என் சித்தம் சித்திரமே – 3

என் சித்தம் சித்திரமே 03

“டேய் என்னை அடிச்சிட்ட?” ராகேஷ் ஒரு மாதிரி போஸில் நின்று குரல் உயர்த்திக் கேட்டான். குரலில் தான் தெம்பு. மற்றபடி உடம்பு மியூஸிக் இல்லாமல் டிவிஸ்ட் பண்ணியது. 

“ஒரு பொண்ணைப் பேசினா? பப்பு புவ்வா ஊட்டுவாங்களாடீ… வெண்ணெ! இந்த அடியோட நிறுத்திட்டேன்னு சந்தோஷப்படு!” 

ஒல்லியாக இருந்தாலும் பயமில்லாமல் எகிறினான் சுரேன். 

தன் முன்னால் நின்றுகொண்டிருந்த உயரமான, திரண்ட திடகாத்திரமான ராகேஷ் மேல் பாயத் தயாராக, அவனை யாரோ பிடித்துத் தடுத்தனர். 

“மச்சி அவன தூக்குடா!” ராகேஷின் நண்பன் ஒன்று ஏத்திவிட்டான். 

“ஸ்ஸ்… ஐடியா! உன் ப்ளான்படி இன்னைக்கி உன் லவ்வரை டேஸ்ட் பண்ண முடியாம போச்சே! அவளை விட்டதுக்கு இவனையாவது தூக்கிடு ராக்கி!” நண்பன் இரண்டு பரிந்துரைத்தான். 

“டேய் அசிங்கமா பேசுனீங்க…” தன்னைப் பிடித்திருந்தவர்களைத் தள்ளிவிட்டு ஆவேசமாக அவன் மேல் ஏறியே விட்டான் சுரேன். 

“சுரேனு பாரு இரத்தம்… இங்க இங்க…” தன் கிழிந்த வாயைக் காட்டிச் சிரிப்புடன் புகார் படித்தான் ராகேஷ். 

அவன் உட்கொண்டிருந்த போதை வஸ்து (Marijuana) அவனை அப்படி வித விதமாக நடத்தியது. 

சுரேன் மேல் கோபம் தான். அதை முழுதாக ராகேஷால் காட்ட முடியவில்லை. டோபமைன் ஹார்மோன் சுரபியின் தூண்டுதலால் ஆடிக்கொண்டிருந்தான்.

“நாதாரிப் பயலுகளா! அடி வாங்கியும் அடங்குறாங்களா பாரு!” சுரேன் சீறினான். 

அவனைத் தடுத்துப் பிடித்திருந்த இருவரில் சற்றுப் பெரியவராகத் தெரிந்தவர், “அவங்க எதையோ துன்னுட்டு வந்திருக்கானுவ. தன்னிலைல இல்லை. நீங்க பிரச்சனை பண்ணாம கெளம்புங்க.” என்றார். 

அவனுக்கும் அது தெரிந்தே இருந்தது. அந்த மூவரின் கண்களும் மந்தித்த தன்மையும் காட்டிக் கொடுத்திருந்தன. 

பெரியவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே போலீஸ் வாகனம் வந்து நின்றது. 

இதற்குள் கடையின் மேனேஜர் ஒருவன் ராகேஷ் அண்ட் கோ, சுரேனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்று தோற்றிருந்தான். 

போலீஸ் வரவும் முதல் ஆளாகச் சென்று அவர்களை எதிர்கொண்டு பேசினான். 

ராகேஷ் அந்தக் கடைக்கு அடிக்கடி தன் நண்பர்களுடன் வருவான். அவன் அப்படி இப்படி என்று புரோட்டா கடையில் சிலருக்குத் தெரியும். 

ஆள் பார்க்க ஹேண்ட்சம். கொஞ்சம் பசையுள்ளவன் போலத் தெரியவும் அவனுக்கு அங்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போதும் கடை மேனேஜர் அவனுக்குப் பரிந்து பேசி சுரேனை மாட்டிவிட முயன்றான். 

வந்திருந்தது துணை ஆய்வாளர் மாறன். அவனுடன் இரண்டு காவலர்களும் இருக்க… அவர்களை முதலில் உள்ளே அனுப்பி என்னவென்று விசாரிக்கச் சொன்னான். 

