கேட்க,

நிவாசினி பவானியின் மடியில் தலை வைத்து அவளிடையைக் கட்டி கொண்டு வயிற்றில் முகம் புதைத்து கொண்டாள்.

நிவாசினி உணர்ச்சிவசப்படும் போதும் மிகுந்த வேதனையில் இருக்கும் போது மட்டுமே இவ்வாறு ஆறுதல் தேடுவாள் என்பதை உணர்ந்த பவானியும் அவளது தலை கோதி, “என்னாச்சு என் ஹாசினி செல்லத்துக்கு” எனக் கேட்டாள்.

பவானியின் முகத்தை நிமிர்ந்து பார்த்த நிவாசினியின் விழிகளில் அலைபுறுதலை கண்டவள், “என்னடி என்ன குழப்பம் உனக்கு? இந்த இரண்டு நாளா தான்டி அந்தத் துள்ளலும் சந்தோஷமுமா இருந்த பழைய ஹாசினியா நீ மாறிட்டனு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள என்னாச்சு?” கவலையாய் பவானி கேட்க,

“ரொம்பக் குழப்பமா இருக்கு பவா!” என்றவள் கனவில் நித்திலனை கண்டது முதல் நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள் வரை விடாமல் உரைத்தாள்.

“இது எப்படிடி சாத்தியம்? நிஜமாவே அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடி கனவுல பார்த்தியா?” வெகுவான ஆச்சரியம் தாக்க கண்களை விரித்துப் பவானி கேட்க,

ஆமெனத் தலையசைத்த நிவாசினி,

“அவரில்லாம என்னால வாழவே முடியாதுங்கிற அளவுக்கு அவர் மேல அன்பு பாசம் என்னமோ ஒன்னு! அது என்னனு கூடத் தெரியலை! ஆனா அவர் கூடவே இருக்கனும், அவருக்காகவே வாழனும்னுலாம் தோணுது. அவரோட மொத்த அன்பும் எனக்காகவே மட்டும் தான் இருக்கனும்னு மனசு கிடந்து தவிக்குது. நேத்து கனவுல அவர் காதலை சொன்னப்ப அப்படியே மனசு எவ்ளோ லேசாச்சு தெரியுமா! நிஜமாவே என்னை ஒருத்தர் உயிருக்குயிரா காதலிக்கிறாருங்கிற உணர்வுல தான் நேத்து அவ்ளோ சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன். அதுவே அவர் எனக்கில்லைனு தெரிஞ்சப்போ வந்த வலி இருக்கே! வார்த்தைல சொல்ல முடியாதுடி அதை” நிவாசினி நித்திலன் மீதான தனது உணர்வுகளை உரைத்துக் கொண்டே போக, ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்து போனாள் பவானி.

“சரி இப்ப என்ன சொல்ல வர நீ?” நித்திலன் விஷயத்தில் இவள் என்ன முடிவு செய்திருக்கிறாள் என அறிந்து கொள்ள நினைத்து பவானி இவ்வாறாய் கேட்க,

“அவரைக் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்” பவானியின் மடியிலிருந்து எழுந்தமர்ந்து நிவாசினி கூற,

“லூசாடி நீ!” கத்தியிருந்தாள் பவானி.

“யாரு எவருனே தெரியாதவரை கல்யாணம் செஞ்சிக்கப் போறேனு சொல்ற! போன வாரம் வரைக்கும் உனக்காக மாப்பிள்ளை தேடி அத்தனை ஃபோட்டோ காமிச்சேனே! ஒருத்தரை கூடப் பிடிக்கலை, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொன்னியே! இப்ப என்னாச்சு உனக்கு? இந்தக் கனவுலாம் நம்பாத ஹாசினி, எனக்கு என்னமோ எதுவும் சரியாபடலை” பவானி பேசிக் கொண்டே போக,

“ம்ப்ச் பவா! அவரைப் பத்தி விசாரிக்காம எப்படி நான் மேரேஜ் செஞ்சிப்பேன்? அவருக்கு எதுவும் லவ் அஃபையர்(affair) இருக்கா? இல்ல எதுவும் மேரேஜ் ஆகிருக்கா? இவர் எப்படிபட்ட ஆளு? எந்த மாதிரியான நேச்சர்? இதெல்லாம் விசாரிக்கனும்டி! விசாரிச்ச பிறகு எல்லாமே நல்லவிதமா என் மனசுக்குபட்டா தான் மேரேஜ் செஞ்சிப்பேன்” நிவாசினி கூறவும் பவானி ஆசுவாசமானாள்.

