என் சித்தம் சித்திரமே – 9

என் சித்தம் சித்திரமே 09 

காந்தம்மாளுக்கு ஒன்பது மணி என்பது மிட் நைட். வந்திருந்த ஜனம் கிளம்பவும் படுத்துவிட்டார். மனோகரும் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட… வெண்ணிலா நீலவேணியுடன் தனியாக இருக்கையிலே பேச்சை ஆரம்பித்தாள். 

கலக்கமான முகத்துடன் தன் கையைப் பற்றிக்கொண்டு நின்ற அம்மாவிடம், “சுரேனை எனக்கு ஏற்கெனவே தெரியும் மா. எங்கூட ஸ்டோர்ஸ்ல வேலை பாத்திட்டிருந்தான்.” சொல்ல… 

“என்னடி சொல்ற? மாப்பிள்ளை எதுக்கு அங்க வேலைக்கு வரணும்? அவங்க வீட்ல எல்லாம் நல்லாப் படிச்சி… நல்ல வேலை வசதி வாய்ப்புன்னு இருக்குறாங்க. அவங்க அண்ணன் டாக்டரு.” நீலவேணி ஆச்சரியம், யோசனை கொண்டு கேட்க… 

“அவன் காலேஜ் படிக்கும் போதே பார்ட் டைமா அங்க சேர்ந்தானாம். 

இன்னைக்கி கேட்கவும் சொன்னான்.” 

முதலில் மகள் சொன்ன ‘ன்’ நீலவேணிக்கு எட்டவில்லை. இப்போது கவனித்துவிட, “மரியாதையா பேசு நிலா. உன்னைவிட வயசுல பெருசு மாப்ள. அவர் வேலைக்கும் மதிப்புத் தர வேண்டாமா நீ?” அதட்டினார். 

“சரி சரி… தப்புத்தான் இனிப் பார்த்துப் பேசுறேன்.” கன்னத்தில் போட்டுக்கொண்டு காதைப் பிடித்துச் சற்றுக் காலை மடக்கித் தோப்புக்கரணம் போட்டு எழுவது போலப் பாவனை செய்தாள். 

மகளின் பாவனை நீலாவுக்குச் சிரிப்பை மூட்டியது. அம்மா சிரிக்கவும் வெண்ணிலாவும் புன்னகைத்தாள். 

“அப்பா இவங்க வீட்டைப் பத்தி சொன்னதை நானும் கேட்டேன்மா. அப்ப இவர் தான் பொண்ணு பாக்க வரப்போற மாப்ள தெரில!” என அவள் தொடர, 

“சுத்தம்… நாந்தந்த போட்டோவ நீ பாக்கவே இல்லை? பாக்காமலே அப்படி அலப்பறை பண்ணிட்டிருந்த?” இப்படியொருவளை என்ன செய்ய எனப் பார்வை பார்க்க… 

“ம்கூம்… அந்த கவரை தொட்டுக்கூடப் பாக்கல.” 

வெண்ணிலா சொல்லவும் நீலா இப்போது மகளைக் கடுமையாக முறைத்தவர் அவள் தலையில் குட்டினார். 

“ஸ்ஸ்… வலிக்குதும்மா விடு!” காதையும் திருகியவரின் கையைத் தட்டிவிட்டுத் தள்ளிப் போனாள். 

“சரி சொல்லு தனியா போய்ப் பேசினீங்க… அவருக்கும் உன்னை ஏற்கெனவே தெரியும்… அப்புறம்?” 

“சொல்றேன் சொல்றேன்… நீ கிட்ட வராம அங்கே உட்காருமா. நானே டயர்டா இருக்கேன். உன் வயலன்ஸ தாங்குற சக்தி என் பாடிக்கு இல்ல!” அயர்ச்சியாக அவள் சோஃபாவில் சாய்ந்துகொண்டாள். 

“உன்னை… நேரத்த கடத்தாம விசயத்தைச் சொல்லு நிலா!” நீலா அதட்ட… 

“சுரேனுக்கு என்னை நல்லாவே தெரியும்மா. என்னைப் பிடிக்கவும் செய்யும். நாந்தா அவரை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன். 

