என் நித்திய சுவாசம் நீ – 10

அக்காலை பொழுதில் வெண்பனிக்காற்று மேனியை தழுவ, அதிக ஆள்நடமாட்டமில்லாத, முற்றிலுமாய் மேகம் முட்டும் பசுமையான மலைகள் சூழ்ந்த அந்த இடத்தைச் சுற்றி காலார நடப்பதே பெரும் புத்துணர்வை அளிப்பதாய் இருந்தது நிவாசினிக்கு.

அதிலும் இத்தகைய இயற்கையான சூழலில் தன் மனங்கவர்ந்தவனின் கைகளைப் பற்றிக் கொண்டு நடப்பதென்பது அவனின் மனக்கோட்டைக்குத் தன்னையே ராணியாய் உணர வைப்பதாய் தோன்றியது.

முன் காலை பொழுதில் கனவு கண்டு விழுத்து மீண்டுமாய் உறங்கியவள், விடியற்காலை விழித்த பின்பும் அக்கனவின் தாக்கத்தினால் மனநிலை சமன்படாது கவலையிலிருக்க, நித்திலன் தான் இக்காலை பொழுதை ரசித்தவாறு நடைபயணம் சென்றால் சற்று மனம் இலகுவாகுமென அவளை உடன் அழைத்துக் கொண்டு கால் போன போக்கில் நடக்கலானான்.

காலை ஏழரை மணியளவில் இருவரும் அவர்களின் விடுதி இல்லத்தை வந்தடைய, அந்த விடுதியில் இருந்த அலுவலர், பாலன் வழங்கியதாய் உரைத்து நித்திலனிடம் ஒரு இரு சக்கர வாகனத்தின் சாவியை வழங்கினார்.

அதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிய நிவாசினி, “இந்த மாதிரி இடத்துல உங்க கூட ஒரு பைக் டிராவல்! வாவ்! நினைக்கவே செம்ம ஹேப்பி ஆகுதே” எனக் கண்கள் மகிழ்ச்சியில் மின்ன துள்ளி குதித்தவாறு அவள் உரைக்க,

அவளின் மகிழ்வில் தானும் மகிழ்ந்தவனாய் சிரித்தவன், “எப்ப வந்து இந்தச் சாவியைக் கொடுத்தாங்க சார்?” எனக் கேட்டான்.

அவளின் சிறுபிள்ளைதனமான செயலில் தானும் சிரித்தவராய், “காலைலயே நீங்க வெளில கிளம்பி போன கொஞ்ச நேரத்துல வந்து கொடுத்துட்டு போனாங்க. கூட ஒரு பையன் வேற பைக்ல வந்தான். அவன் கூட ரிட்டன் போய்ட்டாரு” என்றார்.

“நீங்க பாலா அங்கிள்கிட்ட பைக் வேணும்னு கேட்டீங்களாப்பா?” என அவள் கேட்க, இல்லையென அவன் தலையாட்ட, “பாருங்க அங்கிள்க்கு உங்க மேல எவ்ளோ அன்பு” எனக் கூறியிருந்தாள் நிவாசினி.

இருவரும் குளியலை முடித்துக் காலை உணவை உண்டு முடித்ததும், “முதல்ல எங்க போகலாம் ஹனி?” எனக் கேட்டான்.

“கோயிலுக்குப் போகலாம்ப்பா. அந்தக் கனவு கண்டதுலருந்தே மனசு சரியில்லை. உங்களுக்கு எதுவும் ஆகிடுமோனு பயமாவே இருக்கு. இங்க பக்கத்துல எதுவும் முருகன் கோவிலிருக்கா? அங்கேயே போகலாம்” என்றாள் அவள்.

அதன்பின் மாஞ்சோலை மலையின் மீது ஒரு முருகன் கோவில் உள்ளதை அங்கிருந்த அலுவலர் மூலம் அறிந்து கொண்டவர்கள் அங்குப் பயணமானார்கள்.