கடை மேனேஜரிடம், “கடை ஓனர் யாரு… நீ இங்க என்ன பண்ற?” கேட்டுக்கொண்டே ஸ்பாட்டுக்கு செல்ல… 

சுரேன் மாறனைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான். போலீஸ் பார்த்துக் கலங்கவில்லை. கால்களை ஊன்றி நின்று அழுத்தமாக மாறனைப் பார்த்தான். அவன் உதடுகளில் கூட சின்ன முறுவல் துளிர்த்தது. 

மாறன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ராகேஷ் மற்றும் அவனுடைய நண்பர்களைப் பிடித்து உட்கார வைத்திருந்த இடத்தைப் பார்த்து நடந்தான். 

அவர்களைப் பார்க்கும் போதே தெரிந்தது, சுயத்தில் இல்லையென. அவர்களைப் பிடித்து என்னவென்று விசாரிப்பது? அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றச் சொல்லி உடன் வந்த காவலர்களுக்கு உத்திரவிட்டான். 

மாறன், அவர்களுக்கு முதலுதவி மட்டுமல்ல மருத்துவ உதவியும் தேவைப்பட்டது உணர்ந்து யாருக்கோ அழைத்துப் பேச, சுரேன் அவன் முயற்சியைச் சொல்லிக் காட்டி நக்கலடித்தான். 

சுரேனின் நக்கல் மாறனைத் தொட, அவனை முதுகில் ஒன்று இறக்கி வெளியே இழுத்துப் போனான். அந்த இடத்தில் சல சலப்பு அடங்கியது. போலீஸ் வாகனமருகே மட்டும் சிறு கூட்டம். 

நள்ளிரவு பக்கம் என்பதால் கொட்டாவி விட்டபடி அவர்களிலும் சிலர் கலையத் தொடங்கினர். 

சுரேன் ராகேஷை அடிக்கத் தொடங்கியதுமே கடையில் புரோட்டாவைப் பாயாவுடன் லபக்கி கொண்டிருந்த வேற வேலை வெட்டி ஒன்றும் இல்லாத புறம்போக்கு ஒருவன் வீடியோ எடுத்திருந்தான். 

இதை சுரேன் கவனிக்கவில்லை. போலீஸுக்கும் அந்த வீடியோ பற்றித் தெரியவில்லை. 

மேனேஜர் ஓனருக்கு ஃபோன் செய்திருக்க… 

நடுத்திர வயது பொண்டாட்டியுடன் சல்லாபிக்கவும் முடியாமல், மாமனாருக்குப் பயந்து அவளைத் தள்ளி வைக்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் திணறிக்கொண்டிருப்பவன்… 

அன்று… அப்போது தான் முன்னேற முடிவு செய்திருந்த அந்த ஓனர், இப்படியென ஃபோன் வரவும் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து நின்றான். 

ஓனருக்கு உள்ளூரிலேயே இன்னும் நான்கு ஹோட்டல் இருக்க… டோப்பு, டிரக்கு, அதன் பொருட்டு அடிதடி என்று எந்தச் செய்தியும் வெளியே வந்துவிட்டால் தங்களுக்கு நல்லதில்லை என்பது தெரிந்து சுதாரித்தான். 

‘கேஸ் எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை.’ என்று கூறி மாறனிடம் தணிந்தே பேசினான். 

எதுக்கும் சம்பவத்தின் போது கடையிலிருந்த மேனேஜரை மறுநாள் காவல்நிலையத்திற்கு வரச் சொல்லி மாறன் சொல்ல, அதற்குச் சம்மதித்துவிட்டு ஓனர் ஒதுங்கிக்கொண்டான். 

“அப்புறம்…” என சுரேன் பக்கம் மாறன் திரும்ப, “சொல்லுங்க எஸ். ஐ.” சுரேன் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க… 

“உன்னை!” பல்லைக் கடித்த மாறன் சுரேனை முறைத்தான். 