“இப்ப தான்டி எனக்கு மூச்சே வருது! லவ்வு கிவ்வுனு யாரும் தப்பான ஆளுகிட்ட நீ சிக்கிட கூடாதேனு பயந்துட்டேன்டி” தண்ணீரை பருகி கொண்டே பவானி கூற,

தன் மீதான அவளின் அக்கறையில் மனம் கனிந்து அவள் தோளில் சாய்ந்த நிவாசினி, “டோன்ட் வெர்ரிடி! உனக்குப் பிடிக்காததை எப்பவும் நான் செய்ய மாட்டேன். எனக்குனு இருக்கிறது நீ மட்டும் தானே” சற்றாய் கண்ணில் நீர் வர நிவாசினி கூற,

“அதான் சொல்றேன்! உனக்குனு இருக்கிற நானும் மூனு மாசத்துல கல்யாணமாகி போய்டுவேன்! நீயும் என் கூட வந்து தங்கிக்கோ இல்ல மேரேஜ் செய்துக்கோனு தான் இத்தனை நாளா உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்” பவானி தன்னிலையைக் கூற,

“ஹ்ம்ம்ம்” என்ற பெருமூச்சுடன்,

“நித்தலன் எல்லா விதத்துலயும் எனக்கு ஒத்து வருவாருனா கண்டிப்பா உன்னோட மேரேஜ்க்கு முன்னாடியே இவரை நான் மேரேஜ் செஞ்சிக்கிறேன்டி! ஆனா இவர் ஒத்து வர மாட்டாருனா நீ என்னை மேரேஜ் செய்யச் சொல்லி கம்பெல் செய்யக் கூடாது” நிவாசினி கூறவும்,

“ஹப்பாடா எப்படியோ கல்யாணத்துக்காவது சம்மதிச்சிட்டாளே! ஆண்டவா அந்த நித்தலனை எப்படியாவது என் ஹாசினியோட சேர்த்து வச்சிடு!” மனதிற்குள் அவசரமாய்க் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தாள் பவானி.

பவானியின் முகப்பாவனையில் அவளின் வேண்டுதலை அறிந்து கொண்ட நிவாசினி, “இதெல்லாம் என் முருகனோட ப்ளான் தான் என் பவி செல்லம். அதனால கண்டிப்பா நித்திலன் நல்லவரா தான் இருப்பாரு” பவானியின் இரு கன்னங்களையும் கிள்ளி தலையை ஆட்டி நிவாசினி கூற,

“அடியேய் வலிக்கிது விடுடி” பவானி அதட்டவும், இன்னும் வலிக்குமாறு அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டு குளியலறைக்குள் ஓடி புகுந்து கொண்டாள் நிவாசினி.

“பன்னி எருமை” என அவளை வசை மொழிந்த பவானி, தன் கன்னத்தைத் தடவியவாறே அவள் போன திசையைச் சிரிப்பாய் பார்த்திருந்தவளின் மனமோ,

“இப்படி இன்னும் சுட்டிதனம் செஞ்சிட்டு குட்டி பொண்ணா சுத்திட்டு இருக்க இவளை தனியா விட்டுட்டு போக எப்படித் தான் அவளோட அப்பா அம்மாக்கு மனசு வந்துச்சோ?” எண்ணி பெருமூச்செறிந்தது.

குளித்து முடித்து இருவருமாய் அலுவலகத்துக்குக் கிளம்பி கொண்டிருக்க, “நான் நந்தன் கிட்ட நித்திலன் பத்தி விசாரிக்கச் சொல்லிருக்கேன் ஹாசினி” என்றாள் பவானி.

