என் சித்தம் சித்திரமே – 7
என் சித்தம் சித்திரமே 07
‘டேய் சுரேன்! உன்னைய அவன் இவன்னு சொல்லி இப்படித் தாராளமா டேமேஜ் பண்ணுறாளே… இந்த வெண்ணிலா ஐஸே தானா உன் சரி பாதியா வரணும்?
இவளுக்காகவா வீட்ல சண்டை போட்டு, ஒத்த கால்ல நின்னு இம்புட்டுத் தூரம் பொண்ணு பார்க்கிற அளவுக்கு வளர்த்து விட்டிருக்க?
நல்லா யோசிச்சிக்க… ஒரு வாட்டி நீ கொத்துக்கறியா ஆகிட்ட அவ்ளோ தான்! உன்னைய கோலாவா உருட்டுவாளோ இல்ல கைமாவா திம்பாளோ…
நீ பலியாடு ஆகுற முடிவை எடுக்கும் முன்னாடி… ராக்கி ரோடு ரீமா, பனானா ஸ்ப்லிட் பவித்ரா இப்படி வேற ஆப்ஷன்ஸ கொஞ்சம் கன்சிடர் பண்ணேன் டா!’
வெண்ணிலாவிடம் புன்னகைத்து, விரல் இடுக்கில் ஹார்ட் காட்டி சுரேன் அவள் வீட்டிற்குள் பிரவேசிக்கும் முன்னர் அவனின் மைண்ட் வாய்ஸ் அவனை எச்சரிக்க…
‘ஆமா ஒத்த கால்ல நின்னாங்க… ஒத்த விரலை நீட்டி எங்காரியத்த சாதிச்சிருக்கேன்!’ சுரேன் நிமிர்வுடன் முன்னேற…
‘உன்னைய… குப்புறப்போட்டுக் கும்மியெடுத்தாலும் மீசையில்லாத உனக்கு எங்க இருந்து மண்ணு ஒட்டப் போகுது!’ மைண்ட் வாய்ஸ் கவுண்டர் கொடுத்தது.
இரண்டு நாளே ஆன மீசை முடியை சுரேன் நிரட, அது அவன் விரல்களுக்குள் சிக்கவில்லை. ஆள்காட்டி விரலால் மீசை இடத்தில் தடவிக்கொண்டு,
‘சுரேன் முடிவு பண்ணிட்டான்டீ… வெண்ணிலா சுரேன் தான் வருங்காலத் தம்பதி. நாங்க லவ்லி கபுல்ஸ் ஆகுறோமா இல்ல டாம் அண்ட் ஜெரியா ஆகுறோமா… அந்த விதி விட்ட வழி!’
புன்னகையுடன் சொல்லிக்கொண்டான்.
சுரேன் அந்த மாதிரி உறுதியுடன் நின்ற தோரணையில்…
‘டாம் அண்ட் ஜெரியா இருந்தா கூட பரவாயில்லை… xxx கபுல்ஸ் ஆகிட்டா வீடு தாங்காது… பார்த்துக்க!‘ சொல்லிவிட்டு மைண்ட் வாய்ஸ் ஒதுங்கிக்கொண்டது.
பைக் சத்தம் கேட்டு திருநாவுக்கரசு, சௌந்தர், மனோகர், ஆதி மற்றும் நான்கைந்து குழந்தைகள் என்று ஒரு பட்டாளமே வாசலுக்கு வந்துவிட, அவர்கள் அங்கே தன்னை வரவேற்க வந்து நிற்பதைக் கண்டு ஒரே செகண்ட் திக்கென்றானது சுரேனுக்கு.
‘பயபுள்ளைய நிம்மதியா ஒரு ரொமான்ஸ் பண்ண விடுறாய்ங்களா? ஒரு படையே திரண்டு வந்திருக்கும் போல… ஆவ்!’ ஏமாற்றத்தில் அவனுக்கு நொந்து வந்தது.
“வாங்க… வாங்க…”
“வாங்க மாப்ள…”
“மாப்ள வந்துட்டாக…”
“ஏய்… இந்தண்ணா போலீஸாம் டா!”
“உனக்கு அண்ணனா? அப்ப எனக்கு போலீஸ் மாம்ஸ்ல!”
“க்கும் ரொம்ப முக்கியம் பாரு… முதல்ல அவரு நம்ம நிலாக்காவ பொண்ணு பார்த்து ஓகே பண்ணட்டும் டி!”
“நிலாவுக்கும் பிடிக்கணும்ல?”
“ச்சூ… ஆரணி கமல் நீல்… சும்மா இருங்க! வழிவிட்டு நில்லுங்க குட்டீஸ்… நீங்க இப்படி வாங்க சார்… உள்ள போயிரலாம்.”
“நகருங்க… வந்தவருக்கு வழிவிடாம அங்க என்ன வேடிக்கை? இப்படி வாங்க பசங்களா…”
சுரேனை வரவேற்க வெளியே வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல… சுரேனுக்கு அந்தக் குட்டீஸ் சொன்னது விரிந்த புன்னகையைக் கொடுக்கச் செய்ய… பாய்ஸ் கன்னம் தட்டி வெராண்டா சென்று நின்றான்.
