என் சித்தம் சித்திரமே – 5

என் சித்தம் சித்திரமே 05

“ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லே…”

என்று காற்றில் பாக்ஸிங் ஸ்டெப் போட்டு, சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தான் சுரேன்.

“மொள்ளமாரி மொள்ளமாரி! இவரு ராஜாவாம்… இவரு கைய வச்சா, அது ராங்கா போனதில்லையாம்! பெரிய உலகநாயகன்னு நெனப்பு!

டேய் வெளக்கெண்ணெ! வாயை மூடிட்டு அடங்கு! ஸ்ஸ்… கண்ணைக் கட்டுதே! காலங்கார்த்தால நல்ல பாட்டுடா சாமி! இதுல குத்துச்சண்டை போஸ் வேறயா?”

இரவு வேலை முடிந்து அப்போது தான் வீட்டிற்கு வந்தான் மாறன். அவன் சாவியைக்கொண்டு வீட்டைத் திறக்கும் முன்பே சுரேனின் குரல் காதில் விழ, உள்ளே வரவுமே நண்பன் மேல் காண்டாகிச் சத்தம் போட்டான்.

“நா எதுக்குடா என்னைய உலகநாயகன்னு நினைக்க? எப்பவும் இந்த சுரேன் சுரேன் தான்! சுரேன்னா கெத்து… கெத்து… தெரியுமில்ல!?”

சுரேன் நடுவில் மூன்று விரல்களை மடித்துக்கொண்டு, பெருவிரலை மேல்நோக்கியும் சுண்டு விரலைக் கீழ் நோக்கியும் வைத்தபடி, தன்னைச் சுட்டி மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு நாக்கை மடித்துக் கெத்துக் காட்ட…

“ஆமா ஆமா செம கெத்துத்தான்! அப்படியே எத்துனா… சுவத்துல அப்பிக்குவ!”

மாறனுக்கு வந்த கடுப்பில், ‘இவனை! அப்படியே அப்புனா என்ன?’ என்று தான் தோன்றியது. அதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பேச்சில் கோபத்தைத் தெறிக்கவிட்டான்.

“நண்பா என்னைய எத்துவ நீ?” பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு சுரேன் மாறனைக் கட்டிப்பிடிக்க வந்தான். அவனுடைய நடையில் சற்றுத் தள்ளாட்டம்.

“ச்சீ குடிச்சிருக்கியாடா? கிட்ட வராத! வேணாம்… தள்ளிப் போடா!” சுரேனைப் பிடித்துத் தள்ளிவிட்டு மாறன் அவனை அனல் சுடப் பார்க்கவும்,

“ஹய்யோ நண்பா… அப்படிப் பாக்காதடா… பயந்து வருது! ஜஸ்ட் கொஞ்சம்… இம்புட்டுக்கூண்டு… ஸ்மால் குவான்டிட்டி யா!” கையில் அபிநயித்துக் காட்டினான் சுரேன்.

“கர்மம் கர்மம்! எது நடந்தாலும் எனக்கென்னன்னு இருக்கடா நீனு! கொஞ்சமா குடிச்சாலும் லேசுல அடங்குறவனா நீ? எங்க இருந்து உனக்குச் சரக்குக் கிடைச்சது இந்த போலீஸ் குவார்ட்டஸ்ல?”

அவ்வளவு கடுப்பு மாறனுக்கு நண்பன் மேல். வெட்டிப் பிரச்சனையை இழுத்து வைத்திருப்பதும் இல்லாமல் அதைப் பற்றிய கவலையின்றி ஆடிக்கொண்டிருக்கிறானே!

“அதோ…” உள் ரூம் பீரோவை சுரேன் காட்டவும்,

“எதே! டேய் அது எனக்கு வந்த கிஃப்ட்டு டா! ஊருக்குப் போகும் போது அப்பாவுக்கு எடுத்திட்டுப் போயி தரலாம்னு பத்திரப்படுத்தி வச்சிருந்தா… பரதேசி பரதேசி! பாவம் பார்த்து உனக்குப் போயி என் வீட்டுச்சாவி தந்தேன் பாரு!”

