என் சித்தம் சித்திரமே – 2

என் சித்தம் சித்திரமே – 02

“வாப்பா சுரேன். கடைல இருந்தா வர்ற? சீக்கிரமா வந்திட்ட. எப்படிப் போக விட்டாங்க உன்னை இந்நேரத்துக்கு? மணி ஏழு தான் ஆகுது.” 

“தலைய வலிச்ச மாதிரி இருந்திச்சி பெரிம்மா. பெர்மிசன் சொல்லிட்டு வந்திட்டேன்.” 

“தலைவலியா… வெயில்ல அலைஞ்சியா சுரேன்? சூடா காபி குடி. தலைவலி கேக்கும். இரு கொஞ்சமா போட்டு எடுத்திட்டு வர்றேன்.” 

கட்டிலிலிருந்து எழுந்து போக முயன்ற நளினியைக் கை பிடித்து மீண்டும் அங்கேயே அமர வைத்தான் சுரேன். 

“பேசாம உட்காருங்க பெரிம்மா. மேலுக்கு முடியலைன்னு தானே இங்க வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க. வீட்டு வேலை எதுவும்னாலும் அம்மா பார்க்கட்டும். இல்ல சுதா செய்வா. 

எனக்கு எதுவும் வேணாம் பெரிம்மா. வர்ற வழியிலேயே ஒரு காபி வாங்கிக் குடிச்சிட்டுத் தான் வர்றேன். சரி சொல்லுங்க இன்னைக்கி நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க… பெரிப்பா பேசுனாங்களா? அப்புறம் காபி குடிச்சீங்களா?” 

“உங்க பெரியப்பா தான… நல்லாப் பேசுனாங்க போ!” பழைய நண்பர் ஒருவரின் மகன் கல்யாணத்திற்காக ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்றிருந்த கணவரைப் புகார் படித்துவிட்டு, 

‘ஆமா சாயங்காலமே காபி குடிச்சிட்டேன்’ என்று சொல்லப் போன நளினி அப்படியே நிறுத்திக்கொண்டார். 

சொன்னால் அவ்வளவு தான் போச்சு. பயல் தாம் தூம் என்று குதிப்பான். தேவையில்லாமல் அவனை எதுக்கு டென்ஷன் பண்ணிட்டு என்று நினைத்தார். 

நல்லாப் போட்டு வாங்குறானே என்றும் தோன்ற… பெரியம்மாவின் முழியிலேயே அவரைக் கண்டு கொண்டான் சுரேன். 

“எப்ப குடிச்சீங்க?”

“சாயங்காலம்…” இழுத்தபடி பதில் சொன்ன நளினிக்குக் குரல் உள்ளே போய்விட…

“சாயங்காலம் மட்டுமா?” சுரேன் கூர்மையாக அவரைப் பார்க்க… 

“மொத்தம் நாலு காபி. ஒரு டீ.” உண்மையைக் கக்கிவிட்டார். 

“பெரிம்மாஆ! நம்ம உடம்புக்கு ஆகாதுன்னு தெரிஞ்சா அந்தப் பண்டத்த ஒதுக்கி வச்சிரணும். நீங்க எனக்குச் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது. இப்ப நான் உங்களுக்குப் பாடம் எடுக்கறாப்ல நீங்க நடந்துக்கறீங்க.” 

தன் அதிருப்தியை அவரிடம் காட்டினான்.

“சாரிடா தங்கம்!” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மன்னிப்பை யாசித்தவரை அப்படிப் பார்த்தும் சுரேன் இரங்கவில்லை. 

“நீங்க நாலு டம்ளர் காபிய வெறுமன குடிச்சிருந்தா பரவாயில்லை. சீனியே போடாம அப்படியேவா குடிச்சிருப்பீங்க?” நக்கலாகக் கேட்டு வைத்தான்.

“சும்மா அதை எப்படிடா குடிக்க… கசக்கும்…” முகம் சுளித்து நளினி இழுக்க…

“கசக்குச்சின்னா குடிக்காதீங்க… உங்களை! என்ன சொல்ல? அதுக்காக நாலு கரண்டி சீனிய போட்டுக் கலக்கிக் குடிப்பீங்களா? நாலு இண்டு அஞ்சு… 

மொத்தம் இருவது கரண்டி சீனி. ஒரு வீட்டுக்கே பாயாசத்த வச்சிடலாம். சொன்னா புரிஞ்சிக்க மாட்றீங்க. உங்க நல்லதுக்குத் தான…” 

“ஏன் டா இப்படிச் சத்தம் போட்டு ஊரக் கூட்டுற? நானென்ன குழம்புக் கரண்டிய அளவா வச்சிப் போட்டுக்கிறேன்? சின்ன ஸ்பூன்ல தானே போட்டுக்கறேன்? இதுல பாயாசத்த வைப்ப…” 

“உங்க சின்ன ஸ்பூன் ஒரு தேக்கரண்டி அளவா இருந்திச்சின்னா கூட, காலை மாலைன்னு ஒரு டம்ளர் காபி டீக்கு அரைத் தேக்கரண்டி வீதம் ரெண்டு தடவை போட்டுக் குடிச்சா ஓகே. ஒத்துக்கலாம். 

