என் சித்தம் சித்திரமே – 12

என் சித்தம் சித்திரமே 12  

மாறன் சுரேனுடைய அலுவலக அறைக்குள் வந்து பத்து நிமிடங்கள் பக்கம் ஆகியிருந்தது. 

அவன் அனுமதிப்பெற்று உள்ளே பிரவேசிக்கும் போது தலையை நிமிர்த்தி வரச் சொல்லிக்கேட்ட சுரேன், “உட்காருடா. பத்து நிமிசத்துல வந்திர்றேன்.” சொன்னவன் தான். சிஸ்டத்தில் மும்முரமாக ஆழ்ந்து போனான். 

மாறன் சற்று நேரம் மொபைல் பார்த்துக்கொண்டிருக்க… பின்னர் நேரம் உணர்ந்து சுரேன் என்ன செய்கிறான் பார்க்க… அவன் அதே போஸ்ட்சரில் தீவிரமாக கீ-போர்ட் தட்டிக்கொண்டிருந்தான். 

அந்த டச் ஸ்க்ரீன் மானிடரில் ஐந்தாறு டேப் திறக்கப்பட்டிருக்க… அவற்றை மாற்றி மாற்றி பார்வையிட்டு; டைப் செய்து; ஏதோ வரைபடத்தில் குறித்து என்று தன் வேலையில் மூழ்கியிருந்தான். 

சுரேனின் அர்ப்பணிப்பு என்றைக்கும் போலவே இன்றும் மாறனைக் கவர்ந்தது. புன்னகைத்துக்கொண்டான். ‘இவன் மனசுல ஒன்னை நினைச்சா எதுவா இருந்தாலும் சிறப்பா செஞ்சிடுவான். ஒருக்கா கை வச்சா எந்த மேட்டரா இருந்தாலும் அதை முழுசா முடிக்காம ஓயவும் மாட்டான்.’ நினைத்தான். 

யோசனையின் ஊடே அந்த அறையை அப்படியே பார்வையிட்டுக்கொண்டிருந்தான் மாறன். அதொரு பழைய கட்டிடம். கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டு இடைக்கால பர்னிச்சர் போடப்பட்டிருந்தது. 

அதில் சுரேன் தனக்குத் தோதாக அவன் பொருட்களைக் கச்சிதமாக வைத்திருந்தான். டேபிள் வெயிட்டை உருட்டிக்கொண்டிருந்த மாறனின் பார்வை அப்படியே சுரேன் பெயர் பலகையில் நிலைத்தது… அதில் கையும் வேலை நிறுத்தத்தில். 

‘சுரேன் சதாசிவம்’ பெயருக்குப் பின் அவன் வாங்கிய பட்டங்கள். கீழே அவன் டெசிக்னேஷன்… ‘டெபுட்டி சூப்பரின்டெண்டண்ட் ஆஃப் போலீஸ். சைபர் க்ரைம்.’ 

‘இதே சதாசிவம் மாமா சுரேனை எப்படியெல்லாம் பேசியிருக்காரு. இப்ப அவர் பேரும் தானே இந்தப் பெயர் பலகைல இருக்கு? இந்த இடத்துக்கு வர சுரேன் எத்தனைய அனுபவிச்சான்?’ 

பெருமூச்சுடன் இருக்கையை நகர்த்திப் போட்டுப் பின்னால் சாய்ந்தமர்ந்தான் மாறன். என்ன முயன்றும் அவன் நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மூடிய இமைகளுள் அப்படியே சுரேனின் பள்ளி கல்லூரிக்காலம் மனதில் விரிந்தது. 

சுரேன் பத்தாவது தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கையிலேயே ‘நா டாக்டருக்கு படிக்கல.’ முடிவாக வீட்டில் சொல்லி நன்றாக மொத்தும் வாங்கிக் குவித்து… தன் பிடியில் நின்று பதினொன்றாம் வகுப்பில் கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்துகொண்டான். 

பத்தாம் வகுப்பில் வாங்கியதைப் போலவே ப்ளஸ் டூவிலும் அப்படித்தான் மார்க்ஸ் அள்ளிக் குவித்திருந்தான். அவன் கனவு ‘ரொபோடிக்ஸ் என்ஜினியரிங்’ படிப்பது! 

அதற்கு அடித்தளமாக அவன் கம்யூட்டர் என்ஜினியரிங் படிக்க வேண்டும். அதனைக்கொண்டு அவன் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தான். அவனது முதல் மூன்று தேர்வான ஒன்றில்… மிகவும் நல்ல கல்லூரியில் அனுமதி கிடைத்தது எவ்விதமான அலட்டலின்றி! 

அவன் பெற்றோருக்கு எப்படியோ… சுரேன் மிகுந்த ஆர்வமும் சந்தோஷமுமாக அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்துகொண்டான். வீட்டைவிட்டுத் தொலைவு என்பதால் கல்லூரி விடுதிக்குப் போகும்படி ஆனது. 

