என் சித்தம் சித்திரமே – 4

என் சித்தம் சித்திரமே 04

ஜின்னி வவ் வவ்வெனக் குரைக்க, அந்தச் சத்தத்தில் வெண்ணிலா விழித்துக்கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த காந்தம்மாளைக் காணவில்லை என்றதும் அவளுக்குச் சற்று மனது நிம்மதியடைந்தது. 

காலையிலேயே அவரின் பாட்டைக் கேட்க வேண்டாமில்லையா? நீலவேணி வெளிப்படையாகக் கோபத்தைக் காட்டுவார். காந்தம் அதையே சாந்தமாக இனிக்கப் பேசி வைப்பார். 

கத்தினால் பதிலுக்குக் கத்தலாம். சத்தம் போடலாம். காந்தம் கமுக்கமான ஆள். கூட்டணி வைப்பது போல வைத்துவிட்டு, எதிரணிக்கு ஹை-ஃபைவ் கொடுத்துக்கொண்டு ஆதாயமாக வேலை செய்வார். 

அவருடைய புத்தி பேத்திக்கு நன்றாகத் தெரியும். கேடி கிள்ளாடி காந்தம்மாளுக்கு ஏத்த பேத்தி வெண்ணிலாவும் அவருக்குச் சளைத்தவளில்லை. 

நேற்றுக் கேட்டதே இன்னும் தலையை வலிக்கச் செய்ய… வெண்ணிலா நெற்றிப்பொட்டைத் தேய்த்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள். 

ராகேஷை வீட்டினர் திட்டுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் தப்பானவனா? நெஞ்சம் அவனுக்காக அடித்துக்கொண்டது. 

காதலிப்பது ஒரு குத்தமா? யார் தான் வீட்டில் சொல்லிட்டுக் காதலிக்கிறார்கள்? 

யாரோ அவளின் தோளைத் தட்ட, வெண்ணிலா யோசனை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள். அவளின் அம்மா நீலவேணி நின்றிருந்தார். 

“தூங்கி எந்திருச்சதும் வெளிய வர வேண்டியது தானே? இங்க உட்கார்ந்திட்டு என்னடி யோசனை?” 

“ம்ப்ச்…” 

“என்ன ச்சுங்கிற? சொல்லப் போனா ஞாயத்துக்கு நானும் உங்க அப்பாவும் சலிச்சிக்கணும். உன்னைப் பெத்து, பொண்ணே மணியேன்னு வளர்த்து விட்டிருக்கோமில்ல? அதுக்குப் பிரதிபலனா நல்லா எங்க முகத்துல கரியப் பூசிட்டடி!” 

அவருடைய பேச்சில் சோளப்பொரி வெடிக்க… 

சத்தமாக, “ஆரம்பிச்சிட்டியா? இதுக்குப் பயந்திட்டுத்தான் ரூம்லயே உட்கார்ந்திருக்கேன்…” என்றவள், 

“பெத்து வளர்த்ததைச் சொல்லிக் காட்றாங்க. என்னமோ நானே வந்து என்னைப் பெத்துப் போட்டு வளர்த்து விடு சொல்லிக் கெஞ்சுன மாதிரி!” என முணு முணுத்தாள் வெண்ணிலா. 

பில்லோவை தட்டிப் போட்டுவிட்டு, பெட்ஷீட்டை உதறிய நீலா, “என்னடி முணு முணுக்கிற? தப்புச் செஞ்சா பேசத்தான் செய்வாங்க… ஒரு தப்புச் செய்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்!” எனப் பேச… 

“சும்மா தப்பு தப்புங்கிற! லவ் பண்றது தப்பா?” நிமிர்ந்து கேட்டாள் வெண்ணிலா. 

“தப்புத்தான்டி… தப்புத்தான்! உன்னைய வேலைக்கி அனுப்புனமா இல்லை கண்டவனோட ஊர் சுத்த அனுப்புனமா?” 

“நானொன்னும் கண்டவனோட போயி ஊர் சுத்தல. என் லவ்வர் கூடத்தான் வெளிய போனேன்!”

