என் நித்திய சுவாசம் நீ – 12

நித்திலனின் விரல் கட்டு அவிழ்க்கப்பட்டு முற்றிலுமாய்க் குணமடைந்த நிலையில், தேனிலவுக்கென அவர்கள் மாஞ்சோலையில் திட்டமிட்டிருந்த சுற்றுலா இடங்களுக்கெல்லாம் சென்று வந்தனர்.

அடுத்து வந்த ஒரு வாரம் முழுவதும் மாஞ்சோலையின் இயற்கை எழிலை வெவ்வேறு காட்சி கோணங்களில்(view point) கண்டு ரசித்தனர். கோதையாறு, மணிமுத்தாறு, பாபநாசம் காரையாறு என இவை அனைத்தும் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் காண, வெவ்வேறு கோணங்களில் பச்சை பசேலென அடர்ந்த காட்டினுள் ஊடுருவி பாயும் நதியாய்க் காட்சியளித்தது.

தேயிலை தோட்டத்தினுள் நின்று பலவிதமான  தாமிகளை(selfie) எடுத்து கொண்டனர்.  சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனைக்குச் சென்று வந்தனர்.  இயற்கை மூலிகை காற்றைச் சுவாசித்து வனாந்திர காட்டினுள் நடை பயணம் சென்று வந்தனர். 

மொத்தத்தில் இந்த மாஞ்சோலை சுற்றுலா பயணம் இவர்கள் இருவருக்கும் மறக்க முடியா நினைவுகளாய் மனப்பெட்டகத்தில் சேமிக்கப்பட்டது.

அன்று நித்திலனின் கையேட்டினில் படித்ததைப் பற்றி அவனிடம் ஏதும் வினவவில்லை நிவாசினி.  எப்பொழுதும் அவன் அவளிடம் அவனைப் பற்றி அவள் அறிந்து கொள்ள முற்படவில்லை எனக் கூறிக் கொண்டே இருப்பானே, ஆகையால் அவனிடம் கூறாது இக்கையேட்டினை படித்து விட்டு அவனைப் பற்றித் தனக்கு அனைத்தும் தெரியுமெனத் தக்க சமயத்தில் கூறி பெருமைபட்டு கொள்ளலாமென எண்ணினாள் நிவாசினி.

அவளின் திருமணத்திலேயே பவானியின் டீம் லீடர் அவளிடம் இவனது விமானப் பராமரிப்புப் பணியினைப் பற்றிக் கூறியிருந்தமையால், அதனைப் பற்றி மட்டும் அவனிடம் கேட்டாள்.  ஏன் அப்பணியினை விடுத்து இந்த வானொலி வேலைக்கு வந்தானெனக் கேட்டாள்.  அந்த வேலை மிகுந்த மனவுளைச்சலை தந்ததால் சற்று அதிலிருந்து விலகி இளைப்பாற இந்த வானொலி பணிக்குத் தற்காலிமாய்ச் சேர்ந்து கொண்டதாகவும், தற்போது அந்த விமானப் பணியில் அவன் விடுப்பில் இருப்பதாகவும், மீண்டுமாய் அதில் அவன் பணியாற்றுவானெனவும் உரைத்திருந்தான் நித்திலன்.

அவனின் முதல் காதல் பற்றி அவளறிய முற்படவில்லை. அது வீணான மனவலியையே உண்டு செய்யுமென அதைப் பற்றிக் கேளாது விட்டிருந்தாள்.  தினமும் ஒரு இடமென இருவரும் வெளியில் சென்று வந்து கொண்டிருந்ததால் அதன்பிறகு அவனின் கையேட்டினை படிக்கவும் நேரமற்று தான் போனது அவளுக்கு.  அக்கையேட்டினை பற்றி மறந்தே போயிருந்தாள் அவள் எனக் கூறலாம். 

பவானிக்கு நிவாசினி அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளனைத்தும் சிக்னல் பிரச்சனையால் அவளைச் சென்றடையாதிருந்தது.