சாப்பிடற ஸ்பூன்ல அள்ளிப் போட்டுக்கிறேங்க… குளுக்கோஸ் அளவு முன்னூறுக்கும் மேலே தாண்டி காட்டுது. பிரஸ்ஸர் வேற ஏறி இருக்கு. பெரிப்பா இல்லாத நேரத்துல மயக்கம் போட்டு விழுந்து வச்சிருக்கீங்க. நா அப்ப வரப் போய் சரியா போச்சு. இல்லைன்னா?” 

தங்கச்சி மகனின் அக்கறை நளினியை நெகிழ்த்தியது. நளினி சிவநேசனுக்கு ஆண்பிள்ளை கிடையாது. இரண்டு மகள்களும் வாக்கப்பட்டு வெவ்வேறு ஊரில் வசிக்கின்றனர். 

உள்ளூரிலேயே தங்கை யமுனாவும் கொழுந்தனாரும் தங்கை கணவருமான சதாசிவம் இருக்க, அவர்களின் மகன்கள் சுந்தர், சுரேன் தான் இப்போது பெரியவர்களுக்கு உதவி.  

அதிலும் சுரேனுக்குப் பெரியம்மா என்றால் உயிர். அவன் பிறந்து ஐந்தாறு வயது வரையிலும் அண்ணன் தம்பி இருவரும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்திருந்தனர். 

சிவநேசன் நளினி மகள்கள் வயதுக்கு வந்த பின்னர் அந்த வீட்டின் இடப் பற்றாக்குறை அண்ணன் தம்பிகளைப் பிரித்தது. தனி தனி வீட்டிற்கு மாறினர். 

எப்போதுமே யமுனாவிற்குச் சுந்தர் செல்லப்பிள்ளை. சுரேன் இளையவனாக இருப்பினும் சவலைப் பிள்ளை போலத்தான் அவன் நிலை இருந்தது. 

நளினிக்குப் பெண்கள் பெரியவர்களாகிவிட, சுரேனை அவரே உடன் வைத்து வளர்த்துவிட்டார். அவருக்குமே மகள்களைவிட சுரேன் மேல் பாசம் அதிகம். 

நளினி நெகிழ்ச்சியில் இளையவனின் கைகளைப் பிடித்துக்கொண்டார். 

“கோவப்படாதப்பா. இனி மேல் கொஞ்ச கொஞ்சமா குறைச்சிக்கிறேன்.” 

“என்னது கொஞ்ச கொஞ்சமா குறைக்கப் போறீங்களா? இது என்ன கேமா? உங்க உடம்பு பெரிம்மா. ஒரு தடவை கெட்டதுன்னா நீங்க தானே சிரமப்படணும். அப்ப போயிப் பார்க்கப் போறதை இப்ப இருந்தே கவனிங்க சொல்றேன். எனக்காகவாவது செய்ங்க ப்ளீஸ் பெரிம்மா!” 

நளினிக்கு அவன் பாசத்தில் கண்கள் அப்படியே கலங்கிவிட்டது. 

“சரிடா தங்கம். நாளைக்கே கம்மி பண்ணிக்கறேன். உனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு பார்த்து வச்சி… உம் பொண்டாட்டி பெத்துப் போடுற பிள்ள குட்டிகளை வளர்த்துவிட வேணா? அதுக்காச்சும் தெம்பா இருக்கணும்.” 

“அது!” விரல் நீட்டிப் பத்திரம் காட்டினான். 

“போடா போக்கிரி!” நளினி சிரிக்க…

“முதல்ல சுதாவுக்குப் பிரசவம் பார்த்து அவ குழந்தைய வளர்த்துவிடு!” சலுகையாகப் பெரியம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான் சுரேன்.

அவனுடைய தலையைக் கோதிவிட்ட நளினி, “சுதாவுக்கு உங்கம்மா பிரசவம் பார்ப்பா. பேத்தியோ பேரனோ… எந்தக் கொழந்த பிறக்குதோ அதையும் வளர்த்துவிடுவா.” என்றார். 