அங்கே காலணிகளைக் கழற்றி வைக்கும் இடத்தில் தென்பட்டக் குவியலில் எத்தனை பேர் உள்ளே இருக்கக்கூடும் என அவனால் அனுமானிக்க முடிந்தது.
முறுவலித்துக்கொண்டான். சற்றே டென்ஷனும் ஒட்டிக்கொள்ள, உள்ளே போகும் முன் நெற்றியைக் கை குட்டையால் ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தான்.
சரியாக அந்நேரம் சதாசிவம் அவனருகில் வந்தவர்,
“எங்களையெல்லாம் சீக்கிரமா கிளப்பிட்டு என்னடா நீ லேட்டா வந்திருக்க?” என…
காதருகில் பல்லைக் கடித்துக் கடிந்த அப்பாவை அனைவரும் பார்க்க முறைக்க முடியாது போனது.
‘அடக்கி வாசிடா சுரேனு! இவனுங்க பொண்ணு தரலைன்னு சொன்னாலும் சொல்லிட போறாங்க!’ கேர்ஃபுல்லானான் சுரேன்.
“கேஸ் விசயம் ப்பா. அதான் பத்து நிமிஷம் லேட். சாரிப்பா!” பணிவாகச் சொன்னவன் குரலை வெண்ணிலா வீட்டாரும் கேட்க நேர்ந்தது.
‘என்ன பதவிசு மாப்ளைக்கி!’ ஒன்றிரண்டு பேர் சிலாகித்து மெச்சிக்ககொள்ள…
‘பார்றா போலீஸா இருந்தாலும் அப்பாவுக்கு அடங்குற மகன் போல…’ மற்றவர்கள் வியப்புடன் நோக்க…
அங்கு சுரேனைப் பற்றி வெண்ணிலா வீட்டாரிடம் ஒரு நல்லெண்ணம் உருவானது.
சுரேனுக்கு அவன் வீட்டினருடன் நடக்கும் அக்கப்போர் இவர்களுக்கு எங்கே தெரியப் போகுது!
அதே நேரத்தில் தன் ரூமுக்குள்ளே இருந்த வெண்ணிலா குழப்பத்தைச் சுமந்திருந்தாள்.
“இவனா எனக்குப் பெரிய பெரிப்பா கொண்டு வந்த மாப்ள? அவங்க ஃபிரண்ட் தம்பி பையன் சொன்னாங்க. இப்ப என்னமோ என்னைய ரூட்டு விட்டவனே பொண்ணு பாக்க வந்திருக்கான்!
இவன் பெரிப்பாவும் சந்தானம் பெரிப்பாவும் ஃபிரண்ட்ஸா? என்னங்கடா இது… வெண்ணிலாவுக்கு வந்த சோதனை!”
இருக்கும் டென்ஷனில் விரல் நகத்தை அவள் கடிக்கப் போக, நகப்பூச்சை உணர்ந்தவளாகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
அப்போது சுரேன் தன்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதும் இதயம் விட்டதும் கண்ணுக்குள் வந்து போக… இமைகளை அப்படியே இறுக்க மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
மூடிய இமைகளுக்குள்ளே அப்படியே அவனின் முகம்… சிரிப்புடன் தெரிந்தது. தொடர்ந்து அவன் உதடுகள் குவித்துப் பறக்கவிட்ட முத்தம்!
பட்டெனச் சிலிர்த்து இமைகளை விரித்துப் படபடத்தாள்.
“எவ்வளவு சிம்பிளா இருந்தான். டம்மி பீஸ்னு நினைச்சா… அடப்பாவி ஆகி எதிர்ல வந்து ஃப்ளையிங் கிஸ் வக்கிறான்.
கொஞ்சங்கூட கூச்சநாச்சம் இல்லாம எவ்வளவு தைரியமா தெருவுல நின்னிட்டுக் கண்ணடிக்கிறான்! இவன் உண்மையிலேயே போலீஸ் தானா?
பொறுக்கி போலீஸ்! நீ மட்டும் தனியா மாட்டுன… இருக்குடா உனக்கு!”
பலவாறாக யோசித்து சுரேனைத் தனி மீட்டில் வச்சி செய்ய வெண்ணிலா காத்திருக்கலானாள்.
நல்லவேளையாக சுரேன் செய்த சேட்டையை யாரும் பார்த்திருக்கவில்லை என்பதே அவளுக்கு அப்போதிருந்த ஒரே ஆறுதலாகிப் போனது.
அவளுடன் இருந்த ஆதியின் அம்மா, யாரோ அழைக்கவும் ரூம் விட்டு வெளியே போயிருக்க… பெரிய அத்தை மகளுக்குக் கணவரிடமிருந்து ஃபோன் வரவும், அதை அட்டெண்ட் செய்யத் தனியாகப் போய்ப் பேசிக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சுரேன் சபையில் கூடியிருந்த அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தது மட்டுமின்றி, இரு கைகளையும் கூப்பி வணக்கம் வேறு வைக்க…
அவனைப் பார்த்திருந்த மனோகருக்குப் பரம திருப்தி.