தேனிலவினை நிறைவு செய்து மறுநாள் காலை சென்னைக்குக் கிளம்பலாமென முடிவு செய்து, அதற்கு முந்தைய நாள் முன் மாலை பொழுதில் அவர்கள் வழமையாய்ச் செல்லும் நீரோடைக்குச் சென்றிருந்தனர்.

அந்த நீரோடையின் ஓரமாய் இருந்த சிறிய குன்றில் அமர்ந்து காலை ஓடும் நீரில் வைத்துக் கொண்டு இருவருமாய்ப் பேசிக் கொண்டே நேரத்தை கடத்திக் கொண்டிருந்த நேரம், அவ்விடத்தை நோக்கி ஒரு மகிழுந்து வருவதைக் கண்டனர்.

அதில் ஓட்டுனர் இருக்கையிலிருந்த பாலனை கண்டதும் இருவரும் அவ்வண்டியினை நோக்கி செல்ல,  அவ்வண்டியின் பின்னிருக்கையிலிருந்து இறங்கியிருந்தனர் நிவாசினியின் வயதையொத்த ஒரு பெண்ணும், கல்லூரி படிக்கும் வயதிலுள்ள ஒரு பையனும்.

அதிலிருந்து இறங்கிய அப்பெண் நித்திலனை நோக்கி ஓடி வந்து அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு அவனின் நலனை தனது பார்வையால் ஸ்பரிசித்து ஆராய, நிவாசினிக்கு அது அவள் கனவில் வந்த பெண்ணெனக் கண்டதும் புரிந்து போயிற்று.

அப்பெண்ணைக் கண்டதும் நித்தலனின் முகம் முதலில் விகசித்துப் பின்பு கோபத்தைப் பிரதிபலித்தது.

தன் கையைப் பற்றியிருத்த அவளின் கையை உதறியவன், “இனி உன்னை எங்கேயும் நான் பார்க்கவே கூடாதுனு சொல்லிருந்தேனா இல்லையா?”  அவள் மட்டுமே கேட்கும் வகையில் அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான்.

அவனின் கோபத்தில் மனங்கலங்கிய அப்பெண்ணும், “இல்ல நிலன்! உனக்கு அடிபட்டிருக்குனு கேள்விபட்டு எப்படி நான் பார்க்காம இருக்க முடியும்” என அவன் மட்டுமே கேட்கும் வகையில் பரிதவிப்புடன் அவள் கூற,  அது அருகிலிருந்த நிவாசினியின் காதினிலும் விழுந்தது.

நிவாசினிக்கு இவளை கண்டது பேரதிர்ச்சி என்றால் அவளின் பேச்சு மேலும் அவளுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

நிவாசினியை தன்னருகே இழுத்து நிற்க வைத்த நித்திலன், “இவ பேரு நிவேதா! அவன் முத்தரசன்! பாலா மாமா பிள்ளைங்க இவங்க இரண்டு பேரும்”  என இருவரையும் நிவாசினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நிவாசினியின் மனம் மகிழ்வை இழந்து குழப்பத்தில் தத்தளித்தது.

“அன்னிக்கு ஹாஸ்ப்பிட்டல்ல கடைசியா கைல கட்டு அவிழ்க்க வந்தனைக்கு உன்னைப் பார்த்தேன்ல நித்திலன். அதை இவங்ககிட்ட சொன்னதும் உன்னைப் பார்த்தே ஆகனும்னு ஒரே அடம்! அதான் நாளைக்கு நீ கிளம்புறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவை பார்த்துடட்டுமேனு கூட்டிட்டு வந்தேன்ப்பா” என்றார் பாலன்.

முத்துவை கண்ட நித்திலனின் முகத்தில் பாசம் பரவ, அவனின் தலைமுடியை கலைத்து, “எப்படிடா இருக்க? காலேஜ்லாம் எப்படிப் போகுது?” எனக் கேட்டுக் கொண்டே நடந்தான்.