“ம்கூம்… அம்மா பார்த்திட்டாலும்…” சுரேன் நொடிக்க… 

மருமகள் சுதாவுடன் துர்க்கை அம்மனுக்கு விளக்கேத்திவிட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த யமுனாவின் காதில் இளைய மகனின் பேச்சு விழுந்தது. 

“என்னடா என் மண்டைய உருட்டற. ரெண்டு பேரும் எதைப் பத்திப் பேசிட்டு இருக்கீங்க?” 

“நம்ம சுதாவுக்கு நீ பிரசவம் பார்ப்பியாம். பெரிம்மா சொல்றாங்க. நா இல்லை சொல்றேன். நீ என்னம்மா சொல்ற… பார்ப்பியா மாட்டியா?” 

தன்னை இறக்கிப் பேசுறானா இவன்? அவன் சொன்ன சுதாவை உணர்ந்து, 

“நல்லா வைக்கப் போறேன் உனக்கும் உன் பாசமலர் பெரியம்மாக்கும். முதல்ல உங்க அண்ணிய மரியாதையா கூப்பிட்டுப் பழகு சுரேன்! எத்தனை தடவ உனக்குச் சொல்லிக் கொடுக்க…” 

சுரேனை உறுத்து விழித்தார் யமுனா.

“அவ இப்ப தானே எனக்கு அண்ணி. இதுக்கும் முதல்ல என் பிரெண்டா தானே இருந்தா? எனக்கு அப்படிக் கூப்பிட தான் வருது. உன் செல்லப்பிள்ள பொண்டாட்டியா நா அவளைப் பார்க்கிறதில்லை. என்னை இப்படியே விட்ரு. 

நான் மட்டும் சுதாவ என் அண்ணியா பார்க்க ஆரம்பிச்சேன், அப்புறம் இந்த வீட்ல என்னால இருக்கவே முடியாது! என்ன சொல்ற… இங்க இருக்கணுமா இல்ல வெளியே போயிறவா?” 

கூலாக ஆரம்பித்து அப்படியே சூடாகி இறுக்கத்துடன் பெற்றவளை ஒரு பார்வை பார்த்தான். 

ஏற்கெனவே அவனுக்கு வெண்ணிலாவைக் கொண்டு மனது சரியில்லை. இவ்வளவு நேரம் வீட்டில் யாருமில்லாத அமைதி… பெரியம்மாவுடன் பேசுவதில் அவனுடைய கவனம் மாறியிருக்க… அவளைச் சற்று ஒதுக்கி வைத்திருந்தான். 

இப்போது யமுனா சொன்னதில் எரிச்சலாகிக் கத்திவிட்டான். அவ்வீட்டில் அவன் இலகுவாகப் பேசக் கூடியது சுதாவிடம் மட்டுமே. இருவருக்கும் சிறு வயதிலிருந்தே தோழமை. 

சுதா சுரேனைப் பார்க்க வரப் போக இருக்க, சுந்தர் அவளைப் பார்த்துக் காதல் கொண்டான். அவளுக்கும் பிடித்துப் போக, யமுனா பெண் கேட்கவும், சம்மதம் சொல்லிவிட்டாள். 

சுரேனை அவளுக்கு ஒரு நண்பனாக ரொம்ப பிடிக்கும். சுந்தருக்கும் சுரேனுக்கும் எப்பவும் முட்டிக்கொள்ளும். அவளுக்கு அது தெரியும். தெரிந்து தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டாள். 

ஆனால், ஒரு வெளி ஆளாக இருந்து பார்ப்பதும் அதனை எடுத்துக் கொள்வதும் வேறு. 

ஓர் உறவாக ஒரே வீட்டில் இருந்து பார்க்கும் அனுபவம் சுதாவுக்கு வேறாக இருந்தது. சண்டை வரும் போது அதனை எப்படி நாசூக்காகக் கையாளுவது என்பது அவளுக்குப் புரியவில்லை. 

அதுவும் சுந்தர் கணவனாகப் போய்விட்டான். சுரேன் கெட்டவனில்லை. அப்படி இருந்தால் அவளுக்கு அவன் நண்பனாகி இருக்க மாட்டான். தனக்கு நல்லவன். அவனைப் பெற்றவளுக்கும் உடன் பிறப்புக்கும் அப்படி இல்லையே! 

பல சங்கடமான தருணங்களை சுதா திருமணம் முடித்து வந்த இந்த ஒரு வருசத்தில் கடக்க நேரிட்டது. இதோ இன்றும்… 

“வவ்வுன்னு விழுறான் பாரு உன் நட்பு! இப்ப நானென்ன சொல்லிட்டேன்? ஏன் க்கா நீயாவது அவனைக் கண்டிக்கக் கூடாது?” 