சுரேன் அவன் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. நெஞ்சை நிமிர்த்தி நிற்க, “லாக்-அப்பில் வச்சி எண்ணினாத்தான் சரிப்படுவ?” என மாறன் சொல்ல… 

“எண்ணிக்கோ… எதுவும் குறையல. அப்படியே தானிருக்கு!” சுரேனின் முறைப்பே திமிர் காட்டுவதாக இருந்தது. 

அவன் கையைப் பிடித்து ஒரு முறுக்கு முறுக்கி, “உரண்ட இழுக்குறதே வேலையா போச்சி. ம்ம்… வா… வந்து ஜீப்புல ஏறுடா!” மாறன் சொல்ல… 

முன் இருக்கையில் சட்டமாக மாறன் பக்கத்திலேயே சுரேன் அமரவும், வாகனம் கிளம்பியது. 

அந்த ஏரியாவிலிருந்த ஒரு இருபத்தி நாலு மணி நேர மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, ஓட்டுனரை அங்கே ஜீப்பைவிட சொன்னான் மாறன். 

அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த ராகேஷ் எதையோ உல்லாசமாகப் பேசிக் கடுப்பைக் கிளப்ப, சுரேன் திரும்பி அவனை அடிக்கச் செய்ய… 

மாறன் சுரேனைப் பிடித்து நிறுத்த… ஜீப் ஒரு குலுங்கலுடன் மருத்துவமனையின் முன் போய் நின்றது. 

அதே மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டிருந்தனர் செல்வியும் துரையப்பனும். நிலையில்லாமல் குலுங்கிச் சிரித்த ராகேஷ் காவலரின் பிடியில் நடந்து வருவதை செல்வி பார்த்துப் பதட்டப்பட்டாள். 

மனைவியின் பதட்டத்தைக் கவனித்துவிட்டான் துரையப்பன். 

“என்ன… என்ன செல்வி?” துரையப்பன் என்னவென்று புரியாமல் சுற்றிமுற்றிப் பார்த்தான். அந்த நேரம் கூட மருத்துவமனைக்கு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. 

அதில் போலீஸ் வாகனம் தனித்துத் தெரிய, செல்வியும் அதே திசையில் பார்வை வைக்க… துரையப்பனும் அங்கே பார்த்தான். 

நண்பர்கள் மூவரையும் இரண்டு காவலர்கள் பிடித்து வரச் செய்ய… ராகேஷை யாரெனத் தெரியாததால் துரை அவர்களைப் புரியாமல் பார்க்க…

“அந்த வர்றான்ல நடுவுல, ஜீன்ஸ போட்டுக்கிட்டு, அவந்தான்…” கணவனுக்குப் பயந்தவாறே செல்வி இழுக்க…

“அவனுக்கென்ன… யாரவன்?” கூர்மையாக அவளைப் பார்த்தான். 

“நம்ம வெண்ணிலாப்புள்ள காதலிக்கிற பையன் ராக்கி… ராகேஷ்!” எனவும், பொழிச்செனக் கையை மனைவியின் கன்னத்தில் இறக்கினான். 

செல்வியின் கண்களில் பொரி பறக்க, தடுமாறி விழ இருந்தவளைப் பிடித்து நிறுத்தினான். மாலையில் தங்கள் காதுக்கு எட்டிய செய்திக்கு இது தண்டனை என்று செல்விக்கு ஓடியது. 

மருத்துவமனைக்கு வரும் போது ஆட்டோவில் வந்திருக்க… இப்போதும் வீடு திரும்ப ஆட்டோவை வழி பார்த்து நின்றனர். 

எதேர்ச்சையாகப் பக்கவாட்டில் திரும்பிய செல்வி சுரேனைப் பார்த்துவிட்டாள். அவன் போலீஸ் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

அவனிடம் என்ன விசயம் என்று கேட்க மனது பரபரத்தது செல்விக்கு. ஆனால், இருக்கும் சூழ்நிலையில் இன்னும் இழுத்து வைக்கத் தயாராக இல்லாததால் அமைதி காத்தாள்.

அவள் விரும்புகிறாளா இல்லையா விதி விட்டு வைக்குமா? 

சுரேன் செல்வியைப் பார்த்துவிட, மாறனிடம் சொல்லிக்கொண்டு உடனே அவளைப் பார்க்கப் பக்கம் வந்துவிட்டான். 