“வாங்க தம்பி வாங்க…” சொல்லிப் பரபரப்புடன் முன்னால் போய் வணக்கம் வைத்தார் மனோகர்.
“பொண்ணோட அப்பா சுரேன்.” சதாசிவம் மகனுக்கு மனோகரை அறிமுகப்படுத்தவும்,
“ஹாய் அங்கிள்!” முறுவலுடன் சொல்லி வலது கை நீட்டி அவருடன் கை குலுக்கிக்கொண்டான்.
அப்படியே மனோகர் தன் உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவரையும் தம்பதி சமேதராய் அறிமுகப்படுத்தி வைக்க ஆரம்பிக்கவும், சுரேன் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நின்றான்.
உள்ளே, ‘எப்ப நம்ம ஆளா முழுசா கண்ணுல காட்டுவாங்க இவங்க? எத்தனை நாளாச்சி ஐஸ் பேபிய நேரில பார்த்து!
எந்நிலவைக் கண்டேன்…
ஜன்னல் கம்பிகளுக்கிடையில்
அப்பிறை நிலவாக
என் வெண்ணிலா!
வாசல்ல வச்சி அவ முகத்த மட்டும் ‘ஜன்னலோர நிலா’ போலப் பார்த்து வச்சது பத்தல!’ வெண்ணிலாவைக் காணும் நிமிடத்துக்காக சுரேனின் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது.
அவனைப் பார்த்தோ படித்தோ… என்னவோ காந்தம்மாள் பெரிய மனுசியாக மனோகரை இடையிட்டு,
“பொண்ணு பாக்க வந்தவரை இப்படி நிக்க வச்சிட்டே பேசணுமா? அழைச்சு முதல்ல உட்கார வைங்க மாப்ள. காபி பலகாரம் சாப்பிட்டு அவர் வந்த வேலைய பாக்கட்டும். அப்புறமா அறிமுகப்படலத்தை நடத்தி முடிங்க.” என்று சொல்லவும்,
அதைக் கேட்ட சுரேன் அந்நேரத்திலே உண்மைக்குமே பெரிய ரிலீஃபாக உணர்ந்தான். தன்னை இக்கட்டிலிருந்து காபாற்றிய அந்தப் புண்ணியவதி யாரென்று பார்த்தவன், மானசீகமாக அவருக்கு நன்றி சொன்னான்.
இருந்தாலுமே, “பரவாயில்ல அங்கிள்.” சொல்லி சுரேன் மனோகரின் முகம் பார்க்க…
“நீங்க உட்காருங்க தம்பி… அத்த சொல்றது சரி தான்… நம்ம குடும்பம் பெருசு. மெதுவா தெரிஞ்சுக்கலாம்.” மனோகர் சுரேனிடம் சொல்லவும்,
அவன் தலையசைத்து, “ஓகே” என்றுவிட்டுத் தான் அமர இடம் பார்க்க…
யமுனா கணவன் பக்கம் தள்ளி அமர்ந்துகொண்டு மகனுக்கு இடமளிக்க…
முதலில் சிவநேசன் அருகில் இருந்த இருக்கையில் உட்கார நினைத்தவன், அம்மாவின் முகம் பார்த்து என்ன தோன்றியதோ சுரேனுக்கு… யமுனா சதாசிவம் அமர்ந்திருந்த மூவர் அமரக் கூடிய இருக்கைக்குப் போய் அவர்களுடன் அமர்ந்துகொண்டான்.
அதைப் பார்த்த நளினிக்கு அப்படியொரு நிம்மதி!
பெண் பார்க்க வீட்டைவிட்டுக் கிளம்பி வரும் முன்னர் தங்கள் குலசாமிக்கு வேண்டி காணிக்கை முடிந்து வைத்துவிட்டு வந்திருந்தார் நளினி.
அவரும் சுதாவும் குழந்தையை வைத்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்க… சிவநேசன் சந்தானத்துடன் அமர்ந்திருந்தார்.
ஆம்… சுதா சுந்தருக்கு மகள் பிறந்து, அந்தக்குட்டிப் பெண்ணிற்கும் மூன்று மாதம் நிறைவு பெற்றிருந்தது.
சுந்தர் இப்பெண் பார்க்கும் படலத்தில் இணைந்துகொள்ளவில்லை. வரக்கூடாது என்று அவன் நினைக்கவில்லை. ஆனாலும், சுரேனுடன் அவனுக்கு இன்னுமே இணக்கம் உருவாகவில்லை.
அதுவும் வெண்ணிலாவைச் சுரேனுக்கு மண முடிப்பது யமுனா சதாசிவத்திற்கு அவ்வளவாக விருப்பமில்லை எனும் போது சுந்தரும் தன் ஈடுபாட்டைக் காட்டவில்லை.
ஆனால், விரும்பிக் கேட்டு சுதாவை மணந்த சுந்தருக்குச் சுரேனின் விருப்பமும் மனதும் புரிந்தது.
மருத்துவமனையில் ஏதோ அலுவல் என்று சொல்லி அவன் இவர்களுடன் இணைந்துகொள்ளவில்லையே தவிர, எல்லாம் எப்படிப் போகுது எனப் பொண்டாட்டியிடம் தனக்கு அப்டேட் பண்ணச் சொல்லியிருந்தான்.
