என் சித்தம் சித்திரமே – 8

என் சித்தம் சித்திரமே 08 

சுரேன் வெண்ணிலாவிடம் கண்களில் குறும்பு வழிய… உதடுகளில் சிரிப்பு முகிழ்க்க… 

“அப்பதேயிருந்து இவரு உன்னைய சுத்தி சுத்தி வர்றாரு. அவருக்கு உதவி பண்ணலாம்ன்னு கேட்டேன்…” சொல்லி அது நேரம் வரை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்த அந்த நுளம்பை எட்டிக் கை விரல்களைக் குவித்துப் பிடித்தான். 

அவனுடைய செயலை முதலில் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா, அவன் அவளை நெருங்கி வரவும் சட்டென மூளையில் பல்பு எரிய… 

“எதே!” அதிர்ச்சியுடன் பின்னால் செல்லப் போக, சுரேன் அவளை விடவில்லை. 

அவள் கையைப் பிடித்தவன், நுளம்பை இரு விரல்களில் அவள் கன்னத்தில் வைக்கப் போனவன் அப்படியே போக்குக் காட்டி நிறுத்திவிட்டு… 

“வெண்ணிலா ஐஸ் சூடாகிட்டு. இப்ப நீ அவளைத் தொட்டே ஆகணுமா?” என அதனிடம் பேசுவது போலக் கேட்கச் செய்தான். 

சற்றுக் கவனித்துப் பார்த்திருந்தால் அவளுக்குத் தெரிந்திருக்கும்… அவன் கை எம்ட்டி. கொசு கையிலிருப்பது போல அவளைச் சீண்டிக்கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டிருப்பாள். 

அவளோ அச்செய்கையில் அதிர்ச்சி, எரிச்சலாகி அவனுடைய கை விரல்களைப் பிரித்து விடுபட முயல்வதிலேயே குறியாக இருந்தாள்.  

சுரேனின் கையை அவ்வளவு அருகில் கண்டதில் மிரண்டு முகத்தை வெடுக்கெனத் திருப்பவும், அவன் விரல்கள் அவள் கன்னக்கதுப்பை உரசி அப்படியே தாடை வரை சென்றுவிட… 

தன்னிச்சையாகத் துள்ளி அவனிடமிருந்து வெண்ணிலா தூரப் போக நிற்க… 

அந்நேரத்தில் சுரேனும் அவள் முகத்தில் உரசிய கையை உதறி பின்னடைய நினைத்து, அவளைப் பிடித்திருந்த கையையும் தளர்த்தினான். 

வெண்ணிலா இரண்டடி பின்னால் போய், 

“கர்மம் கர்மம்!” தலையிலடித்துக்கொண்டு அவனை முறைத்தாள். 

“என் ஆளை டீல் பண்ணணும் ரொம்ப சூடாயிட்டா. நீ ஓடி… ச்சீ… பறந்து போடா! இவ கிட்ட வரக்கூடாது!” 

வலது ஆள்காட்டி விரலை இடமும் வலமுமாகக் காற்றில் அசைத்து வார்னிங் வைத்தான் சுரேன். 

“பொண்ணு பார்க்க வந்திட்டுக் கொசுவ கொஞ்சிட்டிருக்கான்…” கிண்டலாக வெண்ணிலா சொல்ல, சுரேன் புன்னகைத்துக்கொண்டான். 

“வரலாறு மேடம் வரலாறு… உலகம் சுரேனை ஞாபகத்திலே வச்சிப் பேச வேணாமா…” கண் சிமிட்டியவனை அப்படியே முகத்தில் பஞ்ச் பண்ணத் தோன்றினாலும், 

“பெரிய உலக வரலாறு… அது பேசுமாம்!” கலாய்த்தாலும் அவனுடைய பாவனையில் அவளுக்கும் அரும்பு முறுவல் பூத்தது. 

அதை மறைத்துக்கொள்ள சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். தென்னை மரங்களின் மேல் பார்வை பதித்தாள். சில நொடிகள் சுரேன் அவளையே பார்த்தான். 

இருவரும் மதில் சுவரருகே நின்றிருந்தனர். ஆனால் இருவருக்குமிடையே சில அடிகள் இடைவெளி இருந்தது. மெல்லிய இருள் பூச்சில் வான்நிலவு நட்சத்திரத் தோழிகளுடன் மகிழ்வுடன் ஒளி வீச… 

“என் கைல ஒன்னுமில்ல நிலா… சும்மானாச்சும் விளையாட்டுக்கு…” 

“ஓ… உன்னை! நீ மாறவேயில்ல… எப்ப எதுல விளையாடணும்னு இல்லாம!” கண்டனக்குரலில் அவள் சொல்லச் செய்ய… 

“எதுக்கு மாறணும்? நா இப்படித்தான்.” முறுவலுடன் அவன் சொல்லவும்… 

“போலீஸ்ல சேர்ந்திட்டியாமே… இன்னுமா லொள்ளு பண்றதை நிப்பாட்டல?” கேள்வியாக வெண்ணிலா புருவம் உயர்த்திக் கேட்கச் செய்ய… 

“இப்ப புதுசாவெல்லாம் சேரல!” மெல்லிய முறுவல் அவனிடம்… அடக்கமாகச் சொன்னான். 

