என் சித்தம் சித்திரமே – 11

என் சித்தம் சித்திரமே 11

அன்று அதிகாலை…

“ஒரு கல்யாணத்துல இறங்கிட்டம். அத ஆரம்பிச்ச வேகத்துல கையோட முடிச்சிருவம். திருநாவு வேலைக்கி போயிட்டான். நீ வா சௌந்தரு. மனோகரு வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு அப்படியே சிவாவ பாத்துட்டு வரலாம் வா.”

இருவரும் அந்நேரத்திற்கே ஊரிலிருந்து கிளம்பி வந்து மனோகர் வீட்டில் நிற்க… அங்கே நீலவேணி ஜுரத்தில் படுத்திருக்க… மனோகர் சோர்வாக இவர்களை வரவேற்கச் செய்ய…

“சாதாரணக் காய்ச்சல் தான. வேற எதுவுமில்லயே? மாத்திரை வாங்கித் தந்தியா? இல்ல டாக்டர்ட்ட காட்டிட்டு வாங்க. நீ எதுக்குடா இப்படி உம்முன்னு இருக்க?” சந்தானம் மனோகரைச் சத்தம் போட்டார்.

வெண்ணிலா பிடிவாதமாக,

“ஒரு வருசம் போகட்டும். அப்புறமா இவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுக்குள்ள ஒரு வருச கோர்ஸ் எதாச்சும் படிக்கிறேன்… இல்ல பி.எட். சேர்றேன்.

இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட நம்ம வீட்ல இருந்த மாதிரியும் ஆச்சி… என் தகுதிய வளத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். ப்ளீஸ்ப்பா பெரிப்பாட்ட சொல்லி சுரேன் வீட்ல பேசச் சொல்லுங்க!” என்று சொல்லியிருக்க மனோகருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

இத்தனைக்கும் மனைவியும் மகளும் இரவில் பேசிக்கொண்டது மனோகரிடம் பகிரப்படவில்லை.

தன்னைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த மகளிடம் காலையிலேயே நீலவேணி சொல்லிவிட்டார்…

“அப்பாட்ட நம்ம ராத்திரி பேச்சிக்கிட்டதை எதுவும் சொல்லி வைக்காத நிலா. மனசு கஷ்டப்படுவாரு. எனக்கொன்னுமில்ல. மாத்திரைய போட்டுக்கிட்டேன்ல. கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா சரியாயிரும்.

நீ நிதானமா யோசிச்சி உன் பதிலைச் சொல்லு. தெரியாத பேயைவிட தெரிஞ்ச பிசாசே மேலுன்னு சொல்வாங்கல்ல. யோசிச்சிப் பார்த்தா இந்தச் சம்பந்தம் கூடி வர்றது ரொம்ப நல்லதுன்னு படுது.

உனக்கும் மாப்ள தம்பிய நல்லாத் தெரியுங்கிற. அவருக்கும் உன்னைய பிடிச்சிருக்குங்கிற. அப்புறம் என்ன? சும்மா ஒரு வருசம் போகட்டும்னு சொல்லி நீ வேற புதுசா எதையும் கிளப்பாம இருடி!”

“வீட்டு மாப்ளயா வரப் போறவர சந்தடி சாக்குல பிசாசுங்கிற… ரொம்ப முன்னேற்றம் தான்!” தன்னை நக்கலடித்த மகளின் தலையில் நீலா குட்டி வைக்க…

சிரித்தபடியே அங்கிருந்த வெளியேற வந்து அப்பாவைப் பார்த்த நிலா, அந்த ஒரு வருசம் போகட்டும் கதையை மட்டும் படிக்கச் செய்ய…

செல்ல மகளாச்சே! அந்தக் கெஞ்சலும் கலக்கமும் மனோகரை நெகிழ்த்த… குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

பெரிய அண்ணனும் தம்பியும் அந்த நேரத்தில் வந்து நிற்கவும் அவ்வளவு நிம்மதியாக உணர்ந்தார். அவர்களிடம் வெண்ணிலா சொன்னதைச் சொல்லச் செய்ய… அவர்களும் அவளிடம் பேசிப் பார்க்க…

வெண்ணிலா பிடிவாதமாக நின்றாள்.

“ப்ளீஸ் பெரிப்பா எனக்காக ஒரே ஒரு முயற்சி பண்ணுங்க! அவங்க பெரிப்பா உங்க பிரெண்ட் தான?”