சுரேன் பக்கம் மாறனின் பெற்றோர் வேறு கல்யாணத்திற்குப் போகும் அவசியம் ஏற்பட்டுவிட, அவர்களும் வரவில்லை.
மனோகர் எல்லோரையும் கவனித்துச் செய்யக்கொள்ள இருந்தாலும், சுரேனைத்தான் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
‘மாப்ள பாக்க கம்பீரமா மட்டுமில்ல அடக்கமா நல்ல பண்பு தெரிஞ்சவரா இருக்காரு. நிலாவுக்குப் பொருந்தி வருவாரு!’ நினைத்தபடி தன் மூத்த அண்ணன் சந்தானத்தை மகிழ்வுடன் பார்த்து இமைகளை மூடித் திறக்க…
சந்தானம் தம்பியின் மனதைப் புரிந்து கொண்டார். அவர் கொண்டு வந்த வரன் தானே? சுரேனே வெண்ணிலாவுக்கு முடிவானால் மிகவும் நல்லது என்கிற மனநிலையில் சந்தானமும் இருந்தார்.
சில மாதங்களாகத் தாங்கள் தீவிரமாகப் பார்த்தும், வெண்ணிலாவிற்கு எந்த வரனும் தகையாமல் குடும்பத்தினர் அல்லாடிக்கொண்டிருக்க…
ஒரு நாள் தற்செயலாய் சந்தானம் சிவநேசனைச் சந்திக்க நேரிட்டது.
இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். காலமும் கடமையும் என்று உருண்டதில் மெல்ல மெல்ல தொடர்பு விட்டுப் போயிருக்க…
அன்றொரு விசேஷ வீட்டில் சந்தித்தவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
பரஸ்பர நல விசாரிப்புடன் இருவரின் குடும்பக்கதைகளும் பேசப்பட…
சந்தானம் தம்பி மனோகரின் ஒரே மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகச் சொன்னவர், சிவநேசனுக்குத் தெரிந்த நல்ல வரன் யாராவது இருந்தால் தெரிவிக்குமாறு சொல்லச் செய்ய…
அப்போதும் கூட சிவநேசனுக்குச் சுரேனுக்குப் பார்க்கலாமா தோன்றவில்லை. வேறு யாருக்குச் சொல்லலாம் என்றே யோசித்துக்கொண்டிருந்தார்.
எதுக்கும் கை வசம் இருக்கட்டும் என நண்பனைத் தனக்கு வெண்ணிலாவின் புகைப்படம், மற்றும் மற்ற விபரங்களை வாட்ஸ் அப் பண்ணிவிட சொல்லிவிட்டு அப்படியே வீட்டிற்குப் புறப்பட்டு வந்தார் சிவநேசன்.
அன்று சுரேன் மாலை நேரத்தில் சற்று ஓய்வு கிடைக்க… பெரியம்மாவைப் பார்த்துவிட்டுப் போக வந்திருந்தான்.
வீட்டிற்குள் வந்ததும் சுரேன் அங்கிருப்பதைக் கண்டு அவனை வரச் சொல்லிக் கேட்டுவிட்டு நளினியிடம் தன் நண்பன் சந்தானத்தைச் சந்தித்தது முதல் வெண்ணிலா வரை பகிர்ந்தார்.
அப்போது அங்கே டைனிங்கில் இடியாப்பத்தைச் சொதியில் புரட்டி வாயில் அடைத்துக்கொண்டிருந்த சுரேனுக்குப் புரையேறிவிட்டது.
அந்தக் கலங்கிய கண்களுடன் அவசரமாக எழுந்து வந்தவன் பெரியப்பாவின் கைபேசியைத் தட்டிப் பறித்து, பெரியப்பா சொல்லிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் வெண்ணிலா, தன் லவ் மூன் பேபியா இருக்குமோ சந்தேகப்பட்டுப் பார்க்கச் செய்ய…
அவனுடைய நடவடிக்கையே சிவநேசன் நளினிக்கு விசயம் இன்னதென்று புரிய வைத்துவிட…
பிறகென்ன… அவர்கள் துணையுடன் பெற்றோரிடம் சுரேன் பேசவும் இந்தச் சம்பந்தம் தங்களுக்குச் சரி வராது என்று பேச்சை எடுத்தவுடனே அவர்கள் மறுப்பைத் தெரிவித்தனர்.
சிவநேசன் தன் நண்பன் சந்தானம்… பள்ளியில் படித்த அந்தக்கால சந்தானத்தைச் சதாசிவத்திற்குத் தெரிய செய்து…
தனக்குத் தெரிந்த சம்பந்தம், நல்ல குடும்பம் எனச் சொல்லியும் தங்கள் எதிர்பார்ப்பு வேறு என சதாசிவம் மறுத்தார்.
வெண்ணிலாவின் படிப்பு, வேலை… அவளின் பெற்றோரின் படிப்பு என யமுனாவும் சதாசிவமும் அலசி ஆராய்ந்துகொண்டிருந்தனர்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த சிவநேசனுக்கு ஆயாசமாக வந்தது. இரண்டு கைகளில் நெற்றியைத் தாங்கி அவர் உட்காரச் செய்ய…
நளினிக்கு மனம் கூம்பிப் போனது. அவருக்கு சுரேனின் மனது போல மணமுடித்து வைக்கத்தான் ஆசை.