கோவிலில் இருந்து வந்ததும் அவசரமாக ரெஸ்ட் ரூம் போக வேண்டியதாக இருக்க, சுதா போய்விட்டு அப்போது தான் அங்கு வந்தாள். 

கையில் கோவில் பிரசாதத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தவள், அம்மா மகன் பேச்சைக் கேட்டு மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள். 

‘இவங்களோட…’ 

அதற்குள் நளினி, “விடுடி யமுனா. சின்னப்புள்ளைல இருந்து அப்படியே கூப்பிட்டுப் பழகிட்டான். திடீருன்னு நீ மரியாதைய தான்னா… வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறான் எந்தங்கம்?” என சுரேனுக்காகப் பரிந்து பேச… 

“உன்னால தான் அவன் கெட்டுப் போயிட்டான். நீ செல்லங் கொடுத்தே இப்படி அவனைக் கெடுத்து வச்சிருக்கக்கா. நல்ல தங்கம். நீ தான் மெச்சிக்கணும் உந்தங்கத்தை. அதான் ஜெயிலுக்கே போயிட்டு வந்திட்டான்ல!”

“யமுனாஆ! மேல பேசாத நீ!” தங்கையின் பேச்சைக் கண்டிப்புடன் நிறுத்த முயன்றார் நளினி. 

“அத்தே!” தவிப்புடன் சுதா. 

“ஆமா நல்லா வக்காலத்து வாங்குங்க ரெண்டு பேரும் அவனுக்கு. நாளைக்கு ஒரு பொண்ணு பார்க்கப் போற இடத்தில என்னென்ன கேள்வி வரும்னு யோசிக்கா. அப்புறமா அவனைக் கொஞ்சு. 

இப்ப என்ன வேலை பார்த்துக் கிழிக்கிறான்னு ரோஷத்த காட்டிட்டு இருக்கான். இப்படிப் போயி ஏதோ ஒரு வேலைய பார்க்கவா அரும்பாடு பட்டு அவனைப் படிக்க வச்சது? 

அவனைக் கண்டிக்கிற வயசுல கண்டிச்சி வைக்காம… நீயும் கூட சேர்ந்திட்டு என்னைக் கிண்டல் பண்ணுற?” 

“ஏய் யமுனா என்னடி நீ! இப்படிப் பேசி வைக்கிற? முதல்ல நீயும் கொழுந்தனும் அவனைக் காய்ச்சி எடுக்காம இருங்க. புள்ள வயசுக்கு உங்க மரியாதைய தரப் பழகுங்க. உன்னால தான்டி சுரேன்…” 

ஏதோ சொல்ல வந்த நளினியைச் சுரேன் சொல்ல விடாமல் தடுத்தான்.

“பெரிம்மாஆ!” ஒரே வார்த்தை… ஒரே பார்வையில் அடக்க,

“ஏன்டா என் வாயை அடைக்கிற?” என்று அவனைச் சத்தம் போட்டார். 

அவ்வளவு ஆதங்கம் நளினியிடம். 

“சொல்லுக்கா என்னால? என்னால என்ன? நாந்தான் அவனைச் செல்லம் கொடுத்துக் கெடுத்திட்டேனா?” 

ஆவேசமாக யமுனா பேசிக்கொண்டே போனார். 

“உங்கிட்ட வாயாட என்னால முடியலை யமுனா.” எப்படியோ வரவும் அலுப்புடன் பேசிவிட்டு ஓரமாகப் போய் நளினி உட்கார… 

சுரேன் அவரைக் கவனித்துவிட்டு, சூழ்நிலையைத் தணிக்க முயன்றான். அண்ணியிடம் திரும்பி… 

“சுதா அம்மாவ இங்க இருந்து கூட்டிட்டுப் போ.” என்றவன் அப்போது தான் அவளைக் கவனித்தான். 

“ஹே… நீ என்ன இப்படி நடுங்கிட்டிருக்க? வேர்த்துக் கொட்டிட்டு இருக்கு. என்னடி சுதா? ஏய்!” 

சுதாவிற்கு யமுனாவின் சத்தத்தைக் கேட்டு என்னவோ போல ஆகிவிட்டது. அதுவும் சுரேனைப் பற்றிய சில பேச்சுக்கள் அவளுக்கு உளைச்சலைக் கொடுத்தன. 

மனவுளைச்சலில் இருந்து விடுபட முடியாமல் போக, தவிப்பும் நடுக்கமுமாக நின்றிருந்தவளுக்கு அப்படியே தள்ளிக்கொண்டு வந்தது. 

