என் நித்திய சுவாசம் நீ – 11

வெம்மையாய் வெயில் தகிக்க வேண்டிய மதிய வேளையதுவும் சூல் கொண்ட மேகத்தினால் சில்லென்ற காற்று வீச, இருள் கவிழும் மாலை நேரமாய்க் காட்சியளித்தது.

சுழற்றியடித்த காற்றினோசையில் வீட்டின் பின் கட்டிற்கு வந்த நிவாசினி, அங்கிருந்த மரத்தூணினருகே நின்று, அந்த இயற்கையை ரசிக்கலானாள்.

சில்லென்ற காற்றுடன் சிறு துளியாய் மழை வீச தொடங்க, சாரல் முகத்தில் விழும் வண்ணம் சற்றாய் வெளியே முகத்தை வானத்தை நோக்கி நீட்டி, அம்மழை துளியை முகத்திலேற்றுக் கண் மூடி அணு அணுவாய் அவள் ரசித்துச் சுகித்திருந்த நேரம், பின்னின்று அணைத்திருந்தான் நித்திலன்.

அந்த விபத்து நிகழ்ந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் அவனின் கையில் போடப்பட்டிருந்த பெரிய கட்டு சுருங்கி தற்போது விரல்களுடன் சேர்த்து மணிக்கட்டு வரை மட்டுமே போடப்பட்டிருந்தது.

தினமும் வீட்டிலேயே சமைத்து, துணி துவைத்து, அவனுக்கு வேளாவேளைக்கு மருந்து கொடுத்து என அனைத்து வேலையும் இழுத்து போட்டுச் செய்து கொண்டிருந்தாள் நிவாசினி. வீட்டை சுத்தம் செய்வதற்கும், வெளியில் பொருட்களை வாங்கி வருவதற்கு மட்டுமென வேலையாள் வைத்து கொண்டாள். அவளின் செயல் எதையும் தடுக்கவில்லை. அனைத்தும் அவள் விருப்பமென விட்டுவிட்டான் அவனும்.

தினமும் மாலை வேளையில் இருவருமாய் நீரோடைக்குச் சென்று துணி துவைத்து எடுத்து வருவர். துவைக்கும் நேரம் தன்னாலான உதவியை அவளுக்குச் செய்வான் நித்திலன். அதற்காக மட்டுமே தினமும் வெளியே சென்று வந்தனர் இருவரும்.

இன்று மதிய வேளையில் அவனுக்கு உணவினை வழங்கிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவி வைக்கவென அவள் வேலை செய்து கொண்டிருந்த நேரமே இந்த மழை வர, ரசிக்கத் தொடங்கினாள் அவளும்.

முகத்தில் தெறிக்கும் சாரலின் குளுமையும் கழுத்தில் உராயும் அவன் மூச்சின் வெம்மையும் அவளைச் சிலிர்க்க செய்ய, தனது கையைப் பின்னோக்கி எடுத்து சென்று அவனது சிகையைக் கோதியிருந்தாள் அவள்.

“இப்படி ஊத காத்து உடலை உரச, உங்க கையணைப்புல இருந்துட்டு இந்தச் சாரல் மழையை ரசிக்கிற சுகம் இருக்கே! கோடி பணம் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதுப்பா. எல்லாம் தானா அமைஞ்சு வரனும்” எனக் கண் மூடி அந்நொடியினை ரசித்துணர்ந்து கூறினாள்.

மழையின் நிமித்தமாய்
மண் வாசனையை
நாசி நுகரும் சமயம்,
என் நாசியை நிரப்பிடும்
உன் கூந்தலின் வாசமென
உன்னுடன் நானிருக்கும்
இவ்வினிய பொழுதுகள்
ஏகாந்தமடி எனக்குச் சகியே!

பின்னின்று அணைத்திருந்தவன் அவளின் கழுத்து வளைவில் படர்ந்து விரிந்திருந்த கூந்தலில் தனது முகத்தினை இருத்தி வைத்து வாசனையை உள்ளிழுத்து உரைத்திருந்தான் இக்கவிதையை.

