என் நித்திய சுவாசம் நீ! – 3

என் நித்திய சுவாசம் நீ 3 :
முற்றிலுமாய் பூக்களும் பூக்களின் வாசமும் மட்டுமே நிறைந்திருந்த அந்த பூந்தோட்டத்தில் நின்றிருந்தான் நித்திலன்.

அவளது அறையிலிருந்து அந்த பூந்தோட்டத்தை நோக்கி ஓடி வந்த நிவாசினிக்கு அங்கு நின்றிருந்தவனின் முதுகே காட்சியளிக்க,

ஓடி வந்ததால் உண்டான படபடப்புடன் அவனை நெருங்க, ஆளரவம் கேட்டு சட்டென திரும்பி அவளை பார்த்த அவனது பார்வையில் தான் எத்தனை ஏக்கம்.

அவளை கண்டதும் ஏக்க பார்வை இன்ப பார்வையாய் உருபெற, தன் ஒரு கையால் அவளின் இடை வளைத்து சற்றாய் தன்னோடு அணைத்து அவளின் காதில் காதலாய் மொழிந்தான், “ஐ மிஸ்டு யூ சோ மச்” என.

அவனின் இவ்வார்த்தையில், தனது இன்மையை உணர்ந்து தனக்காக ஏங்கி நிற்கும் தன்னவன் என்கின்ற எண்ணம் அவளின் மனதில் இன்ப அலையை தோற்றுவிக்க, அவனை இறுக அணைத்திருந்தாள்.

அவனின் அணைப்பினிலேயே தன் முகத்தினை நிமிர்த்தி அவன் முகம் நோக்கியவள், “என்னைய விட்டுட்டு போய்ட மாட்டீங்கல. என் கூடவே இருப்பீங்க தானே! எனக்குனு யாரும் இல்லை உங்களை தவிர” அவனின் அந்த ஏக்க பார்வையை இப்பொழுது இவள் ஏந்தி நின்று இவ்வாறாய் உரைத்திருக்க,

அவளின் கூற்றில் கண்களில் காதல் மின்ன அவளை பார்த்தவன், “ஐ லவ் யூ ஹனி! ஐ வில் பி தேர் ஃபார் யூ ஆல்வேஸ்” அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டு உரைத்திருந்தான்.

கனவினில் கண்ட அக்காட்சியில் முகம் விகசிக்க சிரித்தாவாறே நிவாசினி உறங்கி கொண்டிருக்க,

“ஹே நிவாஸூ… அடியேய் நிவாஸூ” கூப்பாடு போட்டு அவளை எழுப்பி கொண்டிருந்தாள் பவானி.

பவானி கடுப்பாகும் சமயங்களில் தான் நிவாஸ் என அழைப்பாள் அவளை.

“அடியேய் ஆபிஸ் போகனும்டி எழுந்திரிடி! நேத்து ஷாப்பிங் போகலாம்னு ஆபிஸ்க்கு மட்டம் போட வச்சிட்ட! இன்னிக்காவது நேரத்துக்கு போவோம்டி” குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டே நிவாசினியை எழுப்பி கொண்டிருந்தாள் பவானி.

அந்த கனவின் தாக்கத்தினால் உண்டான பூரிப்பின் மனநிலையிலேயே கண் விழித்தாள் நிவாசினி.

“குட் மார்னிங் என் பவி செல்லம்” எழுந்ததும் பவானியை கட்டி அணைத்து முத்தமிட்டு அவள் உரைக்க,

“அடியேய் சீ போடி” என அவளை தள்ளி விட்ட பவானி, “குளிக்காம பல்லு விளக்காம என்னைய எச்சி பண்ணிட்டு இருக்க பன்னி எருமை” அவளை வசைபாடியவள்,

“நேத்துலருந்தே ஒரு மார்க்கமா தான்டி சுத்திட்டு இருக்க நீ” நிவாசினியை முறைத்திருந்தாள் பவானி.

அதற்கும் ஈஈஈஈ என இளித்து வைத்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

நிவாசினியும் பவானியும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய் படித்து வளர்ந்து உற்ற தோழிகளாய் மாறி போனவர்கள்.