“அப்ப அந்த வேலை… ஸ்டோர்ஸ்ல நீனு?” குழப்பத்துடனான ஒரு பாவனையுடன் வெண்ணிலா. 

“காலேஜ் படிக்கிறப்ப பார்ட் டைம்மா அங்க வேலைக்குச் சேர்ந்தது… அப்படியே அதை மெயிண்டெயின் பண்ணேன். அங்கிருந்தே மாஸ்டர்ஸ் முடிச்சதும், ஃபோரென்ஸிக்ஸ், க்ரைம் சீன் அனாலிசிஸ் எல்லாம் கோர்ஸ் எடுத்துப் படிச்சேன். இடையிலே ஒரு வருசம் பக்கம் நா அங்க வேலைக்கு வரலியே?” 

சுரேன் சொல்ல சொல்ல விழி விரித்தாள். அவனை இந்தளவுக்கு அவள் யோசிக்கவே இல்லை. இப்போது அவன் குடும்பத்தினரையும் பார்த்ததில் அவளுக்கு, 

‘இப்படியெல்லாம் எதுக்கு வந்து வேலை செய்யணும் இவன்?’ என்று தான் தோன்றியது. ஆனால், அதை வெளியே காட்டச் செய்யவில்லை. 

“ம்ம் நினைவிருக்கு…” தலையாட்டி அவள் சொல்லவும், 

“டிரெயினிங் போயிருந்தேன்.” புன்னகையுடன் சுரேன் சொன்னான். 

“நா என்னமோ உன்னைய ரொம்ப சாதாரணா நினைச்சேன்!” தன் மனதை அப்படியே அவள் வெளிப்படுத்த செய்ய… 

“தெரியும்!” அவன் பளிச்செனச் சிரித்தான். 

அவனுடைய சிரிப்பு வெண்ணிலாவில் ஊடுருவி இழுக்கச் செய்ய… 

அப்படியே நின்றிருந்த இடத்திலேயே இமைக்காமல் நின்றாள். அவள் கண்கள் அவன் சிரிப்பை உள்வாங்கி முகத்தை மொய்த்துக்கொண்டிருக்க… 

‘கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே

நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ

காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே…’ என்கிற நிலை போலிருந்தது அவளின் தோற்றம். 

வெண்ணிலா அந்நேரத்தில் அவளின் பார்வையின் வீரியத்தை உணரவில்லை. புதியதோர் ஈர்ப்பில் இழுக்கப்பட்டிருந்தாள். ஆனால், சுரேனின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை. 

ஏதோ அந்நிமிடம் ஓர் உல்லாசம் அவனுள் பரவச் செய்ய… 

“ரிலாக்ஸ் ஆகிட்டியா நிலா?” மென்மையாகக் கேட்டு அவள் பக்கம் ஆவலாக நகர்ந்து வந்தான். 

நிலா சுரேன் தன்னை நோக்கி அவ்வளவு சமீபித்து வருவதைக் கண்டு பதட்டமடைய… அவனைத் தவிர்க்க நினைத்து மேலும் விலக அடியெடுத்து வைத்தாள். 

காற்றில் உதிர்ந்து கீழே தரையில் விழுந்து கிடந்த தென்னை மட்டைகளைக் கவனிக்காமல் அவள் தவறுதலாய் காலை வைத்துவிட… 

ஒரே ஒரு நிமிடம் தான்… நிலைமை அங்கே தலைகீழாக மாறியது! 

‘ட’ வடிவ சுவற்றின் மூலையருகே நின்றிருந்த வெண்ணிலா, எதிர்பாராத வண்ணம் கால் தட்டி… பாதம் மடங்கி பாலென்ஸ் இல்லாது அப்படியே பின்னால் சரிந்து விழப்போனாள். 

அந்த வீடு மொத்தமும் பழைய வடிவமைப்பு. கீழேயாவது சின்ன சின்ன மாற்றங்களைச் செய்திருந்தனர். மேலே அப்படியே விட்டு வைக்கப்பட்டிருந்தது. 