யமாஹா RX 100 பழைய ரக வாகனம் அது. அந்த வண்டியை பார்த்ததும், “வாவ் நித்திப்பா எனக்கு இந்த வண்டி ரொம்பப் பிடிக்கும். வாலி படத்துல அஜீத் வச்சிருப்பாங்க! அதுவும் அந்த மஞ்சள் கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என இளித்துக் கொண்டே அவள் கூற,

“சரியான சினிமா பைத்தியம்டா நீ” எனச் சிரித்துக் கொண்டே வண்டியை உயிர்ப்பித்து ஏறி அமர்ந்த நித்திலன்,

“கோவிலுக்குப் போறோம்னு புடவை வேற கட்டியிருக்க! புடவை வீல்ல சிக்கிக்கிடாம முந்தானையை ஒழுங்கா கையில பிடிச்சிட்டு பார்த்து உட்காரு!” என்றான்.

அவள் ஒழுங்காய் அமர்ந்திருக்கிறாளா எனக் கண்ணாடியின் வழியாய் இரண்டு மூன்று முறை பார்த்து தெளிவடைந்த பிறகே வண்டியை கிளப்பினான்.

அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்தக் கோவிலை அடைந்தனர்.

மலையின் மீது அக்கோவில் இருக்க, இருநூறு படிக்கட்டுக்களை நடந்து கடந்த பிறகே முருகனை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அந்தக் கோவிலின் மூலஸ்தானம்.

வண்டியினை விட்டு கோவிலை பார்த்தாவாறே இறங்கிய நிவாசினி, “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்னு சொன்னது எவ்வளவு வாஸ்தவமான வார்த்தைலப்பா”
பனி புகையால் சூழப்பட்ட கோபுரத்தினையும் அதன் மேல் காட்சியளித்த மேகத்தை முட்டும் மலையினையும் ரசித்தவாறே அவள் கூற,

“அது இருக்கட்டும். அந்த மலை வரைக்கும் போக 200 படிக்கட்டு ஏறனும். உன்னால ஏற முடியுமா?” கேட்டவாறே அவளை அழைத்துக் கொண்டு நடக்கலானான்.

அங்கிருந்த கடையில் சிறு நெல்லிக்காயும் தண்ணீர் பாட்டிலையும் வாங்கிப் பையினுள் வைத்து கொண்டவன், அவளின் கைப்பற்றி மெதுவாய் பேசிக் கொண்டே படிக்கட்டில் ஏறவாரம்பித்தான்.

அவர்களுடன் கிட்டதட்ட 20 மக்கள் ஆங்காங்கே ஏறிக் கொண்டிருந்தனர்.

அந்த நெல்லிக்காயினைச் சாப்பிட்டுக் கொண்டே 100 படிகட்டுகளைத் தாண்டியிருந்த சமயம், ஆவென முகம் சுருங்க வலியில் அலறி வலது கால் விரல்களைக் குனிந்து பிடித்துக் கொண்டாள் நிவாசினி.

“என்னடா என்னாச்சு?” கேட்டவாறே அவளின் காலருகே மண்டியிட்டமர்ந்து அவளின் பாதத்தினைத் தூக்கி தன் மடி மீது வைத்து முள் எதுவும் குத்திவிட்டதா என அவன் ஆராய்ச்சி செய்ய,

“விரல் நரம்பு இழுத்துக்கிச்சுப்பா” அவ்வலியை முகத்தில் தேக்கி அவள் கூற, அவளின் விரல்கள் தானாய் ஒரு பக்கம் வளைந்து கொண்டு போக,

படிக்கட்டின் இரு மருங்கிலும் இருந்த திட்டுகளில் ஒரு திண்டில் அவளை அமர செய்தவன், அவளின் காலருகே மீண்டுமாய் மண்டியிட்டமர்ந்து அவள் பாதத்தைத் தனது மடியில் வைத்து விரல்களை நீவி விட்டவாறே, “பீரியட்ஸ் ஒழுங்கா வருதா உனக்கு?” எனக் கேட்டான்.