“நேத்து வாங்குனது பத்தல போல… நெஞ்ச நிமிர்த்திட்டு வர்ற பாரு… எதுக்கும் துணிஞ்சவளாட்டம்!” 

மகளை அடிக்கத் தோன்றினாலும் நீலா தன்னை அடக்கிக்கொண்டார். இப்போது அடிச்சாலும் பிரயோஜனம் இல்லை. எந்தச் சொல்லும் மகளுக்குப் புத்தியில் ஏறப்போவதில்லை. 

அவள் ஒரு மாய உணர்வுக்குள் இருக்கிறாள். தான் தணிந்து போக முடிவு செய்தார் நீலா. விரைவில் ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்து அவளைத் தாட்டிவிட வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். 

கெட்டதிலும் நல்லதாக நேற்றுத் தங்கள் கண்ணில் பட்டிருக்கின்றனர். 

“அவனைப் பார்த்தா சரியில்லை பெரிம்மா. நிலாவ இனி அங்க வேலைக்கு அனுப்பாதீங்க. லவ் பண்ணக் கூடாது சொல்ல மாட்டேன். அவன் சரியில்லை… வேண்டாம்! 

நாம சுதாரிச்சிக்கணும் பெரிப்பா. அப்பாவ நாளைக்கி அனுப்பி வைக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. இத்தனை பேரு இருக்கோம்ல. பார்த்துக்கலாம்.” 

நிலாவைவிட ஒரு வயது இளையவனான ஆதி தைரியம் சொல்லிச் சென்றிருந்தான். அவன் வயதுக்கு எத்தனை பொறுப்பு என்று மனோகர் நீலா இருவருமே வியப்பில் இருந்தனர். 

மனோகரின் தம்பி மகன் ஆதி. ஒரு விசேஷத்திற்காக மனோகரின் ஊருக்கு காந்தம்மாளைக் கூப்பிட்டுக்கொண்டு புருசனும் பொண்டாட்டியும் போயிருக்க, அவர்களைத் தன் காரில் கொண்டு வந்து இங்கே வீட்டில் இறக்கிவிட வந்திருந்தான் ஆதி. 

வழியில் ஒரு காரில் ராகேஷுடன் பயணித்த அக்கா வெண்ணிலா அவன் கண்ணில் விழுந்திருக்க, காரை திருப்பிக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்திருந்தான். 

என்னவென்று புரியாமல் மனோகர் தம்பி மகனை விசாரிக்க, 

“ஒன்னுமில்ல பெரிப்பா. கொஞ்சம் பொறுங்க. ஒரு வேலை. முடிச்சிட்டுப் போயிரலாம்.” உணர்வுகளை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாகச் சொன்னான். 

நல்லவேளையாகப் பெண்கள் இருவரும் அலுப்பில் உறங்கியிருந்தனர். மனோகரும் கூட அரைத் தூக்கத்தில் இருந்தார். அதுவே ஆதிக்கு நல்லதாயிற்று. 

ராகேஷ் ஒரு தோப்பிற்குள் காரை திருப்பவும், புருவம் சுருங்கக் கோபத்துடனே ஆதியும் வளைவில் ஒடித்துப் பின் தொடர்ந்தான். 

அந்தத் தோப்பைப் பற்றி இளைஞர்களுக்குத் தெரியும். மெக்கானிக்கல் முடித்துவிட்டு வொர்க்‌ஷாப் வைத்திருக்கும் ஆதிக்குப் புதிது என்றாலும் கடைக்கு வந்து போகிறவர்களின் பேச்சில் தெரிந்திருந்தது. 

பல விசயங்கள் அங்கே அரங்கேறும். குவாட்டருடன் மேட்டரும்… இன்னும் பல வஸ்துகள் கமுக்கமாகக் கைமாறும். 

யாருடன் வெண்ணிலா இந்த மாதிரி இடத்திற்கு வந்திருக்கிறாள்? ஆதிக்குத் திக்கென்று இருந்தது. எப்படியோ அவளுக்கு எந்தப் பாதிப்புமின்றி அங்கிருந்து அப்போதைக்குக் கூப்பிட்டுக்கொண்டு வந்திருந்தான் ஆதி. 