அப்பிரிவு கூட ஒரு வகையில் அவனுக்கு நிம்மதியளித்தது சொல்லலாம். மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவான். அப்போது வீட்டில் அவன் அறையில்… பின் மொட்டை மாடியில் என்று இருந்து கொள்வான். அண்ணனை எப்போதும் தூக்கி வைக்க… வீட்டினருடன் ஓர் ஒதுக்கம் தானாக வந்திருந்தது. 

பொது விடுமுறை நாட்கள், செமஸ்டர் ஹாலிடேஸ் இப்படி வருபவன் முக்கால்வாசி நேரம் பெரியம்மா பெரியப்பாவுடனே தங்கிக்கொள்வான். 

மாறன், நட்பு வட்டம் என்று சில பொழுதுகள் போகும். எப்போதாவது அத்தை வீட்டிற்கும் போவதுண்டு. இப்படி முதல் வருடம் நன்றாக முடிவடைந்தது. எல்லாப் பாடங்களில் தேர்வாகி நல்ல விழுக்காடும் வைத்திருந்தான். 

இரண்டாம் வருடம் தொடங்கியது. அவனுக்குச் சோதனை காலமும் கூடவே ஆரம்பித்ததை அவன் அப்போது அறியாது போனான்! 

கல்லூரியில் ஒரு பிரச்சனை. அதில் தேவையில்லாமல் சிக்கினான் சுரேன். தவறான நேரத்தில் தெரியாமல் போய் சில மாணவர்களுக்கு மத்தியில் இருந்தது தான் அவன் செய்த பிழை. அதற்காக அவன் பெயரில் ஒரு ப்ளாக் மார்க் விழுந்தது. 

‘இதென்னடா புதுச்சோதனை!’ திகைத்தவன் தான்… ஆனால், அதுக்காகவெல்லாம் அவன் பயப்பட செய்யவில்லை. 

தைரியமாகப் போய் நிர்வாகத்தின் முன் நின்று தன்னிலை விளக்கம் தந்தான். அவனுடைய நிமிர்வை, நிதானத்தை மெச்சிய கல்லூரி முதல்வர்… மறுபரிசீலனை செய்து அச்சம்பவம் பற்றி மேலும் ஆராய்ந்தார். 

சுரேன் மீது தவறில்லை புரிந்து அவன் பெயரை கிளியர் செய்துவிட்டார். அத்துடன் அது முடிந்து போனது என்று அவன் நினைத்திருக்க… பின்னணியில் நடந்தது அவனுக்குத் தெரியவில்லை… அப்படித் தெரிந்திருந்தாலும் என்ன செய்திருப்பானோ! 

சுரேன் தனக்காக எடுத்த முயற்சியால் ஒரு மூத்த பேராசிரியர் சிக்கினார். அவருடைய கவனக் குறைவால் தான் ஒரு மாணவர் பிரச்சனையே… அப்பிழையைச் சுட்டிக்காட்டி நிர்வாகம் ஒரு வாரம் அவரை சஸ்பெண்ட் செய்திருக்க… சுரேன் மேல் வன்மம் எழுந்தது அவருக்கு. 

அந்தக் கல்வியாண்டின் முதல் மாதம் முடிவடைந்திருக்க… எப்பவும் போல் அம்மாதமும் வார விடுமுறைக்கு சுரேன் வீடு சென்றான். அந்தத்திங்களன்று வகுப்புகள் இல்லையெனக் கூடுதலாக ஒரு நாள் வீட்டில் தங்க… அன்று பார்த்து யமுனா வாக்குவாதம் செய்தார். 

சிறிதாகத் தொடங்கியது தான்… யமுனாவின் வாய் கட்டுப்பாடின்றி போனதில் வளர்ந்து வளர்ந்து பெரிதானது. டீனேஜ் மகன்… அவனிடம் எப்படிப் பேச வேண்டும்? அம்மாவாக அதைப் புரிந்து நடக்காமல் போனார். 

வெளியில் தங்கிப் படிக்கிறான். அவன் வீடு வரும் போது அன்பும் அரவணைப்பும் தராவிட்டால் கூடத் தொலையுது கிரகம்… ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாவிட்டால் எப்படி? 

இரண்டு நாட்களுக்கு மேல் சொந்த வீட்டில் தங்கக்கூடாது என்கிற மனநிலை சுரேன் மனதில் உருவாக… பெரிய மனவுளைச்சலுக்கு ஆளானான். 

நளினி ஊரிலிருந்திருந்தால் அந்த அசம்பாவிதம் கண்டிப்பாக நடந்திருக்காது. பின் வந்த வருடங்களில் சுரேன் ஜெயில் போனவன் என்று அவன் அம்மா அப்பா வாயால் கேட்டிருக்கவும் நேர்ந்திருக்காது! 