நித்திலன், நிவாசினி, நிவேதா, முத்தரசன் என அனைவரும் பேசிக் கொண்டே அவர்களின் விடுதியினை நோக்கி நடக்க, பாலன் வண்டியினை எடுத்துக் கொண்டு விடுதியினை நோக்கி சென்றார்.

விடுதிக்கு போகும் வழியில் தான் இந்த நீரோடை இருந்ததால் இங்கேயே இவர்களைக் கண்டதும் நேரே வண்டியை இங்குத் திருப்பியிருந்தார் பாலன்.

மாலைவேளை அவர்கள் விடுதியை அடைந்த நேரம் வானம் மேகமூட்டத்துடன் இருள் கவிய தொடங்கவும்,  “சரி நீங்கலாம் கிளம்புங்க! மழை பெய்ய ஆரம்பிச்சிட்டா மழைல வண்டி ஓட்டிட்டுப் போகக் கஷ்டமாயிருக்கும்” என நித்திலன் கூற,

“ஏன்ங்க வந்ததும் கிளம்பச் சொல்றீங்க? வீடு வரை வந்துட்டு எதுவும் சாப்பிடாம போனா நல்லாவா இருக்கும்.  இருங்க நான் காபி போடுறேன்! எல்லாரும் காபி குடிப்பீங்க தானே” எனக் கேட்டுக் கொண்டே சமையலறை நோக்கி சென்றாள் நிவாசினி. 

“அய்யோ பால் இல்லையே! எல்லாரும் கடுங்காபி குடிப்பீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து அவள் வெளிவர, “தங்கமான பொண்ணுபா” என நிவாசினியை பற்றி நித்திலனிடம் புகழ்ந்து கொண்டிருந்தார் பாலன்.

சிரித்துக்கொண்டே நிவாசினியின் அருகில் வந்த நிவேதா, “நீங்க அன்பா எது கொடுத்தாலும் நாங்க குடிப்போம் ஹனிமா” என அவளின் கை பற்றி நட்பாய் இவள் கூற,

அவளின் ஹனிமா அழைப்பில் சற்று முகம் சுருங்க, அங்கிருந்து சென்று விட்டாள் நிவாசினி.

மீண்டுமாய் அவளுடன் சமையலறை நோக்கி நிவேதா செல்ல, “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” எனக் கேட்டாள் நிவாசினி.

“சொல்லுங்க ஹனிமா” என அவள் கூறவும், “என்னை ஹனிமானு கூப்பிடாதீங்க!  அப்படிக் கூப்பிடுற உரிமை அவருக்கு மட்டும் தான் உண்டு! தப்பா எடுத்துக்காதீங்க! நீங்க என்னை ஹாசினினு கூப்பிடலாம்”  என நிவாசினி கூறவும், கண்கள் மின்ன தான் அவளைப் பார்த்திருந்தாள் நிவேதா.

அவர்கள் நீரோடையிலிருந்து விடுதிக்கு நடந்து வரும் வழியில் நித்திலன் நிவாசினியை ஹனிமா என அழைத்ததை வைத்து தான் இவள் இவ்வாறு அழைக்கிறாளென எண்ணியே நிவாசினி அவ்வாறு வேண்டுகோள் வைத்தாள்.

சரியெனத் தலையசைத்த நிவேதா, சமையலறை தாண்டி பின் கட்டிலிலுள்ள பரந்தவெளி இடத்தில் வானத்தை ரசித்தவாறு நின்றுக் கொண்டாள்.

முகப்பறையில் அமர்ந்திருந்த பாலன் மற்றும் முத்தரசனுக்குக் காபியினை வழங்கியவள், நித்திலனை தேடி பின்கட்டிற்குள் செல்ல,  அங்கு அவனிடம் பேசி கொண்டிருந்தாள் நிவேதா. 

“நிவாசினிக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா நிலன்?” என எங்கோ வெறித்து நோக்கியவாறு அவள் கேட்க,  இல்லையெனத் தலையசைத்தான் நித்திலன்.