எகிறிக்கொண்டு வந்த ராகேஷை மெல்லியக் குரலில் அதட்டி, குனிந்து போலீஸ் பெயரைச் சொல்லவும் அவன் பம்மிவிட, இது எதுவும் வெண்ணிலாவுக்குத் தெரியாது. 

சாதாரணமாக, ‘லவ்வருடன் அவுட்டிங் போன இடத்தில் உறவுகளின் கண்ணில் பட்டுவிட்டேன்!’ என்றே நினைத்தாள். 

வெண்ணிலாவுக்கு மட்டுமில்லை, மனோகர் நீலாவுக்கும் கூட ராகேஷ் எந்தளவு இறங்கி இருந்தான் என்பதை ஆதி சொல்லவில்லை. 

அவர்கள் பயந்து போய் வேறு மாதிரி ஏதேனும் நடந்துவிட்டால்? மனோகரைச் சமாளிப்பதே கஷ்டம். 

ஆதியின் பக்குவம் வெண்ணிலாவை எந்தச் சிக்கலும் இல்லாமல் காப்பாற்றிவிட்டது. வெண்ணிலாவின் குணத்தைப் பற்றி அறிந்திருந்த ஆதி, அவள் இலகுவானதும் பேச எண்ணிக் கிளம்பிப் போயிருந்தான். 

“நிலா எந்திரி. போயி பல்லு தேய்ச்சி முகத்தைக் கழுவிட்டு வா!” நீலா மகளை விரட்ட… 

“வெளிய போனா அடுத்து உங்கம்மா பிடிச்சிக்கும்.” 

வெண்ணிலா சிணுங்க… உடனே நீலா இருந்த கடுப்பில், “அதுக்காக இப்படி ரூம்ல உட்கார்ந்துக்கிறதா? அப்புறம் திங்கிறதும் பேள்றதும் எப்படி?” என…

“அம்மாஆ!” வெண்ணிலா அருவருப்பில் முகம் சுளித்துவிட… 

“அருவருப்பா இருக்கா நிலா? முகத்தை இப்ப சுளிக்கிறவ, கண்டவனோட கார்ல பவனி வர்றப்ப யோசிச்சிருக்கணும்! எந்திரிடி… மெத்தை விரிப்ப சரி பண்ணணும்.” 

நீலா மகள் மீதிருந்த கடுப்பைப் பேச்சில் காட்டினார். 

“இப்ப ரொம்ப முக்கியம்ம்ம்!” எரிச்சலுடன் வெண்ணிலா தரையில் காலை உதைத்து எந்திரிக்க… 

“முக்கியந்தான்டி! நேரத்தோட வீட்ட பெருக்கிட்டுப் போயி ஜின்னிக்கு எலும்பு சூப்பு வச்சித் தரணும்.” 

நீலா சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, 

“என்ன நக்கலா?” அம்மாவை முறைத்த வெண்ணிலா அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. பின்கட்டுக்கு நடையைக் கட்டினாள். பாத்ரூம் செல்ல. 

நாள் தப்பினாலும் அவ்வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கறி எடுப்பது தப்பாது! 

ஞாயிறு ஆனாலே போதும்… 

மனோகர் வெள்ளென எழுந்து முதல் ஆளாகக் கசாப்புக்கடை வரிசையில் நிற்பார். மகளுக்கு அப்படியே ஃப்ரெஷ் கறியை எடுத்திட்டு வர வேண்டும். 

அதற்காகவே அன்று தன் காலை மெல்லோட்டத்தை இரத்துச் செய்துவிடுவார். 

பின் காலையில் எலும்பு சூப், மதியத்திற்கு கறிக்குழம்பு, இரத்தப் பொரியல், ஈரல் வறுவல், மட்டன் சுக்கா… இப்படி இரண்டு வகையை மாற்றி மாற்றி மெனு போட்டு மனைவி நீலாவைச் சமைக்கச் சொல்வார். 

இத்துடன் எப்பவாச்சும் பிரியாணி என வீடு அமர்க்களப்படும். 

மகளுக்குப் பிடித்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் வேறு வாங்கி வைத்திருப்பார். சாப்பாட்டுக்குப் பின்னர் ஐஸ் க்ரீம். 

