என் நித்திய சுவாசம் நீ! – 1

என் நித்திய சுவாசம் நீ!
அத்தியாயம் 1:

மருத்துவமனையின் பிரசவ அறை அது.

உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியில் நர்த்தனமிட, வலி மிகுதியால் விளைந்த கண்ணீரும், புலம்பலுமாய், அறை மயக்கமுமாய் வாழ்வின் உயரிய வலியாம் பிள்ளை பேற்றின் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் வலியை தன் வலியாய் மனதில் ஏற்று கண்ணீர் ஓடிய விழிகளுடன் பதட்டத்தின் உச்சியில் அவள் கைகளை பற்றியிருந்தான் அவன்.

அரை மயக்கமாய் நீர் நிறைந்த விழிகளுள் மங்கலாகவே அவன் முகம் தெரிந்தது அவளுக்கு. ஆயினும் அவளால் உணர முடிந்தது அவனின் ஆழ் காதலை அவன் கைகளின் இறுக்கத்தில். பாசமாய் அவன் இப்பொழுது அவள் தலையை வருட அவன் கைகளின் டாட்டூ காணக் கிடைக்கிறது அவளுக்கு. நிநி என ஸ்டைலாய் படு அழகாய் அவன் வெளிர் நிற கைகளில் அம்சமாய் இருந்தது அந்த டாட்டூ.

வலியின் உச்சத்தில் அவள் வீறிட்டு அலற,

“அம்மாஆஆஆஆஆஆ”

அதே வலி மிகுந்த அலறலுடன் எழுந்தமர்ந்தாள் நம் நாயகி தனது அறையின் கட்டிலிலிருந்து.

முகமெங்கும் முத்து முத்தாய் வியர்த்திருக்க படபடப்பும் நடுக்கமுமாய் தன் வயிறை தடவிப் பார்த்துக் கொண்டாள். இன்னமும் அவ்வலியில் இருப்பதாய் தோன்றியது அவளுக்கு.

“ச்சே கனவா!!!” மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

தன் அருகிலிருந்த நீரை மட மடவென முழுவதுமாய் குடித்திருந்தாள்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்தவளுக்கு, எதனால் இத்தகைய கனவு என்று புரிய அவளின் மனம் அவளை நன்றாய் வசைப்பாடியது.

“ஹப்பா குழந்தை பெத்துக்கிட்ட பொண்ணுங்களுக்கெல்லாம் கோயில் வச்சே கும்பிடலாம் போலயே!!! என்னாஆஆஆ வலி!… செத்தே போயிருலாம் போலல இருந்துச்சு” என வாய்விட்டே கூறி பல சிந்தனைக்களுக்குள் சிக்கியிருந்தவள் தன்னை மறந்து உறங்கிப் போனாள்.

மறுநாள் சென்னையிலுள்ள பேரங்காடியின் (shopping mall) முதல் தளத்தில் மத்தியமாய் அமைந்திருந்த நகரும் படிக்கட்டை நோக்கி வலபுறமிருந்து கோபமாய் வந்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் பின்னோடு, “ஹே நிவாஸ்!! சாரிடி நில்லுடி” என சத்தமாய் கூறிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்து வந்தாள் அவளின் தோழி பவானி.

அதேப்போல் இடபுறமிருந்து கோபமாய் வந்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பின்னோடு, “டேய் நித்தி நில்லுடா” எனக் கூறிக் கொண்டே வந்தான் அவனின் நண்பன் விஜய்.

நிவாஸ் என்ற பவானியின் விளிப்பில் கோபமுற்றவள், அவள் புறம் திரும்பி, “ஜஸ்ட் ஸ்டாப் காலிங் மீ நிவாஸ், பவா.. பையனை கூப்டுற மாதிரி இருக்கு” என முகத்தை கடுகடுவென வைத்துக் கூறிய அதே நேரம்,

“டோண்ட் கால் மீ லைக் திஸ் விஜய்… உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்டி கூப்டாதனு” என ஹை டெசிபலில் அவனும் பொரிந்து தள்ள,

இருவருமே நகரும் படிக்கட்டினருகே நின்று கத்தியதால், இருவருமே மற்றவரின் பேச்சைக் கேட்டு திரும்பி முகத்தை பார்த்தனர்.

தன்னைப் போலவே அவளுடைய பெயரை சுருக்கி கூப்பிடுவது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்தவனது இதழ்கடையில் சிறுமுறுவல் தோன்ற பார்த்திருந்தானவன்.