மாறனுடன் படித்த நண்பன் ஒருவன் சிங்கப்பூர் போய்விட்டு வந்தவன் ஒரு ஜானி வாக்கர் விஸ்கி பாட்டிலை கொண்டு வந்து இவனுக்குத் தந்திருக்க…

மாறன் சரக்கை மோந்து பார்ப்பதோடு சரி… குடிக்கச் செய்யவெல்லாம் மாட்டான். அதனை அப்படியே பீரோவில் வைத்திருந்தான். ஊருக்குப் போகும் போது தந்தைக்குத் தர நினைத்து.

இப்போது அது இப்படித் திறக்கப்படவும் வந்ததே கோபம்… வெறியாட்டம்!

பொறுக்க மாட்டாமல் மாறன் சுரேன் மேல் ஏறியேவிட,

“மாறா… டேய் வலிச்சிங் டா! மாமாக்கு புதுசு வாங்கித் தர்றேன். விடுடா என்னைய.” சுரேன் சொல்லவும்,

“ஆமா நீ வாங்கித் தந்து கிழிச்ச… நல்லா வலிக்கட்டும்!” சொல்லிக்கொண்டு அப்படியே நண்பனை உதைக்கச் செய்தான் மாறன்.

“அய்யோ உதைக்கிறான்… விடு டா விடு டா என்னைய… உதவி உதவி… அலோவ்… நல்ல போலீஸ் யாராச்சும் இருக்கீங்களா? வாங்க… காப்பாத்துங்க பிளீஸ்… இந்தக் கெட்ட போலீஸ் பிடிங்க!”

அக்கப்போரைக் கூட்ட முயன்ற சுரேனைப் பிடித்து லாவகமாக அடக்கி வைத்தான் மாறன்.

“சத்தத்த குறை… சத்தத்த குறைடா. ம்ம் மூடு!” வாயைப் பொத்திக் காட்டிவிட்டு, “த்தூ… அதையும் மூடித் தொலை பக்கி!” என்று அவிழ்ந்து கிடந்த லுங்கியைக் காட்டி முகத்தைச் சுளித்தான்.

“அச்சோ!” விழி அகல… முழித் தெறிக்க… வாயைப் பொத்திக்கொண்டான் சுரேன்.

“டேய் பிடிடா… பிடிச்சி இழுத்துக்கட்டு!” மாறன் காண மாட்டாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சுரேனை அதட்டினான்.

“ஹே நீ பார்த்த? பார்த்திட்டயா மச்சான்?”

“நானென்ன உன் லவ்வரா கண்ட இடத்த பார்த்து வைக்க! த்தூ இம்சை அடங்கி நில்லுடா!”

“அவ எம்முகத்த கூட பாக்க மாட்றா மச்சான்! இனி அவளை நான் பிக் அப் பண்ணி… எப்ப எங்க லவ் டெவலப் ஆகி… ம்ப்ச்… லாங் வே டா மச்சான்!”

“பரவாயில்லையே ஷோக்கா இங்க்லிபிச்சு பேசுறானே மாப்பு! சரக்குப் பேச சொல்லுது?!” மாறன் நக்கலடித்தான்.

“ஆங்கிலப்பள்ளியில படித்தவனுக்கு மராத்தி, குஜராத்தியா வரும் பன்னிப்பயலே? டாபிக் டைவர்ட் பண்ணாத நீ!” சுரேன் பதிலுக்கு நக்கலடித்தான்.

மாறன் எதையோ சொல்ல வர, அவன் வாயைப் பொத்தி ஒற்றை விரல் வைத்து,

“ஷ்ஷ்… வெயிட் வெயிட்… இதுக்கும் முதல்ல என்ன பேசுனேன்? ம்ம்… இதெல்லாத்தையும் என் லவ்வர்ட்ட காட்டாமயே செத்திருவேனா மச்சான்?