ஒவ்வொரு தடவையும் சுரேனின் விருப்பம் மதிக்கப்படாமல் போகும் போது, நளினி இயலாமையால் துடிப்பது வழமையாகி விட்ட ஒன்று.
“யமுனா… ஏன்டி நீயும் கூட கூடப் பேசிட்டிருக்க? கொழுந்தனுக்குச் சமாதானம் சொல்லலாமில்ல? என்னவோ போ… சுரேனுக்குன்னு வர்றப்ப நீங்க ரெண்டு பேருமே பாரபட்சமாவே நடந்துக்கறீங்க!”
நளினிக்குப் பொறுக்கவே முடியவில்லை. தங்கச்சியைப் பேசிவிட்டார்.
“நீ இப்படியே இவனுக்குச் செல்லங்கொடுத்திட்டே இருக்கா… என்னமோ நாங்க ஒரு கண்ணுல வெண்ணெய்யும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வச்சிட்ட மாதிரி இருக்கு நீ பேசுறது!”
யமுனா படபடத்துவிட, அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுரேன் கடுப்பாகிவிட்டான்.
“எதுல நீங்க சுண்ணாம்பு வச்சீங்க… வெண்ணெய் வச்சீங்க ஆராய்ச்சிப் பண்ணது போதும். இப்ப எனக்கு முடிவா என்ன சொல்லப் போறீங்க நீங்க ரெண்டு பேரும்?
கட்டுனா வெண்ணிலாவைத்தான் கட்டுவேன் இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேணாம் சொல்வேன்னு நினைப்பா?” என்று அம்மாவிடம் முறைத்துக்கொண்டு கேட்க,
“இப்ப என்ன உனக்கு அப்படி அவதி… கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி நிக்கிற சுரேன்?” மகனிடம் யமுனா கோபப்பட்டார்.
“நிலாவுக்கு மாப்ள பாக்குறாங்கன்னு பெரிப்பா சொல்றாரில்ல… எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்கம்மா கேட்டேன். இதுல என்ன அவதிய கண்டீங்க நீங்க?
நம்ம வீட்ல வேற யாரும் கல்யாணத்துக்கு நிக்கலையில்ல… நாந்தானே கடைசி? இப்ப எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதில்ல அப்படியென்ன தடையிருக்கு?”
சுரேன் தன் பொறுமையைப் பிடித்து வைத்துக் கேட்டு நிற்க…
“நீ வேலையில சேர்ந்து ஒரு வருசங்கூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்கிறயே… அப்படியென்ன சாதிச்சிட்டன்னு துணிஞ்சு இப்படி வந்து நிக்கிற நீ?”
சதாசிவம் முகத்தைச் சுளித்துத் தன் அதிருப்தியை வெளிக்காட்டினார்.
சில பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளிடம் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். சதாசிவமும் யமுனாவும் கூட அவ்வகையானவர்கள் தான்.
தங்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் ஒரு குற்றம் குறையைக் கண்டுபிடிப்பது; ஏதோ தப்பித் தவறி ஒரு முறை எதிலாவது மாட்டிவிட்டால் போதும், அதையே காலத்திற்கும் பிடித்துத் தொங்குவது…
பெற்ற பிள்ளையாக இருப்பினும் அவர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சில விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் என்று நினைப்பதில்லை.
அப்படி இருப்பின் என்னவென்று பொறுமையாகக் கேட்டு, அவற்றைச் சரி தவறெனப் பிரித்து, ஆராய்ந்து நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லலாம்.
எட்ட நின்று அவர்களின் முயற்சியைப் பாராட்டி, தங்கள் கருத்துகளை முன் வைக்கலாம்.
அப்படிச் செய்யாமல் தங்களுடைய வழிக்கே பிள்ளைகளை இழுப்பது… என்ன ஞாயம்?
சிறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் சிந்தனாசக்தி உண்டு. அந்தந்த வயதிற்கேற்ப சிந்தனைகள் இருக்கும். தாங்களே முயற்சி செய்து, சறுக்கி, எழுந்து, முன்னேறிச் செல்லும் போது அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தில் இன்பமும் இருக்கலாம்… துன்பமும் இருக்கலாம்.
அனுபவமும் வயதும் கூட ஆசான்களே!
தங்கள் இழுவைக்குப் பெற்ற பிள்ளைகள் வரவில்லையென்றால், அவர்கள் பெற்றோர்களுக்கு எதிரிகளாகி விடுவார்களா என்ன?
சுந்தரின் விருப்பமும் அவன் பெற்றோர்களின் விருப்பமும் ஒன்று போலிருக்க, அவன் பெற்றோருக்கு அடங்கின பிள்ளையாகிப் போனான்.
சுரேன் அடங்காமாறி ஆகிப் போனான். அந்த அடங்காமாறிக்கு இப்போது எதுக்கு ஒரு கல்யாணம் என்றே அவனைப் பெற்றவர்கள் நினைத்தனர்.