சட்டென அவன் புறம் திரும்பியவளின் கண்கள் காதல் பெருமிதத்தில் மிளிர, “செம்மயா கவிதை சொல்றீங்கபா! நல்லா பாடுறீங்க! கவிதை எழுதுறீங்க! ரேடியோல நல்லா பேசுறீங்க! வேறென்னலாம் தெரியும் உங்களுக்கு?” என அவள் கேட்க, மென்னகை புரிந்தான் அவன்.

“ஆனா எனக்கு இப்படி எதுவும் தெரியாதுங்க” முகத்தை மூஞ்செலி போல் சுருக்கி கூறியவள், “எப்படியோ அரியர்ஸ் இல்லாம என்ஜினீயரிங் க்ளியர் பண்ணி ஒரு வேலை வாங்குறதுக்குள்ளேயே நாக்கு தள்ளிடிச்சு” அவள் பேசிக் கொண்டே போக,

“எனக்காக உன் மனசுலருந்து என் மேல இருக்கும் உன் காதலை வெளிபடுத்துற மாதிரி நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்குக் கவிதை தான்டா ஹனி” எனக் கூறி அவள் நெற்றியில் அவன் முட்ட,

“ஆஹா இன்னிக்கு கவிதை மோட்ல இருக்கீங்க போலயே” எனக் கூறி அவள் சிரிக்க, அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, “கம் லெட்ஸ் என்ஜாய் திஸ் க்ளைமேட்” என அவளை உள்ளே அழைத்துச் செல்ல அவன் இழுக்க,

“க்ளைமேட் என்ஜாய் பண்ணனும்னா வெளில தானே இருக்கனும். உள்ளே போய் என்ன செய்றது?” என அவன் இழுப்பிற்குப் போகாமல் அவள் நிற்க,

“உள்ளே எப்படி க்ளைமேட் என்ஜாய் செய்றதுனு நான் சொல்லி தரேன் என் பொண்டாட்டி” எனக் கண் சிமிட்டி குறும்பாய் உரைத்து அவளை உள்ளழைத்து சென்று கதவை அடைத்தான் நித்திலன்.

தங்களது ஆயுட்காலம் முழுவதும் இங்கேயே இருந்துவிடலாமோ என்று எண்ணும் வண்ணம் நாட்கள் இனிமையாய் சென்று கொண்டிருந்தது அவர்களுக்கு.

விபத்து நிகழ்ந்து மூன்று வாரங்கள் கடந்திருந்த நிலையில் நித்திலனின் கையிலிருந்த கட்டு விரலிற்கு மட்டுமாய்ப் போடப்பட்டிருந்தது இப்பொழுது.

பாலனிடம் இந்த விபத்தினைப் பற்றி ஏதும் உரைக்கவில்லை நித்திலன்.

இன்று அந்த ஹை ஸ்கூல் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தனது வண்டியினை எடுத்து வருவதாய் உரைத்து நிவாசினியை தனியே விட்டுச் சென்றான் நித்திலன்.

ஏதேனும் புத்தகத்தினைப் படித்துப் பொழுதை கழிக்கலாமென எண்ணி பெட்டியில் அடுக்கியிருந்த புத்தகத்தினை ஒவ்வொன்றாய் அவள் பார்க்க, அதில் கிடைத்தது நித்திலனின் கையேடு(diary).

நித்திலன் அறையிலிருந்த புத்தகங்களை எடுத்து வைக்கும் போது, இதையும் கவனிக்காமல் எடுத்து வைத்திருக்கிறாள் எனப் புரிந்தது அவளுக்கு.