மொட்டை மாடியின் சுற்று மதில் சுவர் குட்டையாக இருந்தது. அது அவ்வளவாகப் பாதுகாப்பான உயரத்தில் இல்லாதிருந்ததில் அவளுடைய பாதி உடலுக்கு மேலேயே வெளிப்பக்கம் நோக்கிச் சரிய… 

அவள் தடுமாறவுமே தரையைக் குனிந்து பார்த்தவன், “ஹேய் நிலா பார்த்து…” எனச் சொல்லிய சுரேன் உடனே எட்டி அவளின் கை பிடிக்க முயன்றான். 

அது வேலைக்காகாது புரிந்து… அப்படியே அவளின் பின்னால் கையை விட்டு வெண்ணிலாவை இடுப்போடு பிடித்து… சிக்கெனத் தூக்கி இரண்டடி உள்பக்கம் போய்… தன்னருகே நிற்க வைத்தான். 

நடக்கவிருந்ததை சுரேன் சமயோஜிதமாகத் தடுத்திருந்தாலும், பயத்தில் அவளுடைய முகம் வெளிற மூச்சு வாங்க நின்றிருந்தாள். 

அவள் கண்களில் மரண பீதி தெரியக் கண்ட சுரேன் அவள் இடுப்பைச் சுற்றியிருந்த கையை அழுத்திப் பிடித்துக்கொண்டான். 

என்னவோ அவளுக்குப் பாதுகாப்பைத் தந்து பொத்தி வைத்துக்கொள்வது போல் அவன் அக்கணம் நினைத்த மாதிரி! 

எதிர்பாராத வகையில் நடந்துவிட்ட நிகழ்வில் அவனுமே சற்றுப் பதட்டம் கொண்டிருந்தான். 

அவளுக்கும் எதுவும் ஆகவில்லை என்கிற ஆசுவாசத்தை அந்நெருக்கத்தில் அனுபவித்து நிற்க… 

ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருமே நின்றிருந்த அந்நிலையிலேயே நின்றிருக்க… ஆழமான மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான் சுரேன். 

தன் கையணைப்பில் இருந்தவளின் புறம் திரும்பி, “ஆர் யூ ஓகே நிலா?” என்றான் இனிமையாக. 

அதற்குள் வெண்ணிலாவும் நார்மலாகியிருக்க… அவன் கேட்டதும், “ம்ம்,.. ஒன்னுமில்ல ஐ’ம் ஓகே!” என்று இயல்பாக இயம்ப… அப்போது தான் அவள் அவனை… தாங்கள் இருந்த நிலையை உணர்ந்தாள். 

உடனே தன்னை ஒட்டி நெருக்கமாக நின்றிருந்த சுரேனின் இடுப்பில் நறுக்கெனக் கிள்ளினாள். 

“ஏய் என்ன பண்ற?” சட்டென சுரேன் நகர்ந்து போக… 

“கையை எடு பக்கி! அது தான் தூக்கி நிறுத்திட்டேல்ல? இன்னும் எதுக்கு இடுப்ப பிடிச்சிட்டு நிக்கிற?” கடு கடுத்தாள். 

‘அச்சோ! பொண்ணு பாக்க வந்தவன் கிட்டக்க இப்படி உரசிக்கிட்டு நின்னுட்டிருக்கேனே! யாராவது பார்த்திருந்தா…’ 

யாராவது பார்த்துவிட்டார்களா என்று பதட்டமாக நாலாபக்கமும் பார்த்துக்கொண்டாள். 

அரை வினாடிக்கும் குறைவான நேரம் அவளின் முகக்கடுப்பில் திடுக்கிட்டவன், உடனே அதை மறைத்துக்கொண்டான். 

அவனுக்குத்தானே அவள் லவ்வர்… அவளுக்கு அவன் அப்படியில்லையே? 

புன்னகையுடன், “யாரும் பாக்கலை ஐஸ்.” கிசு கிசுத்தான். 

வெண்ணிலா தீப்பார்வையை வீசச் செய்ய… 

“நீயுந்தான ஒட்டிட்டு நின்ன… இவ்வளவு நேரமும்?” கண்ணடித்து முறுவல் மேவலுடன் அவன் கேட்கச் செய்ய… 

“எதே… ஏதோ நா இஷ்டப்பட்டு இடிச்சிட்டு நின்ன மாதிரி… பயத்துல நின்னதைச் சொல்லிக் காட்றான்!” நொடித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். 

“சரி சாரி… உன்னைத் தொட்டுத் தூக்கியதுக்கும் சேர்த்து இந்த சாரியை வச்சிக்க. ஓகே? இப்ப என்னைய பார்த்து நில்லு நிலா. அந்தப்பக்கமா முகத்தை வச்சிட்டா நா எப்படிப் பேசுறது?” 