பார்ட் டைம் ஸ்டோர்ஸ்ல இருந்திட்டே தொடர்ந்து படிச்சி முடிச்சு வேலைக்கான டிரெயினிங் முடிச்சி கூட என்ன காரணத்துக்காகவோ திரும்ப அங்கேயே வேலை பாக்குற மாதிரி இருந்திருக்காரு. 

நா நினைக்கிறேன் ராகேஷ் தொடர்பா எதுனாச்சும் இருக்கலாம்.” 

வெண்ணிலா முகத்தில் குழப்ப ரேகைகள் சூழ… 

“என்னடி சொல்ற… பக்குன்னு ஆகுது! நீ அவர்ட்ட கேட்டியா என்ன?” நீலாவுக்கு சுரேன் மேல் ஒரு நன்மதிப்பு எழுந்தாலும் மகள் கடைசியில் சொன்னதைக் கேட்டுப் பயந்து வந்தது. 

‘இதென்ன புதுத் தலைவலி?’ நினைத்தார். 

“இல்லம்மா நா கேக்கல. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பழைய செய்திய தேடிப் பார்த்தேன். ராகேஷ் கேஸ் சம்பந்தமான நியூஸ்… அதுல சுரேன் பேரும் இருக்கு. அது தான் அப்படி கனெக்ட் பண்ணேன்.

அன்னைக்கி இருந்த நிலைமையில ஆதி ஏதோ சொல்ல வந்ததைக் கூட நா காது கொடுத்துக் கேட்டுக்கல. அப்படிக் கேட்டிருந்தா சுரேன் பத்தியும் தெரிஞ்சிட்டிருப்பேன்.” 

தன் அலட்சியத்தை எண்ணி நொந்து வந்தது வெண்ணிலாவுக்கு! 

“நீ சொல்றதைக் கேட்கும் போதே எனக்கு இங்க பட படன்னு அடிச்சிக்குது நிலா. பொம்பள பிள்ளைய வளக்குறது வயித்துல நெருப்ப கட்டிட்டு வளைய வர்ற மாதி்ரின்னு சும்மாவா சொல்றாங்க? 

நா அவ்வளவு கவனமா இருந்தும் கூட உன் விசயத்துல தப்பு நடந்து போச்சி. எனக்கும் நல்ல அனுபவப்பாடம் கத்துக்குடுத்திட்ட!” 

நீலா தன் ஆதங்கத்தில் கோபத்துடன் பேசச் செய்ய… 

“ம்மா ப்ளீஸ் நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற இம்சைய கூட்டாத! மனசு ஒரு மாதிரி இருக்கவும் தான உன்ட்ட தனியா இந்நேரத்துல பேசிட்டிருக்கேன்!” எரிந்து விழுந்தாள். 

“ஆமா என்ட்ட கோவப்படு! இப்ப வந்து பேசுற மாதிரி முன்னாடியும் வந்து பேசியிருந்தா நாம இப்படி வருத்தப்படுற மாதிரி ஆகியிருக்காது இல்லடி? 

பெத்தவங்க நாங்க நல்லது கெட்டது சொல்லித்தான் வளக்குறோம். ஒவ்வொரு வயசுலயும் ஒவ்வொரு மாதிரி தடுமாற்றம் வர்றது தான். அதையெல்லாம் கடந்து வரணும்… முடியலைன்னா பெரியவங்கட்ட வந்து பேசணும்.

மனசுல கலக்கமில்லைன்னா இப்படி உட்கார வச்சி என்ட்ட அப்பவே பேசியிருப்ப. உன்னால ப்ரீயா பேச முடியாத விசயம்னா… அப்ப அது தப்புன்னு உனக்குப் புரியாம போச்சே!” 

வருத்தத்துடன் நீலவேணி பேசிக்கொண்டிருக்க… 

“லவ் பண்றது தப்புன்னு நா நினைக்கலை. தப்பானவன செலக்ட் பண்ணிட்டேன். இல்லைன்னா கொஞ்ச நாள்ல வீட்ல வந்து சொல்லிருப்பேன்மா. இனி அதைப் பத்தி பேசாதயேன்!” 

