என் சித்தம் சித்திரமே – 6

என் சித்தம் சித்திரமே 06 

“சிரிச்சி சிரிச்சி

வந்தா சீனா தானா டோய்

சிறுக்கி சிறுக்கி மக தேனா

போனா டோய்…” 

வெண்ணிலா வீட்டு டி.வி அலறிக்கொண்டிருந்தது. கூடவே வெண்ணிலாவும் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாடியது பாட்டா? நாராசமாக இருந்தது நீலவேணிக்கும் காந்தம்மாளுக்கும். 

“இவளை!” பல்லைக் கடித்தபடி வடையை எடுத்த கண் கரண்டியுடன் கிட்சனைவிட்டு வெளியே போகப் போன மகளைத் தடுத்தார் காந்தம். 

“நீலா பொறுடி! இந்நேரத்துல போயி அவகிட்ட வம்புக்கு நிக்காத. வேணும்னே பண்றா உம்மக. ராங்கிப் புடிச்சவ. நம்மள வெறுப்பேத்திவிட்டு அப்படியே வாயைப் பிடுங்குவா. 

இப்படி உரண்டைய இழுத்து வச்சி அவ நம்ம காரியத்தைக் கெடுக்கப் பாக்குறான்னு தெரிஞ்சுமா அவட்ட போயி தலைய கொடுக்கப் போற?” 

“அம்மாஆ! எங்கைய விடு… அவளை அப்படியே நாலு அப்பு அப்புனா தான் அடங்குவா. கிளம்பி இருன்னு சொல்லிட்டு வந்தா என்ன பண்ணிட்டிருக்கா… சீனை கூட்டுறா… சிறுக்கி சிறுக்கின்னுட்டு!” 

வெண்ணிலாவைக் குளித்து, புடவையை உடுத்திக்கொள்ள உதவிக்குத் தன்னைக் கூப்பிடுமாறு சொல்லிவிட்டே தன் வேலையைத் தொடர வந்திருந்தார் நீலா. 

அம்மா சொன்னதை அப்படியே கேட்டு நடக்கும் பெண்ணா வெண்ணிலா? குளித்து முடித்தாளா இல்லையா என நீலவேணி தான் மணி பார்த்துப் பதட்டமடைந்தார். 

அவருக்கு டிஃபன் வேலைகளும், கூடவே ஒரு முறை வீட்டைச் சுற்றி ஒதுங்கப் பண்ணும் வேலையும் இருக்க… பட படப்பாக வந்தது. 

புகுந்த வீட்டினர் முன்னமே வந்து உதவுவதாகச் சொல்லும் போது, இதுவரை தள்ளியே இருந்து பழக்கப்பட்டவரால் உடனே சரி சொல்ல முடியவில்லை. 

அதில் சுணக்கம் கொண்ட மனோகர் வீட்டுப் பெண்களும் நீலாவைப் புரிந்து அரை மணி நேரம் முன்னர் வருகிறோம் என்றுவிட… இதோ அம்மாவை வைத்துக்கொண்டு அவரே சுழன்று கொண்டிருக்க… 

இன்றைய நாளின் முக்கியத்துவம் தெரிந்தும் மகள் விடும் அலப்பறையில் அவருக்கு அல்லு கழன்று விடும் நிலை! 

மகள் மீது காட்ட முடியாத தன் கோபத்தை அப்படியே திருப்பி அம்மாவிடம் காண்பித்துக்கொண்டிருந்தார். 

“அவளை அப்படியே ரெண்டு போட்டிட்டு வர்றேன் நீ தள்ளு… ம்மா!” 

“கெட்டுச்சு போ… அவளே எதுடா சாக்குன்னு காத்திட்டிருக்கா! நீ வேற இன்னும் ஊதிவிட்டுப் பெருசா கிளப்பாதடி நீலா. 

நாம எத்தனை நாளு தூக்கத்தைத் தொலைச்சிருப்போம்… நம்ம ரெண்டு பேராவது வீட்டோட பொழுத ஓட்டுறோம். மாப்ளய நினைச்சிப் பாரு. 

இந்த ஆறேழு மாசமா சுரத்தே இல்லாம களையிழந்து போயி… என்னமோ மாதிரி நடமாடிக்கிட்டிருந்தாரு. இப்ப கொஞ்ச நாளாத்தானே பழையபடிக்கு அந்த முகக்களை திரும்ப வந்திருக்கு?

எந்த ஆத்தா புண்ணியமோ… நிலாவும் கொஞ்ச கொஞ்சமா மனசு மாறி… நாம அரும்பாடு பட்டு இந்தளவு இறங்கி வந்திருக்கா. 

உங்கொழுந்தென் மகென் அந்த ஆதி பேசப் போயி அவ மண்டையில ஏறிருக்கு. சும்மா சொல்லக்கூடாது… அது தங்கமான புள்ள!

அந்த ராக்கிப்பயல ஒரு வழியா விட்டுட்டான்னு பார்த்தா… அதுக்கு அப்புறமும் நம்மளை என்ன பாடு படுத்திட்டிருந்தா… வீடு நிம்மதியாவா இருந்திச்சி?” 