சில விசயங்கள் கண்டிப்பாக விதிவசம் தான். ஆனால், பல விசயங்களை அந்த விதிவசம் நகர்த்திக்கொண்டு போய் விடுவது மனிதர்களே!  

சிவநேசனும் நளினியும் தங்கள் பெரிய மகள் வீட்டிற்குப் போயிருந்தனர். சுரேன் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு தன் பாக்பேக்குடன் அந்த முன்னிரவில் கல்லூரி செல்லக் கிளம்பினான். 

யமுனா அவன் அப்படி உடனே கிளம்புவான் என்று எதிர்பார்க்கவில்லை. சதாசிவம் வீட்டில் இல்லாதிருக்க… கணவர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்ல என்கிற பதைப்பில் சின்ன மகனை வீட்டில் இருக்கச் சொல்ல… அவன் கேட்காமல் அக்கணமே கிளம்புவதில் உறுதியாக இருந்தான். 

அந்நேரம் யமுனாவை எந்த முனி பிடித்து ஆட்டியதோ… அப்படித்தான் சுரேனிடம் சண்டை பிடித்து மேலும் அவனை வெறுப்பேற்றி விரக்தியடைய செய்ய… 

அங்கிருந்து கண்ணீர் முட்ட வெளியேறியவனுக்கு மன ஆறுதல் தேவைப்பட… ஊரிலிருந்து திரும்பியிருக்கக்கூடும் என்கிற நப்பாசையில் பெரியம்மா வீடு சென்றான். 

அவ்வளவு தளர்ச்சி சுரேனிடம். இவன் போன நேரத்தில் அவர்கள் வீட்டில் இல்லாமல் இருக்க… பூட்டியிருந்த வீட்டைக் கண்டு ஏமாற்றமும் சேர்ந்துகொண்டது. சிறிது நேரம் ஓய்ந்துபோய்த் தலையைப் பிடித்தவாறு அப்படியே வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். 

சில நிமிடங்கள் சுரேனைக் கண்டு பரிதாபம் கொண்டு தடுமாறின… சுரேனுமே கல்லூரிக்குப் போக வேண்டுமே நினைத்தான். பேருந்து நிலையம் நடக்கும் தூரத்தில் இல்லையென்றாலும் இளைஞன் கண்டிப்பாக நடந்து செல்ல முடியும். 

சுரேன் பெரியம்மா வீட்டிலிருந்து நடையைக் கட்டினான். முதலில் பேருந்து நிலையம் திசையில் பயணித்தவன்… அவனுக்கிருந்த மனவேதனையில் பாதையைக் கவனிக்க மறந்து வேறு பக்கம் போயிருந்தான். 

அதை உணராதவனாகக் கால் போன போக்கில் நடந்து போய்க்கொண்டே இருக்க… மரங்கள் அடர்ந்த புறநகர் பகுதி வந்ததும் தான் தன்னிலை உணர்ந்தான். 

‘இம்புட்டுத் தூரமா வந்திட்டேனா!’ இருந்த அலுப்பில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தவன் தூரத்தில் வெறிக்கச் செய்ய… அவன் கண் முன்னே பெரிய மைதானம்… அதையொட்டிய கலைக்கல்லூரி வளாகம் நீண்டு கிடக்க… 

அம்மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட வந்தது அவன் நினைவிலாடி உதட்டில் மெல்லிய புன்னகையைத் தோற்றுவித்தது. 

கொண்டு வந்த பையைச் சரித்து அதில் தலை வைத்து… கைகளை முட்டுக் கொடுத்துப் படுத்துவிட்டான். கண்களை மூடியவனுக்கு அவ்வளவு அயர்வு! 

தாகம் எடுத்தது… பசி வேறு. அப்போதே நேரம் ஏழரையைக் கடந்திருந்தது. எழுந்து சென்று ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்றால் கூட, அருகில் எதுவுமில்லை தெரியும். சிறிது நேரம் கழித்து அப்படியே பேருந்து நிலையம் செல்லலாம் நினைத்து அங்கிருந்து நகரவில்லை. 

அந்த அமைதியான இடத்தில் மனம் சற்றே இலகுவாக… கண் மூடிப் படுத்தவன் தூக்கத்தின் பிடியில் செல்ல… எவ்வளவு நேரம் போனதோ… திடீரென்று பெரிய சல சலப்பு மரங்களுக்கு மத்தியில்! 

தூக்கம் கலைந்து சுரேன் என்னவென்று உணரும் முன்… அவனைக் கடந்து சிலர் ஓட முயல… இருவர் தடுக்கி இவன் மேல் சரிய… அவர்களைத் துரத்தி வந்த போலீஸ் சுரேனையும் பிடித்து ஜீப்பில் ஏற்றியது. 