“என்னம்மா நீ? இதென்ன விளையாட்டுன்னு நினைச்சியா… இல்ல பொம்ம கல்யாணமா? நம்ம போயி அவங்கட்ட, ‘இன்னும் ஒரு வருசம் போகட்டும்… உங்க மகனையே எங்க பொண்ணு கட்டிக்கிறேங்குது.’ சொல்ல முடியுமா… அப்படிச் சொன்னா அவங்க நம்மள என்ன நினைப்பாக?”

“யாரு என்ன நினைப்பாங்க யோசிச்சா நம்ம வாழ்க்கை என்னவாகும் பெரிப்பா? நமக்குப் பிடிச்ச மாதிரி வாழத்தான இந்த ஒரு பிறப்பு?”

“நிலா!” மனோகரும் சௌந்தரும் அவளை அதட்ட…

“இருங்கடா நீங்க. நா பேசிக்கிட்டு இருக்கேன்ல?” தம்பிகளை அமர்த்தினார்.

சந்தானம் நிலாவைத் தன்னருகே இருத்தி பொறுமையாக எடுத்துச் சொன்னார்.

“நீ சொல்றது ஒரு வகையில சரி தான் பாப்பா. ஆனா, சொல்ற நேரங்காலமும் இடமும் தப்பு! முன்னமே எங்கிட்ட நீ மேல படிக்கணும்… கொஞ்சம் கல்யாணத்த தள்ளிப் போடுற மாதிரி பேசுங்கன்னு சொல்லியிருக்கலாம்.

எங்க பாப்பா படிக்க ஆசைப்படுதுன்னு நானும் முதல்லயே அவங்க காதுல போட்டு வச்சிருப்பேன். அதைவிட்டுட்டு இவ்வளவு வந்ததுக்கு அப்புறம் போயி் என்னன்னு என்னைய பேசச் சொல்லுற தாயி?

எத்தனை பேரு அன்னைக்கி வந்திருந்தாங்க… ‘நீங்க உங்க மகளுக்கு இப்ப கல்யாணம் பண்ற மாதிரி இல்லைன்னா எதுக்கு எங்களை பொண்ணு பாக்க வரச் சொல்லணும்… அலைக்கழிக்கணும்?’ அவங்க கேட்டா நா என்ன பதில் சொல்லுவேன்?

நீங்க ஊரவிட்டுத் தள்ளியே இருந்திட்டீங்க. ஊர் பழக்கவழக்கம் உனக்கு ரொம்ப தெரியலன்னு எனக்குப் புரியுது. மத்தவங்க பத்தி எனக்குக் கவலையில்ல. ஆனா, நாளைக்கி நீ வாழப் போற வீடு. அவங்களுக்கு ஒரு சொல்லுன்னா அது எங்க பொண்ணுக்கும் தான?

நம்ம வாழ்க்க நம்ம கைல… நம்ம இஷ்டங்கிறது எல்லா இடத்துக்கும் ஒத்துப் போகாதுடா தங்கம். நம்ம மக்க மனுசனோட ஒத்துப் போகணும். ஊரு, நம்ம ஜனக்கட்டு, சமுதாயம், நாடு, உலகம்னு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கு.

நடைமுறைக்கு என்ன ஒத்து வருமோ அதைத்தான பாப்பா நம்ம பேசணும்! மீறிப் போறது தன்மையில்ல. நீ சின்ன பொண்ணு. உன் வரைக்கும் சரின்னு பட்டதைப் பேசுற.

ஒரு பெரிய மனுசனா நா நாலையும் ஆலோசிச்சித்தான் பேசணும். ம்ம்…”

நீளமாகப் பேசி முடித்த பெரியப்பாவைப் பார்த்த வெண்ணிலாவின் கண்களில் பிரமிப்பு!

அவர் சொன்னது அவளுக்குப் புரிய செய்ய… என்னவென்று மறுத்துக் கூறுவாள்? அப்பா, அம்மா, பாட்டியிடம் அடித்துப் பேசுவது போல் மூத்தவரிடம் பேச அவளுக்கு வாய் வரவில்லை.

கலக்கமாக அவரை ஏறிட…

“இந்த மாப்ளய உனக்குப் பிடிக்கலைன்னா…”

“பிடிச்சிருக்குப் பெரிப்பா!” அவசரமாகச் சொன்னாள்.