ஹய்யோ ஒரு பொண்டாட்டிய கட்டி மஜா பண்ண நெனச்சேனே! கன்னி கழியாம என் உயிர் மேல போகப் போகுது!” அழுகையை சுரேன் கூட்ட முயல…

“ரொம்ப முக்கியம்… இப்ப அவ இந்த டாஷை பார்க்கலைங்கிறது தான் நெனப்புல ஓடுது உனக்கு! நீயா சாவ? என்னையத்தான் கன்னி கழியாம காவு வாங்கப் போறடீ!

கொஞ்ச நேரத்துக்கு அடங்குடா!” மாறன் அவன் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

“ஸ்ஸ், வலிக்குதூ… ஓக்கே ஓக்… க்கே! இப்ப இந்த சுரேன் ஸ்டெடி… ஓகே மச்சான்?”

“கர்மம்…” தன் நெற்றியில் ஒரு முறை அறைந்துகொண்டான் மாறன்.

“அச்சோ வலிக்கப் போகுது நண்பா!” மாறனுக்காகச் சுரேன் அக்கறைப்பட்டான்.

“ரொம்பத்தான் அக்கறை… சரி இப்ப சொல்லு… ஊரெல்லாம் வைரலான உன் வீடியோவ நீ பார்த்தியா இல்லையா?”

“எமன் என்னைய எருமைல உட்கார வச்சி ஓலால ஓட்டிட்டுப் போறானே… அதா? அந்த வீடியோவ அடிக்கடி எங்கனவுல காட்றாங்க மச்சான்!” சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் சுரேன்.

அவன் சொன்ன பதிலில், “என்னது…!” என வாயைப் பிளந்து மாறன் அதிர்ச்சிக்காட்டி நின்றது அரை வினாடி நேரம் மட்டுமே இருக்கும்.

“எப்படி எப்படி? எருமையும் நீயும் ஓலால ஒன்னா ரைட் ஷேர் பண்றீங்க… அதுக்கு நம்ம எமராஜா டிரைவரா?

அடங்க மாட்றானே… நானும் எம்புட்டு நேரந்தான் பொறுமையா போறது? டேய்… உனக்கு இன்னைக்கி சங்கு தான்டீ!

நீ நிஜம்மா மப்புலத்தான் பேசுறயா இல்ல மப்புல இருக்க மாதிரி பிலிம் காட்றயா?”

‘சப் சப் சப்…’ சுரேன் வாயிலேயே நான்கைப் போட்ட மாறன், அவன் முதுகிலும் பலமாக அடித்தான்.

“உன்னைய எப்பவோ உதைச்சித் துவைச்சி வெளுத்திருந்தா இன்னைக்கி நீ இப்படிப்போயி ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆகியிருக்க மாட்ட!

நானும் நிம்மதியா இருந்திருப்பேன்டி… வெளக்கெண்ணெ… உம்முகரையத்தான் ஊரே வாட்ஸ் அப்ல பார்த்துக்கிட்டு இருக்கு!”

இன்ன அளவில் என்றில்லாமல் கண்மண் தெரியாத கோபத்துடன் மாறன் எகிறினான். அவன் அடித்த அடியில் கொஞ்சம் தெளிந்தான் சுரேன்.

தெளிந்த அளவுக்குப் போதும் என நினைத்து மாறன் சுரேனைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தான்.

அந்த ராகேஷ் சுரேன் வீடியோவை ஃபோனில் ஓடவிட்டு நண்பனுக்குக் காட்டினான். கப்சிப் எனப் பார்த்தான் சுரேன். அது ஓடி முடியவுமே,

“அய்! யாருடா இதை ரெக்கார்ட் பண்ணி அனுப்புனா? இந்த வீடியோவத்தான் நீ வைரலாகிடிச்சு சொன்ன மாறா? அச்சொ… செம!” என்ற சுரேன் அப்படியே விசில் போட்டான்.

சீழ்க்கை அடித்த நண்பனை மாறன் விநோத ஜந்துவைப் போல் லுக்கு விட்டான்.

சீழ்க்கை அடித்துவிட்டு, “அப்ப என் ஐஸ் கட்டியும் வீடியோவ பார்த்திருப்பாள்ல?”