தனது கணவனின் கையேடு தானே, படித்துப் பார்ப்போமென எண்ணி பக்கங்களை அவள் புரட்டி பார்க்க, அக்கையேட்டில் வரிசையாய் அல்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சீரற்ற முறையில் ஆங்காங்கே தேதி குறிப்பிட்டு நிகழ்வுகள் எழுதப்பட்டிருந்தது.

இவளும் அதே போல் ஏதோ ஒரு பக்கத்தினைப் புரட்டி பார்க்க, அங்கு ஒரு புகைபடத்தினைக் கண்டாள் அவள். பின்னணியில் விமானம் இருக்க அதன் முன் விமானப் பராமரிப்பு பொறியாளருக்கான வெள்ளை சீருடையுடன், தலையில் இடம்பெற்ற தொப்பியுமாய்ப் பளிச்சென்ற புன்னகையுடன் வெகு அழகாய் காட்சி தந்தான் அவன்.

அப்புகைப்படத்தை ஆசையாய் வருடிப் பார்த்து கொண்டிருந்தாள் நிவாசினி.

“ரொம்ப வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்களே! இந்த ட்ரஸ்ல செம்ம ஹேண்ட்சம்மா இருக்கீங்கப்பா” அந்தப் புகைப்படத்திலிருந்த அவனுடனேயே பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

அந்தப் புகைப்படம் இருந்த அந்தப் பக்கத்தினுள் அவன் என்ன எழுதி வைத்திருக்கிறானெனப் பார்க்கலானாள்.

25 மார்ச் 2011 எனத் தேதியிட்டு கீழுள்ளதை தான் எழுதியிருந்தான் அவன்.

‘சின்ன வயசுல வீட்டுல இருக்க எல்லா எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் ரிபேர் செய்றேன்னு சொல்லி, எடுத்துப் பிரிச்சி போட்டுத் திரும்பக் கனெக்ட் பண்ணினு பார்த்துட்டு இருப்பேனாம். அம்மா அடிக்கடி சொல்வாங்களாம் இவன் இன்ஜினியரா தான் ஆகப் போறான்னு. எனக்கும் வளர வளர ஃபேன், லைட், மிக்ஸி, டிவி, ரிமோட், கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்றதுனு அதுலலாம் ஆர்வம் அதிகமா இருந்துச்சு. என்ஜினீயரிங்னு முடிவு செஞ்சி ப்ளஸ் ஒன் அண்ட் ப்ளஸ் டூ அதுக்கேத்த க்ரூப் எடுத்துப் படிச்சி முடிச்ச பிறகு, என்ன என்ஜினீயரிங் படிக்கலாம் எலக்ட்ரிகல் ஆர் எலக்ட்ரானிக்ஸ்னு யோசிச்சப்போ, நாம ஏன் ஃப்ளைட் ரிபேர் செய்ற வேலையைக் கத்துக்கக் கூடாதுனு தோணுச்சு அண்ட் தட்ஸ் வேர் ஐ காட் மை கோல் இன் ஃலைப். அன்னிலிருந்து இந்த டிரஸ் போட்டு வேலை பார்க்கிற நாளுக்காகத் தான் ரொம்பவே காத்துட்டு இருந்தேன். படிப்புக்காகவே நிறைய நேரம் செலவழிச்சு டிஸ்டிங்ஷென்ல பாஸ் செஞ்சி அடுத்து ஒரு வருஷம் ட்ரைனிங்க் போய்… ஹப்பாஆஆ ஃபைனலி இட் ஹேப்பண்ட் டுடே. I’m a Aircraft Maintenance Engineer Now in Indigo Air lines”

அவனருகில் இருந்து அவள் காதில் சத்தமாய்க் குதூகலமாய் , “I’m a aircraft Maintenance engineer Now” எனக் கத்தியது போல் தோன்றியது அவளுக்கு இதனைப் படிக்கும் போது.

அவனது புகைப்படத்தின் பின்னே ஒரு காகித துண்டு இருக்க, அவனை ஒரு பத்திரிக்கையில் இன்டர்வியூ செய்ததை அவன் கத்தரித்து வைத்தது போல் இருந்தது அது.