“அப்ப கட்டிக்கோடா. நல்ல சம்பந்தம். எதுக்குத் தள்ளிப் போட்டுக்கிட்டு? பேசி முடிச்சமா, முகூர்த்தத் தேதிய குறிச்சமா, கல்யாணத்த பண்ணி வச்சமான்னு இருக்கணும். அதைவிட்டிட்டு ஆறப் போட்டம்னா நாள பின்ன எதுவும் தப்பாச்சின்னா?”

“சரி பெரிப்பா!” உள்ளே போய்விட்ட குரலில் தம்பி மகள் பேசவும், இப்போது சந்தானம் உள்ளுக்குள்ளே இளகி வரவும் சற்றுத் தடுமாறினார்.

அவள் இந்த மாப்பிள்ளைக்கு ஒத்துக்கொண்டது சந்தோசத்தைத் தந்தாலும், அவள் முழு மனதாக உடனே திருமணத்தேதி குறிக்கச் சரி சொல்லவில்லை என்பதில் யோசனையானார்.

வெண்ணிலாவிடம் அவர் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. “ரொம்ப சந்தோசம் பாப்பா. நீ உள்ள போயி அம்மாவ பாரு. மதியம் வரைக்கும் காய்ச்சல் விடலைன்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க. என்னடா மனோகரு?” தம்பி முகத்தைப் பார்க்க…

“சரிங்கண்ணே!” மனோகர் தலையாட்ட…

வெண்ணிலா உள்ளே போய்விட்டாள். காந்தம்மாள் கிட்சனில் வேலையாக இருந்தார். மகளுக்குத் திடீரென முடியாமல் போகவும் அவருக்குப் பதறி வந்தது. அவர் கவனம் வந்தவர்களிடம் செல்லவில்லை.

மகளுக்கு வெந்நீர் வைக்க, பாலைக் காய்ச்ச… கஞ்சிக்கும் ரெடி பண்ணிக்கொண்டிருக்க… வெண்ணிலா சென்று அனைவருக்கும் காபி விட்டு எடுத்து வந்து தந்தாள்.

அண்ணன் தம்பி மூவரும் காபி பருகிக்கொண்டு பேச…

சந்தானம், “அப்ப நானு சிவாட்ட பேசி நம்ம சம்மதத்த சொல்லிரலாம்ல? பொண்ணு மாப்ள நட்சத்திரத்துக்குத் தோதா ரெண்டு மூணு முகூர்த்தத்தேதிய குறிக்கச் சொல்லுவம். என்ன சொல்றப்பா மனோகரு?” என…

“நிலா சரி சொல்லத்தான நாங்க காத்திருந்தோம். அத்த, நீலா ரெண்டு பேருக்குமே இந்தச் சம்பந்தத்துல பரிபூரணச் சம்மதம் தான் அண்ணே. நீங்க மேற்கொண்டு பேசுங்க.” மனோகர் அண்ணனிடம் சொல்ல…

காபியை தந்துவிட்டு உள்ளே செல்லத் திரும்பிய வெண்ணிலாவுக்கும் இப்பேச்சுக் காதில் விழுந்தது. ஒரு வினாடி தயங்கியவள், தன் கையில் இனி எதுவுமில்லை… நினைத்துப் பெருமூச்சுடன் உள்ளே போனாள்.

சுரேனுடனான வாழ்க்கையை ஏற்க மனதைத் தயார்படுத்தத் தொடங்கினாள்.

‘கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று…
ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று!’

சரியாக இப்பாட்டும் அவள் ஞாபகத்தில் வர, சிரித்துக்கொண்டாள்.

“சிக்கணும்னு முடிவு பண்ணிட்ட… இனி அந்த ஆண்டவனே நினைச்சாலும் உன்னைய காப்பாத்த முடியாது!” முணு முணுப்பாகச் சொன்னவள் புன்னகை முகமாகவே நீலாவேணிக்குக் கஞ்சியைக் கொடுக்கச் சென்றாள்.

அடுத்து வெளியே இருந்த ஆண்கள் மூவரும் என்ன பேசினார்கள் என்று வெண்ணிலாவுக்குத் தெரியாமல் போனது… சுரேன் அப்படித் திடுதிப்பென நேரில் வந்து நிற்பான் என்று வெண்ணிலா எதிர்பார்த்திருக்கவில்லை.