“அப்ப இதுக்கு முன்னாடி பார்த்ததெல்லாம் வேலைல சேர்த்தி கிடையாதா?” முறைத்துக்கொண்டு சுரேன் கேட்க…
“அதையெல்லாம் ஒரு வேலைன்னு சொல்லி நீ தான் மெச்சிக்கணும்!” யமுனா நொடிக்க…
“அம்மாஆ!” சுரேன் கண்டனத்துடன் பார்க்க…
“எங்க பெரிய மகன் ஒரு டாக்டர்… சின்ன மகன் இன்ன ஸ்டோர்ல ஒரு ஸ்டோர் கீப்பரா இருக்கான்னு வெளிய சொல்லவா முடிஞ்சது?”
இகழ்ச்சியுடன் கூடிய பார்வையுடன் யமுனா கேட்க…
“சொன்னா என்ன இப்ப? நீங்க எதுக்கு வெளிய சொல்லல? உழைச்சிச் சாப்பிட்டா எந்த வேலையும் தப்புக் கிடையாதும்மா!
நானென்ன சட்டத்துக்குப் புறம்பான வேலையா செஞ்சிட்டிருந்தேன்… நீங்க வெளிய சொல்ல முடியாம வெக்கப்படுறதுக்கு?
அந்த வேலைல வந்த சம்பளத்தை வச்சி நான் எவ்வளவோ பண்ண முடிஞ்சிருக்கு. என் செலவுகளை நானே பார்த்துக்கல?
காலேஜ் போக டிஷர்ட்ஸ் புதுசு வேணும்; இந்த ஜீன்ஸ் வாங்கித் தாங்க; புது செமஸ்டர் புக்ஸ் வாங்கணும்; பழைய மொபைல் வேலை செய்யல… புதுசா ஒன்னு வாங்கித் தாங்க கேட்டு உங்க கிட்ட எதுக்காவது வந்து நின்னேன்?
காலேஜ் சேர்ந்த அந்த முதல் வருசம் தவிர்த்து என் காலேஜ் பீஸ் மட்டும் தானே உங்க பணத்துல கட்டுனீங்க?
நான் பி.ஜி. படிச்சது எப்படி? என் சம்பாத்தியத்துல தானே? பத்தாததுக்குப் பெரிப்பாட்ட கடனா வாங்கி, கொஞ்ச கொஞ்சமா அடச்சிருக்கேன்.
உங்க தயவை எதிர்பார்த்தேனா எதுக்கும்… சொல்லுங்கம்மா!”
அப்பாவின் சுளித்த முகமும் அம்மாவின் கோபமும் சுரேனுக்கு வலிக்கச் செய்ய… தன் உள்ளக்குமுறலை எல்லாம் ஒரே அடியாகக் கொட்டிக்கொண்டிருந்தான்.
யமுனா வாயடைத்துப் போக, சதாசிவம் வெறித்தபடி அமர்ந்திருந்தார்.
சில வினாடிகள் திகைப்பில் சென்றதும்…
“நாங்க உனக்கு எதுவும் செய்யல சொன்னோமாடா சுரேன்? பாருங்க இவனை… எப்படி அவலாதி பேசுறான்!” யமுனா கணவரிடம் குறை படிக்கச் செய்ய…
“விடுடி பேசட்டும். வளர்ந்திட்டான். போலீஸ் டிபார்மெண்ட்ல சேர்ந்து பெரிய ஆளாகிட்டான். முன்னமே திமிறிட்டுத் திமிர் காட்டுவான். இப்ப போலீஸ் திமிர் வேற சேர்ந்திருக்கில்ல… அதுக்கும் சேர்த்து வச்சிப் பேசுறான். விடு யமுனா… என்ன சொல்றான் கேட்பம்.”
சதாசிவம் மகனை நக்கலடித்துவிட்டு அப்படியொரு சாந்தத்துடன் எதிர்கொள்ள…
“என்ன சதா நீ? வளர்ந்த பையனைப் போயி இப்படி நிக்க வச்சிப் பேசிட்டு! உன் மகனுக்கு நீ மரியாதை தர வேணாம். அவன் பதவிக்காவது கொஞ்சம் பார்த்துப் பேசுடா.
நீயென்னம்மா யமுனா… நானும் உங்க அக்காளும் இங்க உட்கார்ந்து இருக்கோம். கண்ணுக்குத் தெரியுதா இல்லையா?”
சிவநேசன் தம்பியையும் மச்சினியையும் கண்டிப்புடன் பார்க்க…
“எதுவேன்னா பேசிட்டுப் போகட்டும் பெரிப்பா. அவங்க ஆசைப்பட்ட மாதிரி நல்ல மார்க் எடுத்தும் நான் சயின்ஸ் குரூப் எடுத்து டாக்டருக்கு படிக்கல. வீட்டுக்கு வேண்டாத பிள்ளையா போயிட்டேன்.
டாக்டருக்கும் படிக்கல. நான் ஆசைப்பட்டதும் நடக்கல. என் விருப்பம் போலவாவது ரொபோடிக்ஸ் என்ஜினியரிங் படிக்க முடிஞ்சதா? அதுவும் போச்சி!” என சுரேன் சொல்லி வருத்தப்பட செய்தான்.