சர சரவென்று அடுத்தடுத்து நிகழ்வுகள்… டிரக்ஸ் கையாண்ட ஏழெட்டு நபர்களுடன் சுரேனும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டான். 

முதலில் என்ன நடக்கிறது புரியாமல் திகைத்து… போலீஸ் பேச்சு, கூட இருந்த மற்ற இளைஞர்களின் நிலை வைத்துக் கணித்தவன்… தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போலீஸிடம் பேசச் செய்ய… நோ யூஸ்! 

அந்த ஆய்வாளர் இவன் சொன்னதை மதிக்கச் செய்யவில்லை. காது கொடுத்துக் கேட்காததுடன் செவிப்பறையில் அறையவும் சுரேனுக்கு வலி உயிர் போனது! 

வலியால் கண்கள் கலங்கி வர… அந்த ஆள் முன்னே காட்ட முடியாது தலையைத் திருப்பிக்கொள்ள… அதற்கும் வாங்கிக் கட்டினான். ஒரு மூலையில் அமர்த்தப்பட்டவன் அடிவாங்கிய வலி; பசி மயக்கம்; குழப்பம்; மிரட்சியெனக் கலங்கடித்ததில் அப்படியே தொய்ந்து போய் அமர்ந்திருந்தான்! 

இரவு வெகு நேரத்துக்குப் பின் அந்த ஆய்வாளர் வெளியே செல்ல… 

“தம்பி இந்த இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரி கோக்குமாக்கான ஆளுப்பா. நீ கஞ்சா அடிக்கல, தப்புப் பண்ணலன்னு அவனுக்குத் தெரியும். ஆனாலும் உன்னைவிட மாட்டான். உன் கெட்ட நேரம்… தவறுதலா இவன்ட்ட போயி சிக்கிட்ட. 

இப்ப மாட்டுனவனுங்கள்ல யாருக்கும் எப்.ஐ.ஆர். போடல இன்னும். ராத்திரிக்குள்ள கொஞ்சம் பணம் பார்த்திட்டு மிச்சவங்கள உள்ள வப்பான். பிராடு பய! 

அதுக்குள்ள உங்க வீட்டுக்கு போன போட்டு யாரையாச்சும் வந்து பேசி அவனைக் கவனிக்கச் சொல்லு.” ஏட்டு வந்து சுரேனிடம் அவர் மொபைல் தர… 

சுரேன் தன் பெரியப்பா, அப்பா இருவருக்குமே அழைக்கச் செய்ய… பதறிக்கொண்டு வந்தனர்! 

சிவநேசனும் நளினியும் நள்ளிரவு வீடு திரும்பியிருக்க… தம்பி வீட்டில் நடந்தது எதுவும் தெரிந்திருக்கவில்லை. சுரேன் அவர்களைத் தேடி வந்ததும் தெரியவில்லை. திடீரென சுரேனின் அழைப்பு வர… 

அதில் அவன் “பெரிப்பா” சொன்ன குரலும் சரியாயில்லாதிருக்க… பிள்ளைக்கு என்னமோ ஏதோவென்று சிவா நெஞ்சுக்குள் பயம் எழுந்த போதே சுரேன் நடந்ததைச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லும் போதே மற்றொரு அழைப்பில் சதாசிவம் அண்ணனை விடாமல் அழைக்க… 

சுரேன் அங்கே முதலில் கூப்பிட்டு, பின் தன்னை அழைத்தது அந்த நேரத்திலும் கருத்தில் பட்டு மெச்ச வைத்தது. 

சதாசிவம் வீடு திரும்பும் நேரம் சுரேன் அங்கில்லாதிருக்க… மனைவியிடம் அவர் சுரேனைக் கேட்கச் செய்ய… யமுனா எப்பவும் செய்வது தானே? நடந்ததை இட்டுக்கட்டிப் பேசி வைக்க… இருந்த கடுப்பில் மகன் கல்லூரி விடுதி சென்றடைந்தானா கூப்பிட்டுக் கேட்கவில்லை சதாசிவம். 

இப்போது அவன் காவல் நிலையத்திலிருக்கிறேன் உதவி வேண்டும் என்றழைக்கவும் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அண்ணனைக் கூப்பிட, அவரும் சுரேனுடன் பேசியதைச் சொல்ல… 

இரு வீட்டிலும் அந்நேரத்தில் எவ்வளவு பணம் இருந்ததோ எல்லாவற்றையும் அரித்து எடுத்துக்கொண்டு கிளம்பினர். போலீஸ் ஸ்டேஷன் போக… 

உள்ளே நுழைந்ததும் சிவநேசன் பக்குவமாக அந்த இன்ஸ்பெக்டரிடம் பேசி சுரேனை விடுவிக்கக் கோரினார். சதாவோ மகனைக் காண வேறு பக்கம் நின்றிருந்தார். 