காந்தம்மாள் மகளுக்கு எடுத்துச் சொல்லவும், அப்படியே பழசை நினைத்த நீலவேணிக்கு மனசளவில் சின்ன நடுக்கம் ஏற்பட, உடலிலும் ஒரு தொய்வு ஏற்பட்டது. 

அப்போது வெண்ணிலா ஒரு மயக்கத்தில் இருந்த நேரம்… 

சில மாதங்களே அவளுக்கு ராகேஷின் பழக்கம். அதிலும் முதலில் ஃபர்னிச்சர் ஷோ ரூமில் காணும் போது சில பார்வை பரிமாற்றங்கள்… 

அடுத்து வந்த மாதத்தில் ஆர்வமான பார்வைகளுடன் புன்னகைகளும் மலர்ந்திருக்க… அடுத்த கட்டமாகப் பேச்சும் அரட்டையுமாக லவ்வும் டெவெலப்பாகியது. 

ராகேஷின் வெள்ளைத்தோலும்; நடையும்; உடையும்; பாவனையும்; சாதுரியமான பேச்சும்… அவள் அவனிடம் ஈர்த்துப் போய் மயங்கிக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

வீடே உலகம்… கல்லூரிப்படிப்பும் தபால் மூலம் என்றானதில் சம வயது நட்பும் வெண்ணிலாவிற்கு இல்லாமல் போனது ராகேஷுக்கு வசதியாயிற்று! 

ஷோ ரூமில் உடன் வேலை செய்த இரண்டொருவர் வெண்ணிலாவைத் தூண்டிவிட, செல்வி அவளைக் கண்டித்த போதும் அதை மீறச் சொன்னது பருவத்தின் ஆர்வம்!  

எதார்த்தமாகப் பேசும் வெண்ணிலாவிற்கு அவனுடைய மற்ற பழக்கவழக்கங்களைத் தெரியவில்லை. 

அப்படிப் பேசி பேசி அவளைத் தூண்டில் மீனாக்கியிருந்தான். சின்ன சின்ன பரிசுகளைத் தந்து அவளை அவனிடம் மட்டுமே கவனம் செலுத்த வைத்திருந்தான் ராகேஷ். 

வெண்ணிலா மிகவும் சீக்ரெடிவ்வாக இருக்கவும் வீட்டினருக்கும் எதுவும் தெரிய செய்யவில்லை. 

முதலிலேயே மகளின் காதல் பற்றித் தனக்கு எப்படித் தெரியாமல் போனது என்று நீலவேணி பின்னர் வருந்தாத நாளில்லை. 

மனோகர், “உனக்கு எப்படித் தெரியாம போச்சி நீலா? கண் கொத்திப்பாம்பா மகளைக் கவனிப்பியே!” கேட்டார் தான்… ஆனால், மனைவியைக் கடிந்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

அப்படிக் கடிந்திருந்தாலாவது நீலவேணிக்கு இவ்வளவு உறுத்தல் இருந்திருக்காதா இருக்கும். நீலவேணி எதையும் தைரியமாக எதிர்கொள்பவர் தான். 

ஆனால், மகளின் செயல் அவரை உள்ளுக்குள் பயத்தை விதைத்திருந்தது. அம்மா என்கிற உறவின் பலமும் பலகீனமும் பெற்ற பிள்ளைகள் தானே? 

நீலா எதனையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அழுத்தத்துடன் வளைய வந்திருக்க… மனோகருக்குத் துணைவியாரின் நிலை புரியாமலில்லை. 

கொஞ்சம் என்ன நிறைய நிதானம் கொண்டவர் மனோகர். மாமியாரைப் போலக் காரியவாதியும் கிடையாது. நீலவேணி மாதிரி துணிவும் அழுத்தமும் இல்லை. 

ஒருவரின் பொருளாதாரமும் வருவானமும் கூட குணங்களைத் தீர்மானித்து விடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. 

மனோகர் வீட்டோடு மாப்பிள்ளையாகி வந்த போதிருந்த அவருடைய வசதி வாய்ப்பை, அவரால் மறந்துவிட முடியாது! 

மகள் மட்டுமே அவருடைய ஆதாரசுதி! 

நீலவேணியை நேசித்தாலும் ஏதோ ஓர் ஒதுக்கம்… இடைவெளி முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது. 

அவர் எத்தனை உழைப்பைப் போட்டிருந்தாலும், இன்று இவ்வளவு பெருகியிருக்கும் சொத்துச் சுகம் ‘பொண்டாட்டி வீட்டு ஆதரவு’ என்பது பேச்சாகியிருக்க… அவருடைய சுயம் தொலைந்து போனதாய்! 

அதனால், நிறையப் பக்குவம் பொறுமை அவருக்குத் தேவைபட்டது. மனிதருக்குள் அப்படியொரு நிதானம் வந்திருக்க… 

மகளுடைய விசயத்தை ‘காம் அண்ட் கம்போஸ்ட்’ என்பார்களே… அப்படியொரு அமைதியுடன் கையாண்டார். 