சரியான நேரத்தில் சுரேன் அவளைக் கவனித்தவன், ஏதோ சரியில்லை என்று அவளருகே போகவும் சுதா சரியவும் சரியாக இருந்தது. 

அப்படியே அவளைத் தாங்கிப் பிடித்தவன், “பெரிம்மா அம்மா சுதாக்கு என்னன்னு பாருங்க.” என்று உதவிக்கு அழைக்க… அதற்குள் பெண்கள் இருவருமே அருகே வந்துவிட்டனர். 

சுதாவை சோஃபாவில் படுக்க வைக்க… யமுனா அவசரமாக கிட்சன் சென்று ஒரு சொம்பில் தண்ணீரையும் சர்க்கரை டப்பாவையும் எடுத்து வந்தார். 

நளினி சுதா தலை மாட்டில் அமர்ந்திருந்தவர், கை நீட்டித் தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்து, சிறிது புகட்ட முயல… சுரேனுக்கு அப்படியொரு பதைப்பு! 

தோழியையே பார்த்துக்கொண்டு, ‘எதுக்குக் கண்ணு முழிக்கல… அசையக்கூட இல்லாம இப்படிப் படுத்திருக்காளே!’ என நினைத்தவன் உள்ளங்கால்களைப் பிடித்துத் தேய்த்துவிட்டான். 

யமுனாவோ உள்ளுக்குள்ளே ஒரு பயம் வியாபிக்க அதை விரட்ட முயன்று கொண்டிருந்தார். தானும், “சுதா சுதா” என மருமகளை விழிக்கச் செய்ய முயல… 

“பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு” என நளினியும் பதற்றத்தில் இருந்தார். 

பெரிய மகன் சுந்தரை நினைத்து யமுனா பயப்பட்டார். அவனுக்கு ஃபோன் போட சுரேனை ஏவ… சுரேனுக்குச் சுந்தரைப் பற்றி எதுவுமில்லை. 

அவன் சுதாவின் நிலையைக் கணித்து உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல நினைக்கையில்… 

சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் வீட்டினர் ஒன்றாகக் கூடியிருக்க… அங்கே சல சலப்பாகவும் இருக்க, விடு விடுவென நேரே சென்று பார்த்தான். 

சுதா மயங்கிக் கிடக்க… யமுனா கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார். 

“என்ன… என்னாச்சிம்மா? சுதா… சுதா…” என, “இந்த சுரேன் சத்தம் போடவும்…” யமுனா சொல்லி முடிக்கக் கூட இல்லை… 

சுதாவின் கால்மாட்டில் நின்றிருந்த தம்பியை ஓங்கி ஓர் அறை விட்டான் சுந்தர். 

“என் பொண்டாட்டிக்கு எதும் ஆச்சி நீ தொலைஞ்சடா! உனக்குச் சமாதி தான் டா மவனே!” 

“சுந்தர்!” யமுனா அதிர்ச்சியில் கத்த… 

“என்னப்பா பொட்டுன்னு இப்படிக் கைய நீட்டிட்ட? முழு ஆம்பள தம்பி பதிலுக்குக் கை நீட்டிட்டா என்ன செய்வ? என்ன நடந்திச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம! 

உங்க அம்மா அரையும் குறையுமா பேசி வைப்பா… உனக்கும் பொறும அத்துப் போச்சி சுந்தர். வா முதல்ல சுதாவ பாரு.” 

நளினி சுந்தரைக் கண்டித்தார். 

அறை வாங்கிய கன்னம் வலிக்கத்தான் செய்தது. சிறு வயதில் அடித்து அடி வாங்கிப் புரண்டது வேறு. வளர்ந்த பின்னர் வாயால் பேசியது மட்டுமே. 

இன்று முதல் முதலாய் அண்ணன் அடித்தது மனதில் பெரிய அடி. ஒரு வகையில் அசிங்கமாக உணர்ந்தான் சுரேன். ஆனால், தோழி மயங்கிக் கிடக்கையில், எது முக்கியம்? 

என்ன ஏதென்று கேட்காமல் ஏறிக்கொண்டு வரும் அண்ணனை சுரேன் கண்டு கொள்ளவில்லை. 

“உன் பொண்டாட்டிக்கு நீயே வைத்தியம் பார்க்கிறயா? இல்லைன்னா நகரு… அவளை நான் ஹாஸ்பிடல் கொண்டு போறேன்.” பதிலுக்கு எகிறினான். 

தம்பியை முறைத்தபடி சுதாவின் பல்ஸ் பார்த்து முதலுதவி செய்தான் டாக்டர். சுந்தர். 