அதில் தூய தமிழில் விமானப் பராமரிப்பு பணி என்றால் என்ன என விலாவரியாய் விளக்கப்பட்டிருந்தது.

விமானப் பராமரிப்பு பொறியாளரின் பணியானது, பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில் விமானம் மிகச் சிறந்த முறையில் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் தொழில் நுட்ப கோளாறுகளைச் சரி செய்ய வேண்டும். உச்ச நிலையில் விமானத்தைச் செலுத்துவதற்கு உதவி புரிய வேண்டும். தொடர்ச்சியான பராமரிப்பு செயல்பாடுகளை விமானத்தில் மேற்கொள்ள வேண்டும். விமானப் புறப்பாட்டுக்கு முன் பயணிகளின் இருக்கையில் உள்ள பெல்ட் பற்றுக் கருவியில் சரியாகப் பொருந்துகிறதா என்றும் சோதனை செய்ய வேண்டும்.

இத் தொழிலில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. விமானப் பாதுகாப்புப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த ஊழியர்கள் விமானப் பணியாளர் குழுவையும், வாடிக்கையாளர்களையும் சார்ந்து இருக்கின்றனர்.

இவ்வாறாக அதில் விளக்கப்பட்டிருக்க அதன் பிறகு எவ்வாறு இந்தப் பணியை நித்திலன் தேர்ந்தெடுத்தான், அதற்கு எவ்வாறு அவன் தன்னைத் தயார் செய்து கொண்டான், வருங்கால மாணவர்கள் இப்பணியினில் சேர என்ன செய்ய வேண்டுமெனக் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவனுடைய பதில் போடப்பட்டிருந்தது. அந்த இன்டர்வியூவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அவன் அங்கே வைத்திருப்பது எனவும் புரிந்தது அவளுக்கு.

“இன்டர்வியூ எடுக்குற அளவுக்குப் பெரிய ஆளா இவங்க? ஒரு வேளை பெங்களூர் தமிழ் நியூஸ் பேப்பர் பதிப்புக்காக இவர் தமிழ்ங்கிறனால ஸ்டூடண்ட்ஸ்க்கு என்ன கோர்ஸ் எடுத்து படிக்கனும்ன்ற கேள்விக்குப் பதில் சொல்றது போல இவரை இன்டர்வியூ செஞ்சிருப்பாங்களோ? என்னவா இருந்தாலும் எவ்ளோ ஆசையா லட்சியமா எடுத்து இதைப் படிச்சிருக்காங்க. எவ்ளோ ஆசையா இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க. அப்புறம் ஏன் அதை விட்டுட்டு இந்த RJ வேலையை இப்ப பார்க்கிறாங்க” அவளின் மூளை கேள்வி எழுப்ப, அவன் வந்ததும் அவனிடமே இக்கேள்வியினைக் கேட்கலாம் என மனதினுள் எண்ணிக் கொண்டாள்.

அடுத்ததாய் அதே போல் ரேண்டமாய் ஒரு பக்கத்தினை எடுத்தவள் தொடர்ந்து படிக்கலானாள்.

15 Jul 2014

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

‘இந்த மாதிரி ஆஹா ஓஹோனு அழகில்லை தான் அவ! ஆனா அவளைப் பார்த்ததும் ஏன் அவ்ளோ பிடிச்சிதுனு தெரியலை! முதல் தடவையா தனியா வந்திருப்பா போல! கண்ணுல ஒரு மிரட்சி, சுத்தி முத்தி பார்த்து அவளுக்குள்ளேயே பேசிகிட்டுத் தன்னைத் தானே தேத்துகிட்டுனு அவளைப் பார்க்க பார்க்க திகட்டவேயில்லை! பார்த்துட்டே இருக்கனும் போலத் தானே இருந்துச்சு! ஹ்ம்ம் அவ யாரா வேணா இருந்துட்டு போகட்டும்! ஆனா என் வாழ்க்கைல முதன் முதல்ல நான் பார்த்து ரசிச்ச பொண்ணு இவ தான்!’