பெருவிரலையும் ஆள் காட்டி விரலையும் தனக்கில்லாத குறுந்தாடி ஏரியாவில் வைத்து, ஆங்கில எழுத்து ‘வி’ வடிவில் தேய்த்தபடி யோசிக்கும் போஸில் நின்றான்.

“எவளைப் பத்திப் பேசுற நீ?” சத்தியமாக இப்படியொரு ரியாக்‌ஷனை எதிர்பார்க்வில்லை என்கிற பாவனையில் மாறன் புருவம் சுருக்க…

“என் நிலா… வெண்ணிலாவ பத்தி. பார்த்திருப்பாள்ல டா?” என்றான் சுரேன்.

“இப்ப அவ பார்த்தாளா இல்லையா ரொம்ப முக்கியம்? உன்னால டிபார்ட்மெண்ட்ல எனக்கு என்கொயரி வர்ற வாய்ப்பிருக்கு ராஜா! நானே இங்க பதறிக்கிட்டு இருக்கேன். நீ நிலா பாட்டு பாடிட்டு இருக்க?”

“நிலா அந்த ராகேஷை நா அடிக்கிறதைப் பார்த்திட்டு என்ன ரியாக்சன் தருவா மச்சான்?” அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல் சுரேன் பாட்டுக்குப் பேசி வைக்க…

“க்கும்… நீ அதுலயே இரு. உன் பவுர்ணமி நிலா நீ அவ லவ்வர் முகரைய பேக்குறத பார்த்திட்டு அமாவாசை நிலாவா ஆகிருப்பா! இருடி வர்றேன்… முதல்ல உம்மப்ப இறக்குறேன்!”

பாத்ரூம் புகுந்த மாறன், ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை எடுத்திட்டு வந்து சுரேன் தலை மேலே அப்படியே கவிழ்த்தான்.

ஜில்லெனக் கொட்டிய நீரில் சிலிர்த்துக்கொண்டு எழுந்தான் சுரேன். அவன் திமிற திமிற மாறன் பிடித்து இழுத்துப் போய் பாத்ரூமில் விட்டு ஷவரை திருகிவிட்டான்.

“டேய் டேய் ஜில்லுன்னு இருக்குடா! மச்சான் ஹாட் வாட்டர் திருப்புடா!” சுரேன் அலற…

“ஹாட் வாட்டர் வேணும்னா நீ திரு. சதாசிவம் வீட்டுக்குத்தான் போகணும். என் வீட்ல வாட்டர் ஹீட்டர் லேது ப்ரோ. என்ன கரம் பானி (வெந்நீர்) தான் வேணுமா?”

‘பெட்ரோமாக்ஸே தான் வேணுமா?’ என்கிற மாதிரி வடிவேலு மாடுலேஷனில் மாறன் கேட்டு வைக்க…

“அய்ய தெரியாம கேட்டுட்டேன். பச்ச தண்ணியே போதும்டா. குளிச்சிட்டு வர்றேன். நீ நடைய கட்டு!” மாறனை பாத்ரூம் விட்டு வெளியே பத்திவிட்டான் சுரேன்.

அவன் குளிக்கும் நேரத்தில் வீட்டைத் துடைத்து ஒதுங்கப் பண்ணிவிட்டு… அப்பாடா என்று மாறன் நிமிரவும் அவனுடைய அலுவலக மொபைல் கூப்பிட்டது.

டி. எஸ். பியின் அழைப்பு. முந்தைய நாள் நடந்த புரோட்டா கடை சம்பவம் தொடங்கி… சுரேன் கொண்டு வந்த துப்பு எனச் சில நிமிடங்கள் பேசி வைத்த மாறனுக்கு அப்போது தான் மனது நிம்மதியானது.

மாறனுக்குப் பசிக்கச் செய்ய… ஃப்ரிட்ஜில் என்ன இருக்கு என்று பார்த்தவன் முதலில் உள்ளே இருந்த பாக்கெட் பாலை எடுத்துக் காய்ச்சினான்.