“வாவ் சூப்பர்டி! நான் கூட நித்திலன் பத்தி எப்படி விசாரிக்கிறதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்! அபி அண்ணாவே விசாரிப்பாங்கனா ஐம் சோ ஹேப்பி! எனக்காக எவ்ளோ யோசிக்கிற நீ” எனக் கூறி அவளை அணைத்து முத்தமிட்டாள்.

“அய்யே இந்தக் கிஸ் பண்ற பழக்கத்தை எங்கிருந்துடி கத்துக்கிட்ட” தன் கன்னத்தைத் துடைத்தவாறே பவானி கேட்க,

ஈஈஈஈ என இளித்து வைத்தாள் நிவாசினி.

“ஆனாலும் உன் புருஷனுக்குக் கொண்டாட்டம் தான்! அவர் கேட்காமலேயே நீயே அள்ளி அள்ளி கொடுப்ப போலயே” வாய்க்குள் சிரித்தவாறே பவானி கேலி செய்ய,

“ச்சீ போடி” என நிவாசினி வெட்கப்பட,

“பார்ரா வெட்கம்லாம் வருது இந்தப் பொண்ணுக்கு” மீண்டுமாய்த் தனது கேலியை பவானி தொடர, “நான் டிபன் எடுத்துட்டு வர போறேன்” எனக் கூறி அவ்வறையை விட்டு ஓடியே விட்டாள் நிவாசினி.

நிவாசினியை இவ்வாறு பார்க்க மனம் நெகிழ்ந்து போனது பவானிக்கு.

அவளை இத்தனை மகிழ்வாய் காண எத்தனை நாள் ஏங்கி தவித்தாள் இவள். அவளின் வேதனையைப் போக்கும் வழியறியாது எத்தனை நாள் கலங்கியிருக்கிறாள். பவானியின் மனம் மீண்டுமாய் அனைத்தும் சரியாய் நிகழ வேண்டுமெனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டது.

மாலையில் அலுவலகம் முடிந்து இருவருமாய் அவர்களது பிஜியினை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த சமயம் இவர்களின் அருகினில் தனது இரு சக்கர வாகனத்தைச் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் அவன்.

அதில் இரு பெண்களும் சற்று பதறி அவ்வாகனத்தைப் பார்த்து அதில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும், “பக்கி இப்படியா வந்து பயமுறுத்துவ” எனக் கூறி அவன் கையில் ஒரு அடி போட்டாள் பவானி.

அவளின் பேச்சில் மெலிதாய் அவன் சிரிக்க, “ஹே அபி அண்ணா! எப்படி இருக்கீங்க?” குதூகலகமாய்க் கேட்டாள் நிவாசினி.

“நல்லா இருக்கேன்டா! நீ எப்படி இருக்க? இவ உன்னை ஒழுங்கா கவனிச்சிக்கிறாளா? இல்ல உன் சாப்பாட்டையும் சேர்த்து அவளே சாப்பிட்டு உன்னைப் பட்டினி போடுறாளா? முன்ன விடக் குண்டாயிட்ட மாதிரி இருக்காளே?” பவானியை மேலும் கீழுமாய்ப் பார்த்தவாறு அபிநந்தன் கூறவும்,

பவானி அவனை நன்றாய் முறைக்க, ஹாசினி வாய்விட்டு சிரித்திருந்தாள்.

“உங்க ஆளை ஓட்டலனா உங்களுக்குத் தூக்கம் வராதே” எனச் சிரித்த நிவாசினி,

“போங்க மேடம் உங்களைக் கூட்டிட்டுப் போகத் தானே அண்ணா வந்திருக்காங்க! நான் ரூம்க்கு போறேன் நீங்க பேசிட்டு வாங்க” எனப் பவானியிடம் கூறி விட்டு நிவாசினி நடையைத் தொடர,

அவனின் இரு சக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டாள் பவானி.

நிவாசினி மற்றும் பவானி இருவரும் கல்லூரி படிப்பை முடித்ததும், பவானி சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர, நிவாசினி பெங்களூரிலிருந்த மென் பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாள்.