சிவா கொடுத்ததில் இன்ஸ் கையின் கனம் கூட கூட… அதில் அவன் மனம் குளிர்ந்ததும் எந்தவொரு கேஸும் சுரேன் பெயரில் பதிவு செய்யாது விடுவிக்கப்பட்டான். 

அந்த இன்ஸ் அப்போதும், “பையன பெத்துப் போட்டா மட்டும் போதுமா? நாட்டுக்கு நல்ல குடிமகனா அவன உருவாக்காட்டியும் ஒழுக்கமானவனா வளக்கத் தெரியணும்!” என்றிட… 

‘தி பாட் காலிங் தி கெட்டில் பிளாக்!’ என்பார்களே அப்படித்தான் இருந்தது அந்த ஆளின் பேச்சு. 

சதாசிவத்திற்கு மகன் மீது அந்த மாதிரி ஒரு கோபம்! அவனை வீட்டிற்கு அழைத்து வந்ததும் பெல்டால் விளாசித் தள்ளிவிட்டார். செய்யாத குற்றத்திற்கான தண்டனை மிக பலமாக இருக்க… சுரேன் உடலால் மட்டுமின்றி உள்ளத்திலும் அடிவாங்கினான். 

சுரேன் அந்த நிகழ்விலிருந்து மீண்டு வர நினைத்தாலும் விடாமல் விதி அவனைத் துரத்தியது. அவன் கல்லூரி திரும்ப… அங்கே அவனுக்கு டிசி கொடுத்துவிட, அவனை விடப்போன சிவநேசனுக்குப் பேரதிர்ச்சி! 

“என்ன சார் இது எங்க பையன் என்ன தப்புப் பண்ணான்னு இப்படித் திடுதிப்புன்னு டிசிய நீட்டுறீங்க? அவனுக்கு உடம்புக்குச் சரியில்லாம போகவும் மூணு நாளு காலேஜ் வரலை. அதுக்கு என்னாச்சுக் கேளுங்க… பைன் கட்டச் சொன்னாலும் கட்டுறோம். அதைவிட்டிட்டு…” 

“மிஸ்டர் சிவநேசன்… காரணம் பெருசா இருக்கப் போயித்தான நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்திருக்கு. எங்களுக்கு காலேஜ் பேரு முக்கியம். இங்க படிக்க வர்ற மாணவர்களுக்கு நல்ல சூழ்நிலையைக் கொடுக்க வேண்டியது எங்க கடமை.” 

“சார் நீங்க என்ன சொல்றீங்க?  சுரேன் நல்ல ஸ்டூடெண்ட் சார்.” 

“நானும் சுரேன பெஸ்ட் ஸ்டூடெண்ட் கேட்டகரில தான வச்சிருந்தேன். ஆனா அப்படியில்லன்னு தெரிஞ்சது. நார்காடிக்ஸ் அபூஸ் எல்லாம் பொறுத்துக்கிற வகை குற்றமில்லங்க.” 

“சார்…” 

“இந்த வீடியோ பாருங்க. இது பொய்யா?” 

“இது இது… சார் யாரு இதை வீடியோ எடுத்தது?” 

“சுரேன போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்ததா எங்க ஸ்டாப் சொல்லவும் முதலில் நம்பலை. வீடியோ புரூஃப் காட்டவும் தான் நிர்வாகத்துல இந்த முடிவுக்கு வந்தாங்க. சாரி என் கைல எதுவுமில்ல.” 

“படிக்கிற பிள்ள சார். எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போக மாட்டான். வீட்ல கோவிச்சிட்டு வெளியே போனவன தவறுதலா போலீஸ் பிடிச்சிட்டு…” விளக்கம் சொல்ல… கல்லூரி முதல்வர் நிர்வாகத்திடம் பேசிப் பாருங்க என்று தப்பித்துக்கொண்டார். 

இவர்கள் வெளியே வரவும் தற்செயலாய் வருவது போல எதிரே வந்த அந்த மூத்த பேராசிரியர் சுரேனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து வைக்க… சுரேனுக்குப் புரிந்தது வீடியோ எடுத்து… கல்லூரியில் வத்தி வைத்து… தன்னை இப்படி டிஸ்மிஸ் செய்ய வைத்த கல்ப்ரிட் யாரென! 

முகம் இறுக அங்கிருந்து வெளியேறினான். நேரே சதாசிவம் முன்னே போய் நின்றவனுக்கு அழுகை முட்டியது. இவர் சொன்னதைப் போல உருப்படாதவனாக வந்து நின்றிருக்கேன். அந்நிலையை அவ்வளவு வெறுத்தான்! 