ஞாயிறு மாலை சினிமா, பார்க், ஷாப்பிங் மால் என்று ஒரு அவுட்டிங் குடும்பமாக… எதுவும் மகளின் விருப்பம் தான்.

மனோகருக்கு மகள் தான் அவருடைய உயிர் நாடி. வெண்ணிலாவுக்கும் அது நன்றாகத் தெரியும். 

அதான் அவள் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தும், “ப்பா எனக்கு இந்த கம்ப்யூட்டர், ஐடி, என்ஜினியர்க்கெல்லாம் படிக்க வேணாம். ஆர்ட்ஸ் எடுத்துக்கிறேன்.” என்று சொல்ல, 

“ஏன் டா வேணாம்ங்கிற? ஒரு தொழிற்கல்வின்னு இருந்தா வருங்காலத்துக்கு நல்லது. என்ஜினியர்க்கு படிக்க நாட்டமில்லைன்னா மருத்துவ சம்பந்தமா உள்ள படிப்பு எது உனக்குத் தோதா வரும்னு பார்க்குறயா?” என்றிருந்தார் மனோகர் மகள் மீது அக்கறை கொண்டு.

“ம்கூ கூம்! பி.ஏ. இங்க்ளிஷ் சேர்ந்துக்கறேன்.” தன் பிடியில் உறுதியாக நின்றாள் வெண்ணிலா. 

அதற்கு மேல் அவர் மகளை வற்புறுத்தவில்லை. அவள் விருப்பம் போலப் போய் ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டார். 

மனதில், ‘நல்லவேளை வரலாறு, சமூகவியல், மானுடவியல் படிக்கணும்னு சொல்லலை. அப்புறம் படிச்ச இன்ஜினியர் டாக்டர் மாப்பிள்ளைய வரன் பார்க்கக் கஷ்டமா போயிரும்!’ என நினைத்துச் சற்றேனும் நிம்மதியடைந்திருந்தார். 

மனோகர் அதிகம் படிக்கவில்லை. ஆனால், விசயம் அறிந்தவர். வெளியே போக வர இருப்பவருக்குக் கேள்வி ஞானம் உண்டு. பெண்களின் படிப்பைப் பற்றிய முக்கியத்துவம் தெரிந்தது. 

தான் வீட்டோடு மாப்பிள்ளையாகி விட்டவர் வேறு. அதில் அவருடைய அனுபவமும் சேர்ந்துகொண்டது. பெண் புகுந்த வீடு சென்றால், அவளுக்கென்று ஒரு சுயம் வேண்டும். 

காசு பணம் சொத்தெல்லாம் ஓரளவு தான். எல்லா இடத்தையும் சொத்துப்பத்து நிறைத்துவிடாது. அத்துடன் படிப்பு இருந்தால் தான் உலகத்தில் நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதைப் புரிந்தவர். 

தன்னால் இயன்றவரை மகளுக்கு அதைச் சொல்லவும் செய்தார். சில இள வயதினருக்குரிய அலட்சியம் அவளுக்குமே உண்டு. 

பெற்றவர் சொன்னதை ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே பறக்கவிட்டாள் வெண்ணிலா. 

அவள் விருப்பம் போல் கலைக்கல்லூரியில் சேர்ந்தவள் அங்கேயாவது நிலையாக இருந்து படித்தாளா? அதுவும் கிடையாது! 

முதல் வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்த வெண்ணிலா சில வாரங்களே கல்லூரிக்குச் சென்றிருப்பாள். 

ஒரு நாள் பெற்றோருக்கு முன்னால் வந்து, “இனி மேல் நான் காலேஜுக்கு போகலை!” அறிவித்தாள். 

மனோகர் பொறுமையாக, “என்னம்மா சொல்ற? என்ன நடந்திச்சு?” என்று கேட்க, 

“ம்ப்ச்… போகப் பிடிக்கலைப்பா அவ்வளவு தான்!” என அவள் அசால்டாக முடிக்கவும், 

“என்னடி இது? திடீர்ன்னு பெரிய குண்டை மண்டையில் போட்டதுமில்லாம, எதுக்கு இந்த முடிவுன்னு சொல்ல மாட்டியா?” நீலவேணி கோபமாக மகளைப் பிடித்து உலுக்கினார். 