சுரேன் வீட்டு நிலைமை இப்படியிருக்க… 

வெண்ணிலாவின் வீடு இதைவிட மோசமான நிலைமையில் இருந்தது. 

சுரேனுக்கு வேறு எந்த நினைப்பும் வரவில்லை. வெண்ணிலா எல்லாம் தூரப் போயிருந்தாள். சுதா எழுந்து அமரும் வரைக்கும் அவனுடைய மனது அடித்துக்கொண்டது. 

அவனுக்கு அந்த வீட்டில் இருக்கும் ஒரே பிடிப்பு அவள் தானே? தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அம்மா எப்போதும் பேசுவது தான். புதிதாக எதுவும் இல்லையே? 

ஏற்கெனவே தன் மேல் அப்படி ஒன்றும் பெரிய அன்பு பாசமெல்லாம் கிடையாது. அதிலும் ஜெயில் போய் விட்டு வந்ததிலிருந்து சொல்லவே வேண்டாம். 

சுதாவிற்கு எல்லாம் நார்மல்… சாதாரண பசி மயக்கமாகத் தான் தெரிகிறது என்று சுந்தர் சொல்லவும் தான் சுரேன் நிம்மதி ஆனான். 

சதாசிவம் வீட்டிற்கு வரவும் நடந்த விசயம் கேள்விப்பட்டு அவர் பங்குக்குச் சுரேனை வைத்துச் செய்தார். நளினி தான் இடையில் நின்று பேசி கொழுந்தனை அமர்த்திவிட்டார். 

யமுனா அனைவருக்கும் இராத்திரி டிஃபென் வேலையைப் பார்க்கப் போக, நளினியும் தங்கையின் ஒத்தாசைக்குக் கூடப் போனார். 

“நீ இருக்கா நானே பார்த்துக்கறேன்.” யமுனா சொன்னாலும் நளினி கேட்கவில்லை. சின்ன வெங்காயத்தை எடுத்து உரித்துக்கொண்டிருந்தார். 

யமுனா தேங்காய் சட்னியும் இட்லியும் செய்ய, நளினி பக்குவமாகத் தன் கைப்பட நிறைய சின்ன வெங்காயம், அதன் சரி பாதி அளவு தக்காளியுடன் மிளகாய் வற்றல், கொஞ்சம் கருவேப்பில்லை சேர்த்து வதக்கி, மிதமான உப்பும் நல்ல உறைப்புமாக ஒரு சட்னியைச் செய்து வைத்தார். 

சுரேனுக்குப் பிடிக்கும் என்றே இதனை செய்யும் அக்காவை முறைத்துப் பார்த்தார் யமுனா. 

“ஞாயமா நாந்தானே உன்னை இப்படி முறைச்சிட்டு நிக்கணும்டி. சுந்தர்ட்ட சுரேன் சண்டைய வளர்த்தான்னு வத்தி வைக்கிற. அவனா மேல மேல பேசுனான்? 

நீ தான் கத்திப் பேசி மருமகளை மயக்கம் போட வச்சிட்ட. சுந்தர் எப்பவும் உங்கைக்குள்ள இருக்க மாட்டான். நினைப்பு வச்சிக்க. 

சுரேனை நீ புரிஞ்சிக்கவே இல்லை! நீ என்னைக்கி அவனுக்கு உன் ஆதரவைக் காட்ட போறயோ! 

போ போயி எல்லாரையும் சாப்பிட வரச் சொல்லு.” 

அக்கா பேசினதைக் கேட்டுக்கொண்ட யமுனா பதில் பேசவில்லை. 

அவர் மனது போல நடப்பது சுந்தர் தான். சுரேன் மீது பாசம் இல்லாமல் இல்லை. ஆனாலும் முன்னுரிமை சுந்தருக்கே. திட்டு வாங்கப் பிறந்தவன் சின்னவன். 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் யமுனா வறுத்தெடுப்பது சுரேனை மட்டுமே. நளினியும் தங்கைக்கு எடுத்துச் சொல்வதை நிறுத்த மாட்டார். 

யமுனா சென்று அனைவரையும் சாப்பிட அழைக்க, சதாசிவம் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தவர் முதலில் வந்தார். சற்று நேரம் அவர்கள் ரூமில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுதாவை அழைத்துக்கொண்டு சுந்தரும் வந்தான். 

யமுனா, நளினி என எல்லோரும் டேபிள் வந்துவிட, சுரேன் வரவில்லை. 

