என் நித்திய சுவாசம் நீ! – 2

என் நித்திய சுவாசம் நீ 2

அன்றிரவு அந்தப் பெண்கள் தங்கும் விடுதியின் இரு படுக்கைகள் கொண்ட அறையில் தனது மெத்தை படுக்கையில் அமர்ந்திருந்த பவானி கைபேசியினில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மெத்தை படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த நிவாசினி, நித்தியை பற்றி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய நாள் முழுவதும் நிவாசினியின் நினைவுகளை நித்தியே ஆட்கொண்டிருந்தான்.

“யார் அவங்க? எனக்கு ஏன் அவங்களை நினைச்சாலே மனசெல்லாம் பூரிச்சு போகுது? கனவுல கண்ட அந்த நிநி டாட்டூ எப்படி இவர் கையில இருக்கு?” எவ்விதமாய்ச் சிந்தித்தாலும் மனதின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலில்லை அவளிடம்.

அவள் மயங்கி சரிந்ததும் மடியில் தாங்கி பவானியிடம் இவளை நித்தி என அழைக்க வேண்டாமென அவன் உரைத்தது அவளின் மயக்க நிலையிலும் அவளது செவிகளுக்குள் எட்டியிருக்க அது தற்போது அவளது நினைவிலாட, “நான் மயக்கத்துல இருந்தாலும் எனக்குப் பிடிக்காத அந்தப் பெயரை சொல்லி என்னைக் கூப்பிட கூடாதுனு சொன்னாங்களே!” அவனின் அந்தக் கனிவான அக்கறையான பேச்சு அவளை மேலுமாய் அவனின்பால் ஈர்க்க ஏகாந்த மனநிலையில் இருந்தாள் நிவாசினி.

இது எதைப் பற்றியும் தனது தோழி பவானியிடம் உரைக்கவில்லை அவள். காலையில் உண்ணாதிருந்ததே அவளை இவ்வாறு மயங்க செய்ததென எண்ணியிருந்தாள் பவானி.

மின்சாரம் தடைப்பட்டு இரண்டு மணிநேரம் ஆகியும் வராதிருக்க, மெழுவர்த்தி வெளிச்சத்தில் அறையினுள் இருந்த இருவரும் அவரவர் சிந்தனையில் படுத்திருக்க, “ஹே ஹாசினி என் ஃபோன்ல சார்ஜ் இல்லடி! வைஃபையும் வர்க் ஆகலை. உன் ஃபோன்ல எதாவது பாட்டு போட்டு விடேன்” என நிவாசினியிடம் பவானி கேட்க,

“நான் என்னிக்கு ஃபோன்ல பாட்டுலாம் சேவ் செஞ்சி வச்சேன். ஃப் எம் போடலாமா?” எனக் கேட்டவள், தனது கைபேசியில் ஃப் எம்மின் அலைவரிசையை ஒவ்வொன்றாய் மாற்றிக் கொண்டிருக்க, அப்பொழுது ஒரு அலைவரிசையில் வந்த அந்தக் குரலில் தன்னை மறந்து சுற்றம் மறந்து அப்பேச்சினை கேட்டிருந்தாள் நிவாசினி.

“ஹை ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்” படு உற்சாகமாய்த் துள்ளலான குரலுடன் படபடவெனப் பேசியிருந்த அவனின் குரலை கேட்டவள்,

சட்டெனத் தன் படுக்கையை விட்டெழுந்து, “ஹே பவா! இது அவங்க குரல் தான்டி! எனக்கு நல்லா தெரியும்! இது அவங்க குரல் தான்” நெஞ்சம் ஒருவித சிலிர்ப்பில் இருக்க அச்சிலிர்ப்பை தனது கண்களில் தேக்கி பவானியை நோக்கி கூறிக் கொண்டிருந்தாள் நிவாசினி.