சந்தானமும் சௌந்தரும் சுரேன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. சிவநேசனைப் பார்த்துப் பேச நினைத்துக் கிளம்பியிருக்க… பாதி வழியில் அவர்கள் அவரை அழைக்கச் செய்ய…

அவர் தம்பியுடன் ஒரு திருமண வீட்டில் இருப்பதாகச் சொல்லி, “நீங்க இப்ப எங்க இருக்கீங்க?” கேட்க,

சந்தானம் இடத்தைச் சொல்லவும், “நா தம்பி வீட்டுக்குத்தான் வர்றேன். நீங்க இப்ப இருக்கிற இடத்துக்குப் பக்கந்தான் சதா வீடு. அங்க போயிரு சந்தானம்.” என்றுவிட்டார்.

சந்தானம் கொஞ்சம் தயங்க, சௌந்தர், “வாங்கண்ணே… அவரே அங்க வரச் சொல்லித்தான போறம். இந்தச் சாக்குல மாப்ள வீட்டையும் ஒரு நடை பாத்தாப்ல இருக்கும்.” சொல்லி அண்ணனுடன் சுரேன் வீட்டிற்கே வர…

இருவரும் சில நிமிடங்கள் வெளியே மரத்தடியில் காத்திருந்தனர். சிவநேசனும் சதாசிவமும் தாங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லவும், கேட்டை திறந்து உள்ளே வந்தவர்கள் அழைப்பு மணியைத் தேட…

அந்த வீட்டில் வெளி வாசல் பக்கமே அழைப்பு மணி அமைக்கப்பட்டிருந்ததை இருவரும் கவனித்திருக்கவில்லை. ஒன்றிரண்டு நிமிடங்கள் நின்று பார்த்தவர்கள் உள் கேட்டைத் தட்டிப் பார்க்க… உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது.

“என்ன அண்ணே செய்ய?”

“கொழந்த அழுறதுல கேட்டிருக்காது சௌந்தரு. விடு. கதவு சும்மாத்தானே மூடியிருக்கு? வா அந்த இருக்கைல உட்காருவம். சிவா இப்ப வந்திருவாப்படி.”

இருவரும் வெரெண்டாவில் பிரவேசித்து அமரப்போக… அவர்கள் வெளியே நின்ற போது கேட்காதவை இப்போது துல்லியமாகக் கேட்கச் செய்ய, ஹால் கதவருகே வந்திருந்தவர்கள் அங்கே நடந்ததை ஓரளவு புரிந்துகொண்டனர்.

ஒருவருக்கொருவர் பார்த்து நின்ற அண்ணன் தம்பி இருவரும் மற்றவர் முகத்தில் என்ன தெரிந்ததோ… சிவநேசனிடம் பேச நினைத்ததைப் பேசாமல், அவர் வரும் வரைக்கும் காத்திருக்காமல் அங்கிருந்து வெளியேறினர்.

அவர்கள் இருந்த மனநிலையோ என்னவோ சுரேன் வீட்டினர் யாருமே சந்தானத்தையும் சௌந்தரையும் பார்த்திருக்கவில்லை.

சுரேன் கிளம்பி வரும் முன்னர் யமுனா சமையலைத் தொடரச் செல்ல… சுதாவுக்கு மாமியாருக்கு உதவப் போவதா இல்லை குழந்தையைப் பார்ப்பதா என்றிருக்க…

அவள் முகம் பார்த்த சுந்தர், “நீ ரூமுக்கு வா. கொஞ்ச நேரம் ஃப்ரீயா இரு.” எனச் சொல்லிக் குழந்தையுடன் அவனும் அவர்களின் பெட்ரூம் சென்றுவிட்டான்.

ஹாஸ்பிடல் அழைத்துத் தனக்குப் பதில் வேற யாரையும் டியூட்டி பார்க்க மாற்றிவிட சொல்லிக் கேட்டு அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். மனைவியிடம் குழந்தைக்கு என்ன எப்படிச் செய்வது எனக் கேட்டுக்கொண்டு அவளிடம் அப்படியே பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

முன் தினம் வெண்ணிலா வீடு சென்று வந்தது சுதாவுக்கு ஒரு பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்திருந்தது. வெண்ணிலாவிக்கு இருக்கும் ஜனக்கட்டு ஒரு பக்கம் மிரட்ட, அவர்கள் வெண்ணிலாவைத் தாங்கிப் பார்ப்பது ஒரு மாதிரி காம்ப்ளெக்ஸ் உருவாக ஆரம்பித்தது.