அவன் எதிர்காலமாச்சே? அப்பாவிடம் கெஞ்சத்தான் வேண்டும். வாழ்க்கை பாழாவதைவிட சுயகௌரவம் ஒன்றும் பெரிதில்லை. 

“அப்பா ப்ளீஸ் நீங்களும் வந்து பிரின்ஸிட்ட பேசுங்க. பெரிப்பா பேசி அவர் கேட்கல. நீங்க வந்து சொன்னா கொஞ்சம் எஃபெக்ட் இருக்கும்பா. ப்ளீஸ்… அந்த புரொபஸர்க்கு கடுப்புப்பா என் மேல. என்னைய பழிவாங்க வீடியோ எடுத்திர்கான்!” 

“அந்த ஆளு எப்படி அங்க சரியா வந்தான்?” மகன் சொல்வதைவிட்டிட்டு சதா வேறு கேட்க… சிவா கடுப்பானார். 

“எப்படி வந்தான்னா? நம்ம கெட்ட நேரம் அவன கொண்டு வந்து அங்கவிட்டிருக்குடா. நம்ம பையனுக்கு என்ன வழின்னு பக்காம என்னத்தையோ நோண்டுறான்!” கோபத்தில் தம்பியை எகிறினார். 

“பெரிப்பா விடுங்க. அந்த இன்ஸ்பெக்டர் அவனுக்கு எதோ சொந்தம் போல. அந்த நேரத்தில அவங்கூட இருந்திருக்கான். நா கவனிக்கல.” சுரேனின் குரலில் சலிப்பும் வருத்தமும். 

“நா வந்து போலீஸ் ஸ்டேஷன்ல அசிங்கப்பட்டது போதாதா… இனி காலேஜுலயும் பேச்சு வாங்கணுமா? பேசாம ஆர்ட்ஸ் காலேஜுல போயி சேரு. இவ்வளவு நாள் கழிச்சிப் போனா அங்க கூட சீட்டு தர்றது சந்தேகம் தான்!” நிஷ்டூரமாகப் பேசச் செய்ய… சுரேனுக்கு அப்படியொரு மனவருத்தம். 

சிவநேசனுக்குத் தம்பி மேல் வெறுத்து வந்தது. சுரேனின் கை பிடித்து, “வாடா… நம்ம பார்த்துக்கலாம். நல்லாப் படிக்கிற புள்ளைய எப்படி அவிங்க வெளியே போகச் சொல்லலாம்? என்கொயரி வச்சிக் கேக்கலாம். 

என்ன நினைச்சிட்டிருக்காங்க… டிஸ்மிஸ் பண்ணா அப்படியே போயிறணுமா? இந்த சீட்டு வாங்க நீ எந்தளவுக்குப் படிச்சன்னு நா மறக்கல!” குத்தலாகத் தம்பியைப் பார்த்தபடி சொன்னார். 

சுரேன் மிகத் தெளிவாக, “எந்த என்கொயரியும் போக வேணாம் பெரிப்பா. பணங்குடுத்து என்னைய வெளிய கூப்பிட்டு வந்தீங்கன்னு தெரிய வரும். நா எந்தத் தப்பும் செய்யல நமக்குத் தெரியும். 

அப்ப எதுக்குப் பணம் குடுத்தீங்க பேச்சு வரும். என்னால நீங்க ரெண்டு பேரும் கெட்ட பேரு வாங்க வேண்டாம் பெரிப்பா. என்னைய எங்கயாச்சும் பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் சேர்த்துவிட்டிருங்க. 

பி.ஈ. பர்ஸ்ட் இயர் பாடங்கள் கிரெடிட் ஆகுதா பாருங்க. இல்லைன்னா திரும்ப பர்ஸ்ட் இயர் சேர்ந்துக்கிறேன். அப்படியே பார்ட் டைம் செய்யுற மாதிரி ஒரு வேலைல சேர்த்துவிட்டிருங்க. படிச்ச பாடத்தையே திரும்ப படிக்கும் போது ஈஸி தான.” எனச் சொல்ல சிவநேசன் விக்கித்து நின்றுவிட… 

சதாசிவம் அலட்டவில்லை. “நா பீஸ் கட்டிடறேன்.” சொன்ன தம்பியை சிவா முறைத்தபடி, “எனக்கு அதைக் கட்ட தெரியாது பாரு!” எடக்காகக் கேட்டார். 

“பெரிப்பா… அப்பாவே பீஸ் கட்டட்டும். இல்ல நா அவரு பெத்த பையங்கிறது மறந்திட போகுது!” நக்கலாகச் சொல்லிவிட்டு அவன் ரூம் போய்விட்டான். அக்கணத்தில் சுரேனுடைய மனது என்ன பாடுபட்டிருக்கும்? 