“பிடிக்கல. போகல சொல்றேன். விடுவீங்களா!” வெண்ணிலா எரிச்சல் படவும், 

நீலா மகளை வெளுக்க விளக்கமாறைத் தூக்கியே விட, மனோகரும் காந்தம்மாளும் அவரைப் பிடித்துத் தடுத்துவிட்டனர். 

அன்றைக்கே மகளை வெளுத்திருந்தால் இன்று இப்படித் தெனாவெட்டாக நடந்துகொள்ள மாட்டாள் என்று நீலா நினைத்தார். 

அன்று மகள் வழிக்கே சென்று, எப்படியோ அவளை கரெஸ்ஸில் மீதிப் படிப்பை முடிக்கும்படி பார்த்துக்கொண்டார் மனோகர். வேறு வழியிருக்கவில்லை அவரிடம்.

இதற்கிடையில் செல்வியால் தான் வெண்ணிலா ஞானமணி ஃபர்னிச்சர் ஸ்டோரில் போய்ச் சேர்ந்தாள். 

வீட்டில் பொழுது போகவில்லை என்று புகார் படித்துப் புலம்பியவளுக்கு நல்லது செய்ய நினைத்தது இப்போது வினையில் முடிந்துவிட, நேற்று மாலையே காந்தம்மாள் செல்வியை ஃபோனில் சத்தம் போட்டிருந்தார். 

மனைவியால் துரையப்பனுக்கும் ஏச்சு. காந்தம்மாள் வெண்ணிலாவை இன்ன இடத்தில் பார்த்துக் கூப்பிட்டு வந்ததாகச் சொல்லியிருந்தார். 

தங்கள் பக்கத்து வீட்டு அக்காவின் கணவருக்கு அவசரமாய் மருத்துவ உதவி தேவைப்பட, அந்த இரவு நேரத்தில் துரையப்பனும் செல்வியும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். 

அவர்கள் ராகேஷைப் பார்க்கவும் துரையப்பனுக்கு இருந்த கோபத்தில் தான் செல்வி அறை வாங்கியது. 

காந்தம்மாள் சொன்னதை அப்படியே செல்வி சுரேனுக்குப் பகிர… 

அவனுக்கும் அந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவும் ராகேஷ் மேல் அவ்வளவு கோபமும் ஆவேசமும்!

காலையில் எழுந்து ரெஃப்ரஷ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தாள் சுதா. வீடே இறுக்கமாகத் தோற்றமளித்தது. 

ஹாலை கடந்து கிட்சன் செல்ல வேண்டும். அங்கே மாமனார் வெடு வெடுவென இருந்தார். மாமியார் முகம் சரியில்லாமல் டென்ஷனில் இருந்தது. 

சுதா சற்றுத் தயங்கி நிற்க… அவளைக் கவனித்த சதாசிவம், 

“நீ ஏம்மா நின்னுட்டிருக்க. உடம்புக்கு இப்ப தேவலையா? உன் வயித்த பாரு போ. வேளைக்கு நல்லாச் சாப்பிட்டு ஆரோக்கியமா இரு. கண்ட பயலுக்குப் பார்த்திட்டு உடம்பைக் கெடுத்துக்காத!” என்றார். 

‘அப்ப கோவம் சுரேன் மேலயா? ஆத்தாடி இப்ப என்ன புதுசா இழுத்து வச்சிருக்கான்? ராத்திரி போனவன் வீட்டுக்கு வந்தானா இல்லையா?’ 

கேள்விகளுடன் நின்றவள் எதையும் வெளியே காட்டவில்லை. யமுனா ஏதோ ஃபோனை நோண்டிக்கொண்டிருக்க… அதை ஓரக்கண்ணால் பார்த்து… சதாசிவத்திற்கு தலையை மட்டும் ஆட்டி வைத்து கிட்சன் சென்றாள். 

அங்கே பெரிய மாமியார் எதையோ சமைத்துக்கொண்டிருக்க, தாளிப்பு வாசனையில் சுதாவுக்குக் குமட்டிக்கொண்டு வர, பின் கட்டுக்குச் சென்று நின்றுகொண்டாள். 