சுதா உள்பட வீட்டிற்கு வந்தவர்களை வெண்ணிலா வீடு நன்றாகக் கவனித்தது. அதில் யாருக்கும் எந்தக் குறையுமில்லை. ஆனால், அது வெண்ணிலா வீடு. அவளுக்கு அங்கே முக்கியத்துவம் இருக்கும் தானே?

அதுவும் போக அன்று அவள் தானே விழா நாயகி? பின்னே அந்த முக்கியத்துவமும் சேர்ந்துகொள்ளாதா? சுதா நல்லவள். நண்பனுக்காகப் பார்ப்பவள் தான். ஆனால், அது சாதாரணமாக இருக்கும் சுதாவின் குணம்.

ஏற்கெனவே போஸ்ட் பார்ட்டெம் டிப்ரெஷனில் இருக்கும் சுதாவுக்கு இவை ஒவ்வொன்றும் சேர்ந்துகொண்டு இன்னும் மனநிலையைப் பாதித்தது. சுரேன் அவளுக்கு நெருங்கிய நட்பு… அவனுடைய கவனம் கூட இப்போது வேறெங்கோ அல்லவா?

பெண்களுக்கு முதல் பிரசவம் புதிய அனுபவம். இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரசவமும் ஓர் அனுபவத்தைத் தரும். முதலாவது போல் இரண்டாவது இருக்காது.

ஏதோ ஓர் உபாதை, வருத்தம், மனநிலையெனக் கர்ப்பக்காலமும்… ஒவ்வொரு விதமான பேறுகாலமும் பெண்களுக்கு ஏற்பட்டது தான். பொதுவாக இப்படி அப்படியெனப் பல கதைகள் அவர்களுக்குப் பகிரப்படும். ஆனால், அவர்கள் அனுபவிப்பது வேறாக இருக்கலாம்.

அதுவரை தன் சொந்தமாய்… வேறு யாரும் உணர முடியாவொரு தனித்துவமான பந்தத்தைத் தோற்றுவித்தபடிக்கு இருபத்தி நான்கு மணிநேரமும் வயிற்றில் சுமந்திருந்த சிசு… திடீரென அங்கில்லாமல் போகும் போது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது.

எதையோ இழந்துவிட்ட தோற்றம்… அதைக்கொண்டு ஒரு வெறுமையான மனநிலை!

எல்லோருக்கும் இது படுத்தும் என்றில்லை. சிலருக்குத் தெரியவே செய்யாது! எளிதாகக் கடந்திருப்பர். சிலருக்குத் தெரிந்தாலும் அதுவும் கடந்து போகும், எந்த விதமான பாதிப்பின்றி! வேறு சிலருக்குப் பெரிதும் படுத்தியெடுக்கும்.

அந்த மாதிரி உள்ள இளம் தாய்மார்களுக்கு அதிகமான கவனிப்பும் ஆறுதலும் தேவைப்படுகிறது. அவர்கள் இழந்ததாக நினைப்பது தவறு என்பதை உணர்த்த ஒரு பாதுகாப்பைத் தர வேண்டும்.

பல குடும்பங்களில் அந்த மாதிரி பாதிப்புக்குள்ளான பெண்ணின் இந்த நிலையை யாரும் உணர்வதில்லை.

‘நாங்கல்லாம் பெக்கலையா வளக்கலையா… குடும்பத்த பாக்கலையா? என்னமோ புதுசா பகுமானத்த காட்டுறாளுக!’ இப்படியான சாடல்களையும் கடக்க வேண்டும்.

கூட்டுக்குடும்பமாக வாழும் போது பல விசயங்கள் எளிது.
இன்னதென்று தெரியாமலேயே கஷ்டமும் கடந்து போயிருக்கும். அப்பெரியவர்களுக்கு அந்தக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிட்டியிருக்கலாம். அக்காலமே ஒரு வரம்!

இப்போதுள்ள தனித்தீவான இந்த நியூக்ளியர் ஃபேமிலி சாபமே! இதைத் தெரியாமல் சிலர் அதற்கு ஆசைப்பட்டுத் தனிக்குடித்தனத்தை விரும்புகிறார்கள்.

ஆனால், பலருக்கு அவர்கள் விரும்பாமலேயே அது தான் அமைப்பு. அவர்களின் வேலை, வாழ்வாதாரம் இப்படி ஏதோவொன்று ஊரென்ன, நாட்டைவிட்டே போகச் செய்துவிடுகிறது.