நளினி எல்லாம் கேட்டு அழுதிருக்க… யமுனாவுக்கும் ஒரு மாதிரியாக இருக்க… நான்கு நாள் யாரிடமும் பேசவில்லை. நளினி தங்கச்சியை அந்த மாதிரி பேசியிருந்தார். 

சுரேன் பி.எஸ்சி. சேர்த்துவிட சொல்லியிருந்தாலும், அவன் படித்த கல்லூரியில் எப்படியாவது தொடர வைக்க முடியுமா முதலில் பார்க்க… அது முடியாது போக… 

வேறு பொறியியல் கல்லூரிகளிலாவது டிரான்ஸ்ஃபர் ஸ்டூடெண்ட் அடிப்படையில் சுரேனை நுழைத்துவிட இடமிருக்கா பார்க்க… இரண்டு கல்லூரிகள் ஓகே சொல்ல… 

சுரேன் கூடுதல் பணம் கட்டி அப்படிப்போய்ப் படிக்கத் தேவையில்லை சொல்லி பி.எஸ்சி. சேர்ந்து படித்தான். தன் கனவைத் துறந்தவன் சோடை போகவில்லை. எதனால் அவன் கனவு தொலைந்தது ஞாபகத்தில் பதிய வைத்துக்கொண்டான். 

இதோ, சைபர் க்ரைம் டி.எஸ்.பி ஆகிப் பணியில் உட்கார்ந்தும் விட்டான்! 

தனக்கு நேர்ந்ததைப் போல இன்னும் எத்தனை இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்களோ… சைபர் வழி நடக்கும் நார்காடிக்ஸ் க்ரைம் உள்ளிட்டுப் பல குற்றங்களைச் சிறப்பாகக் கையாள்கிறான். 

“டேய் மச்சான்!” சுரேன் மாறன் தோள் தட்டவும் தான் மாறன் பழைய ஞாபகங்களிலிருந்து வெளிவந்தான். 

“ஒரு வழியா உன் வேலை முடிஞ்சிடுச்சா? எவ்வளவு நேரம்டா சும்மா உட்கார்ந்திருக்கறது?” மாறன் அலுத்துக்கொள்ள… 

“உன்னைய யாரு சும்மா உட்காரச் சொன்னாங்க மச்சான்…” சுரேன் கேட்கச் செய்ய… 

“அப்புறம்?” ‘என்ன சொல்ல வர்றான்?’ மாறன் பார்க்க… 

“டேன்ஸ் ஆடிட்டே உட்கார வேண்டியது தான?” சுரேன் சிரியாமல் சொல்ல… 

“டேய்ய்!” மாறன் சுரேனை முதுகில் அடிக்கச் செய்ய… 

“என்ன நீ… அடித்த தடவ போர் அடிக்காம இருக்க ஒரு ஐடியா கொடுத்தா அடிக்கிற!” சுரேன் குறைபடித்தான். 

“இது ஐடியாவா?” மாறன் காண்டானான். 

“பிடிக்கலைன்னா விடு விடு… பல்லைக் கடிக்காதடா! பல்லு ரிப்பேரானா நீ கொண்டு வந்த மைசூர்பாக்கு வேஸ்டா போகப் போகுது!” சுரேன் நக்கலடித்தான். 

அப்படியே அந்த மிக்ஸ்ட் ஸ்வீட் பாக்ஸிலிருந்த மைசூர்பாக்கை எடுத்து ஊட்டச் செய்ய… மாறன் முறைத்தபடி வாங்கிக்கொண்டான். சுரேனுக்கு மைசூர்பாக் லீஸ்ட் ஃபேவரைட். அதனால் எப்பவும் அது மாறனுக்குப் போகும். 

ஒரு சம்சம்மை எடுத்துக் கடித்த சுரேன், “மச்சான் நீ ரொம்ப நல்லவன்டா. என் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுக்கு நீயே ஸ்வீட் தர்ற!” சிலாகிக்க… 

“எப்படியெப்படி? நா கன்னி கழியாம நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டு முதல் ஆளா கல்யாணத்த வப்ப… அதுக்கு நானே ஸ்வீட் வாங்கிட்டு வந்து விஷ் பண்ணுவேன்?” மாறன் ஏறிவர… 

“ச்சூ கோவிச்சிக்காத மச்சான். இப்ப என்ன என் கல்யாணத்துக்கு முன்னாடி உனக்குக் கன்னி கழிச்சி விட்டிர்றேன்.” சுரேன் சீரியஸ் டோனில் சொன்னான். 

“ஆத்தாடி அவனா நீயி?” 

“நா அவனில்லை மச்சான். ஒரு ஐட்டத்த ஏற்பாடு செய்றேன் சொல்றேன்.” 

“நீ எந்த டேஷையும் பிடுங்க வேணாம். த்தூ… உன் பதவிக்கு ஏத்த மாதிரி பேசித் தொலைடா!” 