அதன்பின் வேலைப்பளுவின் காரணமாய் வாழ்வின் போக்கில் இருவரும் தொடர்பற்று போக, இங்கு ஒரு வருடத்தில் பவானி தன்னுடன் பணிபுரியும் அபிநந்தனை காதலிக்கத் தொடங்கினாள்.

பவானியின் வீட்டில் இவளுக்காகத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த சமயம், அவள் தனது காதலை வீட்டினில் உரைத்திருந்தாள்.

அபிநந்தனின் வீட்டில் இக்காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் வராதிருக்க, பவானியின் வீட்டில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நான்கு வருட போராட்டத்திற்குப் பிறகு இவர்களின் காதலை அவளது வீட்டினில் அனைவரும் ஏற்றுக்கொண்ட சமயம், நிவாசினி தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த நிலையில் அனாதரவாய் நின்றாள்.

அவளுக்கு ஆதரவளித்து மணம் முடித்து வைத்த பின்னரே தான் மணம் செய்து கொள்வதென முடிவெடுத்த பவானி, அதை அபிநந்நதனிடம் கூற, இத்தனை வருட காத்திருப்பிற்குப் பின்னுமாய் மீண்டுமாய்க் காத்திருக்கச் சொன்னால் அவனும் தான் என்ன செய்வான்? ஆறு மாதம் வேண்டுமானால் திருமணத்தை ஒத்தி வைக்கலாமெனக் கூறியிருந்தான்.

இந்த ஆறு மாதத்தில் நிவாசினிக்கு நல்வரனாய் பார்த்து மணமுடித்து வைத்து விடலாமென எண்ணியிருந்தாள் பவானி. ஆனால் நிவாசினியோ அவளுக்கிருந்த விரக்தி மனநிலையில் தனக்குத் திருமணமே வேண்டாமென வம்படியாய் இருந்துவிட்டாள்.

இன்னும் மூன்று வாரத்தில் பவானிக்கு திருமண நிகழயிருக்க, நிவாசினியை தனித்து விட வேண்டியிருக்குமே என வெகுவாய் வருந்திக் கொண்டிருந்தாள் பவானி. இந்நேரத்தில் நிவாசினியே வந்து திருமணம் செய்து கொள்வதாய் உரைத்ததில், உடனே நித்தலனை பற்றி விசாரிக்க அபிநந்தனிடம் கூறிவிட்டாள் பவானி.

அபிநந்தனின் வாகனம் அங்கிருந்த பூங்காவில் சென்று நிற்க, இருவருமாய்ப் பூங்காவிலிருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்தனர்.

“என்ன மேடம் கோபம்லாம் போய்டுச்சா என் ரூல்ஸ் ரங்கம்மா” எனப் பவானியின் கைப்பற்றி அபி உரைக்க,

முகத்தைச் சுளித்தவாறு அவனிடமிருந்து தனது கையை உருவியவாறே, “நித்தலனை பத்தி விசாரிச்சீங்களா இல்லையா?” எனக் கேட்டாள் பவானி.

“அதுக்குள்ள எப்படிமா விசாரிக்க முடியும்? அவர் என்ன ஐடியிலயா வேலை செய்றாரு உடனே விசாரிக்க! மீடியால இருக்க என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இன்னும் டூ டேஸ்ல ஃபுல் டீடையில்ஸ் வந்துடும்” பொறுமையாய் அவன் கூறவும் சரியெனத் தலையசைத்தாள் பவானி.

“ஏன் உனக்கு நிவாசினி மேல இவ்ளோ பாசம்னு தான் எனக்குப் புரியவே இல்ல வனிமா” என்றான் அவன்.