அதற்கு மேல் அவர்கள் பேசுவதைக் கேட்கும் திறனற்றவளாய் சமையலறை சென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் நிவாசினி.

“நாம சில்லுனு ஒரு காதல் குந்தவி போல இருக்கனும்னு நினைச்சா இவங்க இரண்டு பேரும் என்னைய அழகி படத் தேவயானி போல நடந்துக்க வச்சிடுவாங்க போலயே! இதென்ன புதுப் பிரச்சனை முருகா” என மனதோடு புலம்பி கொண்டாள் நிவாசினி.

“நான் சொல்றதை கேளு நிவேதா! நம்மளோடது எந்தமாதிரியான உறவுமுறையா இருந்தாலும் அது என் திருமண வாழ்வுல பிரச்சனை உண்டு பண்ணும்ன்ற பட்சத்துல அதை நாம வளர்த்துட்டுப் போறது எனக்கு எந்தவிதத்திலும் சரினு படலை”  திட்டவட்டமாய்த் தீர்க்கமாய் அவன் உரைக்க,

அவனுரைத்தது மனதை வதைத்து வலிக்கச் செய்தாலும் அது தானே நிதர்சனம் என்றெண்ணிய நிவேதாவும் கலங்கிய கண்களைத் துடைத்தவளாய், “எனக்கு எப்பவும் உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் நிலன்! என்னால உன் சந்தோஷத்துக்குப் பங்கம் வந்தா கண்டிப்பா என்னால தாங்கிக்க முடியாது.  நான் சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கிறேன்.  அப்ப தான் இது எல்லாத்துலருந்தும் வெளி வந்து நான் நிம்மதியா இருக்க முடியும்” என அவள் கூறவும், அதை வெகுவாய் ஆமோதித்தான் நித்திலன்.

“நான் பாலா மாமாட்ட பேசிறேன்! உன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றேன்” அவன் கூறவும்,

கோப கனலாய் அவன் முகம் நோக்கியவள், “அதான் உனக்கும் எனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டல!  இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்.  நீ ஒன்னும் அதுல தலையிட தேவையில்ல”  காட்டமாய் உரைத்து முகப்பறை நோக்கி ஓட்டமாய் அவள் நடக்க,

சமையலறை தாண்டி தானே முகப்பறை செல்ல முடியும்.  அவள் கோபமாய்ச் சமையலறை தாண்டி செல்ல, அவளைத் தொடர்ந்து “நிவே..”எனக் கூறியவாறே பின்னே சென்றவன் சமையலறையைக் கடக்கையில் அங்கிருந்த நிவாசினியை பார்த்து அங்கேயே நின்று விட்டான்.

அவனின் நிவே அழைப்பில் நிமிர்ந்து அவனைக் கண்டவளின் கண்களில் ஏகத்துக்கும் ஏமாற்றமும் பரிதவிப்பும் சூழ்ந்திருந்தது.  கண்ணீர் அணை தாண்டி உடைப்பெடுக்கக் காத்திருந்தது.

தாங்கள் பேசியதை அவள் கேட்டிருப்பாளோ என எண்ணியவாறே நிவாசினியின் அருகில் செல்ல அவன் முற்பட்ட சமயம், “நித்திலன் நாங்க கிளம்புறோம்” என அழைத்தார் பாலன்.

அவன் முகப்பறை செல்லவும் உடன் எழுந்து இவளும் செல்ல, “இருங்கப்பா அண்ணாகிட்ட நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்”  எனக் கூறி நித்திலனை தனியே அழைத்துச் சென்றான் முத்தரசன்.

நித்திலன் முத்தரசனை அந்தத் திறந்தவெளி இடத்திற்கு அழைத்துச் சென்று, “என்னடா பெரிய மனுஷா? என்ன சொல்லனும் என்கிட்ட”  அவன் தலை வருடி ஆதுரமாய்க் கேட்டான் நித்திலன். அவன் கண்களை அவனைப் பாசமாய் ஸ்பரிசித்திருந்தது. 