நேரம் ஆனதை உணர்ந்து சுரேன் சற்றே குரல் உயர்த்தி அதட்டலாகச் சொன்னான். 

வெண்ணிலா திரும்பி அவனைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு, “நீங்க இப்ப பேசவே வேணாம் சாமி! கிளம்புங்க முதல்ல…” என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க மாடிப்படிகள் இருந்த திசையில் கையை நீட்டிச் சொன்னாள். 

“ஓய்… கீழ பாக்காம தட்டி விழுந்து வச்சது நீ! உன்னைய ஒரு சம்பவம் நடக்காம தூக்கிக் காப்பாத்தி விட்டதுக்கு எம்மேலயே கோவப்படுவியா?” குறு குறுப்புடன் அவன் பார்வை. 

அவனைப் பார்த்து நிமிர்வுடன் நின்றவளை அவனின் பார்வையும் கேள்வியும் பாதிக்கச் செய்ய… அப்படியே உதட்டைக் கடித்துக்கொண்டாள். தன் பதட்டத்தை மறைக்கிறாள் எனப் புரிந்தது. 

சுரேன் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான். வினாடிகளை விழுங்கி நிமிடம் வளர… 

சுரேனின் சத்தம் வராது போக… வெண்ணிலா நிமிர்ந்து பார்க்க… “என்ன…” புருவம் உயர்த்தி இறக்கி… முகிழ்ந்த சிரிப்பை அதக்கியதில் உதடுகளில் மெல்லிய துடிப்புடன் சுரேன் நின்றிருந்தான். 

“போடா… மன்மதக்குஞ்சுன்னு நினைப்பு!” வெண்ணிலா அவன் தோரணையைக் கண்டு முறைக்க… 

“பார்றா… என்னைய மன்மதனுக்கு கனெக்ட் பண்ணி கமெண்ட் பண்ணதுமில்லாம முறைப்பு வேறயா?” 

‘அட்டகாசம் பண்ணிட்டிருக்கான்… இவன முதல்ல வெளியேத்து நிலா!’ உஷாரானவளாக, 

“அச்சோ! டைம் ஆகுது கிளம்பு நீனு… இவ்வளவு நேரமா… அப்படி என்ன பேச்சு ஓடினிச்சி கேட்டு கசின்ஸ் என்னைய ஓட்டியே கொல்லப் போறாங்க!” என்றாள். 

அக்கணத்தில் சுரேன் அவள் பட படப்பை இரசித்து நின்றான். அவள் ‘அச்சோ’ சொன்னதில் உதடுகள் குவிந்த அழகு அவனுக்கு வேற எண்ணத்தைக் கொடுத்தது! 

மனதில் நம்பர் போட்டு வைத்துக்கொண்டான். அவள் சொன்ன ‘பக்கி’ கூட அவன் லிஸ்ட்டில் இணைந்தது. 

சித்திரம் போலவே கண்ணெதிரே மிளிர்ந்து கவர்ந்தவளை சுரேன் சைட்டடித்தான். 

அழகிய பச்சை ஆப்பிள் நிறத்தில் ஒரு பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள. அதிலே செர்ரி பழ பார்டரில் மெல்லிய தங்க நிற ஜரிகை இழையோடியிருந்தது. தங்க நிறத்தில் பிளவுஸ் செர்ரி பழ நூல் வேலைப்பாடுடன். 

அவன் தன்னைப் பார்வையிடுவது பார்த்து அவள் டென்ஷன் ஆனாள். அவன் அவளை விரும்புகிறான் என்று அவளுக்குத் தெரியுமே! 

செல்வி வேறு முன்பே அவளிடம் சொல்லியிருக்க… ‘இன்னுமா லவ் பண்ணுறான்?’ ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக இருந்தவளுக்கு, 

அவனுடைய பார்வையின் பாஷை புரிய அவஸ்தையானாள். 

சுரேன் ஆற அமர அவளைப் பார்வையிட்டு விட்டுச் சொன்னான்… 

“ரொம்ப நாளாச்சி ஐஸ். உன்னைய இப்படிப் பக்கத்துல வச்சிப் பார்த்து. இன்னைக்கி ரொம்ப ஈகரா இங்க வந்தேன். இத்தனை மாசத்திலே ஒரு நாலு தடவை உன்னைய தூரத்திலிருந்தே பார்த்தது…” என அவன் சொல்லி நிறுத்தவும், 

வெளிப்படையாகத் தெரிந்த அவனுடைய சந்தோஷமும் ஆர்வமும் வெண்ணிலாவை எட்டியது. திகைப்பும் தடுமாற்றமுமாய் நின்றவள் அதை உடனடியாகச் சமாளிக்கவும் செய்தாள். 