தன் நினைப்பைப் பகிர்ந்துவிட்டு, அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்துக்கொண்டாள் வெண்ணிலா. 

“பாரு இன்னும் காதலிக்கிறதுல பிரச்சனைகள் அதிகம்… அம்மாப்பா பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணுறதே நல்லதுன்னு சொல்ல வாய் வருதா உனக்கு?” 

அந்த நேரத்திலும் மகளை ஒரு பிடி பிடித்தார். 

“…” பேசி பிரயோஜனமில்லை… கத்தட்டும்… திட்டட்டும்… நினைத்து வெண்ணிலா மவுனமாக இருக்கச் செய்ய… 

அதை உணர்ந்தாற்போல ஒரு பெருமூச்சுடன் நீலவேணி… 

“சொல்லிக் காட்டணும்னு பேசலைடீ… கலக்கமா இருக்கு. அப்ப அந்தத் தம்பிக்கும் நீ அந்தப்பயல காதலிச்சது, கூடச் சுத்துனது எல்லாம் தெரியாதா என்ன… எப்படித் தெரியாம போகும்?” மகளின் தலையைக் கோதியபடி கேட்டார். 

“நா அங்க வேலை பாக்குறப்ப சுரேனுக்குத் தெரிஞ்சிருக்காது நினைக்கிறேன்மா. அவரது நடவடிக்கைகளை ஞாபகத்தில் வச்சி சொல்றேன்… தெரிஞ்சிட்ட மாதிரி இல்லை. ஆனா… அதற்கப்புறம் தெரிஞ்சிருக்கலாம்.” மெல்லியக்குரலில் வெண்ணிலா சொல்ல… 

“இன்னைக்கி உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காரு. அவரைப் பார்த்ததுல இஷ்டப்பட்டு வந்தாப்ல போலத்தான் இருந்தது. விசயம் தெரிஞ்சும் வந்திருக்காரா? 

இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியலயே! இப்ப நாம அவங்களுக்கு என்ன பதில் சொல்லன்னு புரியலடி. 

நீ என்னமோ அந்தத் தம்பிய கிண்டல் பண்ணுற… இந்தக்கல்யாணம் முடிவாகி… அவரோ… அவங்க வீட்ல வேற யாராச்சும் நாளக்கி உன்னைய ஒரு சொல்லு பேசிட்டா நீ தாங்குவியா நிலா? 

வேற என்ன பேச்சுன்னாலும் தாங்கிக்க முடியும். மானம் ஒழுக்கம்னு பேச்சு வந்தா… என்ன பண்ணுவ? வயித்துல புளிய கரைச்சாப்ல இருக்கு. சும்மாவே பொம்பளைங்களுக்கு நானூறு பிரச்சனைக்கு மேல ஏறி ஆடும். 

உன் புகுந்த வீட்ல ராக்கி நாதாரி விசயம் தெரிஞ்சா எப்படி எடுத்துக்குவாங்க… இவ்வளவு நாளும் நீ இதைக்கடந்து வந்திட்ட… காதல் விசயம் வெளியில யாருக்கும் தெரியாதுன்னு நிம்மதியா இருந்தம்.” 

எவ்வளவு அழுத்தமானவர்களாக இருந்தாலும் நேர்மை வழி வாழ்பவர்களுக்கு ஒரு ட்ரிகர் போதும் மனது உடைய! 

அப்படித்தான் ஆனது இங்கே… அவ்வளவு கவலை நீலாவிடம்! 

முசு முசுவென ஓர் அழுகை. 

ஒரு பெண்ணைப் பெற்ற தாயாக நாலையும் அவர் யோசிக்கச் செய்ய… வெண்ணிலா யுத்தாக யோசிக்கும் போது புரியாதது… அம்மாவின் பார்வை வழியாகச் சொன்னதும் தெளிவாகப் புரிந்தது. 