ஆதி பெரியப்பாவிடம் சொல்லிச் சென்றதைப் போல் அப்பா சௌந்தரை, சம்பவம் நடந்த மறுநாளே அனுப்பி வைக்க… மனோகருக்கு அவ்வளவு ஆறுதல்! 

ராகேஷைப் பற்றிய விசயங்களை மனோகருக்கு மெதுவாக சௌந்தர் வெளிப்படுத்தியிருக்க… குலைநடுங்கிப் போனது மனோகருக்கு! 

“அந்தப் படுபாவிப்பயல எதாச்சும் செய்யணும் சௌந்தரு!” கோபத்தில் மனோகர் வீரவசனம் பேசச் செய்ய… 

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சந்தோசப்படுண்ணே. பாப்பா பத்திரமா வீடு வந்து சேர்ந்திருச்சில்ல?” சௌந்தர் ஆறுதலளிக்க… 

“நம்ம ஆதி பார்க்கலைன்னா என்னாகியிருக்கும்?” 

மனோகர் கவலைப்பட்டார். 

“என்ன ஆகியிருக்கும்… இப்படி ஆகியிருக்குமோ… அப்படி ஆகியிருக்குமோ… நம்ம மனசு தவிப்புல நாலு என்ன நாப்பது யோசனை வரத்தான் செய்யும். 

அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு, வெண்ணிலாவுக்கு ஒரு மாப்பிள்ளைய பார்த்து… சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடிப்போம். மதனிட்ட பேசிட்டு, உங்க வசதி எப்படி என்னன்னு பார்த்திட்டு சொல்லுங்க. மேற்கொண்டு பார்ப்போம்.” 

சௌந்தர் பேசிச் செல்ல… 

மனோகரும் நீலவேணியும் பேசும் போது காந்தம்மாள் உடன் கேட்டுக்கொண்டிருந்தவர், 

“எங்க வீட்டுப் பக்க மக்க மனுசங்க இங்க இப்ப நிறைய இல்ல மாப்ள. துரையப்பன் வீடு தான் வரப் போக இருக்காக. அவனூட்டு ஆளுங்கட்ட போன் போட்டு, நம்ம பாப்பாக்கு மாப்ள பாக்குறோம்னு சொல்லி வைக்கிறேன். 

எம் பெரியக்கா மகளுக சென்னைல இருக்காங்கல்ல… அவளுக கிட்ட ஏற்கெனவே பேசி வச்சேன். நிலா படிப்பக்கொண்டு ஒரு வரனும் தகையல. தள்ளிப் போகுதுன்னு பெரியவ சொன்னா. 

அவளுக சும்மாவாச்சும் கூட சொல்லுவாளுங்க. பொறாமை பிடிச்சதுக!” 

மருமகனைப் பார்த்துச் சொன்னவர் கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து நொடிக்க… 

‘இதுக்குத்தானே என்ஜினியருக்கு படிக்கச் சொன்னேன்!’ 

மனோகரின் எண்ணம் செல்ல… நீலவேணி அம்மாவை முறைத்து வைக்க… 

“என்னடி முறைக்கிற?” 

காந்தம் தெனாவெட்டாக மகளைப் பார்த்து வைத்தார். 

“உள்ளதைச் சொன்னதுக்கு அக்காங்களுக்கு நல்ல பேரும்மா!” நீலா நக்கலாகக் கேட்க… 

“இவ ஒருத்தி… சும்மா இருடி. முக்கியமா பேசிட்டிருக்கும் போது ஊடால ஊடால பேசிக்கிட்டு!” 

உண்மையை எடுத்துச் சொன்னாலும், ‘குப்புற விழுந்தவனுக்கு மீசையில மண்ணு ஒட்டல’ ரேஞ்சில் காந்தம்மாள் மகளுக்கு அதட்டல் போட்டுவிட்டு மருமகனிடம் பேசத் திரும்பியிருந்தார். 

“நீலா… அத்த என்ன சொல்றாங்கன்னு கேட்பம். பொறு… சொல்லுங்க அத்த நீங்க…” 

மனோகர் பொறுமையுடன் கேட்டுக்கொள்ள, மாமியாருக்குப் பெருமை தாங்கவில்லை. குஷியாகத் தான் சொல்ல நினைத்ததைத் தொடர்ந்தார். 

“எம்மனசுல நிலாவுக்கு உங்க பக்கத்து மாப்ள பார்க்கிறது நல்லதுன்னு படுது மாப்ள. உங்க வலசல் பெருசு. நல்ல ஜனக்கட்டு. எதாவதுன்னா கேட்கக்கொள்ள நமக்கும் வசதி. 

அந்தப்பக்கமாவே நல்ல வரன் அமையுதான்னு பாருங்க மாப்ள. ஒத்த புள்ளையா இருக்கிறவளுக்கு நாளபின்ன ஆதரவு வேணும்னு நா முன்னமே யோசிச்சது தான். 

என்ன… இப்ப நம்மள இப்படி இக்கட்டுல தள்ளி நிக்க வச்சிட்டா பேத்தி. ம்ம்… இப்படித்தான் அவ கல்யாணப்பேச்சுத் தொடங்கணும்னு இருக்கு!” 