அந்தப் பாடலுடன் இதை எழுத்துவிட்டு அருகில் ஒரு ஸ்மைலியை வரைந்திருந்தான்.

இதைப் படித்துவிட்டு நிவாசினி பதறியெல்லாம் போகவில்லை.

“இவங்களுக்கு எதுவும் க்ரஷ் இருந்திருக்குமோ! லவ் ஃபெய்லியர் ஆர் ஒன் சைட் லவ்னு இருந்திருக்குமோ? அதான் இத்தனை நாள் கல்யாணம் செஞ்சிக்காம இருந்துட்டாங்களோ? இந்தக் காலத்துல கல்யாணம் ஆகுற வரைக்கும் யாரையும் லவ் பண்ணாம இருங்கிறவங்க ரொம்பவே குறைவு தான்? அந்தக் குறைவான ஆட்கள்ல என் நித்திப்பா இல்லையோ?” எனப் பெருமூச்செறிந்தவள்,

“சோ இவருக்கு க்ரஷ் ஆர் பாஸ்ட் லவ் ஏதோ இருக்கு” நினைக்கும் போதே அவளின் மனம் சுணங்க தான் செய்தது.

இதை ஸ்போர்ட்டிவ்வாய் எடுத்துக் கொள்ள நினைத்தாலும் மனம் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய்க் காற்று போன பலூனாய் சுருங்கவாரம்பிக்க, அந்தக் கையேட்டினை மூடி வைத்து விட்டு படுத்து கொண்டாள்.

மனம் பவானியை தேடியது. விபத்து நடந்த அன்றே பவானிக்கு குறுஞ்செய்தி அனுப்ப எண்ணினாள்! ஆயினும் தனது கணவருடன் தேனிலவு சென்றிருக்கும் அவளைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை நிவாசினிக்கு.

தற்போது இவர்கள் இங்கு வந்து மூன்று வாரம் கடந்திருக்க, இப்பொழுது பவானி எங்கிருப்பாளென யோசித்துக் கொண்டே தனது கைபேசியை எடுத்து பார்த்தாள்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் நெட்வொர்க் சிக்னல் குறைவாகவே இருக்க, ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் அது போய்ச் சேர அரை நாளானது.

அவர்களின் திட்டப்படி பவானியும் அபிநந்தனும் தேனிலவை முடித்து விட்டு அவரவர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும் இந்நேரம் என மனதில் எண்ணிக் கொண்ட நிவாசினி, பிறகு அவளிடம் பேசி கொள்ளலாமென எண்ணி கைபேசியை ஓரமாய் வைத்து விட்டு உறங்கி போனாள்.

வெள்ளை புகையாய் ஒரு இடம் காட்சியளிக்க அங்கு வட்டமாய் இருந்த மேஜையைச் சுற்றி மூன்று நாற்காலிகள் இருக்க, ஒரு நாற்காலியில் இவள் அமர்ந்திருக்க, மற்றொன்றில் நித்திலன் அமர்ந்திருக்க, மூன்றாவதாய் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ஒரு நங்கை.

நிவாசினி நாணமாய் நித்திலனின் முகத்தைப் பார்த்திருக்க, கலகலப்பாய் பேசி கொண்டிருந்தனர் அந்நங்கையும் நித்திலனும். இடையிடையே இவளும் அவர்களின் பேச்சுகளுக்குப் பதிலுரைத்தபடி இருக்க, திடீரெனக் கையில் சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தினை ஏந்திய அந்த நங்கை, நித்திலனை நோக்கி அதை நீட்டி, “ஐ லவ் யூ” எனக் கூற, நிவாசினியின் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்தது. நித்திலன் அந்தப் பெண் கூறியதை சிரிப்புடன் ஏற்று அந்தப் பூங்கொத்தை பெற்றுக் கொள்ள, நிவாசினியின் மனமோ வெகு படபடப்பாய் துடித்து உயிர் வதைப்படும் வேதனையை அனுபவிக்க,

அத்தகைய மனவலியுடனேயே சீரற்ற மூச்சுடன் அதிர்ந்து விழித்தாள் நிவாசினி.