இத்தனை வருசத்தில் அம்மாவை அவள் இப்படி உடைந்து பார்த்ததே இல்லை. அன்னையின் கவலை தோய்ந்த முகம்; கலங்கிய கண்கள்; மனதை உறுத்திய வார்த்தைகளென அனைத்தும் சேர்ந்து அவளுடைய வயிற்றைக் கவ்விப் பிடித்தது. 

அவளுக்கும் கண்கள் கலங்கி வர, அழுகையை அப்படியே அடக்கி உள்ளிழுத்துக்கொண்டு… 

“சாரிம்மா… சாரி! நீ இப்படி அழுதா எனக்கும் அழுகாச்சி வருது பாரும்மா. ச்சே நா கல்யாணத்துக்கு ஓகே மட்டும் சொல்லிட்டு விட்டிருக்கணும். நானும் குழம்பி உன்னையும் குழப்பி வச்சிட்டேன்.” 

ஙஞணநமன குரலில் சொல்லிப் பெற்றவளின் கண்களைத் துடைத்துவிட்டாள். 

“நீ இப்ப என்ட்ட சொன்னது நல்லதுக்குத்தான்டி. என்ன செய்யணும்னு அப்பாவும் நானும் காலைல கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர்றோம். தேவைன்னா உங்க பெரிய பெரியப்பாக்குச் சொல்லித்தானே ஆகணும்? 

கொழுந்தனுக்கும் ஆதிக்கும் ஏற்கெனவே தெரிஞ்சது… என்ன உங்க பெரிய பெரியப்பாவுக்குச் சொன்னா அப்புறம் உங்க சின்ன பெரியப்பாவுக்குச் சொல்லணும். அவருக்குத் தெரிஞ்சிச்சின்னா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி…” 

நீலவேணி வருத்தத்துடன் பேசச் செய்ய… வெண்ணிலா அவரை அமர்த்த முயன்றாள். 

“நீ பயப்படுற அளவுக்கு எதுவுமில்லம்மா. சுரேன் ரொம்ப நல்ல மாதிரி. அவங்க வீட்டுக்கெல்லாம் என் விசயம் எதுவும் தெரிஞ்சிருக்காது. அப்படியே தெரிஞ்சாலும் அது அவன் பாடு… பார்த்துப்பான். அந்தளவு அவனை நம்பலாம். சும்மா வாய் பேசுவான். அதுவும் என்ட்ட தான் கொஞ்சம் வழிவான்…” 

“ச்சீய் வழிவான் கிழிவான்னு என்னடி பேச்சு!” கண்டிப்புடன் நீலா பார்க்க… 

“ஹீ… பிரெண்ட்ட பேசுற மாதிரி வந்திட்டு… சாரி! சுரேன் என்னை லவ் பண்ணுறான்மா…” மெல்லியக்குரலில் வெண்ணிலா வெளியிட்டாள். 

“என்னது லவ்வா!” நீலவேணி அதிர்ச்சியில் விழி விரிக்கச் செய்ய… 

“ம்ம்… முன்னாடியே என்ட்ட சொல்ல வர்றப்ப நா அவரைத் தவிர்த்தேன். இப்ப பார்த்ததுமே தெரிஞ்சது… இன்னும் லவ் பண்றாருன்னு. மாறவேயில்லை… அதே சுரேன் தான்!” 

“என்னமோ சீரியல் கதையாட்டமிருக்குடி நீ சொல்றது… நம்பவே முடியலை… எப்படி இவ்வளவு தூரம் கனெக்ட் ஆகி வந்திருக்குப் பாரு! உங்க பெரியப்பா வழியா அவங்க பெரியப்பாவுக்கு உன் போட்டோ போயிருக்கு…” சிலிர்த்துப் போனார் நீலா. 

“நானும் அவந்தலைய கண்டதும் ஷாக்காகிட்டேன்மா!” சொத்தென்று அவள் வாயில் ஒரு அடி விழுந்தது. 

“மரியாதையா பேசுன்னு சொன்னேன்!” முறைத்த அம்மாவை அப்படியே கட்டிக்கொண்டாள். 