“அம்மா… இனி நடக்க வேண்டியது என்னன்னு பார்ப்போம் புலம்பாம இரு!” நீலா இப்போது அதட்டக் கிளம்ப… 

காந்தம், “உங்க பெரிய அண்ணனுக்கு போன் போட்டுத் தாங்க. விசயத்த நானே சொல்லுறேன்.” என்றார் முடிவாக.  

மனோகரின் மூத்த அண்ணன் சந்தானம், அக்காள் மணிமாலா, இளைய அண்ணன் திருநாவுக்கரசு, தம்பி சௌந்தர், தங்கை பனிமலர் என்று அனைவருக்கும் நல்லத் தகுதியுடன் குணமுள்ள மாப்பிள்ளை பையன், தங்களுக்குத் தோதான இடம் இருந்தால் சொல்லச் சொல்லிச் சேதி போனது. 

யாரு என்ன பார்த்தாலும் தனக்கொரு அடாவடியே மாப்பிள்ளை என்று தீர்மானிக்கப்பட்டு விட்டதைப் பாவம் கொயெட் கம்போஸ்ட் மனோகர் அறிந்திருக்கவில்லை! 

‘விதி வலியது மனோகரா!’ 

ராகேஷைப் பற்றி எல்லாவற்றையும் அறியாத நிலா வீட்டில் பல அக்கப்போரைக் கூட்டி அனைவரையும் ஒரு வழியாக்கியிருந்தாள். 

அவளுக்கு ராகேஷ் மீதும் அப்படியொரு கோபம்! 

அன்று இவள், “அவுட்டிங்கெல்லாம் இப்ப வேணாம் ராக்கி. எப்பவும் போல காஃபி ஷாப், ஃபாஸ்ட் ஃபுட் இப்படிப் போகலாம்” சொல்லியிருக்க… 

“உங்க வீட்ல தான் யாருமில்ல வெளியூருக்குப் போயிருக்காங்க சொல்றியே? எதுக்குப் பயப்படுற? இந்த ஒரு வாட்டி மட்டும் வாயேன் டியர்… ப்ளீஸ் நிலா… ப்ளீஸ்!” என்று பேசி பேசி அவளைக் கரைத்து, தன்னுடன் ராகேஷ் ஓர் உலா கூப்பிட்டுப் போயிருந்தான். 

வீட்டினருக்குத் தான் காதலிப்பது இப்படித் தெரிந்து போனதில் இவள் தானே பாதிக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே ராகேஷைத் திட்டித் தீர்த்தாள். 

வீட்டில் நிறைய கெடுபிடிகள். எரிச்சலாகிப் போனாள். வெண்ணிலாவின் ஃபோன் நீலாவின் லாக்கருக்குள் பத்திரப்படுத்தப்பட்டது. 

வெண்ணிலா செல்வியிடம் பேச நினைக்க… அவள் அந்த வீட்டுப்பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. வெண்ணிலா வேலைக்கு வரவே இல்லையென்றதும் உஷாராகி ஒதுங்கி இருந்துகொண்டாள். 

அதுவுமில்லாமல் ராகேஷை போலீசுடன் பார்த்தது வேறு பீதியைக் கிளப்பிவிட்டிருக்க… எதுக்கு வீண் வம்பு என நினைத்து வெண்ணிலாவைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். 

சுரேனை வேறு மாறனுடன் நெருக்கமாகப் பேசுவதைக் கண்டது… துரையப்பன் சுரேனைப் பற்றி விசாரித்தது என்று ஒரு வழியாகி இருந்தாள். 

இதில் சுரேன் ராகேஷை வெளுத்து வாங்கிய வீடியோவை பார்க்க நேரிட்டதில்… 

“ஆத்தாடி ஆத்தா! இந்தப்பய என்ன இந்த அடி அடிக்குது? நா வேற பன்னிப்பய, நசுங்கின பாத்திர மூஞ்சின்னு கண்டமேனிக்குப் பேசி வச்சிட்டேனே!” 

சுரேனை நினைத்த நேரத்தில் யூரின் போக வந்துவிட… அதன் பின்னர் மூன்று நாட்கள் வேலைக்கு சிக் லீவ் சொன்னாள். 

செல்வி வீட்டில் நின்ற நேரமும் நிம்மதியில்லாமல் போனது. பெரிய நாத்தி, சின்ன நாத்தி, மாமி, மூத்தார் சம்சாரம் எனக் கல கலத்துப் போனாள். 

‘இதுக்கு ஸ்டோர் வேலையே பரவாயில்ல!’ என அவள் வேலைக்குத் திரும்பிவிட… வெண்ணிலா, ராகேஷ், சுரேன் என்று யாரையும் அங்குக் காணாதது அப்படியொரு நிம்மதி செல்விக்கு! 

நீலவேணி மகளைத் தன் கூடவே வைத்துக்கொண்டு சுற்றினார். வீட்டு வேலை, சமையல், கோவிலுக்கு அழைத்துப் போவது இப்படி வெண்ணிலாவை நீலா இழுத்தடிக்க… 

காந்தம் பேத்தியைத் தடவிக்கொடுத்தே உசிரை எடுத்தார். அவருடைய ஆராய்ச்சிப் பார்வையே அவளைத் துளைத்தெடுக்க வெறுத்துப் போனாள். 