நளினி மருமகளின் அரவம் கேட்டு என்னவென்று போய்ப் பார்க்க, அவள் “எப்படியோ வருதுத்த” என, 

“அம்மாடி இந்த வெந்நிய குடிச்சிட்டு இப்படிக் காத்தாட உட்காரு. பால் விட்டு எடுத்திட்டு வர்றேன். பால்ல பூஸ்ட் கலக்கலாமில்ல?” அக்கறையாக நளினி சுதாவிடம் கேட்க…

“காபி தாங்கத்த…” சுதா முகத்தைச் சுருக்க… 

“ஆத்தாடி! காபியா? சுந்தருக்குத் தெரிஞ்சா பக்கம் பக்கமா பாடம் எடுக்கக் கெளம்பி வருவானே! நேத்துச் சுரேன் ஒரு மூச்சு ஜீனிக்குப் பேசுனான். அப்பாஆ! இந்த ரெண்டு பசங்களோட நமக்குத் தள்ளிட்டு வருது!” என்றார். 

நளினியின் பேச்சும் பாவனையும் பார்த்து சுதாவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வர, கல கலவெனச் சிரித்தாள். 

அவள் சிரிப்பு நளினிக்கு ஆசுவாசத்தைத் தந்து காலையிலிருந்து சுற்றிச் சூழ்ந்திருந்த இறுக்கத்தைத் தளர்த்தியது. 

சுதாவின் சிரிப்பின் அழகில் கவரப்பட்டவர், இரண்டு கைகளையும் அவள் கன்னத்தில் வைத்து வழித்து, திருஷ்டி கழித்தார். 

“இரு வர்றேன்.” சின்னப்பிள்ளையாக மாறி உள்ளே ஓடினார். திரும்பி வந்தவர் கையில் ஆவி பறக்கும் காபி வீற்றிருந்தது. 

“ஆஹா…” நளினி நீட்டிய காபியை வாங்கிய சுதா, ஆழ மூச்செடுத்து அதன் வாசனையை உள்வாங்கினாள். 

“முதல்ல குடி சுதா. உம் புருசன் வந்துறப் போறான்.” நளினி அவசரப்படுத்த… 

“சரிங்கத்த… அவர் எங்க போயிருக்காரு… சுரேன் எங்க? ராத்திரிக்கு வீடு வந்து சேர்ந்தானா இல்லையா? மாமா அத்த எதுக்கு டென்ஷனா இருக்காங்க?” 

சுதா அவரிடம் கேட்டுக்கொண்டே ஒரு வாய் தான் காபி குடித்திருப்பாள்… 

“பேஷ் பேஷ் பெரிம்மா… காபி ரொம்ப நன்னாயிருக்கு!” சொன்னது சுந்தர். சுதா கையிலிருந்த காபி அவன் கைக்கு இடம் மாறியிருந்தது. 

இரு பெண்களும் திரு திருக்க… சுந்தர் இருவரையும் முறைத்தான். அவன் பேச ஆரம்பிக்கும் முன்னர் சுதா சுதாரித்துவிட்டாள். 

“குட் மார்னிங் டியர்!” விரிந்த புன்னகையுடன் கணவனைப் பார்த்தவள், நளினிக்கு இந்தப்பக்கம் சைகை காட்ட, அவர் ‘அப்பாடி!’ என நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து விலகப் போக… 

“பார்த்திட்டேன்டி! சைகை காட்டின இந்த விரலை என்ன பண்ண… உடைச்சிறவா?” மனைவியிடம் கேட்ட சுந்தர், 

“எஸ்ஸாகிக்கங்க பெரிம்மா… போங்க!” என நளினியிடம் சொன்னான். 

நளினியோ என்ன எதுவுமே சொல்லாமல் போகச் சொல்கிறான் என்று நம்பாமல் பார்க்க… 

“என் பொண்டாட்டி சப்போர்ட் பலமா இருக்கே! அதான் ஒன்னும் சொல்லலை. உங்களை அப்புறம் பேசிக்கிறேன். முதல்ல இவளைக் கவனிக்கணும்!” 