“நல்லா வளர்ந்துட்டடா! காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.

“இல்ல அண்ணா! எனக்கு எல்லா விஷயத்துலயும் இன்ஸ்பிரேஷன் நீங்க தான் அண்ணா!  உங்களைக் கேட்டு தானே மரைன் என்ஜினீயரிங் எடுத்து இப்ப படிச்சிட்டு இருக்கேன்!  இப்ப ஒரு குழப்பம்” எனக் கூறி அவன் சற்றாய் தயங்க,

“என்னடா தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லுடா” என அவனை இவன் ஊக்க,

“லவ் பண்றதை பத்தி என்னணா நினைக்கிறீங்க?” எனக் கேட்டான்.

“டேய் யாரையும் லவ் பண்றியாடா?” எனக் கண்கள் மின்ன பூரிப்பில் அவன் கேட்க,

“இல்லணா நீங்க நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க” அவன் அக்கேள்வியிலேயே நிற்க,

“ஹ்ம்ம் லவ் பண்றது தப்பில்லைடா! ஆனா நீ பண்றது லவ் தானான்ற தெளிவு உனக்கு இருக்கனும்.  நம்ம வாழ்க்கை முழுவதும் நிறையப் பேரை கடந்து போவோம்.  சில பேரை தான் நம்ம வாழ்க்கை முழுக்க இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்! அதுக்காக அப்படித் தோணுற எல்லாரையும் நம்ம காதலிக்கிறோம்னு அர்த்தம் இல்ல. அப்படி நமக்குத் தோணுற நபர்கள்ல யாரு நம்மளோட குணத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஒத்து வருவாங்கனு பார்த்து காதலிக்கனும்னு தான் நான் சொல்லுவேன். ஏன்னா காதல் வேணா உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட பொதுவான விஷயமா இருக்கலாம்.  ஆனா உங்க இரண்டு பேரோட வாழ்க்கையைச் சார்ந்து யாரெல்லாம் இருக்காங்கனு யோசிச்சு அவங்களுக்கு உங்க கல்யாணம் எந்த விதத்துலயும் பிரச்சனையை உருவாக்காம இருக்கனும்னு நினைச்சு தான் முடிவு செய்யனும்.  இதெல்லாம் டீன் ஏஜ்ல யோசிக்கத் தோணாது.  மனசு அப்ப காதலை உணர்வுபூர்வமா தான் அணுகும்.  இப்படி என் வயசுல தான் காதலையும் அறிவுபூர்வமா யோசிக்க வைக்கும். இதை எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் காதல்ல முக்கியம் பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் தான்” நீண்ட விளக்கமாய் அவன் கூறி முடிக்க,

நித்திலனின் கைகளைப் பற்றிக் கொண்டு “தேங்க்யூ அண்ணா! இரண்டு நாளா மனசு ரொம்பக் குழப்பமா இருந்துச்சு.  இப்ப தெளிவாகிட்டேன் அண்ணா”  எனக் கூறி அணைத்துக் கொண்டான் முத்தரசன்.

முத்துவை அணைத்திருந்த நித்திலன் நிமிர்ந்து பார்க்க, சற்றாய் தெளிந்த முகத்துடன் பின்கட்டு வாசலில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டே அவனைப் பார்த்திருந்தாள் நிவாசினி.

முத்து எதற்காக இக்கேள்வியினைக் கேட்டானென நித்திலன் கேட்கவில்லை.
ஆயினும் அவனுக்குத் தேவையான அறிவுரை அளித்துவிட்ட திருப்தியில் இருந்தான். இருவருக்குமான பிணைப்பு இது தான். முத்துவிற்குத் தேவை எனும் போது ஆலோசனை வழங்கி ஒதுங்கி விடுவான் நித்திலன். ஏன் எதற்கெனக் கேள்விகள் கேட்க மாட்டான். அதுவே முத்துவை நித்திலனிடம் வெகுவாய் ஒட்டுதலுடன் பழக வைத்தது. அவனே உழன்று எழுந்து பாடம் கற்று கொள்ளட்டுமென விட்டு விடுவான். அனுபவத்தை விடப் பெரிய பாடத்தை எவரும் வழங்க இயலாதெனத் தெரிந்து வைத்திருத்தான் நித்திலன்.