“சுரேன் எங்கப்பா சுந்தரு?” நளினி கேட்க, 

“வெத்தல பாக்கு வச்சிக் கூப்பிடணுமோ என்னவோ?” சுந்தர் நக்கலடிக்க… 

“என்னங்க நீங்க…” சுதா கணவனைச் சும்மா இருக்கச் சொல்லிக் கெஞ்சலாகப் பார்த்து வைத்தாள். 

“இவ ஒருத்தி… மூஞ்ச தொங்கப் போட்டிடுவா. அவனைச் சொன்னா உனக்கென்னடி வந்திச்சி? நீ சாப்பிடு. இந்தா இன்னும் கொஞ்சம் சட்னி ஊத்திக்க.” தானே மனைவிக்குப் பார்த்துப் பரிமாறினான் சுந்தர். 

“அவன் ரூம்ல இல்லக்கா.” யமுனா போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்ல, 

“நீங்க சாப்பிட உட்காருங்கண்ணி. இந்நேரத்துக்குச் சொல்லாம கொள்ளாம எதுக்கு வெளியே போறான்… இனி ராத்திரிக்கு வருவானா… எந்நேரத்துக்கு வர்றானோ? 

சாப்பிட்டு முடிஞ்சதும் ஒதுங்க வச்சிருங்க. பெரிய சீமத்தொரை. அவனுக்காக யாரும் இங்க காத்திருக்க வேணாம்.” 

சதாசிவம் சுரேன் மீது அதிருப்தியைக் காட்டிக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தான் சுரேன்.

“ஏதோ ஒரு நாளைக்கு இப்படிச் சீக்கிரம் வீட்டுக்கு வர்றவன் வீடு தங்காம… அப்படி என்ன பிரெண்ட்ஸ் பார்க்கப் போறது?” 

யமுனா அவராகவே ஒன்றை ஊகித்துச் சொல்ல… பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு மனம் வெறுத்து வர, சத்தம் செய்யாமல் அப்படியே வெளியே செல்லத் திரும்பினான். 

வெரெண்டாவின் பக்கவாட்டில் மாடிப்படிகள் இருக்க, யாரும் சுரேனைக் கவனிக்கவில்லை. 

அவனின் பைக் சாவி பேண்ட் பாக்கெட்டில் இருக்கிறதாவெனத் தொட்டுப் பார்க்கச் செய்து  செருப்பை மாட்டிக்கொண்டிருக்கும் போது, 

“தங்கம் தலைவலின்னு இன்னைக்கிச் சீக்கிரமா வீட்டுக்கு வந்திட்டான். வயிறாரச் சாப்பிட்டா எல்லாம் சரியா போயிரும். அவனுக்காக இந்தச் சட்னி அரைச்சேன்…” நளினி சொன்னது கேட்டது. 

பெரியம்மாவின் அன்பும் அக்கறையும் சுரேனை சற்றுச் சாந்தப்படுத்தியது. கேட்டை திறந்து பைக்கை வெளியே தள்ளிச் சென்று உதைத்து விர்ரென்று பறந்தான். 

பைக் சத்தம் துல்லியமாய் வீட்டுக்குள் கேட்க, நளினிக்கு அப்படிப் போனது சுரேன் என்று தெரியவில்லை. 

சுதாவிற்கு நிச்சயம்… நண்பன் உள்ளே பேசியவற்றைக் கேட்டுவிட்டுத் தான் பறக்கிறான் என்று. மற்றவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் கைக்கும் வாய்க்கும் என்றிருக்க… யாரும் அறியாமல் கணவனின் தொடையில் நறுக்கெனக் கிள்ளி வைத்தாள். 

“ஸ்ஸ் அம்மா!” என்று சுந்தர் கத்திவிட, யமுனா, “என்ன… என்ன சுந்தர்!” என்று பதற… 

‘என் பொண்டாட்டி தம்பிக்காகப் பார்த்து என்கிட்ட கோவத்தைக் காட்ட தொடையில கிள்ளி வச்சிட்டா. வலியில கத்திட்டேன்.” என்று வெளியே சொல்லவா முடியும்? 

பைக்கில் இலக்கில்லாமல் பயணித்துக்கொண்டிருந்தான் சுரேன். 

‘இந்த பல்சர் கூட பெரிப்பா வாங்கித் தந்தது தான். இல்லைன்னா தாத்தா காலத்துப் பழைய டி.வி.எஸ். ஃபிஃப்டிய உருட்டிட்டு இருந்திருப்பேன்.’ 

கசந்த முறுவலுடன் நினைத்தவன், அந்தக் கோலத்தில் தன்னைப் பொருத்தியும் பார்க்க… அத்தனை இறுக்கத்திலும் சிரிப்பு வந்தது. 