தான் சரியாய் தான் கேட்டோமா? தனது காதில் சரியாய் தான் விழுந்ததா? என யோசித்தவள் தனது காதினை தீட்டிவிட்டு மீண்டுமாய், “என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

இவர்களைத் தாண்டி சென்ற மக்கள் அனைவரும் இவனின் செயலை பார்த்துச் சாடை மாடையாய் பேசி கொண்டே தான் சென்றனர். அதை எல்லாம் அவன் துளியும் கண்டு கொள்ளாமல் அவளின் வலியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

அவனும் அவள் விரல்களை நீவியவாறே அவளை முறைத்துக் கொண்டே, “மாசாமாசம் பீரியட்ஸ் உனக்கு ஒழுங்கா வருதானு கேட்டேன். உடம்பை ஒழுங்கா பார்த்துக்க மாட்டியா நிவாசினி” என அவன் அவளைக் கடிந்து கொள்ள,

அவள் முகம் சுணங்கியவாறே, “அதெல்லாம் மாசாமாசம் சரியா தான் முன்னே வந்துட்டு இருந்துச்சுப்பா! அப்பா அம்மா இறந்த பிறகு ஸ்டெரஸ் கவலைனால ப்ராப்ளமாச்சு. அதுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்?எதுக்காக இப்போ அதைக் கேட்கிறீங்க” என அவள் கேட்க,

“அப்ப நீ பீரியட்ஸ் இர்ரெகுலர் ஆகுதுனு டாக்டரை கன்செல்ட் செய்யலையா?” எனக் கேட்டான்.

“யாருமில்லாம வாழுறதே பிடிக்காம இருந்தப்ப, எங்கிருந்து இதெல்லாம் கவனிக்க? அதுவுமில்லாம கல்யாணம் செஞ்சி குழந்தைலாம் பெத்துக்கனும்ற எண்ணமெல்லாம் என்னை விட்டு தூர போயிருந்த நேரமது. அதனால இதைப் பத்தி யோசிக்கலை” என அவள் கூறவும்,

“அறிவிருக்காடி உனக்கு?” அடக்கப்பட்ட கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டு கத்தியிருந்தான் அவன்.

“பொண்ணுகளுக்குக் கர்ப்பபை என்ன குழந்தை பெத்து கொடுக்கிற மெஷன்னு நினைச்சிட்டியா? அது ஒரு உறுப்பு. கிட்னி, லிவர் போல அதுவும் ஒரு உறுப்பு. கிட்னி லிவர்லாம் பழுதடைஞ்சா பிரச்சனைகள் வர்ற மாதிரி கர்ப்பபையோட வேலையை அது சரியா செய்யாம போனாலும் பெண்களுக்கு உடல் உபாதைகள் வரும். அதான் பெண்களுக்கு ஹீமோக்ளோபின் லெவல் சரியா இருக்கனும்னு சொல்லுவாங்க. மாசாமாசம் கரெட் சைக்கிள்ல பீரியட்ஸ் ஆகனும்னு சொல்றது. முதல்ல உன்னை ஒரு கைனகாலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போய்ச் செக் பண்ணனும்” என அவன் நீண்ட விளக்கமளித்து இவ்வாறு கூறவும்,

“இல்லப்பா இப்ப லாஸ்ட் த்ரீ மன்த்ஸ் இந்தப் பிராப்ளம் இல்ல. பவானி என்னைய ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் டிரீட்மெண்ட் எடுக்க வச்சா” அவனின் கோபத்தில் சற்றாய் பயந்து தயங்கியவாறே அவள் கூற,

“ஹ்ம்ம் ஆனாலும் ஐயர்ன் விட்டமின் லெவல்லாம் செக் பண்ணனும். அது குறைஞ்சா தான் இப்படிப் பனிகாலத்துல நரம்பு இழுத்துக்கிற பிரச்சனைலாம் வரும்” பேசிக் கொண்டே அவள் காலில் செய்திருந்த மசாஜ் அவளின் வலியை போக்கி விரல்களைச் சீராக்கியிருக்க,

“இப்ப சரியாகிட்டுப்பா! நடக்கலாம்” எனக் கூறி அவன் மடியிலிருந்து தன் காலை கீழிறக்கி எழுந்து நின்றாள்.

பின் இருவருமாய் ஒன்றாய் நடக்க, “நீங்க இஞ்சினியரிங் தானே படிச்சீங்க! பின்ன டாக்டர் மாதிரி பேசுறீங்க? இந்த டீடெய்ல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” அவள் கேட்க,

“அண்ணி மூலமாய் அண்ணன் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். அவன் மூலமாய் நான் தெரிஞ்சிக்கிட்டேன்” என்றான்.