இதற்குள் சுரேன் குளித்து முடித்து வர, அவனிடம் விட்டுவிட்டு மாறன் குளிக்கச் சென்றான்.

அவன் வெளியே வரும் போது டேபிளில் இரண்டு தட்டம்… சுட சுட தோசைகள்… ஆவி பறக்கும் காபி என இருக்க… குளிர்ந்து போனான் மாறன்.

“லட்டு டா நீயி!” மாறனுக்குப் பாசம் ஓவர்ஃப்ளோ ஆகிப்போக…

தன் கன்னம் கிள்ள வந்தவனைச் சுரேன் தட்டிவிட்டான்.

“ச்சீபே… உன் பாப்பாவ கொஞ்ச வேண்டிய வயசுல என்னைப் பிடிச்சிக் கொஞ்ச வருது லூசுப்பய!”

சுரேன் நக்கல் செய்ய… அவனை முறைத்தான் மாறன்.

“எம் பொண்டாட்டியா ஒருத்திய செட் பண்ணிக்க வழிய காணும்… ஒரு பொண்ணையும் கண்ணுல காட்ட மாட்றாங்க… இதுல பாப்பா எங்கிட்டு இருந்து வரும்?”

மாறன் தன் சோகத்தைக் கொட்ட…

அப்படியொரு சிரிப்பு சுரேனுக்கு!

மாறன் விட்டால் அவனை எரித்திருப்பான்.

“அச்சோ!” எனப் பம்மிய சுரேன் அப்படியே சிரிப்பை அடக்கினான்.

பின்னர்…

“அத்தைய பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியது தானே மாறா?”

சீரியசாக சுரேன் கேட்க… இப்போதும் மாறன் அவனை முறைத்து வைக்க…

“ஏன் டா முறைக்குற? உனக்கு நல்லதுக்குப் பார்த்தா குத்தமா?” பரிதாபமாக சுரேன் கேட்டான்.

“என் நல்லதுக்குப் பார்க்குறவனா நீயி? உன்னால தான்டா எனக்கு நல்லது நடக்க மாட்டுது. உங்கம்மா எங்கம்மாட்ட உன்னைய பத்தி பக்கம் பக்கமா புகார் படிச்சிருக்காங்க.

அதைக் கேட்டு ஃபீலாகி எங்கம்மா அத்தட்ட, உனக்குப் பொண்ணு பார்த்து உறுதி பண்ணிட்டுத்தான் எனக்குப் பொண்ணு பார்க்கப் போறேன்னு லூசுத்தனமா வாக்கு குடுத்திருக்காங்க!”

மாறன் தன் சின்ன தாய் மாமனின் மகனும் ஆருயிர் நண்பனுமான சுரேனிடம் முறையிட்டான்.

“இந்தப் பெருசுக சும்மாவே இருக்கிறதில்ல. நம்ம வாழ்க்கைய அவங்க கைல எதுக்கு எடுத்துக்கறாங்க? இந்த யமுனா இருக்கே…” தன் அம்மாவைத் திட்டிக்கொண்டிருந்தான் சுரேன்.

“த்சு கிளம்பாத… பொத்து! நீ எதுக்கு இப்ப அத்தைய பேசுற… சும்மா அவங்கள மட்டும் தப்புச் சொல்லிக்கிட்டு. நீயும் கொஞ்சமாச்சும் திருந்தப் பாரு. எந்த நேரமும் எகிற வேண்டியது!

இப்படிப் பேசி பேசியே உன் பேரை ரிப்பேர் ஆக்கி வச்சிருக்க நீ அவங்க குணமறிஞ்சி நடந்துகிட்டா என்ன?

அத்தையும் மாமாவும் அவங்க பெத்த பிள்ள நாசமாகப் போகணும்னா நெனப்பாங்க? என்ன அவங்க எதிர்பார்ப்பு உனக்கு மேட்ச் ஆகலை!” மாறன் இவனுக்கு எடுத்துச் சொல்லவும்…

சுர்ரென்று ஏறியது சுரேனுக்கு!