“ச்சே என்ன நாள்டா சாமி இது!” காலையில் செல்வியிடம் பேசிக்கொண்டதில் இருந்து ஒவ்வொன்றாக மனக்கண்ணில் வந்து போனது. 

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்… ஒரு பார்க் அருகில் பைக்கை விட்டு புல்வெளியில் படுத்திருந்தான் சுரேன். 

கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, வானத்தைப் பார்த்திருக்க… அவன் கண்களுக்கு அந்த வான் நிலவுக்குப் பதில் அவனுடைய வெண்ணிலாவின் முகமே தெரிந்தது. 

அதை இரசிக்கவும் முடியவில்லை. இரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை. 

அழகான வட்ட முகம் அவளுக்கு. கொஞ்சம் பப்ளியான உடம்பு. வெகுளியா துடுக்குப் பெண்ணா என்று வரையறுக்க முடியாத நடத்தை. ஆங்கில அறிவு உண்டு. அதான் ஃபர்னிச்சர் பிரிவில் வேலையில் இருந்தாள். 

இப்போது அவள் தான் ஞாபகத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள். 

‘என்னமோ எனக்கு அவளைப் பிடிச்சிருச்சி. அவளுக்கு என்னைய பிடிக்கலையா? எதை வச்சி ராகேஷ் என்னைய விட அவளுக்கு உசத்தியா போயிட்டான்?’ 

விருப்பமில்லாமல் முகம் திருப்புகிறவளை எப்படிச் சரி சொல்ல வைப்பது? அப்படி அவள் சரி சொன்னாலும், அவளைக் கட்டினால் வாழ்க்கை எப்படி இருக்கும்? 

ஏற்கெனவே வீட்டில் ஒவ்வொரு இரகம். இதில் வெண்ணிலாவை இணைத்தால்? 

வீட்டினர் முதலில் அவளைக் கல்யாணம் செய்து வைப்பார்களா? 

யோசனைகள் முட்டிக்கொண்டு நிற்க… மேலும் தலைவலித்தது. வயிறு வேறு பசிக்க… படுத்திருந்தவன் எழுந்து நின்று தன் மேல் ஒட்டியிருந்த புற்களைத் தட்டிவிட்டான். 

சுற்றிலும் உள்ள சாப்பாட்டுக் கடையை ஆராய, பின் நேர இரவு விடுதிகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. அவசரமாக பைக்கில் ஏறியவன் ஒரு புரோட்டா ஸ்டாலில் கொண்டு நிறுத்தினான். 

கடைக்குள் போகாமல் வெளியே இருந்த இருக்கை ஒன்றில் உட்கார்ந்து ஆர்டர் கொடுத்தான். உணவுக்காகக் காத்திருந்த வேளையில் டேபிளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். 

பார்வையைச் சுழலவிட, ராகேஷ் அவன் பார்வையில் சிக்கினான். வெகு பக்கமாகத்தான் அந்த டேபிளும் இருந்தது. அவனுடன் இரண்டு நபர்கள் அமர்ந்திருக்க… ஏதோ பேசியபடி சத்தமாகச் சிரித்தனர். 

சுரேன் அவர்களைப் பார்க்க, விளக்கொளியில் நன்றாகப் பார்வைக்குப் பட்டனர். அவர்களிடம் ஏதோ வித்யாசமாய்! 

கண்களில் ஒரு மந்தம். அசட்டுக்களை வேறு! 

நன்றாக அவர்களை நோட்டம் விட, சுரேனின் காதுகளுக்கு ராகேஷ் பேசுவது கேட்டது. ஏதோ பொண்ணு மேட்டர். சுரேன் செவியைக் கூர்மையாக்கிக் கேட்க ஆரம்பித்தான். 

கேட்க கேட்க முகமும் கைகளும் இறுகின. கண்கள் சிவப்பேற ஓர் ஆவேசத்துடன் எழுந்தான். நேரே ராகேஷ் முன்னால் போனவன், அவனை ஓங்கி ஒரு குத்துவிட, முகரை பேந்து இரத்தம் வழிந்தது. 

ஏற்கெனவே தான் ஜெயிலுக்குப் போனது, இது வரைக்கும் அதை முன்னிட்டு வீட்டில் பிரச்சினை ஓடிக்கொண்டிருப்பது… இப்படி எதுவுமே அந்நேரத்தில் சுரேனின் கவனத்தில் இல்லை. 

ஒன்றிரண்டு நிமிடங்களில் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட, அந்த இடம் பதட்டமாகிப் போனது. இதில் வேறு கூட்டத்தில் இருந்த ஒருவர் போலீஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டார்.