“எப்ப எங்க பார்த்த?” கேட்டாள். அவளுக்குள்ளே ஒரு குறு குறுப்பு. ஆனால், அவனிடம் காட்டவில்லை. 

“நீ கோவிலுக்கு வரும் போது பார்த்தேன். ஒரு தடவை கடை வீதியில்… ஐஸ் க்ரீம் பார்லர்ல வச்சி. வெண்ணிலா ஐஸே ஐஸ் க்ரீம சப்புக்கொட்டிச் சாப்பிடறது கண்ணுக்குக் குளிர்ச்சியா அழகா இருந்திச்சி!” 

‘என்ன இவன்… இவ்வளவு ஓபனா பேசுறான்!’ 

இரசனையுடன் அவன் சொன்னதைக் கேட்டு வெண்ணிலாவிற்குக் கூச்சமாகிவிட்டது. அதை மறைக்கப் புடவை முந்தானையின் பூக்களை நிரடிக்கொண்டிருந்தாள். 

“பாருடா போலீஸ் வேலைய பாக்காம என் பின்னாடி ஊர் சுத்தியிருக்கான்!” நக்கலாகச் சொன்னாள். 

“போலீஸ்னாலும் பொறுக்கினாலும் லவ் பண்ற பொண்ணைப் பார்க்கச் சொல்லும்…” மீண்டும் விரலிடுக்கில் சுரேன் ஹார்ட் வைத்துக்காட்ட… வெண்ணிலா லஜ்ஜையில் நெளிந்தாள். 

‘போலீஸ் பொறுக்கி!’ மனதில் கவுண்டர் வேறு கொடுத்துக்கொண்டாள். 

என்ன தான் வீட்டில் இப்போது திருமணம் வேண்டாம் என்று வெண்ணிலா சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்கள் இவளுக்குக் கல்யாணம் செய்யாமல் ஓய மாட்டார்கள் எனப் புரிந்தே இருந்தது. 

முன்பு ஞானமணி ஸ்டோர்ஸில் வைத்து சுரேன் அவளிடம் ஆர்வமாகப் பேச வரும் போது, அவனைத் தவிர்க்கவே எரிச்சல் பட்டிருக்கிறாள். 

‘இந்தக் காதல் கீதல் தனக்கு செட்டாகாது’ என நினைத்தவள் ராகேஷிடம் எப்படி ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்பட்டாள் என்று தெரியவில்லை. 

பின் நாட்களில் எப்போது நினைத்தாலும் தனது முட்டாள்தனத்தில் தீ வைத்துக்கொள்ளலாம் என்றிருந்ததே! 

இப்போது ராகேஷ் சேப்டர் முற்று முழுவதும் மூடிவிட்டாலும், ஒரு மூலையில் குத்தியது என்பது உண்மை. தவறு செய்துவிட்ட கில்டி ஃபீல். அவளின் குணத்தால் அது வெளியே தெரியவில்லை. 

அப்படியிருக்கையில் சுரேனே தனக்குப் பார்த்த மாப்பிள்ளையாக வந்து நிற்பான் என்பது வெண்ணிலா எதிர்பாராதது! 

சுரேனுக்கு வெண்ணிலா ராகேஷைக் காதலித்ததும் தெரியும் ஏமாந்ததும் தெரியும் எனும் போது அதைக் கடக்க அவள் சிரமப்பட்டாள். 

அவனை வாசலில் பார்த்ததும் தனியாக மாட்டும் போது அவனை வச்சி செய்ய நினைத்தது நடக்கவில்லை. அவனது பரிமானம் வேறு மாதிரி இருக்க… தடுமாறிப் போனாள். 

‘இப்பவும் லவ் பண்ணுறான். ரொமான்ஸ் லுக் விடுறான். பயபுள்ளக்கி அம்புட்டு உறுதியான லவ்வா!’ நினைத்தாள். 

தன் தடுமாற்றத்தை அவனிடம் காட்ட முடியவில்லை. அவனை ஒதுக்கவும் முடியவில்லை… திட்டவும் முடியவில்லை. 

எப்படியும் கீழே போனதும் கேட்பார்கள். வேண்டாம் சொல்லலாமா? ஓகே சொல்லலாமா? அவள் யோசிக்க… 

“என்ன யோசனை மேடம்க்கு?” கேட்டான். 

“ம்ப்ச்… ஒன்னுமில்ல…” வெண்ணிலா சொல்ல… 

“ஓய்… என்கிட்ட நீ எதுவும் கேக்கணும்னு நினைச்சா கேக்கலாம். பேசணும்னா ஃப்ரீயா பேசலாம். தயங்க வேண்டியதில்ல சரியா?” அக்கறையாகக் சொன்னான். 