“முன்ன கூப்பிட்டப் பழக்கம்… அப்படியே தான் சொல்ல வருதும்மா…” பாவம் போல மகள் சொல்லவும், 

ஆதுரமாக அவள் முடி கோதிவிட்டு நீலா சொன்னார், “மாத்திக்க முயற்சி பண்ணு நிலா. இனி மேல் பெரியவங்க, சின்னவங்கன்னு பாத்துப் பேசு!”. 

தலையாட்டலில் ஓகே சொன்னாள் நிலா. சில நிமிட அமைதிக்குப் பின்னர் நிலா மனதிலுள்ளதைப் பகிர்ந்துகொண்டாள். 

“ஸ்டோர்ஸ்ல வச்சி சுரேனை அடிக்கடி பார்த்திருக்கேன். சிம்பிள் லுக்ல இருப்பாரு. என்கிட்ட பேச வரும் போது நா அவரை மதிக்கச் செய்யலம்மா. 

அந்தப்பய ராகேஷ் வந்து நல்லா இனிக்கப் பேசுவான். அவன் தோற்றத்துக்கும் பேச்சுக்கும் விழுந்தேன். சுரேன்ட்ட சாதாரணமா கூடப் பேச மாட்டேன். எரிஞ்சி விழுவேன். 

யாரையும் அவங்க தோற்றத்தை மட்டும் வச்சி எடை போடக்கூடாது நல்லப்பாடம் கத்துக்கிட்டேன். பசப்பு வார்த்தைகளை இனங்கான தெரியணும்! 

ம்ப்ச்… பட்டதுக்குப் பின்னால தானே புரியுது!” 

வருத்தப்பட்ட மகளுக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை சொல்லி, அவள் ரூம் சென்று தூங்கும் வரை உடனிருக்கச் செய்ய… 

வெண்ணிலா கண்ணயரும் முன்னர், “ம்மா இன்னும் ஒரு வருசம் உங்கூட இருக்கணும் போல இருக்குமா. அந்த சுரேன்ட்ட சொல்லிடு… நா அடுத்த வருசம் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றாள். 

இப்போது வெண்ணிலா நிம்மதியாகத் தூங்க… நீலவேணியின் தூக்கம் பறிபோனது. 

அசதியால் உடலும் கெஞ்சச் செய்ய… அவரது ரூம் வந்த நீலவேணி கண்ணயர முடியாமல் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தார். 

அவரருகே படுத்திருந்த மனோகரோ நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். சாதாரண நாட்களிலேயே மனோகரின் குறட்டை நீலவேணியைச் சீக்கிரம் உறக்கத்தினுள் போகவிடாது! 

இன்றோ சுத்தம்! 

வெண்ணிலா சொன்னதைக் கேட்டதில் தலை விண் விண்ணென்று தெறிக்கச் செய்ய… தைலம் தடவிவிட்டுத்தான் படுக்கைக்கு வந்தார். இருந்தும் வலி விடவில்லை. மனவுளைச்சலும் உடல் அசதியும் அவரை ஜுரத்தில் தள்ளியது. 

மறுநாள் காலை… சுரேன் அண்ணன் மகளைக் கொஞ்சிக்கொண்டிருந்தான். 

“ஹாய் லிட்டில் லோட்டஸ்… இன்னைக்கி ரொம்ப பளிச்சுன்னு இருக்கீங்களே! என்ன விசயம்… இந்த ஜொலிப்பு? நேத்துச் சித்திய மீட் பண்ணின சந்தோஷமா?” 

“டேய் நீ என் மகளைக் கொஞ்சுறயா இல்ல உன்னையே கொஞ்சிக்கிறயா? அடங்குடா… இன்னும் எதுவும் முடிவாகலை.” சுந்தர் சுரேனை வாரினான். 

“செல்ல புஜ்ஜி உங்கப்பாக்குப் பொறாமை பாருங்க… எம் பொண்டாட்டியாட்டம் அவன் பொண்டாட்டி அழகில்லன்னு காண்டுல இருக்கான்.” 

பதிலுக்கு சுரேன் தன் நண்பியையே டேமேஜ் செய்தான். அவனை சும்மாவா விடுவான் சுந்தர்?