“அவ யாருமில்லாம தனியா நின்னத நீங்க பார்த்திருக்கனும்! சின்ன வயசுலருந்து அவளை எனக்குத் தெரியும்ப்பா… அப்பா அம்மா தாத்தானு எல்லாருமே அவளுக்குச் சந்தோஷம் மட்டுமே கொடுத்து வளர்த்தாங்க. கஷ்ட நஷ்டம் தெரியாம வளர்ந்த பொண்ணு. அதனாலேயே ரொம்பச் சின்னபிள்ளதனமா தான் நடந்துப்பா! அப்படிபட்டவ யாருமில்லாம அனாதை போல நின்னதைப் பார்த்தப்ப என் நெஞ்சே வெடிச்சிடும்ன்ற அளவுக்கு வலிச்சிதுப்பா! எனக்கே அப்படி இருந்துச்சுனா அந்தச் சூழ்நிலைல அவளோட வலி எப்படிபட்டதா இருந்திருக்கும்னு யோசிங்க” கண்ணில் கவலையைக் காட்டி பேசியிருந்த பவானியையே பார்த்திருந்த நந்தன்,

“உன்னைப் போல ஃப்ரண்டு கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனும் வனிமா” உணர்ந்து அவன் கூற,

“ம்ப்ச் இல்லப்பா! அவ சந்தோஷமா நல்லா வாழுறதுல தான் எந்த மாதிரி ஃப்ர்ண்ட்டா அவளுக்கு நான் இருந்திருக்கேன்றது தெரிய வரும். அவளோட நல்வாழ்வு தான் இப்ப எனக்கு முக்கியம். என் குடும்பமோ உங்க குடும்பமோ நமக்கு எந்தவித இடைஞ்சலும் தராம உங்க வாழ்க்கை என்னமோ செய்யுங்கனு நம்மளை விட்டுட்டாங்க! எனக்கு இப்ப உங்க அனுமதி மட்டும் தான் வேணும். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியாவது இவ கல்யாணத்தை நடத்தனும். அதுக்கு உங்க உதவி வேணும்ப்பா” அவனின் கைப்பற்றி அவள் உரைக்க,

“என் பொண்டாட்டிக்கு நான் ஹெல்ப் செய்யாம யாரு செய்வாங்களாமா?” அவளின் மூக்கை பிடித்து ஆட்டி அவனுரைக்க, மன நிறைவாய் புன்னகைத்தாள் பவானி.

அதன் பிறகு இருவருமாய் அவர்களின் எதிர்கால வாழ்வை பற்றிய திட்டமிடலில் சில மணி நேரத்தை செலவழித்த பின்னரே அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

அலைக்கடலருகில் மணற்பரப்பில் திருமண மேடை போல் அலங்கரிக்கப்பட்டிருத்தது.

முழுவதுமாய் வெள்ளையும் பிங்க் நிற ரோஜா பூக்களைக் கொண்டு அவ்விடம் அலங்கரிக்கப்பட்டிருத்தது.

மேடையில் மத்தியமாய் இதய வடிவின் இடையில் நித்திலன் நிவாசினி எனப் பெயர்கள் வடிவமைக்கப்பட்டிருக்க, அதே பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான தாவணி அமைப்பிலான அந்த உடையில், கோர்ட் சூட்டுடன் மேடையில் நின்றிருந்த நித்திலனின் அருகில் வந்து நின்றாள் நிவாசினி.

வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாக, இருவரிடமும் மாலை கொடுத்து மற்றவருக்கு அணிவிக்கக் கூறினார் அந்த முதியவர்.

நிவாசினிக்கு சற்றாய் உறக்கம் கலைந்தாலும் கனவு கலையாதிருக்க, விழிப்பிலிருந்த அவளின் மூளை, “அது தாத்தா தானே” எனக் கேள்வியெழுப்ப, கனவிலேயே அவள் அவரை உற்று நோக்க, மீண்டுமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள் அவள்.

அந்த முதியவரின் கையிலிருந்த மாலையை இருவரும் வாங்கிக் கொண்டு மற்றவருக்கு அணிவிக்க, அங்கிருந்த அனைவரும் கரவொலியெழுப்பினர்.

அந்த முதியவர் நிவாசினியின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட, அவளின் மூளை, “இது தாத்தாவே தான்” என அடித்துக் கூறியது.