கல்லூரியில் நடந்த பணிக்கான நேர்காணலில் இருவரும் வெவ்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகி போக, கிட்டதட்ட ஐந்தாண்டு காலம் பிரிந்து எவ்வித தொடர்புமற்று வாழ்ந்து வந்தார்கள் இருவரும்.

அதன்பின்பு பவானி பணிபுரியும் சென்னை அலுவலகத்திலேயே நிவாசினிக்கும் வேலை கிடைத்திட, இருவரும் தங்களது நட்பை புதுப்பித்து ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவருமே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறார்கள்.

எப்பொழுதும் அவர்களின் அறையிலுள்ள தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்கும் மியூசிக் சேனலில் பாடல்கள் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க,

அந்நேரம் குளித்து முடித்து மேலே டாப்பும் கீழே முக்கால் பேண்டுடன் வெளிவந்த நிவாசினி,

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ

த்ரிஷாவை போல் இடையை ஆட்டிக் கொண்டே தொலைக்காட்சியை பார்த்து ஆடிக் கொண்டிருந்தாள்.

அவளின் நடனத்தை பார்த்து வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்ட பவானி, அவளிடையில் ஒரு அடி போட்டு, “ஒழுங்கா போய் ட்ரஸ் மாத்திட்டு கிளம்புடி! ஈவ்னிங் வந்து எவ்ளோனாலும் ஆட்டம் போட்டுக்கோடி! நான் போய் லன்ச் பாக்ஸ் கட்டிக்கிட்டு டிபன் எடுத்துட்டு வரேன். டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பு” எனக் கூறி சென்றாள்.

நிவாசினியின் மனம் நித்திலன் உரைத்த அந்த காதலின் பரவச மனநிலையிலேயே இருந்தது. அவனை உடனே நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் ஆசையும் அவளை ஒருங்கே ஆட்டுவித்தது. மனம் அதீத மகிழ்வுமாய் துள்ளலுமாய் இருந்தது அவளுக்கு.

அன்றைய நாள் முழுவதும் இவ்வாறே கழிய, மாலை வேளையில் இருவருமாய் அலுவலகம் முடிந்து வீட்டை அடைந்த நேரம், “பவானி இன்னிக்கு சஷ்டிடி! மறந்தே போய்ட்டேன். நான் கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்” என கூறிவிட்டு சிட்டாய் பறந்து சென்றாள்.

அக்கோவிலின் வாயிலில் நுழைந்து முருகனின் அருகே சென்றவள் கரம் கூப்பி, “முருகா! எனக்கு ஏன் இப்படிலாம் ஃபீல் ஆகுதுனு புரியலை. ஆனா அவருக்கும் எனக்கும் ஏதோ ஜென்ம பந்தம் இருக்குமோனு தோணுது. யாருமில்லாத எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்க வேண்டியது உன் பொறுப்பு தானே! அதனால எனக்காக நீங்க தான் இப்படி கனவுலாம் வரவச்சி அவரை அனுப்புனீங்களோனுலாம் தோணுது. என்னவோ எப்படியோ அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு முருகா! எப்படி அவர் மேல இப்படி ஒரு ஆழமான பாசம் அன்பு எனக்கு வருதுனுலாம் சத்தியமா புரியலை. பார்த்ததும் காதல் வருவது சாத்தியமா? சத்தியமா தெரியலை. ஆனா அவரை நான் காதலிக்கிறேன்னு நினைக்கிறேன். அவரை என் கூட எப்படியாவது சேர்த்து வச்சிடுங்க செந்தில் ஆண்டவா” என மனமுருக வேண்டி கொண்டு பிரகாரத்தை அவள் சுற்றி வர,

பட்டு வேஷ்டி அணிந்து இரு ஆண்களும், அவர்களுடன் பட்டு புடவை அணிந்த ஒரு பெண்ணும் கோவிலினுள் நுழைந்தனர்.

முருகனின் சந்நிதியில் மூவரும் நின்றிருந்த சமயம் அதில் ஒருவருக்கு கைபேசி அழைப்பு வர, அவர் மூலஸ்தானத்தை விட்டு சற்றாய் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த சமயம், பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்த நிவாசினியின் கண்களில் நித்திலன் தென்பட, அவனையே ஆர்வமாய் பார்த்து கொண்டே நின்று விட்டாள்.