“மேக்னெட், நானென்ன இந்த ஜின்னியா? ஃப்ரீயா விடு என்னைய. எங்கயும் ஓடிப் போயிற மாட்டேன். என் மொபைலையும் புடுங்கி வச்சிட்டு… ச்சே வீடே வெறுத்து வருது!” 

வெண்ணிலா கோபம், சோகம், இயலாமை, ஏக்கம், வெறுப்பு என வளைய வர… ஒரு வாரம் சென்றே ஆதி அவளைக் காண வந்திருந்தான். 

“உள்ளே வரலாமா?” 

வெண்ணிலாவின் ரூம் கதவைத் தட்டி எட்டிப் பார்த்தான் ஆதி. தம்பியின் தலையைப் பார்த்ததுமே வெண்ணிலா பொரிய ஆரம்பித்தாள். 

“எங்க வந்த நீ? இருக்கேனா செத்தேனா பார்க்க வந்தியா?” அப்படியொரு கோபம் வெண்ணிலாவிடம். 

“என்னக்கா இப்படிக் கேட்கிற?” அக்காள் கேட்ட விதத்தில் ஆதியின் முகம் கசங்கிப் போனது. 

“லவ் பண்ணுறது தப்பாடா? எல்லார்ட்டேயும் போட்டுக் கொடுத்திட்டேல்ல? உன்னால என்னைய வேலைக்கும் அனுப்ப மாட்றாங்க… 

யாரையும் பார்க்கக் கொள்ள முடில. ஃபோன் கூட பேசத் தடை… போகுது வாட்ஸ் அப் பார்க்கக் கேட்டா கொலைவெறியோட பாக்குறாங்க. சும்மா ஒரு யூடியூப் பார்க்கக் கேட்டாலும், இம்மாம் பெரிய டிவி எதுக்கு இருக்குக் கேக்குறாங்க!” 

“லவ் பண்ணுறது தப்புன்னு சொன்னேனா? அந்தப் பய சரி கிடையாது! சொன்னா புரிஞ்சுக்கோக்கா. உன் நல்லதுக்குத்தான இப்ப கொஞ்சம் கெடுபிடி பண்றாங்க பெரிம்மா. நீ மனசு மாறிட்டன்னு தெரிஞ்சா ரிலாக்ஸ் ஆகிடுவாங்க.” 

“ஆமா உடனே மனசு மாறுறாங்க… நீ ரொம்ப நல்லவன்… அவன் கெட்டவனா? ராக்கிய உனக்கு ரொம்ப தெரியும்! என்னன்னமோ பேசுறான் போடா!” 

“நான் உந்தம்பிக்கா. நல்லவனாத்தானே இருக்க முடியும்?” முறுவலுடன் கேட்ட ஆதியைப் பார்த்து வெண்ணிலாவுக்குமே உதடு விரிய போக… 

“டேய் வளந்தவனே நல்லாப் பேச வந்துட்ட! சரி சொல்லு எப்படிடா உனக்கு ராகேஷைத் தெரியும்?” பார்வையைக் கூர்மையாக்கிக்கொண்டு கேட்டாள். 

“அந்தாள எனக்கெங்க தெரிய போகுது!” அசால்டாக ஆதி பேசச் செய்ய… 

“அப்ப எப்படி அவன் கெட்டவன் சொல்ற?” முறைத்தபடி கேட்டாள். 

“அவன் கெட்டவனா இருக்கப் போயி தான் போலீஸ்ல மாட்டியிருக்கான். ஊருக்கே தெரியுது அவன் டோப்பு, பொறுக்கின்னு!” 

“ஆதீ! ஏய்… நீ என்ன… என்ன சொல்ற?” அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து நின்ற வெண்ணிலாவைப் பார்த்து, 

“இதுக்கே ஷாக் ஆகுற… அப்ப அன்னைக்கி உன்னைய அவன் எப்படிப்பட்ட இடத்துக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான்னு தெரிஞ்சா?” ஆதி இன்னும் ஷாக் கொடுக்க… 

“நீ சும்மானாச்சுக்கும் தானே சொல்றடா! டேய் டேய்… ராக்கி… ராக்கி… ராக்கிக்கி என்னாச்சிடா… ஆதி!” வெண்ணிலா பதறிப் போய் ஆதியைப் பிடித்து உலுக்கினாள். 

“நா இதுல பொய் சொல்ல என்னக்கா இருக்கு? அந்தப்பய ஒரு பெத்த காவாளிப்பய. டிரக் கேஸ்ல மாட்டிருக்கான். நடக்குற எல்லா மொள்ளமாரித்தனத்துக்கும் துணை போயிருக்கான். 

இல்லாத பொறுக்கித்தனமெல்லாம் அவனுக்கு அத்துப்பிடியாம்… உன்னைய வெளில கூட்டிக்கிட்டுப் போனானே அந்தத் தோப்புல என்னவெல்லாம் நடக்குது தெரியுமா…”  

ஆதி சொல்ல சொல்ல… அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது துடித்துப் போனாள் வெண்ணிலா. 