மூவரும் இவர்களிடம் விடைபெற்று செல்ல, இங்கு நிவாசினி மறுநாள் காலை பயணத்திற்காகத் துணிகளை அடுக்கி கொண்டிருந்தாள்.

அவளாய் தன்னிடம் ஏதும் கேட்பாளென இவன் காத்திருக்க,  இரவுணவு உண்டு படுக்கும் வரையில் அவள் அவனிடம் ஏதும் கேட்கவும் இல்லை. கலகலவெனப் பேசவும் இல்லை.  எதையோ மனதிற்குள் யோசித்தவளாய் அவள் சுற்றி கொண்டிருப்பதை அவதானித்திருந்தான்.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவளை தன்னருகில் அவனிழுக்க,  அவன் மார்பில் புதைந்து கொண்டாள். 

“அடியே என் ஹனி பொண்ணே, என்கிட்ட எதுவும் கேட்கனும்னு தோணுச்சுனா கேட்டுடு! இப்படி உனக்குள்ளயே வச்சு மருகாத”  அவன் மார்பிலிருந்த அவள் தலையினைக் கோதியவாறே அவன் கூற,

தன் தாடையை அவன் நெஞ்சில் பதித்து நிமிர்ந்து நோக்கியவள், “நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே!” எனக் கேட்டாள்.

சற்றாய் சிரித்து மாட்டேனென அவன் தலையசைக்க,  எழுந்து அமர்ந்தவள், அவனின் சட்டை பொத்தானை திருகி கொண்டே, “நான் உங்களைச் சந்தேகபடுறேனு நினைக்காதீங்க ஆனா இனி அந்த நிவேதா பொண்ணுகிட்ட நீங்க பேச கூடாது” எனக் கூறினாள். 

அவன் கண்களில் ஆச்சரிய பாவனை விரவி வழிய சரியெனத் தலையை அசைத்து, பொத்தானை திருகிய அவளின் கையை மிருதுவாய் வருடினான்.  அந்நேரம் அவனின் அந்த நிநி டாட்டூ அவளின் கண்களுக்குப் புலப்பட, முத்தரசனிடம் நித்திலன் பேசியதை கேட்டதில் சற்றாய் அமைதியாகியிருந்த அவளின் மனம் இப்பொழுது இந்த டாட்டூவை கண்டதில் மீண்டுமாய்க் கலவரத்திற்குள்ளானது.

அவளின் கண்கள் வேதனையைப் பிரதிபலித்ததைப் பார்த்ததும், மீண்டுமாய் அவளை இழுத்து தன் கை அணைப்பிற்குள் வைத்து கொண்டவன், “உனக்குப் பிடிக்காதது நான் என்னிக்கும் செய்ய மாட்டேன்டா!  இனி நான் நிவேதாகிட்ட பேச மாட்டேன் சரியா” என அவன் ஆதுரமாய் அவள் தலை கோதி கூற,  இவளின் மனம் அந்த டாட்டூவிலேயே நின்று நிலைகொள்ளாமல் தவித்தது. 

இது இந்த நிநி நித்திலன் நிவேதாவாக இருக்குமோ என அவளின் மனம் சந்தேகம் கொண்டு பதறியது.  இதை அவனிடம் கேட்டால் நிச்சயமாய் அவள் அவனைச் சந்தேகபடுவதாய் எண்ணுவான்.  அதிலும் தீர விசாரிக்காமல், கண்ணால் கண்ட காட்சிகளையும் கனவினையும் வைத்துச் சந்தேகிப்பதும், அதைக் கேட்டு சண்டையிடவதும் முறையற்ற செயலென எண்ணியே இத்தனை நேரமாய் நித்திலனிடம் ஏதும் அவள் கேளாது இருந்தாள்.  ஆனால் இப்பொழுது இந்த டாட்டூ,  இதைச் சந்தேகிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. 