அவன் முகமே கசங்கிப் போயிருந்தது.
“அது உன்னால தானேடா கெட்டது? காலேஜ்ல சஸ்பென்ஷன் கிடைக்கலாம்… ஆனா, நீ டிஸ்மிஸ் ஆகியில்ல வீட்டுக்கு வந்த?”
முசுமுசுவெனக் கண்ணீர் விட்டபடி யமுனா கேட்க…
“நீங்க ரெண்டு பேரும் மனசு வச்சிருந்தா நான் படிச்சிருக்க முடியும்மா!” சொன்ன சுரேன் முகத்தில் அப்படியொரு வேதனை!
அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு சோஃபாவில் தொப்பென உட்கார்ந்தான்.
அவனின் அந்தத் தோற்றம் நான்கு பெரியவர்களை ஒவ்வொரு விதமாய் தாக்கியது!
யமுனாவின் மகனைப் பெற்ற வயிறு சுருக்கெனத் தைத்ததோ என்னவோ… கண்களில் பொல பொலவென வழிந்தது.
சதாசிவம் எழுந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வரப் போனார்.
நளினியின் அவனைப் பெறாத வயிறு துடித்தது. சட்டென எழுந்தவர் சுரேனைத் தன் மடியோடு கட்டிக்கொண்டார். அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. இளையவனின் தலையைத் தடவி, கன்னத்தை வருடச் செய்ய…
கசிந்த கண்களைப் புறங்கையால் துடைத்துக்கொண்ட சிவநேசன்,
“நீ நினைச்ச மாதிரி ரொபோடிக்ஸ் படிச்சிருந்தா அமெரிக்காவுக்குப் பறந்து போயிருப்ப. நீ தூரமா போயிட்டா உன் பெரியம்மாவ யாரு கண்டிப்பா?
அவ எத்தனை ஸ்பூன் ஜீனி போட்டுக்கிறா… காபி, டீ குடிக்கிறாளா… பால் பாயாசத்தை முழுங்குறாளான்னு பார்த்து மிரட்ட ஆளில்லாம போயிருக்கும் சுரேன்!”
கிண்டலும் புன்சிரிப்புமாகச் சொல்லி அவன் தோளைத் தட்டிக்கொடுதார்.
சில நிமிடங்களுக்குள் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த சுரேன், அப்பா நீட்டிய தண்ணீரை வாங்கிப் பருகினான்.
“கல்யாணம் பண்ணாம பேச்சுலராவெல்லாம் என்னால இருக்க முடியாது! வெண்ணிலாவை எனக்குப் பிடிச்சிருக்குப்பா. அவளோட என் வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா போகும் தோணுது.
எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வைங்க. நீங்க தான் முன்ன நின்னு செய்யணும்… செய்றீங்க!”
ஒரு விரல் நீட்டி அப்பா அம்மாவைப் பார்த்து மிரட்டலாகச் சொல்லிவிட்டு தன் ரூம் போனான்.
விர்ரென்று நடந்து போன சுரேனைப் பார்த்து சிவநேசனும் நளினியும் புன்னகைக்கச் செய்ய… யமுனாவும் சதாசிவமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண் ஜாடையில் பேச…
முழு மனசாக இல்லாவிட்டாலும் சுரேன் பேசியதில் அவர்கள் சற்று இறங்கி வர வேண்டியதாக இருந்தது.
பிரசவத்திற்காகத் தன் பிறந்த வீடு சென்றிருந்த சுதா குழந்தையுடன் திரும்பியிருக்க… ஒரு நல்ல நாள் பார்த்து இதோ குடும்பத்துடன் வெண்ணிலாவைப் பெண் கேட்டு வந்துவிட்டனர்.
மற்றவர்களுக்காகப் பெயரளவில் ஒரு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடாகியிருந்தது.
சுரேன் எந்தளவு உறுதியாக இருந்தானோ, அதே மாதிரி வெண்ணிலாவின் பெற்றோரும் பாட்டியும் சுரேனையே மணமகனாக்கும் முடிவில் இருக்க…
மனோகருக்கும் நீலவேணிக்கும் சுரேனைப் பிடித்துப் போக… அவர்களின் முகமே அதைக் காட்டிக் கொடுத்தது.
காந்தம்மாள் சுரேனை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருக்க, சுரேன் அவரைக் கவனித்துவிட்டான்.
“என்ன பாட்டி… எத்தனை மார்க்? தேறுவேனா?” கேட்டு அவன் கேள்வியாய் புருவம் உயர்த்த செய்ய…
“மாப்ள பாஸா பெயிலா… எம் பேத்தி சொல்லட்டும். உங்கள கட்டிக்கிட்டுக் குடித்தனம் பண்ணப் போறவ அவ தானே?”
சிரித்துக்கொண்டு பதில் சொன்ன காந்தம்மாள் மனசுக்குள் சுரேனின் சுதாரிப்பையும் குறும்பையும் மெச்சிக்கொண்டார்.