‘ராகேஷ் இவ்வளவு மோசமானவனா? எப்படிப் பேசுவான்… சின்ன சின்னச் சிரிப்புல மயக்கி… ச்சைய்! 

அப்படியே என்னைய ஏமாத்திருக்கானே! ஹைய்யோ… பயந்து வருதே!’ நினைத்து நினைத்து மருகி அழுதாள். 

“ம்ப்ச்… அழாதக்க. கண்ட பயலுக்காக உன் கண்ணீரை எதுக்கு வீணாக்கிட்டு இருக்க? தலைய வலிக்கப் போகுது!” அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டான். 

“அஹ்… அ… அன்னைக்கி நீ மட்டும் எ… என்னைய பார்க்காம போயிருந்தா… ஆதீ!” 

வெண்ணிலாவின் உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டிருக்க… அவள் கைகளை இறுகப் பற்றியபடி ஆதி, 

“அதான் நா பார்த்துக் கூட்டிட்டு வந்துட்டேன்ல… பயப்படாதக்க… ஒன்னுமில்லை சரியா போச்சி.” சொன்னான். 

வெண்ணிலா தெளிவில்லாமல் வெறித்தாள். 

“இனி மேல் யார்கிட்டன்னாலும் கேர்ஃபுல்லா இரு. கொஞ்ச நாளைக்கி வேலைக்குப் போகாம வீட்ல இரு. 

நாங்க எல்லாம் மாத்தி மாத்தி வந்து பாக்குறோம். நீயும் ஊருக்கு வா. எனக்கும் அப்பாக்கும் மட்டும் தான் விசயம் தெரியும். யாரும் எதுவும் கேப்பாங்க நினைச்சி நீ பயந்துக்க வேண்டியதில்லை.” 

ஆதி பலவாறாக ஆறுதல் அளித்து வீட்டில் பெரியம்மாவிடமும் அக்காவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டே கிளம்பிப் போனான். 

வெண்ணிலா அன்று மட்டுமல்ல அதன் பின்னர் வந்த நாட்களிலும் அழுது கரைந்தாள். அவளுக்குள்ளே அத்துணை வேதனை! 

வேதனையை மிஞ்சிய வகையில் ஒரு பயம்… இப்படிப் போய் ஏமாந்து… என்ன நடந்திருக்குமோ! 

அடிக்கடி தூக்கத்திலும் கூடப் பதறி வந்தது! 

ஒரு வழியாக அவளைத் தேற்றி மீண்டு வர வைத்திருந்தனர் குடும்பத்தினர். 

அப்புறமே வீட்டினர் அவளுக்கு வரன் பார்ப்பதாகச் சொல்லப்பட, முடியாது வேண்டாமென அடம் பிடித்துக்கொண்டிருந்தாள். 

அவளுடைய நல்ல நேரமோ என்னமோ வரன் அமைவதும் தள்ளிப் போய்க்கொண்டிருக்க… இதற்குள் ஆறேழு மாதங்களும் உருண்டு பிரண்டு மலர்ந்து எனக் கடந்திருந்தன. 

திடீரென ஒரு நாள் வெண்ணிலாவின் பெரியப்பா சந்தானம் அவசரமாக வீட்டிற்கு வந்தார். 

அவர் ஒரு நல்ல வரனைக் கொண்டு வந்திருக்க… பெரியவர்கள் மட்டும் கூடிப் பேசினர். 

வெண்ணிலாவிடம் வரன் வந்திருப்பதைப் பற்றிச் சொல்லவும் அவள் பெரிய ஆர்வமில்லாமல் சாக்கு போக்குச் சொல்ல… இந்த முறை நீலவேணி மகளைப் பிடி பிடியெனப் பிடித்து, ‘கல்யாணத்துக்கு ரெடியாகு’ என்றுவிட்டார். 

கூடிய சீக்கிரத்தில் வரும் நல்ல நாளிலேயே வெண்ணிலாவைப் பெண் பார்க்க ஏற்பாடாகியிருக்க… 

இதோ அந்த நாளும் வந்துவிட… 

வீட்டில் எல்லோரும் அரக்க பரக்க வேலைகளைப் பார்த்துத் தயாராகிக்கொண்டிருந்தனர். 

வெண்ணிலாவோ, 

“சிரிச்சி சிரிச்சி

வந்தா சீனா தானா டோய்

சிறுக்கி சிறுக்கி மக தேனா

போனா டோய்…

எக்கா எக்கா

எக்கா எக்கா…” 

டிவியில் ஒலித்த பாடலுடன் பாடிக் கொண்டிருந்தாள். 

மகளைப் பார்த்த நீலவேணியின் கோபம் எல்லையைத் தொட்டு நர்த்தனமாட… காந்தம்மாள் சாவகாசமாக, 

“பொறுமையா இருடி. அவ என்ன உன்னையும் என்னையுமா சிறுக்கின்னா?” புன்னகையுடன் கேட்டார். 