சென்னை சென்றதும் அவனது அண்ணியிடம், அவனது அண்ணணின் அங்கத்தில் எங்கேனும் நிநி டாட்டூ உள்ளதா என வினவ வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டாள். 

அதன்பின் மனம் சற்றாய் சீராக நிமிர்ந்து அவள் அவனைப் பார்க்க,  அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான்.

இவளும் அவனை அணைத்தவாறு உறங்க முற்பட, அவ்வப்போது வந்து செல்லும் ஃபோன் நெட்வொர்க்கினால் நித்திலனின் வாட்ஸ்சப் சத்தம் அவள் செவியைத் தீண்டியது. 

நித்திலன் நிவாசினி இருவருமே தங்களது கைபேசியின் தொடுதிரையின் வரைவு கடவுச்சொல்லை மற்றவருக்குத் தெரிவித்திருந்தனர்.

அவளெடுத்து பார்க்க, “நாளைக்குக் கிளம்புறீங்களா?” எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் அவனின் அண்ணன் நிரஞ்சன்.

நிரஞ்சன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததோ அவர்களது வாட்ஸ்சப் குடும்ப க்ரூப்பிற்கு.

“இப்படி ஒரு ஃபேமிலி க்ரூப் வாட்ஸ்சப்ல  வச்சிருக்காங்களா? என்னை ஏன் அந்த க்ரூப்ல ஆட் பண்ணலை இன்னும்?” என எண்ணியவாறே அதிலிருந்த குறுஞ்செய்திகளை அவள் படிக்க,

அதில் பார்த்த ஒரு செய்தியில் அவள் கண்கள் அதிலேயே நிலைக்குத்தி நின்றது.

“அடேய் அண்ணா முதல் வேலையா நாளைக்குப் போய் உன் நெஞ்சுல நிநினு டாட்டூ குத்திக்கிற”  என நித்திலன் அனுப்பியிருந்தான்.

அன்று அவர்கள் அந்தப் பேருந்தில் பயணப்பட்டிருந்த போது, இவன் அந்த நிநி விளக்கம் கூறிய பிறகு அன்றிரவு இந்தச் செய்தியை அனுப்பிருக்கிறானெனப் புரிந்தது. 

தன்னிடம் பொய்யுரைத்திருக்கிறான், தன்னை ஏமாற்றியிருக்கிறானென அவளுக்குப் பெருங்கோபம் எழுந்தது அவன்மீது. 

அந்த நிநி நித்திலன் நிவேதா தானா? அவனின் பழைய காதலை தன்னிடம் மறைக்க விதவிதமாய்த் தன்னிடம் பேசியிருக்கிறானா எனக் கோபம் வந்தது அவளுக்கு. 

ஆனால் அவன் என் மீது வைத்த அன்பு உண்மையாயிற்றே! இது நாள் வரை அவன் அன்பில் பொய்யை நான் கண்டதில்லையே என அவள் மனம் அவனுக்காகப் பேச,  அன்பு உண்மையாய் இருந்தால் பொய்யுரைக்கலாமா? ஏமாற்றலாமா? என மூளை கேள்வி கேட்க,  இப்படியான மூளைக்கும் மனதிற்குமான வாக்குவாதத்தில் சோர்ந்து உறங்கி போனாள்.

மறுநாள் காலை அவள் காணப்போகும் கனவின் பயனாய் அவனை விட்டு பிரிந்து செல்லும் முடிவினை எடுக்கவிருப்பதை அறியாத பேதையவளும் ஆழ் உறக்கத்திற்குள் சென்றாள்.

— தொடரும்