இருவரும் முருகரை தரிசித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த போது நடந்தது அந்தச் சம்பவம்.

இவர்களின் வாகனத்திற்குப் பின்னிருந்த இரு மகிழுந்து ஒன்றன்பின்னொன்றாய் மோதி இவன் வண்டியை வந்து இடிக்க, இவன் கையில் வண்டி நிலைக்கொள்ளாது சறுக்கி கொண்டு போக, இருவருமாய்ச் சாலை ஓரத்திற்குத் தள்ளப்பட்டு வண்டியுடன் கீழே விழுந்து கிடந்தனர்.

அவளுக்கு ஆங்காங்கே சிறு கீரல் மட்டுமே உண்டாகியிருக்க, சற்றாய் தன்னை நிலை நிறுத்தி அவள் நிமிர்ந்து பார்த்த போது, அவளின் கண் முன்னே இருந்தது அந்த மேல்நிலை பள்ளியின் வாசற்கதவு.

ஆம் இவர்கள் அந்த மாஞ்சோலை மேல்நிலை பள்ளியில் வாசலில் தான் விழுந்திருந்தார்கள். அங்கிருந்த செக்யூரிட்டி மற்றும் சுற்றியிருந்த மக்கள் எனச் சில பேர் இவர்களுக்கு உதவி செய்தனர்.

நித்திலனின் கை மீதே வண்டி விழுந்து கிடந்ததால் அவனது வலது முன்னங்கையை அசைக்க முடியாதவாறு வலி எடுத்தது அவனுக்கு.

அந்தப் பள்ளியின் வாசலை பார்த்ததும் அதிர்ந்து மிரண்டு போனாள் நிவாசினி. அதன் பிறகு எவ்வாறு அவள் அந்த மருத்துவமனை வந்து சேர்ந்தாள் என அவளே அறியாள்.

நித்திலன் தான் வண்டியினைப் பள்ளி வளாகத்தினுள் நிறுத்தி வைக்குமாறு செக்யூரிட்டியிடம் கூறி சாவியைக் கொடுத்து விட்டு, இவளையும் உடன் அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் மருத்துவமனை வந்திருந்தான்.

ஆட்டோவில் செல்லும் வழியெல்லாம் அவளின் கண்ணிலிருந்து நில்லாது நீர் வழிந்து கொண்டிருக்க, “எங்கயும் அடி பட்டிருக்காடா? ஏன்டா அழுகிற? எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல. நீ எதையும் நினைச்சு பயப்படாத!” என நித்திலன் தான் விதவிதமாய் அவளிடம் பேசிக் கொண்டு வந்திருந்தான்.

மருத்தவமனை வந்த பிறகே தன் சுயநினைவிற்கு வந்தவள், அவனுக்குப் பெரிதும் அடிபடவில்லை என்பதை அறிந்த பிறகே இயல் நிலைக்குத் திரும்பினாள்.

அங்கிருந்த அந்த மருத்துவரின் கையாள், “நீ குருநாதன் மவன் தானே?” என நித்திலனை பார்த்து கேட்க,

ஆமென அவன் தலை அசைக்கவும், அவன் தாய் தந்தை அண்ணன் பற்றிய நல விசாரிப்புகளுடன் அவர்களின் உடலிலுள்ள காயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தக் கையாள்.

நிவாசினிக்குக் கைகளில் ஆங்காங்கே இருந்த சிராய்புகளுக்கு மருந்தளித்தவர், நித்திலனின் கையில் ஒரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாய் உரைத்து கைகட்டுப் போட்டுவிட்டார். இக்கட்டினை போடுவதற்குள் நித்திலன் வலியில் சற்றாய் கத்தியதை பார்த்து இவள் சத்தமாய் அலறி அழவாரம்பிக்க, அவளைச் சற்றுத் தூரமாய்த் தள்ளி அழைத்துச் சென்ற பிறகே இவனுக்கு முழுவதுமாய்க் கட்டினை போட்டு முடித்தார் மருத்துவர். இது முழுதாய் குணமடைய ஒரு மாதம் ஆகுமெனவும் அது வரை ஓய்வில் இருக்க வேண்டுமெனவும் உரைத்து விட்டார் அவர்.