யாருக்கு என்ன கிட்டுகிறதோ… காலமும் என்ன வைத்திருக்கிறதோ… எதிர்நீச்சல் பொது விதி. எதையும் சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்!

சுந்தருக்கு இந்த போஸ்ட் பார்ட்டெம் டிப்ரெஷன் பற்றித் தெரியாமல் என்ன? டாக்டர் தானே… நன்றாகத் தெரியும். நேரடி அனுபவம் தானில்லை.

சுதா இங்கேயே இருந்திருந்தால் முன்னரே கண்டுகொண்டிருப்பான். இப்போது சில நாட்களாகத்தானே புகுந்த வீட்டிலிருக்கிறாள்? அதனால் கவனத்தில் வரவில்லை.

அவளைக் கூர்ந்து கவனிக்கவுமே தெரியச் செய்தது. அவளிடம் பேச்சுக் கொடுக்கவும், இன்றைய அவளின் வெளிப்பாடு எதனால் என்றும் தெரிய வந்தது.

அவளிடம் தன்மையும் மென்மையுமாகப் பேசியவன் எடுத்துச் சொல்லவும் செய்தான். இன்னதென்று தெரிந்தால் அவளுக்குமே பயமில்லாமல் போகும் என்று நினைத்தான். படித்தவள் தானே? எளிதாகக் கிரகித்துக்கொள்வாள் என்று நினைத்தான்.

சுதாவும் கேட்டுக்கொள்ளச் செய்தாள். மனைவியிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சுந்தருக்குள் வேறொன்றும் ஓடியது. இப்போது சுதாவுக்கு இருப்பது தற்காலிகப் பிரச்சனை தான். நாளடைவில் சரியாகிவிடும்.

ஆனால், ஆரம்பத்திலேயே சுதாவுக்கு வெண்ணிலா மீது இப்படியானதொரு உணர்வு நல்லதில்லையே? அதுவும் இதை அந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவள் காட்டச் செய்தாள்?

உள்ளூர ஒரு புதுக்கவலை உருவானது. தம்பியிடமும் பெற்றோர்களிடமும் இதைப்பற்றிப் பேச நினைத்தான். அப்படி இவன் பேசும் போது யமுனா ஒரு தீர்வைச் சொல்வதாக நினைத்து வேறொன்றை இழுத்து வைப்பார் என்று சுந்தர் யோசிக்கச் செய்யவில்லை.

ஒரு சிறு துளியேனும் அப்படி ஒரு கோணத்தில் யோசனை போயிருந்தால் கண்டிப்பாகத் தம்பியிடம் மட்டுமே பேசச் செய்திருப்பான்.

சுரேன் கிளம்பி வரும் போது டிஃபென் ரெடியாகியிருந்தது. வேலை செய்யும் பெண்மணியும் வந்திருக்க… அவரை வைத்துக்கொண்டு யமுனா சில நிமிடங்களிலேயே பூரி, கிழங்கு செய்து டைனிங்கில் வைத்துவிட்டார்.

சுதாவுக்கு உருளைக்கிழங்கு வேண்டாமென யமுனா வேறு செய்துகொண்டிருக்க… சுரேன் அலுவலகம் செல்லும் முன்னர் அவரிடம் சொல்லிக்கொண்டு ஷூ அணியச் செல்ல…

“டேய் சாப்பிடாம கிளம்பிட்ட?”

“டைம் ஆச்சிம்மா…”

“ஆகட்டும்… உன்னை யாரு கேள்வி கேட்கப் போறா? இரு சாப்பிட்டிட்டுப் போ!”

“என்னைய யாரு கேள்வி கேட்கப் போறாங்களா? அது சரி… இப்படி நாங்கல்லாம் நினைச்சா டிபார்ட்மெண்ட் என்னாகும்? எனக்கும் மேல எத்தனை கேடர் இருக்கு… எப்ப வேணா கேள்வி வரும்.”

அம்மாவுக்குப் பதில் சொல்லிக்கொண்டே ஷூ லேஸ் கட்டி முடித்தான். அதற்குள் யமுனா இரண்டு உப்பலான பூரிகளை எடுத்து வந்து, “ம்ம் ஆ காமி!” எனச் சின்ன மகனுக்கு ஊட்டச் செய்ய… அவன் வாய் திறவாமல் அம்மாவை அதிசயப்பிறவி போல் பார்த்தான்.