மிரட்டலாக முடித்தான். 

“டேய் டேய் அவளை என்ன செய்யப் போற? அவளையும் விட்டிடு சுந்தர். கொழந்த பிறக்குற வரைக்கும் காபிய வாயில இனி ஊத்த மாட்டா! என்ன சுதா… சொல்லும்மா…” 

மருமகளுக்காக வக்காலத்து வாங்கினார் நளினி. 

“அவ வாயில ஊத்திக்க வேணாம் பெரிம்மா… இப்ப என் வாய்ல ஊத்தலாம்ல?” 

சுந்தர் சொன்னது முதலில் புரியவில்லை நளினிக்கு. தயங்கி அங்கேயே நிற்க… புரிந்த வினாடியில் சிரிப்புடன், “போக்கிரி!” என்றபடி வீட்டிற்குள்ளே போனார். 

“போக்கிரியா? நானா? சரி தான். அப்ப எந்தொம்பி என்னவாம்?” 

“அது தான் நீங்களே சொல்லிட்டீங்களே!” 

“என்னன்னு?” 

“போக்கிரியோட தொம்பி் தப்பியா பிறந்திருக்கப் போறான்? அவனும் போக்கிரி தான்.” 

“பார்றா நட்ப டேமேஜ் பண்ணுறாள்! எங்கடி உன் நண்பனைக் காணோம்?” 

“என்னைக் கேட்டா? நானே இப்ப தான் எந்திரிச்சி வர்றேன்.” 

“அதானே உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்!” 

“ஆரம்பிச்சிட்டாங்கய்யா… முதல்ல காபிய குடிங்க. என்னையும் குடிக்க விடாம பிடிங்கிட்டு!” குறை படித்தாள். 

“நீயே குடிக்க வையி!” அவள் கை பிடித்து அருகில் உட்கார்த்தி இவனும் நெருங்கி உட்கார…

“ரொமான்ஸு?” புருவத்தை உயர்த்திய சுதா உதட்டையும் சுழிக்க… 

“அப்படியே நினைச்சிக்க. இப்ப குடிக்க வைடி!” 

அவள் கையுடன் கப்பை பிடிக்கச் செய்து காபியை உறிஞ்சி இரசித்துக் குடித்தான். 

“ஆறிப் போன காபிய இப்படி ரசனையா குடிக்கிறது நீங்களாத்தான் இருக்கும்.” நொடித்தாள் சுதா. 

“பொண்டாட்டி குடிக்க வச்சா ரொம்ப ருசிக்கும்.” 

அவள் கையை இழுத்து உள்ளங்கையில் முத்தம் வைத்தான் சுந்தர். 

“விடுங்க…” சுதா சங்கோஜமாக கையை இழுத்துக்கொள்ள முயல… விடாமல் ஒவ்வொரு விரலாகப் பிடித்து முத்தம் வைத்து முடித்தான். 

சுதாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்துவிட, அதைக் கவனித்த சுந்தர் ஒரு விரலால் முகத்தில் கோடிழுத்து அவள் உதட்டில் கொண்டு வந்து நிறுத்தி அங்கே ஓர் அழுத்தம் கொடுத்தான். 

“வெட்டவெளியில் 

சிவப்பு ரோஜா ஒன்னு 

வெட்கப்படுது!” 

அவன் கவிதை சொல்ல, சுதா இன்னுமே சிவந்து போனாள். 

சில நிமிடங்களில் இருவரும் வீட்டினுள்ளே போனார்கள். 

தாயும் தந்தையும் எதையோ சீரியசாக பேசிக்கொண்டிருக்க, “என்னப்பா… என்ன விசயம்?” விசாரித்தபடி சுந்தர் அவர்களருகே அமர்ந்தான். 

சுதா இடையிடாமல் கிட்சன் சென்றாள். அவளுக்கு நளினி் இம்முறை பால் விட்டு மதர்ஸ் ஹார்லிக்ஸ் கலக்கியே கையில் கொடுத்துவிட்டார். 