‘ப்பா எவ்ளோ கொடூரமான கனவு’ என எண்ணி கொண்டு, ‘ஹாசினி ரிலாக்ஸ்’ எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நீரை எடுத்து பருகினாள். சற்று நேரத்தில் மூச்சு சீராக ஆசுவாசமடைந்தாள்.

இதுவே பழைய நிவாசினியாய் இருந்திருந்தால், இந்நேரம் இந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்திருப்பாள். ஆனால் இப்பொழுது நித்திலனின் அன்பும் கவனிப்பும் அவளின் உடல் வலிமையையும் மனவலிமையையும் வெகுவாய் கூட்டியிருந்தது.

‘யாரிந்த பொண்ணு? இது ஏன் என் கனவுல வருது? நித்திப்பா சம்பந்தப்பட்ட கனவுலாம் எனக்குப் பலிக்குது தானே! அப்ப இதுவும் பலிக்குமா?’ என நினைக்கும் போதே மீண்டுமாய் அவளின் இதயம் வேகமாய்த் துடிக்கவாரம்பிக்க,

‘இல்ல இல்ல அப்படிலாம் எதுவும் ஆகாது. என் நித்திப்பா எனக்குத் துரோகம் செய்ய மாட்டாங்க! இது அவங்க டைரி படிச்சதால வந்த கனவு! அதை நினைச்சிட்டே படுத்தனால தான் அப்படி வந்திருக்கு. அன்னிக்கு ப்ரக்னன்சி கனவு புக் படிச்சனால தான் வந்துச்சுனா அப்ப இதுவும் அப்படித் தான் வந்திருக்கும்’ எனத் தனக்குத் தானே ஆறுதல் தேறுதல் மொழி உரைத்துத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்த சமயம்,

“ஆனா ஏன் என் கனவுல இவர் வரும் போதெல்லாம் தலைல அடர்த்தியா முடி இருக்கு? இன்னிக்கு கனவுலயும் அப்படித் தானே இருந்துச்சு” எனச் சிந்தித்திருந்தவளுக்கு யாரிடமேனும் இக்கனவினை பற்றி உரைத்தாள் தான் மனதின் பாரம் இறங்குமெனத் தோன்ற, பவானிக்கு அவள் அழைப்பைவிடுக்க, சிக்னல் பிரச்சனையால் அழைப்பு போகாமல் துண்டிக்கப்பட, குறுஞ்செய்தி அனுப்பினாள்.

இந்த ஊருக்கு வந்ததிலிருந்து தற்போது கண்ட கனவு வரை அனைத்து நிகழ்வுகளையும் விலாவாரியாய் அவள் தட்டச்சுச் செய்து அனுப்பிய சமயம் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது.

கதவை திறந்து இவள் பார்க்க நித்திலன் தான் நின்றிருந்தான்.

அவன் வீட்டினுள் நுழைந்து கதவை அடைத்த மறுநொடி அவனை இறுக அணைத்திருந்தாள். அவள் கண்ட கனவுக்கு அவனே ஆறுதல் என எண்ணி அவன் கழுத்தை கட்டி கொண்டு இன்னும் இன்னுமாய் அவனுள் அவள் புதைய,

அவன் வண்டி எடுக்கச் சென்ற இந்தச் சிறு பிரிவும் தாங்கவியலாது தான் அவள் இவ்வாறு தன்னோடு ஒன்றி நிற்கிறாளென எண்ணிய நித்திலன், “அதுக்குள்ள என் தங்க கட்டி என்னைய மிஸ் செஞ்சிட்டா?” என அவள் கழுத்து வளைவில் குறுகுறுப்பூட்டி அவன் கேட்க,