“க்கூம்… இனி அது ஒன்னு தானே குறை… இன்னும் கொஞ்ச நாள்ல அவ வாய்ல கெட்ட வார்த்தையும் வசவா வரும்!” 

“நிலா அப்படிப்பட்ட பொண்ணா? பெத்தவ நீயே நால பரப்பி விடாதடி! நாளைக்கி புருசென் வீட்டுக்கு வாழப் போனா… தானா பதவிசு வந்திரும். 

எந்த எடுபட்ட பய எழுதி வச்ச பாட்டோ. டிவில காட்டுனா இவள மாதிரி லட்சம் பேரு பாடத்தான் செய்வாங்க. வா வா ஜோலி கெடக்கு. நாம முதல்ல சொச்ச வடைய போட்டு முடிப்பம்.” 

“என்னைய எங்கம்மா பொறுமையா இருக்க விடுறா உம் பேத்தி? எப்பவோ அவளை நாலு அடி அடிச்சி நம்ம கண்டிப்பைக் காட்டியிருந்தா சரிப்பட்டிருப்பா. 

நீங்க எங்க விட்டீக என்னைய? ஒன்னு நீ ஊடால வர்றது இல்ல உம் மருமகனை ஏவி விட்டு அவளைக் காபாத்திவிடறது!” 

நீலா தன் இயலாமையைக் குறை பாடச் செய்ய

“நா பெத்ததும் ஒன்னு. நீ பெத்ததும் ஒன்னு. ஒத்த புள்ளையா எங்கண்ணுல பொத்தி வளத்த நீ எதுல சோட போயிட்டடி? எம்பேத்தி மட்டும் சோட போயிருவாளா என்ன?” 

காந்தம்மாள் இடுப்பில் கை வைத்து நிமிர்வாக நின்று கேட்க… 

“இப்படியே பெருமைய பீத்திக்கிட்டே இரு நீ! இன்னுமே இவள நம்புற நீ?” 

‘நல்லா வருவ நீ! வெளங்கிரும்!’ என்பதைப் போல அம்மாவை நீலா லுக்குவிட, 

“என்னைய முறைக்கிறதை அப்புறமா பண்ணு… அங்க பாரு… கிண்டி இறக்கி வச்ச பாதாம் அல்வா தீயுது!” 

காந்தம்மாள் சீரியசாக சொல்ல… 

“ஆ… அச்சோ!” பதறிப் போன நீலா பாதாம் அல்வாவை பார்க்கச் செய்ய… 

‘இப்படி டிவிய வால்யூமை கூட்டி… அதை வீடே அதிரும்படி அலறவிட்டிட்டு… 

நானுமே தொண்டத்தண்ணி வத்திப் போகும் அளவுக்கு அப்படிக் கத்திப் பாடி ரகளையைக் கூட்டப் பார்த்தா… 

எந்த ரியாக்‌ஷனும் காணோமே? எங்க அவங்க ரெண்டத்தையும்?’ 

நினைத்தபடி கிட்சன் பக்கம் வந்திருந்த வெண்ணிலாவிற்கு அவள் அம்மா சொன்ன, “இப்படியே பெருமைய பீத்திக்கிட்டே இரு நீ!” என்பதிலிருந்து இருவரும் பேசியது கேட்டது. 

பாட்டி சொன்னதை அம்மாவுக்கு முதல் புரிந்துகொண்டவள், தன் ஆர்ப்பாட்டத்தை மறந்து கல கலத்துச் சிரித்தாள். 

மகளின் சிரிப்பைப் பார்த்து நீலவேணியின் கண்கள் பெரிதாக விரிய, காந்தம்மாள் பேத்தியின் சிரிப்பை இரசிக்க… வெளியே போயிருந்த மனோகரும் சரியாக அந்நேரம் பார்த்து உள்ளே நுழைய… 

மூவருக்குமே இளையவளின் சிரிப்பு மனதை நெகிழச் செய்ய… மனோகருக்கு ஏதோ ஒரு பெரிய மலையை அசைத்து நகர்த்தி வைத்த ஆசுவாசம். 

“இப்படியே எல்லாமும் நல்லாப் போகணும்மா ஜக்கம்மா!” என்று தலைக்கு மேலே கைகளை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டுக்கொண்டார். 

அவரின் குலசாமி ஜக்கம்மாவையே அவருடைய மகள் ஜக்கம்மா அதிரச் செய்யப் போகிறாள் என்பதை மனோகர் எங்கிருந்து கண்டார்? 

அப்பாவின் வேண்டுதலை வெண்ணிலா கவனித்துவிட்டாள். அப்படியே அம்மாவைத் திரும்பிப் பார்க்க… கலங்கிய கண்களை நீலவேணி முந்தானையால் துடைத்துக்கொண்டிருந்தார். 

காந்தம்மாள் மட்டும் மும்முரமாகப் பால் வேலையில் கவனமாகியிருக்க… 

“பத்த வச்சிட்டு ஹாய்யா பாலா ஆத்துற… கமுக்கமா இருந்தே காரியத்த சாதிக்கிறயே ஆத்தா! பெருசு நீனே இந்த லெவல்னா… நாங்கெல்லாம் நைன்டீஸ் கிட்ஸ்!” 