விடுதிக்குச் செல்லும் போதே மதிய உணவினை பார்சல் வாங்கிக் கொண்டு சென்றனர். வீட்டினுள் சென்றதும் அவனுக்கு உணவினை ஊட்டிவிட்டுக் கொண்டே தானும் உண்டவளின் மனமும் முகமும் கவலையால் வெகுவாய்ச் சோர்வுற்றிருந்தது.

இருவருமாய் மருத்துவர் அளித்த மாத்திரைகளை விழுங்கிவிட்டு சோர்வாய் அமர்ந்தனர்.

நித்திலன் இதனை ஒரு சாதாரண விபத்து என்ற நிலையில் தான் பார்த்தான். அவளுக்கு ஏதும் பெரியதாய் அடிபடவில்லை என்பதுலேயே அவனின் மனம் ஆசுவாசமடைந்திருந்தது.

அவனது கையின் வலி மட்டுமே அவனைச் சோர்வுற செய்தது. ஆயினும் இவளது கவலையுற்ற முகத்தினைக் கண்டவனுக்கு அதை உடனே போக்க வேண்டுமென்ற எண்ணம் எழ,

கட்டிலில் தலையனையே முதுகிற்குக் கொடுத்து, கைக்கு ஒரு தலையனை வைத்து எனச் சாய்வாய் அமர்ந்திருந்தவன், “ஹனிமா இங்க வாயேன்” என அவளைத் தனதருகே அழைத்தான்.

அவனருகில் சென்று அவளும் அமர, அவளின் தோளில் தனது தாடையை வைத்தவன், “இரண்டு வாரத்துல நம்ம ஹனிமூனை முடிச்சிடலாம்னு நினைச்சோம். ஒரு மாசத்துக்கு இங்கேயே இருங்கப்பானு கடவுளே நம்ம ஹனிமூனை நீட்டிச்சி வச்சிட்டாரு” என அவளின் கழுத்தில் தனது மீசையால் குறுகுறுப்பூட்டி அவன் கூற,

அதில் சற்றாய் சிரித்து அவன் மார்பில் சாய்ந்தவள், அமைதியாகவே இருத்தாள். அவன் அவளின் மனதை அந்நிகழ்விலிருந்து மாற்ற முனைவது அவளுக்கும் புரிகிறதே!

“என் வாழ்க்கைல நிரந்தரச் சந்தோஷம்னு ஒன்னு இருக்கவே இருக்காதாங்க? ரொம்பக் காலம் கழிச்சி இப்ப தான் சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ள ஏன் இப்படி?” மனதின் பொறுமலை வாய் வார்த்தையாய் நித்திலனிடம் அவள் உரைத்திருக்க,

“நீ இப்ப இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு ஒன்னும் நடக்கலையேடா”

அவனின் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தியவள்,

“என்ன நடக்கலை? உங்களுக்கு எதுவும் ஆகிருந்தா என் நிலைமைய யோசிச்சு பார்த்தீங்களா? ஏற்கனவே ஒரு ஆக்சிடெண்ட்ல தானே அப்பா அம்மாவையும் இழந்துட்டு நிக்கிறேன்?” கண்களில் நீர் வடிய அவள் பேச,

மீண்டுமாய் அவளைத் தனது மார்பினில் சாய்த்துக் கொண்டு அவளது தலையை வருடியவன், “ஐ ப்ராமிஸ் யூ ஹனிமா! என்னிக்கும் உன்னைய விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்” என்றவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, “எதையும் யோசிக்காம தூங்குடா” என்றான்.

அரை மணி நேரத்தில் அவள் உறக்கத்திற்குள் செல்ல, மருந்தின் வீரியத்தில் இவனும் உறங்கி போனான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கண் விழித்த நிவாசினி, உறங்கும் நித்திலனை கண்டாள். அவன் வசதியாய் உறங்குவதற்கு ஏதுவாய் மெத்தையில் சாய்த்துப் படுக்கச் செய்தவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாய் உறங்கும் அவன் முகத்தினையே பார்த்திருந்தவளின் நினைவுகள் அவள் கனவில் கண்ட விபத்துலேயே உழன்று கொண்டிருந்தது.