“என்ன செய்ய என் மேக்கு அப்படி!” 

“அதுக்கு என்னைய வச்சி செய்யணுங்குதா? ஆளைவிடு… நா கல்யாணம் பண்ணி கன்னி கழிச்சிக்கிறேன். எஸ்.ஐக்கு பொண்ணு கிடைக்கல. இப்ப இன்ஸ்பெக்டர்க்காவது பொண்ணு கிடைக்குதா பாக்கலாம்!” 

“டேய் மச்சான்! உனக்கு பிரமோஷன் வந்திட்டா?” 

“எஸ்! அதுக்குத்தான் இந்த ஸ்வீட்.” 

“கங்கிராட்ஸ் மச்சான். ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா!” மாறனுக்குக் கை கொடுத்து அப்படியே அவனைக் கட்டிப்பிடித்து விடுவித்த சுரேன், 

“சாரிடா! எனக்கிருந்த வேலைல நா பிரமோஷன் லிஸ்ட் பாக்கல. குட் நியூஸ் சொல்ல வந்த உன்னையும் காத்திருக்க வச்சிட்டேன்!” எனவும், 

“தெரியும்டா நீ பிஸின்னு. அதான் நானே இங்க வந்தேன். நாமயெல்லாம் வீக்கெண்ட் ஊருக்குப் போறோம்… கொண்டாடுறோம்!” மாறன் வார இறுதி ப்ளான் பற்றிச் சொன்னான். 

பின்னர் சிறிது நேரம் சுரேன் அன்றைய காலை நடந்ததை மாறனிடம் பகிர, சுதாவை நினைத்து இருவருக்குமே சிறு கவலை. 

சுரேனுக்கு ஒரு ஃபோன் வரவும் அவன் அதை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தான். 

இப்படி ரிலாக்ஸாக மாறன் அங்கே நின்றதே இல்லை. இப்போது சும்மா அமர்ந்திருக்க ஒவ்வொன்றும் கண்ணில்பட்டு மனதை நிறைத்தது. 

“எங்கூடப் பிறந்தவள்னு ஒருத்தி இருந்திருக்கணும்டா. கண்டிப்பா அவள உனக்குப் பொண்டாட்டி ஆக்கியிருப்பேன்!” திடீரென மாறன் சற்றுச் சத்தமாகச் சொல்லவும் சுரேன் அவனைத் திரும்பிப் பார்த்து அப்படிச் சிரித்தான். 

“என்னைய சைட் அடிக்கிற நீ? பத்திரம் நிலா வந்து அடிக்கப் போறா!” 

“கூடப் பிறந்தாதான் தங்கச்சியா… வெண்ணிலா என் தங்கச்சி… நாங்க ரெண்டு பேரும் ஒரே கட்சி… உன் எதிர்க்கட்சி!” 

“பிழைக்கத் தெரிஞ்சவன்டா என் மச்சான்! ஆனா இந்த டிஆர் எஃபெக்ட் வேணாம் விட்டிடு!” 

“உன்னைய… சரி சொல்லு… வெண்ணிலா சரி சொல்லிட்டாளா… கல்யாணத் தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா?” 

“அத்தைக்கும் மாமாக்கும் சொல்லாம எப்படி டேட் முடிவு பண்ணுவாங்கடா. நிலா வீட்ல ஓகே சொல்லிட்டாங்கன்னு பெரிப்பா மெசேஜ் பண்ணியிருக்காரு. ஆனா, கல்யாணத்தேதி கொஞ்சம் தள்ளிப்போகும் போல!” 

“எதுக்காம்?” 

“மேடம்க்கு இன்னும் கொஞ்சநாள் அவங்க அம்மா வீட்ல சீராடணுமாம்.” 

“அதுக்கு… நீ கஷ்டப்படணுமா? கல்யாணத்த பண்ணிட்டுச் சீராட வேண்டியது தான… லவ் பண்ணுறவன காத்திருக்க வப்பாளாமா?” 

“உனக்குத்தான் எம்மேல ஓவர் லவ்ஸா இருக்கு மச்சான்!” 

“அடச்சீ நகருடா… உனக்குக் கல்யாணம் ஆகுற அன்னைக்கித்தான் எங்கம்மா எனக்குப் பொண்ணு பாக்கக் கிளம்பும். அதுக்குச் சொன்னா பொசுக் பொசுக்குன்னு வந்து கட்டிப்பிடிக்கிறான். போயி உன் நிலாவ கொஞ்சுவியா…” 

“இதோ அவள பாக்கத்தான் கிளம்பிட்டிருக்கேன்.” சுரேன் புன்னகையுடன் சொல்ல… 

அந்நேரம் அவன் முகத்தில் அத்தனை ஆர்வம்… சந்தோஷம்!