அவளின் இந்த மின்னலான பார்வையும் பரவசமான பேச்சையும் கேட்டு அவளை ஆராயும் பார்வை பார்த்த பவானி, “யாரடி சொல்ற? எவங்க குரல் இதுனு சொல்ற?” எனக் கேட்க,

“நம்ம காலைல பார்த்தோமேடி! என்னை மடியில தாங்கிக்கிட்டாரே அவரோட குரல் தான்டி இது” நிவாசினி கூறவும்,

“அவரோட குரல்னு எப்படிக் கரெக்ட்டா சொல்ற?” எனக் கேட்ட பவானி, மீண்டுமாய் நித்திலன் என அவன் தன் பெயரை உரைத்ததை அலைவரிசையில் கேட்டவளுக்கு அங்கு அவனின் நண்பன் அவனை நித்தி என அழைத்தது நினைவிற்கு வர, “ஹோ அவங்க ஃப்ரண்ட் அவங்களைக் கூப்பிட்டத வச்சி சொல்றாளோ” என எண்ணி அதைக் கேட்க,

“இல்லடி அவங்க ஃப்ரண்ட் அவங்கள என்னனு கூப்ட்டாங்கனுலாம் எனக்கு நியாபகம் இல்ல! ஆனா இது அவங்க குரல் தான்” சத்தியம் செய்யும் விதமாய் அவள் அடித்துக் கூற,

பவானியின் ஆராய்ந்த பார்வை ஆச்சரிய பார்வையாய் மாறியது.

ஏனெனில் எவரையும் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பார்த்தால் தான் அவர்களின் முகத்தை ஞாபகம் வைத்திருப்பாள் நிவாசினி. ஆனால் இன்றோ அவனின் குரல் வைத்தே அது நித்திலன் தான் என அடித்துக் கூறுகிறாளே இவளென ஆச்சரிய பார்வை பார்த்தவள்,

“ஏன்டி அவங்க ஒன்னும் பார்த்ததும் அட்ராக்ட் ஆகுற அளவுக்கு ஹேண்ட்சம்லாம் இல்லயே? முன்னாடி தலை முடி இல்லாம வழுக்கை வரதுக்கான அறிகுறியோட முப்பது வயசுக்கு மேல இருக்கும்னு சொல்ற அளவுக்கான முதிர்ச்சியோட தானே அவரோட தோற்றம் இருந்தது! அப்புறம் எப்படி அவரை உனக்கு இவ்ளோ நியாபகம் இருக்கு” நிவாசினியை சீண்டும் விதமாய் அவள் கேட்டிருக்க,

“ம்ப்ச் பவா என்ன பேச்சு இது?” என அவளைக் கண்டிக்கும் விதமாய்க் கூறினாள் நிவாசினி. அவனின் தோற்றத்தை பவானி இவ்விதமாய கூறியது பிடிக்கவில்லை அவளுக்கு.

“ஆனா எனக்கு அவர் பேசின வார்த்தைகள் தான் நியாபகம் இருக்கு பவா! உன்கிட்ட அவர் நிவாஸ்னு என்னைக் கூப்பிடாதீங்கனு சொன்னது, காலைல சாப்பிடலையானு அவர் அக்கறையா கேட்டதுனு அந்தப் பரிவான பார்வையும் அக்கறையான பேச்சும் தான்டி ஞாபகம் இருக்கு! மத்தபடி உருவமெல்லாம் ஒன்னும் எனக்குப் பெரிசா படலை” எனக் கூறிக் கொண்டே வந்தவளுக்கு அப்பொழுது தான், தான் கனவில் கண்ட அந்த ஆடவனுக்குத் தலையில் அடர்த்தியாய் கேசம் இருந்ததே என்ற நினைவு வர, கனவில் கண்ட முகத்தினை அவள் நினைவிற்குக் கொண்டு வர முயல, அது காலையில் அவள் கண்ட நித்தலனின் முகமாய் ஆனால் தலையில் முடியுடன் இருந்தது போல் தோன்ற, தான் கண்ட கனவிற்கான பயன் என்னவென அவளுக்கு விளங்கவேயில்லை.

குழப்பமான மனநிலையில் அவள் யோசித்துக் கொண்டிருக்க, இவர்களின் பேச்சினூடே நித்திலனின் அந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்திருக்க,

“இந்த நித்தில நினைவுகள் நிகழ்ச்சியில தினமும் ஒரு தலைப்புல நீங்க உங்கள் நினைவுகளை அலைபேசி வாயிலாகப் பகிர்ந்துட்டு வர்றீங்க இல்லயா! வழக்கம் போல நிகழ்ச்சியின் இறுதி பகுதியாய் அந்தத் தலைப்புடனான என்னோட நினைவுகளையும் இன்னிக்கு நான் பகிர்ந்துக்கப் போறேன்” என்ற நித்திலனின் பேச்சு இவ்விருவரையும் அந்நிகழ்ச்சியில் அவர்களின் கவனத்தை ஈர்க்க, அவனின் பேச்சை கவனிக்கலானார்கள்.