“என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க எனக்கும் உரிமை இருக்காக்கும்” எனக் கூறிய நித்திலன் அவளிடை பற்றித் தன்னருகே இழுத்து நெற்றியில் முத்தமிட, அவள் நாணத்தில் தலை கவிழ, அங்கிருந்த அனைவரும் ஓ வெனக் கடலலைக்கு நிகராய் ஆர்ப்பரிக்க, அந்த முதியவர் முகம் விகசிக்கச் சிரித்திருந்தார்.

அவள் தனது முகத்தைச் சற்றாய் நிமிர்த்திப் பார்க்க, அங்கே காண கிடைத்தது அவனது வலது கண்ணிற்கு நேராய் சற்று கீழே கன்னத்தில் ஒரு மச்சம். அம்மச்சத்திலேயே அவளின் பார்வை தேங்கி நிற்க,

“முத்தம் கொடுக்கனும்னு ஆசையா இருந்தா இப்பவே கொடுக்கலாம் ஹனி! நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்கபடலாம் மாட்டேன்” குறும்பாய் கண் சிமிட்டி அவள் விழி நோக்கி அவன் கூறவும் வெட்கம் அவளைப் பிடிங்கி திங்க, “ச்சீ போங்க” எனத் தலையைக் குனிந்து கொண்டாள்.

அந்த வெட்கத்தின் பூரிப்பில் கன்னம் சிவக்க கண் விழித்த நிவாசினிக்கு வெகு பரவசமாய் இருந்தது அந்த விடியல்.

அதன்பின்பு தான் கனவில் கண்டதை பவானியிடம் உரைத்திருந்தாள் நிவாசினி.

“தாத்தாக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரணச் சம்மதம்னு இந்தக் கனவு மூலமா தெரியுதுடி” தாத்தாவின் ஆசி இத்திருமணத்திற்குக் கிடைத்து விட்டதாய் எண்ணி பூரிப்பாய் அவள் உரைத்திருக்க,

“தாத்தா ஆசி வழங்குறது இருக்கட்டும். நீ கட்டிக்க ஆசைபடுற ஆளு முதல்ல ஒத்துக்கனுமே! உன்னோட அடி மனது ஆசைகள் தான் இப்படிக் கனவா வருது நிவாசினி! ரொம்ப எக்ஸ்பெக்டேஷன் வச்சிக்காதமா. பின்னாடி அது நடக்கலைனா மனசொடஞ்சி போய்டும்டி” ஆதுரமாய் அவளின் தலை கோதி பவானி கூற,

“இல்லை பவா! இது கண்டிப்பா என் ஆசைனால வர்ற கனவு இல்ல! எனக்கும் நித்தலனுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் இருக்கு. இது எனக்காக என் தாத்தாவும் முருகனும் செய்ற செயல். அதனால கண்டிப்பா அவருக்கு என்னைய பிடிக்கும். நீ ஒன்னும் குழப்பிக்காத” பவானிக்கு இவள் இவ்வாறாய் ஆறுதல் உரைக்க,

“சரி இந்தக் கனவை பத்தி நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு. கல்யாணத்துக்குப் பிறகு நித்திலன்கிட்ட கூடச் சொல்ல வேண்டாம். ஏதோ உனக்கு மனநோய் இருந்ததா நினைச்சிட போறாங்க! நான் நந்தா கிட்ட கூட உன் கனவு பத்திலாம் எதுவும் சொல்லாம ஃப்எம்ல கேட்ட குரல் வச்சி உனக்குப் பிடிச்சிடுச்சு ஒரு முறை நேர்ல பார்த்திருக்கேனு தான் சொல்லிருக்கேன்” பவானி அவளிடம் சத்தியம் கேட்கவும்,

“உன்னோட கவலை எனக்குப் புரியுது பவிமா. கண்டிப்பாக இந்தக் கனவை பத்தி யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன். போதுமா” நிவாசினி கூறியதும் சற்று ஆசுவாசமான பவானி,

“இவளை முதல்ல ஒரு சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகனும்” என மனதில் எண்ணிக் கொண்டாள்.

— தொடரும்