“எனக்கு அப்படிப் பேச ஒன்னுமில்ல!” கண்ட பயலைப் பற்றி இருவருமே பேச விரும்பவில்லை. 

‘சில நேரம் சில மனிதர்கள்’ என்பது அனைவருக்கும் பொருந்தும். தேவையற்றதைத் தவிர்ப்பதே நல்லது. 

‘இவ ராகேஷ் பத்திப் பேச்சை எடுத்தா தகுந்தாற் போல நா பதில் சொல்லலாம். தேவையில்லாம நானா அவன் பேரைச் சொல்ல… காண்டாவாளா ஃபீல் பண்ணுவாளா தெரில. எதுக்கு வம்பு?’ நினைத்துத் தோளைக் குலுக்கிக்கொண்டு, 

“வெல்… அப்படி எதுவும் இல்லைன்னா ஓகே. குட்!” என்றான். 

“போலாமா? வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க இன்னும் காணோமேன்னு!” 

‘இதுக்கு மேல் இங்க நின்னு என்ன பேசிட்டு?’ வெண்ணிலா நினைக்க… 

“இந்த சேரி உனக்கு நல்லா சூட் ஆகுது!” 

திடீரென சுரேன் சொல்ல… மூச்சடைத்துப் போனாள் வெண்ணிலா! 

அப்படியொரு டீப் வாய்ஸ்… அவனை அங்கிருந்து விரட்டப் பார்த்தவளை அவனின் அந்தக்குரல் தடுமாறி நிற்க வைத்தது. இன்னதென்று பிரித்தறிய முடியாத சிலிர்ப்பு அவளுக்குள்ளே ஓடியது! 

“தாங்க்ஸ் சொல்ல மாட்டியா நிலா?” 

‘ஒருவரின் குரல் இந்தளவு டச் பண்ணுமா?’ 

“ஹான்… தாங்க்ஸ் சுரேன்!” 

‘கூல் பண்ணிட்டானே!’ வெண்ணிலாவிற்கே தோன்றியது. 

“உன்கிட்ட தனியா பேசணும்னு முதல்லயே பெரிப்பாட்ட சொல்லியிருந்தேன்.” 

‘டேய் இடத்தைக் காலி பண்ணு!’ 

“இப்ப பார்த்துப் பேசிட்ட தானே? ப்ளீஸ் கிளம்பு! கால் மணி நேரமாச்சி.” 

வெண்ணிலா அன்ஈஸி ஃபீலில் சொல்ல… 

“நா பேச வந்ததை எங்க பேச முடிஞ்சது?” அங்கலாய்த்தான் சுரேன். 

“பொண்ணு பார்த்தமா பேசுனமா போனமா இருக்கணும். வந்த வேலைய விட்டிட்டு அந்தக் கொசுவ கொஞ்சிட்டு என்னைய டீல்ல விட்டு டையத்த வேஸ்ட் பண்ணிட்டு…” 

“கொசுக்கு டூ மினிட்ஸ் தான் போச்சி. நீ பண்ணி வச்சது தான்… என் ப்ளானை சொதப்பிடிச்சி!” 

‘போக மாட்றானே… அப்படி என்ன ப்ளான் பண்ணியிருப்பான்!’ 

“வரலாறு முக்கியம்னு சொன்னேன் தான்… அதுக்காக ஒரு சம்பவம் அரங்கேத்த சொல்லிச்சா? உன்னைய… 

என்ன பண்ணிடுவேன்னு அப்படிப் பதறிட்டுத் தடுக்கி விழுந்த? நல்லவேளையா நா ஹெட்லைன் நியூஸ்ல இருந்து தப்பிச்சேன்!” 

கையை ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தான். 

“எதுவும் அசம்பாவிதம் ஆகாம தப்பிச்சேன்னு சந்தோஷப்படாம, நீ நியூஸ் ஆகாம தப்பிச்சங்கிறது தான் இப்ப ரொம்ப முக்கியம்!” 

வெண்ணிலாவுக்குச் சுறு சுறுவென ஏறியது! 

“இல்லையா பின்ன? சைபர் கிரைம் போலீஸ் ஆஃபிஸர் சுரேன் பொண்ணு பார்க்கப் போனாரா இல்லை சம்பவம் பண்ணப் போனாரா?’; ‘என்ன நடந்தது… பெண் பார்க்கும் படலத்தில்?” 

இரண்டு கைகளின் ஆள்காட்டி விரல் நடு விரல் கொண்டு காற்றில் இரட்டை மேற்கோள் காட்டிக் கேட்டான். 