தனது வேண்டுதலின் பலனாய் முருகனே அவனை அழைத்து வந்துவிட்டதாய் எண்ணினாள்.

அங்கே நித்திலனும் அப்பெண்ணும் அர்ச்சனை தட்டை ஐயரிடம் கொடுத்து அதில் கை வைத்து ராசி நட்சத்திரம் கூறிய காட்சியை கண்டாள் இவள்.

“யாரிந்த பொண்ணு? இவங்க கூட சேர்ந்து ஏன் அவர் அர்ச்சனை செய்றாரு” எண்ணி கொண்டே சற்று தொலைவாய் அமர்ந்து அவள் பாரத்திருக்க, மீண்டுமாய் அந்த மூன்றாம் நபர் இவர்களுடன் வந்து சேர்ந்து நிற்கவும் ஆரத்தி காண்பிக்கபட சாமியை வணங்கினார்கள்.

இவளின் விழி வட்டத்தில் அந்த மூன்றாம் நபர் வரவேயில்லை. அவளின் பார்வையெல்லாம் நித்திலனை சுற்றியே இருந்தது.

அதன்பின்பு அவர்கள் எடுத்து வந்த நெய்வேத்தியமான சர்க்கரை பொங்கலை அப்பெண் தொண்ணையில் வைத்து கொடுக்க, ஆண்கள் இருவரும் அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார்கள்.

அந்நேரம் நிவாசினியிடம் பிரசாதத்தை வழங்கிவிட்டு சென்ற நித்திலனின் பார்வையில் ஒன்றுமே அறிய முடியவில்லை. இவளை தனக்கு தெரிந்த பெண்ணாய் கூட காண்பித்து கொள்ளவில்லை அவன். ஆனால் இவள் அவனை வெகு ஆசையாய் ரசனையாய் பார்த்திருந்தாள்.

அவளருகில் அமர்ந்திருந்த பாட்டி அவனிடம் சற்று முன்பு பேசியதை கண்டிருந்தாளே. ஆக என்ன விசேஷம் என அவரை கேட்கலாமென எண்ணி கேட்க, “இப்ப பொங்கல் கொடுத்துச்சே அந்த தம்பிக்கும் அந்த பாப்பாக்கும் கல்யாண நாளாம்மா” லேசாய் ஒரு இடியை அவள் தலையில் இறக்கி வைத்தார் அந்த பாட்டி.

அவளின் நெஞ்சத்தில் சம்மட்டியால் அடித்த வலி உண்டாக கண்கள் இருட்டி கொண்டு வர, அந்த பேரதிர்ச்சி செய்தியில் கை கால்களெல்லாம் நடுங்க அவ்விடத்தை விட்டு சென்றே ஆக வேண்டுமென மனம் உந்த, எப்படியோ தள்ளாடி தனதறையை அடைந்தவள் நேராய் தனது படுக்கையில் சென்று படுத்து கொண்டாள்.

“அடியே ஹாசினி வந்து சாப்பிடுடி நேராய் போய் படுத்துட்ட” என பவானி அவளை எழுப்ப,

“இல்லடி எனக்கு தூக்கம் வருது” எனக் கூறி முகத்தை மூடிக் கொண்டாள்.

“அப்ப அவங்க இனி எனக்கில்லையா? காலைல அவங்க என்கிட்ட சொன்ன காதல் பொய்யா? என் கூடவே இருப்பேனு சொன்னாங்களே”

அது கனவு என மூளை உரைத்தாலும் ஏற்க முடியா நிலையில் இருந்த மனது அவன் மீதே குற்றம் சுமத்தி தலையனையில் தனது கண்ணீரை பொழிந்திருந்தது.

“ச்சே கல்யாணமானவரை போய் நான் கலாயாணம் செஞ்சிக்கனும்னு நினைச்சிருக்கேனே! அப்ப அந்த கனவுக்குலாம் என்ன தான் அர்த்தமாம்? இரண்டு நாள்ல ஒருத்தன் மேல இப்படி பித்தாக முடியுமா? அய்யோ எனக்கு என்ன ஆச்சு?”
அவன் தன் வாழ்வில் இனி இல்லை என்பதை ஏற்கவும் முடியாமல், அவனை மறக்க வேண்டுமென்ற எண்ணமே ரணமாய் மனதை அறுப்பதை தடுக்கவும் முடியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் நிவாசினி.