“உங்க பேத்தி வெளிய வந்தால்ல என்னைய ஓகே பண்ண முடியும்.” சொல்லி சுரேன் கண் சிமிட்டவும், காந்தம் வெட்கப்பட்டுப் போனார்.
யமுனா மனதில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
‘எங்க மானத்த வாங்கவே வந்து பிறந்திருக்கான். இவனைப் போயி டிபார்மெண்ட்ல எப்படிச் சேர்த்துக்கிட்டாங்க? என்னத்த வேலை பார்த்துக் கிழிக்கிறானோ!
என்னமோ சைபர் க்ரைம் ஃபோரென்சிக்ஸ்னு பினாத்துறான். பெரிய மாமா சப்போர்ட்ல இந்த கல்யாணம் வரைக்கும் வந்திட்டான்.’
அம்மாவைப் பார்த்த சுரேன்,
“என்னம்மா… முகத்தைச் சரி பண்ணு! உம் மருமக பார்த்தா, மாமியார் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் நினைச்சி என்னைய ரிஜெக்ட் பண்ணப் போறா!
மனசைத் தொட்ட பொண்ணை கரெக்ட் பண்ணத் தெரியலை… நீயெல்லாம் என்ன போலீஸ் கேட்டு உலகம் எம்மூஞ்சில காறித் துப்ப போகுது!” என்றான் சன்னக்குரலில்.
“நானே நீ உண்மையிலேயே போலீஸா இல்லையான்னு டவுட்ல இருக்கேன்டா. நீ என்னவோ வெர்ல்ட் லெவல் பிரபலம் போலப் பேசிட்டிருக்க?”
“இன்னுமா உங்களுக்குச் சந்தேகம்… அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்ல தெளிவா, ‘சைபர் க்ரைம் ஃபோரென்சிக்ஸ் ஸ்பெஷல் யூனிட்’ போட்டிருந்ததைப் பார்த்தீங்கல்ல!
போச்சுடா… அம்மா நீனே என்னைய இப்படி டேமேஜ் பண்ணிட்டிருந்தா நா எப்படி நாளைக்கி ஒரு மாஸ் ஹீரோவா ஆகுறது?”
மகன் கேட்ட விதத்தில் யமுனா புன்னகைத்துவிட, ரூம் விட்டு அழைத்து வரப்பட்ட வெண்ணிலா முதலில் பார்த்தது அவர்கள் இருவரையும் தான்.
படு கேஷுவலாக மலர்ந்த முகத்துடன் சுரேனும் அவனருகில் புன்னகைக்கும் யமுனாவும்…
அந்தக் காட்சி அவள் மனதில் அப்படியே பதிந்து போனது.
வெண்ணிலா வந்த அரவம் கேட்டு அனைவரும் நிமிர, சுரேன் கண்கள் பளிச்சிட்டன. வைத்த கண் வாங்காமல் அவளையே அவன் பார்க்க… எதிரே அமர்ந்துகொண்ட வெண்ணிலாவிற்கு அவனுடைய பார்வையை உணர முடிந்தது.
சற்று நேரம் காபி, டீ, பலகாரம் எனப் போக…
சுரேன் ஏற்கெனவே தன் பெரியப்பாவிடம் வெண்ணிலாவிடம் தனிமையில் பேசக் கேட்டிருக்க… அவரும் சந்தானத்திடம் சொல்லி வைத்திருக்க…
பெரியர்களின் ஏற்பாட்டில் இதோ இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்.
சுரேனை எப்படி வச்சி செய்ய எனப் பலவாறாக யோசித்து வைத்திருந்த வெண்ணிலா, அவனைத் தனிமையில் எதிர்கொண்டதில் சற்றுத் தடுமாறி நிற்க…
சுரேன் அவளின் அவஸ்தையைப் புரிந்துகொண்டான்.
“ஹாய் வெண்ணிலா ஐஸ்!” எனவும்,
அவள் நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள்.
நிலவொளி பட்டதில் வெண்ணிலாவின் வெள்ளைக்கல் ஜிமிக்கி மின்ன… எதிரே அவளைப் பார்த்து நின்ற சுரேனுக்கு அதனைச் சுண்டிவிட்டு, சுழற்றி, அவள் கன்னங்களைச் சிவக்க வைக்க ஆர்வம் எழுந்தது.
“இந்த ஜிமிக்கி மட்டும் தான் உன்னைய தொட்டுப் பாக்கணுமா?” சுரேன் கேட்க…
“நீயும் ஆசைப்படுறயா? தொட்டுத்தான் பாரேன்!” மிரட்டலாக வெண்ணிலா கேட்க…
“யாரு நானா ஆசைப்படுறேன்?” சத்தமாகச் சிரித்தவன், “அப்பதேயிருந்து இவரு உன்னைய சுத்தி சுத்தி வர்றாரு. அவருக்கு உதவி பண்ணலான்னு கேட்டேன்…” குறும்புடன் பேசியவனைப் பார்த்து,
“எதே!” அதிர்ச்சியுடன் வெண்ணிலா பின்னால் செல்லப் போக, சுரேன் அவளை விடவில்லை.
அவள் கையைப் பிடித்தவன்…