‘சிங்கத்த சீண்டி விட்டிட்டோம் போலயே!’ தாடையில் தட்டிக்கொண்டாள். 

அவன் பாவனையை ஓரக்கண்ணால் உள்வாங்கியவனுக்கு அந்த பப்ளியை கொஞ்சத் தோன்றியது. உடனே கொஞ்சவா முடியும்? 

“இப்படியெல்லாம் மீடியாவுல பேசுனா நல்லாவா இருக்கும்?

நா உன்னைய பார்த்திட்டு… நாலு கடலைய வறுத்துத் தீய பண்ணி… ச்சே கரெக்ட் பண்ணி… நீ என் கூட கமிட் ஆக ‘ஓகே’ ங்க… 

அப்படியே ஒரு நல்ல நாள்ல உனக்குத் தாலிய கட்டிக் கல்யாணம் பண்ணிட்டு… நாம ரெண்டு பேரும் லவ்ல புரண்டு அப்படியே லிவ் பண்ணி… நம்ம ஜூனியர் குட்டீஸ் ரிலீஸ் செய்ய நா ஆசை வச்சா… நீ என்னைய சென்ட்ரல் ஜெயில் அடைக்க ப்ளான் போடுற!” 

“ஜெயில்ல போட ப்ளான் பண்ணுறாங்களாம்! என்ன நீ… போகுதுன்னு பேச விட்டா… லவ்வு லிவ்வு… கட்டிக் குட்டின்னுட்டு! நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் ஒரு லைவ் ஷோ காட்டாம நீ கிளம்ப மாட்ட… இங்கயே இருந்துக்க… நா கீழ போறேன்!” 

வெண்ணிலா சுரேனை வெட்டவா குத்தவா பார்வை பார்த்துவிட்டு விடு விடுவெனப் படிகளை நோக்கி நடக்க… 

சுரேன் முகத்தில் சிரிப்பு. சிரிப்புடனே அவளிடம், “ஓய் சிவப்பு நிலா… என்னை மேரேஜ் பண்ணிக்கச் சரி சொல்றியா?” கேட்டுக் கண்ணடித்தான். 

“சொல்ல மாட்டேன்… நல்லா வந்து பொண்ணு பார்த்தான் யா… காமெடி பீஸ்!” 

“நேரம்டா சுரேன்! உன்னைய டேமேஜ் பண்ண ஆளுங்க பத்தலைன்னு இவளை வேற அவங்க கூட கோர்த்துவிட போறியா?” தன்னையே சத்தமாகக் கேட்டுக்கொண்டான். 

“சிரிச்ச மாதிரி முகத்த வச்சிட்டுப் போ ஐஸு…” அவளுக்கு வேறு அறிவுறுத்தச் செய்ய… காண்டாகிவிட்டாள். 

அதி விரைவாகச் சென்று அவளுடன் இணைந்துகொண்டான் சுரேன். படிகளில் தட தடவென வேகமாக இறங்கப் போனவளைக் கை பிடித்துத் தடுத்து, “பார்த்து மெதுவா போ. சேரி தடுக்கப் போகுது!” அதட்டலாகச் சொன்னான். 

“ரொம்ப தான் அக்கறை!” நாக்கைத் துருத்திக் காட்டிவிட்டு அவள் நடக்க… 

“ஆமா அக்கறை தான். இப்ப என்னைய டெம்ப்ட் பண்ணாம இறங்கிப் போ!” சட்டென அவள் திரும்பிப் பார்க்கச் செய்ய… 

உல்லாசமாகப் பார்த்தபடி சிரிப்புடன் அவளைக் கடந்து கட கடவென இறங்கிச் சென்றுவிட்டான். 

ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே இறங்கி வந்த இருவரையும் பார்த்த பெரியர்களுக்கு சுரேன் பேச இடம் கொடுக்காமல் அவசர வேலையெனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட… 

தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம் என சுரேன் வீட்டினரும் சொல்லிக்கொண்டு கிளம்பினர். 

பைக்கில் ஏறி அமர்ந்தவன் அதை உயிர்ப்பிக்கும் முன்னர் தப்பாமல் வெண்ணிலா முன்பு காட்சியளித்த ஜன்னலைப் பார்க்க… அவளை அங்குக் காணவில்லை. 

சற்று ஏமாற்றமாக இருந்தாலும், இத்தனை பேர் இருக்கையில் தனியாக வர முடிந்திருக்காது… ஆளாளுக்கு இவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்று கேட்டு அவளைக் குடைந்து கொண்டிருப்பார்கள் என்று அடங்க மறுத்த மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு கிளம்பிப் போனான். 