ஏற்கனவே தன்னைப் போலவே யாரது பேசுவது என அறிய எண்ணி திரும்பியவளின் பார்வையில் இவன் விழுந்ததுமே மனதில் இனம்புரியா உணர்வு அலைகள் அவளை நிலைக்கொள்ளாதிருக்கச் செய்ய, அவன் கைகளில் கண்ட டாட்டூ அவளை அவ்விடத்திலேயே மயங்கிச் சரியச் செய்தது.

தீடீரென மயங்கிச் சரிந்தவளைக் கண்டு மூவரும் அதிர்ந்து அவளருகே பதறி ஓடிட, அவளை தன் மடியில் தாங்கியிருந்தானவன்.

அவளருகில் வந்த பவானி, “ஹே நிவாஸ்!! என்னாச்சுடி??” என பதறியவாறு கூறி அவன் மடியில் சரிந்திருந்த அவளின் கன்னங்களில் தட்டினாள்.

“ஏங்க இப்ப தானங்க, அவங்க உங்களை அப்படி கூப்டாதீங்கனு சொன்னாங்க?” என்று நித்தி கேட்க,

“ஆமா இது இப்ப ரொம்ப முக்கியம்” என வாய்க்குள் முனகிக் கொண்டே அவனை முறைத்த பவானி, தன் பையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளிக்க, மயக்கத்திலிருந்து விழித்து சற்றாய் தெளிந்தவளுக்கு கனவில் கண்ட அதே மங்கலான முகம் அவளின் பார்வைக்கருகில் காணக் கிடைத்தது.

சரியாய் அதே நேரம் அவள் தலையை அதேப் போல் அவன் வருட மீண்டும் அவனின் டாட்டூ அவள் கண்களில் விழ, அவளை மீறிய ஓர் பாச உணர்வு அவன் மீது அவளுக்கு பொங்கி வழிந்தது. இதே போல் ஆயுளுக்கும் அவன் மடியில் தாங்க வேண்டுமென்ற ஆவல் அவளையும் மீறி ஊற்றாய் அவள் மனவெளியில் நிரம்பி வழிய இமை சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள்.

அவன் கண்களும் ஆதுரமாய் அவளை தான் பார்த்திருந்தது. “என்னங்க காலைல சாப்பிடலையா?? ” மடியில் தாங்கியிருந்தவளை நோக்கி கேட்டிருந்தான்.

அவனின் அக்கேள்விக்கும் பதிலிறுக்காது அவனையே வெறித்து நோக்கினாள்.

கட்டவிழுந்த அணையாய் ஓடிய மனதின் எண்ணங்களை உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவள், தட்டு தடுமாறி எழ முற்பட, தன் கை கொடுத்து அவளை எழுந்து நிற்க செய்தான்.

இதற்கு மேல் அங்கு நிற்கவும் அவனிடம் வினவவும் மனமில்லை அவளுக்கு. அவனின் அன்பான பரிவான பார்வைக்கு அவளின் மனம் வெகுவாய் ஏங்குவதை உணர முடிந்தது அவளுக்கு. யாரென்று அறியாத ஒருவனிடம் தன் மனதின் உணர்வுகள் தறிகெட்டு ஓடிவதை ஏற்றுக்கொள்ள இயலாது மிகுந்த குழப்பத்திற்குள் ஆழ்ந்தவள் அங்கிருந்து ஓடவே முற்பட்டாள்.

“ஆமாங்க இல்லைங்க. சாப்பிட்டேன்” என வாயில் வந்ததை உளறிக் கொட்டியவள், பவானியின் கைப்பற்றி “வாடி போகலாம்” என்றவள்,

“தேங்கஸ் ஃபார் யுவர் ஹெல்ப்” என்று மென்னகை புரிந்து இருவரிடமும் தலை அசைத்து அங்கிருந்து நகர எத்தினிக்க,

“எக்ஸ்க்யூஸ் மீ!! மே ஐ நோ யுவர் நேம்??” எனக் கேட்டான்.

ஆயினும் தன் பெயரைக் கூறாது விறுவிறுவென பவானியின் கை பிடித்து நடக்க,

“அவங்க பேர தானடா கேட்ட?? என்னமோ அவங்களை நிக்க வச்சி நீ ரேகிங் செஞ்ச மாதிரி பதறியடிச்சி ஓடுறாங்க?” என்றான் விஜய்.

“பயந்த சுபாவமா இருப்பாங்க போலடா… நம்ம திரும்ப அவங்களை பார்க்கனும்னு விதி இருந்தா கண்டிப்பா பார்ப்போம். நம்ம அவங்க பெயரை தெரிஞ்சிக்கனும்னு விதி இருந்த தானாகவே தெரியவும் வரும். லெட்ஸ் வெய்ட் அண்ட் சீ” என்றவன் கூற அங்கிருந்து நகர்ந்தனர் விஜயும் நம் நாயகனும்.

— தொடரும்