காந்தம்மாளைப் பார்த்து முணு முணுத்துக்கொண்டாள் வெண்ணிலா. 

“என்னம்மா நிலா…” பேத்தியின் வாயசைவே அவளைக் காட்டிக் கொடுத்துவிட, தெரியாததைப் போல் காந்தம்மாள் கேட்கச் செய்ய… 

“என்ன… என்னன்னு கேட்கறீங்க பாட்டி?” அடக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு விசாரித்தவளை ஓரப்பார்வை பார்த்தபடி, 

“நீ சொன்னது எங்காதுல விழலை ராஜாத்தி. அதான் என்னன்னு கேட்டேன்.” என்றார் காந்தம்மாள். 

“க்கூம்…” நொடித்தவள், “நீங்க வந்து பத்த வெச்சாத்தான் பத்திக்குமாம். விளக்குத் திரி அடம் பிடிக்குது பாட்டி.” நக்கலாக வெண்ணிலா பதில் தந்தாள். 

நீலவேணி மனோகருடன் பேசிக்கொண்டு மகளையும் அதட்டலாக ஒரு பார்வை பார்த்து வைக்க… மனோகருக்கு எங்கே அந்தச் சூழ்நிலை ரிவர்ட்டாகி மாறிப் போகப் போகுதோ என்று பயந்து வந்தது. 

“நிலாம்மா, விளக்க என்னன்னு அம்மா போயி பார்க்கட்டும். நீ போயி சீக்கிரமா தயாராகுடா. எல்லோரும் வர்ற நேரமாச்சி. என்ன புடவைய கட்டப் போறன்னு அம்மாட்ட காமிச்சியா? 

இல்லைன்னா இப்ப காமிச்சி என்ன நகைய போடுக்கறீங்கன்னு பாருங்க. நீலா… நீ என்ன மச மசன்னு நின்னிட்டு இருக்கிற… பலகார வேலை முடிஞ்சதில்ல? 

போயி வேற புடவைய மாத்திட்டு நில்லு. மதனியும் விசாலியும் வந்து மிச்சத்த பார்த்துக்குவாங்க. 

அத்தை நீங்க என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க. போங்க… போயி முகத்தைக் கழுவிட்டு வாங்க. வந்து முன்னறைல உட்காருங்க. நீங்க தானே முன்ன நிக்கனும். சீக்கிரம் கிளம்பி வாங்க.” 

மனோகர் அந்த அடுப்படி சபையைக் கலைத்துவிட்டு அவருமே வருபவர்களை வரவேற்க வாசற்பக்கம் போய் நின்றுகொண்டார். 

முதலில் மனோகர் வீட்டு ஜனக்கட்டு நான்கைந்து வாகனங்களில் வந்திறங்கி வீட்டை நிறைக்க… 

வீடே விசேசக்களையைப் பூசிக்கொண்டது. 

பூவும், கொலுசொலியும், பட்டும், நகையுமென அவ்வீட்டுப் பெண்கள் சுற்றி வர… வெண்ணிலாவும் மிதமாக அலங்கரித்துக்கொண்டு மெல்லினமாக அவளது ரூமில் உட்கார்ந்து இருந்தாள். 

“மாப்ள வீட்டாளுக வந்தாச்சி!” யாரோ சத்தமாகச் சொல்ல, அவர்களை வரவேற்க சிலர் வெளியே போவதும் வரவேற்பதும் கேட்டது. 

ஹாலில் பல நலன் விசாரிப்புகளும் பேச்சுக் குரல்களும் ஒலித்த வண்ணமிருக்க… வெண்ணிலாவின் பொறுமை குறைந்துகொண்டே போனது. 

“மாப்ள உங்க கூட வரலைங்களா?” பெரியத்தை வீட்டுக்காரர்… மாமாவின் குரல் கேட்டது. 

“அஞ்சு நிமிசத்துல வந்திருவான்.” யாரோ மாப்பிள்ளை வீடு. 

‘யாருடா அந்த அப்பாடக்கர் மாப்ள?’ 

யோசனையுடன் ஜன்னல் அருகே போய் வெண்ணிலா நிற்க… சரியாக அதே நேரத்தில் ஒரு பைக்கும் வீட்டருகே வந்து நிற்கச் செய்ய… 

“எதே! இவனா மாப்ள? எதோ போலீஸ் சொன்னாங்க!” வெண்ணிலா ஜர்க் ஆக… 

படு ஸ்டைலாக உடுத்திக்கொண்டு வந்திருந்த மாப்பிள்ளைக்கு வெண்ணிலா சொன்னது கேட்டுவிட… பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி நிமிர்ந்தவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான். 

ஆவென உதடுகள் விரிய இமைகளைச் சிமிட்டாமல் வெண்ணிலா அவனைப் பார்த்து நிற்க… 

“ஊஃப்!” 

தன் உதடுகளைக் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைத்தான். 

அப்படியே பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணை கூட்டி ஸ்டைலாக ஒரு ஹார்ட் காட்டிப் புன்னகைத்தான் மாப்பிள்ளையாக வந்து அவளெதிரே நின்ற சுரேன்.