“எல்லாமும் தெரிஞ்சிருந்தும் நீயும் அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுன… நீயும் வேணா உன் நட்பும் வேணான்னு கட் பண்ணிட்டுப் போயிட்டே இருப்பேன்!

உன் வசதி எப்படி?”

“ரொம்ப வசதியா போச்சு. போடா… போயிடு! இந்தப்பக்கம் திரும்ப வந்துறாத!”

“ஓஹோ… என்னைய வெரட்டி விட்டிட்டு நீ நிம்மதியா இருப்ப?”

“நிம்மதியா இருந்திருவியா நீயின்னு மிரட்டுற? ஒரு போலீஸ ஒரு பொறுக்கி மிரட்றான்!”

“இப்ப இந்தப் பொறுக்கியும் ஒரு போலீஸ்னு மறந்திட்டு என்னைய காலைல இருந்து கும்மி எடுத்திட்டு… பேச்சைப் பாருடீ!”

“நீ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிறவனாட்டமா இருக்க?”

“என் பாடி அப்படி! ஆனா அடிச்சா ஒன்னரை டன்னு வெயிட்டுடா!”

“பெரிய சிங்கம் சூர்யா இவரு…”

“இப்ப தானே டிபார்ட்மெண்ட்ல சேர்ந்திருக்கேன். போக போகத் தெரியும் நான் யாருன்னு!”

“நீ யாருன்னு எனக்கொன்னும் காட்ட வேண்டியதில்ல… முதல்ல உங்க வீட்ல சொல்லு. தேவையில்லாம அவங்கட்ட பேச்சு வாங்கிட்டிருக்க. சிவா மாமாவுக்குத் தெரியுமா? சுதாவுக்குச் சொல்லிட்ட?”

“ம்ம்… பெரிப்பாக்கு எல்லாம் தெரியும். சுதா ஸ்மெல் பண்ணிட்டா. அவ புருசன்ட்ட சொல்லக்கூடாதுன்னு மிரட்டிருக்கேன். பாவத்த… அம்மணி முழிப் பிதுங்கியே சாவுது!”

“அவ கஷ்டம் உனக்கு ரசிக்குது! போடணும்டா உன்ன!”

“போட்ருவ? எங்க போடு!” திமிராக சுரேன் கேட்டு நிற்க…

“இன்னைக்கி நீ வாங்கின வரைக்கும் பத்தலையா? எகிறிட்டு வர்றான்…” மாறன் சலித்துக்கொள்ள…

“முடில இல்ல? எம் மச்சான் நல்லவன் டா!” மாறன் சுதாரிக்கும் முன் சுரேன் அவனைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் பசக் பசக்கென கிஸ்ஸடித்தான்.

“ச்சீய்… உன் நிலாவ கட்டிப்பிடி பக்கி! சீக்கிரமா மத்தவங்களுக்கும் சொல்லிட்டு… சட்டுபுட்டுன்னு ஒரு கல்யாணத்த பண்ணிக்க ராசா!

உன்னால நாசமா போயிட்டிருக்க என் வாழ்க்கையும் எந்தங்கச்சி வாழ்க்கையும் பொழைக்கட்டும். எப்ப வீட்ல சொல்லப் போற?”

“என்னைப் புரிஞ்சிக்காதவங்களுக்கு நானெதுக்குடா விளக்கம் கொடுத்திட்டிருக்கணும்?”

“நீ உன் நிலாவ வீட்ல விளக்கேத்தி வைக்கக் கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வரணும்னா வேற என்ன ஆப்ஷன் இருக்கு சுரேன்?”

“ஒவ்வொருத்தருக்கும் விம் இல்ல சபீனா போட்டிட்டிருக்க என்னால ஆகாது மாறா…”

“அப்ப என்ன பண்ணுறதா இருக்கீங்க மிஸ்டர். மொள்ளமாரி?”

“ம்ம்… ‘ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கிடலாமா’ பாடிற வேண்டியது தான்!”