‘கனவுல பார்த்த மாதிரியே இவருக்குப் பெரியளவுல விபத்து நடந்திருந்தா..’
நினைக்கும் போதே அவளின் உடல் பதறி நடுங்க,

‘நல்லவேளை முருகன் தான் அவ்ளோ பெரிய விபத்தாகாம பெரிய அடிபடாம காப்பாத்திருக்காரு’ என மனதிற்குள் முருகனுக்கு நன்றி நவிழ்ந்தவள்,

‘அப்படினா நித்திலன் தொடர்பான என் கனவுகள்லாம் ரியலா நடக்குது! ஆனா ஏன்? அவருக்கு நடக்கப் போறதை கடவுள் எனக்கு முன்னாடியே காண்பிக்கிறாரா?’

அக்கேள்வியிலேயே அவளின் எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்க, அது அவளுக்குத் தலைவலியை உண்டாக்க, இந்தச் சிந்தனையிலிருந்து விடுபட எண்ணியவள், தனது பொழுது போக்கினை நோக்கி சென்றாள்.

அவளின் பெட்டியிலிருந்த புத்தகங்ககளிலிருந்து ஒன்றை எடுத்து அதே நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இது பவானி அவளுக்குப் பழக்கப்படுத்தியது. பவானியுடம் அவள் தங்கியிருந்த பொழுது அவளது கவலையிலிருந்து அவள் தற்காலிகமாய் விடைப்பெற அப்பழக்கத்தினை ஏற்படுத்தினாள் அவள்.

புத்தகம் படிப்பதென்பது நிவாசினிக்குத் தன்னுலகம் மறந்து கதை மாந்தர்களுடன் அவர்களின் கதையில் ஒருவராய் அவர்களின் உணர்வுகளுடன் பயணிப்பதாய் இருக்கும்.

அப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது மனம் அதிலிருந்து விடுபட்டு வரயியலாமல் தவிக்கும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கண் மூடி அமர்ந்தால் அந்தக் கதை மாந்தர்கள் அவளின் மனந்தனில் உலா சென்று கொண்டிருப்பார்கள். இவ்வாறாய் புத்தகத்தினுள் தன்னைத் தொலைத்துக் கொள்வதில் அலாதி பிரியம் அவளுக்கு.

தினமும் இரவு உறங்கும் முன் ஒரு புத்தகம் படிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தவள், புத்தகங்கள் படிப்பதை நிறுத்தியது நித்திலனின் அந்தப் பண்பலை நிகழ்ச்சியைக் கேட்ட அந்நாளில் தான். அதன் பிறகு அவளின் இரவு நேரங்களனைத்தும் அவனின் நிகழ்ச்சியைக் கேட்பதிலேயே கழிந்திருந்தது அவளுக்கு.

நித்திலனின் அறையில் சில புத்தகங்களைக் கண்டவள், அதைத் தான் இங்கு வரும் போது பெட்டியில் போட்டு எடுத்து வந்திருந்தாள்.

அதிலொரு கதை புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியவள், சுற்றம் மறந்து அதனுள் மூழ்கியிருந்த சமயம், அதில் வந்த சில வரிகள் அவளை அவளது இன்றைய நிலையுடன் ஒப்புமை படுத்திச் சிந்திக்கத் துவங்கியது.

தான் காணும் கனவிற்கும் படிக்கும் புத்தகத்திற்கும் தொடர்பிருக்கிறதா எனச் சிந்திக்கத் துவங்கினாள் அவள்.

அன்று முதன் முதலாய் நித்திலனை கனவில் பார்த்த அன்று, தான் படித்த புத்தகத்தின் கதையையும் அன்றைய தன் கனவினையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு, அந்தப் புத்தகத்தில் வந்த பிள்ளை பிறக்கும் காட்சிகளும், அவளின் ஆழ்மனதில் பதிந்திருந்த காதல் குறித்த அவளின் எண்ணங்களும் இணைந்து கனவாய் வந்ததோ என்ற கேள்வி எழ, முதல் முறையாய் அவளின் கனவினை முன்ஜென்ம பந்தம் என்ற பதத்தைத் தாண்டி வேறொரு திசையில் யோசிக்கத் துவங்கினாள் நிவாசினி.

— தொடரும்