“இன்னியோட தலைப்பு நம்ம வாழ்க்கைல எங்கயோ எப்பவோ, “ஹே இவங்க நம்மளை போலவே யோசிக்கிறாங்களேனு யாராவது ஒருத்தரையாவது அப்படி நாம வாழ்க்கைல மீட் செய்யும் போது நினைச்சிருப்போம்ல அப்படி நீங்க மீட் பண்ண ஆளை பத்தின நினைவுகளைத் தான் பகிர்ந்துக்கச் சொல்லியிருந்தேன். நிறையப் பேரு நிறையச் சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டீங்க”

“நான் என் நினைவுகள்ல சொல்ல போறது இன்னிக்கு காலைல நான் மீட் செஞ்ச ஒருத்தங்களைப் பத்தி தான்” நித்திலன் கூறிய நொடி,
பவானி மற்றும் நிவாசினியின் பார்வை ஒன்றோடொன்று மோதியது.

“என் பெயரை சுருக்கி நித்தினு கூப்பிடுறது எனக்குப் பிடிக்காது. அது போல அவங்களுக்கும் நிவாஸ்னு அவங்க பெயரை கூப்பிடுறது பிடிக்காதுனு சொன்னது என்னைய ரொம்பவே கவர்ந்தது. ஹே நம்மைப் போல் ஒருவள் மொமண்ட் அது! என்னோட கெஸ்ல அவங்க பேரு நிவாசினியா தான் இருக்கனும். அந்த நிவாசினி தான் இன்னிக்கு என்னோட நினைவுகளில் இருந்தாங்க” மென் குரலில் உணர்வாய் அவன் கூறியிருக்க,

இங்கு நிவாசினிக்கு அவன் அவளருகில் அமர்ந்து கை பிடித்து, “உன் நினைவாகவே நான் இருக்கிறேன்” எனக் கூறியது போன்றதொரு உணர்வு தோன்ற, அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் குறுகுறுப்பை உணர்ந்தாள் அவள்.

அவனின் கூற்றில் பவானியோ, “என்னடி நடக்குது இங்க?” என்ற வகைப் பாவனையில் கண்களை உருட்டி கொண்டு நிவாசினியை பார்த்தாள்.

அங்கு நித்திலனோ நிகழ்ச்சியின் நிறைவு பாடலை நிவாசினிக்கு சமர்ப்பிப்பதாய் உரைத்து சென்று விட்டான்.

இருவருமே ஆர்வமாய் என்ன பாடல் போட போகிறானென அவளின் கைபேசியின் அருகேயே வந்திருக்க, அவன் போட்டதோ அவளின் நலம் அறிய எண்ணிய பாடல் தான்.

நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்

இருவருக்குமே இப்பாடல் அவள் காலை மயங்கி விழுந்ததை விசாரிக்கும் விதமாய் அவன் போட்டிருக்கிறானெனவே தோன்ற, வயிற்றில் பறந்த பட்டாம்பூச்சி சிறகு ஒடிந்து வயிற்றைப் பதம் பார்த்த உணர்வு எழுந்தது நிவாசினிக்கு.

சரியாய் அந்நேரம் மின்சாரமும் வந்திருக்க, “சரிடி தூங்குவோம்” எனக் கூறி முகத்தை முழுவதுமாய் மூடி படுத்து விட்டாள் நிவாசினி.

“ம்ஹூம் இங்க நடக்கிறது எதுவும் எனக்குச் சரியாபடலை” எனக் கூறிக் கொண்டே படுத்தாள் பவானி.

முகத்தை மூடியிருந்த நிவாசினியின் முகம் வாடி போயிருக்க, அச்சமயம் அவன் கையிலிருந்த நிநி டாட்டூ நினைவுக்கு வர, “ஒரு நி நித்திலன்.. அப்ப இன்னொரு நி?? அது யாரு? ஒரு வேளை அவங்களுக்குக் கல்யாணம் ஆகிருக்குமோ” எண்ணிய நொடியில் அந்த உணர்வை தாங்க முடியா நிலையில், அவளை மீறி அவளின் கண்களில் கண்ணீர் வழிய, அழுது கொண்டே உறங்கி போனாள் நிவாசினி.

— தொடரும்