டேபிளில் தாளம் போட்டபடி பாடிய சுரேன் கண்ணடித்துச் சிரிக்க… ஒரே கும்பிடாகப் போட்டான் மாறன்.

அவனுக்குப் பேதி ஆகும் போல… பீதியில் மிரண்டு போனவனாக,

“என்னைய ஆளை விட்ருடா சாமி! உனக்குப் புண்ணியமா போகும். எனக்குப் பொண்ணு பார்க்கவும் வேணாம்… கல்யாணம் வைக்கவும் வேணாம்!

ஒரு மொள்ளமாரிய கூட்டுச் சேர்த்துக்கிட்டதுக்கு எனக்கு ஆப்புடீ! சிக்ஸ்டி தொட்டாலும் செக்ஸ் என்ன… கட்டிப்பிடிச்சி ஒரு உம்மா தர பொண்டாட்டி இல்லாம அலைய போறேன்!”

மாறன் கதி கலங்கிப் போய்ச் சொல்ல…

கலகலவெனச் சிரித்தான் சுரேன்.

“இப்ப சொல்றது தான் மச்சான்… நல்லாக் கேட்டுக்கோ. நீ கன்னி கழியாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!”

“அடச்சீ எந்திரி சைபர் கிரைம் டீம் பார்க்கப் போகணும். உன்னையும் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லியிருக்காரு டிஎஸ்பி. வா போகலாம்.”

அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் விட்டு இருவரும் ஜீப்பில் ஏறிக் கிளம்பினர்.

“போற வழியிலே அந்தப் புரோட்டா கடைல நிறுத்து டா. அங்க விட்டிட்டு வந்த என் பைக்கை எடுக்கணும். நான் அதுல வர்றேன். சைபர் கிரைம் ஆஃபீஸ் வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போகணும்.” சுரேன் சொல்ல…

“முதல்ல அதைச் செய்யி. ஸ்ஸ் எத்தனை வாட்டி உங்க வீட்ல இருந்து கூப்பிடுவாங்க. நீ எங்க இருக்க என்னாச்சின்னு கேட்டு ஆளாளுக்கு ஃபோன் பண்ணி என்னைய டார்சர் பண்ணிட்டாங்க.

என் பர்சனல் ஃபோன் ஆஃப் பண்ணி வச்சிட்டேன். உன்னால இன்னைக்கி நா எங்கம்மாட்ட கூடப் பேசலை!” மாறன் புகார் படிக்க…

“சின்ன பாப்பா நீ… அம்மா கூடப் பேசலையாம்… குறை படிக்கிறான். நீயும் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வா.” சுரேன் கூப்பிட செய்ய…

“ஏன்டா என்னைய கோர்த்துவிட பார்க்கிற?” மாறனுக்குப் பயந்து வர…

அவன் பயத்தைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான் சுரேன்.

“உன் உடன் பிறவா ஒத்த சகோதரி சுதா இருக்காள்ல. அவ நேத்து உடம்புக்குச் சரியில்லாம இருந்தா.”

“என்ன ஆச்சு சுதாக்கு?” உடனே மாறன் அக்கறையாக வினவ…

“மயக்கம் போட்டு விழுந்திட்டா.” சுரேன் சொல்லவும்,

“என்னது? நேத்தே எனக்கு எதுக்குச் சொல்லலை? சாவகாசமா சொல்றான் பாரு.” மாறன் சுரேனைத் திட்ட செய்ய…

“சொல்ற நிலைமைலேயாடா நான் இருந்தேன்? அதான் இப்ப சொல்லிட்டேன்ல. ஒரு எட்டு வந்து பார்த்திட்டுப் போ! நீ வர்ற!” பிடிவாதமாக அதிகாரக் குரலில் சுரேன் முடிக்க…

“சரி சரி வர்றேன் டா.” சுரேனிடம் சரி சொன்ன மாறனுக்கு உள்ளுக்குள்ளே சந்தேகமாக இருந்தது.

‘என்னைய பலி ஆடு மாதிரி கூட வரச் சொல்றானே?’