“அட வாயைத் திறடான்னா காணாததைக் கண்ட மாதிரிக்குப் பார்த்திட்டு நிக்கிற?” யமுனா அதட்ட செய்ய… வாயைத் திறந்து ஒரு வாய் வாங்கிக்கொண்டு…

“எங்கம்மா எனக்கு ஊட்டுறது அதிசயமில்லையா… அப்போ பார்க்கத்தான் செய்வாங்க!” கேட்டுவிட்டு மட மடவென இரண்டு பூரிகளை உண்டு முடிக்கவும்,

யமுனா சொன்னபடி வேலை செய்யும் பெண்மணி இரண்டு மொறு மொறுப்பான பூரிகளை வைத்து, அதன் மேல் ஜீனி தூவி… ஒரு கிண்ணத்தில் ஆடையில்லாமல் பாலை வடிகட்டி எடுத்து வந்து தந்துவிட்டு நகரவும் சுரேன் அசந்துவிட்டான்.

“அம்மா இதெல்லாம் கூட ஞாபகமிருக்கா… கலக்குற போ!” நக்கலடித்த மகனைத் தோளில் தட்டிய யமுனா பாலை விட்டு மொறு மொறு பூரிகளை அவன் வாயில் திணித்தார்.

பல வருடங்களுக்குப் பின்னர் இப்படியொரு கவனிப்பு… சுரேன் கொஞ்சமாக இளகினாலும், ‘இது எத்தனை நாளைக்கோ!’ என்று மனதில் ஓடியது.

சுரேன் வாசல் வரவும் சரியாக அதே நேரத்தில் சதாசிவமும் சிவநேசனும் வீடு வந்து சேர்ந்தனர்.

வந்ததுமே இருவரும் ஒரே நேரத்தில், “அவங்க எங்க சுரேன்?” விசாரிக்க… “யாரு எங்க? புரியல.” சுரேன் புருவம் உயரக் கேட்கச் செய்ய…

“டேய் பொண்ணு வீட்ல இருந்து வந்தாங்களே ரெண்டு பேர். அவங்க எங்கன்னு கேட்டா திருப்பி எங்களையே கேள்வி கேப்பியா?” சதாசிவம் மகனை முறைக்க…

“அட சும்மா இரு சதா! சுரேன் சந்தானமும் அவென் தம்பி சின்னவனும் வந்து இங்க இருந்து தானே பா போன் பேசினாங்க?” தம்பியை அமர்த்திவிட்டு, சுரேனிடம் திரும்பி சிவநேசன் கேட்கச் செய்ய…

“பொண்ணு வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு யாருமே வரலையே பெரிப்பா… நா வீட்ல தான இருந்தேன். இங்கேயா வந்தாங்க? நல்லாத் தெரியுமா பெரிப்பா? இப்ப ஃபோன் பண்ணிப் பாருங்க. ஒரு வேளை வீடு மாறிப் போயிருக்க சான்ஸ் இருக்கு.” சுரேன் சொல்லவும்,

“வீடு மாறிப் போக வாய்ப்பே இல்லை சுரேன். வீட்டு அடையாளத்த சரியா சொன்னாங்களே!” சிவநேசன் உறுதியாகச் சொன்னார்.

“ஓ… என்ன விசயமா வந்தாங்க பெரிப்பா?”

“தெரியலப்பா. அங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டிருக்கோம்னு அழைச்சி சொன்னாங்க. உங்க பெரியம்மாவும் வீட்ல இல்லை. வேறொரு விசேஷத்துக்குப் போயிருக்கா. அதான் இங்க வரச் சொன்னேன்.”

“சரி எனக்கு லேட் ஆகிட்டு. நீங்க அவங்களுக்கு ஃபோன் போட்டு என்னன்னு கேளுங்க பெரிப்பா. கேட்டிட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க. போயிட்டு வர்றேன். பை!”

அப்பா, பெரியப்பா இருவருக்கும் பை சொல்லிவிட்டு பைக் உதைத்துக் கிளப்பினான் சுரேன்.

அவன் அலுவலகம் அடையவும் எஸ்.பி அழைக்கச் செய்ய… சுரேனை அவன் அலுவல் இழுத்துக்கொண்டது.

மாலையில் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு மாறன் சுரேனைப் பார்க்க வந்தான்.