வேறு வழியில்லாமல் செல்வியும் பேசினாள். துரையப்பனுக்குச் சுரேனைத் தெரியும் என்றாலும் அவன் வெண்ணிலாவைக் காதலிக்கிறான் என்று தெரியாது. 

சுரேன் வெண்ணிலாவின் நலனைப் பற்றி விசாரிக்கவும், செல்வி அன்று நடந்ததைத் தனக்குத் தெரிந்த அளவு பகிரச் செய்ய… 

அவள் சொல்ல சொல்ல சுரேனின் தாடை இறுக, சினத்தால் கண்களில் சிவப்பேறிக்கொண்டே போனது! 

துரையப்பனுக்கும் சுரேன் வெண்ணிலாவைக் காதலிப்பது தெரிந்து போனது! 

அதிகாலை மூன்று மணியென சுவர்க்கடிகாரம் டிங் டாங்கித்தது. 

வெண்ணிலா அவளுடைய ரூமில் படுத்திருந்தாள். திறந்திருந்த சாரளங்களின் வழியே நிலவு பிரகாசித்துக்கொண்டிருந்தது. 

ஆனால், அந்த நிலவுக்கு ஒத்திருந்த வெண்ணிலாவின் முகம் டல்லடித்தது. டல்லடித்தது என்பது சாதாரண வார்த்தை. அந்த வட்ட முகம் அழுததில் சிவந்து வீங்கிப் போயிருந்தது. 

இரவு வானத்தின் இருளை நீக்கி அதனை இதமாக்கிய நிலவு, சாளரத்தின் ஊடே எட்டிப் பார்த்து, வெண்ணிலாவையும் ஒளிர்விக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. 

இரவு ஒரு மூன்று நான்கு மணி நேரமே தூங்கியிருப்பாள். அதுவும் விழிப்பும் தூக்கமுமாய்! 

இப்போதும் நெஞ்சில் ஒரு நடுக்கம் ஓடியது. 

‘ராகேஷ்!’ நடுக்கத்தையும் மீறிய ஒரு கோபம் அவன் மேல். பல்லைக் கடித்தாள். 

“ராகேஷ்! உன்னை!” அவள் உணராமல் குரல் வெளியே கேட்டுவிட… 

“என்னம்மா பண்ணப் போற அவன?” பேத்தியின் பக்கத்தில் படுத்திருந்த காந்தம்மாள் புரண்டு படுத்தபடி விசாரிக்க… 

வெண்ணிலா பதில் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள். 

“எல்லாத்தையும் ஒரு கெட்டக் கனவா நினைச்சி மறந்திடு. கொஞ்ச நாளைக்கி நிம்மதியா வீட்டோடவே இரு ராஜாத்தி. ஒரு ரெண்டு மூணு நாளு எப்படியோ இருக்கும். 

அப்புறமா நீயே இவ்வளவு தானான்னு உதறிட்டுப் போவ பாரு. இப்ப யோசனை பண்ணாம தூங்கு. இந்நேரத்துக்கே எந்திரிச்சி என்ன செய்ய? தூங்கு.” 

பேத்தியைத் தட்டிக்கொடுத்தபடி காந்தம்மாள் தன் உறக்கத்தைத் தொடர்ந்தார். 

வெண்ணிலா தூங்க முற்படவில்லை. இமை மூடி அமைதியாகப் படுத்துக்கொண்டாள். அப்பா, அம்மா மூடிய இமைக்குள்ளே வந்து நின்றனர். 

தான் லேசாக இருமினாலே, “என்னடா நிலா உடம்புக்கு என்ன செய்யுது? டாக்டர்ட்ட போகலாமா? நீலா, நிலாவுக்குக் கசாயத்தைப் போடு!” என்று பார்த்துப் பார்த்து அப்படிக் கவனிக்கும் அப்பா இன்று எவ்வளவு துடித்திருப்பார்? 

வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர் தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே! 

நினைத்து நினைத்து மனம் வருந்தினாள். 

எவ்வளவு உல்லாசமாக ஆரம்பித்த நாள்! அது முடிந்த விதம் என்ன? 

இனி என்ன வரப் போகிறதோ? 

அவளால் யோசிக்கவே முடியவில்லை.