சுரேன் சரியாகத்தான் கணித்திருந்தான். வெண்ணிலாவைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. சின்னவர்கள் குறும்புடன் பேசி அவளை வாரிக்கொண்டிருக்க… காந்தம்மாள் சாவதானமாக அவளருகில் உட்கார்ந்து நோட்டம்விட, மூச்சடைத்தது அவளுக்கு! 

“நிலா டிரெஸ் மாத்திக்கிறியாடா? வா… முதல்ல அந்த ஆரத்தைக் கழட்டிடலாம்.” நல்லவேளையாக அவளுடைய சித்தி விசாலி வந்து நிற்க… வெண்ணிலா நிம்மதியாக உணர்ந்தாள். 

மற்றவர்கள் வெளியே போகவும், ஆரத்தையும் கல் வளையல்களையும் கழற்றிய விசாலி… நகைகளை உரிய டப்பாக்களில் போட்டு காந்தம்மாளிடம் ஒப்படைக்க… காந்தம்மாளும் அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினார். 

“தாங்க்ஸ் சித்தி!” வெண்ணிலா விசாலிடம் சொல்ல… 

“ஆதி தான் என்னைய உள்ள அனுப்பி வச்சான். போயி அக்காவ காப்பாத்துங்க. கூட்டத்துக்கு நடுவுல மாட்டிட்டு முழிச்சிட்டிருக்கான்னு சொல்லி…” அவளுக்கு உதவியபடி விசாலி பேசிக்கொண்டிருந்தார். 

“ஒஹ்… எங்க சித்தி ஆதி?” 

“வேலையிருக்குன்னு கிளம்பிட்டான் டா.” 

“சாப்பிடாம போயிட்டான் சித்தி. என்ட்ட சொல்லிக்காம கிளம்பிட்டான்.” 

“உனக்கு அப்புறமா போன் பண்ணுறேன்னு சொல்லச் சொன்னான்டா. சாப்பிட வர முடியுமா தெரியலைன்னான்.” 

மனோகர் வீட்டினர் மட்டுமே பின் தங்கியிருக்க… அங்கேயே அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடானது. பெண்கள் சமைக்க… சிறியவர்கள் உதவி செய்துகொண்டிருந்தனர். 

ஆண்கள் மாப்பிள்ளையின் வேலை, வீடு, வசதியெனப் பேசிக்கொண்டிருந்தனர். 

அனைவருக்குமே வெண்ணிலாவின் விருப்பம் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாகயிருக்க… சந்தானம் தான் அமர்த்தினார். 

“மாப்பிள்ளை தம்பி சொல்லிட்டுப் போயிருக்காப்படி… நம்ம யாரும் நிலா பாப்பாவ தொந்தரவு செய்ய வேணாமுன்னு. யோசிச்சி மெதுவா சொல்லட்டும். 

நாளைக்கி இல்லேன்னா நாள மறுநாளுக்குள்ள அவங்களே கூப்பிடுவாங்க மனோகரு. சிவா தனியா கூப்பிட்டுச் சொல்லிட்டுப் போனான்.” 

வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பிப் போனதும் வெண்ணிலாவே நீலவேணியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டாள். 

“உங்களுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையாம்மா? இவனைப் பிடிச்சிட்டு வந்து நிறுத்தியிருக்கீங்க?” 

“வெண்ணிலா! வாயை அடக்கப் பழகு! கட்டிக்கப் போறவரை அவென் இவென்னுட்டு! மாப்பிள்ளைக்கு என்னடி குறைச்சல்?” 

“க்கும் மாப்ளயாம் மாப்ள… சரியான காமெடி பீஸு…” 

“ஜாலியா பேசினா காமெடி பீஸ்னு சொல்வியா? வாயிலயே ஒன்னு போடப் போறேன்டி… ஒரு உம்மனாமூஞ்சிய கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடும்பத்த நடத்தினா தான் உனக்குத் தெரியும்! 

இப்படிச் சிரிச்ச முகத்தோட நம்மட்ட நல்லாப் பேசிப் பழகுறவரா இருந்தா எங்களுக்கும் நல்லது தானேடி?” 

“அப்ப நீங்க முடிவே பண்ணிட்டீங்க என்ன…?” 

“உனக்கு அவரைப் பிடிக்கலையாடி?” ஓர் அம்மாவாக நீலவேணியின் முகத்தில் கவலை ரேகைகள். 

“அப்பாட்ட சொல்லட்டுமா நிலா… வேற மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி?”

மகளின் கைகளைப் பற்றிக்கொண்டு கலக்கமாகக் கேட்டு நிற்க… 

வெண்ணிலா அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அப்புறம் அந்தப் பதிலைச் சொன்னாள்.