நள்ளிரவு தாண்டியும் துயரை துடைக்கும் வழியறியாது அவள் தனது மனதுடன் போராடி துவள, தன் கைபேசியிலிருந்த அந்த புகைப்படத்தினை எடுத்தாள்.

அவரின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே, “ஏன் தாத்தா? ஏன் தாத்தா என்னை தனியா விட்டுட்டு போனீங்க? ஏன் எனகிந்த தனிமையை கொடுத்துட்டு போனீங்க? யாருமில்லாத அனாதையா எனக்குனு ஒரு வாழ்க்கை இல்லாம வெறுமையா வாழ்ந்துட்டு இருக்கேன் தாத்தா” தன் மீதே கழிவிரக்கம் உண்டாக அழுது கரைந்தவளின் கைப்பட்டு அவளது கைபேசியிலிருந்த தொடுதிரையில் பண்பலையில் பாடல் ஒலிப்பரப்பானது.

பவானி விழித்திடுவாளோ என பதறி எழுந்து தனது ஹெட்செட்டை எடுத்து காதில் சொருகி கொண்டு படுத்துவிட்டாள் நிவாசினி.

சத்தத்தில் லேசாய் அசைந்த பவானி மீண்டுமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்.

“உங்களுக்குனு யாருமில்லைனு நீங்க நினைக்கிற நேரத்துல உங்களுக்காகவே ஒருத்தர், நான் இருக்கேன்னு வந்து நிப்பாங்க பாருங்க. அவங்களை என்னிக்குமே வாழ்க்கைல விட்டு கொடுத்துடாதீங்க”

அவளின் காதினுள் தென்றலாய் தீண்டியது அக்குரல்.

ஆம் நித்திலன் தான் அவனின் நித்தில நினைவுகள் நிகழ்ச்சியில் பேசியிருந்தான்.

அவனின் குரல் அவளை ஆசுவாசப்படுத்தியது.

“அந்த மாதிரி திக்கு தெரியாம அலைஞ்சிட்டு இருந்த என் அண்ணனுக்கு நான் இருக்கேன் உங்களுக்காகனு வந்தவங்க தான் என் அண்ணி! இன்னிக்கு என் அண்ணன் அண்ணியோட திருமண நாள்”

இன்ப அதிர்ச்சி நிவாசினிக்கு.
“அப்ப கோவில்ல பார்த்தது அவங்க அண்ணியா?” மனம் விழிப்படைந்து கேள்வி கேட்டு அவனின் இப்பதிலில் சமன்பட ஆரம்பித்தது.

“அதனால் தான் இன்னிக்கு இந்த கேள்வியை உங்களிடம் கேட்டேன். அனைவருமே இப்படி உங்களுக்காக நான் இருக்கேன்னு உங்க வாழ்க்கைல வந்தவங்களை பற்றிய நினைவுகளை அழகா பகிர்ந்துக்கிட்டீங்க!”

“அனைவருக்கும் சுகமான நித்திரை அளிக்க கூடிய இனிய இரவாய் இது அமையுமென்ற வாழ்த்துதலுடன் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் நித்தலன். மீண்டும் நாளை நித்தில நினைவுகள் நிகழ்ச்சியில் சந்திக்கலாம்” எனக் கூறி அவன் விடைப்பெற்ற நொடி,

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே… கண்மணியே
அழுவதேன்… கண்மணியே
வழித்துணை நான் இருக்க

உன் துணையாய் நானிருக்க, நீ ஏன் அழுகிறாய் பெண்ணே என அவனே அவள் காதில் மென்மையாய் கூறுவதாய் அவளுக்கு தோன்ற பெருத்த ஆசவாசமடைந்தது அவளின் மனது.

அப்பாடல் நிறைவுப்பெற்ற நொடியில் நித்திலன் விஷயத்தில் தான் எடுக்க வேண்டிய முடிவினை பற்றிய தெளிவு அவளுக்கு வந்திருக்க, அதை செயல்படுத்த வேண்டுமென்ற தீர்க்கமான எண்ணத்துடன் உறங்கிப் போனாள் நிவாசினி.

— தொடரும்