மேடையில் சாய்ந்து நின்று பாலைக் குடித்த சுதா, “என்னங்கத்த ஆச்சி? அத்தையும் மாமாவும் ஒரு மாதிரி இருக்காங்க…” எனக் கேட்டு நிற்க… 

நளினி ஒரு பெருமூச்சுடன் முந்தானையால் முகத்தின் வேர்வையைத் துடைத்துக்கொண்டார். 

காலை டிபெனுக்காக செய்தவற்றை டேபிளில் எடுத்து வைத்தபடி, “எல்லாம் சின்னவன் பேச்சுத்தான் ஓடுது.” என்றார். 

“ராத்திரி வீட்டுக்கு வரலையா அவன்?” 

“வந்திருந்தாத்தான் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே.” 

“என்னத்த சீரியஸான விசயமா?” 

“சாதாரணம் தான்னு எடுத்துக்கிட்டுப் போகாம சீரியஸ்னு நினைச்சு யமுனாவும் கொழுந்தனும் வறுத்தெடுத்திட்டு இருக்காங்க.” 

“சரி நீங்க என்ன விசயம் சொல்லுங்க?” 

“நீ பதட்டப்படுவன்னு தான் நாங்க காட்டலை.” 

“அவருக்குத் தெரியாதா விசயம்? என்னன்னு முதல்ல சொல்லுங்க நீங்க? என்ன காட்டலை? நான் இப்ப நல்லார்க்கேன். டென்ஷன் ஆகலை.” 

தான் நிதானமாக இருக்கிற மாதிரி சுதா காட்டிக்கொண்டாள்.

உள்ளுக்குள்ளே என்னவோ ஏதோவென்ற பதட்டம் இருக்கத்தான் செய்தது. 

“அது வந்தும்மா…” நளினி கையைப் பிசைந்தபடி இழுக்க… 

“சுதா…” சுந்தர் குரல் கொடுத்தான். 

“போம்மா. அவனுக்கும் இப்ப விசயம் தெரிஞ்சிருக்கும். காலைல ஏதோ மீட்டிங்னு போனவன் இப்பத்தானே வர்றான்.” 

நளினி பேசினதை முழுதாகக் கேட்டாளா தெரியவில்லை. சுந்தர் அருகில் போய் நின்றாள். 

“இந்தா பாரு!”

“என்னங்க?” 

“இப்படி உட்காரு.” அவள் அமர்ந்ததும் ஃபோனில் வந்திருந்த வாட்ஸ் அப் வீடியோவை ஓடவிட்டான். 

“சுரேனா…?” கண்கள் தெறிக்கப் பார்த்தவள், அது முடிந்தும் அமைதியாக இருக்க… 

“என்னடி?” 

“என்னங்க?” கணவனைப் புரியாமல் சுதா பார்க்க… 

“பாரு எப்படி ரௌடி மாதிரி அடிக்கிறான்னு. அடிதடி, ஜெயில்… இன்னும் என்ன எழவ கூட்டப் போறானோ உன் பிரண்டு.” 

“எனக்கு பிரண்டா ஆகுறதுக்கு முன்னாடியே சுரேன் உங்களுக்குத் தம்பி!” சுதா குரல் உயர்த்திப் பேசிவிட… 

அவளுக்குக் கோபத்திலும் பதட்டத்திலும் வேர்த்து ஊத்தி மூச்சு வாங்கியது. 

சுந்தர் மனைவியின் நிலையைக் கருத்தில் கொண்டு சற்றுத் தணிந்தான். அவளுக்குப் பருக ஒரு தண்ணீர் பாட்டிலைத் தந்துவிட்டு, 

“நான் ஃபோன் பண்ணா எடுக்கலை. அப்பா, அம்மா கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்ல. நீ பேசு சுதா. உன் ஃபோன்ல கூப்பிடு. ப்ளீஸ்!” என்றான்.

“முடியாது!” 

“வீம்பு பிடிக்காதடி! அவன் எங்க எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க வேணாமா?” சுந்தர் சுதாவிடம் நயந்து பேசினான். 

தன் வீட்டை இப்படி அதகளத்தில் அவஸ்தைப்பட வைத்துவிட்டு… சுரேன் இதை எதையும் அறியாமல், 

“ராஜா கைய வச்சா

அது ராங்கா போனதில்லே…” 

என்று சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தான்.