“ம்ப்ச் எதுவும் பேசாதீங்க! எனக்கு உங்க இதயத் துடிப்பை கேட்கனும். எனக்காகவே துடிச்சிட்டு இருக்கிற அந்த ஓசையைக் கேட்கனும். நீங்க எனக்கு மட்டும் தான்னு உணர்த்துற அந்த ஓசையைக் கேட்கனும்” என ஏதேதோ உளறிக் கொண்டே அவனது மார்பினில் தனது முகத்தினை அவள் புதைத்துக் கொள்ள,

“என் ஹனி பேபி! இன்னிக்கு வெளில போகலாம்னு நிறைய ப்ளான் வச்சிருக்கேன்டா! இப்படி ஒட்டி உரசி எல்லா ப்ளானையும் கேன்சல் செய்ய வச்சிடுவ போலயே” எனக் குறும்பாய் கண் சிமிட்டி அவன் கூற,

“ஹை வெளில போறோமா? எங்க போறோம்? என்ன ப்ளான்?” என அவனது கழுத்தை கட்டிக் கொண்டு துள்ளி குதித்து அவள் உற்சாகமாய்க் கேட்க,

அவளின் நெற்றி முட்டியவன், “அது சர்ப்ரைஸ்! சீக்கிரம் கிளம்பு” எனக் கூறி அவளைக் கிளம்பச் செய்தான்.

மாலை நான்கு மணியளவில் இருவருமாய் அவனின் அந்த இரு சக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கினர்.

சாலை பகுதிகளைத் தாண்டி ஒரு காட்டு வழி பாதையில் அவனது வாகனம் சென்று கொண்டிருக்க, இரு மருங்கிலும் பச்சை பசேலென மரம் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தது.

மாசு படாத சூழல், சுத்தமான மலைக்காற்றின் வாசம், அந்த மரம் செடி கொடிகளிடமிருந்து வந்த மூலிகை மணம் அவர்களின் நுரையீரலை நிறைத்தது.

ஆங்காங்கே யானைகள் அந்த இடத்திற்கு வந்து சென்றதன் அடையாளமாய் யானை சாணங்கள் இருந்தது. அந்தச் சாணங்கள் காயமலிருப்பதை வைத்தே அது அன்று தான் அந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கிறது எனப் புரிந்தது.

அந்தக் காட்டு வழி பாதையைக் கடந்து சென்ற போது வழியில் ஒரு மயில் தோகை விரித்து நடனமாட, நித்திலன் வண்டியை நிறுத்த, நிவாசினி துள்ளி குதித்து ரசித்து அந்த மயிலின் ஆட்டத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின்னும் சிறிது தூரம் கடந்த பிறகு மரப்பலகையிலான பாலம் வந்தது. பாலத்தின் ஒரு புறம் மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் வந்து கொண்டிருக்க, அது சலசலவென்று பாலத்தின் அடியினூடே மறு பக்கம் சென்று கொண்டிருந்தது.

சிறிது தூரம் சென்றதும் காடு போன்ற இடத்தில் வண்டியை நிறுத்தி அவளை இறங்க கூறினான் நித்திலன்.

அங்கு மணி கூண்டு போன்ற அமைப்பில் ஒரு கட்டிடம் இருந்தது. அவளின் கண்களைக் கட்டி கொண்டு கை பிடித்து அந்த மணி கூண்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

தரையிலிருந்து 3500 அடி உயரத்தில் இருந்த மாஞ்சோலை தாண்டி 1000 அடி கடந்து குதிரை வெட்டி இடத்தினைத் தாண்டி தற்போது வாட்ச் டவரின் இடத்தினை அடைந்து தரையிலிருந்து 4800 அடி உயரத்தில் நின்றிருந்தனர் நிவாசினியும் நித்திலனும்.

மாலை மங்கும் நேரத்தில் மலை காற்று குளிர்ச்சியாய் உடலை தழுவ, கண்கள் மூடியிருந்த நிலையிலும் வெகு ரம்மியமாய் உணர்ந்தாள் நிவாசினி.

சுழன்றடிக்கும காற்று அவளின் துப்பாட்டாவையும் கூந்தலையும் கலைத்து அலைபாயச் செய்ய, முகத்தை வருடி செல்லும் அக்காற்றினை ஆழ மூச்சினை இழுத்து அவள் ரசித்திருந்த நேரம் அவளின் கண் கட்டை அவிழ்த்தான் அவன்.

அந்த மணி கூண்டிலிருந்து பார்த்தால் 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடியின் அனல்மின் நிலையத்தை கூட பார்க்கலாம். அந்த அளவுக்குத் தொலைப் பார்வை வசதி உள்ள இந்த இடத்தில் அவளின் கண் கட்டை அவன் அவிழ்த்த நொடி, அந்த ஊரின் அழகை தான் கண்டாள் அவள்.

வானம் செந்நிறம் பூசியிருக்க, ஆங்காங்கே பெரிய மலைகளும் மரங்களும் சூழ்ந்திருக்க, அந்த மலைகளுக்கு இடையில் வெள்ளை அருவி ஊற்றிக் கொண்டிருக்க, சுற்றிலும் இருந்த ஊர்களில் மக்கள் அவரவர் வீடுகளில் போட்டிருந்த விளக்குகள் கூடுதல் வண்ணவொளியை கொடுக்க, வெகு ஆசையாய் அவள் பார்த்திருக்க, அவள் தோளில் கைபோட்டு அவளின் வதனத்தையே பார்த்திருந்தான் அவன்.

“ப்பா வாட் எ வியூ(view)லபா!” அவனின் இடையில் ஒரு கை போட்டுத் தோளிலிருந்த அவனது கரத்தினை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ரசித்துப் பார்த்திருந்தாள் அவள்.

இவர்கள் இருவரை தவிர வேறெவரும் இல்லை அங்கு.

சட்டெனத் திரும்பி தன் முகம் பார்த்திருக்கும் அவன் முகத்தை நோக்கியவள் ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்பது போல் கேட்க, அவன் ஏதுமில்லையெனத் தலையசைத்து கூற,

அவளின் இந்தப் பூரிப்பான ரசிப்பையும் மகிழ்வையும் தான் அவன் அவளின் வதனத்தில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்த பெண்ணவளும் தன்னை மகிழ்விப்பதற்காக அவன் வகுத்திருந்த இந்தத் திட்டமிடலில் மனம் நிறைந்து போனவளாய் சற்று எம்பி தனக்குப் பக்கவாட்டில் தெரிந்த அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, “லவ் யூ சோ மச் நித்திப்பா” என்றாள்.

அவள் மொழிந்த காதலில் அழகாய் சிரித்தவன், அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து அவளின் உச்சந்தலையில் தன் கன்னத்தை வைத்திருந்தான்.

அவனை அணைத்திருந்தவளின் மனமோ, ‘என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்கிறவரு என்னைத் தவிர வேற யாராயாவது லவ் பண்ணுவாரா என்ன? அவருக்குப் பாஸ்ட் லவ் இருந்தா கூட, சில்லுனு ஒரு காதல் குந்தவி போல, அந்தப் பாஸ்ட் லவ்லாம் மொத்தமாய் மறக்கடிக்கிற அளவுக்கு நான் அவருக்கு என் லவ்வை உணர வைப்பேன்’ என மனதிற்குள் பேசி கொண்டாள்.

தனது நம்பிக்கை நிலைக்குமா அல்லது நிலைக்குலையுமா என அறியாத பேதையவளும் அதீதமாய் அவனை நம்பிக் கொண்டிருந்தாள்.

— தொடரும்